Print Version|Feedback
May Day 2016 and the future of socialism
2016 மே தினமும் சோசலிசத்தின் எதிர்காலமும்
By Joseph Kishore 4 May 2016
மே 1 ஞாயிறன்று நடந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மூன்றாவது வருடாந்திர சர்வதேச இணையவழி மே தினப் பேரணி, உலகெங்கிலும் இருந்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது பரந்த ஆதரவைப் பெற்றது. மனித குலத்தின் எதிர்காலத்தையே அச்சுறுத்துவதாக அமைந்திருக்கக் கூடிய ஏகாதிபத்திய வன்முறையின் பரவும் அலைக்கான பதிலிறுப்பில் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு உண்மையான மார்க்சிச மற்றும் சோசலிச முன்னோக்கினை வழங்கிய ஒரே சர்வதேச நிகழ்வாக இது இருந்தது.
இந்த பேரணி ICFI இன் அரசியல் செல்வாக்கிலான ஒரு கணிசமான வளர்ச்சியின் வெளிப்பாடாக இருந்தது. இந்த கூட்டத்தை சுமார் 2500 பேர் அணுகியிருந்தனர், இது 2015 ஐக் காட்டிலும் 40 சதவீதத்திற்கும் அதிகமாகும். செவிமடுத்தவர்களது நாடுகளது எண்ணிக்கை 80 இல் இருந்து சுமார் 98 ஆக அதிகரித்திருந்தது. பார்வையாளர்களின் எண்ணிக்கைப் பெருக்கம் கருத்துரைகளது பெரும் எண்ணிக்கையிலும் பிரதிபலித்தது, சுமார் 750 கருத்துரைகள் பதிவிடப்பட்டிருந்தன.
உலக சோசலிச வலைத் தளத்தின் அரசியல் செல்வாக்கு பெருகி வருவதை எடுத்துக்காட்டும் பிற அறிகுறிகளை இந்தப் பதிலிறுப்பு ஊர்ஜிதம் செய்கிறது. Compete.com புள்ளிவிவரப்படி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில், வலைத் தளத்தை அணுகிய தனிப் பயனர்களின் மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய கால் மில்லியனுக்கு நெருக்கமாக இருந்தது, இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் கணிசமாய் அதிகமாகும்.
இந்த வளர்ச்சியின் கீழே முக்கியமான புறநிலைக் காரணிகள் அமைந்திருக்கின்றன. முதலாவதாய், கடந்த ஆண்டானது புவிஅரசியல் மோதலின் பிரம்மாண்ட தீவிரப்படலையும் சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே போர் அபாயம் குறித்துப் பெருகிய அச்சத்தையும் குணாம்சமாய் கொண்டிருந்தது. பதினைந்தாம் ஆண்டை நெருங்குகின்ற “பயங்கரவாதத்தின் மீதான போர்”, பெரும் சக்திகளுக்கு இடையிலான ஒரு உலகளாவிய யுத்தமாக, ரஷ்யாவையும் சீனாவையும் பொருளாதார ரீதியாகவும் இராணுவரீதியாகவும் சுற்றிவளைப்பதற்கு அமெரிக்கா செய்கின்ற அதிகப்படியான ஆத்திரமூட்டல் முயற்சிகளை மையமாகக் கொண்டதாக, உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. அணுஆயுதப் போரின் சாத்தியமானது அரசின் அதிகாரிகளாலும் புவியரசியல் மூலோபாயவாதிகளாலும் மீண்டும் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இரண்டாவதாய், 2008 பொருளாதார நெருக்கடியின் நீடித்த தாக்கமும் அதனைத் தொடர்ந்த வர்க்க உறவுகளின் மீள்கட்டமைவும், ஒரு அரசியல் பரிமாணத்தைப் பெற்றுவரும் சமூக போர்க்குணத்தின் வளர்ச்சியில் வெளிப்பாடு கண்டுகொண்டிருக்கிறது. உலக ஏகாதிபத்திய மையமான அமெரிக்காவில், கடந்த ஆண்டில் அரசியல்ரீதியாக ஆதிக்கம் செய்திருக்கக்கூடிய ஒரு தேர்தல் பிரச்சாரமானது பழைய அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் வழக்கமான பிரதிநிதிகளது செல்தகைமை நொருங்கியிருப்பதைக் கண்டிருக்கிறது. உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேசிய ஆசிரியர் குழு தலைவரான டேவிட் நோர்த் பேரணியில் வழங்கிய தனது ஆரம்ப அறிக்கையில் குறிப்பிட்டதைப் போல:
”உலகெங்கும் தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் முதலாளித்துவத்திற்கு எதிராய் அரசியல்ரீதியாய் தீவிரப்பட்டு செல்வது பெருகி வருவதற்கான பல அறிகுறிகள் இருக்கின்றன. மில்லியன் கணக்கான அமெரிக்க தொழிலாளர்கள், ஆரம்பகட்ட தேர்தல்களின் சமீப வரிசையில், தங்களது வாக்குகளை, ஒரு சோசலிஸ்டாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட ஒரு வேட்பாளருக்கு இட்டனர் என்ற உண்மை இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பேர்னி சாண்டர்ஸின் “சோசலிசம்” தாராளவாதத்தின் பூசியபதிப்புக்கு மேலான அதிகமில்லை என்பது உண்மையே. ஆனால் சாண்டர்சுக்கு கிட்டிய ஆதரவு அவரது அரசியல் சந்தர்ப்பவாதத்தினால் கிடைத்ததல்ல, மாறாக அவர், சமூக சமத்துவமின்மைக்கு எதிராய், அவரது சொந்த வார்த்தைகளில் கூறுவதென்றால் ஒரு “அரசியல் புரட்சியை” முன்னெடுப்பதாக தொழிலாளர்கள் கருதிய காரணத்தால் கிட்டியதாகும்.”
வர்க்கப் போராட்டமானது ஒவ்வொரு நாட்டிலும் அரசியல் சூழ்நிலையிலான ஒரு மேலாதிக்கமான காரணியாக எழுந்து வருகிறது. கடந்த ஆண்டின் சமயத்தில், பிரான்சில் நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட வலது-சாரி தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் ஜனநாயக-விரோதமான ஒரு “அவசரகால நிலை” ஆகியவற்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றினர். சீனாவிலும் இந்தியாவிலும் வாகன உற்பத்தித் துறை தொழிலாளர்கள் ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான வேலைநிறுத்தங்களை தொடக்கினர். ஐரோப்பா முழுமையிலும், வங்கிகளால் உத்தரவிடப்பட்ட இடைவிடாத சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆழமான எதிர்ப்பு நிலவுகிறது. உண்மையான மார்க்சிசத்திற்கும், “இடது” என்பதாய் கூறிக் கொண்டு ஆனால் உண்மையில் நடுத்தர வர்க்கத்தின் சலுகைபடைத்த தட்டுகளது நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்ற அமைப்புகளின் அரசியலுக்கும் இடையில் மேலும் மேலும் வித்தியாசம் தெளிவாகியிருப்பதென்பது அனைத்துலகக் குழுவின் தாக்கம் கண்டிருக்கும் வளர்ச்சியில் இன்னுமொரு கூறாகும். கிரீசில், சென்ற ஆண்டின் ஜனவரியில் அதிகாரத்திற்கு வந்த சிரிசா வெகுவிரைவில் தனது தேர்தல் வாக்குறுதிகள் அத்தனையையும் மறுதலித்தது. 2015 ஆம் ஆண்டின் இறுதிக்குள்ளாக, இந்த “தீவிர இடதுகளின் கூட்டணி” ஐரோப்பிய ஒன்றிய ஆதரவுடனான சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்திக் கொண்டிருந்தது என்பதோடு, கண்டம் முழுவதிலும் அகதிகள் மீது நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதலில் அது முன்னிலை போலிஸ் படையாகவும் சேவை செய்தது. WSWS இன் பகுப்பாய்வின் அடிப்படையில், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பகுதிகள் இந்த அனுபவத்தில் இருந்து முடிவுகளுக்கு வரத் தொடங்கியிருக்கின்றனர்.
தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவு மட்டத்துக்கும் அது முகம்கொடுக்கும் அபாயங்களுக்கும் இடையில் இன்னும் கூட பெரும் பிளவு இருக்கிறது. பேரணிக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரங்களில் இருக்கிறது, இன்னும் நூறாயிரக்கணக்கில் அல்லது மில்லியன்கணக்கில் வந்துவிடவில்லை. இருப்பினும் பெரும் எண்ணிக்கை வரும். உலக சோசலிச வலைத் தளத்தின் பெருகிச் செல்லும் வாசகர் எண்ணிக்கையும் மே தினப் பேரணிக்குக் கிட்டிய பதிலிறுப்பும் உலகெங்குமான தொழிலாளர்கள் உண்மையான சோசலிச அரசியலை நோக்கித் திரும்புகின்ற ஒரு பரந்த திருப்பத்திற்கு கட்டியம் கூறுகின்றன.
இந்த இடத்தில், அரசியல் தலைமையின் பிரச்சினை தீர்மானகரமானதாய் இருக்கிறது. தொழிலாள வர்க்கத்தின் புறநிலையான இயக்கத்திற்கும் புரட்சிகரக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பில் இருந்து தான் ஒரு சோசலிசப் புரட்சி உருவாகிறது.
மே தினப் பேரணியில் உரையாற்றிய அனைவருமே ஐக்கியப்பட்ட மற்றும் அரசியல்ரீதியாய் ஒருமைப்பட்டதொரு முன்னோக்கை முன்வைத்தமையானது பேரணியின் மிகவும் முக்கியமான அம்சமாக இருந்தது. அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம், ஜேர்மனி, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்தான ICFI இன் தலைவர்கள் சர்வதேசத் தொழிலாள வர்க்கம் முகம்கொடுத்த மிக முக்கியமான அரசியல் பிரச்சினைகள் சிலவற்றில் - கால்நூற்றாண்டு கால ஏறக்குறைய இடைவிடாத போரின் பின்விளைவுகள்; ஒபாமா நிர்வாகத்தின் “ஆசியாவை நோக்கிய திருப்பம்” இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஒட்டுமொத்த பசிபிக் பிராந்தியத்தின் மீதும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்; ஜேர்மன் இராணுவவாதத்தின் வளர்ச்சி, ஐரோப்பாவிலான நெருக்கடி, அத்துடன் ரஷ்யாவுக்கு எதிரான ஏகாதிபத்திய பிரச்சாரம் ஆகியவை; பிரித்தானியாவின் Brexit பிரச்சாரம்; ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்காவிலான அகதிகள் நெருக்கடி; அமெரிக்க-சீன பதட்டங்கள் இலத்தீன் அமெரிக்காவுக்கு கொண்டிருக்கும் பின்விளைவுகள், மற்றும் அமெரிக்காவிலான அரசியல் நெருக்கடி ஆகியவை உட்பட - உரையாற்றினர் (வரும் வாரத்தில் WSWS இல் அவை பிரசுரிக்கப்பட இருக்கின்றன).
அனைத்து நாட்டுத் தொழிலாள வர்க்கத்தையும் ஐக்கியப்படுத்தி போர், சமூக சமத்துவமின்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் ஆகியவற்றுக்கு எதிராய் எழுகின்ற போராட்டங்களுக்கான ஒரு அரசியல் தலைமையைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டம் என்பதே அத்தனை உரைகளிலும் மையமான கருப்பொருளாய் இருந்தது. இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலரான விஜே டயஸ் தனது உரையின் போது கூறியதைப் போல, “உலகெங்கும் கிளர்ந்து முன்வருகின்ற தொழிலாளர்களை, ஒரு உலகளாவிய வர்க்கமாகவும் தேவை மற்றும் போர் இல்லாத ஒரு புதிய சமூக ஒழுங்கின் நாயகராகவும் அவர்களது புறநிலை நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரு வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கை கொண்டு ஆயுதபாணியாக்குவதே இன்றியமையாத பிரச்சினையாக இருக்கிறது.”
பெரும் அளவிலான புரட்சிகர நம்பிக்கையுடன் ICFI முன்னேறி வருகிறது. முதலாளித்துவ நெருக்கடி போரை மட்டும் உருவாக்குவதில்லை, அது சோசலிசப் புரட்சிக்கான நிலைமைகளையும் சேர்த்தே உருவாக்குகிறது. டேவிட் நோர்த் அமெரிக்காவிலான அரசியல் சூழலை பகுப்பாய்வு செய்ததில் குறிப்பிட்டவாறாக, “அமெரிக்காவில் தொழிலாள வர்க்கம் ஒருபோதும் சோசலிசத்தை நோக்கித் திரும்பாது என்பதாக அமெரிக்காவின் அரசியல் தனித்தன்மைவாதம் குறித்த அடிப்படை விவரிப்பானது நடைமுறையில் மறுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க வர்க்கப் போராட்டத்தின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் நீண்ட நெடுங்காலமாக ஒடுக்கப்பட்டிருந்த சோசலிசம் வெடிப்பான வளர்ச்சியின் ஒரு காலகட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறது.”
இது மிக நீண்ட-காலத்திற்கான சர்வதேச தாக்கங்களைக் கொண்டுள்ளது. சோசலிசத்திற்கான ஆதரவு பெருகுவதானது ஒரு தேசிய நிகழ்முறையாக அல்லாமல், ஒரு உலகளாவிய நிகழ்முறையாக அபிவிருத்தி காணும்.
ஒரு வரலாற்று காலகட்டம் முடிவுக்கு வரத் தொடங்குகிறது, ஒரு புதிய காலகட்டம் தொடங்கிக் கொண்டிருக்கிறது. ஸ்ராலினிசத்தாலும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பினாலும், அவற்றுடன் சேர்ந்து “இடது” அரசியலின் வலது-சாரி நகர்வினாலும் உருவாக்கப்பட்டிருந்த கால் நூற்றாண்டு கால அரசியல் குழப்பமும் நோக்குநிலை பிறழலும் அரசியல் தீவிரப்படல் மற்றும் போராட்டத்தின் ஒரு காலகட்டத்திற்கு வழிவிட்டுக் கொண்டிருக்கிறது.
மே தினப் பேரணியானது ICFI இன் வரலாற்றிலும் ஏகாதிபத்திய போருக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் எதிராய் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் ஒரு சர்வதேசிய இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்திலும் ஒரு முக்கியமான நிகழ்வாக இருந்தது. இந்த முக்கியமான மைல்கல்லை மே தினப் பேரணியில் பதிவு செய்த நாங்கள், அதேவேளையில் முன்னிருக்கும் தீவீரமான சவால்களையும் உணர்ந்திருக்கிறோம்.