Print Version|Feedback
French government escalates repression of protests against labor law
தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மீதான ஒடுக்குமுறையை பிரெஞ்சு அரசாங்கம் தீவிரப்படுத்துகிறது
By Stéphane Hugues 17 May 2016
பிரான்சில் பிரதமர் மானுவேல் வால்ஸ் மற்றும் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் அதன் பிற்போக்கான தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மீதான ஒடுக்குமுறையை தீவிரப்படுத்துகிறது. இந்த சட்டத்தை எதிர்த்து மார்ச்சில் தொடங்கிய இளைஞர் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக தொடர்ச்சியான ஒடுக்குமுறைகளை தொடக்கியதோடு, ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராய் ஆத்திரமூட்டல்களிலும் முன்கூட்டிய கைதுகளிலும் மற்ற போலிஸ்-அரசு நடவடிக்கைகளிலும் அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது. பிரெஞ்சு அரசியல்சட்டத்தின் அவசர சட்ட பிரிவு 49.3 ஐப் பயன்படுத்தி இந்த மசோதாவை PS பலவந்தமான முறையில் சட்டமாக்கியது.
சட்டத்தின் திணிப்பால் அதற்கு எதிரான வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நிறுத்தி விட முடியவில்லை. மக்களில் 75 சதவீதம் பேர் முழுமையாக இதனை எதிர்க்கின்றனர். அத்துடன் சட்டம் நிறைவேறி விட்டிருந்தாலும் கூட இந்த முறையற்ற சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர வேண்டும் என 54 சதவீத பிரெஞ்சு மக்கள் விரும்புகின்றனர் என்பதை ஒரு கருத்துக்கணிப்பு எடுத்துக்காட்டியது. இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே எதிர்ப்பு தொடர்ந்தும் பெருகிச் செல்கின்ற நிலையில், PS உடன் நெருக்கமாய் வேலை செய்கின்ற தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் கூட, இந்த சட்டத்திற்கு எதிராய் இரண்டு நாட்கள் தேசிய அளவிலான நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கத் தள்ளப்பட்டன. அவை இன்றும் வியாழக்கிழமையும் நடைபெற இருக்கின்றன.
PS ஐப் பொறுத்தவரை, தொடர்ந்தும் போராடும் துணிச்சலுக்காக ஆர்ப்பாட்டக்காரர்களை அரசின் எதிரிகளாகச் சித்தரித்ததும், அவர்களுக்கு எதிராக அசாதாரணமான ஒடுக்குமுறைகளைத் தொடக்கியதுமே அதன் பதிலிறுப்பாக இருந்தது. உள்துறை அமைச்சரான Bernard Cazeneuve கூறினார்: “பாதுகாப்புப் படைகள் எதிர்கொண்டது, தங்களுடைய கோரிக்கைகளை வெளிப்படுத்துவதற்காக அல்லாமல் இடையூறுகளை ஏற்படுத்துவதற்கும், அழிவுகளில் இறங்குவதற்கும் அரசு மீதான வெறுப்பை வெளிப்படுத்துவதற்குமாய் வந்திருந்த அதீத வன்முறையான குழுக்களை ஆகும்... இது சகித்துக் கொள்ள முடியாதது, சகித்துக் கொள்ளப்படாது.”
ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியது முதலாக 1,300 பேரை போலிஸ் கைது செய்ததாகவும் 819 பேரை காவலில் வைத்திருந்ததாகவும் Cazneuve தெரிவித்தார். முறைசாரா நீதிமன்றங்களில் ஐம்பத்தியொரு பேர் குற்றம் உறுதி செய்யப்பட்டிருக்கின்றனர். Cazneuve கூறினார்: “ஐம்பத்தியோரு பேர் குற்றம் உறுதி செய்யப்பட்டு, பெரும்பாலும் கடுமையான தண்டனையளிக்கப்பட்டிருக்கின்றனர். நீதிமன்றங்களில் இன்னும் கூடுதலாய் உடனடி விசாரணைகள் நடக்கும், இங்கே Rennes இல் இருந்தபடி சொல்கிறேன், எங்களது உறுதி மிக முழுமையானதாய் இருக்கும்.”
உண்மையில் துணைஇராணுவ போலிஸ் படை அவர்களது மூர்க்கமான நடத்தைக்கு பெயர்பெற்றதாகும். அவர்கள் முழு உடல் கவசம் அணிகின்றனர், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடுமையான லத்தி அடிகள் கொடுக்கின்றனர், ரப்பர் புல்லட்டுகளை, மின்னல்வேகப் பந்துகளை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளைக் கொண்டு சுடுகின்றனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டக்காரரான 20 வயது புவியியல் மாணவர் ஒருவர் மீது போலிஸ் அதிகாரி ஒருவர் வேகப்பந்தைக் கொண்டு சுட்டதில் அவருக்கு ஒரு கண் பறிபோனது. இத்தகைய போலிஸ் தாக்குதல்களுக்குப் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பெற்றனர். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு, Remi Fraisse என்ற இன்னொரு மாணவர் Nantes அருகே நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் இராணுவம் வீசிய ஒரு “தற்காப்பு கையெறி குண்டு” தாக்கியதில் மரணமடைந்தார்.
சென்ற சனிக்கிழமையன்று Rennes இல் போலிஸ் வன்முறைக்கு எதிரான ஒரு ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைக்க 700க்கும் அதிகமான இளைஞர்கள் முயற்சி செய்தபோது, அவசரநிலையின் நிபந்தனைகளின் பேரின் அந்த ஆர்ப்பாட்டம் தடை செய்யப்பட்டது. ஒட்டுமொத்த நகரமும் முடக்கப்பட்டது, கூடுதல் படைகளுடன் ஆர்ப்பாட்டத்தை முற்றுகையிட்ட போலிஸ் கண்ணீர் புகை கொண்டு இளைஞர்களை சிதறடித்ததோடு அவர்கள் மீது “தற்காப்பு பந்துகளை” சுட்டது.
கலைக்கப்படுவதற்கு முன்பாக இளைஞர்கள் “போலிஸ் முடமாக்குகிறது, போலிஸ் படுகொலை செய்கிறது” என்று முழக்கமிட்டனர். அவர்களில் ஒருவர் வேகப் பந்து தாக்கியிருந்த தனது இடுப்புப் பகுதி காயத்தை AFP செய்தியாளர் ஒருவரிடம் காண்பித்து, “அவர்கள் எங்களை மிரட்ட முயற்சி செய்கிறார்கள், அவர்கள் எங்களை காயப்படுத்த முயற்சி செய்கிறார்கள்” என்றார்.
ஐரோப்பாவெங்கிலும் சிக்கன நடவடிக்கைக்கு அதிகரித்துச் செல்லும் எதிர்ப்பானது வர்க்கப் பதட்டங்களின் ஒரு வெடிப்புக்கும், பிரான்சில் ஒரு ஆட்சி நெருக்கடியின் எழுச்சிக்கும் இட்டுச் சென்றிருக்கிறது. அடிப்படை சமூக உரிமைகளை PS அழிப்பதற்கு தோன்றியிருக்கும் ஆழமான வெகுஜன எதிர்ப்பானது முதலாளித்துவ நெருக்கடியின் முழுமையான சுமையையும் தொழிலாளர்களின் முதுகில் சுமத்த எத்தனிக்கும் முதலாளித்துவ வர்க்கத்தின் தீர்மான உறுதியுடன் மோதுகின்றது.
பிரான்சில் “இடது” அரசியலாகக் கூறப்பட்டு கையளிக்கப்பட்டிருந்த ஒன்றில் பல தசாப்தங்களாய் மேலாதிக்கம் செய்து வந்திருக்கக் கூடிய PS திட்டமிட்டு சமூகரீதியான ஒரு எதிர்ப்புரட்சிகர வேலைத்திட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. 2012 இல் பதவிக்கு வந்தது முதலாக, ஹாலண்ட், பத்து பில்லியன் யூரோ கணக்கிலான நிதிநிலை வெட்டுகள் உள்ளிட பெரும் சிக்கன நடவடிக்கைத் தாக்குதல்களையும், 2015 இல் மக்ரோன் கட்டுப்பாட்டுத்தளர்வு சட்டத்தையும், இப்போது பல தசாப்தங்களாக தொழிலாளர்கள் கொண்டிருந்த உரிமைகளை அழிப்பதற்காக எல் கொம்ரி சட்டத்தையும் முன் தள்ளியிருக்கிறார்.
ஒரு மிகவும் பலவீனமான மற்றும் பிற்போக்குத்தனமான அரசாங்கத்தின் தலைமையில் ஹாலண்ட் இருக்கிறார். PS அரசாங்கத்தை அகற்றுவதற்கான ஒரு பரந்த போராட்டத்திற்கு தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் #NuitDebout இயக்கத்தில் இருக்கும் அவற்றின் அரசியல் கூட்டாளிகளும் காட்டுகின்ற எதிர்ப்பின் ஒரே காரணத்தால் மட்டுமே அவர் இப்போதுவரை அரசியல்ரீதியாக தப்பிப் பிழைக்க முடிந்திருக்கிறது.CGT தலைவரான பிலிப் மார்டினேஸ் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளை பகிரங்கமாய் கேலி செய்தார்.
தனது திட்டநிரலுக்கு எழுகின்ற வெகுஜன எதிர்ப்பை நசுக்குவதற்கு, PS அப்பட்டமான எதேச்சாதிகார வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது.
எல் கொம்ரி சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பங்குபெற விழையும் ஏராளமானோர் பிரான்சின் அவசரகாலநிலை ஷரத்துகளின் கீழ் முன்கூட்டியே கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடக மற்றும் ஆர்வலர் வலைத் தள செய்திகள் தெரிவிக்கின்றன. பாரிஸின் பெல்வில் பகுதியில் போலிஸால் இடைமறித்து நிறுத்தப்பட்ட இருவர் அவர்களின் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்ததை அடுத்து, ஆர்ப்பாட்டம் முடியும் வரை போலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வைக்கப்பட்டிருந்தனர்.
போலிஸ் 18 வயதான ஒரு இளைஞரைக் கைது செய்து, சென்ற மே 3 ஆம் தேதி நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தின் சமயத்தில் போலிஸ் அதிகாரி ஒருவரைக் கொல்ல முயற்சி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்திருக்கிறது. ஆர்ப்பாட்டத்தின் போதான CCTV காட்சியின் மூலமாக அந்த இளைஞரை அடையாளம் கண்டதாக போலிஸ் கூறுகிறது. ஆனால் அந்த இளைஞர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
ஹாலண்ட் ஆர்ப்பாட்டக்காரர்களை ஏறக்குறைய பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்பவர்களாக குற்றம் சாட்டாத குறையை மட்டுமே விட்டுவைத்தார். ஆர்ப்பாட்டக்காரர்களின் வன்முறையானது “குறிப்பாக பயங்கரவாத அச்சுறுத்தல் மிக உயர்ந்த மட்டத்தில் இருக்கின்ற சமயத்தில் மக்களைப் பாதுகாப்பதில் இருந்து” பாதுகாப்புப் படைகளை திசைதிருப்பியிருப்பதாக அவர் கூறினார்.
உண்மையில், ஹாலண்டின் அவசரகால நிலையானது பிரதானமாக PS இன் பிற்போக்கான கொள்கைகளுக்கு உள்நாட்டில் எழுந்திருக்கும் சமூக எதிர்ப்புக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகி இருக்கிறது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் சமூக எதிர்ப்பைக் குறிவைத்து ஒரு அவசரநிலையைத் திணிப்பதற்கான ஒரு சாக்காகவே பாரிஸில் நவம்பர் 13 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் - இத்தாக்குதல்கள் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான நேட்டோ போரின் பகுதியாக பிரெஞ்சு அரசின் இரகசிய ஆதரவைத் தொடர்ந்து பெற்று வருகின்ற இஸ்லாமிய வலைப்பின்னல்களால் நடத்தப்பட்டவையாக இருந்தன - பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.