Print Version|Feedback
French Socialist Party’s labor reform boosts far-right National Front
பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் அதி-வலது தேசிய முன்னணிக்கு ஊட்டமளிக்கின்றன
By Francis Dubois 26 May 2016
பிரான்சில் இருக்கும் தொழிலாளர்கள், சோசலிஸ்ட் கட்சிக்கும் (PS) அதன் தொழிலாளர் சட்டத்திற்கும் எதிரான போராட்டத்தில் அணிதிரள்கின்ற நிலையில், அவர்கள் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்திற்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டத்திற்கு முகம்கொடுக்கின்றனர், ஏனெனில் PS மற்றும் அதன் கூட்டுக்களது பிற்போக்குத்தனமான கொள்கைகள் முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்திற்குள் இருக்கும் அதிவலதுகளின் நிலைகளை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
தொழிலாளர் சட்டத்தை திணித்ததற்காக PS அரசாங்கத்திற்கு எதிராக, LR மற்றும் UDI ஆகிய பழமைவாதக் கட்சிகள் மே 12 அன்று பிரான்சின் தேசிய சட்டமன்றத்தில் ஒரு கண்டனத் தீர்மானத்தை கொண்டு வந்ததோடு, நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கும் அழைப்பு விடுத்த வேளையில், நவ-பாசிச தேசிய முன்னணியின் இரண்டு சட்டமன்ற பிரதிநிதிகள் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்த சட்டத்திற்கு எதிராக மார்ச்சில் இந்த இயக்கம் தொடங்கியதில் இருந்தான காலம் முழுமையிலும், ”பிரான்சின் முதல் கட்சி”யாகவும் பரந்த மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற “மக்களின்” கட்சியாகவும் தம்பட்டம் அடித்துக் கொள்கின்ற FN, வீதிகளிலோ ஊடகங்களில் கருத்துக் கூறுவதிலோ தலையைக் காட்டாமல் ஒதுங்கியிருந்து வந்திருந்தது. இந்த சட்டத்திற்கு “எதிராக” இருப்பதாக அவ்வப்போது கூறிக் கொண்டு சட்டத்தின் சில ஷரத்துகளை அது விமர்சித்தாலும் கூட, இச்சட்டம் குறித்த துல்லியமான நிலைப்பாடு எதுவும் FNக்குக் கிடையாது. “போலிஸ்-விரோத வெறுப்பு”க்கு எதிராக கவனமாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒரு வலதுசாரி ஆர்ப்பாட்டத்தில் - இதற்கு PS இன் ஆதரவும் இருந்தது - FN பங்குபற்றியிருந்தது.
இந்த இடத்தில் FNம் ஆளும் வர்க்கமும் நிரூபணமான ஒரு மூலோபாயத்தைக் கையிலெடுத்திருந்தனர். 25 ஆண்டுகளாய், வலது-சாரி அல்லது PS அரசாங்கங்களிடம் இருந்து வருகின்ற சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது ஒவ்வொரு முக்கிய போராட்டத்தின் போதும், FN அரசியல் அரங்கிலிருந்து காணாமல் போய்விடும். தொழிலாள வர்க்கத்திற்கும் நவ-பாசிஸ்டுகளுக்கும் இடையிலான ஒரு மோதலைத் தடுப்பதும், “மக்களின்” பாதுகாவலனாக FN போடுகின்ற ஒட்டுமொத்த மோசடியானதொரு ஜனரஞ்சக வேடத்தைப் பராமரிப்பதுமே இந்த சூழ்ச்சியின் நோக்கமாய் இருக்கிறது. தொழிற்சங்கங்களாலும் அவற்றின் கூட்டாளிகளாலும் தொழிலாளர்கள் சந்தித்திருக்கும் ஒவ்வொரு தோல்விக்கும் பின்னர், அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளாக FN இன் நிலை இன்னும் அதிக வலுவூட்டப்பட்டதாய் எழுந்திருக்கிறது.
இந்த “விசித்திர”த்தை ஊடகங்கள் குறிப்பிட்டன. “சமூக விடயங்களில், FN அமைதி காக்கிறது” என்ற தலைப்பில் France Inter எழுதியது: “எல் கொம்ரி சட்ட விடயத்தில் இடதுகளும் வலதுகளும் ஒருவரையொருவர் கிழித்து வருகின்ற சமயத்தில், FN காணாமல் போய்விட்டது... பல மாத கால ஊடகப் பரபரப்புகளுக்குப் பின்னர், அதி வலதிடம் இருந்து எதுவுமே கேட்கவில்லையே என்பதில் ஒருவர் ஆச்சரியம் கொள்வதை ஒப்புக்கொண்டாக வேண்டும்.”
இந்த பிற்போக்குத்தனமான நிகழ்முறை அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளாக FN இன் நிலைகளை வலுப்படுத்தியிருப்பதை பல கருத்துக் கணிப்புகளும் தெளிவாக்கி இருக்கின்றன. ஏப்ரல் 29 அன்றான Odaxa கருத்துக்கணிப்பின் படி, “தகவல்தொடர்பு மூலோபாயத்தில் —அல்லது இந்த நாட்களில் தகவல்தொடர்பு இல்லாமல் இருக்கின்ற மூலோபாயத்தில்— மரின் லு பென் நிச்சயமாக மிகத் திறம்பட்டவராய் இருக்கிறார். அநேக தேர்தல்களில் முதல் சுற்றில் தவறாமல் தேர்ந்தெடுக்கப்படுகின்ற (பல சமயங்களில் முதல் இடத்தில்) அவருக்குக் கிடைக்கும் சாதகமான தரமதிப்பீடுகள் ... குறிப்பிடத்தக்களவு அதிகமானதாகவே இருந்திருக்கின்றது. ஏப்ரல் 26 அன்று வெளியான எங்களது மிக சமீபத்திய அரசியல் கருத்துக்கணிப்பில், பிரெஞ்சு மக்களில் 25 சதவீதம் பேர் மரின் லு பென்னிடம் தாங்கள் அனுதாபமாக உணர்வதாகக் கூறியிருக்கின்றனர்...”
அந்த கருத்துக்கணிப்பு நிறுவனம் மேலும் கூறுகிறது: “1992க்கும் 2002 க்கும் இடையிலான காலத்தில் FN இன் நிலையுடன் ”பெரும்பாலும்” உடன்படுவதாக பிரெஞ்சு மக்களில் 13 இல் இருந்து 19 சதவீதம் பேர் மட்டுமே கூறியிருந்தனர் என்ற அதேநேரத்தில், இப்போது 33 சதவீதம் பேர் [மரின் லு பென் உடன்] உடன்படுவதாக எங்கள் கருத்துக்கணிப்பில் கூறியிருக்கின்றனர். இது 2002 ஏப்ரல் 21 சமயத்தில் FN இன் கருத்துகளுக்கு இருந்த ஆதரவைக் காட்டிலும் ஏறக்குறைய இருமடங்காகும்.”
Les Echos க்காக ஏப்ரல் 27 அன்று Elabe நடத்திய ஒரு கருத்துக்கணிப்பின் படி, “அத்தனை பரிசோதித்த அனுமானங்களின் படியும் மரின் லு பென் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்று விடுவார். அவருக்கு ஆதரவான வாக்களிப்புகள், சூழலைப் பொறுத்து 23 சதவீதத்தில் இருந்து 28.5 சதவீதம் வரை அமைகின்ற நிலையில், இது தேசிய முன்னணியின் செயலூக்க நிலையை ஊர்ஜிதம் செய்வதாக இருக்கிறது. எட்டு அனுமானச் சூழல்களிலுமே, ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஞாயிறன்று நடத்தப்படுமாயின் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற அனுமதிக்கும் அளவுக்கு மரின் லு பென்னுக்கு ஆதரவு கிட்டியிருக்கிறது.”
இந்த முரண்பாடை எங்ஙனம் விளங்கிக் கொள்வது?
தொழிலாள வர்க்கத்தை வன்முறையாக ஒடுக்குவதையே பாரம்பரியமாகக் கொண்ட இந்த நவ-பாசிசக் கட்சி, தொழிலாளர்களுக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் பகிரங்கமான ஒரு போராட்டம் நடக்கின்றதொரு காலகட்டத்தில் தனது ஆதரவு வாக்குவீதத்தை அதிகரிக்க முடிகிறது என்றால், அதற்கு காரணம் தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் PS திணிக்கும் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு சிக்கன நடவடிக்கைகள் என்ற பிற்போக்குத்தனமான கொள்கைகள் மட்டுமல்ல, குறிப்பாய் இடது முன்னணி (FG), புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA), #Nuit Debout இயக்கம் போன்ற போலி-இடது அமைப்புகள் மற்றும் PS இனை சுற்றியுள்ள ஏனைய குழுக்கள் வகிக்கும் பாத்திரத்தினாலும் தான்.
ஹாலண்ட் அவசரகால நிலையைக் கொண்டுவந்தமை, லு பென்னை எலிசே மாளிகைக்கு அழைக்க அவர் விடுத்த அழைப்பு, பகுதியாக நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியின் மரபுக்கு புத்துயிரூட்டுவதாக இருக்கும் தேசிய குடியுரிமையை பறிக்கும் கோட்பாட்டை PS வழிமொழிவது ஆகியவை FN இன் பாதையில் இருக்கும் தடைகளை அகற்றி அதற்கு வழி ஏற்படுத்தித் தந்திருக்கின்றன.
நான்காண்டுகளுக்கும் அதிகமாய் ஹாலண்டின் ஜனாதிபதி பதவிக் காலத்தில் சிக்கன நடவடிக்கைகள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், PS க்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் இளைஞர்களின் ஒரு அரசியல் போராட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு போலி-இடதுகள் தமது சக்திக்குட்பட்ட ஒவ்வொன்றையும் செய்து வந்திருக்கின்றன. போராட்டங்கள் அணிதிரண்டு விடாமல் சிதறடிப்பதில் இவை வெற்றி பெற்றதால்தான், PS இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் திணிக்க முடிந்தது. மறுபக்கத்தில், தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் PS ஐ ஒரு எதிரியாக முன்னெப்போதினும் தெளிவாக அடையாளம் காண்கின்றனர்.
தொழிற்சங்கங்கள், மார்ச்சில் இந்த இயக்கம் தொடங்கியதன் பின்னான இரண்டு மாத காலங்களில், அபிவிருத்தி காண்கின்ற வேலைநிறுத்தங்களை தனிமைப்படுத்துவதற்கு, போலி-இடதுகள் மற்றும் #NuitDebout இயக்கத்தின் ஆதரவுடன், தம்மால் இயன்ற அனைத்தையும் செய்தன. தொழிலாளர்களின் குறிப்பிட்ட பிரிவுகளை மட்டுமே வேலைநிறுத்தத்திற்கு அழைக்கும் அவை, ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு தாங்கள் அழைப்பு விடப் போவதில்லை என்பதை வலியுறுத்துகின்றன.
“இடதுசாரி மதிப்புக்கள்” என்ற பேரில் PS ஆல் நடத்தப்படும் சமூகத் தாக்குதல்களும், பாதுகாப்புக் கொள்கைகளும் மற்றும் ஒடுக்குமுறையும், FNக்கு ஒடுக்கப்பட்டவர்களின் பாதுகாவலனாக காட்டிக் கொண்டு செல்வாக்குப் பெறுவதற்கு வழியேற்படுத்தி தருகிறது.
எல் கொம்ரி சட்டத்திற்கு FN காட்டும் ”எதிர்ப்பு”க்கும் சமூக உரிமைகளின் பாதுகாப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் ஒரு கட்சியின் அரசியல் வாரிசே FN ஆகும். இந்த தொழிலாளர் சட்டத்தை பயன்படுத்தி ஒரு எதேச்சாதிகார அரசாங்கத்தை திணிப்பதற்கே அது தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது. FN ஒரு அதி-தேசியவாதக் கட்சியாகும், அது “மதசார்பின்மையை பாதுகாப்பதற்கு” அழைப்பு விடுப்பதான பேரில் தனது புலம்பெயர்ந்தோர்-விரோத மற்றும் முஸ்லீம்-விரோத நிலைப்பாடுகளை மென்மையாக மறைத்துக் கொண்டிருக்கிறது.
இந்தச் சட்டத்தின் மீது அது வைக்கின்ற விமர்சனங்களை பொறுத்தவரை, அவை சிறு வணிகங்களுக்கு பிற்போக்குத்தனமான அழைப்புகளை செய்வதற்காகவே ஆகும். மார்ச் 9 அன்று மரின் லு பென் கூறினார்: “தொழிலாளர் சட்டத்திற்கான எல் கொம்ரி மசோதா மிகச் சிறு வணிகங்கள் (TPE) மற்றும் சிறு மற்றும் குறு வணிகங்களின் (PME) பொருளாதாரப் பிரச்சினைகள் எதனையும் தீர்க்கப்போவதில்லை. இந்த சீர்திருத்தத்தால் மறுபடியும் அவையே அதிகம் பாதிக்கப்படுபவையாக இருக்கின்றன. உண்மையில், தொழில் முனைவோர்களையும் மற்றும் குறிப்பாக சிறு வணிக முதலாளிகளின் பிரச்சினைகளையும் எதிர்பார்ப்புகளையும் முற்றிலும் அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதையே இந்தச் செயல்திட்டம் வெளிக்காட்டுகிறது. முதலில் இந்தப்பிரிவினரது கேள்விப்பத்திரங்களை (order books) பூர்த்திசெய்வதற்கு நாம் அனுமதிக்க வேண்டும்.”
FNக்கு கணிசமான செல்வாக்கு உள்ள பாதுகாப்புப் படைகள் வேலைநிறுத்தம் செய்பவர்களையும் ஆர்ப்பாட்டக்காரர்களையும் தாக்கி வருகின்ற நிலையில், FN ஆனது “ஒரு அமைதிவாய்ந்த பிரான்ஸ்” எனத் தலைப்பிடப்பட்ட ஒரு சட்டம்-ஒழுங்கிற்கான முன்முயற்சியை தொடக்கியிருக்கிறது. வர்க்கப் போராட்டம் அதிகரித்துச் செல்லும் நிலைக்கு முகம் கொடுக்கின்ற சமயத்தில், சமூகத்தின் “அமைதிப்படுத்தலை” உறுதி செய்வது — இது அல்ஜீரியா, இந்தோசீனா மற்றும் மடகஸ்காரிலான பிரான்சின் காலனித்துவ போர்களில் வேரூன்றிய ஒரு வார்த்தைஜாலம் ஆகும் — அரச வன்முறையின் மூலமாக மட்டுமே சாத்தியமாகின்ற ஒன்றாகும்.