Print Version|Feedback
What way forward in the struggle against the French labor law?
பிரெஞ்சு தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னோக்கிய பாதை என்ன?
By Alex Lantier
13 May 2016
பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கம் ஒரு நாடாளுமன்ற வாக்கெடுப்பு இல்லாமலேயே, அரசியலமைப்பின் ஷரத்து 49-3 வழங்கும் ஜனநாயக-விரோத அதிகாரங்களைப் பயன்படுத்தி, அதன் தொழிலாளர் சட்டத்தை வியாழனன்று நடைமுறைப்படுத்தியது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் இரண்டு மாதகால பாரிய போராட்டங்களை முகங்கொடுத்தும், பிரெஞ்சு மக்களில் முக்கால்வாசி பேரால் எதிர்க்கப்படும் ஒரு சட்டத்தைத் திணித்திருப்பது, ஓர் அரசியல் திருப்புமுனையைக் குறிக்கிறது. இது பிரான்சிலும் மற்றும் ஐரோப்பா எங்கிலும் சமூக செலவு குறைப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு புதிய கட்டத்தைத் திறந்து விடுகிறது.
சோசலிஸ்ட் கட்சியுடன் தொடர்புபட்ட மாணவர் சங்கங்களும் தொழிற்சங்கங்களும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்க தொடங்கிய நிலையில் தான், அச்சட்டத்திற்கு எதிரான அணிதிரள்வு மார்ச்சில் தொடங்கியது. இந்த குழுக்கள், 2012 இல் சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் பிரான்சுவா ஹோலாண்ட் தேர்ந்தெடுக்கப்படுவதை ஆதரித்தன, மற்றும் அவர் பதவி ஏற்றதற்குப் பின்னர் அவரது சிக்கன நடவடிக்கைகளுக்கு எந்த எதிர்ப்பையும் ஒழுங்கமைக்காமல் இருந்ததும் இவைதான். ஆனால் ஹார்ட்ஸ் IV சட்டங்களால் ஜேர்மனியில் உண்டாக்கப்பட்ட சுரண்டும் வகையிலான நிலைமைகளைப் பிரான்சில் அறிமுகப்படுத்துவதற்கு ஆழ்ந்த எதிர்ப்பு இருப்பதை அவை உணர்ந்தன. (தொழிலாளர் நலத்துறை பிரெஞ்சு மந்திரியின் பெயரிடப்பட்ட) எல் கொம்ரி சட்டமானது, வேலை நேரத்தை அதிகரிப்பதுடன், வேலை பாதுகாப்பை நீக்குகிறது மற்றும் தொழிலாளர் விதிமுறைகளை மீறி ஒப்பந்தங்களைப் பேரம்பேச தொழிற்சங்கங்களை அனுமதிக்கிறது.
இந்த விடையிறுப்பு, பரந்தளவில் மக்கள், குறிப்பாக உயர்நிலை பள்ளி இளம் மாணவர்கள் தீவிரமயமாவதை எடுத்துக்காட்டும். 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பிந்தைய முதலாளித்துவ பொறிவின் காலத்தில் வளர்ந்துள்ள, ஐரோப்பா எங்கிலுமான தொழிலாள வர்க்க இளைஞர்களின் ஓர் ஒட்டுமொத்த தலைமுறையும், சமூக மற்றும் பொருளாதார அமைப்புமுறையுடன் அதிகரித்தளவில் நேரடியாக மோதலுக்குள் வருகிறது. இந்த இளம் போராட்டக்காரர்களை ஆதரிக்க, தொழிற்சங்கங்கள் முன்னெச்சரிக்கையுடன் தொழிலாளர்களது பிரிவுகளுக்கு அழைப்புவிடுத்த போது, ஒரு மில்லியனுக்கும் அதிகமான பேர் வீதிகளில் இறங்கினர்.
அதிகரித்தளவில் பலவீனப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சோசலிஸ்ட் கட்சி, பிரெஞ்சு அவசரகால நிலையின் விதிமுறைகளின் கீழ் கலகம் ஒடுக்கும் பொலிஸை ஒன்றுதிரட்டி, அக்கும்பலைக் கொண்டு போராட்டக்காரர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறையை தொடங்கி எதிர்வினையாற்றியது. எவ்வாறிருந்தபோதினும் இது ஆர்ப்பாட்டங்களை தடுப்பதில் தோல்வி அடைந்ததால், அந்த சட்ட முறைகளை நிறைவேற்றுவதற்கு, வங்கிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து வந்த அதிகரித்த அழுத்தத்தின் கீழ், சோசலிஸ்ட் கட்சி அதையொரு வாக்கெடுப்புக்கு கொண்டு வந்தது.
பிரெஞ்சு தேசிய நாடாளுமன்றத்தில் சகல கட்சிகளும் சமூக-செலவு குறைப்பு திட்டங்களை ஆதரிக்கின்ற போதினும், அச்சட்டத்திற்கு வாக்களிக்கத் துணிந்த பிரதிநிதிகளின் ஒரு பெரும்பான்மையை பிரதம மந்திரி மானுவல் வால்ஸால் ஒன்றுதிரட்ட முடியவில்லை. பிரதிநிதிகள் அதை தடுக்க விரும்பினால் அரசாங்கத்தைப் பதவியிலிருந்து அகற்றும் ஒரு ஆட்சி கலைப்பு தீர்மானத்தில் வாக்களிக்க அவர்களை நிர்பந்திக்கும் வகையில், இறுதியில், அச்சட்டத்தை நிறைவேற்ற வால்ஸ் ஷரத்து 49-3 இல் அடைக்கலமானார்—இதே ஷரத்து, பொருளாதார மந்திரி இமானுவெல் மாக்ரோனின் நெறிமுறைகளைத் தளர்த்தும் சட்டத்தை திணிக்க அவரால் கடந்த ஆண்டு பயன்படுத்தப்பட்டது.
இடது முன்னணி மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) போன்ற போலி-இடது குழுக்களுக்கு நெருக்கமாக உள்ளதும், மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் சமூக செலவு குறைப்பு திட்டங்களுக்கு ஒன்றுக்கும் உதவாத சில விமர்சனங்களை வைத்துள்ளதுமான, PS இன் "கிளர்ச்சி" கன்னை என்றழைக்கப்படுவது, ஆட்சி கலைப்பு தீர்மானம் நிறைவேற ஆதரவாக வாக்களித்து இருந்திருக்கலாம். ஆனால் ஆட்சி கவிழ்ப்பு தீர்மானத்தை நிறைவேற்றுவதானது, இன்னும் அதிக கடுமையான சிக்கனத் திட்டத்தில் தங்கியிருக்கும் வலதுசாரி குடியரசு கட்சியினரை (LR) அதிகாரத்திற்குக் கொண்டு வந்துவிடும் என்று வாதிட்டு, இந்த "கிளர்ச்சி" கன்னை அதற்கு எதிராக வாக்களித்து, எல் கொம்ரி சட்டத்தை நிறைவேற்ற தூண்டுதல் அளித்தது.
இந்த பிற்போக்குத்தனமான சட்டம் நிறைவேற்றப்பட்ட இந்த தருணம், தொழிலாளர்களும் இளைஞர்களும் ஐரோப்பா எங்கிலும் வங்கிகளது தாக்குதலை எவ்வாறு நிறுத்துவது என்பதை பற்றிய அடிப்படை அரசியல் தீர்மானங்களை எட்டுவதற்குரிய தருணமாகும்.
சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் சிக்கலான அரசியல் அனுபவங்களினூடாக கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய சமூக செலவு குறைப்பு திட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அதன் முந்தைய வாக்குறுதிகளை முற்றிலுமாக காட்டிக்கொடுத்த கிரீஸின் சிரிசா (“தீவிர இடதின் கூட்டணி”) அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் ஐரோப்பிய-ஒன்றிய ஆதரவு பெற்ற சிக்கன நடைமுறைகளுக்கு எதிராக பெருந்திரளான கிரேக்க தொழிலாளர் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த வாரம் பிரான்ஸில் போராட்டங்கள் எழுந்தன.
கிரீஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலும் உள்ள நாடுகளைப் போலவே, பிரான்சும் முதலாளித்துவ ஆட்சியின் ஆழ்ந்த நெருக்கடியின் பிடியில் உள்ளது. பிரதான ஐரோப்பிய சக்திகள் ஆயுத போட்டியில் இறங்கி இருக்கையில், தீவிரமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்த இராணுவ செலவுகளுக்கான அழுத்தத்தை முகங்கொடுத்துள்ள ஆளும் வர்க்கம் எந்த விட்டுக்கொடுப்புகளும் வழங்குவதை விரும்பவில்லை. கிரீஸின் சமூக ஜனநாயக பாஸோக் (PASOK) கட்சி பின்பற்றிய, வாக்காளர்களை மறந்து போகும் பாதையை சோசலிஸ்ட் கட்சியும் பின்தொடர்கையில், அதிகரித்துவரும் மக்கள் சீற்றத்தை அது வெறுப்புடன் சட்டங்களைக் கொண்டு கையாள்கிறது.
இந்த நெருக்கடியிலிருந்து வெளியேற இப்போதைய அரசு அமைப்புகளினூடாக எந்த வழியும் கிடையாது. அரசியல் ஸ்தாபகத்திற்குள் சோசலிஸ்ட் கட்சிக்கு மாற்றீடுகளாக இருப்பவை குடியரசு கட்சியும் மற்றும் நவ-பாசிச தேசிய முன்னணியும் (FN) ஆகும். குடியரசு கட்சியின் தற்போதைய முன்னணி வேட்பாளராக போட்டியிடும் அலன் யூப்பே வேலை நேரத்தை நீடிக்கும் மற்றும் பெருநிறுவன வரிகளைக் குறைக்கும் சுதந்திர-சந்தை நிகழ்ச்சி நிரலை இப்போது முன்னெடுத்து வருகிறார். இந்த இரண்டு கட்சிகளுமே, தேர்ந்தெடுக்கப்பட்டால், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தும்.
1968 பொது வேலைநிறுத்தத்திற்கு பிந்தைய ஆண்டுகளில் சோசலிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டதற்குப் பின்னரில் இருந்து வர்க்க போராட்டம் இந்த அமைப்புகளினூடாக தான் திசை திருப்பிவிடப்பட்டுள்ள நிலையில், இவை முற்றிலும் திவாலாகி இருப்பதை நிரூபித்துள்ளன. #NuitDebout இயக்கத்தின் பொது சதுக்க ஆக்கிரமிப்புகள் —இவை பெரிதும் NPA மற்றும் இடது முன்னணிக்கு நெருக்கமான சக்திகளால், 2012 இல் ஹோலாண்டுக்கு வாக்களிக்க அழைப்புவிடுத்த சிரிசாவின் கூட்டாளிகளால் பணியமர்த்தப்பட்டவர்களைக் கொண்ட— ஒரு முட்டுச்சந்தாகும். பொருளாதார தேசியவாதத்தை ஊக்குவிப்பதன் மூலமாக, இவை சிக்கன திட்டங்களுக்கு எதிரான ஒரு போராட்டத்தில் ஐரோப்பா எங்கிலும் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதைக் குறுக்காக வெட்டுகின்றன.
ஸ்ராலினிச அமைப்பான தொழிலாளர்களுக்கான பொது கூட்டமைப்பு (CGT) தலைமையிலான தொழிற்சங்கங்கள், சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்திற்கு எதிரான ஓர் அரசியல் போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் அணிதிரள்வதை எதிர்க்கிறது. நேற்று அச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், CGT தலைவர் பிலிப் மார்ட்டினேஸ் கூறுகையில், "பொது வேலைநிறுத்தமா, இப்போதைக்கு அதுபோன்ற எதுவும் அர்த்தமற்றது. 1968 இல் கூட, பொது வேலைநிறுத்தத்திற்கு CGT அழைப்புவிடுக்கவில்லை,” என்று கூறி, போராட்டக்காரர்களிடையே இருந்த பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்புகளை ஏளனப்படுத்தினார்.
ஹோலாண்ட் ஆட்சியை உண்மையில் பதவியிலிருந்து இறக்க தொழிலாள வர்க்கம் ஆரம்பத்திலிருந்தே தலையீடு செய்யமுடியாது இருந்ததென்றால், ஒரு பிற்போக்குத்தனமான முதலாளித்துவ வர்க்க கட்சியான சோசலிஸ்ட் கட்சியை, 1968 க்குப் பின்னரிலிருந்து அனைத்திற்கும் மேலாக அண்மித்த ஒரு அரை நூற்றாண்டாக ஆதரித்து வந்துள்ள இத்தகைய அமைப்புகளே காரணமாகும்.
பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முகங்கொடுத்துள்ள அதிகரித்த நெருக்கடியை, சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் அரசியல் வட்டத்தில் உள்ள அமைப்புகளை "இடதுக்கு" அழுத்தமளிக்கும் ஒரு முயற்சியின் மூலமாக தீர்க்க முடியாது. அல்லது பிரான்சில் 1936 அல்லது 1968 ஐ போல, ஒரு பொது வேலைநிறுத்தத்தின் வெடிப்பார்ந்த அனுபவங்களினூடாக கூட தீர்க்க முடியாது. முதலாளித்துவத்தின் புறநிலையான நெருக்கடியும் மற்றும் ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்த கோபமும், உண்மையில், பொது வேலைநிறுத்தங்கள் மற்றும் பாரிய தொழிலாளர் போராட்டங்களாக வெடிக்க தயாரிப்பு செய்து வருகின்றன.
எல் கொம்ரி சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் சர்வாதிகார விடையிறுப்பு தெளிவுபடுத்தியதைப் போல, அத்தகைய போராட்டங்கள் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலுமான அரசாங்கங்களுடன் ஒரு புரட்சிகர மோதலுக்கு மட்டுமே களம் அமைக்கும். தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களில் மிகவும் அரசியல்ரீதியில் நனவுபூர்வமான மற்றும் அபிவிருத்தி அடைந்த அடுக்குகள், வெடிக்கவிருக்கும் பாரிய போராட்டங்களுக்காக மட்டும் தங்களைத் தயார் செய்தால் போதாது, மாறாக சோசலிஸ்ட் புரட்சிக்காகவும் தயாரிப்பு செய்து கொள்ள வேண்டும்.
இது பிரான்சிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் மிக முக்கிய பிரச்சினையை மேலெழுப்புகிறது: அதாவது, புரட்சிகர தலைமைக்கான நெருக்கடி மற்றும் ட்ரொட்ஸ்கிச கட்சிகளைக் கட்டியெழுப்புவதற்கான அவசியம். ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் அபிவிருத்தி அடைந்து வரும் வெடிப்பார்ந்த கோபத்தைக் குறித்து ஒரேயொரு ஸ்தாபக கட்சி கூட பேசவில்லை அல்லது பேச விரும்பவில்லை என்ற உண்மையை எல் கொம்ரி சட்டத்திற்கு எதிரான போராட்டம் கூர்மையாக அம்பலப்படுத்தி உள்ளது.
சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் ஸ்ராலினிச மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி போன்ற போலி-இடது அரசியல் சுற்றுவட்டத்தில் உள்ள அமைப்புகளால் சோசலிசம் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது என்ற மோசடி, இன்றைய காலத்தில் முன்பினும் அதிகமாக அம்பலமாகி உள்ளது. தொழிலாளர்களது தீவிரமயப்படல் மற்றும் பிரெஞ்சு "இடது" என்று தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்டதன் மதிப்பிழந்த நிலைமை ஆகியவை சோசலிசத்திற்கான ஒரு நிஜமான போராட்டத்திற்கு—அதாவது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சமூக சமத்துவத்திற்கான ஒரு புரட்சிகர போராட்டத்திற்கு—நிலைமைகளை உருவாக்கி வருகிறது. இத்தகைய நிலைமைகளின் கீழ், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்காக இக்கண்டம் எங்கிலும் அதன் பிரிவுகளைக் கட்டமைக்கப் போராடி வருகிறது.