ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

May Day 2016: Introductory report by David North

மே தினம் 2016: டேவிட் நோர்த்தின் அறிமுக அறிக்கை

By David North
2 May 2016

பின்வரும் உரை 2016 மே 1 அன்று நடைபெற்ற சர்வதேச இணையவழி மே தின பேரணியில் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலருமான டேவிட் நோர்த் வழங்கியதாகும்.

தோழர்களே நண்பர்களே,

இந்தக் கூட்டத்தையும், அத்துடன் நாம் கடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளையும், குறிப்பிட்டதொரு வரலாற்று உள்ளடக்கத்தில் இருத்திக் காட்டுவதுடன் தொடங்க என்னை அனுமதியுங்கள்.

இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பாக, 1991 பிப்ரவரி-மார்ச் முதலாம் வளைகுடாப் போருக்கு உடனடிப் பிந்தைய காலத்தில் மே தின அறிக்கை ஒன்றை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வெளியிட்டது. அது பின்வருமாறு கூறியது:

”முதலாளித்துவத்திற்கு பாரிய அளவில் உலகளாவிய விரிவாக்கத்திற்கான அரசியல் அடித்தளத்தை வழங்கியிருந்த ஏகாதிபத்தியத்தின் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சமநிலையானது முறிந்து விட்டிருக்கிறது. அது அமைதியான வழியில் மீட்சி செய்யப்பட முடியாது, ஏனென்றால் பழைய சமநிலையில் அடங்கியிருந்த அத்தனை உட்கூறுகளுக்கும் இடையிலான உறவுகள், மாற்றமடைந்து விட்டிருக்கின்றன. இது முதலாளித்துவ அரசுகளின் தனிப்பட்ட தலைவர்களின் அகநிலை விருப்பங்களது ஒரு விடயம் அல்ல, மாறாக அவர்களது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பொருளாதார மற்றும் சமூக முரண்பாடுகளது புறநிலையான பின்விளைவுகள் குறித்த விடயமாகும்.

”உலக ஏகாதிபத்தியத்தின் சமநிலைகுலைவின் மையத்தில் அமெரிக்காவின் நெருக்கடி அமைந்திருக்கிறது...

“மோசமடைந்து செல்லும் சமூக நெருக்கடி மற்றும் அதன் புரட்சிகர சாத்தியமான பின்விளைவுகள் இவற்றின் பின்புலத்தில், தனது உலக மேலாதிக்க நிலையை மீட்சி செய்வதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொள்கின்ற முனைப்பானது உலக அரசியலின் தனிப் பெரும் வெடிப்பான கூறை உள்ளடக்கியிருக்கிறது... அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொறுப்பற்ற தன்மையும் மூர்க்கத்தனமும் அதிகரித்துச் செல்வதென்பது, இறுதி ஆய்வில், அது தனது பொருளாதாரச் சிதைவை அமெரிக்கா இன்னமும் சவாலற்ற மேலாதிக்கத்தை செலுத்தி வரும் தன் இராணுவ வலிமையைப் பயன்படுத்துவதன் மூலமாக ஈடுகட்டுவதற்கும் மாற்றுவதற்கும் செய்கின்ற முயற்சியையே குறித்து நிற்கிறது.”

போரின் ஆழமான வரலாற்று முக்கியத்துவம் குறித்த அனைத்துலகக் குழுவின் ஆய்வானது அச்சமயத்தில் பொதுவாகக் கூறப்பட்ட பொருள்விளக்கங்களுடன் முரண்பட்டதாக இருந்தது. ஊடகங்களும் சரி, அத்துடன் சர்வதேச உறவுகள் விடயத்திலான கல்வித்துறை நிபுணர்களும் சரி, ஈராக்கின் ஜனாதிபதியான சதாம் ஹுசைன் சர்வதேச சட்டத்தை மீறி குவைத்தை 1990 ஆகஸ்டில் இணைத்துக் கொண்டதற்கான ஒரு சட்டபூர்வமான மற்றும் அத்தியாவசியமான பதிலிறுப்புக்கு மேலாய் ஈராக் படையெடுப்பு வேறேதுமில்லை என்ற அமெரிக்க அரசாங்கத்தின் கூற்றுகளை எந்தவித கேள்விகளுமற்று ஏற்றுக் கொண்டனர்.

ஆனால் கடந்த இருபத்தியைந்து ஆண்டு காலத்தின் புறநிலையான அனுபவங்கள் அனைத்துலகக் குழுவின் ஆய்வையே சரியென நிரூபணம் செய்துள்ளன. இப்போது ஏறக்குறைய கால் நூற்றாண்டு கால இடைவிடாத போராக ஆகியிருக்கக் கூடிய ஒன்றின் தொடக்கத்தையே ஈராக் மீதான அந்தப் படையெடுப்பு குறித்திருந்தது. 1990களில், ஈராக்கிற்கு எதிரான முதல் போரைத் தொடர்ந்து ஹைத்தி மற்றும் சோமாலியா மீதான அமெரிக்கப் படையெடுப்புகள் பின்தொடர்ந்தன. சூடானுக்கு எதிராக போர்க்கப்பல் ஏவுகணைகள் நிறுத்தப்பட்டன. ஏதேனும் ஒரு போலிச்சாக்கை பயன்படுத்தி ஈராக் மீண்டும் மீண்டும் குண்டுவீச்சு தாக்குதல்களுக்கு இலக்காக்கப்பட்டது.

சேர்பியாவுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான ஒரு போருடன் அந்த தசாப்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதில் அந்த சிறிய பால்கன் நாடு 78 நாள் குண்டுவீச்சு தாக்குதலுக்கு இலக்கானது. இது “இனச் சுத்திகரிப்பு”க்கான ஒரு மனிதாபிமானரீதியான பதிலிறுப்பு என்பதாகக் கூறப்பட்டு நியாயப்படுத்தப்பட்டது, முடிவற்ற ஏமாளித்தனத்துடனான கல்வியறிஞர் சமூகத்தின் ஏறக்குறைய ஒருமனதான ஏற்பும் அதற்கு மீண்டும் கிட்டியது. 1999 ஜூன் மாதத்தில் நேட்டோவால் திணிக்கப்பட்ட நிபந்தனைகளை சேர்பியா ஏற்றுக் கொண்டதுடன், யூகோஸ்லாவியாவை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தினால் மேலாதிக்கம் செய்யப்படுகிற ஏழு கடனாளி அரசுகளாக துண்டாடும் படலம் நிறைவுபெற்றது.

இப்போது முற்றிலும் தெளிவாகியிருப்பதைப் போல, 1990களின் இராணுவ நடவடிக்கைகள், 2001 செப்டம்பர் 11 நிகழ்வுகளைத் தொடர்ந்து வந்த ஏகாதிபத்திய வன்முறை வெடிப்புக்குக் கட்டியம் கூறிய ஆரம்பகட்ட அதிர்வுகளாய் இருந்தன. இப்போது நாம் முடிவில்லாத “பயங்கரவாதத்தின் மீதான போரின்” பதினைந்தாவது ஆண்டு நிறைவை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். கடந்த 15 ஆண்டுகளின் அரசியல் மற்றும் அறநெறி வரவு-செலவுக் கணக்கு என்ன? ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா மற்றும் ஏமனுக்கு எதிராக அமெரிக்கா போர்கள் நடத்தியிருக்கிறது. இந்த நாடுகளில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மில்லியன்களாக இருக்கிறது.

சோஸியோசைட் (sociocide) என்று அழைக்கப்படுகின்ற ஒட்டுமொத்த சமூகங்களையும் குற்றவியல்ரீதியாக அழிக்கும் சமூக-அழிப்புக் குற்றத்தினை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைவர்களின் மீது சுமத்த முடியும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் குறிவைக்கப்பட்ட நாடுகள் அவை அடைந்த நாசத்தில் இருந்து எங்ஙனம் மீண்டெழ முடியும் என்று ஒருவர் ஆச்சரியமடையலாம்? ”கொடூர விசாரணை இடங்களுக்கு கைதிகளைக் கடத்துதல்”, “நீர்ச் சித்திரவதை”, “ஆளில்லா ஏவுகணைத் தாக்குதல்கள்” மற்றும் “குறிவைக்கப்பட்ட படுகொலைகள்” ஆகிய வார்த்தைகள் மற்றும் சொற்பிரயோகங்கள் கடந்த பதினைந்து ஆண்டுகளில் சாதாரணமாகப் பிரயோகிக்கப்படுபவையாக ஆகியிருக்கின்றன.

ஆபிரகாம் லிங்கன் விடுதலைப் பிரகடனத்தை உருவாக்கிய அதே வெள்ளை மாளிகையில் அமர்ந்து கொண்டு, 1600 பென்சில்வேனியா அவென்யூவில் தற்போது இருப்பவர் வாரந்தோறும் தனது ஆலோசகர்களுடன் கலந்து பேசி “கொலைப் பட்டியல்” எனச் சொல்லப்படுகின்ற ஒன்றை மீளாய்வு செய்கிறார். அடிமைத்தனத்தை ஒழித்த ஒரு ஆவணத்தில் லிங்கன் தனது கையொப்பத்தை இட்டார். பராக் ஒபாமாவோ ஒவ்வொரு வாரமும் தனிநபர்களை சட்டத்திற்கு அப்பாற்பட்ட கொலைகளுக்கு ஆட்படுத்தும் பத்திரங்களில் கையெழுத்திடுகிறார். நகைமுரண் என்னவென்றால், லிங்கன் மற்றும் ஒபாமா இருவருமே வழக்கறிஞர்களாக பயிற்சி பெற்றவர்களே. ஆனால் அரசியல்சட்ட கோட்பாடுகள் மற்றும் மனித உயிரின் மதிப்பு ஆகியவை தொடர்பாய் இந்த இரண்டு ஜனாதிபதிகளின் அணுகுமுறைக்கும் இடையிலமைந்திருக்கும் பேதமானது லிங்கனின் கீழான ஜனநாயக உச்சத்தில் இருந்து ஒபாமாவின் கீழான ஏகாதிபத்திய தாழ்வுநிலை வரை அமெரிக்க அரசின் வரலாற்றுப் பயணப் பாதையை பிரதிபலிப்பதாக இருக்கிறது.

மத்திய கிழக்கில், பால்கன்களில், மற்றும் மத்திய ஆசியாவில் என பிராந்திய தலையீடுகளிலான ஒரு வரிசையாக கால்-நூற்றாண்டு காலப் போர் அபிவிருத்தி செய்யப்பட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயவாதிகள், தங்கள் கைவசம் இருந்த பாரிய இராணுவ வலிமையே, அதிக சிரமமின்றி, ஜனாதிபதி முதலாம் புஷ் 1991 இல் பிரகடனப்படுத்திய “புதிய உலக ஒழுங்கை” கொண்டு வந்து விடும் என்பதில் முழு நம்பிக்கை கொண்டிருந்தனர். சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சவாலற்ற வல்லாதிக்கத்திற்கு இருந்த ஒரேயொரு முக்கியமான தடையையும் அகற்றி விட்டிருந்ததாய் அவர்கள் முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தனர். முதலாம் பாரசீக வளைகுடாப் போருக்குப் பிந்தைய காலத்தில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் “படைவலிமை பலன்தருகிறது” என்று பிரகடனம் செய்தது.

ஆனால் உலக மேலாதிக்கத்திற்கான பாதை, பின்னர் தெரியநேர்ந்ததைப் போல, முன்னெதிர்பாராத சிரமங்கள் நிரம்பியதாக இருந்தது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் படையெடுப்புகள், ஆரம்பகட்ட இராணுவ வெற்றிகளைக் கொண்டுவந்த போதிலும், பெருகும் எதிர்ப்பைத் தூண்டியிருக்கின்றன. இந்த இரண்டு நாடுகளிலுமே அமெரிக்கா தன்னை விடுவித்துக் கொள்ள முடியாத அளவுக்கு ஒரு சதுப்புநிலத்திற்குள் மாட்டிக் கொண்டிருக்கிறது.

ஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பொறுத்தவரை, பின்வாங்கல் என்பது சாத்தியமில்லாதது. சக்திவாய்ந்த புறநிலை சக்திகளும் நலன்களும் அமெரிக்காவை முன்னெப்போதினும் விரிவான மற்றும் பொறுப்பற்ற இராணுவ அதிகரிப்பை நோக்கித் தள்ளுகின்றன. முதலாவதும் முதன்மையானதுமாய், பொருளாதார நெருக்கடியானது, குறிப்பாக 2008 பொறிவுக்குப் பின்னர், மிகக் கடுமையானதாக வளர்ச்சி கண்டிருக்கிறது. மேலும் சர்வதேச புவி-அரசியல் சூழலானது மேலும் மேலும் சாதகமற்றதாக ஆகியிருக்கிறது.

சீனா ஒரு பொருளாதார மற்றும் இராணுவ சக்தியாக துரிதமாக வளர்ச்சி கண்டிருப்பதை தனது உலக மேலாதிக்க நிலைக்கான ஒரு பெரும் அச்சுறுத்தலாக அமெரிக்கா காண்கிறது. அமெரிக்க மூலோபாயவாதிகளின் பார்வையில், சீனா, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கான ஒரு நேரடியான அச்சுறுத்தல் மட்டுமல்ல. அமெரிக்காவின் நீண்டகால மற்றும் நம்பத்தகாத ஐரோப்பிய கூட்டாளிகளுடன் சீனாவின் பொருளாதார உறவுகள் பெருகி வருவதன் ஒரு விளைவாய், அமெரிக்காவுக்கு சாதகமற்ற வகையில் பொருளாதார மற்றும் இராணுவ சக்திகளின் உலகளாவிய ஒரு மறுஒழுங்கை ஊக்குவிப்பதில் சீனா வெற்றி காணக் கூடும் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.

அமெரிக்காவின் “ஆசியாவை நோக்கிய திருப்பமானது” — இது குறித்து இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நமது தோழர்கள் பின்னர் பேசுவார்கள் — ஆசிய பசிபிக்கில் சீன செல்வாக்கின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது, மற்றும் அவசியப்பட்டால், சீனா தனது பொருளாதாரத்திற்கு சார்ந்திருக்கக் கூடிய பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் கடல்-பாதைகளுக்கான அணுகலை சீனாவுக்கு இல்லாமல் செய்வது ஆகிய இரண்டுக்கும் முனைந்து கொண்டிருக்கிறது. இதுவே தென் சீனக் கடலில் பெருகும் பதட்டங்களுக்கு காரணமாய் உள்ளது.

ஆயினும், ஆசிய-பசிபிக் “திருப்பம்” மட்டுமே அமெரிக்காவின் உலக வல்லாதிக்கத்தை பராமரிக்க போதுமானதாக இல்லை. சீனாவை மூலோபாயரீதியாக தனிமைப்படுத்துவதற்கு ஆசிய-பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியங்களை அமெரிக்கா கட்டுப்படுத்துவது மட்டும் போதாது என்று பென்டகன் மற்றும் சிஐஏ மூலோபாயவாதிகளின் ஒரு கணிசமான பிரிவு நம்புகிறது. சர்வதேச புவியரசியல் பாடப்புத்தகங்களில் “உலகத் தீவு” என்று குறிப்பிடப்படுகின்ற யூரோஆசியப் பகுதியையும் அமெரிக்கா மேலாதிக்கம் செய்தாக வேண்டும் என அது கருதுகிறது. இதுவே அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் பெருகிச் செல்லும் மோதலின் கீழமைந்திருக்கும் மூலோபாய நோக்கமாக இருக்கிறது.

சர்வதேச உறவுகள் 1930களின் பிற்பகுதியில் இரண்டாம் உலகப் போரை ஒட்டிய காலத்தில் நிலவிய பதட்டத்தின் ஒரு மட்டத்தை ஒருவேளை ஏற்கனவே கடந்து சென்றிருக்கவில்லை என்றாலும் அதற்குச் சமமான ஒரு அளவையேனும் எட்டிவிட்டிருக்கிறது. ஜேர்மனி மற்றும் ஜப்பான் உள்ளிட அத்தனை முக்கிய ஏகாதிபத்திய சக்திகளும் தமது இராணுவ நோக்கங்களை அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான ஒரு மோதல் அணு ஆயுதங்களது பயன்பாட்டையும் கூட காணக் கூடும் என்பது ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்படுகின்ற ஒரு விடயமாகவே இருக்கிறது. ஏகாதிபத்திய சக்திகளது அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களோ அல்லது சீனா மற்றும் ரஷ்யாவில் இருக்கின்ற மிரண்டிருக்கும் அவர்களது எதிரிகளோ ஒருபோதும் அணு ஆயுதங்களின் அழிவுகரமான பின்விளைவுகளுக்குத் துணியமாட்டார்கள் என்று எண்ணுவது மரணகரமான தவறாக இருக்கும்.

ஏகாதிபத்திய சிந்தனைக் குழாம் ஒன்றின் சமீபத்திய பிரசுரம் ஒன்று எச்சரித்ததைப் போல, “மனிதர்கள், அவர்களது சொந்த மதிப்பீட்டின்படி கூட, பகுத்தறிவுடன் நடந்து கொள்வார்கள் என்று முடிவெடுத்துவிட முடியாது.” Rethinking Armageddon: Scenario Planning in the Second Nuclear Age என்று அந்த ஆவணம் தலைப்பிடப் பெற்றுள்ளது. பெரிய சக்திகள் அத்தனையுமே ஒன்றை பிறிதொன்று பலமுறை அழிப்பதற்குப் போதுமான அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கின்றன என்பது நன்கறிந்த விடயமாக இருக்கிறது என்பதே உண்மையாக இருக்கின்ற நிலையிலும், இந்த ஆவணத்தின் ஆசிரியர்கள், “பரஸ்பர அச்சுறுத்தலின் மூலமாக பாதுகாக்கப்படுகின்ற பயங்கரத்தின் போலியான சமநிலையானது பொதுவாக அனுமானிக்கப்படுவதை விடவும் கூடுதலாய் எளிதில் நொருங்கத்தக்கதாய் இருக்கலாம்” [1] என்று கூறி நிறைவு செய்கின்றனர்.

போர் அபாயம் என்பது முதலாளித்துவ பொருளாதார அமைப்புமுறையின் இரண்டு அடிப்படையான இடைத்தொடர்பு கொண்ட கூறுகளில் இருந்து எழுகிறது: முதலாவது, உற்பத்தி சாதனங்கள் ஏகபோக பெருநிறுவனங்கள் மற்றும் இலாபங்களை அதிகப்பட்சமாக்குவதற்கு துடிக்கின்ற நிதிப் பிரபுத்துவத்தின் தனியார் உடமையாக இருப்பது; இரண்டாவது, ஒரு இடைத்தொடர்பு கொண்ட உலகப் பொருளாதாரம் மற்றும் தேசிய அரசு அமைப்புமுறை தொடர்ந்தும் நீடித்தல் ஆகிய புறநிலை யதார்த்தத்தில் இருந்து அபிவிருத்தி காண்கிற தவிர்க்கவியலாத முரண்பாடுகள்.

சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பாக, முதலாம் உலகப் போரின் மத்தியில், லெனின் —பின்னர் ரஷ்யப் புரட்சியின் தலைவர்— ஏகாதிபத்தியம் குறித்த தனது மகத்தான ஆய்வை முன்வைத்தார்.

கார்ல் கவுட்ஸ்கி போன்ற மார்க்சிச-விரோத சீர்திருத்தவாதிகள் ஏகாதிபத்தியப் போரை அகநிலையான ஒரு பார்வையில் இருந்து, அதாவது, வெறுமனே ஆளும் உயரடுக்கின் தரப்பில் மேற்கொள்ளப்படும் தவறான கொள்கைகளது விளைபொருளாக பார்த்ததற்கு எதிராய், லெனின், ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒரு புறநிலையான கட்டத்தைக் குறித்து நின்றது என்று வலியுறுத்தினார். “ஏகாதிபத்தியமென்பது சுதந்திரத்திற்கான முனைப்பை அன்றி மேலாதிக்கத்திற்கான முனைப்பையே ஒவ்வொரு இடத்திலும் அறிமுகம் செய்கின்ற நிதி மூலதனம் மற்றும் ஏகபோகங்களின் சகாப்தமாகும்” என்று அவர் எழுதினார்.[2] சர்வாதிகாரத்தை நோக்கிய சாய்வு பிரிக்கவியலாமல் ஏகாதிபத்திய முரண்பாடுகள் கூர்மையடைவதில் இருந்து எழுந்ததை லெனின் விளக்கினார். “ஜனநாயக-குடியரசுவாத முதலாளித்துவ வர்க்கத்திற்கும் பிற்போக்குத்தனமான-முடியாட்சிவாத ஏகாதிபத்தியவாத முதலாளித்துவத்திற்கும் இடையிலான வித்தியாசம் மறைந்து போகிறது” என்று அவர் எழுதினார். ”அரசியல் பிற்போக்குத்தனம் என்பது ஏகாதிபத்தியத்துடன் இயல்பாகவே ஒன்றிணைந்துள்ள குணாம்சமாகும். ஊழல், பெரும் அளவிலான இலஞ்சம் மற்றும் அத்தனை வகையான மோசடிகளும்.”[3]

போர் முதலாளித்துவத்தின் புறநிலை முரண்பாடுகளில் இருந்து எழுந்தது என்று நிரூபணம் செய்ததுடன் லெனினின் பகுப்பாய்வு நின்றுபோய்விடவில்லை. ஏகாதிபத்தியப் போரை உதித்தெழச் செய்த அதே முரண்பாடுகள் தொழிலாள வர்க்கத்தை தீவிரப்படுத்தி அதனை சோசலிசப் புரட்சியின் பாதைக்கு செலுத்தும் என்பதையும் அவர் விளங்கப்படுத்தினார்.

இந்த விஞ்ஞானபூர்வ உட்பார்வையில் இருந்து போருக்கு எதிரான போராட்டத்தின் அத்தியாவசிய மூலோபாயம் பிறக்கிறது. தொழிலாள வர்க்கத்தின் போர்-எதிர்ப்பு மூலோபாயமானது முதலாளித்துவ புவி-அரசியலின் வழக்கமான கணக்குகளில் -அவை தேசிய அரசுகள் இடையிலான அதிகாரச் சமநிலை மீதான ஒரு மதிப்பீட்டின் அடிப்படையிலானவை- இருந்து முன்செல்வதில்லை. அதற்கு மாறாய், நாம், சமூக வர்க்கங்கள் இடையிலான அதிகாரச் சமநிலையின் ஒரு மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு முன்னேறுகிறோம். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அணிதிரட்டலைச் சார்ந்திருக்கிறது. ஆகவே, தொழிலாள வர்க்கம் போரின் மீது போர் நடத்துகின்ற வண்ணம் அதற்குக் கல்வியூட்டி அதன் அரசியல் நனவை உயர்த்துவது சோசலிச இயக்கத்தின் பொறுப்பாகும்.

போராட்டத்திற்கு அது அடிப்படையாகக் கொள்ளக்கூடிய வேலைத்திட்டம் முதலாளித்துவ-விரோதமானதாக சோசலிச வேலைத்திட்டமாக இருந்தாக வேண்டும். முதலாளித்துவம் என்ற இராணுவ மோதலை உருவாக்கும் பொருளாதார அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டுவராமல் போர் நிறுத்தப்பட முடியாது. அத்துடன், இறுதியாக, போருக்கு எதிரான போராட்டமானது சர்வதேசத் தன்மை கொண்டதாக, முதலாளித்துவ சுரண்டல் மற்றும் ஏகாதிபத்திய இராணுவவாதம் ஆகியவற்றுக்கு எதிராய் அத்தனை நாடுகளது தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களை ஐக்கியப்படுத்துவதாக இருந்தாக வேண்டும்.

உலகெங்கும் தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் முதலாளித்துவத்திற்கு எதிராய் அரசியல்ரீதியாய் தீவிரப்பட்டு செல்வது பெருகி வருவதற்கான பல அறிகுறிகள் இருக்கின்றன. மில்லியன் கணக்கான அமெரிக்கத் தொழிலாளர்கள், ஆரம்பகட்ட தேர்தல்களின் சமீப வரிசையில், தங்களது வாக்குகளை, ஒரு சோசலிஸ்டாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட ஒரு வேட்பாளருக்கு இட்டனர் என்ற உண்மை இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பேர்னி சாண்டர்ஸின் “சோசலிசம்” தாராளவாதத்தின் சூடுமிக்க பதிப்புக்கு மேலான அதிகமில்லை என்பது உண்மையே. ஆனால் சாண்டர்சுக்கு கிட்டிய ஆதரவு அவரது அரசியல் சந்தர்ப்பவாதத்தினால் கிடைத்ததல்ல, மாறாக அவர், சமூக சமத்துவமின்மைக்கு எதிராய், அவரது சொந்த வார்த்தைகளில் கூறுவதென்றால் ஒரு “அரசியல் புரட்சியை” முன்னெடுப்பதாக தொழிலாளர்கள் கருதிய காரணத்தால் கிட்டியதாகும். அமெரிக்காவில் தொழிலாள வர்க்கம் ஒருபோதும் சோசலிசத்தை நோக்கித் திரும்பாது என்பதாக அமெரிக்காவின் அரசியல் தனித்தன்மைவாதம் குறித்த அடிப்படை விவரிப்பானது நடைமுறையில் மறுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க வர்க்கப் போராட்டத்தின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் நீண்ட நெடுங்காலமாக ஒடுக்கப்பட்டிருந்த சோசலிசம், வெடிப்பான வளர்ச்சியின் ஒரு காலகட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறது.

உலகளாவ ஒருங்கிணைக்கப்பட்ட முதலாளித்துவத்தைச் சூழ்ந்த முரண்பாடுகள் அசாதாரண கூர்மையை எட்டுகின்ற அந்த துல்லியமான தருணத்தில் தான், முதலாளித்துவமானது, ஏகாதிபத்தியப் போருக்கு ஆதரவாக வெகுஜனங்களை அணிதிரட்டுகின்ற முனைப்பில், ஒரு தேசியவாத வெறியைத் தூண்டிவிடுவதற்கு தனது சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்கிறது. அமெரிக்காவில் ட்ரம்ப், அமெரிக்காவின் எல்லைகளெங்கும் ஒரு சுவரைக் கட்டியெழுப்புவதன் மூலமும் அதன் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு எதிரிகளுக்கு (குறிப்பாக குடியேற்ற மக்களுக்கு) எதிராக வரம்பற்ற இராணுவ வலிமையை பயன்படுத்துவதன் மூலமும் ”அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்க” ஆலோசனை முன்வைக்கிறார். வலிமையான எல்லைகளைக் கொண்டும் இன்னும் பெரிய வெடிகுண்டுகளைக் கொண்டும் அமெரிக்காவின் பொருளாதார ஆரோக்கியத்தை மீட்சி காணச் செய்வதற்கு அவர் திட்டமிடுகிறார். உண்மையில், “அமெரிக்க கோட்டை” குறித்த ட்ரம்பின் லட்சியம் என்பது சர்வாதிகாரம் மற்றும் போரின் மூலமாக மட்டுமே எட்டத்தக்க ஒரு பயங்கரக் கனவே ஆகும்.

“ட்ரம்ப்வாதம்” என்பது எந்த விதத்திலும் ஒரு தனிமைப்பட்ட, அமெரிக்காவில் மட்டுமான, ஒரு நிகழ்வு அல்ல. உலகெங்கும் பல ட்ரம்ப்கள் காணக்கிடைக்கிறார்கள். தேசியவாதம் அதன் மிகவும் பேரினவாத வடிவத்தில் மீளெழுச்சி காண்பது தான் சமகால முதலாளித்துவ அரசியலின் ஒரு பொதுவான அம்சமாக இருக்கிறது. பிரிட்டனில் ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியின் உதயமும் Brexit பிரச்சாரமும், பிரான்சில் மரின் லு பென்னின் தேர்தல் வெற்றிகளும், ஆஸ்திரிய ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது சுற்றில் அதி-பேரினவாத சுதந்திரக் கட்சியின் வெற்றியும் உலகமயப்பட்ட முதலாளித்துவத்தின் முரண்பாடுகளில் இருந்து தப்பிக்க ஒரு தேசியவாதப் புகலிடம் தேடுவதற்கான நப்பாசையான ஒரு முயற்சியையே வெளிப்படுத்துகிறது. ஆனால் அப்படியொரு புகலிடம் ஏதுமில்லை. எந்தவொரு நாட்டிலும், ஏகாதிபத்தியத்திற்கும் மற்றும் முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கும் எதிராய் ஒரு செல்தகைமையான மாற்றினை தேசியவாதத்தினால் வழங்க முடியாது.

கடந்த கால் நூற்றாண்டின் அனுபவங்கள் தேசியவாதத்தின் பின்விளைவுகளை மதிப்பீடு செய்ய ஒருவரை அனுமதிக்கிறது. யூகோஸ்லாவியாவின் கலைப்பில் இருந்து எழுந்த தேசங்களின் கதியை நினைத்துப் பாருங்கள். மாசிடோனிய இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை விகிதம் 50 சதவிகிதமாக இருக்கிறது. ஸ்லோவேனியாவில் இளைஞர் வேலைவாய்ப்பின்மை விகிதம் 24 சதவீதம். குரோசியாவில், 44 சதவீத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லை. மாண்டினீக்ரோவில், இளைஞர் வேலைவாய்ப்பின்மை விகிதம் 41 சதவீதமாய் இருக்கிறது. போஸ்னியாவில் இளைஞர் வேலைவாய்ப்பின்மை விகிதம் 57 சதவீதத்துக்கும் அதிகம். சேர்பியாவில் 49.5 சதவீத இளைஞர்கள் வேலைவாய்ப்பற்றவர்களாய் இருக்கின்றனர். கொசோவோவில் இளைஞர் வேலைவாய்ப்பின்மை 60 சதவீதத்துக்கும் அதிகம்!

தேசியவாத திட்டங்களின் பேரழிவுகரமான விளைவுகளுக்கு பின்னரும் கூட, தேசியவாத பிரிவினைவாதத்தின் பிற்போக்குத்தனமான கொள்கைகள், சிரியா மற்றும் லிபியாவில் நடந்திருப்பதைப் போல, ஏகாதிபத்திய தலையீட்டுக்கான ஒரு சாக்கினை வழங்குவதற்கு தேசியவாத, இனவாத மற்றும் மதவாத பிரிவினைவாதத்தை சுரண்டுவதற்கும் தூண்டி விடுவதற்குமான ஒரு வழிவகையை அமெரிக்கா, ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் பிரான்சுக்கு வழங்குவதில் ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றியிருக்கின்றன.

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சர்வதேசரீதியாக ஐக்கியப்பட்ட ஒரு போராட்டத்தில் அத்தனை கண்டங்கள் மற்றும் நாடுகளையும் சேர்ந்த தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதீயாக அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே உலக ஏகாதிபத்தியத்தின் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட முடியும்.

ஏகாதிபத்திய ஆதரவுடனான தேசிய ஒடுக்குமுறையின் விடாத வேதனையானது தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளையும் ஐக்கியப்படுத்துவதன் ஊடாகத் தான் தீர்க்கப்பட முடியும். தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கின்ற வரலாற்றுக் கடமை, பழைய தேசியவாத ஸ்தாபனங்களின் இறந்துபோன உடல்கூட்டிலிருந்து, புதிய தேசிய அரசுகளை உருவாக்குவதல்ல, மாறாக சோசலிச குடியரசுகளின் ஒரு ஐக்கியப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த உலகக் கூட்டமைப்பை உருவாக்குவதே ஆகும். அதற்கான ஒரே செல்லுபடியாகக் கூடிய முன்னோக்கு லியோன் ட்ரொட்ஸ்கி அவரது நிரந்தரப் புரட்சித் தத்துவத்தில் விளக்கிய முன்னோக்கு மட்டுமேயாகும். 1928 இல் அவர் எழுதினார்:

”சோசலிசப் புரட்சியை தேசிய வரம்புகளுக்குள் பூர்த்தி செய்வதென்பது சிந்திக்கவியலாததாகும். முதலாளித்துவ சமூகத்திலான நெருக்கடிக்கு அடிப்படையான காரணங்களில் ஒன்றாக, அதனால் உருவாக்கப்பட்ட உற்பத்தி சக்திகள் இனியும் தேசிய அரசின் கட்டமைப்புக்குள் ஒடுங்கி நிற்கத்தக்கதாக இருக்க முடியவில்லை என்கிற உண்மை இருக்கிறது. இதிலிருந்து தான், ஒருபுறம் ஏகாதிபத்தியப் போர்களும், மறுபுறத்தில், ஒரு முதலாளித்துவ ஐரோப்பிய அரசுகளின் ஒன்றியம் என்கிற கற்பனாவாதமும் பின்தொடர்கின்றன. சோசலிசப் புரட்சியானது தேசிய அரங்கில் தொடங்குகிறது, சர்வதேச அரங்கில் கட்டவிழ்கிறது, உலக அரங்கில் பூர்த்தியடைகிறது. இவ்வாறாக, சோசலிசப் புரட்சியானது நிரந்தரப் புரட்சியாக மாறுகிறது, அந்த வார்த்தையின் ஒரு புதிய மற்றும் இன்னும் பரந்தவொரு அர்த்தத்தில்; நமது ஒட்டுமொத்த கோளத்திலும் புதிய சமூகத்தின் இறுதி வெற்றியில் மட்டுமே அது பூர்த்தி எய்தப் பெறுகிறது.” [4]

நிறைவாக, போருக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு பாரிய சர்வதேச இயக்கத்தை அபிவிருத்தி செய்ய அழைப்பதே இன்றைய பேரணியின் நோக்கமாகும். இந்த அவசரக் கடமையானது சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தை கட்டியெழுப்புவதுடன் பிரிக்கவியலாமல் பிணைந்திருக்கிறது. பங்குபெற்றிருக்கும் அனைவரும் உரையாற்றுபவர்களின் உரைகளைக் கவனமாய் செவிமடுத்து, அவர்கள் வழங்குகின்ற முன்னோக்கிலும் வேலைத்திட்டத்திலும் உடன்பட்டால் உங்கள் நாட்டில் இயங்குகின்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவில் இணைய வேண்டுமென நாங்கள் வலியுறுத்துகிறோம். அப்படியொரு கட்சி இன்னும் உருவாகியிருக்கவில்லை என்றால், உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஒரு புதிய பிரிவை உங்கள் நாட்டில் கட்டியெழுப்புவதற்கு போராடுங்கள்; ஏகாதிபத்திய போருக்கு எதிராகவும் சோசலிசத்திற்காகவுமான போராட்டத்தில் -மனிதகுலத்தின் வருங்காலம் அதில்தான் தங்கியிருக்கிறது- ஒரு நனவான பங்கேற்பாளராக ஆகுங்கள்.

அடிக்குறிப்புகள்:

[1] Andrew F. Krepinevich and Jacob Kohn, Rethinking Armageddon: Scenario Planning in the Second Nuclear Age (Center for Strategic and Budgetary Assessments, 2016), பக். 14-15

[2] லெனின் படைப்புகள் சேகரம், தொகுதி 22 (மாஸ்கோ, 1974), பக். 297

[3] லெனின் படைப்புகள் சேகரம், தொகுதி 23 (மாஸ்கோ, 1974), பக். 106

[4] நிரந்தரப் புரட்சி, 1928