Print Version|Feedback
Under Chinese pressure, India cancels visa to Uyghur separatist Dolkun Isa
இந்தியா, சீன அழுத்தத்தின் கீழ், உகூர் பிரிவினைவாதி டொல்குன் இசாவிற்கான நுழைவனுமதியை இரத்து செய்கிறது
By Kumaran Ira
28 April 2016
சீனாவின் சின்ஜியாங் உகூர் சுயாட்சி (Xinjiang Uyghur) பிராந்தியத்தின் ஒரு பிரிவினைவாதியும், நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவருமான உகூர் தலைவர் டொர்குன் இசாவிற்கு (Dolkun Isa) புது டெல்லி நுழைவனுமதி வழங்கியதை அடுத்து, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு இராஜாங்க பிரச்சினை வெடித்தது.
இந்த முடிவு பெய்ஜிங்கிடமிருந்து ஓர் ஆத்திரமான எதிவினையைத் தூண்டியது. இசா கைது செய்யப்படுவதற்காக "இன்டர்போல் மற்றும் சீனப் பொலிஸின் சிவப்பறிக்கையில் வைக்கப்பட்ட ஒரு பயங்கரவாதியாவார்,” என்று கடந்த வியாழனன்று சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டது. “அவரை நீதியின் முன் கொண்டு வருவது தொடர்புபட்ட நாடுகளினது கடமைப்பாடாக உள்ளது,” என்றது குறிப்பிட்டது.
முனீச் நகரை மையமாக கொண்ட உலக உகூர் காங்கிரஸ் (World Uyghur Congress - WUC) நிர்வாக தலைவர் இசாவிற்கு வழங்கி இருந்த நுழைவனுமதியை இந்தியா, திங்களன்று, பெய்ஜிங் இன் அழுத்தத்தின் கீழ், இரத்து செய்தது. நாடுகடந்த திபெத்திய அரசாங்கத்தின் அரசியல் குழுவின் இருப்பிடமாகவும் மற்றும் திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமாவின் இருப்பிடமான தர்மசாலா நகரில் ஏப்ரல் 30-மே 1 இல் நடக்கவிருந்த சீன எதிர்ப்பு குழுக்களது கூட்டத்தில் இசா கலந்து கொள்ள இருந்தார். எவ்வாறிருப்பினும் இந்திய அதிகாரிகள் இந்து பத்திரிகைக்கு கூறுகையில், அந்த நுழைவனுமதி இசா பொது கூட்டங்களில் கலந்த கொள்ள அனுமதிக்காது, மேலும் இசா சரியான காரண வகையில் அதை விண்ணப்பித்தால் மீண்டும் வழங்கப்படலாம் என்றனர்.
சீனாவை தனிமைப்படுத்த மற்றும் அதற்கு எதிரான போருக்காக தயாரிப்பு செய்ய வாஷிங்டன் "ஆசியாவில் முன்னிலையை" வடிவமைத்திருப்பதற்கு இடையே, சீனப் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிப்பதற்கு புது டெல்லி முடிவெடுத்திருப்பது, மேலெழுந்துவரும் வெடிப்பார்ந்த சர்வதேச பதட்டங்களை குறிக்கிறது. இந்த பொறுப்பற்ற அமெரிக்க "முன்னிலை", கடுமையான சர்வதேச பதட்டங்களுக்கு எரியூட்டும் வகையில், சிரியாவில் நேட்டோவின் பினாமி போர் மற்றும் இந்தோ-பாகிஸ்தானிய மோதல் போன்ற ஏனைய மோதல்களுடன் சேர்ந்து வருகிறது,
லிபியா மற்றும் சிரியாவில் அல்கொய்தா இணைப்பு கொண்ட இஸ்லாமிய பயங்கரவாத படைகளை ஆதரித்து ஆட்சி மாற்றத்திற்கான போர்களைத் தூண்டிவிட்ட பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டாளிகளும், உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமும் ஓர் அணுஆயுத சக்தியுமான சீனாவிற்கு எதிராக அதேபோன்ற அணுகுமுறைகளை பிரயோகிக்கலாமா என பரிசீலித்து வருகின்றன. உத்தியோகப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 55 சிறுபான்மை இனங்களைக் கொண்ட ஒரு நாடான சீனாவிற்குள் வெடிப்பார்ந்த இன மற்றும் பிராந்திய பிளவுகள் இருப்பதை வாஷிங்டன் நன்கறியும்.
சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சியை கவிழ்க்க சண்டையிட்டு வரும் நேட்டோ-ஆதரவிலான இஸ்லாமிய போராளிகள் குழுக்களில் உகூர் முஸ்லீம்கள் பெரியளவில் பங்கெடுத்திருப்பதன் மீது பெய்ஜிங் கவலை கொண்டுள்ளது. ஏப்ரல் 25 இல் அல் ஜசீரா குறிப்பிடுகையில், “சிரியாவில், உகூர்கள் அவர்களது சொந்த பிரிவுகளை உருவாக்கி உள்ளார்கள், அத்துடன் உஜ்பெக்கியர்கள், தஜிக்கியர்கள், க்ரிஜிஸ்கியர்கள் மற்றும் ஏனையவர்கள் உள்ளடங்கிய ஏனைய மத்திய ஆசிய பிரிவுகளுடனும் கூட்டு சேர்ந்துள்ளனர். அவர்கள் பெரும்பாலும் அல் கொய்தா இணைப்பு கொண்ட அல் நுஸ்ரா முன்னணிக்காக சண்டையிடுகிறார்கள்,” என்று குறிப்பிட்டது.
சிரிய போர்கள் முடிவுற்றதும், இந்த போராளிகள் அவர்களது சொந்த நாடுகளில் போர்களைத் தூண்டிவிட திரும்பலாம். செப்டம்பரில் ஒரு முன்னாள் பெண்டகன் மற்றும் அரசுத்துறை அதிகாரியான கிறிஸ்டினா லின் எழுதுகையில், அசாத், நேட்டோ ஆதரவிலான இஸ்லாமியர்கள் வசம் தோல்வி அடைந்தால், "பின்னர் மத்தியக் கிழக்கின் இதயதானத்தில் ஒரு புதிய மற்றும் நன்கு ஆதாரங்களைக் கொண்ட சிரிய செயல்பாட்டு மையத்தின் ஆதரவுடன், ரஷ்யாவின் செசன்யா, சீனாவின் சின்ஜியாங் மற்றும் இந்தியாவின் காஷ்மீர் போராளிகள் அவர்களது ஜிஹாத்தைத் தொடர, அவர்களது சொந்த நாட்டை நோக்கி பார்வையைத் திருப்புவார்கள்,” என்றார்.
இந்த கொள்கை அசாதாரணமான வகையில் பொறுப்பற்றதாகும். பிரதான சக்திகள் சீனாவில் பிரிவினைவாதத்தைப் பட்டவர்த்தனமாக ஊக்குவிப்பதற்கு அது இராணுவ பலத்தைப் பிரயோகிக்கும் என்று அச்சுறுத்தி, அது வன்முறையானரீதியில் எதிர்நடவடிக்கை எடுக்கக்கூடும் என்பதை பெய்ஜிங் தெளிவுபடுத்தி உள்ளது. 2005 சீன தேசிய மக்கள் காங்கிரஸின் (NPC) போது அந்த ஆட்சி, தாய்வானின் எந்தவொரு சுதந்திர பிரகடனத்திற்கு விடையிறுப்பாக போருக்குள் இறங்க சூளுரைத்து, ஒரு "பிரிவினைவாத-தடை சட்டத்தை" நிறைவேற்றியது. தாய்வானின் சுதந்திர பிரகடனம் சீனாவின் பிரிவினைவாத போக்குகளுக்கான பரந்த சர்வதேச ஊக்குவிப்புக்குச் சமிக்ஞை ஆகிவிடுமென அது அஞ்சுகிறது.
இந்தியா ஒரு வல்லரசு அந்தஸ்தைப் பெற வாஷிங்டனுடனான அதன் உறவை பக்கபலமாக கொள்ள முனைந்துள்ள வேளையில், இசாவிற்கு நுழைவனுமதி வழங்குவதென்ற இந்தியாவின் முடிவானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிற்போக்குத்தனமான சூழ்ச்சிகளுடன், குறிப்பாக ஆசியாவில் "முன்னிலை" உடன் இந்திய வெளியுறவுக் கொள்கை அதிகரித்தளவில் அணிசேர்வதை சுட்டிக்காட்டுகிறது. சீனாவை இலக்கில் வைத்த அமெரிக்க படைகளை புது டெல்லி ஏற்கனவே அதன் மண்ணில் நிலைநிறுத்த பரிசீலித்து வருவதுடன் சேர்ந்து, இப்போது அது அப்பிராந்தியத்தில் கட்டுப்படுத்தவியலா நிறைய இன மோதல்களில் தன்னைத்தானே சிக்க வைத்து கொள்கிறது.
சீனாவின் வடமேற்கு சுயாட்சி பிராந்தியமான சின்ஜியாங், துர்கிக் மொழி பேசும் பெரும்பான்மை முஸ்லீம் உகூர் இன சிறுபான்மையினரின் தாயகமாக உள்ளது. சின்ஜியாங் குறிப்பிடத்தக்க இனவாத கலகங்களைக் கண்டுள்ளது, இவற்றில் நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். 1949 புரட்சிக்குப் பின்னர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் கீழ் வந்ததில் இருந்து ஒடுக்குமுறையை முகங்கொடுத்துள்ளதாக WUC இல் உள்ள உகூர் பிரிவினைவாதிகள் கூறுகின்றனர்.
1980 களின் போக்கில் சீனாவில் முதலாளித்துவத்தை மீட்டமைத்ததில் இருந்து முன்பினும் அதிகமாக ஹன் சீன தேசியவாதத்தை ஊதிவிடுவதை சார்ந்திருந்த சீன அரசாங்கம், சின்ஜியாங்கில் கலகங்களை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டிவிடுவதாக உலக உகூர் காங்கிரஸை குற்றஞ்சாட்டுகிறது.
உலக உகூர் காங்கிரஸ் என்பது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் ஒரு பிற்போக்குத்தனமான கருவியாகும். அது நேரடியாக ஜனநாயகத்திற்கான தேசிய நிதியுதவி (NED) அமைப்பிடமிருந்து நிதியுதவிகளைப் பெறுகிறது, இந்த அமைப்பிற்கான பிரதான நிதியுதவியாளர் அமெரிக்க அரசாங்கமாகும். அதன் வலைத்தள தகவல்களின்படி, வெளியில் தெரியாத "மனித உரிமைகள் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை திட்டங்களுக்காக" NED அமைப்பு 2015 இல் மட்டும் உலக உகூர் காங்கிரஸிற்கு 215,000 டாலர் வழங்கியது.
உலக உகூர் இளைஞர் காங்கிரஸ் (WUYC) மற்றும் கிழக்கு துர்கிஸ்தான் தேசிய காங்கிரஸ் (ETNC) உட்பட பல்வேறு நாட்டுக்கு வெளியிலிருக்கும் உகூர் குழுக்களை உள்ளடக்கி, உலக உகூர் காங்கிரஸ் ஜேர்மனியின் முனீச்சில் 2014 இல் நிறுவப்பட்டது. அமெரிக்காவில் வசிக்கும் உலக உகூர் காங்கிரஸின் தலைவர் உட்பட அதன் தலைவர்களில் பெரும்பான்மையினர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர், இசா ஜேர்மனியிலும் மற்றும் ஏனையவர்கள் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஜப்பான், பிரிட்டன் மற்றும் ஸ்வீடனிலும் உள்ளனர்.
ஒரு வணிக பெண்மணியான காதீர், அவரது நில/கட்டிட பேரத்துறை சொத்துக்கள் மூலமாக மற்றும் ஒரு பன்னாட்டு பெருநிறுவனத்தில் அவரது பங்குடைமையைக் கொண்டும் 1980 களில் ஒரு மில்லியனர் ஆனவர். ஜூன் 2007 இல் பிராக் இல் நடத்தப்பட்ட ஜனநாயகம் மற்றும் பாதுகாப்பிற்கான மாநாட்டில், காதீர் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு. புஷ்ஷை இரகசியமாக சந்தித்தார். அப்பெண்மணி போன்றவர்களை "அவர்களது இராணுவ ஆயுதங்களை விட அல்லது மண்ணுக்கடியில் உள்ள எண்ணெய்யை விட மிக மிக மதிப்பார்ந்தவர்கள்" என்று புஷ் பாராட்டியவராவார்.
இசாவை பொறுத்த வரையில், கடந்த மாதம் தான் அவர் வாஷிங்டனில் பாதிக்கப்பட்டவர்களுக்கான கம்யூனிச ஞாபகார்த்த அமைப்பின் ஒரு விருதை பெற்றிருந்தார்.
எண்ணெய், எரிவாயு மற்றும் அரிய பூமி கனிமங்களைக் கொண்டுள்ளதும் மற்றும் மூலோபாயரீதியில் யுரேஷியாவின் மையத்தில் அமைந்துள்ளதுமான சின்ஜியாங் (Xinjiang) ஐ வாஷிங்டன் அதன் மூலோபாய நலன்களுக்கு அத்தியாவசியமானதாக பார்க்கிறது. ரஷ்யா, கஜகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மங்கோலியா மற்றும் இந்திய மாநிலம் ஜம்மு & காஷ்மீர் ஆகியவற்றை சின்ஜியாங் எல்லைகளாக கொண்டுள்ளது.
சீன ஏற்றுமதிகள் பாகிஸ்தானிய கராச்சி துறைமுகத்தை அடைந்து, பின்னர் தெற்காசியாவிற்குள் நுழைய அப்பகுதியை கடந்தாக வேண்டும் என்கிற நிலையில், அப்பிராந்தியம் ஓர் முக்கிய வர்த்தக மற்றும் போக்குவரத்து மையமாகவும் உள்ளது. இது கிழக்கு ஆசியாவை ஐரோப்பாவுடன் இணைக்கும், சீனாவிலிருந்து மத்தியத் தரைக்கடல் வரையில் இணைக்கும் சீனாவின் விருப்பமான பட்டுச்சாலை உள்கட்டமைப்பு திட்டத்தில் ஒரு அதிமுக்கிய பாதையாக உள்ளது. எரிசக்தியில் இருந்து கட்டுமானம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வரையில், சுமார் 53 சீன அரசு நிறுவனங்கள், சின்ஜியாங்கில் 685 திட்டங்களில் 300 பில்லியனை முதலீடு செய்துள்ளன.
அப்பிராந்தியத்தில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் தலையீடு முற்றிலும் பிற்போக்குத்தனமானது என்கிற அதேவேளையில், சீன வணிக பிரபுத்துவத்தின் பதிலிறுப்பு குறைந்தபட்ச முற்போக்கானது கூட கிடையாது. பெய்ஜிங் உம் தேசியவாதம் மற்றும் இராணுவவாதத்தை ஊக்குவித்து வருகிறது, அதேவேளையில் சின்ஜியாங் இல் பொலிஸ் ஒடுக்குமுறையை அதிகரித்து வருவதுடன், அதன் சர்வதேச இராஜாங்க உபாயங்களின் பாகமாக பயங்கரவாத குழுக்களுக்கு அரசியல் ஆதரவை விரிவாக்கி வருகிறது.
இந்திய பத்திரிகை செய்திகளின்படி, இசாவிற்கு நுழைவனுமதி வழங்குவதென்ற புது டெல்லியின் தீர்மானம், பாகிஸ்தான் பக்கம் சாய்ந்து காஷ்மீரில் பாகிஸ்தானிய போராளிகள் குழுவான ஜெய்ஷ்-ஈ-மொஹம்மத் (Jaish-e-Mohammad - JeM) ஐ பாதுகாக்க உதவுவதென்ற சீனாவின் முடிவுக்கு எதிரான ஒரு பழிக்குபழி வாங்கும் நகர்வின் பாகமாகும். JeM தலைவர் மசூத் அஜாரை ஐக்கிய நாடுகளின் அல் கொய்தா-இஸ்லாமிய அரசு பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற புது டெல்லியின் கோரிக்கையை தடுத்த சீனாவின் தீர்மானத்திற்கு இம்மாதம் இந்தியா ஆத்திரத்துடன் விடையிறுத்திருந்தது.
இசாவிற்கு நுழைவனுமதி கொடுப்பதில்லை என்ற இந்தியாவின் முடிவை சீனா வரவேற்றதுடன், அஜாரை ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாதிகள் பட்டியலில் நிறுத்துவது மீதான கருத்துவேறுபாடுகளை இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடியாக பேசி தீர்க்குமாறு பரிந்துரைத்தது. செவ்வாயன்று வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் Hua Chunying கூறுகையில், “மசூத் அஜாரை பட்டியலில் சேர்க்கும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட எல்லா தரப்புகளும் நேரடியான பேசி, ஆழ்ந்த ஆலோசனைகளைக் கொண்டு ஒரு தீர்வு காண்பதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். சீனா சம்பந்தப்பட்ட எல்லா தரப்பினருடன் அதன் பேச்சுவார்த்தைகளைத் தொடர விரும்புகிறது,” என்றார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானை போரின் விளிம்பிற்குக் கொண்டு வந்த டிசம்பர் 2001 இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் உட்பட இந்திய இலக்குகள் மீது பல மரணகதியிலான தாக்குதல்களை நடத்தியவராக அஜார் சந்தேகிக்கப்படுகிறார்.