Print Version|Feedback
US-backed Chinese separatists, dissidents meet in Dharamsala, India
அமெரிக்க-ஆதரவு பெற்ற சீன பிரிவினைவாதிகளும், கிளர்ச்சிக்காரர்களும் இந்தியாவின் தர்மசாலாவில் சந்திக்கின்றனர்
By Kumaran Ira
6 May 2016
அமெரிக்கா தனது சீன-விரோத “ஆசியாவை நோக்கிய முன்னிலை”க்கு வேகம் கூட்டுகின்ற நிலையில், அமெரிக்க ஆதரவு பெற்ற சீனப் பிரிவினைவாத மற்றும் கலகக் குழுக்கள் ஏப்ரல் 28 முதல் மே 1 வரை இந்தியாவில் இருக்கும் தர்மசாலா நகரத்தின் புறநகர்ப் பகுதியான மெக்லியோட் கஞ்ச் பகுதியில் இனங்களுக்கும்/மதங்களுக்கும் இடையிலான தலைமை மாநாடு (Inter-ethnic/Interfaith Leadership Conference) ஒன்றை நடத்தின. சீனாவில் “ஜனநாயக உருமாற்றத்தை” எப்படிக் கொண்டுவருவது என்பதை விவாதிப்பது தான் இந்தக் கூட்டத்தின் அறிவிக்கப்பட்ட நோக்கமாக இருந்தது.
சீனாவுக்கு எதிராய் அதிகரித்துச் செல்கின்ற அமெரிக்க இராஜதந்திர மற்றும் இராணுவ மூலோபாய தாக்குதலின் பகுதியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் அதன் பிராந்தியக் கூட்டாளியான இந்தியாவாலும் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமெரிக்கா சீனாவுடன் போருக்கான தயாரிப்புகளை தீவிரப்படுத்துகின்ற அதேவேளையில், உத்தியோகபூர்வமாக 55 அங்கீகரிக்கப்பட்ட இன சிறுபான்மையினரைக் கொண்ட அந்நாட்டில் வெடிப்புமிகுந்த இன மற்றும் பிராந்திய பிளவுகளை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. சீனாவை இனரீதியாகப் பிளவுபடுத்துவதும் அதனை இறுதியில் அரைக்காலனித்துவ அந்தஸ்துக்கு கீழிறக்குவதுமே அமெரிக்காவின் இலக்காக இருக்கிறது.
”சுதந்திரம், நீதி, சமத்துவம் மற்றும் சமாதானம் ஆகிய மக்களின் கனவுகளை முன்னெடுப்பதற்கான நமது கூட்டணியை வலுப்படுத்துதல்” என்னும் மாநாட்டை TCHRD என்ற இந்தியாவின் முன்னணி அரசு சாரா அமைப்பு ஒன்றும் அமெரிக்காவின் சீனாவுக்கான முன்முயற்சிகள் (IFC) என்ற தியானன்மென் சதுக்க செயற்பாட்டாளரும் நாடுகடத்தப்பட்ட சீனாவின் கலகக்காரருமான யாங் ஜியன்லி தலைமையிலான ஒரு அமைப்பும் இதனை இணைந்து நடத்தின.
திபெத், ஜின்ஜியாங், உள் மங்கோலியா, தைவான், மற்றும் ஹாங்காங் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு பிரிவினைவாதக் குழுக்களின் பிரதிநிதிகள், சீனாவின் “ஜனநாயக-ஆதரவு” கிளர்ச்சியாளர்கள், மற்றும் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் மற்றும் Falun Gong உள்ளிட சீனாவின் மத சிறுபான்மை இனத்தவரின் தலைவர்கள் ஆகியோரை இது ஒன்றாகக் கொண்டுவந்தது.
சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் (USCIRF) பிரதிநிதிகள் உள்பட அமெரிக்க அரசாங்கத்தின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். தர்மசாலாவில் நாடுகடந்த அரசாங்கத்தைக் கொண்டிருக்கும் திபெத்தின் புத்தமதத் தலைவரான தலாய் லாமாவை அந்நிய நாட்டுப் பிரதிநிதிகள் ஏப்ரல் 28 அன்று சந்தித்தனர்.
அமெரிக்க மத்திய அரசின் முகமை ஒன்றினால் நிதியாதாரம் அளிக்கப்படுகின்ற ஆளுநர்களின் ஒளிபரப்பு வாரியம் என்ற அமைப்பைச் சேர்ந்த ரேடியோ ஃப்ரீ ஆசியா (Radio Free Asia) என்ற ஒரேயொரு ஊடகம் மட்டுமே இம்மாநாட்டில் அனுமதிக்கப்பட்டது. “இந்த நிகழ்வின் செய்திகளும், காணொளிகளும் மற்றும் கட்டுரைகளும் அதன் Cantonese சேவையில் மட்டுமே ஒளிபரப்பப்பட்டன, நிலையத்தின் ஆங்கில வலைத் தளத்தில் மாநாடு குறித்தோ அல்லது (அதற்கு முந்திய) நுழைவனுமதி சர்ச்சை குறித்தோ எந்த குறிப்பும் இல்லை” என இந்தியாவின் Wire இணையம் தெரிவித்தது. இந்த மாநாட்டில் பங்குபெற்ற அமெரிக்காவில் இருந்து இயங்கும் உய்குர் அமெரிக்க அசோசியேசனின் தலைவரான இல்ஸாத் ஹாசனை Wire மேற்கோள் காட்டியது. சீனாவை இன அடிப்படையில் பிரிப்பது தான் இந்த மாநாட்டின் முக்கிய விடயமாக இருந்தது என்பதை அவர் தெளிவாக்கினார்.
ஹாசன் கூறினார்: “சீனாவில் இருந்து வந்திருந்த இளைஞர்கள் ஜனநாயகம் வெகு விரைவில் வந்து விடும் என்று கூறி பெரும் சீனா அப்படியே காப்பாற்றப்பட வேண்டும் என்று வாதிட்டார்கள். சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை, ஆனால் சுய-நிர்ணயம் எங்களுக்குக் கட்டாயம் வேண்டும். கிழக்கு துர்கெஸ்தானின் மக்களும் திபெத்தின் மக்களும் அவர்களது விருப்பத்தை அவர்களே முடிவு செய்து கொள்ள அனுமதிக்கப்படும்போது அது தீர்மானிக்கப்படும். அவர்கள் இன்னும் மிக முதிர்சிஅடையவில்லை என்று நினைக்கிறேன்.”
சீனாவில் இன தேசியவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் வளர்க்க முனைப்பு காட்டுகின்ற அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டாளிகளும் சீன ஆட்சியின் பிற்போக்குத்தனமான கொள்கைகளில் இருந்து எழுகின்ற மிகக் கடுமையான சமூக மோதல்கள் மற்றும் தேசிய பிளவுகளை சுரண்டிக் கொள்ள முனைகின்றனர். 1980களின் பாதையில் சீனாவில் முதலாளித்துவம் மீட்சி செய்யப்பட்டது முதலாகவே அது ஹான் சீன தேசியவாதத்தை வளர்த்தெடுப்பதன் மீது மிக அதிகமாய் தங்கியிருந்திருக்கிறது. ஜின்ஜியாங்கின் - சீனாவின் மற்ற உள்முகப் பகுதிகளைப் போலவே இதுவும் அதிக வேலைவாய்ப்பின்மைக்கும் குறைந்த ஊதியங்களுக்கும் முகம்கொடுக்கிறது - உய்குர் இனத்தவரைப் போன்ற இன சிறுபான்மையினர் மீது பாகுபாடு மற்றும் முற்றுமுதலான ஒடுக்குமுறையிலும் அது இறங்கியிருக்கிறது.
ஜின்ஜியாங்கில் ஹான் மற்றும் உய்குர் மக்களிடையே இனக் கலவரங்கள் அதிகரித்துச் சென்றிருக்கும் நிலையில், சீனா நெடுந்தாடிகளையும் பர்தாக்களையும் தடைசெய்யத் தொடங்கியிருக்கிறது, இது உய்குர் இனத்தவரிடையே, குறிப்பாக வேலைவாய்ப்பற்ற நிலையில் இருக்கும் பெரும் எண்ணிக்கையிலான பல்கலைக்கழக பட்டதாரிகள் இடையே அதிருப்தியை தூண்டியிருக்கிறது. ஆயிரக்கணக்கான உய்குர் இன இளைஞர்கள் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போரில் நேட்டோவின் பினாமிகளாகப் போரிடுகின்ற இஸ்லாமியப் போராளிகளுடன் இணைந்து சண்டை போடுவதற்காக மத்திய கிழக்குக்கு பயணம் செய்திருந்தனர் என்பதை ஏராளமான செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
இத்தகைய நிலைக்கு அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் காட்டுகின்ற பதிலிறுப்பு முற்றுமுதல் பிற்போக்குத்தனமானதாய் இருக்கிறது. உய்குர்கள் முகம்கொடுக்கும் பாகுபாட்டையும் ஒடுக்குமுறையையும் சுரண்டிக் கொண்டு இன-தேசியவாதத்தை தூண்டி தொழிலாள வர்க்கத்தை இன ரீதியில் பிளவுபடுத்துவதற்கும், அத்துடன் தங்களது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய பல்வேறு வலது-சாரி முதலாளித்துவ தேசியக் குழுக்களை ஊக்குவிப்பதற்கும் அவை முயற்சி செய்கின்றன. லிபியாவிலும் சிரியாவிலும் இஸ்லாமியவாதிகளை பினாமிகளாய் கொண்டு ஆட்சி மாற்றத்திற்கான போர்களை ஏற்பாடு செய்ததன் பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டாளிகளும் அதேபோன்ற வழிமுறைகளை சீனாவுக்கு எதிராகப் பயன்படுத்தலாமா என்பதை விவாதித்துக் கொண்டிருக்கின்றன.
TCHRD, IFC மற்றும் உய்குர் அமெரிக்க அசோசியேசன் போன்ற மாநாட்டில் பங்குபெற்ற அமைப்புகள் பலவும் அமெரிக்காவினால் நிதியாதாரம் அளிக்கப்படுகின்ற NED (National Endowment for Democracy) யிடம் இருந்து நேரடி நிதியாதாரம் பெறுகின்ற, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய சொத்துக்களாகும். TCHRD உள்ளிட திபெத்தில் இருக்கும் 22 அமைப்புகளுக்கு NED நிதியாதாரம் அளிக்கிறது. இவை ஆண்டுக்கு சுமார் 60,000 டாலர் தொகையை அமெரிக்காவிடம் இருந்து பெறுகின்றன. திபெத்தில் அரசியல் ஒடுக்குமுறையையும் மனித உரிமை மீறல்களையும் கண்காணிப்பதும், ஆவணப்படுத்துவதும் மற்றும் வெளிச்சம்போட்டுக் காட்டுவதுமே அதன் அறிவிக்கப்பட்ட இலட்சியமாக இருக்கிறது.
பிரதானமாக வடமேற்கு சீனப் பிராந்தியமான ஜின்ஜியாங்கின் முஸ்லீம் உய்குர் இனச் சிறுபான்மையை பிரதிநிதித்துவப்படுத்துவதாக சொல்கின்ற குழுக்களுக்கு நிதியாதாரம் அளிப்பதிலும் NED ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து இயங்குகின்ற உய்குர் அமெரிக்க அசோசியேசன் மற்றும் முனிச்சில் இருந்து இயங்குகின்ற உலக உய்குர் காங்கிரஸ் (World Uyghur Congress - WUC) போன்ற குழுக்கள் முறையே $295,000 மற்றும் $260,000 அளவுக்கு நிதியாதாரம் பெறுகின்றன. ரேபியா காதிர் என்ற அமெரிக்க மில்லியனர் பெண்மணியே WUC இன் தலைவராய் இருக்கிறார்.
சீனாவுக்கான முன்முயற்சிகள் (Initiatives for China - IFC) அமைப்பு NEDயிடம் இருந்து ஆண்டுக்கு சுமார் 86,500 டாலர்கள் வரை பெறுகிறது. இது தியானென்மென் சதுக்க செயல்பாட்டாளரும் நாடுகடத்தப்பட்ட சீன கிளர்ச்சியாளரும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவருமான யாங் ஜியன்லி (Yang Jianli) ஆல் ஸ்தாபிக்கப்பட்டதாகும்.
பெய்ஜிங் ஆட்சியால் கைது செய்யப்பட்ட ஜியன்லி, உளவு பார்த்த குற்றச்சாட்டுகளின் கீழ் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றிருந்தார். ஐநாவின் ஒரு தீர்மானத்தின் ஆதரவைக் கொண்டும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின் ஆதரவைக் கொண்டும், ஜியன்லி 2007 இல் விடுதலை செய்யப்பட்டார். சீனாவில் “ஜனநாயகத்தை” நோக்கிய ஒரு உருமாற்றத்திற்கும், “அமைதிவழி ஜனநாயக சீர்திருத்தத்திற்கு” அமெரிக்கா தலைமையேற்கவும் அவர் ஆலோசனை வைக்கிறார்.
மத சுதந்திரத்திற்கான உலகளாவிய உரிமை என்ற போலிவேடத்தில், அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் (United States Commission of International Religious Freedom - USCIRF) சீனாவின் கலகக் குழுக்களை நெருக்கமாய் ஒருங்கிணைக்கிறது. அமெரிக்க கூட்டரசாங்கத்தின் இருகட்சி ஆணையமான இந்த USCIRF ஜனாதிபதிக்கும், வெளியுறவுச் செயலருக்கும், மற்றும் நாடாளுமன்றத்திற்கும் கொள்கைப் பரிந்துரைகளை மேற்கொள்கிறது. USCIRF இன் மூத்த பிரதிநிதியும் 2008 இல் மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான லாண்டோஸ் அறக்கட்டளையை ஸ்தாபித்தவருமான Katrina Lantos Swett தர்மசாலா மாநாட்டில் பங்கேற்றார்.
சீனாவுக்கு எதிராய், சீனக் கிளர்ச்சியாளர்களுக்கு நேரடியாக அமெரிக்கா நிதியாதாரம் அளிப்பதும் ஆதரவளிப்பதுமான ஒரு பொறுப்பற்ற மூலோபாயமானது, இராஜதந்திர பதட்டங்களை அதிகப்படுத்திக் கொண்டிருப்பதோடு அணு ஆயுத சக்திகளுக்கு இடையில் ஒரு போரைத் தூண்டுவதற்கு அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
சீனாவில் முக்கிய பிரிவினைவாத சக்திகளுக்கு மிதமிஞ்சி ஊக்கமளிப்பதற்கு கடுமையாக எதிர்வினையாற்றவிருப்பதை சீனா தெளிவுபடுத்தியிருக்கிறது. 2005 தேசிய மக்கள் காங்கிரசில் (National People’s Congress - NPC), ஆட்சி “பிரிவினைத் தடுப்புச் சட்டம்” ஒன்றை நிறைவேற்றியது, சீனாவில் பிரிவினைவாதத்தை பரந்த அளவில் ஊக்குவிப்பதற்கான சமிக்கையாக இருக்கக் கூடும் என்று அது அஞ்சுகின்ற தைவான் சுதந்திரப் பிரகடனத்திற்கான பதிலிறுப்பில் போருக்குச் செல்வதற்கும் அது உறுதியளிக்கிறது.
இந்த மாநாடு நடப்பதற்கு முன்பாக, WUC இன் நாடுகடந்த உய்குர் தலைவரான டோல்கன் இஸாவுக்கு நுழைவனுமதி வழங்கும் புதுடெல்லியின் முடிவு குறித்து, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒரு இராஜதந்திர சர்ச்சை வெடித்தது. சீனாவில் இருந்தான எதிர்ப்புக்குப் பின்னர் இந்திய அதிகாரிகள் இஸாவுக்கு வழங்கியிருந்த விசாவை இரத்து செய்தனர் - அது இந்திய ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களைக் கொண்டுவந்தது - என்றாலும் இல்ஸாத் ஹாசன் உள்ளிட்ட மற்ற சீனப் பிரிவினையாளர்களுக்கு தர்மசாலா மாநாட்டில் கலந்து கொள்ள சுற்றுலா விசாவை இந்தியா வழங்கியது.
அமெரிக்காவின் “ஆசியாவை நோக்கிய திருப்பம்” முக்கிய ஆசிய சக்திகளுக்கு இடையில் பதட்டங்களைப் பற்றவைக்கும் நிலையில், சீனாவை நோக்கிய இந்திய முதலாளித்துவத்தின் அணுகுமுறைனது மேலும் மேலும் குரோதம் படைத்ததாக ஆகிக் கொண்டிருக்கிறது.
மே 1 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா பின்வருமாறு எழுதியது: “CPEC (வரலாற்றுரீதியாக இந்தியாவினால் உரிமை கொண்டாடப்படும் பகுதிகள் வழியாக செல்கின்ற சீன-பாகிஸ்தான் பொருளாதார வழிப்பாதை) ஆக இருக்கட்டும், OBOR (ஒரே இணைப்பு ஒரே பாதை முன்முயற்சி One Belt One Road Initiative) ஆக இருக்கட்டும், அல்லது இந்தியப் பெருங்கடலிலான முத்து மாலை திட்டமாக (String of Pearls) இருக்கட்டும், இந்தியாவுக்கு எதிராக மிகக் கவனமாய் அதேசமயத்தில் சந்தேகத்திற்கிடமில்லாமல் குரோதமாய் சீனா பின்பற்றுகின்ற மூலோபாய வழிகளை ஒருவர் கவனமாகப் பின்தொடர்ந்து ஆய்வு செய்தால், சீனாவுக்கு எதிராய் எழுந்து நிற்க இந்தியா இப்போது தவறுமானால் - அது இப்போதும் கூட சாத்தியம் தான் - வருங்காலத்தில் சீனா வம்பிழுப்பதை எதிர்க்கும் சாத்தியத்தையே கூட அது நிரந்தரமாக சரணடையச் செய்து விடக் கூடும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.”