Print Version|Feedback
Lessons of the Austrian presidential election
ஆஸ்திரிய ஜனாதிபதி தேர்தலின் படிப்பினைகள்
By Peter Schwarz
24 May 2016
எழுபத்தி இரண்டு வயதான பொருளாதார பேராசிரியர் அலெக்சாண்டர் வன் டெர் பெல்லென், 50.3 சதவீத வாக்குகளுடன் ஆஸ்திரிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். தீவிர வலது ஆஸ்திரிய சுதந்திர கட்சியின் (FPÖ) நோர்பேர்ட் ஹோஃபர் 49.7 சதவீத வாக்குகள் பெற்றார்.
வன் டெர் பெல்லென் உத்தியோகபூர்வமாக ஒரு சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார் என்றாலும், 1997 இல் இருந்து 2008 வரையில் அவர் தலைமை வகித்த பசுமைக் கட்சிக்கு மிக நெருக்கமானவர் ஆவார். ஞாயிறன்று மாலை, அவர் 48 சதவீத வாக்குகளுடன் ஹோஃபரைவிட பின்தங்கி இருந்தார். தபால்மூலம் வழங்கப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் முன்னணிக்கு வந்த வன் டெர் பெல்லென், பதிவாகி இருந்த 4.4 மில்லியன் வாக்குகளில் ஒரு குறைந்தபட்ச பெரும்பான்மையாக 31,000 வாக்குகளுடன் தேர்தலில் வெற்றி பெற்றார்.
1945 க்குப் பின்னர் முதல்முறையாக, ஒரு மேற்கு ஐரோப்பிய அரசினது தலைமை பதவிக்கு வரவிருந்த ஓர் அதிதீவிர வலது சாரி அரசியல்வாதியைத் தடுப்பதற்கு இது போதுமானதாக இருக்கலாம். இருந்தாலும், ஆஸ்திரிய தேர்தல் ஐரோப்பாவில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது. ஆஸ்திரிய மற்றும் ஐரோப்பிய அரசியலின் வலது சாரி திருப்பத்தை, ஹோஃபரின் தோல்வி தடுத்துவிடாது. அதற்கு முரணாக, பழைய அரசியல் உயரடுக்கின் பெரும் பகுதிகள், நகர்புற உயர்மட்ட நடுத்தர வர்க்க பிரிவுகளும் மற்றும் ஏறத்தாழ அனைத்து போலி-இடது அமைப்புகளும் அவருக்குப் பின்னால் அணி திரண்டுள்ள நிலையில், வன் டெர் பெல்லென் ஜனாதிபதியாக பதவி ஏற்பது, தீவிரவலதிற்கு உந்துதல்கொடுக்கும் நிலைமைகளை உருவாக்கும்.
கருத்துக் கணிப்புகளின் படி, 80 சதவீத ஆஸ்திரியர்கள் அரசாங்கத்தின் மீதும், ஸ்தாபக கட்சிகள் மற்றும் அந்நாட்டின் அரசியல் அமைப்புமுறை மீதும் அதிருப்தி கொண்டுள்ளனர். அவர்களில் ஒரு பிரிவினர் ஒரு வலதுசாரி வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தடுக்க பற்களைநெருடியபடி வன் டெர் பெல்லெனுக்கு வாக்களித்தனர். ஆனால் ஆஸ்திரிய சமூகத்தின் மிகவும் வறிய மற்றும் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பெரும் பகுதியினர், பழைய உயரடுக்குகளுக்கு ஓர் எதிர்ப்பாளராக காட்டிக் கொண்ட ஹோஃபருக்கு வாக்களித்தனர். இதை ஓர் அரசியல் விஞ்ஞானத்துறை வல்லுனர் குறிப்பிடுவதைப் போல, கோபம் கொண்டோர் ஹோஃபருக்கு வாக்களித்தனர், அதிருப்தி கொண்டோர் வன் டெர் பெல்லெனுக்கு வாக்களித்தனர்.
இந்த தீவிரவலது வேட்பாளர் சராசரிக்கு அதிகமான வாக்குகளைப் பின்தங்கிய, கிராமப்புற பகுதிகளில் மட்டும் பெற்றிருக்கவில்லை, மாறாக முன்னர் சமூக ஜனநாயகத்தின் பிடியில் இருந்த பகுதிகளிலும், குறைந்த கல்வி மற்றும் குறைந்த வருவாய் கொண்டவர்களது அடுக்குகள் மத்தியிலும் கூட பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான காரணம், ஆஸ்திரிய சமூக ஜனநாயக கட்சி (SPÖ), தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள போலி-இடது அமைப்புகள் வகித்த பாத்திரமாகும்.
போலி-இடது அமைப்புகள் தசாப்தங்களாக வர்க்க போராட்டங்களை ஒடுக்கி இருப்பதுடன், அதேவேளையில் கூடுதலாக வலதிற்கு நகர்ந்துள்ளன. வேலைகள், சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைத் தாக்குவதில், அகதிகளுக்கு எதிரான வெறுப்பு, உள்நாட்டில் அரசு அதிகாரங்களை மற்றும் வெளிநாடுகளில் இராணுவ அதிகாரங்களைப் பலப்படுத்துவதில் இவை முன்னணி பாத்திரம் வகித்துள்ளன. இது, குறைந்தபட்சம் ஆரம்ப கட்டத்தில், பழைய உயரடுக்குகளுக்கு எதிரான கோபத்தைப் பிற்போக்குத்தனமான திசையில் திருப்புவதற்கு, FPÖ போன்ற தீவிர வலது அமைப்புகளுக்கு உதவியது.
இதுவொரு சர்வதேச இயல்நிகழ்வாகும், குறிப்பாக இது ஆஸ்திரியாவில் முறையாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இங்கே சமூக ஜனநாயகம் நீண்டகால செல்வாக்கு பெற்றிருந்த ஒரு வரலாறைத் திரும்பி பார்க்கலாம், இத்தகைய வரலாற்றை ஜேர்மனி மற்றும் ஸ்கேன்டினேவிய நாடுகள் சிலவற்றுடன் மட்டுந்தான் ஒப்பிட முடியும்.
ஆஸ்திரிய சமூக ஜனநாயக கட்சியானது (SPÖ) அந்நாட்டின் மிகப் பழமை வாய்ந்த கட்சியாகும். அதன் மூலங்கள் 19 ஆம் நூற்றாண்டு வரை செல்கிறது மேலும் அவை ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சி (SPD) இன் மூலங்களுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டவை. ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சியைப் போலவே, ஆஸ்திரிய சமூக ஜனநாயக கட்சியும் 1914 இல் அதன் சர்வதேசிய வேலைத்திட்டத்தைக் காட்டிக்கொடுத்து, முதலாம் உலக போரை ஆதரித்தது. போரில் தோல்வியடைந்து ஹப்ஸ்பேர்க் (Habsburg) முடியாட்சி கலைக்கப்பட்ட பின்னர், “செந்நிற வியன்னா" (Red Vienna) ஒரு சமூக ஜனநாயக நகரின் அடையாளச் சின்னமாக மாறிப் போனது. ஒரு காலகட்டத்தில், ஆஸ்திரிய தலைநகரில் வசிக்கும் ஐவரில் ஒருவர் ஆஸ்திரிய சமூக ஜனநாயக கட்சியின் அங்கத்துவ அடையாள அட்டையை வைத்திருந்தார். அக்கட்சி வீடுகள் கட்டுதல், கல்வி மற்றும் சுகாதார வகைமுறைகளை நிறுவுதல், மற்றும் வெகுஜன மக்களுக்கு பொழுதுபோக்கு நடவடிக்கைகளை ஒழுங்கமைத்தல் என இவை முதற்கொண்டு எண்ணற்ற சீர்திருத்த திட்டங்களை நடைமுறைப்படுத்தியது.
ஒட்டோ பவர், மக்ஸ் ஆட்லர் மற்றும் ருடோல்வ் ஹில்வடிங்க் இன் "ஆஸ்த்திரிய-மார்க்சிசம்", மார்க்சிச வார்த்தை அலங்காரத்துடன், முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாத்தது. லியோன் ட்ரொட்ஸ்கி 1929 இல் எழுதுகையில், “ஆஸ்த்திரிய-மார்க்சிசம் சொற்பொழிவுகளிலும் கட்டுரைகளிலும் முதலாளித்துவ வர்க்கத்தை அம்பலப்படுத்திய போதினும்,” அது தொழிலாளர்கள் "அவர்களது வர்க்க எதிரிகளுக்கு எதிராக எழுச்சி அடைவதை" தடுத்தது என்று குறிப்பிட்டார். பாசிச வளர்ச்சிக்கு எதிராக ஆஸ்திரிய-மார்க்சிசம் சக்தியற்றது என்பதை அது நிரூபித்தது.
இரண்டாம் உலக போருக்குப் பின்னர் தொடங்கிய பொருளாதார மீட்சி ஆஸ்திரிய சமூக ஜனநாயகத்திற்கு மற்றொரு தூண்டுபொருளாக அமைந்தது. 1945 மற்றும் 2000 க்கு இடையே, வெறும் நான்காண்டு கால இடைதடை இருந்தாலும், அது ஒவ்வொரு மத்திய அரசாங்கத்திலும் பங்குபற்றி இருந்தது. 1970 இல் இருந்து 2000 வரையில், மற்றும் 2007 இல் இருந்து இன்று வரையில், ஆஸ்திரிய சான்சிலர் சமூக ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவராக இருந்தார்.
1970 களின் ஆரம்பத்தில், ஒரு சர்வதேச முக்கூட்டு அமைப்பை நிறுவி ஆஸ்திரிய, ஜேர்மனி மற்றும் ஸ்வீடனின் அரசாங்கங்களுக்கு புரூனோ கிறீஸ்கி, வில்லி பிராண்ட் மற்றும் ஓலோவ் பல்ம தலைமை வகித்த போது, அக்கட்சியின் செல்வாக்கு அதன் மகுடத்தில் இருந்தது. அத்தகையவொரு முக்கூட்டு அமைப்பு சர்வதேச அளவில், குறிப்பாக பாசிச சர்வாதிகாரங்கள் பொறிந்து போயிருந்த ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் இல், சமூக ஜனநாயகத்தின் செல்வாக்கை விரிவாக்கியது.
சமூக ஜனநாயக சீர்திருத்த கொள்கைகள் பல தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஈர்த்திருந்தன என்றாலும், கிறீஸ்கி, பிராண்ட் மற்றும் பல்ம போன்றோரின் நிஜமான பணி, 1968 மற்றும் 1975 க்கு இடையே ஐரோப்பாவின் பல பாகங்களிலும் மற்றும் உலகெங்கிலும் பரவி இருந்த போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள், கலகங்கள் மற்றும் தேசிய சுதந்திர போராட்டங்களின் அலையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக இருந்தது.
அப்போதிருந்து, சமூக ஜனநாயகம் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுக்கு தலைமை ஏற்றுள்ளது. டோனி பிளேயரின் புதிய தொழிற் கட்சி, ஹெகார்ட் ஷ்ரோடரின் 2010 திட்டநிரல் மற்றும் பிரான்சுவா ஹோலாண்டின் சமீபத்திய தொழிலாளர் சட்டம் ஆகியவை வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களது நலன்களுக்காக வர்க்க போருக்கான அடையாளச் சின்னமாக மாறியுள்ளன. ஆஸ்திரியாவில், ஆஸ்திரிய சமூக ஜனநாயக கட்சியின் (SPÖ) வேட்பாளர் வெறும் 11 சதவீத வாக்குகளுடன் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்ட நிலையில், ஜனாதிபதி தேர்தலில் அதன் பேரழிவுகரமான தோல்விக்கு அது ரயில்வேதுறை மேலாளர் கிறிஸ்டைன் கெர்ன் புதிய சான்சிலராக நியமித்து விடையிறுத்துள்ளது. இவர் சமூக செலவு குறைப்பு திட்டத்தை விரிவுபடுத்த சூளுரைத்துள்ளார்.
ஜனாதிபதியாக வன் டெர் பெல்லென், கெர்ன் உடன் நெருக்கமாக வேலை செய்வார். அடுத்த பொது தேர்தலில் அதிதீவிர வலது ஜெயித்து FPÖ அரசாங்கம் அமைத்தால், அதனுடனும் சேர்ந்து கெர்ன் இதை செய்யக்கூடும்.
ஆஸ்திரியா மற்றும் உலகெங்கிலும் உள்ள மிக அவசர பிரச்சினை, ஸ்தாபக கட்சிகள் மீதான பாரிய கோபம் மற்றும் சீற்றத்திற்கு ஒரு முற்போக்கான, சர்வதேச சோசலிச முன்னோக்கை வழங்குவதற்காக, தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய கட்சியை கட்டமைப்பதாகும்.