Print Version|Feedback
US accelerating military encirclement of China
சீனா மீதான இராணுவ சுற்றி வளைப்பை அமெரிக்கா தீவிரப்படுத்துகிறது
By Peter Symonds
22 March 2016
விரிவாக்கப்பட்ட பாதுகாப்பு கூட்டு-ஒத்துழைப்பு உடன்படிக்கையின் (EDCA) கீழ் பிலிப்பைன்ஸின் ஐந்து இராணுவ தளங்கள் அமெரிக்க படைகளுக்கு திறந்துவிடப்படும் என்று கடந்த வெள்ளியன்று அமெரிக்காவும் பிலிப்பைன்ஸூம் அறிவித்தன. பிலிப்பைன்ஸ் இராணுவத் தள ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவது என்பது சீனாவிற்கு எதிராக பெண்டகனின் சுற்றி வளைப்பு மற்றும் போர் தயாரிப்புகளின் பாகமாக இந்தோ-பசிபிக் பிராந்தியம் எங்கிலும் அமெரிக்க இராணுவ ஆயத்தப்படுத்தலை தீவிரப்படுத்துவதில் ஒரு கூறுபாடு மட்டும்தான்.
அவ்விரு நாடுகளும் EDCA இல் 2014 இல் கையெழுத்திட்டன, ஆனால் பிலிப்பைன்ஸ் உச்ச நீதிமன்றம் ஜனவரியில் தான் அந்த உடன்படிக்கைக்குச் சட்டரீதியிலான எதிர்ப்புக்களை நிராகரித்தது. கடந்த வார அறிவிப்புக்குப் பின்னர், அமெரிக்க இராணுவத்திற்கு எட்டு இராணுவத் தளங்கள் வழங்குவதற்குப் பிலிப்பைன்ஸ் நிர்வாகம் பெப்ரவரியில் முன்வந்ததன் மீது வாஷிங்டனில் இரண்டு நாட்கள் உயர்மட்ட விவாதங்கள் நடந்தன.
தென் சீனக் கடலில் போட்டியில் சிக்கி உள்ள ஸ்பார்ட்லி தீவுகளுக்கு நேராக, பக்கவாட்டில் அமைந்துள்ள பாலவன் தீவில் (Palawan Island) அன்டோனியோ பாடிஸ்டா விமானத் தளமும், இந்த "ஒப்புக் கொள்ளப்பட்ட" ஐந்து "இடங்களில்" உள்ளடங்கும். சீனாவின் நில உரிமைகோரல் நடவடிக்கைகள் மற்றும் தென் சீனக் கடலில் அதன் "இராணுவமயப்படுத்தலைக்" கண்டித்து, கடந்த ஆண்டு, வாஷிங்டன் பெரியளவில் பெய்ஜிங்குடன் பதட்டங்களை அதிகரித்திருந்தது. கடந்த அக்டோபரில் மற்றும் மீண்டும் ஜனவரியில், அமெரிக்க கடற்படை சிறுபோர்க்கப்பல்கள் சீன-நிர்வாகத்தில் உள்ள தீவுக்கூட்டங்களைச் சுற்றி 12 நாட்டிக்கல் மைல் எல்லைக்குள் ஊடுருவி, சீன கடல் போக்குவரத்து உரிமைகோரல்களுக்கு நேரடியாக சவால் விடுத்தது.
மணிலாவின் வடக்கே பாசா (Basa) விமானத்தளம், ஒரு மிகப்பெரிய இராணுவத் தளமான மக்சேசே (Magsaysay) கோட்டை, செபுவில் லும்பியா (Lumbia) விமானத்தளம் மற்றும் மின்டானியோவில் மாக்டன்-பெனிடோ எப்யூன் (Mactan-Benito Ebuen) விமானத் தளம் ஆகியவற்றையும் அமெரிக்க இராணுவம் அணுகக்கூடியதாக இருக்கும். இந்த ஏற்பாடுகளை இறுதி செய்வதற்காக பாதுகாப்புத்துறை செயலர் அஷ்டன் கார்ட்டர் அடுத்த மாதம் மணிலா விஜயம் செய்யவிருக்கிறார். ஆனால் பிலிப்பைன்ஸ்க்கான அமெரிக்க தூதர் பிலிப் கோல்ட்பேர்க் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், ஆயுத தளவாடங்கள் மற்றும் படையினரின் ஆரம்ப இடம்பெயர்ப்பு "மிக விரைவில்" தொடங்குமென அவர் எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்தார். பிலிப்பைன்ஸில் இராணுவ வசதிகளைக் கட்டமைப்பதற்கு அமெரிக்க காங்கிரஸ் 66 மில்லியன் டாலர் ஒதுக்கி உள்ளது.
இராணுவத் தளங்களுக்கான இந்த புதிய உடன்படிக்கையை பெய்ஜிங் கண்டித்துள்ளதுடன், மோதலுக்கான சாத்தியக்கூறாக எச்சரித்தது. அரசு செய்தி நிறுவனமான சின்ஹூவா, வாஷிங்டன் "தென் சீனக் கடலில் குட்டையைக் குழப்புவதாகவும் மற்றும் ஆசிய பசிபிக்கை இரண்டாவது மத்திய கிழக்காக மாற்றுவதாகவும்" குற்றஞ்சாட்டி சனியன்று ஒரு கருத்துரையைப் பிரசுரித்தது. திங்களன்று, வெளியுறவுத்துறை அமைச்சக பெண் செய்தி தொடர்பாளர் Hua Chunying, தென் சீனக் கடலைச் சீனா "இராணுமயப்படுத்துவதாக" குற்றஞ்சாட்டும் அமெரிக்காவின் பாசாங்குத்தனத்தை சுட்டிக்காட்டியதுடன், “தென் சீனக் கடலில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த விதத்தில் இராணுவ நிலைப்படுத்தல்களை தொடர்ந்து பலப்படுத்துவது இராணுவமயப்படுத்தல் ஆகாதா?” என்று ஆச்சரியத் தொனியில் கூறினார்.
அமெரிக்கா அதன் முன்னாள் காலனிக்குள் இராணுவப் படைகளை நகர்த்த தயாரிப்பு செய்து வருகையில், அமெரிக்க இராணுவ தளவாட கட்டளையகத்தின் தலைவர் ஜெனரல் டென்னிஸ் வயா கடந்த வாரம் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், வியட்நாம், கம்போடியா மற்றும் ஏனைய பெயர்வெளியிட விரும்பாத நாடுகள் உட்பட ஆசியாவில் இன்னும் இதர இராணுவத் தள ஏற்பாடுகளைச் செய்திருப்பதை வெளியிட்டார். இந்த உடன்படிக்கைகளின் கீழ், அமெரிக்க இராணுவத்தால் அப்பிராந்தியத்திற்குள் இன்னும் அதிக விரைவாக துருப்புகளை அனுப்ப உதவும் வகையில் சாதனங்களைக் கையிருப்பில் வைக்க முடியும்.
பன்னாட்டு பயிற்சி முறைகள் மற்றும் மீட்பு செயல்பாடுகள் போன்ற தீவிரத்தன்மை குறைந்த நடவடிக்கைகளுக்கான "செயல்பாட்டு நடவடிக்கைகள்" (activity sets) அதிகரிக்கப்படும் என்று வயா வலியுறுத்தினார். “சான்றாக கம்போடியாவில் போருக்கு உதவும் மருத்துவமனை ஒன்றை அமைக்க பார்த்து வருகிறோம்,” என்றவர் தெரிவித்தார்.
அமெரிக்க இராணுவ பிரச்சன்னம் அபாயமற்றதாக இருப்பதற்கான உத்தரவாதங்கள் மதிப்பற்றவை. பெண்டகன் ஒரு வெளிநாட்டு இராணுவ பிரசன்னத்திற்கு உடனடியாக எதிர்ப்பு வந்துவிடாதபடிக்கு, பிலிப்பைன்ஸில் செய்ததைப் போலவே, மிக கவனமாக நகர்ந்து வருகிறது. கம்போடியா மற்றும் வியட்நாம் விடயத்தில், வாஷிங்டனின் 1960 கள் மற்றும் 1970 களின் நவ-காலனித்துவ போரால் அவ்விரு நாடுகளிலும் ஏற்படுத்தப்பட்ட உயிரிழப்புகளும் அழிவுகளும், பரந்தமக்கள் நனவில் ஆழமாக பதிந்துள்ளன.
தென் சீனக் கடலில் சீனாவுடனான அதன் பிரச்சினைகளில், வியட்நாமின் மிகவும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை ஆதரித்திருப்பது உட்பட வியட்நாமிய ஆட்சியுடன் வாஷிங்டன் ஏற்கனவே மிக நெருக்கமான இராஜாங்க, பொருளாதார மற்றும் இராணுவ உறவுகளை இணைத்துள்ளது. அமெரிக்கா வியாட்நாமுக்கான ஆயுத விற்பனைகள் மீதான தடைகளை நீக்கி இருப்பதுடன், கூட்டு இராணுவ பயிற்சிகளை நடத்தி உள்ளது மற்றும் துறைமுக வசதிகளைப் பெரியளவில் அணுக கோரி வருகிறது. எவ்வாறிருப்பினும் 1975 இல் அமெரிக்க துருப்புகளை திரும்பப் பெற நிர்பந்திக்கப்பட்டதற்கு பின்னர் முதல் முறையாக வியட்நாமிற்குள் அமெரிக்க இராணுவ தளவாடங்களை நிலை நிறுத்துவதென்பது, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் அந்த ஆட்சியின் ஒத்துழைப்பதில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது.
அமெரிக்க இராணுவ தளவாடங்களை பாதுகாத்து வைப்பதற்கான கம்போடியாவின் முடிவைக் குறித்து பெய்ஜிங்கிற்கு முன்பினும் அதிகமாக கவலை ஏற்படும். சீனாவுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள கம்போடிய ஆட்சி, தென் சீனக் கடலில் சீனாவிற்கு எதிராக அதிக மோதல் நிலைப்பாட்டை எடுக்குமாறு தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பிற்கு (ஆசியான்) அழுத்தமளிக்கும் அமெரிக்க முயற்சிகளைத் தடுக்க முயன்றுள்ளது. இருப்பினும் 2006 க்குப் பின்னர் இருந்து அமெரிக்கா கம்போடியா உடனான பாதுகாப்பு உறவுகளை அபிவிருத்தி செய்துள்ளது. இதில் மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சி, இடைநிலை துறைமுக நிறுத்தங்கள் மற்றும் கூட்டு போர் பயிற்சிகள் ஆகியவை உள்ளடங்கும். வாஷிங்டன் ஒருபுறம் கம்போடியா, வியட்நாம், லாவோஸ், தாய்லாந்துக்கும் இடையே ஒரு இணைப்பை உந்துவதற்காக கீழ் மேகோங் திட்டத்தைக் தனக்கு சாதகமாக பற்றி உள்ளது, மறுபுறம் மேல் மேகோங் ஆற்றில் சீனா அணைகளைக் கட்டி வருகிறது.
பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் கம்போடியா உடனான சமீபத்திய இராணுவத் தள ஏற்பாடுகள், இந்தோனேஷியா மற்றும் மலேசியா உடனான நெருக்கமான இராணுவக் கூட்டு ஒத்துழைப்பு மற்றும் சிங்கப்பூரில் அமெரிக்க கடற்படையின் கடலோர போர் கலங்களை நிறுத்தியமை ஆகியவற்றிற்கு மேலதிகமாக வருகிறது. தென் கிழக்கு ஆசியாவில் அமெரிக்க இராணுவ பிரசன்னத்தின் வேகமான விரிவாக்கம், தென் கொரியா, ஜப்பான் மற்றும் குவாம் இல் நிரந்தர அமெரிக்க இராணுவ தளங்களின் மறுசீரமைப்புடனும், இந்தியா உடனான அமெரிக்க மூலோபாய பங்காண்மையை மேம்படுத்துவதுடனும், மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவில் நீண்டதூர மூலோபாய குண்டுவீசிகளை நிறுத்துவதற்கான தயாரிப்புகளுடன் கை கோர்த்து செல்கிறது.
அமெரிக்க ஆயத்தப்படுத்தல் என்பது உத்தியோகபூர்வமாக 2011 இல் அறிவிக்கப்பட்ட ஒபாமா நிர்வாகத்தினது "ஆசிய முன்னிலையின்" பாகமாகும். இது வாஷிங்டனின் நலன்களுக்குச் சீனாவை அடிபணிய வைக்கும் நோக்கில் ஒரு பரந்த விரிவார்ந்த இராஜாங்க, பொருளாதார மற்றும் இராணுவ மூலோபாயமாகும். இந்த "முன்னிலை" அப்பிராந்தியம் முழுவதும், அதுவும் குறிப்பாக தென் சீனக் கடலில் அதன் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மூலமாக, பெரியளவில் போருக்கான வெடிப்பு புள்ளிகளாக ஆகக் கூடியதை எரியூட்டி உள்ளது.
கடந்த வாரம் கான்பெராவில் பேசுகையில், அமெரிக்க பசிபிக் கப்பற்படை தளபதி அட்மிரல் ஸ்காட் ஸ்விஃப்ட் சீனாவிற்கு எதிராக மற்றொரு தாக்குதல்மிக்க உரையை வழங்கினார். “கடல் சுதந்திரம்" என்பது, "பலமே உரிமையைப் பெற்றுத் தருகிறது என்ற கோட்பாடு ஓர் அரசு தலைமையில் அதிகரித்தளவில் புத்துயிர்ப்பிப்பதை பாதிக்கிறது" என்றவர் அறிவித்தார். “அப்பிராந்தியத்தின் குறிப்பிட்ட பாகங்களில், முன்னொருபோதும் இல்லாத அளவிலும் முறையிலும், இராணுவமயமாக்கலின் மறுக்க முடியாத அறிகுறிகளால்" அவர் தொந்தரவுக்கு உள்ளாகி இருப்பதாக அறிவித்தார்.
இத்தகைய அறிக்கைகளின் எரிச்சலூட்டும் தன்மைக்கு எல்லையே இல்லை. சீனா உரிமைகோரிய கடல் எல்லைகளுக்குள் அமெரிக்க கடற்படை இரண்டு முறை "சுதந்திர போக்குவரத்து" நடவடிக்கைகளை மட்டும் நடத்தி இருக்கவில்லை, மாறாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் அணுஆயுதமேந்தும் விமானந்தாங்கி போர்கப்பல் USS ஜோன் சி ஸ்டென்னிஸை, அதனுடன் தொடர்புடைய தாக்கும் குழுவுடன் சேர்த்து, நான்கு நாட்கள் போர்பயிற்சிகள் மற்றும் ரோந்து நடவடிக்கைகளுக்காக தென் சீனக் கடலுக்கு அனுப்பியது. கடந்த கால் நூற்றாண்டில், அமெரிக்கா அடுத்தடுத்து தொடர்ந்து போர்கள், இராணுவ தலையீடுகள் மற்றும் ஆத்திரமூட்டல்களில் ஈடுபட "பலமே உரிமையைப் பெற்றுத் தரும்" என்ற அடிப்படையில் சர்வதேச சட்டத்தைக் கண்மூடித்தனமாக மிதித்து நசுக்கி உள்ளது.
இப்போதோ வாஷிங்டன் சீனாவுடன் முன்பினும் அதிக பயங்கரமான அளவில் போருக்குத் தயாரிப்பு செய்து வருகிறது மற்றும் அந்த போக்கிற்குள் இழுக்க அப்பிராந்தியம் எங்கிலுமான நாடுகளுக்கு அழுத்தம் அளித்து வருகிறது. கான்பெர்ராவிற்கு ஸ்விஃப்ட் இன் விஜயம், தென் சீனக் கடலில் ஆஸ்திரேலிய அரசாங்கம் அதன் சொந்த "சுதந்திர போக்குவரத்து" நடவடிக்கையை நடத்துவதற்கு அதற்கு அழுத்தமளிக்கும் ஓர் ஒருமித்த பிரச்சாரத்துடன் பொருந்தி உள்ளது—இது, ஒரு பிழையான கணக்கீடோ அல்லது தவறோ எப்போதும் ஒரு பரந்த மோதலைத் தூண்டிவிடக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ள ஒரு பொறுப்பற்ற இராணுவப் போர்பயிற்சியாகும்.