Print Version|Feedback
The terror bombings in Brussels
புரூசெல்ஸில் பயங்கரவாத குண்டுவெடிப்புகள்
By Alex Lantier
23 March 2016
செவ்வாயன்று காலை புரூசெல்ஸில் 30 பேர் கொல்லப்பட்டதுடன் 230 பேர் காயமடைந்த, ஷாவென்டெம் விமான நிலைய அத்துடன் மால்பேக் மெட்ரோ நிலைய வெடிகுண்டு தாக்குதல்களை உலக சோசலிச வலைத் தளம் எந்தவித ஐயத்திற்கும் இடமில்லாத வகையில் கண்டனம் செய்கின்றது. பெல்ஜிய அதிகாரிகள் அத்தாக்குதல்கள் மீது அவர்களது விசாரணை பற்றி விபரம்மேதும் தெரிவிக்கக்கூடாது என உத்தரவாணை (gag order) பிறப்பித்துள்ள அதேவேளையில், ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசு (ISIS) அதன் அமாக் செய்தி நிறுவனம் வழியாக பிரசுரித்த ஓர் அறிக்கையில் அத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
இந்த பயங்கர தாக்குதல் இலக்கு வைத்த அப்பாவி மக்கள், மத்திய கிழக்கை நாசமாக்கிய ஏகாதிபத்திய போர்களுக்கு எந்த விதத்திலும் பொறுப்பற்றவர்களாவர். அமெரிக்காவில் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்கு பிந்தைய போர்கள், பயங்கரவாத தாக்குதல்கள், மற்றும் தீவிரமாக்கப்பட்ட பொலிஸ் அரசு நடவடிக்கைகளின் பதினைந்து ஆண்டுகள் திட்டவட்டமாக எடுத்துக்காட்டுவது என்னவென்றால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதுபோன்ற இரத்தக்களரியான நடவடிக்கைகளை மிகவும் பிற்போக்குத்தனமான சக்திகள் தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றன என்பதைத்தான்.
செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு அடுத்த நாள் உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டதைப் போல, “அது எவ்வளவுதான் தன்னைதானே நியாயப்படுத்திக் கொண்டாலும், பயங்கரவாத நடைமுறையானது அடிப்படையில் பிற்போக்கானது. அமெரிக்க ஸ்தாபகத்தினுள் உள்ள ஆளும் உயரடுக்குக் கூறுபாடுகள் இத்தகைய சம்பவங்களை புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களைப் பின்தொடர்வதற்காக போரில் இறங்குவதை நியாயப்படுத்தவும் மற்றும் சட்டபூர்வமாக ஆக்குவதற்கும் பயன்படுத்திக் கொள்கின்ற நிலையில், பயங்கரவாதமானது, ஏகாதிபத்திய இராணுவவாதத்துக்கு எதிரான ஒரு சக்திமிக்க தாக்குதலை தொடுப்பதற்குப் பதிலாக, இவர்களது கரங்களில் சாதகமாகி விடுகிறது. அப்பாவி மக்கள் படுகொலையானது பொது மக்களைச் சினமூட்டி, திசை தெரியாமற் செய்து குழப்புகின்றது. அது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கான போராட்டத்தை கீழறுக்கின்றது மற்றும் மத்திய கிழக்கில் இன்றைய நிகழ்வுகளுக்குப் பின்புலத்தை அமைத்த வரலாறு மற்றும் அரசியல் அடிப்படையில் அமெரிக்க மக்களை கல்வியூட்டும் அனைத்து முயற்சிகளுக்கும் எதிராகச் செயற்படுகிறது.”
இந்த அறிக்கை, ஐரோப்பிய கண்டம் எங்கிலும் அரசாங்கங்கள் அவற்றின் பாதுகாப்பு படைகளை உயர் எச்சரிக்கையில் நிறுத்தி உள்ள நிலையில், மீண்டுமொருமுறை, இம்முறை ஐரோப்பாவில், நிரூபிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு, பெல்ஜியம் அதன் எல்லைகளை மூடி, இராணுவம் மற்றும் பொலிஸ் புரூசெல்ஸை முழுக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்ததும், பிரதம மந்திரி சார்லஸ் மிஷேல் “எங்களைப் பொறுத்த வரையில், அங்கே ஒரு 'தாக்குதலுக்கு முன்னும் மற்றும் பின்னும்' என்பது இருக்கும்.” என அறிவித்தார், "குண்டுவீச்சுக்குப் பிந்தைய காலப்பகுதியை ஒழுங்கமைக்க" இன்று காலை உயர்மட்ட மந்திரிமார்களின் குழு கூடும் என்று அறிவித்தார்.
நவம்பர் 13 பாரீஸ் தாக்குதல்களுக்கு பின்னர், சோசலிஸ்ட் கட்சி, மக்கள் விரோதமாக மற்றும் ஜனநாயக விரோதமாக அவசரகால நெருக்கடி நிலை அறிவித்துள்ள பிரான்சில், அக்கட்சியின் நிர்வாகிகள் புரூசெல்ஸில் நடந்த அந்த தாக்குதல்களைப் பிரெஞ்சு அரசியலமைப்பில் அவசரகால நெருக்கடி நிலையை உறுதிப்படுத்தும் சோசலிஸ்ட் கட்சியின் சட்டதிருத்தத்திற்கு ஒப்புதல் பெற செனட்டிற்கு அழுத்தமளிப்பதற்காக மேற்கோளிட்டனர்.
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் அட்லாண்டிக்கின் இரண்டு பக்கமும் உள்ள அரசியல் ஸ்தாபகங்களைக் கைப்பற்றி முஸ்லீம்-விரோத மற்றும் போர்-நாடும் மனோபாவங்களைத் தூண்டிவிட முனைந்தனர். அமெரிக்காவிற்குள் முஸ்லீம்கள் நுழைவதை தடுக்க அறிவுறுத்திய குடியரசு கட்சியின் டோனால்ட் ட்ரம்ப் கூறுகையில், புரூசெல்ஸ் "ஒரு முழு பேரழிவில்" இருப்பதாக தெரிவித்தார். “அமெரிக்காவில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இந்நாட்டிற்குள் நாம் யாரை அனுமதிக்கிறோம் என்பதில் நாம் மிகவும் கண்விழிப்புடன் இருக்க வேண்டும்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
நவம்பர் 13 பாரீஸ் தாக்குதல்களில் பங்குபற்றியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு நான்கு மாதங்கள் தலைமறைவாக இருந்த பின்னர் வெள்ளியன்று புரூசெல்ஸில் பிடிக்கப்பட்ட சலாஹ் அப்தெஸ்லாமை சித்திரவதைக்கு உட்படுத்த ட்ரம்ப் அழைப்புவிடுத்தார். “தண்ணீரில் மூழ்கடிப்பது பரவாயில்லை, ஆனால் அவர்கள் சட்டங்களை விரிவுபடுத்தினால், தண்ணீரில் மூழ்கடிப்பது விட இன்னும் அதிகமானதை நான் செய்வேன்,” என்று குடியரசு கட்சி வேட்பாளர்களில் முன்னணி வேட்பாளர் தெரிவித்தார்.
ஜனநாயகக் கட்சியின் முன்னணி போட்டியாளர் ஹிலாரி கிளிண்டன் அறிவிக்கையில், “இன்றைய தாக்குதல்கள், உலகெங்கிலுமான பயங்கரவாதம் மற்றும் தீவிர ஜிஹாதிஸ்டுகளுக்கு எதிரான கூட்டாளிகளாக நாம் இணைந்து நிற்பதென்ற நமது தீர்மானத்தை வலுப்படுத்த மட்டுமே செய்யும்,” என்று அறிவித்தார். “நாம் நமது உளவுவேலைகளை, தொலைதொடர்புகளை ஊடுருவி தகவல் திரட்டுவதை நாம் கடுமையாக்க வேண்டும்,” என்று கூறி, அவர் அமெரிக்கா மற்றும் சர்வதேச உளவுத்துறை அமைப்புகளது பரவலான பாரிய உளவுவேலைகளை இன்னும் அதிகமாக்க அழைப்புவிடுத்தார்.
புரூசெல்ஸ் தாக்குதல்களது தன்மை பயங்கரமானது என்றாலும், ஊடகங்களது மற்றும் தரங்குறைந்த முழு அரசியல் ஸ்தாபகத்தினது பிரச்சாரத்தினூடாக புதிய போர்கள் மற்றும் பொலிஸ் அரசு நடவடிக்கைகளுக்குள் இட்டுச்செல்ல மக்கள் தங்களைத்தாங்களே அனுமதிக்கக் கூடாது என்பது இன்றியமையாததாகும்.
பயங்கரவாத வன்முறையைக் கண்டிக்கும் முதலாளித்துவ வர்க்க அரசியல்வாதிகளின் சகல அறிக்கைகளும் கபடமாக இருப்பதைப் போலவே பாசாங்குத்தனமாகவும் இருக்கின்றன. கடந்த ஆண்டு சார்லி ஹெப்டோ மற்றும் நவம்பர் 13 பாரீஸ் குண்டு வெடிப்புகளில் இருந்து நேற்றைய புரூசெல்ஸ் குண்டுவெடிப்புகள் வரையில் ஐரோப்பாவில் ISIS தாக்குதல் அலையானது, மத்தியக் கிழக்கின் பெரும் பாகங்களை நாசமாக்கிய மற்றும் ஏனைய பகுதிகளை நிலைகுலைய செய்துள்ள தசாப்த கால போர்கள் மற்றும் இராணுவ தலையீடுகளுடன் பிரிக்க முடியாதவாறு பிணைந்துள்ளன.
ISIS அமைப்பே மூன்று ஏகாதிபத்திய போர்களது விளைபொருளாகும்: முதலாவது, ஈராக்கிய அரசாங்கம் அல் கொய்தாவிற்கு பாரிய பேரழிவுகரமான ஆயுதங்களை வழங்கும் என்ற பொய்யான வாதங்களின் அடிப்படையில் பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் இத்தாலி உட்பட ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் அமெரிக்காவின் சட்டவிரோத 2003 ஈராக் படையெடுப்பு; இரண்டாவது, அல் கொய்தா தொடர்புபட்ட போராளிகள் குழுக்களை பினாமி தரைப்படைகளாக பயன்படுத்தி, லிபியாவில் அமெரிக்கா மற்றும் நேட்டோ நடத்திய ஆட்சி மாற்றத்திற்கான போர்; மூன்றாவது, சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சியைக் கவிழ்க்கும் ஒரு முயற்சியில் ISIS உட்பட பல்வேறு இஸ்லாமியவாத போராளிகளை சிரியாவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகள் ஆதரித்திருந்த நிலையில், அங்கே அவர்களால் தூண்டிவிடப்பட்ட பினாமி போர்.
குறிப்பாக சிரியா போரின் ஆரம்ப கட்டங்களில், அந்த இஸ்லாமிய போராளிகள் குழுக்கள் அரசாங்கத்தை நிலைகுலைக்க மற்றும் பயங்கரவாதத்தை விதைக்க முயன்றபோது, அவர்கள் தொடர்ச்சியான பயங்கரவாத குண்டுவெடிப்புகளை சார்ந்திருந்தனர். தலைநகர் டமாஸ்கஸில் மட்டும் டிசம்பர் 2011 தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டு, 166 பேர் காயமடைந்தனர், மே 2012 தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டு 166 பேர் காயமடைந்தனர், பெப்ரவரி 2013 தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டு 250 பேர் காயமடைந்தனர்.
வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் இந்த இரத்தக்களரியான வன்முறை செயல்கள் முழுவதிலும் அந்த இஸ்லாமியவாத எதிர் தரப்பை ஆதரித்துள்ளன, பாக்தாத்தில் 2014 கோடையில் அமெரிக்க கைப்பாவை ஆட்சியை அது தாக்கியதற்குப் பின்னர் தான் அவர்கள் படிப்படியாக ISIS க்கு எதிராக திரும்பினர். அப்போதும் கூட, பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் ஈராக்கில் ISIS இலக்குகள் மீது குண்டுவீசிய போது, அது சிரியாவில் இருந்த ISIS இலக்குகள் மீது குண்டுவீசாது என்று குறிப்பிட்டது. அசாத்-எதிர்ப்பு சக்திகளைப் பலவீனப்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக சிரியாவில் ISIS தாக்குதல்களை அது தவிர்த்துக் கொள்வதாக வெளியான ஊடகச் செய்திகளை மறுப்பதைக் கூட பாரீஸ் நிராகரித்தது. ஜனவரி 2015 சார்லி ஹெப்டோ தாக்குதலுக்குப் பின்னர் தான் பிரான்ஸ் சிரியாவில் ISIS மீது குண்டுவீசத் தொடங்கியது.
இத்தகைய போர்கள் ஐரோப்பாவில் ஒரு பிரங்கன்ஸ்ரைன் அசுரனை உருவாக்கி உள்ளது, இஸ்லாமிய போராளிகளின் ஒரு வலையமைப்பு ஐரோப்பிய வெளியுறவு கொள்கை மற்றும் பொலிஸ் வட்டாரங்களுடன் நெருக்கமாக பிணைந்திருந்தது. சார்லி ஹெப்டோ தாக்குதலில் குவாச்சி சகோதரர்கள் மற்றும் நவம்பர் 13 பாரீஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அப்தெல்ஹமீத் அபவூத் போன்று ஐரோப்பாவில் ISIS தாக்குதல்களை நடத்துபவர்கள், சிரியா போருக்காக ஐரோப்பாவில் இருந்து இஸ்லாமியர்களை நியமித்த நடவடிக்கைகளுடன் தவிர்க்க முடியாமல் தொடர்புபட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. காரணங்காட்ட முடியாதவாறு இருந்தாலும், அவர்கள் ஐரோப்பா எங்கிலுமான உளவுத்துறை அமைப்புகளுக்கு நன்கு பரிச்சயமானவர்களே மற்றும் நெருக்கமாக கண்காணிக்கப்பட்டு வந்தவர்கள் ஆவர், அக்கண்டம் முழுவதிலும் பயணிக்க அனுமதிக்கப்பட்டிருந்த அவர்கள் இரத்தந்தோய்ந்த தாக்குதல்களுக்கு தயாரிப்பு செய்தனர்.
தங்களின் பொலிஸ் அரசு நடவடிக்கைகளை விரிவாக்குகின்ற அதேவேளையில் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கு முஸ்லீம்-விரோத வெறுப்பை ஊதிப்பெருக்க ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் பரந்த பிரிவுகள், அத்தகைய குற்றங்கள் வழங்கும் போலித்தனத்தை வரவேற்கின்றன என்ற உண்மை, ஐரோப்பாவில் தாக்குதல்கள் அளவு அதிகரித்திருப்பதில் ஒரு முக்கிய காரணியாகும். ஆளும் உயரடுக்குகள் மத்திய கிழக்கு போர்களில் இருந்து தப்பியோடி வரும் மில்லியன் கணக்கான தஞ்சம் கோருவோரது உரிமையை மறுக்கும் ஒரு ஈவிரக்கமற்ற மற்றும் சட்டவிரோதமான கொள்கையை நியாயப்படுத்தவும், தொழிலாள வர்க்கத்தின் மீது முன்பில்லாத அளவிற்கு அதிக மூர்க்கமான செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை திணிக்கவும் முயல்வதால், அத்தகைய பயங்கரவாத தாக்குதல்களை அவர்கள் ஓர் அரசியல் வரமாக காண்கிறார்கள்.
மத்திய கிழக்கின் ஏகாதிபத்திய போர்களின் இரத்த ஆறு ஐரோப்பாவிற்குள் திரும்பி வருகின்ற நிலையில், அரசியல் படிப்பினைகளை அவசரமாக வரைந்துகொள்ள வேண்டியுள்ளது. ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னரும் பாதுகாப்பு படைகள் மற்றும் பொலிஸ் அரசு அதிகாரங்களது அதிகரித்த ஆயத்தப்படுத்தல், ஜனநாயக உரிமைகள் மீதான அதிக மூர்க்கமான தாக்குதல்கள், புதிய இராணுவ தீவிரப்படுத்தல்கள் மற்றும் இன்னும் கூடுதலான பயங்கரவாத தாக்குதல்களுக்கு மட்டுமே களம் அமைக்கப்படுகிறது.
இந்த பிற்போக்குத்தனமான வன்முறை வடிவத்திற்கு மூல காரணமாக உள்ள போர் உந்துதல் மூலமாக பிரதான ஏகாதிபத்திய சக்திகள் மத்திய கிழக்கை மேலாதிக்கம் செலுத்த விரும்புகின்றன, இதை புரிந்து கொள்வதன் மூலமாகவே இதை நிறுத்த முடியும். இதற்கு போருக்கு எதிராக சோசலிசத்திற்காக தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த இயக்கத்தை அபிவிருத்தி செய்வது அவசியமாகும்.