Print Version|Feedback
What is behind the electoral success of the Alternative for Germany?
ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியின் தேர்தல் வெற்றிக்குப் பின்னால் இருப்பது என்ன?
By Peter Schwarz
16 March 2016
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜேர்மன் மாநில தேர்தல்களில், ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சியின் வெற்றிக்குப் பலர் பெரும் பயத்துடன் பிரதிபலிப்பை காட்டியுள்ளனர். தேசிய-பழமைவாத மற்றும் பாசிசவாத நிலைப்பாடுகள் கலந்த அந்த வலதுசாரி கட்சி, கிழக்கு ஜேர்மன் மாநிலமான சாக்சோனி-அன்ஹால்ட் மாநில வாக்கெடுப்பில் 24 சதவீதம் வென்றிருந்தது. அது பாடன் வூட்டம்பேர்க் மற்றும் ரைன்லான்ட்-பலரினேட் இல் முறையே 15 மற்றும் 13 சதவீத வாக்குகள் பெற்று, அந்த மாநிலசட்டமன்றங்களில் பிரதிநிதித்துவமும் பெற்றது.
AfD க்கு வாக்களித்த எல்லா வாக்காளர்களும் இனவாதிகளோ அல்லது பாசிசவாதிகளோ கிடையாது. கருத்துக்கணிப்புகளின்படி, அதற்கு வாக்களித்த கால் பகுதியினர் மட்டுமே AfD இற்கு ஆதரவானவர்கள், ஏனென்றால் அவர்கள் அதனுடன் உடன்பாடு கொண்டவர்கள். அதேவேளையில் முக்கால்வாசி பகுதியினர் ஸ்தாபக கட்சிகளுக்கு எதிர்ப்பைக் காட்டுவதற்காக அவ்வாறு செய்திருந்தனர்.
ஸ்தாபக கட்சிகளும் மற்றும் ஊடகங்களும் திட்டமிட்டு AfD ஐ ஊக்குவித்தன. கடந்த கோடையில் போரால் பாதிக்கப்பட்ட மத்தியக் கிழக்கில் இருந்து வந்த அகதிகளுக்கு அனுதாபமாக மற்றும் செயலூக்கத்துடன் கிடைத்த ஒத்துழைப்புக்கு, அவை, AfD க்கு ஒரு களத்தை வழங்கி, பீதி மற்றும் வெளிநாட்டவர் விரோத போக்கைப் பரப்பியதன் மூலமாக விடையிறுத்தன. புத்தாண்டுக்கு முந்தைய நாள் கொண்டாட்டங்களின் போது கொலோன் இல் பெண்கள் மீது அகதிகள் பாரிய தாக்குதல் நடத்தியதாக வெளியான ஊடக செய்திகளும் ஒரு மத்திய பாத்திரம் வகித்தன. அந்த குற்றகரமான சம்பவங்கள் பரவலாக மிகைப்படுத்திக் காட்டப்பட்டன என்பதும் அல்லது அதிகபட்சம் ஒருபோதும் நடந்திருக்காமலேயே கூட இருந்திருக்கலாம் என்பதும் அதற்குப் பின்னர் தெளிவாகி உள்ளது.
இந்த பிரச்சாரம் ஞாயிறன்று தேர்தல்களுக்குப் பின்னரும் தொய்வின்றி தொடர்ந்தது. கிறிஸ்துவ சமூக கூட்டணி தலைவர் ஹோர்ஸ்ட் சீகோவர் மற்றும் பழமைவாத Frankfurter Allgemeine Zeitung இதழ் தலைமையில், அரசியல் ஸ்தாபகம் "மக்களின் குரலைக்" கேட்குமாறும் மற்றும் அதன் அகதிகள் கொள்கையை இன்னும் அதிகமாக வலதிற்கு நகர்த்துமாறும் முறையீடு அதிகரிக்கப்பட்டு வருகிறது. வாக்களிக்க தகுதியான 12.6 மில்லியன் மக்களில் 1.3 மில்லியன் பேர் AfDக்கு வாக்களித்திருந்த நிலையில், ஒட்டுமொத்த மக்களும் வாக்களித்ததைப் போல காட்டப்பட்டது.
AfD இன் எழுச்சி ஒரு நிஜமான அபாயத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. சாக்சோனி-அன்ஹால்ட் இல் அதற்கு கிடைத்திருக்கும் வாக்குகள், 71 ஆண்டுகளுக்கு முன்னர் நாஜி ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஒரு வலதுசாரி கட்சிக்குக் கிடைத்திருக்கும் கூடிய வாக்கு எண்ணிக்கையாகும். இந்த அபாயத்தை எதிர்கொள்வதற்கு, அதற்கான காரணங்களைப் புரிந்து கொள்வது அவசியமாகும். இது, ஓர் ஆழ்ந்த சமூக மற்றும் அரசியல் நெருக்கடி நிலைமைகளின் கீழ், இடது அல்ல அதற்கு மாறாக வலதுசாரி ஏன் முன்னணிக்கு வருகின்றது என்ற கேள்விக்கு பதிலைக் கோருகிறது.
2008 நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் இருந்து, உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறை முன்பினும் அதிக வேகமாக படுபாதாளத்திற்குள் நகர்ந்து வருகிறது. போதை பொருளுக்கு அடிமைப்பட்டவரைப் போல, வங்கிகள் மற்றும் பங்கு விலை-நிர்ணய சந்தைகளுக்குள் நிரந்தரமாக கடனைப் பாய்ச்சுவதன் மூலமாக மட்டுமே அது உயிரோடு வைக்கப்பட்டு வருகிறது. மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டு, மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக ஆக்கப்பட்டு வருவதுடன் சேர்ந்து, அதிக எண்ணிக்கையிலான நாடுகள் போரால் சூழப்பட்டு வருகின்றன. முதலாளித்துவ ஜனநாயகம் ஏதேச்சதிகார முறைக்கு வழிவிட்டு வருகிறது.
நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் இருந்து வறுமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் சமத்துவமின்மை வேகமாக உயர்ந்துள்ளன. Der Spiegel இன் சனிக்கிழமை பதிப்பு, “பிளவுபட்ட தேசம்: ஜேர்மனி 2016—பணக்காரர்கள் பணக்காரர்கள் ஆகிறார்கள், ஏழைகள் ஏழையாகவே இருக்கிறார்கள்" என்ற தலைப்பைக் கொண்டிருந்தது. செல்வம், வருமானம் மற்றும் வாழ்க்கை தரத்தில் ஏற்பட்டுள்ள இடைவெளியின் விபரங்களை அந்த முதன்மை கட்டுரை விவரிக்கிறது. அடிமட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனின் ஆயுள்காலம் மேல்மட்டத்தைச் சேர்ந்த அதே வயதுடைய ஒரு சிறுவனின் ஆயுள்காலத்தை விட குறைவாக உள்ளது. கல்வியுடன் சம்பந்தப்பட்ட இடம்பெயர்வில், அதாவது சமூக முன்னேற்றத்திற்கான வாய்ப்பில், சகல தொழில்துறை நாடுகள் மத்தியில் ஜேர்மனி மிகவும் கீழ் இடத்தில் உள்ளது.
சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகள், இடது கட்சிகளைப் பலப்படுத்தும் வகையில் ஒரு தீவிரமயப்படுதலை உருவாக்குதாக நீண்ட காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் இன்று அவ்வாறு கிடையாது, மேலும் இதில் ஜேர்மனி தனித்தும் நிற்கவல்லை. பிரான்சில் தேசிய முன்னணி வளர்ந்து வருகிறது. ஹங்கேரியில் Fidesz மற்றும் போலந்தில் PiS போன்ற தீவிர வலது கட்சிகள் கிழக்கு ஐரோப்பாவில் அதிகாரத்தில் உள்ளன. அமெரிக்காவில் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஆவதற்கு டோனால்டு ட்ரம்ப் சிறந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
இது, இடதுசாரி உணர்வு இல்லாமல் போனதால் ஏற்பட்டதல்ல. மாறாக இது, "இடது" என்று கருதப்படுகின்ற அல்லது தங்களைத்தாங்களே அதுபோல கூறிக் கொள்ளும் கட்சிகள் வகித்த பாத்திரத்தின் விளைவாகும். ஜேர்மனியில், அங்கே AfD ஐ பழிக்கும் மற்றும் வலதுசாரி அரசியல் போக்குகளை வெறுப்புடன் பின்தொடரும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் நடுத்தர தட்டு மக்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கான ஓர் அரசியல் குரல் இல்லை.
போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில், சாதாரண தொழிலாளருக்கான மற்றும் சமூக சீர்திருத்தத்திற்கான கட்சியாக பார்க்கப்பட்ட சமூக ஜனநாயக கட்சி, இப்போது வலதுசாரி கிறிஸ்துவ ஜனநாயக கூட்டணி ஆட்சி செலுத்துவதற்கான பெரும்பான்மையை வழங்கும் செயல்பாட்டில் சேவையாற்றுகிறது. தசாப்தங்களாக இருந்து வந்த கடந்தகால சமூக ஆதாயங்கள் மீது மிகப் பெரிய தாக்குதலான ஹார்ட்ஸ் சட்டங்களுடன் அக்கட்சியின் பெயர் பிரிக்கவியலாதவாறு பிணைந்துள்ளது.
இடது கட்சி நாடாளுமன்ற நிர்வாகிகள் விம் டாக்லேலன், அலைக்சான்டர் உல்றிச் மற்றும் ஹைக்க ஹென்சல் ஆல் பிரசுரிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளது ஒரு கூட்டு பகுப்பாய்வில் இடது கட்சியின் பாத்திரம் அப்பட்டமாக ஒப்புக் கொள்ளப்பட்டது. அக்கட்சி அங்கேலா மேர்க்கெலின் கொள்கைகளைப் பாதுகாப்பதை மற்றும் சமூக நெருக்கடியை அது கவனிக்க தவறியதே அதன் பாரியளவிலான இழப்புகளுக்கான காரணமாக அவர்கள் அடையாளம் கண்டனர்.
இது இடது கட்சியின் அரசியலைக் குறித்த ஒரு துல்லியமான மதிப்பீடாகும். அவர்கள் சமூக-விரோதம் கொண்டவர்களைப் போல பழமைவாத ஜேர்மன் சான்சிலரது கொள்கைகளில் இருந்து வேறுபடுத்த முடியாதவாறு உள்ளனர். இடது கட்சி, அது பதவியில் இருக்கும் ஒவ்வொரு ஜேர்மன் மாநிலத்திலும், அது அரச செலவினங்களை வெட்டி உள்ளதுடன் ஏனைய முதலாளித்துவ கட்சிகளை விட அதிகமாக இரக்கமின்றி தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கி உள்ளது.
இடது கட்சியின் நோக்கம், முதலாளித்துவத்திற்கு எதிராக ஓர் இடது-சாரி இயக்கத்தைக் கட்டுவதல்ல, மாறாக அத்தகைய ஒரு அபிவிருத்தியைத் தடுப்பதாகும். அரசியல் காரியாளர்கள், அரசு அதிகாரிகள், தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள், நடுத்தர வர்க்கத்தின் தனிச்சலுகை கொண்ட பிரதிநிதிகளைக் கொண்ட இந்த கட்சியால் தொழிலாள வர்க்கத்தின் சமூக கோபத்தை மற்றும் இளைஞர்களின் போர்குணம் மிக்க உத்வேகத்தை முதலாளித்துவத்திற்கு எதிராக ஒன்றுதிரட்ட முடியும் என்ற கருத்தே அர்த்தமற்றதாகும்.
இடது கட்சியும் மற்றும் அதன் பதவிகளில் அல்லது அதன் ஆதரவாக செயல்படும் பல்வேறு போலி-இடது குழுக்களுமே AfD இன் உயர்வுக்குப் பிரதான பொறுப்பாகின்றன. இடது கட்சி மற்றும் அதன் முன்னோடி அமைப்பான ஜனநாயக சோசலிச கட்சி (PDS), 26 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து இருந்து, அது சகல எல்லா போராட்டத்தையும் கைப்பற்றுவதற்காக அதன் இடது தொனி வார்த்தைஜாலங்களைக் கொண்டு ஒரு முட்டுச்சந்துக்குள் இட்டுச் செல்வதற்கு மட்டுமே முயன்றுள்ளது. இது, சமூக விரக்தி மற்றும் கோபத்தை அதன் சொந்த ஆதாயத்திற்காகத் திருப்பிக் கொள்ள, AfD போன்ற ஒரு வலதுசாரி கட்சிக்கான நிலைமைகளை உருவாக்கி உள்ளது.
ஜேர்மனியில் இடது கட்சியின் பிற்போக்குத்தனமான பாத்திரம், ஒரு சர்வதேச நிகழ்வுபோக்கின் பாகமாகும். கிரீஸில் உள்ள சிரிசாவுடன் இடது கட்சி மிக நெருக்கமாக ஒத்துழைத்து வருகின்ற நிலையில், அது இந்த கட்சிகள் எதற்கு தகுதி கொண்டவை என்பதை எடுத்துக் காட்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கனத் திட்ட கட்டளைகளுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பலையின் மீதேறி பதவிக்கு வந்த அது, முன்பினும் அதிக கடுமையோடு சிக்கனத் திட்டத்தை ஏற்று நடைமுறைப்படுத்தியது. இன்று அது அகதிகளைத் தடுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைக்கு வாயிற்காவலனாக செயல்படுகிறது. இத்தகைய கொள்கைகளில் இருந்து பாசிசவாதிகள் ஆதாயமடையக்கூடிய அபாயம் மிகப் பிரமாண்டமானதாகும்.
இடது கட்சி மற்றும் சிரிசா, மற்றும் ஸ்பெயினில் பெடெமோஸ், பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி, அமெரிக்காவில் சர்வதேச சோசலிச அமைப்பு போன்ற அதேபோன்ற குழுக்கள், இடது சாரி அல்ல, மாறாக அவை போலி-இடது அமைப்புகளாகும். அவை இடது வார்த்தைஜாலங்களுடன் அவற்றின் வலதுசாரி கொள்கைகளை மூடிமறைத்து, உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் வலதுசாரி போக்குகளாக உள்ளன. பிரான்ங்பேர்ட் பள்ளி, பின்நவீனத்துவம் மற்றும் போலி-இடதின் அரசியல் எனும் நூலில் டேவிட் நோர்த் எழுதுகையில், போலி-இடது "நடுத்தர வர்க்கத்தின் தனிச்சலுகை மிக்க மற்றும் செல்வசெழிப்பான அடுக்குகளின் சமூகபொருளாதார நலன்களை ஊக்குவிப்பதற்காக வெகுஜனவாத முழக்கங்கள் மற்றும் ஜனநாயக வார்த்தைஜாலங்களைப்" பிரயோகிக்கிறது என்றார்.
போலி-இடது என்பது "மார்க்சிச-விரோதமானது" மற்றும் "சோசலிச-விரோதமானது" என்று தொடர்ந்து விளங்கப்படுத்தும் நோர்த், அது "வர்க்க போராட்டத்தை எதிர்க்கிறது, மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மத்திய பாத்திரத்தை மற்றும் சமூகத்தை முற்போக்காக மாற்றுவதற்குப் புரட்சியின் அவசியத்தை மறுக்கிறது,” என்பதை விளங்கப்படுத்துகிறார். அது "மக்கள்தொகையில் மிகப் பணக்கார 10 சதவீதத்தினருக்கு இடையே செல்வவளத்தை மிகவும் அனுகூலமாக பகிர்ந்து கொள்வதற்கு … 'அடையாள அரசியலை' ஊக்குவிக்கிறது. போலி-இடது என்பது சமூக தனிச்சலுகைகளை இல்லாதொழிப்பதற்கு மாறாக, அதை பாரியளவில் அடைவதற்கு கோருகிறது.”
கிரீஸில் சிரிசாவின் காட்டிக்கொடுப்பானது, பரந்த பெருந்திரளான உழைக்கும் மக்களிடமிருந்து போலி-இடதைப் பிரிக்கும் இணைக்கவியலாத பிளவை உறுதிப்படுத்துகிறது. இந்த இடைவெளி, ஓர் ஆழ்ந்த சமூக மற்றும் அரசியல் நெருக்கடிக்கு இடையே, இடது கட்சியின் பெரும் தோல்விகளில் மிகவும் வெளிப்படையாக வெளிப்படுகிறது.
இத்தகைய கட்சிகள் வர்க்க போராட்டத்தை ஒடுக்க முடிந்திருந்த காலக்கட்டம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மாநில தேர்தல்களும் மற்றும் ஸ்தாபக கட்சிகளுடன் தொடர்புபட்ட நெருக்கடியும், வன்முறையான சமூக மற்றும் அரசியல் மோதல்களின் ஒரு காலக்கட்டத்தைச் சுட்டிக்காட்டுகிறது.
தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் பிரிவுகள் நிலைநோக்கை மாற்றிக் கொண்டு ஒரு நிஜமான சோசலிச திசையில் திரும்பும். ஆனால் இந்த நிகழ்முறை அதுவே தானாக நடந்துவிடாது. அதற்கு ஒரு மார்க்சிஸ்ட் கட்சியின் நனவுப்பூர்வமான தலையீடு அவசியமாகும். சோசலிச சமத்துவ கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவைக் கட்டியெழுப்புவதே இப்போது மிகவும் அவசர பணியாகும்.