Print Version|Feedback
Indian Stalinists ally with US-backed “anti-corruption” parties in Tamil Nadu
இந்திய ஸ்ராலினிஸ்டுகள் தமிழ்நாட்டில் அமெரிக்க-ஆதரவுபெற்ற “ஊழல்-எதிர்ப்பு” கட்சிகளுடன் கூட்டணி சேர்கின்றன
By Athiyan Silva
16 March 2016
தமிழ்நாடு தேர்தலில் அமெரிக்க-ஆதரவுபெற்ற ஊழல்-எதிர்ப்பு கட்சிகளுடன் கூட்டணி வைப்பதன் மூலம், ஸ்ராலினிச மற்றும் தமிழ் தேசியவாதக் கட்சிகளது மக்கள் நலக் கூட்டணியானது ஒரு அரசியல் மோசடியை நடத்துவதற்கு முனைகிறது.
இந்தியாவெங்கிலும் மற்ற பிராந்தியங்களில் பல வணிக-ஆதரவு அரசாங்கங்களில் சேவை செய்திருக்கக்கும், மக்கள் நலக்கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள், “வெளிப்படைத்தன்மை” மற்றும் “தூய்மையான அரசாங்கம்” ஆகியவற்றுக்கு வாக்குறுதியளிக்கின்றன. அப்பட்டமாய், இத்தகைய வாக்குறுதிகள் அர்த்தமற்றவை என்பதை பரந்த வெகுஜனங்கள் அறிவார்கள். ஆளும் அஇஅதிமுக (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்) மற்றும் திமுக (திராவிட முன்னேற்றக் கழகம்) போன்ற ஊழலடைந்த ஆட்சிக் கட்சிகள் மீதான சமூக கோபத்தை ஊழலுக்கான நீர்த்துப் போன எதிர்ப்புக் கட்சிகளின் பின்னால் திருப்பி விடுகின்ற அதேசமயத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மற்றும் அதன் “ஆசியாவை நோக்கிய திருப்பத்தின்” நலன்களின் பின்னால் அணிவகுப்பதே இவற்றின் நோக்கமாய் இருக்கிறது.
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) போன்ற ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளுடன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (MDMK) மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK)போன்ற பல்வேறு பிராந்தியவாத மற்றும் சாதியவாதக் கட்சிகள் சேர்ந்து மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப்பட்டது.
இப்போது, தமிழ்நாடு தேர்தலில் போட்டியிட திட்டம் கொண்டிருக்கின்ற வலது-சாரி ஆம்-ஆத்மி கட்சியிடம் இருந்தும் அது ஆதரவை எதிர்பார்த்து நிற்கிறது. ஆம் ஆத்மி கட்சி இந்தியாவின் தேசிய தலைநகர பிராந்தியமான டெல்லியில் ஆளும் கட்சியாக இருக்கிறது. இது 2012 நவம்பரில் கபீர் அரசு சாரா அமைப்பு (Kabir NGO) மற்றும் ஊழல்-எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர்களால் உருவாக்கப்பட்ட கட்சியாகும்.
AAP தலைவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருங்கிய உறவு கொண்டுள்ளவர்கள் என்பது நன்கறிந்ததாகும். AAP தலைவரும் இப்போதைய டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலும், மற்றும் துணை முதலமைச்சரான மனிஷ் சிசோசிடியாவும் டெல்லியில் 2005 இல் தொடங்கப்பட்ட கபீர் என்ஜிஓ அமைப்பின் ஸ்தாபகத் தலைவர்களாவர்.
சிஐஏ-ஆதரவு பெற்ற ஃபோர்ட் அறக்கட்டளை நூறாயிரக்கணக்கான டாலர்கள் கபீர் அமைப்புக்கு நிதியளித்திருக்கிறது. பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகை செய்தியின் படி, ஃபோர்ட் அறக்கட்டளையின் புது டெல்லி பிரதிநிதியான ஸ்டீவன் எல்.ஸோல்னிக், “கபீர் அமைப்புக்கு அறக்கட்டளையின் கடைசித் தவணை 2010 இல் கிட்டியிருந்தது. இந்த என்ஜிஓக்கு 2005 இல் நாங்கள் 172,000 டாலர்கள் நன்கொடை அளித்திருந்தோம். இரண்டாவதாய் 2008 இல் 197,000 டாலர்கள் அளித்தோம்” என்று தெரிவித்திருந்தார்.
AAP போன்ற “ஊழல்-எதிர்ப்பு” இயக்கங்களுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான நெருங்கிய உறவுகளை இந்தச் செய்திகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. மூன்று வருடங்களுக்கு முன்பாகவே உருவாக்கப்பட்டிருந்த கட்சியான AAP, மத்தியிலாளும் இந்து-மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் மீது பாரிய வெகுஜன மக்கள் அதிருப்தி கொண்டதன் மத்தியில் அதிகாரத்திற்கு வந்தது.
டெல்லியில் இருந்த இந்திய ஸ்ராலினிஸ்டுகளின் உதவியும் AAP இன் வெற்றிக்கு உதவியது, அங்கு CPM ஆம் ஆத்மிக் கட்சிக்கு வாக்களிக்க அழைப்பு விடுத்தது. பின்னாளில், AAP இன் வெற்றியை, CPM இன் முன்னாள் பொதுச் செயலாளரான பிரகாஷ் காரத் கட்சியின் செய்தியிதழான பீபிள்’ஸ் டெமாக்ரசியில் புகழ்ந்து பாராட்டினார். “தூய்மையான தோற்றம், கறைபடாமை, அதிகாரத்தின் சலுகைகளையும் வசதிகளையும் மறுத்தல், மக்களின் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்ட நிதியாதாரம் - என அனைத்துமே கம்யூனிஸ்ட்கள் தோற்றம் முதலே பின்பற்றி வருகின்ற பாணி மற்றும் நடைமுறையின் பகுதியாகும்.”
அதேபோல், இன்னுமொரு வலது-சாரி பிராந்தியக் கட்சியான தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தை (DMDK) கூட்டணிக்குள் கொண்டுவருவதற்காகவும் மக்கள் நலக் கூட்டணி தொடர்ச்சியான முன்முயற்சிகளை மேற்கொண்டது. “நான் ஒரு அரசன். அரசனை உருவாக்குபவன் அல்ல” என்று DMDK தலைவர் கூறிக் கொண்டார். “நீங்கள் எங்கள் கூட்டணிக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் தலைமையின் கீழ் ஒரு கூட்டணியை உருவாக்க நீங்கள் முயற்சி செய்தீர்கள் என்றால், அதில் சேர நாங்கள் காத்திருக்கிறோம்” என்ற ஒரு குறிப்பை DMDK க்கு மக்கள் நலக் கூட்டணி அனுப்பியிருந்ததாக தமிழ் ஊடகமான தினமலர் தெரிவித்தது.
சென்ற மாதத்தில், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமெரிக்க தூதரகத்தில் துணைத்தூதராய் இருக்கும் பிலிப் மின், விஜயகாந்தை அவரது தலைமை அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். அடுத்த நாளில், தேமுதிக PWF உடன் இணைந்தால், விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஆதரிப்பது குறித்து மக்கள் நலக் கூட்டணி பரிசீலிக்கும் என அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ அறிவித்ததாக, சென்னையில் இருக்கும் தந்தி தொலைக்காட்சியின் செய்தி கூறியது.
PWF மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளின், குறிப்பாக, சீனாவை இராணுவரீதியாய் சுற்றிவளைப்பதற்கான ஒரு திறம்பட்ட மூலோபாயமாக “ஆசியாவை நோக்கிய திருப்பத்தை” அறிவித்திருக்கின்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின், ஒரு கருவியாக செயல்படுகிறது. இப்போதிருக்கும் அமெரிக்க-ஆதரவு அஇஅதிமுக ஒருவேளை அதன் கொள்கைகள் மீதான பரந்த சமூக கோபத்தின் காரணத்தால் அதிகாரத்தை இழக்கும் நிலை வந்தாலும், அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு இணக்கமான இன்னுமொரு நிர்வாகமே அதனை பிரதியீடு செய்வதை உறுதி செய்வதே அவர்களின் இலக்காக இருக்கிறது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்கள் நலக் கூட்டணியானது மத்திய கிழக்கிலும், கிழக்கு ஆபிரிக்காவிலும் மற்றும் ஆப்கானிஸ்தானிலுமான ஏகாதிபத்திய போர்களின் விடயத்திலும், அத்துடன் சீனாவைக் குறிவைத்தான ஒரு கூட்டணிக்குள் இந்தியாவை உள்ளே கொண்டுவருவதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில் இந்திய மற்றும் பசிபிக் கடல் பகுதிகளில் அமெரிக்க இராணுவ நடவடிக்கை தீவிரப்படுவது குறித்தும் காதைக்கிழிக்கும் ஒரு மவுனத்தையே கடைப்பிடித்து வருகிறது.
”இந்திய மற்றும் பசிபிக் நீர்ப்பகுதிகள் முழுமையிலும் இந்தியா மற்றும் அமெரிக்காவின் கடற்படை வாகனங்கள் இணைந்து ரோந்து சுற்றுவது ஒரு சகஜமானதும் வரவேற்கத்தக்கதுமான ஒரு காட்சியாக அமையும்” என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் ஆர்.வர்மா சுட்டிக் காட்டியிருந்ததாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்தது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பின்னால் அணிவகுப்பதும், பொதுத் துறை தொழிலாளர்களின் சமீபத்திய பாரிய வேலைநிறுத்தம் போன்ற தொழிலாள வர்க்கப் போராட்டங்களை ஒடுக்குவதும், ஏகாதிபத்தியத்தின் மற்றும் இந்திய முதலாளித்துவத்தின் நம்பிக்கைக்குரிய கருவிகளாக எழுவதும் தான் CPI மற்றும் CPM இன் அரசியல் திட்டநிரலாக இருக்கிறது.
கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் சுதந்திர-சந்தை கொள்கைகளையும் அமெரிக்காவுடன் நெருங்கிய இராணுவ-மூலோபாய உறவுகளையும் பின்பற்றிய மத்திய அரசாங்கங்களை இவை தொடர்ச்சியாக முட்டுக்கொடுத்து வந்திருக்கின்றன. காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திற்கு அளித்த ஆதரவும் இதில் அடங்கும். 2005 ஜூலையில் மன்மோகன் சிங்கும் ஜோர்ஜ் புஷ்ஷும் இந்திய-அமெரிக்க கூட்டு ஒப்பந்தத்தை உருவாக்கிய பின்னரும் ஸ்ராலினிஸ்டுகள் மூன்று வருடங்களுக்கு அந்த அரசாங்கத்தை ஆதரித்திருந்தனர். இன்று CPI மற்றும் CPM மேற்கு வங்காளத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைத்து மாநிலத் தேர்தலில் போட்டியிடுகிறது.
இதனிடையே, தமிழ்நாட்டில் ஸ்ராலினிஸ்டுகளின் தேர்தல் கூட்டாளிகளாக இருப்பவர்கள், இலங்கை தமிழ் தேசிய வாதிகளின் கூட்டாளிகளாவர். இலங்கையில், 2015 தேர்தலில், ரொம்பவும் சீன-ஆதரவு நிலை கொண்டவராகக் கருதப்பட்ட ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை வெளியேற்றுவதற்கு ஒரு “ஒன்றுபட்ட எதிர்க்கட்சி” வேட்பாளரை ஏற்பாடு செய்து அமெரிக்காவும் இந்தியாவும் மேற்கொண்ட “ஆட்சி மாற்ற” நடவடிக்கைக்கு TNA ஆதரவளித்தது. இலங்கையின் புதிய அரசாங்கம் சமீபத்திய இருதரப்பு “கூட்டுப் பேச்சுவார்த்தை” உட்பட அமெரிக்காவின் “திருப்ப நடவடிக்கை”க்குள் இன்னும் முழுமையாக ஒருங்கிணைத்துக் கொண்டிருப்பதை TNA ஆதரித்திருக்கிறது.
ஸ்ராலினிஸ்டுகள் தமது இந்த பிற்போக்குத்தனமான கொள்கையை மறைப்பதற்காக, அவர்கள் ஊழலை எதிர்த்துப் போராடுவதாகக் கூறிக் கொள்கின்றனர். மக்கள் நலக் கூட்டணியின் மதுரை மாநாட்டில் பேசிய இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலரான சீத்தாராம் யெச்சூரி, “தமிழ்நாட்டில் மக்கள்-ஆதரவு கொள்கைகள் மற்றும் ஊழலின்மை ஆகிய மாற்றின் அடிப்படையிலான பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்ட ஒரு “சுத்தமான அரசாங்கத்திற்காக’ நாங்கள் கரம்கோர்த்திருக்கிறோம். தமிழ்நாட்டில் பல தசாப்தங்களில் முதன்முறையாக, ஒரு சுத்தமான அரசாங்கம் உருவாக்கப்பட இருக்கிறது. மேம்பட்ட தமிழ்நாட்டையும் இந்தியாவையும் நாங்கள் கட்டியெழுப்ப முடியும்.”
இதே மாநாட்டில், CPI தேசியச் செயலாளரான டி.ராஜா பேசுகையில், “மாறுபட்ட முறையில் சிந்தித்து, மாநிலத்தில் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு மாறுபட்ட பாதையை நாங்கள் விரும்பிய காரணத்தால் இந்தக் கூட்டணியை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்” என்றார்.
ஸ்ராலினிஸ்ட் தலைவர்களின் வாக்குறுதிகள் வெறுமையானவையும் போலியானவையும் ஆகும். மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அத்தனை கட்சிகளுமே தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் பாஜக, தமிழ்நாட்டில் அஇஅதிமுக மற்றும் திமுக போன்ற இந்தியாவின் மதிப்பிழந்து நிற்கும் மையநீரோட்டக் கட்சிகளுடன் பல தசாப்தங்களாக சேர்ந்து வேலை செய்து வந்திருப்பவையே ஆகும்.
இந்தத் தேர்தலில் மில்லியன்கணக்கான புதிய மற்றும் இளைஞர்களது வாக்குகள் சேருகின்ற அச்சமும் PWF இன் மூலோபாயத்தை செலுத்துகிறது. இந்த இளைஞர்களும் மக்களின் பரந்த பெரும்பான்மையினரும் ஆளும் அஇஅதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளையும் மற்றும் காங்கிரஸ் மற்றும் பாஜக போன்ற மற்ற தேசியக் கட்சிகளையும் புறந்தள்ளுகின்றனர்.
வேலைவாய்ப்பின்மை விகிதம் முன்கண்டிராத அளவில் இருப்பதாக தி இந்து பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. “தமிழ்நாட்டில் கல்வி மட்டம் அதிகரிக்கின்ற நிலையில், 15-29 வயதினர் மத்தியில் வேலைவாய்ப்பின்மை விகிதமும் அதிகரிக்கிறது. முதுகலைப் பட்டதாரிகள் விடயத்தில் இது 13.5 என மிகக் கணிசமான அளவாய் இருக்கிறது. 2011 புள்ளிவிவரப்படி, பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி மற்றும் தொழில்நுட்பப் பட்டங்களைக் கொண்ட பத்து மில்லியன் இந்தியர்கள், அதாவது மொத்த இந்தியர்களில் அதிகப்பட்ச கல்வி மட்டத்தை எட்டியவர்களில் 15 சதவீதம் பேர் வேலைகளை எதிர்பார்த்திருந்தனர். பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பின்மையில் கேரளா தான் இந்தியாவின் மிக உயர்ந்த அளவாக 30 சதவீதத்திற்கும் அதிகமான அளவைக் கொண்டிருந்தது.”
தென்னிந்திய மாநிலமான கேரளா பல ஆண்டுகளாக CPM மற்றும் CPI ஆல் ஆளப்பட்டு வந்திருக்கும் ஒரு மாநிலம் என்பது இங்கே குறிப்பிடத் தகுந்ததாகும்.
பல மாநிலத் தேர்தல்களில் பல வண்ணமான முதலாளித்துவக் கட்சிகளுடன் சேர்ந்து இவை போட்டியிடுகின்ற பொருட்சூழலில் தான் தமிழ்நாட்டில் அவர்களது தேர்தல் பிரச்சாரம் நடைபெறுகிறது. மேற்கு வங்காளத்தில் அவர்கள் காங்கிரஸ் கட்சியுடன், அதாவது நவ-தாராளவாத பொருளாதாரச் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் பெரும்பகுதியை நடத்தியிருக்கின்றதும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு மூலோபாயக் கூட்டை அபிவிருத்தி செய்திருப்பதுமான, இந்திய முதலாளித்துவத்தின் ஆஸ்தான ஆளும் கட்சியுடன், கூட்டணி சேர்ந்திருக்கிறது.