Print Version|Feedback
ඉන්දු-ශ්රී ලංකා ආර්ථික ගිවිසුමට විරුද්ධ වීමේ මුවාවෙන් දෙරටේ කම්කරුවන් කෙටවීමේ ව්යාපාරයක්
இந்திய-இலங்கை பொருளாதார உடன்படிக்கையை எதிர்த்தல் என்ற பெயரில் இரு நாட்டு தொழிலாளர்கள் இடையில் மோதலை ஏற்ப்படுத்தும் இயக்கம்
By W.A. Sunil
26 February 2016
உத்தேச இந்திய-இலங்கை பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை (எட்கா - Economic and Technology Cooperative Agreement ETCA) என்பதை சாக்காகக் கொண்டு, இந்திய எதிர்ப்பு பிற்போக்கு பிரச்சார இயக்கமொன்று தேசியவாதிகள், போலி இடதுகள் மற்றும் தொழில் வல்லுனர்களின் அமைப்பு ஒன்றினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), போலி இடது கட்சியான முன்னிலை சோசலிச கட்சி (மு.சோ.க.) பொறியியலாளர் மற்றும் பொறியியலாளர்கள் தொழில்நுட்பம் மற்றும் வைத்திய தொழில்வல்லுனர்களும் உள்ளடங்கிய அமைப்பு ஒன்றும் இப்பிரச்சாரத்தில் முன்னனியில் செயற்படுகின்றன.
இக்கட்சிகளும் அமைப்பும், எட்கா இந்தியாவிற்கு நன்மையளிப்பதாகவும் இலங்கை தொழிலாளர்கள் மற்றும் வேலையற்றோருக்கு அழிவுகரமானதாகவும் இந்தியாவனது இலங்கையின் பொருளாதாரத்தை விழுங்கிகொள்ளும் என்றும் குற்றம் சுமத்துகின்றன. எட்காவைச் சூழ முன்னெடுக்கப்படும் இப்பிரச்சாரம், இலங்கை தொழிலாளர்களை இந்தியாவில் உள்ள அவர்களது வர்க்க சகோதரர்களுக்கு எதிராக இருத்தும் நச்சுத்தனமான முயற்சியே ஆகும்.
எட்கா என்பது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசங்கம், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அரசங்கத்துடன் ஏற்ப்படுத்திக்கொள்ளவுள்ள ஒரு பிற்போக்கு பொருளாதார வர்த்தக உடன்படிக்கை ஆகும். இன்னமும் விவாதிக்கப்பட்டு வரும் இந்த உடன்படிக்கை இவ்வாண்டு நடுப்பகுதியில் நிச்சயமாக கைச்சாத்திடப்படும் என்று விக்கிரமசிங்க கடந்த செவ்வாய் பாரளுமன்றத்தில் தெரிவித்தார். முந்தைய அரசாங்கம், பரந்த பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (சீபா) இரு நாடுகளுக்கிடையே ஏற்ப்படுத்திக்கொள்ள முயற்சித்திருந்தாலும், முதலாளித்துவ குழுவொன்றும் ஜே.வி.பி உள்ளடங்கலான பேரினவாத அமைப்புகளும் முன்னெடுத்த பிரச்சாரத்தினால் அது தாமதப்படுத்தப்பட்டு கைவிடப்பட்டது.
ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இந்தியாவின் பிரமாண்டமான உழைப்புச் சந்தையை சுரண்டிக்கொள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மென்மேலும் தேடிவரக்கூடும், அதன் மூலம் அந்நாட்டு பொருளாதார வளர்ச்சி உயரும் என்று கணக்கிடப்படும் நிலைமைகளின் கீழ், இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தின் சக்கிவாய்ந்த தட்டு, அந்நாட்டுடனான பொருளாதார உடன்படிக்கைகள் ஊடாக முதலீட்டளர்களை கவர்ந்துகொள்ளவும் அதன் ஏற்றுமதி வர்த்தக சந்தைக்குள் நுழைந்துகொள்வதற்கும் சாதகமான நிலைமைகளை உருவாக்கும் என கணக்கிடுகின்றது.
இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் மோடி அரசாங்கத்திற்கும் இந்த உடன்படிக்கை தீர்க்கமானதாகும். பொருளாதார நன்மைகள் மட்டும் பிரதான காரணம் அல்ல. பிரிவினைவாத விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போர், 2009 மே மாதம் தழிழ் மக்கள் மீது பேரழிவொன்றை ஏற்படுத்தி முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ், இலங்கை மீது பொருளாதார அரசியல் செல்வாக்குச் செலுத்திய தமது எதிரியான சீனாவை அப்புறப்படுத்துவது அமொரிக்கவினதும் அதன் கூட்டாளியான புது டில்லியினதும் பிரதான புவிசார் அரசியல் இலக்காக இருந்தது.
”ஆசியாவில் முன்னிலை” என்ற ஆத்திரமூட்டும் இரானுவ வேலைத் திட்டத்தின் கீழ், சீனாவின் எழுச்சிக்கு குழிபறிக்க அமெரிக்கா முயற்சிக்கின்றது. அதன் ஒர் அம்சமாகவே இலங்கையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது இராஜபக்ஷவை பதவியிலிருந்து இறக்கி மைத்திரிபால சிறிசேனாவை பதவியில் அமர்த்தும் ஆட்சிமாற்ற நடவடிக்கையை அமெரிக்கா தூண்டிவிட்டது. இந்தியாவும் இந்த நடவடிக்கையில் கூட்டுச் சேர்ந்து கொண்டது. இலங்கையினுள் சீனாவின் செல்வாக்குக்கு எதிராக, விக்கிரமசிங்கவின் ஜக்கிய தேசியக் கட்சி உட்பட்ட பிரிவினர் இந்தியாவுடன் உறவுகளை பலப்படுத்திக்கொள்ள விரும்புகின்றனர். அந்த வகையில், எட்கா உடன்படிக்கையானது இரு நாட்டுகளதும் தொழிலாள வர்கத்துக்கும் எதிரான பாரதூரமான உள்ளர்த்தங்களை கொண்டுள்ளது. உடன்படிக்கையை எதிர்ப்பதாக கூறிக் கொள்ளும் மேற்குறிப்பிடப்பட்ட அமைப்புகள், இரு நாட்டு தொழிலாளர்களையும் பிளவுபடுத்துவதற்காக தேசியவாத உணர்வுகளை தூண்டிவிடுவது இந்த உள்ளர்த்தங்களை மூடிமறைப்பதற்கே ஆகும்.
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம், இலங்கை தொழில் வல்லுனர் சங்கம், இலங்கை பொறியியலாளர் சங்கம் உட்பட பல அமைப்புக்களின் கூட்டான தொழில் வல்லுனர்களின் கூட்டமைப்பு, பெப்ரவரி 11 அன்று உடன்படிக்கைக்கு எதிராக கொழும்பில் ஊர்வலமும் கூட்டமும் நடத்தியது. “இந்தியர்களுக்கு நாட்டை கொடுத்தால் நாங்கள் கடலில் குதிப்பதா, இந்தியர்களுக்கு தொழில் எங்களுக்கு சங்கு, தேசிய பாதுகாப்புக்கும் ஆபத்து” போன்ற இந்திய தொழிலாளருக்கும் இந்தியாவுக்கும் எதிரான சுலோகங்கள் அடங்கிய அட்டைகளை அவர்கள் சுமந்து சென்றதோடு அவற்றை கோஷித்தனர்.
தொழில் வல்லுனர்கள் சங்கமானது இந்திய வைத்திய, பொறியியல் மற்றும் தொழில்நுட்ப சேவைகளுக்கு கதவு திறந்து விடப்படுவதால் தமது தொழில்கள் அழிந்து போகும் என மிகைப்படுத்துகின்றது. ஆயினும் உண்மை எதுவெனில், ஜனநாயக உரிமைகளைப் பேணுவதற்கு அல்லது தனியார்மயப்படுத்தல் மற்றும் அரசாங்க செலவீன வெட்டுக்களால் ஏற்படும் தொழில் மற்றும் சேவை அழிவுகளுக்கு எதிரான எந்தவொரு போராட்டத்தையும் நடத்திய சரித்திரம் இந்த அமைப்புக்கு கிடையாது.
இந்த உடன்படிக்கையின் மூலம் தமது நலன்கள் பாதிக்கப்படுமோ என முதலாளித்துவ மற்றும் உயர் மத்தியதர வர்க்கத் தட்டினர் மத்தியில் நிலவும் பீதியையே தொழில் வல்லுனர்கள் சங்கம், முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ அரசியல் கட்சிகளது எதிர்புக்கள் வெளிப்படுத்துகின்றன.
உத்தேச உடன்படிக்கையை சாட்டாகக் கொண்டு கிளறிவிடப்படும் இந்திய எதிர்ப்பின் பிரதான கயவன் ஜே.வி.பி.யே ஆகும். பெப்பிரவரி 11 அன்று நிகழ்ந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, “அரசாங்கம் இந்திய கம்பனிகளுக்கு சலுகை கொடுத்துக்கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கம் இந்தியாவுக்காக வேலை செய்யும் அரசாங்கமாகும்” என்று குற்றம் சாட்டினார்.
ஜே.வி.பி.யின் வாரந்த சஞ்சிகையான லங்கா பத்திரிகையின் பெப்ரவரி 14 இதழின் ஆசிரிய தலையங்கத்தில், இந்திய தொழிலாளர் மீது அருவருப்பை கொட்டி பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது: இந்தியாவில் கல்வியற்ற வேலையற்றோர் தொகை 425 இலட்சமாகும். இந்த பிரமாண்டமான உழைப்புப் படை, சொற்ப சம்பளத்துக்காக இலங்கையில் வேலை வாய்ப்புக்காக வரவுள்ளதோடு அதன் மூலம் இலங்கையில் தற்சமயம் நிலவும் வேலையின்மை மேலும் உக்கிரமடைந்து ஊதியத் தரம் பாரியளவில் வீழ்ச்சியடையலாம்.”
எட்கா உடன்படிக்கையை “மக்களுக்குத் தெரியாமல்” கைச்சாத்திட தயாராகி வருவதாக அரசாங்கத்தை குற்றம் காட்டும் ஜே.வி.பி.யின் ஆசிரிய தலையங்கம் கடைசியில் கூறுவதாவது: “1987 இந்திய-இலங்கை உடன்படிக்கையும் இவ்வாறுதான் கைச்சாத்திடப்பட்டது. பின்னர் அதில் அநேகமானவற்றை இரத்துச் செய்யவைப்பதற்கு இயன்றிருந்தாலும், அதற்காக தியாகம் செய்யப்பட்ட உயிர்களுக்கு விலை மதிப்பில்லை.”
இந்திய-இலங்கை உடன்படிக்கையின் கீழ் நாட்டை பிரிப்பதாக குற்றம் சாட்டி, 1987-1990 காலகட்டத்தில் ஜே.வி.பி. முன்னெடுத்த பிற்போக்கு தேசப்பற்று பிரச்சாரத்தையே இங்கு டில்வின் சில்வா மீண்டும் நினைவு கூர்கின்றார். விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகளாக்க அந்நாட்டு இராணுவத்தை அனுப்பவும், தழிழ் முதலாளிகளுக்கு சில சலுகைகளை பெற்றுகொடுத்து கொழும்பு ஆட்சியை பேணிக்காக்கவுமே கொழும்பு மற்றும் புது டில்லி அரசாங்கங்கள் அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.
“தாய் நாட்டை காக்க” என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட பாசிச இயக்கத்தின் மூலம் தொழில்சங்கத் தலைவர்கள், தொழிலாள வர்க்க போராளிகள் மற்றும் அரசியல் எதிர்ப்பாளர்களுமாக நூற்றுக்கணக்கானவர்கள் ஜே.வி.பி. துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்டனர். ஜே.வி.பி.யுடன் கொண்டிருந்த இரகசியத் தொடர்பு முறிந்த பின், இந்த பயங்கரத்தை மறுபக்கம் கையாண்ட ஜனாதிபதி ஆர். பிரேமதாச, 60,000க்கும் மேற்ப்பட்ட கிராமப்புற இளைஞர்கள், ஜே.வி.பி. தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்களையும் கொன்றுதள்ள பயன்படுத்திக்கொண்டார். இந்த அழிவுக்கு ஜே.வி.பி. பொறுப்புக் கூற வேண்டும்.
மக்களது “குரலுக்கு” செவிசாய்க்காமல் அரசாங்கம் இந்தப் உடன்படிக்கையில் கையெழுத்திட்டால், மக்களை வீதியில் இறக்குவதாக ஜே.வி.பி. விடுக்கும் மிரட்டலின் அர்த்தம், எட்கா உடன்படிக்கையை எதிர்ப்பதன் பெயரில், மீண்டும் சிங்களப் பேரினவாதத்தை கிளறிவிடுவதாகும். இலங்கையின் பிற்போக்கு ஆளும் வர்க்கத்தின் சகல பிரிவுடனும் கூட்டு வைத்திருந்த ஜே.வி.பி, தொழிலாள வர்க்கத்தை இன ரீதியாக பிளவுபடுத்துவதற்கு அந்த ஆளும் வர்க்கத்தின் பிரிவு தூண்டிவிட்ட “இந்திய விஸ்தரிப்புவாதம்” மற்றும் தழிழர்-விரோதத்தையும் அடிப்படையாகக் கொண்ட சிங்களப் பேரினவாத குறிக்கோளை அரவனைத்துக் கொண்ட ஒரு அமைப்பாகும்.
பாரளுமன்றத்தில் ஒருங்கினைந்த எதிர்க்கட்சி என்ற பெயரில் செயற்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை சூழ்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் இனவாத கட்சிகளதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவும், ஜே.வி.பி. மற்றும் தொழில் வல்லுனரது இயக்கத்துக்கு வக்காலத்து வாங்குகின்றனர். இவர்கள் முந்தைய அரசாங்கத்தில் இருந்துகொண்டு, தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களது உரிமைகளை வெட்டிச் சாய்க்க ஒன்றாக செயற்பட்ட பின்னரே, “இந்தியாவில் இருந்து தொழில் வல்லுனர்கள் பெருக்கெடுத்தால் தொழில் இழப்பு ஏற்படும்” என்று முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.
ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்து சென்று போலி இடது முகமூடியிட்டுள்ள முன்னிலை சேசலிச கட்சியின் (மு.சோ.க.) நிலைப்பாடு, ஜே.வி.பி.யின் நிலைப்பாட்டில் இருந்து வேறுபட்டதல்ல. “ஒப்பந்தத்துக்கு எதிரான போராட்டத்துக்கு,” அதாவது இந்தியாவுக்கும் இந்திய தொழிலாள வர்க்கத்துக்கும் எதிரான விரோதத்தை தூண்டிவிடும் இயக்கத்துக்கு மு.சோ.க.யின் ஜனரல பத்திரிகையின் பெப்பிரவரி 14 வெளியீடு “வாழ்த்து” தெரிவித்திருந்தது. “‘சீபா அல்ல’ ‘எட்கா’, யானை போதாதென்று மாடுகளும்” என்ற தலைப்பில் வெளியிட்ட ஒரு கட்டுரையில், ஜே.வி.பி.யைப் போலவே இந்திய தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களுக்கு எதிராக அருவருப்புடன் எழுதப்பட்டிருந்தது. அந்த நாட்டின் “பிரமாண்ட உழைப்புப் படை சொற்ப ஊதியத்துக்கு வேலை செய்ய விருப்பம் கொண்டுள்ளமையால் அவர்கள் அற்ப தொகைக்கு இலங்கைக்கு வந்து வேலை செய்வர். அப்போது ஒன்றில் இலங்கையருக்கு வேலை கிடைக்காமல் போகும். அல்லது அற்ப சம்பளத்திற்கு வேலை செய்ய நேரும்,” என அது தெரிவித்தது. இந்த இனவாத நிலைப்பாட்டை மூடி மறைக்க, இந்திய, இலங்கை உழைக்கும் மக்களது “ஒருங்கினைந்த போராட்டம்” ஒன்று அவசியம், என்ற கபடத்தனமான வாய்கியமும் ஜனரல கட்டுரையின் கடைசியில் தொங்கவிடப்பட்டிருந்தது.
இந்த கட்சியினால் நிர்வகிக்கபடும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், இனவாத சுலோகத்தை சூழ முன்னெடுக்கப்படும் பிரச்சாரத்திற்கு பல்கலைக்கழக மாணவர்களை இணைத்துவிடத் தொடங்கியுள்ளது.
தொழிலாளர்கள், இளைஞர்கள், வறியவர்கள் மற்றும் சோசலிசத்தை மதிக்கும் புத்திஜீவிகளும், இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களினால் பிரேரிக்கப்பட்டுள்ள பிற்ப்போக்கு உடன்படிக்கையையும் அதை எதிர்ப்பதாகக் கூறியவாறு இரு நாட்டு வர்க்க சகோதரர்களை மோதிக்கொள்ள வைக்கும் பிற்போக்கான பிரச்சாரத்தையும் முழுமையாக நிராகரிக்க வேண்டும்.
இந்த உடன்படிக்கை சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் உலக நெருக்கடிக்கு மத்தியில் நடைமுறைப்படுத்தும் பரந்த வேலைத் திட்டத்தின் பாகமாகும். சர்வதேச நிதி மூலதனத்தின் இலாபம் சுரண்டும் கொடிய நிலைமைகளை உருவாக்குவதன் ஊடாக, முதலாளித்துவ வர்க்கத்துன் உயிர் மூச்சை தக்கவைப்பதே அரசாங்கத்தின் இந்த வேலைத் திட்டத்தின் முக்கிய இலக்காகும்.
தொழிலாளர்கள், போராட்டங்கள் ஊடாக வென்றெடுத்த தொழில், வாழ்க்கைத் தரம் மற்றும் சமூக நிலைமைகளை வெட்டிச் சரிக்கும் தாக்குதல்கள் ஊடாகவே இந்தியாவுடனும் ஏனைய நாடுகளுடனும் ஏற்படுத்திக்கொள்ளும் இது போன்ற ஒப்பந்தங்களை செயற்ப்படுத்த முடியும். இந்திய தொழிலாளர்களும் மோடி அரசாங்கத்தின் கீழ் இவற்றுக்கு சமமான தாக்குதல்களையே எதிர் கொண்டுள்ளனர்.
உலக முதலாளித்துவத்தின் அழமடைந்து வரும் நெருக்கடியின் மத்தியில், சகல நாடுகளினதும் தொழிலாளர்கள் மற்றும் வறியவர்கள், அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகளால் தயாரிக்கப்பட்டு வரும் உலக யுத்தத்தின் முன்னிலையில், வாழ்க்கைத் தரம், சமூக நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை நசுக்கித் தள்ளுவதற்கு எதிரான போரட்டங்களில் இறங்கியுள்ளனர்.
இலங்கை மற்றும் இந்திய ஆளும் வர்க்கங்கள் தொடுக்கும் தாக்குதலுக்கு கெதிராக, தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த தாக்குதல் ஒன்று தயாரிக்கபட வேண்டும். இலாபத்துக்காக அன்றி, பரந்த மக்களது தேவைகளின் பொருட்டு உற்பத்தியை பகுத்தறிவான முறையில் மீள ஒழுங்கமைக்கும் சோசலிச வேலைத் திட்டத்தை பதிலீடு செய்வதன் ஊடாகவே தொழில், வாழ்க்கைத் தரம் மற்றும் நிலைமைகளை பாதுகாக்க முடியும்.
இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களது பிற்போக்கு தாக்குதல்களுக்கும் தொழிலாளர்களை மோதிக்கொள்ள வைக்கும் இயக்கத்துக்கும் எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), தெற்காசிய தொழிலாள வர்க்கத்தை ஒரு பொதுப் போரட்டத்தில் ஐக்கியப்படுத்தும் வேலைத் திட்டத்தினை முன்வைக்கின்றது. அதாவது இலங்கையும் இந்தியாவும் உள்ளடங்கிய தெற்காசிய சோசலிச குடியரசுக்காகப் போராடும் வேலைத் திட்டத்தினை சோ.ச.க. முன்வைக்கின்றது. இது சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டமாகும்.
இலங்கையின் தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களுக்கு தலைமை வழங்குவதன் மூலம் இந்த வேலைத் திட்டத்திற்காக போராடுமாறும் அதற்குத் தலைமை வகிக்க சோ.ச.க.யை புரட்சிக் கட்சியாக கட்டியெழுப்ப முன்வருமாறும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.