Print Version|Feedback
Lessons of the Verizon strike
வெரிசோன் வேலைநிறுத்தத்தின் படிப்பினைகள்
Jerry White 2 June 2016
சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவின் மிகப்பெரிய மற்றும் நீண்டகால வேலைநிறுத்தங்களில் ஒன்றை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், வெரிசோன் தொலைதொடர்பு நிறுவனத்தின் ஏறத்தாழ 40,000 தொழிலாளர்கள் கடந்த செவ்வாய்கிழமை மாலை மற்றும் புதன்கிழமை காலையில் அவர்களது வேலைகளுக்கு திரும்பினர்.
அந்த வேலைநிறுத்தத்தை முடித்துக் கொள்வதைச் சுற்றியுள்ள சூழல்கள் குறிப்பாக வெறுப்பூட்டுவதாக உள்ளன. ஒபாமாவின் தொழிலாளர் நலத்துறை மேற்பார்வையில் 10 நாட்கள் நடந்த இரகசிய பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அமெரிக்க தொலைத்தொடர்பு தொழிலாளர்கள் சங்கமும் (CWA) மற்றும் மின்துறை தொழிலாளர்களின் சர்வதேச சகோதரத்துவமும் (IBEW), (தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டிருக்காத போது) வாரயிறுதி நினைவுதினத்தில் தாங்கள் "கோட்பாட்டுரீதியிலான உடன்படிக்கையை" எட்டியிருப்பதாகவும், ஏழு வாரகால வேலைநிறுத்தத்தை முடித்துக் கொள்வதாகவும் அறிவித்தன. முழு ஒப்பந்தத்தை—அவ்விதமான ஒன்று அங்கே இல்லவே இல்லை என்ற நிலையில்—அதை வெளியிடாமல் அல்லது அதன் மீது தொழிலாளர்களை வாக்களிக்க அனுமதிக்காமல் வேலைக்குத் திரும்புமாறு தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கங்கள் உத்தரவிட்டன.
புதனன்று காலை பெரிதும் ஐயுறவுடன் வெறுமனே வேலைத் திரும்புவதைப் போல காட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்களை நோக்கி, தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள் "நமக்கு வேண்டிய ஒவ்வொன்றும் நமக்கு கிடைத்துவிட்டது!” என்று உரக்க அறிவித்தனர். வெரிசோன் நிர்வாகம் அதற்கான ஆதாயங்களைச் சுரண்டும் ஒரு முயற்சியில், டி-சட்டைகள் அணிந்திருந்த போர்குணமிக்க தொழிலாளர்களை "ஒழுங்கான சீருடையில்" இல்லாததற்காக வீட்டுக்கு அனுப்பி அவர்களை ஒரு உதாரணமாக்க முயன்றது. மன்ஹட்டனின் நகர மையத்தில் உள்ள தொலைத்தொடர்பு தொழிலாளர்கள் சங்க முகவர் ஒருவர் உடனடியாக நிர்வாகத்தின் பக்கம் சாய்ந்தார்.
யதார்த்தத்தில், தொழிற்சங்கங்கள் மொத்தமாக மண்டியிட்டமை, உயர்மட்ட செயலதிகாரிகளின் வார்த்தைகளில் கூறுவதானால், வெரிசோனின் போட்டித்தன்மை மற்றும் இலாபங்களை அதிகரிக்க "நிறுவனம் கோரிய முக்கிய மாற்றங்கள்" அனைத்தையும் அதற்கு வழங்கி இருந்தது.
இந்த உடன்படிக்கை, மருத்துவக் காப்பீட்டுச் செலவில் நூறு மில்லியன் கணக்கான டாலர்களை வேலையில் உள்ள மற்றும் ஓய்வூபெற்ற தொழிலாளர்கள் மீது சுமத்தும். அது வாடிக்கையாளர் சேவை அழைப்பு மையங்களை ஒருங்கிணைப்பதன் மூலமாக செயல்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கும் மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் ஏற்கனவே பாரிய வேலை வெட்டுக்களைச் செய்துள்ள இலாபம் குறைந்த கம்பிவழி தொலைபேசி, இணைய மற்றும் கேபிள் டிவி பிரிவுகளை மீள்ஒழுங்கமைப்பு செய்யவும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய அந்த தொலைதொடர்பு நிறுவனத்தின் கரங்களைச் சுதந்திரப்படுத்தும்.
வெரிசோன் போராட்டம் இன்னும் முடியவில்லை. இந்த காட்டிக்கொடுப்பின் விளைவுகள் வெளிப்படையாக இருக்கின்ற நிலையில், உண்மையான ஒப்பந்தம் எதுவாக இருந்தாலும் அதன் மீது ஜூன் 17 க்கு முன்னர் வாக்கெடுப்பு நடக்கையில் எதிர்ப்பு அதிகரிக்கும். அனைத்திற்கும் மேலாக, கடந்த இலையுதிர்காலத்தில் விற்றுத்தள்ளப்பட்ட UAW உடன்படிக்கைகளுக்கு எதிராக வாகனத்துறை தொழிலாளர்களின் கிளர்ச்சியில் தொடங்கி, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் தொழிலாள வர்க்க விரோதமான தொழிலாளர் "சீர்திருத்தங்களுக்கு" எதிராக பரவிவரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் பாரிய போராட்டங்களின் அலைகள் வரையில், அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் அதிகரித்துவரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பு மற்றும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் தீவிரமயப்படலின் பாகமாக தொலைதொடர்பு தொழிலாளர்களின் இந்த போராட்டம் உள்ளது.
இதனால் வெரிசோன் தொழிலாளர்களுக்காக மட்டுமின்றி, மாறாக ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்காகவும் முக்கிய படிப்பினைகளை மிக கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டியதை மிகவும் அவசியமாக்குகிறது.
முதலில், ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளான ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியின் ஒட்டுமொத்த மூலோபாயத்தின் உள்ளடக்கத்தில் வெரிசோன் போராட்டத்தை நிறுத்திப் பார்ப்பது அவசியமாகும். 2008 பொருளாதார பொறிவுக்கு விடையிறுப்பாக, ஒபாமா நிர்வாகத்தின் மேற்பார்வையில், நிதியியல் அமைப்புமுறைக்கும், பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கின் சொத்துக்களுக்கும் முட்டுக்கொடுக்க, வங்கிகளுக்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் பாய்ச்சப்பட்டது. இதைத் தொடர்ந்து கூலிகள், மருத்துவக் காப்பீடு மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய சலுகைகளைக் குறைக்க ஓர் ஒருங்கிணைந்த முயற்சி நடந்தது.
சம்பளங்கள் மீதான தாக்குதலுக்கான எச்சரிக்கையொலி, 2009 இல் வெள்ளை மாளிகை மேற்பார்வையில் நடந்த வாகனத்துறை புனரமைப்பில் ஒலித்தது. அது, புதிதாக வேலையில் சேர்க்கப்படுபவர்களுக்கு சம்பளங்களைப் பாதியாக்குதல் மற்றும் வேலையில் இருந்த தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு செலவுகளைக் கணிசமாக குறைத்தல் ஆகியவற்றை அடித்தளத்தில் கொண்டிருந்தது. இதை தொடர்ந்து 2010 இல் ஒரு "சீர்திருத்தம்" என்பதாக மோசடியாக கூறி, Obamacare கொண்டு வரப்பட்டது. இதன் இன்றியமையா நோக்கமே பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்க செலவுகளைத் தொழிலாளர்கள் மீது சுமத்துவதாக இருந்தது.
இத்தகைய கொள்கைகளின் விளைவுகளை 2009 க்குப் பின்னர் சாதனையளவிற்கு அதிகரித்த சமூக சமத்துவமின்மையில் காணலாம், இத்துடன் சேர்ந்து மொத்த வருவாய் ஆதாயங்களில் 95 சதவீதம் உயர்மட்ட 1 சதவீதத்தினருக்குச் சென்றது. இருந்தாலும் கூட வர்க்க உறவுகளின் இந்த புனரமைப்பு இன்னும் முடிந்துவிடவில்லை. தொழிலாள வர்க்க எதிர்ப்பு அதிகரித்துவரும் நிலைமைகளின் கீழ், மற்றும் அடிவானத்தில் ஒரு புதிய பொருளாதார நெருக்கடிக்கான அறிகுறிகள் தெரிகின்ற நிலையில், ஆளும் வர்க்கம் இன்னும் அதிகமாக அழுத்தி வருகிறது.
அமெரிக்க தொலைதொடர்பு தொழிலாளர்கள் சங்கம், CWA, பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் ஹிலாரி கிளிண்டனை ஊக்குவித்து வந்த அதேவேளையில், ஜனநாயக கட்சியின் தொழிலாள வர்க்க குணாம்சம் ஒபாமாவின் தேசிய தொழிலாளர் நல்லுறவு ஆணையத்தால் (National Labor Relations Board) எடுத்துக்காட்டப்பட்டது. அது வேலைநிறுத்தங்களைத் தடுக்கும் தடை அதிகார ஆணைகளை கோரி வழக்கு தாக்கல் செய்ததுடன், அதற்கான அனுமதியைப் பெற்று வந்தது. மேலும் நியூ யோர்க் பொலிஸ் துறையின் பாத்திரம் நியூ யோர்க்கின் முற்போக்கான மேயர் என்று கூறப்படும் பில் டி பிளேசியோ ஆல் மேற்பார்வை செய்யப்பட்டது. தொழிற்சங்கங்கள் மற்றும் ஒபாமா நிர்வாகத்திற்கு இடையிலான சதி, பலவந்தமாக வேலைக்குத் திரும்ப செய்த சூழ்ச்சியான அமெரிக்க தொழிலாளர் நலத்துறை "பேச்சுவார்த்தைகளில்" போய் முடிந்தது.
இரண்டாவதாக, தொழிற்சங்கங்கள் வகித்த பாத்திரத்தைத் தெளிவாக புரிந்து கொள்வது அவசியமாகும். இவை, "தொழிலாள வர்க்க அமைப்புகள்" கிடையாது, மாறாக பெருநிறுவன நிர்வாகம் மற்றும் அரசின் ஆயுதங்களாக உள்ளன. இவை தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொண்டே அவர்களுக்கு விரோதமான நலன்களைக் கொண்டுள்ள செல்வாக்கு மிக்க உயர்மட்ட நடுத்தர வர்க்க நிர்வாகிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக சமீபத்திய ஒரு அத்தியாயம் இதை எடுத்துரைக்கிறது. ஜூலை 2015 இல் CWA தலைவர் கிறிஸ் ஷெல்டன் ஜனாதிபதி ஒபாமா உடனான ஒரு பேச்சுவார்த்தைக்காக ஐக்கிய எஃகுத்துறை தொழிலாளர் தொழிற்சங்கம், ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கம் மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களின் தலைவர்களுடன் வெள்ளை மாளிகைக்குச் சென்றார். பெருமந்தநிலைமைக்குப் பின்னர் பெருநிறுவன இலாபங்கள், பங்குச் சந்தை மற்றும் தலைமை செயலதிகாரிகளின் சம்பளங்கள் முழுமையாக மீட்சி பெற்றிருந்த அந்நேரத்தில், நிஜமான கூலியில் ஏற்பட்டிருந்த வீழ்ச்சியைத் மீட்டமைக்க அமெரிக்க தொழிலாளர்கள் ஆர்வமுடன் இருந்ததால், "சம்பள முறையீடு" குறித்து பல்வேறு ஊடக நிறுவனங்களும் அரசு சிந்தனை குழாம்களும் எச்சரிக்கை கொடுத்துவந்தன. 2015-16 இல் சுமார் 5 மில்லியன் தொழிலாளர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வரவிருந்த நிலையில், இந்த அபாயத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது வெள்ளை மாளிகை சந்திப்பில் விவாதிக்கப்பட்டது என்பது தெளிவாக உள்ளது.
அதை தொடர்ந்து நடந்ததென்னவென்றால் ஒபாமாவின் பொருளாதார கொள்கைக்கு எதிராக தொழிலாளர்களது எந்தவொரு ஐக்கியப்பட்ட போராட்டமும் AFL-CIO மற்றும் Change to Win தொழிலாளர் கூட்டமைப்பால் திட்டமிட்டு விரயமாக்கப்பட்டன. வெரிசோன் தொழிலாளர்கள் ஒப்பந்தம் ஆகஸ்ட் 2015 இல் காலாவதியான போது CWA அவர்களை வேலைநிறுத்தத்திற்கு அழைக்காததற்கு முக்கிய காரணமே, இது 30,000 எஃகுத்துறை தொழிலாளர்கள், 140,000 வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் ஏனையவர்களது ஒப்பந்தங்கள் காலாவதி ஆனதுடன் பொருந்தி வந்ததால் ஆகும். ஒப்பந்தங்களை நீட்டித்ததுடன், பொய்கள் மற்றும் பயமுறுத்தல்களை ஒன்றுகலந்து, தொழிற்சங்கங்கள் இந்த தொழிலாளர்களைத் தனிமைப்படுத்தியதுடன், தொழிலாளர்களுக்கான மொத்த செலவு பணவீக்க விகிதத்திற்கு கீழே இருக்குமாறு அமைந்த உடன்படிக்கைகளைத் திணித்தன.
எட்டு மாதங்களுக்குப் பின்னர் இறுதியில் CWA வெளிநடப்புகளுக்கு அழைப்புவிடுத்த போது, வெரிசோன் தொழிலாளர்கள் ஒரு வேலைநிறுத்தத்திற்கான அவர்களது சேமிப்புக்கள் எல்லாவற்றையும் செலவிட்டிருந்தார்கள், மேலும் நிறுவனம் ஒரு சிறிய கருங்காலிகளது படையைக் கூலிக்கு அமர்த்தி பயிற்சி அளித்திருந்தது.
கருங்காலிகள் மற்றும் பொலிஸ் வன்முறை, நீதிமன்ற தடையாணைகள் மற்றும் பெருநிறுவன கட்டுப்பாட்டிலான ஊடகங்களது இருட்டடிப்பை மீறி இதற்கிடையே தான் வெரிசோன் தொழிலாளர்கள் தீர்க்கமாக போராடினார்கள். ஆனால் அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறும் அமைப்புகளே, அதாவது CWA மற்றும் IBEW, அந்த வேலைநிறுத்தத்தைத் தனிமைப்படுத்த மற்றும் தொழிலாளர்கள் கீழ்ப்படிய செய்வதற்கு சூழ்ச்சி செய்தன. நாடுபரந்த தொலைதொடர்பு வேலைநிறுத்தங்களைத் தடுப்பதற்காக, 16,000 ஏடி&டி மேற்கு தொழிலாளர்களை CWA ஓர் ஒப்பந்தம் இல்லாமலேயே தொடர்ந்து வேலை செய்ய நிர்பந்தித்தது. அத்துடன் சான் தியாஹோவின் உள்ளூர் வேலைநிறுத்தம் கலிபோர்னியா எங்கிலும் பரவுவதற்கு முன்னதாக அதை விரைவாக தடுத்து நிறுத்தியது.
வெரிசோன் வேலைநிறுத்தம் எடுத்துக்காட்டியதைப் போல, தொழிலாளர்கள் ஒரு குறிப்பிட்ட ஈவிரக்கமற்ற பெருநிறுவனம் வெரிசோனுக்கு எதிரான போராட்டத்தில் மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்தமாக முதலாளித்துவ முதலாளிகள் வர்க்கம் மற்றும் அவர்களைப் பாதுகாக்கும் அரசியலமைப்பு முறைக்கு எதிராக இருக்கிறார்கள். இத்தகைய போராட்டங்கள் அதிகரித்தளவில் சாமானிய தொழிலாளர்கள் மற்றும் உத்தியோகப்பூர்வ தொழிற்சங்கங்களுக்கு இடையே ஒரு மோதல் வடிவத்தை எடுத்து வருகிறது.
அமெரிக்காவில், தன்னைத்தானே "ஜனநாயக சோசலிசவாதி" என்று கூறிக்கொள்ளும் சாண்டர்ஸிற்கு கிடைத்த ஆதரவு, அமெரிக்க தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒருபோதும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு ஒரு அரசியல் மாற்றீடு கோர மாட்டார்கள் என்பதை பொய்யாக்கிக் காட்டியது. சாண்டர்ஸ் மக்களின் கோபத்தை ஜனநாயக கட்சியின் பாதுகாப்பான வடிகால்களுக்குள் திருப்பிவிட முனைந்துள்ளதால் சாண்டர்ஸ் குறித்து அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு எந்த பயமும் கிடையாது என்றாலும், வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சி மற்றும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவரும் முதலாளித்துவ-எதிர்ப்பு உணர்வுகளைக் குறித்து தான் பெருநிறுவன மற்றும் நிதியியல் பிரபுத்துவம் பெரிதும் அஞ்சுகிறது.
வேலைநிறுத்த போக்கினூடாக, வாகனத்துறை தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பிரிவு தொழிலாளர்களின் முந்தைய போராட்டங்களைப் போலவே, வெரிசோன் தொழிலாளர்களும் உண்மையைத் தெரிந்து கொள்ள, அவர்களது கவலைகள் மற்றும் கோரிக்கைகளை வெளிப்படுத்த, அவர்களது போராட்டத்தை விரிவுபடுத்துவதற்கான ஒரு மூலோபாயத்திற்காக, அதிகரித்தளவில் உலக சோசலிச வலைத்தளம் மற்றும் அதன் WSWS வெரிசோன் வேலைநிறுத்த சிற்றிதழை நோக்கி திரும்பி இருந்தார்கள். ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் அந்த சிற்றிதழை வினியோகித்ததுடன், நூற்றுக் கணக்கானவர்கள் இணையவழி கூட்டங்களில் பங்குபற்றினர் மற்றும் முழு ஒப்பந்தத்தையும் வெளியிடுவதை நிறுத்தி வைத்து வேலைக்குத் திரும்புவதற்குக் கூறும் உத்தரவைத் திரும்ப பெறுவதற்கும் மற்றும் உறுப்பினர்களின் ஒரு ஜனநாயக வாக்கெடுப்புக்கும் கோரும் ஒரு முறையீட்டு மனுவை ஆதரித்தனர்.
ஆளும் வர்க்கம் கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்கிவிட்டது. தொழிலாளர்களது கூலிகள், மருத்துவக் காப்பீடுகள் மற்றும் ஏனைய சமூக உரிமைகளைப் பாதுகாக்க, வரவிருக்கும் காலக்கட்டம் தொழிலாளர்களின் எண்ணற்ற போராட்டங்களைக் காணும். இத்தகைய போராட்டங்களை ஐக்கியப்படுத்த மற்றும் முன்னெடுக்க, முதலாளித்துவ-சார்பு தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான புதிய அமைப்புகள் அவசியமாகும். அனைத்திற்கும் மேலாக, முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக ஓர் அரசியல் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய தலைமை, சோசலிச சமத்துவக் கட்சி அவசியமாகும்.