Print Version|Feedback
May Day 2016: Once again, German militarism is rearing its ugly head
மே தினம் 2016: ஜேர்மன் ராணுவவாதம் மீண்டும் தனது அவலட்சணமான தலையை மேலே உயர்த்திக் கொண்டிருக்கிறது
By Uli Rippert 6 May 2016
பின்வரும் உரை ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (Partei für Soziale Gleichheit) பொதுச் செயலரான உலி ரிப்பேர்ட் மே 1, 2016 அன்று நடந்த சர்வதேசிய இணையவழி மே தினப் பேரணியில் வழங்கியதாகும்.
100 ஆண்டுகளுக்கு முன்னர் இதேநாளில் கார்ல் லீப்னெக்ட், பேர்லினின் போஸ்டர்டார்ம் பிளாட்ஸில் உரையாற்றுகையில், போரை எதிர்க்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
முதலாம் உலகப் போரின் யுத்தக்களங்களில் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு பாரிய படுகொலைகள் ஆவேசத்துடன் நிகழ்ந்திருந்தன. மில்லியன் கணக்கானவர்கள் ஏற்கனவே மடிந்திருந்தனர். இந்த கோரமான போரின் மத்தியில் லீப்னெக்ட் தைரியமாக அவரது குரலை எழுப்பினார்.
போருக்கு எதிரான அவரது அழைப்பு மூன்று புள்ளிகளை உள்ளடக்கியிருந்தது. இரண்டாம் அகிலத்தின் பொறிவுடன் ஆரம்பித்து, 1914 இல் போருக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கு உடன்பட்ட சமூக ஜனநாயகக் கட்சியினது (SPD) காட்டிக்கொடுப்பின் நாசகரமான விளைவுகளைக் குறித்து அவர் பேசினார்.
போரின் வர்க்கத்தன்மையை குறித்து விளக்கிய அவர் முதலாளித்துவ இலாபவெறியுடையோர்க்கு எதிராக உரையாற்றினார். அந்த மனிதயின படுகொலையை ஒரேயொரு சக்தி மட்டுமே, அதாவது ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் பாட்டாளி வர்க்கம் மட்டுமே, முடிவுக்குக் கொண்டு வர முடியுமென அவர் வலியுறுத்தினார்.
லீப்னெக்ட் அவரது ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பில் பின்வருமாறு எழுதினார்:
“புரூசெல்ஸிலோ, ஹேக் அல்லது பேர்னிலோ பாட்டாளி வர்க்க அகிலத்தை ஒரு சில டஜன் கணக்கான நிர்வாகிகளைக் கொண்டு மறுஸ்தாபகம் செய்துவிட முடியாது. மில்லியன் கணக்கானவர்களின் நடவடிக்கையின் மூலம் மட்டுமே அது ஸ்தாபிக்கப்பட முடியும். எங்கெங்கிலும் பாரிய பெருந்திரளான தொழிலாளர்கள், வர்க்கப் போராட்ட பதாகையை உயர்த்தும்போது மற்றும் மனிதயின படுகொலைக்கு எதிராக இடி முழக்கமென அவர்களது குரல்களை உயர்த்தும் போது மட்டுந்தான், இங்கே ஜேர்மனியில், பிரான்சில், இங்கிலாந்தில், ரஷ்யாவில் அதை நிறுவ முடியும் … " என்றார்.
ஓராண்டுக்குப் பின்னர், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி தலைமையின் கீழ், ஜாரிசத்திற்கு எதிராக ரஷ்ய தொழிலாளர்கள் எழுச்சி பெற்று, போரை முடிவுக்குக் கொண்டு வந்த ஒரு சோசலிச புரட்சியை நடத்தினர்.
இந்த புரட்சி, நவம்பர் 1918 இல் ஜேர்மனிக்கு பரவியபோது, கார்ல் லீப்னெக்ட் மற்றும் ரோசா லுக்செம்பேர்க் படுகொலை செய்யப்பட்டார்கள். இங்கே பேர்லினில் ஏர்பேர்ட் நொஸ்க மற்றும் ஷெய்டமான் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி, புரட்சியை இரத்தத்தில் மூழ்கடித்தது.
சமூக ஜனநாயகக் கட்சியின் காட்டிக்கொடுப்பிலிருந்து அவர்கள் முழுமையாக படிப்பினைகளை பெறுவதற்கு முன்னரே, லீப்னெக்ட் மற்றும் லுக்செம்பேர்க் கொல்லப்பட்டார்கள், ஆனால் லெனினும் ட்ரொட்ஸ்கியும், போருக்கு எதிரான அந்த போராட்டத்திற்கு, சந்தர்ப்பவாதம் மற்றும் தேசியவாதத்திற்கு எதிரான ஒரு சளைக்காத போராட்டம் அவசியமென வலியுறுத்தினார்கள்.
100 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று, கடந்த நூற்றாண்டின் தீர்க்கப்படாத சகல பிரச்சினைகளும் திரும்பிக் கொண்டிருக்கின்றன. மீண்டுமொருமுறை ஜேர்மன் ஏகாதிபத்தியமும் இராணுவவாதமும் அவற்றின் அசிங்கமான தலையை மேலே தூக்குகின்றன.
இரண்டாண்டுகளுக்கு முன்னர் கூட்டரசாங்கம், "இராணுவரீதியாக ஒதுங்கியிருத்தல் முடிவுக்கு வருவதாக" அறிவித்தது. அப்போதிருந்து இராணுவவாதம் திட்டமிட்டு ஊக்குவிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஜேர்மன் இராணுவமான Bundeswehr கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவுக்கு எதிராகவும், மத்திய கிழக்கு போர்களிலும் மற்றும் ஆபிரிக்காவிலும் கூட நேட்டோவின் படைநிறுத்தத்தில் முன்னிலையில் நிற்கிறது.
ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் பிரான்ங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் கூறுகையில்: “இன்றைய சூழ்நிலை, பனிப்போர் கால சூழ்நிலையை விட மிகவும் அபாயகரமாக இருக்கிறது" என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், “பழைய ஒழுங்கமைப்பு ஒரு புதிய ஒழுங்கமைப்பால் இன்னும் பிரதியீடு செய்யப்படவில்லை. செல்வாக்கு மற்றும் மேலாதிக்கத்திற்கான இந்த மோதல் ஒரு சமாதானமான கருத்தரங்க சூழலில் நடந்து வரவில்லை, மாறாக வன்முறையாக வெடித்து வருகிறது,” என்றார்.
ஜேர்மனியில் இராணுவப் பெருக்கம் பழிவாங்கும் வெறியோடு பின்பற்றப்பட்டு வருகிறது.
ஜேர்மன் அரசாங்கம், எதிர்வரவிருக்கும் ஆண்டுகளில் இராணுவ செலவினங்களை 130 பில்லியன் யூரோவிற்கு அதிகரிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது. ஜேர்மன் இராணுவத்தின் வசந்த கால அறிக்கை, 60 பில்லியன் யூரோ மதிப்பிலான 20 போர் தளவாட திட்டங்களை பட்டியலிட்டது. 13,500 படையினரை உள்ளடக்கிய ஒரு புதிய அதி-நவீன "இணையவழி தாக்கும் படை" உருவாக்கப்பட்டு மிக நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு வலுவூட்டப்பட இருக்கிறது.
ஏற்கனவே 1930களின் ஆரம்பத்தில் ஜேர்மன் இராணுவவாதம், முதலாம் உலகப் போரின் தோல்வியையும் வேர்சாய் உடன்படிக்கையின் கட்டுப்பாடுகளையும் துரிதமாக மீண்டு, அதுவரை அறியப்பட்டதில் மிகவும் நவீனமான சக்திவாய்ந்த ஒரு இராணுவத்தைக் கட்டியெழுப்பி உலகை கதிகலங்கச் செய்திருந்தது. இன்று ஜேர்மன் ஏகாதிபத்தியம், உலக ஆயுத போட்டியில் முன்னணியில் இருக்க மீண்டுமொருமுறை தீவிரமாக முயன்று வருகிறது.
இப்போது, இந்தக் கொள்கை நெருக்கமான அமெரிக்க கூட்டுறவுடன் எடுத்துச் செல்லப்படுகிறது. ஜேர்மனிக்கான அவரது சமீபத்திய விஜயத்தில் ஜனாதிபதி ஒபாமா, சிரியா மற்றும் லிபியாவில் ஒரு புதிய இராணுவ தாக்குதலுக்கு தயாரிப்பு செய்ய ஒரு போர் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார். உடனடியாக ஜேர்மன் இராணுவம், ரஷ்யாவிற்கு எதிராக மேற்கத்திய ஆக்கிரமிப்பை பலப்படுத்துவதற்காக லித்துவேனியாவில் துருப்புகள் மற்றும் கனரக இராணுவ தளவாடங்களை அது நிலைநிறுத்துமென அறிவித்தது.
எனினும், ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்எழுச்சி ரஷ்யாவுடனான மோதலை மட்டும் தீவிரப்படுத்தவில்லை, மாறாக ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே அதிகரித்த பதட்டங்களுக்கும் இட்டுச் சென்றுள்ளது. ஒரு ஐரோப்பிய போர் ஆபத்து திரும்பி வந்திருப்பதுடன், அட்லாண்டிக்கிற்கு இடையிலான மோதல்கள் துரிதமாக இராணுவ வடிவங்களை எடுக்கக் கூடும்.
அனைத்து கட்சிகளும் இராணுவப் பெருக்கத்துக்கும் போர் உந்துதலுக்கும் ஆதரவு கொடுக்கின்றன. சமூக ஜனநாயகக் கட்சி, உற்சாகப்படுத்துபவராக மற்றும் முன்னணி போர்வெறியராக செயல்படுகின்றது. பசுமை கட்சியினரைப் பொறுத்த வரையில், அவர்கள் நீண்டகாலத்திற்கு முன்னரே அவர்களது "சுற்றுச்சூழல் சார்ந்த அமைதிவாதத்தை" குழிதோண்டி புதைத்துவிட்டு, “மனித உரிமைகளைப்" பாதுகாப்பதான அடிப்படையில் போர் உந்துதலை ஆதரிக்கின்றனர்.
மிக குறிப்பாக, இடது கட்சி, துரோகத்தனமான பாத்திரம் வகிக்கிறது. “வலதுக்கு எதிரான ஐக்கியம்!” என்ற கோஷத்தின் கீழ், அது போர் கட்சிகளை ஆதரிப்பதோடு தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச அபிவிருத்தியை இடறச் செய்வதற்கும் பெரும் பிரயத்தனத்துடன் முயன்று வருகிறது.
தொழிற்சங்கங்களும் போர் கொள்கையை ஆதரிக்கின்றன. அவை பாதுகாப்புவாத சுங்ககட்டணங்களையும் பாதுகாப்புவாதத்தையும் கோருவதோடு, ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்புக்கும் (DGB) ஜேர்மன் இராணுவத்திற்கும் இடையே ஓர் உத்தியோகபூர்வ உடன்பாட்டையும் உருவாக்கியிருக்கின்றன.
இந்தக் கட்சிகளும் மற்றும் ஊடகங்களும், மக்களுக்கு எதிராக கண்கூடாக அரசியல் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளன.
எவ்வாறிருப்பினும், 100 ஆண்டுகளுக்கு முன்பு, சமூக ஜனநாயகக் கட்சி புரட்சியை ஒடுக்கி முதலாளித்துவத்தை மீட்ட சமயத்தில் இருந்ததைப் போலான நிலைமை இப்போது இல்லை. சமூக ஜனநாயகக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் செல்வாக்கு இழந்து வருகின்றன. சமீபத்திய ஆஸ்திரிய தேர்தலில் ஒரு முன்னாள் தொழிற்சங்க தலைவரான ஆஸ்திரிய சமூக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் வெறும் 11 சதவீத வாக்குகளைப் பெற்றதுடன், இரண்டாம் சுற்றுக்குக் கூட அவர் முன்னேற முடியவில்லை.
பிரான்சில் ஆயிரக் கணக்கிலான தொழிலாளர்களும் இளைஞர்களும் ஹோலாண்ட் அரசாங்கத்தின் தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்களுக்கு எதிராக வாரக் கணக்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்கே ஜேர்மனியில் அரசு சேவைகள் மற்றும் பொறியியல் தொழில்துறை வேலைநிறுத்தங்கள் கடந்த வாரம் ஆரம்பமாகியுள்ளன.
சமூக ஜனநாயகக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக அதிகரித்து வரும் கிளர்ச்சிகளை நாம் வரவேற்கிறோம். இடது கட்சி மற்றும் சகல போலி-இடதுகளும், பெரும்பிரயத்தனத்துடன், அதிகாரத்துவங்களின் அதிகாரத்தைப் பேணுவதற்கு முயல்கின்ற வேளையில், நாம் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக போராடுகிறோம்.
ஆயினும் மில்லியன் கணக்கான மக்களின் கோபம் மற்றும் எதிர்ப்பானது, ஒரு புதிய மூலோபாயத்தை கோருகிறது. சமூக வெட்டுக்கள், சர்வாதிகாரம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்திற்கு, முதலாளித்துவ-விரோதமான மற்றும் சோசலிசத்தன்மையிலான ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது அவசியமாகும். இதுவே இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான எமது சர்வதேச பிரச்சாரத்தின் முக்கியத்துவமாகும்.
பேர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் வலதுசாரி பேராசிரியர்களையும் அவர்களது போர் பிரச்சாரங்களையும் எதிர்த்தபோது, நாம் கணிசமான ஆதரவை வென்றெடுத்தோம். வரலாற்றை திரிபுபடுத்துவதற்கும் மற்றும் நாஜி குற்றங்களது முக்கியத்துவத்தை குறைத்துக் காட்டுவதற்குமான நமது எதிர்ப்பை ஒடுக்குவதற்கும் எம்மை மிரட்டுவதற்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தால் செய்யப்பட்ட சகல முயற்சிகளையும் நம்மால் எதிர்த்து நிற்க முடிந்தது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மாணவர் நாடாளுமன்றத்திற்கான எமது பிரதிநிதிகளின் எண்ணிக்கையை நான்கு மடங்காக்க நம்மால் இயன்றது.
நாம் இப்போது இந்த அரசியல் பிரச்சாரத்தை ஆலைகளுக்கும் மற்றும் வேலையிடங்களுக்கும் விரிவாக்க முடிவு செய்துள்ளோம்.
நாம் இந்த இலையுதிர் காலத்தில் பேர்லின் பிரதிநிதிகள் சபை தேர்தல்களுக்கான எமது சொந்த வேட்பாளர்களை நிறுத்தி, ஏற்கனவே பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளோம். நாம் இந்த தேர்தலை இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான ஒரு வெகுஜன வாக்கெடுப்பாக மாற்றியுள்ளோம்.
இரண்டு முறை உலகை படுபாதாளத்திற்குள் மூழ்கடித்த, மற்றும் எப்போதும் இல்லாதளவில் மிகப்பெரிய போர் குற்றங்களை புரிந்த, அதே பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகள், ஒரு மூன்றாம் உலகப் போரை ஒழுங்கமைக்க நாம் அனுமதிக்க மாட்டோம்.
100 ஆண்டுகளுக்கு முன்னர் கார்ல் லீப்னெக்ட் முதலாம் உலகப் போரை எதிர்த்தபோது கொண்டிருந்த போர்குணம் மற்றும் தைரியத்துடன் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாற்றில் அடங்கியுள்ள மகத்தான அரசியல் படிப்பினைகளை நாம் ஒன்றுசேர்த்துள்ளோம்.
அதுவே பெரும் வித்தியாசம் ஆகும். நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, SPDம் இரண்டாம் அகிலமும் பல ஆண்டுகளுக்கு முன்னால் அவை எடுத்திருந்த ஒரு சந்தர்ப்பவாத திசையின் காரணத்தால் உருக்குலைந்தன.
இன்று, எமது கட்சி - சிரமமான நிலைமைகளின் கீழ் பல தசாப்தங்கள் போராடி வந்திருந்தாலும் கூட ஒரு சர்வதேசிய சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தை ஒருபோதும் விட்டுக்கொடுத்து விடாமல், அந்த நிகழ்முறையின் ஊடாக ஒரு சக்திவாய்ந்த சர்வதேசக் காரியாளர்களை ஒன்றுதிரட்டியிருக்கும் ஒரு கட்சி - செல்வாக்கை வென்று கொண்டிருக்கிறது.
இந்த கோட்பாடுகள் இன்று பிரமாண்டமான யதார்த்தத்தையும், பலத்தையும் பெறுகின்றன.