Print Version|Feedback
Error! Hyperlink reference not valid.
பிரான்சின் வேலைநிறுத்த இயக்கம் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியின் திவால்நிலையை அம்பலப்படுத்துகிறது
By Alex Lantier 2 June 2016
சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்திற்கும் அதன் பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்டத்திற்கும் எதிரான அரசியல் போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் நுழைந்திருப்பது ஒரு வரலாற்றுத் திருப்புமுனையைக் குறித்து நிற்கிறது. அமெரிக்காவிலும் ஆசியாவிலும் வேலைநிறுத்தங்கள் அதிகரித்துச் செல்வதை அடியொற்றி, சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான பாரிய போராட்டங்கள் பிரான்சில் மட்டுமல்லாது பெல்ஜியத்திலும் அத்துடன் கிரேக்கத்தில், சிரிசா (”தீவிர இடதுகளின் கூட்டணி”) அரசாங்கத்திற்கு எதிராகவும் விரிந்து பரவுகின்ற நிலையில், தொழிலாள வர்க்கமானது தனது பரந்த சக்தியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. மதிப்பிழந்து விட்ட PS அரசாங்கம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
தொழிலாள வர்க்கத்தில் ஒரு அரசியல் இயக்கம் எழுவதானது, பல தசாப்தங்களாய் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கும் பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA) போன்ற மத்தியதர வர்க்கக் கட்சிகளின் அடித்தளங்களை சுக்குநூறாக்கியிருக்கிறது. அக்கட்சிகள் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தை நிராகரித்து, பிரான்சின் PS போன்ற சமூக ஜனநாயகக் கட்சிகளை ஐரோப்பாவில் “இடது” என்று கூறி புகழ்ந்து முதலாளித்துவ அரசாங்கக் கட்சிகளை நோக்கி நோக்குநிலை கொண்டிருந்தன.
பாரிய ஆர்ப்பாட்டங்களில் தொழிலாளர்களும், இளைஞர்களும் ஒரு இடது-சாரியாக அல்லது சோசலிஸ்ட் கட்சியாகக் கூறிக் கொண்ட PS இன் நொடித்துப் போன கூற்றுகளை நிராகரித்து, PS க்கு எதிராய், அடிப்படையான சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க கோருகின்றதான நிலையானது, வர்க்க சக்திகள் பரந்த அளவில் சர்வதேச அளவில் மறுஅமைவு கண்டுள்ளதை பிரதிபலிக்கின்றன. NPA இன் கிரேக்கக் கூட்டாளியான சிரிசா சென்ற ஆண்டில் அதிகாரத்திற்கு வந்த பின் கிரேக்க மக்களின் மீது மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து இயங்கியது.
2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்கும் உலக முதலாளித்துவத்தின் 1930களுக்குப் பிந்தைய மிக ஆழமான பொருளாதார நெருக்கடியின் வெடிப்புக்கும் சிறிது காலத்திற்கு பின்னர், புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகத்தால் (LCR) NPA ஸ்தாபிக்கப்பட்டது. LCR தன்னை கலைத்துக் கொண்டு NPA ஐ ஸ்தாபித்ததன் மூலமாக, புரட்சிகர அரசியலுடன் அது கொண்டிருந்த எந்தவொரு மெல்லிய தொடர்பையும் முறித்து விடுவதற்கு முனைந்தது. பிரான்சில் தொழிலாள வர்க்கத்தில் ஒரு ட்ரொட்ஸ்கிசக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான எந்தவொரு அடிப்படையும் அங்கு இருக்கவில்லை என்று வாதிட்ட அது, PS மற்றும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) போன்ற அதன் கூட்டாளிகளால் வழங்கப்பட்ட அரசியல் கட்டமைப்புக்குள்ளாக தொடர்ந்தும் வேலை செய்வதற்கு முயன்றது.
NPA இன் ஸ்தாபக காங்கிரசுக்கான LCR இன் அரங்கம் பின்வருமாறு கூறியது: “NPA ட்ரொட்ஸ்கிசத்துடன் எந்தவொரு குறிப்பிட்ட உறவுக்கும் உரிமை கோருவதில்லை, மாறாக கடந்த இரண்டு நூற்றாண்டுகளின் போது அத்தனை வகையிலும் அமைப்புமுறையை எதிர்த்து வந்திருக்கக் கூடியவர்களது தொடர்ச்சிக்கே உரிமை கோருகிறது. NPA ஒரு பன்மைத்துவ மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகும். உலகமயமாக்கல்-எதிர்ப்புக்கான தோழர்களிடம் இருந்து, அரசியல் சுற்றுச்சூழலுக்கான தோழர்களிடம் இருந்து, PS மற்றும் PCF இல் இருந்தான தோழர்களிடம் இருந்து, அராஜகவாத இயக்கத்தில் இருந்தான தோழர்களிடம் இருந்து, புரட்சிகர இடதில் இருந்தான தோழர்களிடம் இருந்து என சமூக இயக்கத்தின் பல்தரப்பட்ட பாகங்களைச் சேர்ந்த தோழர்களின் பங்கேற்பும் இருந்தது. சுவாரஸ்யமற்ற ஒன்றாக இல்லாதிருப்பதற்காக, தன்னை மேலும் கூடுதலாய் அனைவருக்கும் திறந்துவிடுவதன் மூலமாக NPA அனைத்தையும் வென்றெடுக்கமுடியும்”
PS ”தோழர்களுடன்” NPA கொண்டிருந்த உறவின் உள்ளடக்கம் வெகுவிரைவில் வெளிப்படையானது. 2012 ஜனாதிபதித் தேர்தலில் PS இன் வேட்பாளரான பிரான்சுவா ஹாலண்டை வழிமொழிந்த NPA, முற்போக்குக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள அவருக்கு நெருக்குதலளிக்க முடியும் என்பதாய் மோசடியான காரணத்தைக் கூறியது. ஏகாதிபத்திய போருக்கான ஒரு பகிரங்க பிரச்சாரவாதியாக NPA எழுந்தததுடன் கைகோர்த்து இது நிகழ்ந்தது. 2011 இல் லிபியாவில் நேட்டோ போரை வழிமொழிந்த NPA, சிரியாவில் நேட்டோ ஆதரவுடனான ”கிளர்ச்சியாளர்கள்” ஒரு ஜனநாயகப் புரட்சியில் ஈடுபட்டிருந்ததான பொய்யின் அடிப்படையில் அவர்களுக்கு ஆயுதமளிப்பதையும் ஆதரித்தது.
ஹாலண்டின் சிக்கன நடவடிக்கை கொள்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் கோபம் பெருகிய நிலையில், நேட்டோவின் ஏகாதிபத்திய தலையீடுகள் முன்னெப்போதினும் நேரடியாக அணுஆயுத வல்லமை பெற்ற ரஷ்யாவுடன் ஒரு இராணுவ மோதலின் அபாயத்தை முன்நிறுத்தியது. இத்தனைக்கு பின்னரும், அரசியல் நெருக்கடி ஆழமடைந்திருப்பதை ஒத்துக் கொண்டாலும், தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகரத் தலைமையை கட்டியெழுப்புவது சாத்தியமில்லாதது என்பதை NPA முன்னினும் மூர்க்கத்துடன் வலியுறுத்தியது.
2013 இல் வெளியான, 1991 இல் சோவியத் ஒன்றியத்தை ஸ்ராலினிசம் கலைத்தது முதலாய் பின்நவீனத்துவ மற்றும் அராஜகவாத மெய்யியலின் பரிணாம வளர்ச்சியைத் திறனாய்வு செய்த ”இடது அரைக்கோளம்” (Left Hemisphere) என்ற தலைப்பிலான புத்தகத்தில், சோர்போன் பல்கலைக்கழக பேராசிரியரும் NPA இன் உறுப்பினருமான Razmig Keucheyan எழுதினார்: “நடப்பு உலகமானது, அதன் அத்தனை கூக்குரலுக்கு மத்தியிலும், செவ்வியல் மார்க்சிசம் எழுந்த உலகத்தை ஒத்ததாய் இருக்கிறது. ஆயினும், மற்ற அம்சங்களில் குறிப்பாக தெளிவாக அடையாளம் காணப்பட்ட ’விடுதலைக்கான கையாள்கை’ இல்லாதிருக்கும் காரணத்தினால் அது மிகவும் வேறுபட்டதாக உள்ளது. சென்ற நூற்றாண்டின் தொடக்க காலத்தின் மார்க்சிஸ்ட்டுகள், சக்திவாய்ந்த தொழிலாளர் அமைப்புகளின் ஆதரவை கொண்டிருக்க முடிந்தது. அவை பெரும்பாலான சமயங்களில் அவற்றிற்கு தலைமை கொடுத்திருந்தன. அவற்றின் நடவடிக்கைகள் அப்போது முதலாளித்துவத்தின் இறுதி நெருக்கடியாக சித்தரிக்கப்பட்ட ஒன்றை தீர்க்கும் எனக்கூறப்பட்டது. அதனையொத்த எதுவும் இப்போது இல்லை, அண்மையான எதிர்காலத்தில் அப்படியொன்று நிலவுவதற்கும் வாய்ப்பின்றி இருக்கிறது.”
NPA இன் சமூக அடித்தளமாக இருக்கின்ற வசதிபடைத்த நடுத்தர வர்க்கம் தான், தனது பார்வையில், சமூகத்தின் தலைமை சக்தியாக காட்சியளிப்பதை தெளிவுபடுத்தும் மட்டத்திற்கு பேராசிரியர் Keucheyan சென்று விட்டார். அகம்பாவத்தை அபத்தத்துடன் கலந்து அவர் எழுதினார்: “பொதுவாக சர்வதேச சந்தைகளில் பெரும் தரமதிப்பைக் கொண்டிருக்கும் கல்வி ஸ்தாபனங்களில் தங்களது செயல்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய கல்வியாளர்கள் தான் இன்றைய லெனினாகவும், ட்ரொட்ஸ்கியாகவும், ரோஸா லுக்சம்பர்க் ஆகவும் இருக்கிறார்கள்.”
PS அரசாங்கத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஆரம்பகட்ட போராட்டங்கள் இத்தகைய பிற்போக்குத்தனமான, மார்க்சிச-விரோத அரசியலுக்கு ஒரு சம்மட்டி அடி கொடுத்திருக்கின்றன. ”வலிமையான எதிர்காற்றுகள் பிரான்சை சூறாவளிக் கடலாக ஆக்குகின்றன” என்ற தலைப்பிலான ஒரு சமீபத்திய கட்டுரையில், NPA இன் லியோன் கிரெமியு (Léon Crémieux) தங்களது கப்பல் சுக்குநூறாகி விட்டிருப்பதை ஏறக்குறைய ஒப்புக் கொண்டிருக்கிறார்.
அவர் எழுதுகிறார்: “முதலாளித்துவ நலன்கள் சமூக ஜனநாயகத்தின் மூலமாய் நிர்வாகிக்கப்பட்டமை, PSஇற்கு இடது பக்கத்திலிருந்தான அரசியல் எதிர்ப்பை பலவீனமாக்கியதுடன் மற்றும் தொழிற்சங்க தலைமைகளின் இயலாமை அதனுடன் ஒப்பிடமுடியாதளவிற்கான ஒரு இயலாமையை கொண்டிருப்பதுடன், ஒட்டுமொத்த சமுதாயத்தினதும் நோக்கத்திற்கு மாறாக உள்ளது. இது சிக்கன நடவடிக்கை மற்றும் வேலைவாய்ப்பின்மை கொள்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு பெரும் பகுதிக்கு பொருத்தமாக உள்ளது. அதற்கு நேர்மாறாய், கடந்த இருபது ஆண்டுகளில் மாறி மாறி அரசாங்கத்தில் அமர்ந்து வந்திருக்கக் கூடிய ஸ்தாபகக் கட்சிகள் ஆழமாய் அந்நியப்பட்டிருப்பதற்கும் மதிப்பிழந்திருப்பதற்குமான ஒரு விளக்கச் சித்திரத்தையே சூழல் ஏற்கனவே வழங்கியிருக்கிறது.”
NPA இலும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலும் இருக்கும் PS இன் கூட்டாளிகள் அல்ல, மாறாக தொழிலாள வர்க்கமே சிக்கன நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தில் தலைமையான சக்தியாக உள்ளது என்பதே கிரெமியு இன் பகுப்பாய்வில் இருந்து தப்பாமல் வருகின்ற முடிவாக இருக்கிறது. தொழிலாள வர்க்கத்தில் ஒரு மார்க்சிச அரசியல் முன்னணிப்படையை கட்டியெழுப்புவதை நிராகரித்து விட்டு, “இடது” முதலாளித்துவக் கட்சிகளை, சோசலிஸ்ட் கட்சிகளாய் ஊக்குவிக்கின்ற NPA இன் வரலாற்று முன்னோக்கானது முற்றிலும் போலியானதாகும்.
ஆயினும், இந்த முன்னோக்கு வெறுமனே ஒரு பிழை அன்று. NPA யும் அதையொத்த சக்திகளும் சர்வதேச அளவில் பிரதிநிதித்துவம் செய்கின்ற, பாட்டாளி வர்க்கத்திற்கு குரோதமான சடவாத வர்க்க நலனில் அது வேரூன்றியிருந்தது. இது குறிப்பாக கிரீசில் மிகத் தெளிவாய் இருக்கிறது: சிரிசா சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருகின்ற தனது தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாகக் காட்டிக்கொடுத்து, தொழிலாள வர்க்கத்தில் பாரிய எதிர்ப்புக்கு முகம்கொடுக்கின்ற நிலையிலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளை திணித்ததன் மூலமாக நிதி அமைப்புமுறையை ஸ்திரப்படுத்துவதற்கும் கிரேக்க முதலாளித்துவ வர்க்கத்தின் மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தின் வங்கிக் கணக்குகளை பத்திரப்படுத்துவதற்குமாய் முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
திவாலாகிப் போன குட்டி-முதலாளித்துவ மார்க்சிச-விரோத அரசியலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர மார்க்சிச அரசியலை அபிவிருத்தி செய்வது என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் எழுப்பப்பட்ட பிரச்சினையே தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கின்ற மையமான பிரச்சினையாக இருக்கிறது. பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு உண்மை கூறப்பட வேண்டும். அவர்களது போராட்டங்கள் மேலும் மேலும் தீவிரப்பட்டு செல்கின்ற நிலையில், இந்த நிலையானது இன்னும் அவசரமாய் புரட்சிகரத் தலைமை மற்றும் அரசியல் அதிகாரத்தின் பிரச்சினையை முன்வைக்கிறது.
முதலாளித்துவ நெருக்கடியால் மலைத்துப் போயும், வெளிநாடுகளிலான தனது சூறையாடல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தீர்மானத்துடனும் இருக்கின்ற ஐரோப்பிய முதலாளித்துவமானது, தனது இலாபங்களுக்கும் அதிகரித்துச் செல்லும் தனது இராணுவச் செலவினங்களுக்கும் நிதியாதாரம் திரட்டும் பொருட்டு, எப்பாடுபட்டேனும் சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதற்கு முழுத் தீர்மானத்துடன் இருக்கிறது. கிரீசில் ஐரோப்பிய ஒன்றியத்தால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் அல்லது ஜேர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சியால் திணிக்கப்பட்ட ஹார்ட்ஸ் சட்டங்கள் ஆகியவற்றின் பிரெஞ்சு பதிப்பாகவே PS இன் தொழிலாளர் சட்ட திருத்தம் அமைந்திருக்கிறது. உண்மையில், இந்த தொழிலாளர் சட்டம், ஹார்ட்ஸ் சட்டங்களை வரைவு செய்த பீட்டர் ஹார்ட்ஸிடம் இருந்தான ஆலோசனைகளையும் கொண்டே வரைவு செய்யப்பட்டிருக்கிறது என்பதுடன், ஹாலண்ட் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான தனது மூலோபாயத்தை ஜேர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல் மற்றும் இன்னும் பல நாடுகளது முன்னணி சமூக-ஜனநாயக அரசியல்வாதிகளது ஆலோசனையுடனேயே ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார்.
தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்துச் செல்லும் போராட்டங்களால் சுற்றிவளைக்கப்படுவதை தவிர்க்கும் ஒரு முயற்சியாக ஸ்ராலினிச CGT தொழிற்சங்கம் ஏராளமான வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. ஆயினும் கூட தொழிலாள வர்க்கத்திற்கு அதனால் எந்த பிரயோசனமும் இல்லை. PS அரசாங்கத்திற்கு எதிரான ஒரு நெடிய போராட்டத்தில் பயனற்றதாகவும் தொழிலாளர்களுக்கு குரோதமானதாகவுமே அது நிரூபணமாகும்.
ஹாலண்ட் உடன் இரகசியமான கொல்லைப்புற பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாக உரக்க அறிவிக்கின்ற CGT இன் தலைவரான பிலிப் மார்ட்டினேஸ், வரவிருக்கும் யூரோ 2016 கால்பந்து போட்டிகளின் வேளையில் வேலைநிறுத்தங்களை கொண்டுதான் இடையூறு செய்ய விரும்பவில்லை என்பதை சமிக்கையளிப்பதோடு, முன்னதாக ஹாலண்ட் தொழிலாளர் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று தான் கூறியதன் மீதும் பின்வாங்கிக் கொண்டிருக்கிறார்.
CGT மீது தொழிலாளர்களுக்கு பரவலான அவநம்பிக்கை நிலவுகிறது. CGT ஐ நீண்டகாலமாய் பாதுகாத்து பேசிவரும் NPA கூட, CGT இன் மூலோபாயத்திற்கு தான் வழிமொழிவதன் மீது கேள்விக் குறிகளை எழுப்பும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது, அது எழுதியது: ”இரயில்வே தொழிலாளர்களை வேலைநிறுத்த இயக்கத்திற்கு நெருக்கி, அரசுடன் ஒரு மோதல் மூலோபாயத்திற்கு CGT தீர்மானித்திருக்கிறதா? இவ்வாறாய், எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலாளர்களின் தலைமையில் வேலைநிறுத்தங்கள் அதிகரித்துச் செல்கின்ற சூழலில், CGT இன் நிலையானது சூழ்நிலையை மாற்றி, இரயில்வே தொழிலாளர்கள் போராட்டத்திற்குள் சக்திவாய்ந்த வகையில் நுழைவதற்கான ஒரு முக்கியமான கூறாக ஆகலாம்.”
ஹாலண்டுக்கு எதிராய் போராடுவதற்கு தொழிலாளர்கள் CGT ஐ நம்பலாம் என்பதான கூற்றுகள் அறியாமையின் விளைபொருளாகவோ அல்லது, NPA விடயத்தில் போல, திட்டமிட்ட ஏமாற்றுவேலையாகவோ இருக்கின்றன. இந்தச் சட்டத்தின் முக்கியமான பகுதிகளின் விடயத்தில் தான் பின்வாங்கப் போவதில்லை என்பதை ஹாலண்ட் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார். இளைஞர் ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது தாக்குதல் நடத்துவதற்கு பத்தாயிரக்கணக்கில் துணைஇராணுவப் போலிசையும் கலகத் தடுப்பு போலிசையும் அணிதிரட்டியிருக்கின்ற அவர், தொழிலாள வர்க்கத்தில் அவர் கட்டுப்படுத்த முடியாத என்ன எதிர்ப்பு வந்தாலும், அவற்றை நசுக்குவதற்கு இந்த சக்திகளைக் குவிப்பதற்காய் தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறார்.
CGT ஐ பொறுத்தவரை, 1995 இரயில்வே வேலைநிறுத்தங்கள், 2003 ஆசிரியர் வேலைநிறுத்தங்கள், 2007 இல் ஓய்வூதிய வெட்டுகளுக்கு எதிரான வேலைநிறுத்தங்கள், மற்றும் 2010 இல் எண்ணெய் துறை தொழிலாளர் வேலைநிறுத்தம் என சோவியத்துக்குப் பிந்திய காலத்தில் அது விலைபேசி விற்றிருக்கக் கூடிய ஏராளமான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களில் இன்னுமொன்றுக்காய் அது தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது. மேற்கூறிய அத்தனை போராட்டங்களுக்குப் பின்னரும், சிக்கன நடவடிக்கைகள் மிகப் பெருமளவிலோ அல்லது முழுமையாகவோ அமல்படுத்தப்பட்ட அதேசமயத்தில் CGT இன் பிற்போக்குத்தனமான பாத்திரத்தை NPA மூடிமறைத்து விட்டிருந்தது.
உலகெங்கிலுமான மற்ற நகரங்களில் போலவே பிரான்சிலும் ஒரு நெடிய வர்க்கப் போராட்டம் கட்டவிழத் தொடங்கியிருக்கிறது. முக்கால்வாசி அல்லது அதற்கும் அதிகமான பிரெஞ்சு மக்கள் இச்சட்டத்தை எதிர்க்கின்றனர், இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய தொழிலாளர்களது தலைமுறைகள் போராட்டக் களத்தில் வென்றெடுத்திருந்த சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் ஆழமாய் வேரூன்றிய பாரம்பரியங்கள் தொழிலாள வர்க்கத்தை உந்தி தள்ளிக் கொண்டிருக்கின்றன. ஆயினும், நடப்பு அரசியல் அமைப்புமுறையில், ஒரு தேசிய அடிப்படையில் தொழிலாள வர்க்கத்திற்கு எந்த முன்னோக்கிய வழியும் இல்லை.
வாக்களிப்பின் மூலம் PS ஐ அகற்றி விட்டு அதன் இடத்தில் வலதுசாரி குடியரசுக் கட்சி (LR) அல்லது நவ-பாசிச தேசிய முன்னணி (FN) போன்ற இன்னுமொரு பெரிய முதலாளித்துவக் கட்சியைப் பிரதியீடு செய்வதென்பது, வெகுஜனங்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை இன்னும் அதிகப்படுத்தவே செய்யும். தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரமாக அணிதிரட்டி, PS அரசாங்கத்தைக் கீழிறக்கி விட்டு ஒரு தொழிலாளர் அரசைக் கொண்டு அதனைப் பிரதியீடு செய்வதன் மூலம் மட்டுமே இந்த அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட முடியும். இதேபோன்று புரட்சிகரத் தாக்கங்களைக் கொண்ட போராட்டங்களுக்குள் நுழைந்து கொண்டிருக்கும் ஐரோப்பிய மற்றும் உலகத் தொழிலாளர்களே இந்தப் போராட்டத்தில் பிரெஞ்சுத் தொழிலாளர்களின் கூட்டாளிகளாக இருக்க முடியும்.
NPA போன்ற போலி-இடது கட்சிகளுடன் ஒரு நனவான மற்றும் தயவுதாட்சண்யமற்ற அரசியல் முறிவை மேற்கொள்வது முதலாகவும் முதன்மையானதாகவும் இதற்கு அவசியமானதாய் இருக்கிறது.
தொழிலாள வர்க்கத்தில் இந்த முன்னோக்கை முன்னெடுப்பதற்கும் வரவிருக்கும் போராட்டங்களில் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புரட்சிகரத் தலைமையை வழங்குவதற்கும் ஒரு புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்புவதே பிரான்சிலும் ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்தின் முன் வைக்கப்படுகின்ற மையமான பிரச்சினை ஆகும். பிரான்சில் PS மற்றும் NPA போன்ற அதன் சுற்றுவட்டத்தில் உள்ள கட்சிகளுக்கு காட்டிய சளைக்காத எதிர்ப்பு உள்ளிட, போலி-இடதுகளுக்கு எதிராய் ட்ரொட்ஸ்கிசத்திற்கான ICFI இன் போராட்டத்தின் முறிவில்லாத தொடர்ச்சியின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்திற்கான அரசியல் மாற்றாக ICFI தன்னையே முன்நிறுத்துகிறது.
பிரான்சின் நடப்பு அரசியல் நெருக்கடியானது, போலி-இடது கட்சிகள் குறித்த ICFI இன் விமர்சனங்களை சரியென நிரூபித்துள்ளது. சோசலிஸ்ட் கட்சி (PS) PCF க்கு ஜனநாயக சோசலிச மாற்றாக அல்லாமல், மாறாக அது நிதி மூலதனத்தின் ஒரு மூர்க்கமான கட்சியாக இருந்தது என்ற நிலையில், 1968 பொது வேலைநிறுத்தத்திற்கு கொஞ்சம் பிந்தி அக்கட்சி ஸ்தாபிக்கப்பட்டது முதலாகவே, அதனை பாதுகாப்பதற்கும், மார்க்சிசத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கும், தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகரத் தலைமை அபிவிருத்தி அடைவதை தடுப்பதற்குமாய் NPA பல தசாப்தங்களாக வேலை செய்திருந்தது என்பது முன்னெப்போதினும் இப்போது மிக வெளிப்படையானதாக இருக்கிறது.
ஹாலண்ட் தனது 2012 தேர்தல் பிரச்சாரத்தின் சமயத்தில் லண்டன் வங்கியாளர்களின் ஒரு கூட்டத்தில் பேசுகையில், அவரேயும் இதனை ஒப்புக் கொண்டார். அவர் பேசினார்: “இன்று பிரான்சில் கம்யூனிஸ்டுகள் என்று எவருமில்லை. இடதுகள் பொருளாதாரத்தை தாராளமயமாக்கியிருப்பதோடு சந்தைகளை நிதி மற்றும் தனியார்மயமாக்கலுக்காய் திறந்து விட்டுள்ளனர். அங்கு அஞ்சுவதற்கு ஏதுமில்லை.”
ஆயினும் வர்க்கப் போராட்டம் தடைகளைச் சகிப்பதில்லை. PSம் அதன் போலி-இடது கட்சிகளும் தொழிலாள வர்க்கத்தின் எதிரிகளாய் நிரூபணமாகியிருக்கின்றன. தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் முன்னோக்கையும் புரட்சிகரத் தலைமையையும் வழங்குவதற்கு - இது வரவிருக்கும் வர்க்கப் போராட்டங்களில் தீர்மானகரமானதாய் நிரூபணமாகும் - பிரான்சிலும் இப்போது ICFI இன் பிரிவுகள் இல்லாமல் இருக்கக் கூடிய மற்ற நாடுகளிலும் அப்பிரிவுகளை கட்டியெழுப்புவதே ICFI முகம் கொடுக்கின்ற ஒரு மையமான கடமையாக இருக்கிறது.