Print Version|Feedback
NATO orders four additional battalions to Russian border
ரஷ்ய எல்லையில் மேலதிகமாக நான்கு படைப்பிரிவுகளை நிறுத்த நேட்டோ உத்தரவிடுகிறது
By Thomas Gaist
14 June 2016
போலாந்து மற்றும் பால்டிக் அரசுகளுக்கு மறுநம்பிக்கை அளிப்பது என்ற பெயரில் வட அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பு (நேட்டோ) கிழக்கு ஐரோப்பாவிற்கு கூடுதலாக 4,000 துருப்புகளை அனுப்புகிறது. இதை அக்கூட்டணியின் பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் திங்களன்று உறுதிப்படுத்தினார். “பால்டிக் அரசுகள் மற்றும் போலாந்தில் நான்கு அதிவிரைவு பன்னாட்டு படைப்பிரிவுகளைச் சுழற்சி முறையில் அனுப்புவதற்கு உடன்படுவோம்,” என்று ஸ்டொல்டென்பேர்க் நேட்டோ அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.
அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் பிரிட்டன் ஒவ்வொன்றும் 1,000 படையினரை அனுப்பும். அதில் கனடா 1,000 சிப்பாய்கள் கொண்ட அதன் சொந்த படைப்பிரிவை அனுப்ப உறுதியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இரண்டாம் ஆண்டில் உள்ள ரஷ்ய-விரோத கட்டமைப்பின் போக்கில் நேட்டோ உயர் கட்டளையகம் எடுத்த மிகவும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் துருப்புகளை அனுப்பும் இந்த நடவடிக்கையும் ஒன்றாகும். முன்பில்லா வகையில் எவ்வித பின்விளைவுகளையும் பற்றி சிந்திக்காது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய உயரடுக்குகள் பரந்து விரிந்த யுரேஷிய பெருநிலம் எங்கிலும் போர் விதைகளைத் தூவி வருகின்றன.
புதிய துருப்புக்களை அனுப்பும் இந்த அறிவிப்பானது, அனகொண்டா 2016 நடவடிக்கைக்கு மத்தியில் வருகிறது. இரண்டாம் உலக போர் முடிந்த பின்னர் போலாந்தில் நடத்தப்படும் மிகப்பெரிய போர் ஒத்திகையான இதில் 30,000 க்கும் அதிகமான நேட்டோ துருப்புகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த 30,000 படையினரில் சுமார் 12,500 பேர் அமெரிக்கர்களாவர்.
கிழக்கு ஐரோப்பாவிற்கு “சுழற்சி முறையில் அனுப்புகிறோம்" என்ற திரைமறைவில், நேட்டோ ஒரு நிரந்தரமான இராணுவ படையை ஸ்தாபித்துள்ளது. உக்ரேனில் ரஷ்யா "தலையை நுழைப்பதற்கும்" மற்றும் நேட்டோவின் கிழக்கு அங்கத்துவ நாட்டு எல்லை ஓரங்களில் ரஷ்யா இராணுவத்தை கொண்டு ஆத்திரமூட்டி வருகிறது என்று கூறப்படுவதற்கும் ஒரு விடையிறுப்பாக மக்களின் முன்னால் காட்டப்படும் நேட்டோவினது இந்த தாக்குதல்முகப்பு படையின் நிஜமான நோக்கம், ரஷ்யாவின் மேற்கத்திய எல்லையை ஒட்டி ஒரு தரைப்படை தாக்குதலுக்கு தயாரிப்பு செய்வதாகும்.
கியேவ் இல் பெப்ரவரி 2014 ஆட்சிக் கவிழ்ப்பு சதி உடன் தொடங்கி, அமெரிக்க மேலாதிக்க ஏகாதிபத்திய கூட்டணி இடைவிடாது மாஸ்கோ உடன் மோதலைத் தூண்டிவிட்டுள்ளதுடன் மற்றும் ரஷ்ய கூட்டரசாங்கத்தை உடைத்து கைப்பற்றும் நோக்கில் கண்டம்-தழுவிய அளவில் ஒரு போருக்கு அஸ்திவாரங்களை அமைத்துள்ளது.
ரஷ்யாவின் எல்லை ஓரங்களில் மேற்கத்திய துருப்புகளை தொடர்ந்து பாரியளவில் குவிப்பது, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் செப்டம்பர் 2014 வாக்குறுதியை நிறைவேற்றுவதன் பாகமாக உள்ளது. பால்டிக் அரசுகளுக்கு அமெரிக்காவும் நேட்டோ சக்திகளும் "நிரந்தர" இராணுவ உதவிகளை வழங்கும் என்றவர் உறுதியளித்திருந்தார். சிறிய பால்டிக் நாடுகளில் ஒன்று மாஸ்கோவின் தாக்குதலின் கீழ் இருப்பதாக முறையிட்டால், உலகின் மிகவும் சக்தி வாய்ந்த இராணுவ கூட்டணியைக் கொண்டு ரஷ்யாவிற்கு எதிராக முற்றுமுதலான போர் நடத்துவதற்கு ஒபாமா நடைமுறையில் பொறுப்பேற்றுள்ளார்.
உலகின் இரண்டு மிகப்பெரிய அணுஆயுத சக்திகளுக்கு இடையே மோதலுக்கான சாத்தியக்கூறை உடனடியாக அதிகரிக்கக்கூடிய அதுபோன்றவொரு போர், ஐரோப்பாவில் மிகச் சிறிய மற்றும் குறைந்த மக்கள்தொகை கொண்ட, தீவிர வலது ரஷ்ய-விரோத வெறி கொண்ட அரசாங்கங்களால் ஆளப்படும் சில நாடுகளைப் பாதுகாப்பதற்காக என்ற வேடத்தில் தொடங்கப்படலாம்.
துருப்புகள் அனுப்பப்படுவதை பால்டிக் அரசாங்கங்கள் செயலூக்கத்துடன் ஊக்கப்படுத்தி வருவதுடன், 2014 க்குப் பின்னர் இருந்து கிழக்கு ஐரோப்பா எங்கிலும் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள டாங்கிகள், சிறுபீரங்கிகள் மற்றும் கனரக ஆயுதங்களுக்கும் மேலாக, இன்னும் நிறைய நேட்டோ இராணுவ தளவாடங்களுக்கு அழைப்புவிடுக்கின்றன. மேற்கத்திய கூட்டணியால் ஆதரிக்கப்பட்ட லித்துவேனியா, லாட்வியா மற்றும் எஸ்தோனியா ஆகியவை அவற்றினது நாட்டை யுத்த தயாரிப்பு நிலையில் வைத்திருக்கின்றன. அவை அவற்றின் ஆயுத படைகளை உச்சக்கட்ட எச்சரிக்கையில் வைத்திருப்பதுடன், ரஷ்யாவிற்கு எதிராக அணிதிரட்டும் அழைப்புவிட காத்திருக்கின்றன.
திங்களன்று லித்துவேனியா பாதுகாப்பு அதிகாரி ஜோஷாஸ் ஒலேகாஷ் இங்கிலாந்தின் டெய்லி எக்ஸ்பிரஸிற்குக் கூறுகையில், ரஷ்யா "எல்லையோரங்களில் ஒத்திகை நடத்தி, பின்னர் சில மணிநேரங்களில் படையெடுப்பாக மாற்றி விடக்கூடும்,” என்றார். "ஒட்டுமொத்த கூட்டணியின் நம்பகத்தன்மையும்" லித்துவேனியாவில் பணயத்தில் உள்ளது என்று லித்துவேனிய வெளியுறவுத்துறை அமைச்சர் லினாஸ் லிங்கேவிஷியஸ் தெரிவித்தார்.
எஸ்தோனியாவில் நேட்டோ துருப்புகளின் நிரந்தர பிரசன்னத்தைக் கோருவதற்கு முன்னதாக, எஸ்தோனியாவின் வான் எல்லையை நேட்டோ பாதுகாப்பதென்பது “முதலும் முக்கியமுமாக” கூட்டணியின் திட்டநிரலில் இருக்க வேண்டுமென எஸ்தோனிய இராணுவ தலைவர் தெரிவிக்கிறார். “எஸ்தோனியாவில் இருக்கும் இந்த படைகள், நேட்டோவுடன் சண்டைக்கு வராதீர்கள், என்ற ஒரு தெளிவான மற்றும் ஐயத்திற்கிடமற்ற செய்தியை எதிரிக்கு அனுப்புகிறது,” என்றவர் தெரிவித்தார்.
ஐரோப்பாவிற்கு எதிராக "ரஷ்யா வலிந்து சண்டைக்கு வருகிறது" என்ற குற்றச்சாட்டு, இன்றைய-கால ஏகாதிபத்தியத்தால் பயன்படுத்தப்படும் மத்திய பொய்களில் ஒன்றாகும். ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் உக்ரேனில் இருந்து கிரிமியா பிரிந்து ரஷ்ய கூட்டரசில் ஒருங்கிணைந்ததைக் கைப்பற்றி கொண்டு, நேட்டோ ஸ்தாபகம், புட்டின் அரசாங்கம் மத்திய ஐரோப்பா மீது படையெடுக்க பார்த்து வருகிறது என்பதால் அதற்கு எதிரான ஒரு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பதாக அதன் போர் தயாரிப்புகளை நியாயப்படுத்த முனைந்துள்ளது.
மேற்குடன் சமரச முயற்சிகளை மாற்றீடுகளாக வைத்துள்ள ரஷ்யா, அதன் இராணுவ போர் முரசு பேரிகைகளைக் கொண்டு போர் அபாயங்களைக் கூடுதலாக்குக்கின்ற போதினும், அது இன்றியமையாத விதத்தில் ஒரு தற்பாதுபாதுகாப்பு குணாம்சத்தை கொண்டுள்ளது.
திங்களன்று பெயர் வெளியிட விரும்பாத நேட்டோ ஆதார நபர்களை மேற்கோளிட்ட பிரிட்டிஷ் ஊடகங்கள், ரஷ்யா "வியன்னா உடன்படிக்கையை தந்திரமாக மீறி, ஐரோப்பாவின் வாசலில் உள்ள நுண்மையான இடங்களில் துருப்புகளின் எண்ணிக்கைகளை அதிகரித்து வருவதாக" அதை குற்றஞ்சாட்டின. ஆண்டுக்கு 3 பில்லியன் டாலர் அளவிற்கு இராணுவ செலவினங்களை ஊக்குவிக்கும் திட்டங்களை அறிவித்துள்ள நேட்டோ பொது செயலாளர் ஸ்டொல்டென்பேர்க், “நேட்டோ அதன் கூட்டாளிகளைப் பாதுகாக்க தயாராக இருக்கிறது என்பதற்கு இதுவொரு தெளிவான சமிக்ஞையை அனுப்பும்,” என்று அறிவித்தார்.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியம், பால்டிக் நாடுகளைப் பாதுகாக்க பொறுப்பேற்றுள்ளன ஏனென்றால் அது ரஷ்யாவின் பக்கவாட்டில் இரகசிய மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்குச் சாக்குபோக்குகளுடன் சேர்ந்து பெரும் நிலைப்பகுதிகளையும் வழங்குகின்றன.
வாஷிங்டன் மற்றும் சில ஐரோப்பிய தலைநகரங்களில், ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்குள் உள்ள சக்தி வாய்ந்த கூறுபாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக இன்னும் கூடுதலான ஆத்திரமூட்டல்கள் மற்றும் நிலைகுலைக்கும் நடவடிக்கைகளை வடிவமைக்க செயலூக்கத்துடன் சூழ்ச்சி செய்து வருகின்றன.
முன்னாள் சோவியத் குடியரசான ஜோர்ஜியாவை நேட்டோவிற்குள் இணைப்பது, அடுத்த மாதம் வார்சோவில் நடக்க உள்ள நேட்டோ உச்சி மாநாட்டில் ஒரு முக்கிய பிரச்சினையாக திட்டமிடப்பட்டுள்ளது. ரஷ்யாவும் ஜோர்ஜியாவின் மேற்கத்திய ஆதரவு அரசாங்கமும் 2008 இல் ஒரு சிறிய போரில் ஈடுபட்டிருந்தன, அந்நாடு அமெரிக்க-மேலாதிக்க இராணுவ கூட்டணியில் இணைவதை மாஸ்கோ கடுமையாக எதிர்க்கிறது.
ஜோர்ஜியாவை நேட்டோவில் இணைப்பதானது, காகசஸ் மற்றும் காஸ்பியன் கடல் படுகையில் ரஷ்யாவின் தெற்கு பக்கவாட்டிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் நேட்டோ பலத்தை எடுத்துக்காட்ட பெரிதும் உதவியாக அமையும். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதென்ற கடந்த வார அறிவிப்பானது, மத்திய ஆசியாவில் குறிப்பாக கஜகஸ்தானில் ரஷ்யாவின் நலன்களுக்கு எதிராக அதன் "மென்மையான அடிவயிற்றுப் பகுதியில்" தாக்குவதற்கு அந்நாட்டை [ஆப்கானிஸ்தானை] பயன்படுத்துவதற்கான தயாரிப்புகளுடன் பிணைந்துள்ளது.
கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவின் கட்டமைப்பானது, 1930 களுக்குப் பின்னர் ஐரோப்பாவில் கண்டிராத அளவிற்கு வெறித்தனமான இராணுவவாதத்தை உருவாக்கி வருகிறது. இவ்வார லித்துவேனியா போர் ஒத்திகைகளின் போது, ஜேர்மன் மற்றும் டேனிஷ் இராணுவங்கள் ரஷ்ய எல்லை ஓரத்தில் அணிவகுத்து ஒத்திகை பார்த்தன. டேனிஷ் தளபதி ஜேகொப் லார்சென் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், “இங்கே வாழ்பவர்கள் விடயத்தை வேறுவிதமாக பார்க்கின்றனர். மீண்டும் முழு போரை செய்வதற்கு நாம் பயில வேண்டியிருக்கிறது,” என்றார்.