Print Version|Feedback
The EU referendum and the murder of British MP Jo Cox
ஐரோப்பிய ஒன்றிய வெகுஜன வாக்கெடுப்பும், பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ கொக்ஸ் இன் படுகொலையும்
Julie Hyland
18 June 2016
பாட்லி மற்றும் ஸ்பென் தொகுதிக்கான (Batley and Spen) தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ கோக்ஸ் இன் படுகொலை, பிரிட்டனிலும் சர்வதேச அளவிலும் மில்லியன் கணக்கான மக்களை அதிர்ச்சிப்படுத்தி துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 41 வயதான இரண்டு குழந்தைகளின் அந்த தாய் அவரது தொகுதி ஆலோசனை கூட்டத்திற்கு வெளியே படுகொலை செய்யப்பட்டமை, ஒரு கால் நூற்றாண்டுக்கு அதிகமான காலத்தில் பிரிட்டனில் ஒரு நாடாளுமன்ற அங்கத்தவர் கொல்லப்பட்ட முதல் சம்பவமாகும். கொக்ஸ், வேட்டையாடும் கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டு, மூன்று முறை துப்பாக்கியாலும் சுடப்பட்டிருந்தார்.
இந்த கொடூர நடவடிக்கை மீதான சாதாரண மக்களின் மனக்குமுறலுக்கும், அரசியல் ஸ்தாபகம் மற்றும் ஊடகங்களின் பாசாங்குத்தனத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை எடுத்துக்காட்ட வேண்டும். இத்துயரம் ஏற்பட்டதற்குரிய கேடுகெட்ட அரசியல் சூழலை உருவாக்குவதில் அரசியல் ஸ்தாபகமும் மற்றும் ஊடகங்களும் உடந்தையாய் இருந்ததை மூடிமறைப்பதே, இக்கொடூரம் குறித்து அவை முடுக்கி விடப்பட்டுள்ள பொய்மைகளின் நோக்கமாக உள்ளது.
கொக்ஸை படுகொலை செய்தவர் 52 வயதான ரொம்மி மையர் (Tommy Mair) என்று கூறப்படுகின்றது. அமைதியாக "தனித்திருப்பவராக" கூறப்படும் இந்த குற்றவாளி ஒரு முன்னாள் மனநோயாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார், ஆனால் அவரது உளவியல்ரீதியிலான பிரச்சினைகள் தெளிவாக அதீத வலதுசாரி மற்றும் பேரினவாத கண்ணோட்டங்களுடன் தொடர்புபடுகிறது.
மையர் அத்தாக்குதலின் போது பலமுறை "பிரிட்டன் முதலில்" என்று கத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கோஷம் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனின் அங்கத்துவம் மீதான இவ்வார வாக்கெடுப்பில் வெளியேறும் முகாமுக்கான ஆதரவைச் சுட்டிக்காட்டுகிறது. கொக்ஸ் ஜூலை 23 வெகுஜன வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே இருக்கலாம் வாக்குகளுக்கு ஒரு முக்கிய ஆதரவாளர் என்பது மட்டுமல்ல. ஓர் ஆக்ஸ்ஃபாம் அங்கத்தவரான அவர் இங்கிலாந்திற்குள் சிரிய அகதிகளை ஏற்றுக் கொள்வதைப் பகிரங்கமாக ஆதரிக்கும் பிரச்சாரத்தையும் செய்திருந்தார். ஜனவரியில் அப்பெண்மணி, அவரது தொகுதிக்கு அருகாமையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான வாக்குகளுக்கு ஆதரவாக ஓர் ஆர்ப்பாட்டம் நடத்திய நவ-பாசிசவாத மற்றும் புலம்பெயர்ந்தோர் விரோத அமைப்பான பிரிட்டன் முதலில் என்பதை ட்வீட்டர் வழியாக, கண்டித்திருந்தார்.
மையரின் வீட்டிலிருந்து பொலிஸ் நாஜி சின்னங்கள் மற்றும் தீவிர வலது புத்தகங்களை நேற்று கைப்பற்றினர், அதேவேளையில் தாக்குதலை நடத்த கொக்ஸிற்காக குற்றவாளி திட்டமிட்டு காத்திருந்ததாக தாங்கள் நம்புவதாக விசாரணைக்கு நெருக்கமான ஆதாரங்கள் தெரிவித்தன.
இழிவார்ந்த இனவாத கட்டுரைகளான Turner Diaries இன் ஆசிரியர் வில்லியம் பியர்ஸ் நிறுவிய, அமெரிக்காவை மையமாக கொண்ட நவ-நாஜி குழுவான தேசிய கூட்டணியின் (National Alliance) நூல்களை மையர் வாங்கியிருந்ததாக தெரிய வருகிறது. வீட்டிலேயே வெடிபொருட்கள், துப்பாக்கிகள் செய்வதற்கான வழிகாட்டிகள் மற்றும் ஹிட்லரினது நாஜி கட்சியின் அங்கத்தவர்களுக்கான ஒரு கையேடு நான் போராடுகின்றேன் (Ich Kampfe) இன் ஒரு நகல் ஆகியவையும் இதில் உள்ளடங்கும். அவர் தென்னாபிரிக்க வெள்ளையின மேலாதிக்க S.A. Patriot க்கும் சந்தா செலுத்தி இருந்தார்.
வெகுஜன வாக்கெடுப்புக்கு முன்னதாக, குறிப்பாக வெளியேறும் பிரச்சாரத்தால் உண்டாக்கப்பட்டு இருந்த அருவருப்பான தேசியவாத மற்றும் வெளிநாட்டவர் விரோத அலைக்கு இடையே கொக்ஸ் இன் படுகொலை நடந்துள்ளது. கோக்ஸ் மறைவிற்கு ஒருசில மணி நேரங்களுக்கு முன்னர், வெளியேறும் பிரச்சாரத்திற்கான செய்தி தொடர்பாளரும் தீவிர-வலது புலம்பெயர்வோர் விரோத இங்கிலாந்து சுதந்திர கட்சியின் (UKIP) தலைவருமான நைஜல் ஃபாராஜ், “உடையும் புள்ளி. ஐரோப்பிய ஒன்றியம் நம் அனைவரையும் தோற்கடித்துள்ளது,” என்ற கோஷத்துடன், அகதிகளின் ஒரு நீண்ட வரிசையை சித்தரித்து, வெளியேறும் வாக்குகளுக்காக சமீபத்திய ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருந்தார்.
அதன் சொந்த புலம்பெயர்ந்தோர்-விரோத வாய்சவாடால்களை அதிகரித்ததன் மூலமாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரச்சாரம் பெரும்பான்மை வாக்குகள் பெற்றிருப்பதைக் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்ற நிலையில், பழமைவாத பிரதம மந்திரி டேவிட் கேமரூன் மற்றும் தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின் தலைமையிலான ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தங்கியிருக்கும் உத்தியோகபூர்வ பிரச்சாரம், அதன் பங்கிற்கு, சமீபத்திய நாட்களில் அதன் இடத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு முனைந்துள்ளது. அலென் ஜோன்சன், எட் பால்ஸ் மற்றும் டோம் வாட்சன் போன்ற தொழிற் கட்சியின் முன்னணி அங்கத்தவர்கள், படையரண் ஐரோப்பாவை புலம்பெயர்வை நிறுத்துவதற்கு சிறந்த வகைமுறையாக வலியுறுத்துவதையும் மற்றும் சுதந்திர நகர்வின் உரிமை மீதான கட்டுப்பாட்டுகளுக்கு அழைப்புவிடுப்பதையும் பரப்பத் தொடங்கி உள்ளனர்.
அனைத்திற்கும் மேலாக எரிச்சலூட்டுவதாக இருப்பது, கொக்ஸ் இன் படுகொலைக்கு அரசியல் மற்றும ஊடக ஸ்தாபகங்கள் காட்டும் விடையிறுப்பாகும். மீண்டும் நாடாளுமன்றம் கூடும் திங்கட்கிழமை வரையில், அவை கொக்ஸ் இற்கு இரங்கல் தெரிவிப்பதற்காக என்று வெகுஜன வாக்கெடுப்பு மீதான சகல பிரச்சாரங்களையும் மற்றும் பொது விவாதங்களையும் நிறுத்தி உள்ளன. வெள்ளியன்று கொக்ஸ் இன் பிர்ஸ்டால் (Birstall) தொகுதியில் கோர்பின் கேமரூன் உடன் தோன்றினார், அங்கே அவர்கள் "சகிப்புத்தன்மை" மற்றும் "ஜனநாயகம்" குறித்த வெற்றுரைகளை வழங்கினர்.
பழமைவாதிகள் மற்றும் தாராளவாத ஜனநாயகவாதிகளும் ஐக்கியத்தை காட்டுவதற்காக மற்றும் வெகுஜன வாக்கெடுப்பு மீதான பிளவுகளைத் குறைப்பதற்காக என்று கருதக்கூடியவாறு, கொக்ஸ் இன் முன்னாள் ஆசனத்திற்கான ஒரு எதிர்கால இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பதில் உடன்பட்டனர்.
அந்த படுகொலைக்கு முடுக்கி விடப்பட்ட உத்தியோகபூர்வ விடையிறுப்பு, அனைத்திற்கும் மேலாக, பழமைவாத கட்சியின் ஒரு பெரும் பிரிவு மற்றும் முர்டோக் பத்திரிகை உட்பட வெளியேறுவதை ஆதரிக்கும் முகாமில் உள்ள தீவிர-வலது சக்திகளுக்கும் இந்த குற்றத்திற்கும் இடையிலான தொடர்பை மறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. உத்தியோகபூர்வ அரசியலை இன்னும் வலதிற்கு நகர்த்துவதற்காக, கேமரூன், UKIP இன் புலம்பெயர்வோர்-விரோத வெளிநாட்டவர் விரோத மனோபாவத்தைப் பயன்படுத்தும் அதேவேளையில், இந்த வெகுஜன வாக்கெடுப்பே கூட, ஃபாராஜிடம் அவரது கட்சி ஆதரவை இழப்பதை தடுப்பதற்கான அவரது தந்திரத்தின் ஒரு விளைபொருளாக உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இங்கிலாந்து அங்கத்துவத்துவத்தை தொடர்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திலேயே இருக்கலாம் எனும் முகாமை ஆதரிப்பதும் கூட, இங்கிலாந்திற்குள் ஐரோப்பிய ஒன்றிய புலம்பெயர்வோர் உரிமைகளைத் தடுக்க ஐரோப்பிய தலைவர்களுடன் கேமரூன் செய்து கொண்ட ஓர் அருவருக்கத்தக்க உடன்படிக்கை மீது அமைந்ததாகும்.
வாக்கெடுப்பின் விளைவு என்னவாக இருந்தாலும் சரி, இறுதி விளைவு, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் சமூக நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தவும் மற்றும் குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராக போர் முனைவை அதிகரிப்பதற்கும், ஆளும் உயரடுக்கு உள்ளே உள்ள மிகவும் வலதுசாரி கன்னைகளைப் பலப்படுத்துவதாக இருக்கும்.
தொழிலாள வர்க்கம் அடிப்படையான வர்க்க பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. பெயரவிலான "இடது" அத்துடன் வலது என ஸ்தாபக கட்சிகளால் ஊக்குவிக்கப்பட்ட தீவிர-வலதின், பேரினவாத மற்றும் இனவாத சக்திகளின் வளர்ச்சி, முற்றிலுமாக ஒரு பிரிட்டன் நிகழ்வு கிடையாது. ஐரோப்பா எங்கிலும் மற்றும் உலகெங்கிலும், ஆளும் உயரடுக்குகள் ஒரு புதிய உலக போருக்கு வழி வழிவகுக்கும் விதத்தில், ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு விடையிறுப்பாக தேசியவாத மற்றும் பாசிசவாத சக்திகளைத் தூண்டிவிட்டு வருகின்றன.
ஆஸ்திரியாவின் சுதந்திர கட்சி, பிரான்சின் தேசிய முன்னணி மற்றும் ஜேர்மனியின் AfD இல் இருந்து, அமெரிக்காவில் டோனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதி வேட்பாளராவது மற்றும் பிலிப்பைன்ஸில் Rodrigo Duterte இன் சர்வாதிகார ஆட்சி வரையில், முதலாளித்துவ வர்க்கம் பொலிஸ் அரசு முறைகளுக்குத் திரும்புவதன் மூலமாக மற்றும் மக்களின் அதிருப்தியைப் பிற்போக்கான வழிகளில் திருப்பிவிட முனைவதன் மூலமாக, முதலாளித்துவ-எதிர்ப்புணர்வின் வளர்ச்சிக்கும் மற்றும் தொழிலாள வர்க்க எதிர்ப்புக்கும் விடையிறுத்து வருகின்றன.
ஜோ கொக்ஸ் இன் படுகொலை பிரிட்டனில் ஐரோப்பிய ஒன்றிய வெகுஜன வாக்கெடுப்பை செயலூக்கத்துடன் புறக்கணிப்பதற்கான சோசலிச சமத்துவக் கட்சியினது பிரச்சாரத்தின் அதிமுக்கிய முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியுள்ளது. இது மட்டுமே, இந்த இரண்டு உத்தியோகப்பூர்வ முகாம்களின் பிற்போக்குத்தனமான தேசியவாத அரசியலுக்கு ஒரே நிஜமான மற்றும் முற்போக்கான மாற்றீடாகும். இது மட்டுமே, ஐரோப்பிய ஒன்றியமாக இருக்கும் வங்கியாளர்களது சிக்கன திட்டங்கள் மற்றும் போருக்கான சர்வாதிகாரத்திற்கு எதிராக, பிரிட்டனிலும் மற்றும் ஐரோப்பா எங்கிலும் உள்ள பாரிய பெரும்பான்மை மக்களான தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சுயாதீனமான மூலோபாயத்தை வழங்குகிறது.
இது தேசியவாதம், பேரினவாதம் மற்றும் இனவாதத்தின் சகல வடிவங்களையும் நிராகரிப்பதன் மூலமாக மற்றும் எல்லா நாடுகளது உழைக்கும் மக்களின் பொதுவான நலன்களைப் பாதுகாப்பதில் சோசலிசத்திற்கான புரட்சிகர போராட்டம் எனும் ஒரே நம்பகமான அடித்தளத்தின் மீது அவர்களை ஐக்கியப்படுத்தி போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாக அதை செய்கிறது.