Print Version|Feedback
ISIS-linked operative murders police commander and his wife near Paris
ISIS தொடர்பு பணியாள் பாரிஸ் அருகே போலிஸ் தளபதியையும் அவரது மனைவியையும் படுகொலை செய்தார்
By Alex Lantier
15 June 2016
படுபயங்கர அதிர்ச்சியூட்டும் ஒரு குற்றத்தில், வெளிப்படையாய் ISIS உடன் தொடர்புடையவராய் அறியப்பட்ட ஒரு மனிதர், பாரிஸின் வடமேற்கில் 60 கிமீ தூரத்தில் உள்ள மனியோன்வில் (Magnanville) நகரத்தில் ஒரு போலிஸ் கட்டளை தளபதியையும், ஒரு போலிஸ் அலுவலகத்தில் நிர்வாகப் பணி செய்யும் அவரது மனைவியையும் படுகொலை செய்தார்.
Les Mureaux என்னுமிடத்தில் நீதித்துறை போலிஸ் அதிகாரியாக இருக்கும் 42 வயது மனிதராக அடையாளம் காணப்பட்டஜோன்-பாட்டீஸ்ட் சல்வான் (Jean-Baptiste Salvaing) ஐ கொலையாளி திங்களன்று மாலை அவரது வீட்டிற்கு வெளியே பலமுறை கத்தியால் குத்தி கொலைசெய்தார். அதன்பின் சல்வான் இன் 36 வயது மனைவி ஜெஸிக்கா ஷினைடெர் (Jessica Schneider) ஐயும், அவர்களது மூன்று வயது குழந்தையையும் அவர்களது வீட்டில் பிணயக்கைதிகளாக வைத்துக் கொண்டு, RAID (Research, Assistance, Intervention, Deterrence) போலிஸ் சிறப்புப் பிரிவுடன் ஒரு சண்டையைத் தொடங்கினார்.
அதன்பின் தன்னிடம் சிக்கியிருப்பவர்களின் படங்களை முகநூலில் பதிவிட்ட கொலையாளி போலிஸ்காரர்களையும், சிறை வார்டன்களையும், செய்தியாளர்களையும் மற்றும் ராப் இசைக்கலைஞர்களையும் கொல்ல வேண்டும் என்றார். யூரோ 2016 கால்பந்து கோப்பை மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்த வேண்டும் என்ற அவர் “யூரோ கோப்பை ஒரு சுடுகாடாக மாறும்” என்றார்.
பாரிஸின் விசாரணை அதிகாரி பிரான்சுவா மொலான் பின்னர் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதாவது: “கொலையாளி முஸ்லீம் மதத்தைப் பயின்று வந்தார் என்றும் மூன்று வாரங்களுக்கு முன்பாக இஸ்லாமிக் ஸ்டேட் தளபதியான அபு பக்கர் அல்-பக்தாதியிடம் விசுவாசத்திற்கு சத்தியம் செய்திருக்கிறார் என்றும் RAID உடனான அவரது பேச்சுவார்த்தைகளில் கூறியிருந்தார். ’நம்பிக்கையில்லாதவர்களை, அவர்களது வீட்டில் அவர்களது குடும்பங்களுடன் கொல்வதற்கு’ அத்தலைவர் விடுத்திருந்த ஒரு அழைப்புக்கு தான் பதில் கூறியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.”
RAID பிரிவு, செவ்வாய் நள்ளிரவில் அந்த வீட்டின் மீது தாக்குதல் நடத்தி, கொலையாளியைக் கொன்றது. ஷினைடெர் இன் உயிரற்ற உடலும் அத்தம்பதிகளின் குழந்தையும் கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தையின் கண்ணுக்கு முன்பாக ஷினைடெர் இன் தொண்டை பகுதி பிளக்கப்பட்டிருந்தது என்று கூறிய அதிகாரிகள், குழந்தை “உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டிருக்கவில்லை என்றாலும் மனஅதிர்ச்சி கண்டிருந்தது” என்று வருணித்தனர். அனாதையாகி விட்ட அக்குழந்தை இப்போது மனநல சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
கொல்லப்பட்ட கொலையாளியின் பெயர் லாறுஸ்ஸி அபல்லா (Larossi Abballa) என்பதை பிரான்சின் உளவுத் துறை அதிகாரிகளும் மற்றும் போலிசாரும் நேற்று காலை அடையாளம் கண்டனர். சென்ற ஆண்டில் நடந்த சார்லி ஹெப்டோ தாக்குதல், நவம்பர் 13 கூட்டத் துப்பாக்கிச் சூடு, மற்றும் சென்ற ஆண்டின் மார்ச் 22 இல் நடந்த புரூசல்ஸ் குண்டுவீச்சு ஆகிய சம்பவங்களில் நடந்ததைப் போலவே, அபல்லாவும் உளவுத் துறையினரால் நன்கறியப்பட்ட மனிதராகவே இருந்தார். தீவிரமான போலிஸ் கண்காணிப்பின் கீழ் இருந்து வந்திருந்த நிலையிலும் கூட, அவர் ISIS உடன் எப்படியோ உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும், பிடிபடும் பயமின்றி தனது தாக்குதலைத் திட்டமிடவும் முடிந்திருந்தது என்பதற்கு விளக்கமேதுமில்லை.
போலிஸ் பதிவேட்டில் ஏராளமான சிறுகுற்றங்களை புரிந்த 25 வயதான மனிதராக இருந்த சமயத்தில் 2011 இல் கைது செய்யப்பட்ட அவர் இஸ்லாமிய பயங்கரவாத வலைப்பின்னலில் பங்குபெற்றதற்காக 2013 இல் குற்றம் உறுதிசெய்யப்பட்டார். “பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தயாரிப்பு செய்யும் நோக்கத்துடனான குற்றவியல் தொடர்புகளுக்காக” மூன்று வருட சிறைத் தண்டனை பெற்று, அதில் கடைசி ஆறுமாத தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது. பாக்கிஸ்தானுக்கும் பிரான்சுக்கும் இடையில் இயங்குகின்ற இஸ்லாமிய வலைப்பின்னல்களில் அவர் வெளிப்படையாக சம்பந்தம் கொண்டிருந்தார், அவருடன் சேர்த்து ஏழு பேருக்கு இதுதொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
நாட்டின் உளவு முகமைகள் அபல்லாவுக்கு ஒரு ”S” கோப்பு ஒன்றினை திறந்திருந்தன, அவரது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டது, சிரியப் போரில் சண்டையிடச் சென்ற ஒரு மனிதருடன் கொண்டிருந்த தொடர்புகளுக்காக நீதித்துறை காவலர்களால் பின்தொடரப்பட்டவராகவும் இருந்தார். ஆயினும் மேலதிக நடவடிக்கைக்கு உரிய “போதுமான மற்றும் ஸ்தூலமான அச்சுறுத்தலை முன்நிறுத்தியவராக” அபல்லா தென்பட்டிருக்கவில்லை என்பதாய் Le Parisien இடம் பேசிய உளவுத் துறை அதிகாரிகள் இப்போது கூறுகின்றனர்.
அபல்லா ஒரு ISIS போராளி என்று அடையாளம் கண்டு நேற்றைய கொலைக்கு ISIS பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. ISIS செய்தி நிறுவனமான Amaq இன் வலைத் தளத்தில் பதிவிடப்பட்டிருந்த ஒரு கட்டுரையின் மொழிபெயர்ப்பாக அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் உளவுக் குழுவான SITE வழங்கிய ஒன்றில் அறிவிக்கப்பட்டிருந்தது: “இஸ்லாமிக் ஸ்டேட்டின் போராளி Les Mureaux நகரில் காவல் நிலையத்தின் துணைத் தலைவரையும் அவரது மனைவியையும் கூர்மையான ஆயுதங்களால் கொலை செய்தார்.”
நேற்று காலை 7 மணியளவில், எலிசே அரண்மணையில் நடந்த நெருக்கடிகால கூட்டத்திற்கு செல்கையில், ஹாலண்ட், “இந்த படுமோசமான நிகழ்வின்” மீது “முழு வெளிச்சமும் பாய்ச்சப்படும்” என்று உறுதியளித்தார்.
நவ-பாசிச தேசிய முன்னணியின் தலைவரான மரின் லு பென்னின் ஒரு நெருங்கிய சகாவான கில்பேர் கொலார் (Gilbert Collard), தாக்குதல்கள் கட்டவிழ்ந்து செல்வதை அனுமதிப்பதற்காக PS அரசாங்கத்தை கண்டனம் செய்தார். “இஸ்லாமிய பயங்கரவாதம் இப்போது நமது வீடுகளுக்குள்ளும் நுழைந்து விட்டது: திறனற்ற கோழைகளின் அரசாங்கம்” என்று அவர் ட்விட்டரில் எழுதினார்.
அதற்கு சற்று பின்னர் உள்துறை அமைச்சரான பேர்னார்ட் கஸ்னேவ் (Bernard Cazeneuve) எதிர்வினையாற்றினார். ஹாலண்டுடன் சந்திப்புக்குப் பின்னர் வெளியில் வந்த அவர், இந்தக் கொலை ஒரு “இழிவான பயங்கரவாத நடவடிக்கை” என்று கண்டனம் செய்தார். “அரசாங்கம் முழுவதுமாய் அணிதிரண்டிருக்கிறது” என்று வலியுறுத்திய கஸ்னேவ் ”கொலை செய்யப்பட்ட இரண்டு போலிஸ் அதிகாரிகளின் சக போலிஸாரை உடனடியாக” சந்தித்துப் பேசவிருப்பதை சுட்டிக்காட்டினார்.
இரண்டு போலிஸ்காரர்கள் கொடூரமாய் கொலை செய்யப்பட்டிருப்பதானது உத்தியோகபூர்வ பிரெஞ்சு வட்டங்களில் நிலவுகின்ற வலது-சாரி சூழலை மேலும் தீவிரப்படுத்துவதற்கே சேவை செய்திருக்கிறது. போலிசுக்கு —அவர்கள் இப்போது மக்கள் வெறுப்பை சம்பாதித்திருப்பதும் பிற்போக்குத்தனமானதுமான அரசாங்கத்தின் தொழிலாளர் சட்டத்திற்கு எதிராய் போராடுகின்ற பாரிய தொழிலாளர்களுக்கு எதிரான கடுமையான ஒடுக்குமுறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்— பின்னால் அணிவகுக்கும் “தேசிய ஐக்கியத்திற்கு” பிரதமர் மானுவல் வால்ஸ் அழைப்பு விடுத்திருக்கிறார்.
முன்னாள் ஜனாதிபதி நிக்காலோ சார்க்கோசியின் வலது-சாரி குடியரசு (Les Republicans - LR) கட்சியின் பல உறுப்பினர்களும், உளவுத் துறையினர் "S" கோப்புகளை திறந்து வைத்திருக்கக் கூடிய ஒவ்வொருவரையுமே சிறையில் அடைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். உளவுத் துறை விரும்பினால் எவர் மீதும் "S" கோப்புகளை திறக்க முடியும் என்ற நிலையில், அது சிறையிலடைக்க விரும்பும் எவர் மீதும் தன்னிச்சையாக "S" கோப்பினை திறக்க வழிபிறக்கும் என்பதால், பிரான்சை ஒரு போலிஸ் அரசாக மாற்றுவது என்பதே இதன் விளைபயனாக அமையும்.
விசாரணை ஆரம்ப நிலையில் தான் உள்ளது, தாக்குதல் திட்டமிடப்பட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட சூழல் குறித்த இன்னும் முக்கியமான உண்மைகள் சந்தேகமில்லாமல் வெளிச்சத்திற்கு வரவிருக்கின்றன. ஆயினும், சிரியாவில் - இங்கிருந்து தான் ISIS தோன்றியது - நேட்டோ சக்திகள் பின்பற்றிய ஆட்சி மாற்றத்திற்கான பினாமிப் போரில் தான் இந்தக் குற்றத்தின் வேர் காலூன்றியிருந்தது என்பது இதுவரை கிடைத்திருக்கக் கூடிய ஆதாரங்களில் ஏற்கனவே தெளிவாகியிருக்கிறது.
சிரியப் போருக்கு போராளிகளை எடுப்பதில் ஈடுபடுகின்ற இஸ்லாமிய வலைப்பின்னல்கள் ஐரோப்பிய உளவு முகமைகளிடம் இருந்து பெறக் கூடிய ஓசையற்ற ஆதரவு, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் நடந்த முந்தைய பயங்கரவாதத் தாக்குதல்களில் போலவே, இதிலும் கொலையாளி போலிசின் கண்களுக்குக் கீழேயே தாக்குதலுக்கு தயாரிப்பு செய்ய முடிந்திருந்தது ஒரு முக்கியமான காரணியாக இருந்திருக்கக் கூடும்.
இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக புரூசெல்ஸில் இந்த வசந்த காலத்தில் நடந்த தாக்குதலைக் கூறலாம், அதில் பெல்ஜிய உளவு அதிகாரிகள், தாக்குதல் நடத்தவிருப்பவர்களின் அடையாளம் மற்றும் இலக்குகள் குறித்த விரிவான எச்சரிக்கைகளைப் பெற்றிருந்தனர். இருந்தபோதிலும், தாக்குதல்தாரர்கள் கைது செய்யப்படவில்லை, இலக்குகளாகக் கூறப்பட்ட இடங்களில் மார்ச் 22 தாக்குதல்களுக்கு முன்னர் பாதுகாப்பும் அதிகப்படுத்தப்படவில்லை - இது மரணகரமான பின்விளைவுகளைக் கொண்ட ஒரு முடிவாக நிரூபணமானது.
தனிப்பட்ட முறையில் சல்வானும் ஷினைடெரும் நற்பண்புள்ளவர்கள் என பெயரெடுத்துள்ளனர் —இருவரும் முறையே அர்ப்பணிப்பான ஊழியராகவும், நகராட்சி பள்ளிகளில் நெருக்கமாக பங்குபெற்ற அர்ப்பணிப்பான தாயாகவும் சகாக்களால் பாராட்டப்படுகின்றனர்— என்றபோதும், ஒரு சட்டம்-ஒழுங்கு சூழலைக் கிளறி விடுவதற்கு இந்தக் கொலைகளை சுரண்டிக் கொள்ள உயர் பிரெஞ்சு அதிகாரிகள் செய்யும் முயற்சிகள் ஒரு கபடநாடகமாக உருப்பெருகின்றன.
சிரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் அதனைத் தாண்டி நடத்திய போர்களின் மூலமாக, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட வெளிச்சூழலை உருவாக்கியதற்கான தீவிரப் பொறுப்பை பிரான்சும் மற்ற நேட்டோ சக்திகளுமே சுமந்து நிற்கின்றன. மேலும் பாரிஸ், புரூசெல்ஸ் மற்றும் இப்போது மனியோன்வில் இல் நடந்திருக்கும் தாக்குதல்கள் —இவற்றில் ISIS போராளிகள் பிரான்சுக்கும் பெல்ஜியத்திற்கும் கொண்டுவந்திருக்கக் கூடிய வழிமுறைகள் 2011 இல் சிரியாவில் நேட்டோ போர் தொடுத்தது முதலாக அங்கு அவர்கள் பயன்படுத்தி வந்திருக்கக் கூடியவை ஆகும்— இப்போரின் குற்றவியல் தன்மையை நினைவுகூருபவையாக இருக்கின்றன.
திங்களன்றான தாக்குதலுக்குப் பின்னர் மனியோன்வில் இலும் பிரான்சின் அத்தனை பகுதிகளிலும் படிந்திருக்கக் கூடிய அதிர்ச்சியும் பீதியும் சிரியா மீதான நேட்டோ போரின் மிகப்பெரும் பாதிப்பின் தன்மை குறித்த ஒரு சிந்திக்கக்கூடிய சித்திரத்தை வழங்குகின்றன: அங்கு நேட்டோ-ஆதரவுடனான இஸ்லாமியவாத “கிளர்ச்சியாளர்கள்” நடத்திய நூற்றுக்கணக்கான குண்டுவீச்சுகளும் துப்பாக்கிச்சூடுகளும் தூண்டியதொரு போரில் 250,000 பேர் தங்களது உயிரை இழந்திருக்கின்றனர், 10 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்களது வீடுகளை விட்டுவிட்டு தப்பியோடத் தள்ளப்பட்டனர்.