Print Version|Feedback
Mass protests follow failed attempt to ban opposition to French labor law
பிரான்சில் தொழிலாளர் சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தடைசெய்வதற்கான முயற்சி தோல்வி கண்டதை அடுத்து பாரிய ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன
By Alex Lantier
24 June 2016
பாரிஸில் ஆர்ப்பாட்டத்தை தடை செய்வதற்கு PS (தோல்வி கண்ட) முயற்சி மேற்கொண்டது தொடர்பாக கோபம் வெடித்தெழுந்ததற்கு மத்தியில், நேற்று சோசலிஸ்ட் கட்சியின் (PS) பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்டத்தை எதிர்த்து பிரான்ஸ் எங்கிலும் நூறாயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். தொழிலாளர் சட்டத்தின் ஷரத்துகளின் கீழ் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட ஒப்பந்தங்களில் பாரிய விட்டுக்கொடுப்புகளை திணிப்பதற்கு பெருநிறுவனங்கள் செய்த ஆரம்பகட்ட முயற்சிகள் உள்ளிட தொழிலாளர் சட்டத்திற்கு எதிராகவும், ஜனநாயக உரிமைகள் மீதான PS இன் தாக்குதல்கள் அதிகரித்துச் செல்வதற்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவதற்கு தீர்மானத்துடன் இருப்பதை ஆர்ப்பாட்டங்களில் பங்குபெற்ற தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.
பாரிஸில் உள்துறை அமைச்சரான பேர்னார்ட் கஸ்னேவ் (Bernard Cazeneuve) அறிவுறுத்தியதின் படி பாஸ்டிய் சதுக்கத்தை சுற்றிய சிறிய வட்டப்பாதையில் சுமார் 70,000 பேர் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியின் ஒட்டுமொத்த நீளமே 1,600 மீட்டர்கள் தான் என்றபோதிலும், ஆர்ப்பாட்டப் பாதுகாப்பில் கனரக ஆயுதமேந்திய சுமார் 2,100 கலகத் தடுப்புப் போலிசாரை அரசாங்கம் நிறுத்தியிருந்தது. அவர்கள் சதுக்கத்தை சுற்றிவளைத்திருந்ததோடு, பங்குபெற்ற ஒவ்வொருவரையும் சோதனை செய்ததுடன், தண்ணீர் பீரங்கிகளையும் ரப்பர் புல்லட்டுகளை சுடும் துப்பாக்கிகளை ஏந்திய வீரர்களையும் பணியில் அமர்த்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்து கைக்குட்டைகள், முகமறைப்புகள், தலைக்கவசங்கள், பாட்டில்கள், ஆகியவற்றுடன் கண்ணீர் புகையில் இருந்து அல்லது லத்தி அடியில் தப்பிப்பதற்காகவோ அல்லது தங்களது முகம் தெரியாமலிருக்கவோ அவர்கள் எதையெல்லாம் பயன்படுத்தக் கூடும் என்று கருதப்பட்டதோ அவை அத்தனையையும் போலிஸ் பறிமுதல் செய்தது. பாரிஸ் பேரணியின் சமயத்தில் மோதல்கள் ஏதும் நிகழவில்லை என்றாலும், பெரும்பாலும் போலிசுடன் மோதல்களில் பயன்படுத்தக் கூடிய ஆயுதங்களை வைத்திருந்ததாகக் கூறி 95 பேர் போலிசால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பாரிஸ் பங்குச் சந்தை, Gare de Lyon ரயில் நிலையம் ஆகிய இடங்களிலும் மற்றும் குடியரசுச் சதுக்கம் அருகிலும் சிறிய, அறிவிக்கப்படாத ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
பிரான்சின் அநேக முக்கிய நகரங்களில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மார்சையில், பேரணியில் 45,000 பேர் பங்கேற்றதாக தெரிவித்த தொழிற்சங்க ஆதாரங்கள், பாரிஸ் ஆர்ப்பாட்டத்தை தடை செய்வதற்கு PS விடுத்த அச்சுறுத்தல் இந்த எண்ணிக்கை அதிகரிப்பில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்ததாகக் கூறின. அடையாளம்தெரியாத சில கலகக்காரர்களது ஆங்காங்கான செயல்களுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பழிபோட PS செய்த முயற்சிகளையும் அவை நிராகரித்தன.
நோர்மோண்டி (Normandy) இல் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் துறைமுகமான Le Havre இல், Rouen இல், மற்றும் Caen இல் ஊர்வலம் நடத்தினர். லியோன் இல் 8,000 பேர் ஊர்வலம் சென்றனர்.
Rennes இல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிசுக்கும் இடையில் வன்முறையான மோதல்கள் நடைபெற்றன. கைதுசெய்தல், சோதனையிடுதல், பத்திரிகையாளர் அடையாள அட்டை காண்பித்த பின்னரும் கூட பத்திரிகையாளர்களின் அடையாளத்தை சட்டவிரோதமான முறையில் சரிபார்த்தல் ஆகிய செயல்களுக்காக போலிஸ் prefect Christophe Mirmand போலிசை அசாதாரணமான வகையில் பகிரங்கமாய் கண்டித்தார். பத்திரிகையாளர்களை முறையாக நடத்தும் விடயத்தில் “வழிகாட்டுதல்களை பொதுவாய் பாதுகாக்க உள்ளூர் இயக்குநரகத்துக்கு நான் நினைவூட்டியிருக்கிறேன்” என்று Mirmand ஊடகங்களிடம் தெரிவித்தார்.
Limoges இல் நூற்றுக்கணக்கானோர் பேரணியில் பங்குபெற்றிருந்தனர். 1944 இல் Ouradour-sur-Glane இல் நடைபெற்ற பாசிசப் படுகொலையில் தப்பிப் பிழைத்திருந்த 91 வயதான Camille Senon ம் இதில் பங்குபெற்றவர்களில் ஒருவராவார். பிரதமர் மானுவல் வால்ஸிடம் இருந்தான ஒரு கவுரவத்தை மறுத்திருந்த இவர், PS இன் தொழிலாளர் சட்டம் ”ஏற்கமுடியாததாகும்” என்றார்.
தொழிலாளர்களிடையே எதிர்ப்பு மனோநிலை தொடர்ந்து தீவிரப்பட்டு செல்லும் நிலைக்கு முகம் கொடுக்கின்ற PS, ஆர்ப்பாட்டங்களை தடை செய்யும் முயற்சியில் திடீர் பல்டியடித்ததில் இருந்து இன்னும் மீண்டுவராத நிலையில், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை அது அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் குறித்து விமர்சனப் பார்வை கொண்ட இடது-சாரி அமைப்புகளை தடை செய்கின்ற அச்சுறுத்தல்களைக் கொண்டு அது நேற்று பதிலிறுப்பு செய்தது.
“வன்முறையில் ஈடுபடுகின்ற அமைப்புகளைக் கலைக்க இயலுகின்ற ஒவ்வொரு முறையும், நாம் அதனைச் செய்வோம். தீவீர இஸ்லாமியத்துடன் உறவுகொண்ட குழுக்களுக்கு நாம் அதனைச் செய்தோம், அதி வலது குழுக்களுக்கு நாம் அதனைச் செய்தோம். தேவைப்பட்டால், அதி-இடதுகளுக்கும் கூட அதனை நாம் செய்வோம் என்பது வெளிப்படையானதாகும்” என்றார் வால்ஸ். “குடியரசின் ஸ்தாபனங்களை எதிர்க்கின்றதும் சில நூறு தனிநபர்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறதாக இருக்கின்றதுமான இந்த அதி-இடதின் எழுச்சி கவலையளிப்பதாக” அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.
குறிப்பாக “ஏதோ சமூக எதிர்ப்பை இல்லாது செய்வதற்காக நாமே இந்த வன்முறையை ஒழுங்கமைப்பதைப் போல, போலிஸ் மீதும் அரசாங்கத்தின் மீதும் சந்தேகத்தை விதைக்கக் கூடியவர்கள்” விவகாரத்தில் இதை பதிலிறுப்பதாக வால்ஸ் கூறினார்.
எப்படியாயினும், PS மற்றும் பாதுகாப்புப் படைகளை விமர்சனம் செய்வது வெறுமனே ”அதி-இடது” குழுக்கள் மட்டுமல்ல. ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்கின்ற மக்களின் பரந்த அடுக்கு முன்னெப்போதினும் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், PS க்கும், பாதுகாப்புப் படைகளுக்கும், ஆர்ப்பாட்டங்களை தடை செய்ய முயல்வதற்கான சாக்காக PS பற்றிக் கொள்ள முனைகின்ற அடையாளம் தெரியாத கலகக் குழுக்களுக்கும், இடையிலான உறவு குறித்து அம்மக்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த வார ஆர்ப்பாட்டங்களின் போது Necker Hospital ஐ சேதப்படுத்திய கலகக்காரர்களின் செயல்களில் தொழிற்சங்கங்கள் உடந்தையாக இருந்ததாக PS குற்றம்சாட்டியதன் பின்னர், ஸ்ராலினிச CGT இன் தலைவரான பிலிப் மார்ட்டினேசும் கூட இந்தப் பிரச்சினையில் கேள்வி எழுப்பும் நிலைக்குத் தள்ளப்பட்டார். “போலிஸ்காரர்கள் மீது நான் பழிசொல்லவில்லை. கலகக்காரர்களுக்கு எதிராக தலையீடு செய்ய அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கவில்லை” என்று கூறிய மார்ட்டினஸ், “தாக்குவதில் இருந்து கலகக்காரர்களை தடுக்கும் உத்தரவு போலிசுக்குக் கொடுக்கப்படாதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
CGT, மற்ற தொழிற்சங்கங்கள் மற்றும் மனித உரிமைக் குழுக்களுடன் இணைந்து, ஆர்ப்பாட்டங்களை பாதுகாப்புப் படைகள் கையாளும் விதம் குறித்த விசாரிக்க அழைப்பு விடுப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
பாஸ்டிய் சதுக்கத்தை சுற்றிய பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்றிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களிடம் WSWS செய்தியாளர்கள் பேசினர். ஃபிரெட் என்ற ஒரு ரயில்வே தொழிலாளியும், அவரது மகனும், இருவருமே PS அரசாங்கத்தை விமர்சனம் செய்ததோடு போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை பரந்த முறையில் அணிதிரட்டுவதற்கு அழைப்பும் விடுத்தனர்.
இச்சட்டத்தை எதிர்ப்பதற்கு தொழிலாளர்களும் இளைஞர்களும் தீர்மானத்துடன் இருப்பதாய் ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்றிருந்த ஃபிரெட்டின் மகன் வலியுறுத்தினார். இந்த சட்டத்தின் பின்விளைவுகள் நாசகரமாக இருக்கும் என்று அவர் கூறினார்: “நாங்கள் அதிகம் கடுமையாய் வேலை செய்ய வேண்டியிருக்கும், அதற்கும் கூடுதலாய் பணம் கிடைக்கும் என்ற உத்தரவாதமுமில்லை… முதலாளிகள் தொழிலாளர்களை விட உயர்ந்தவர்களாய் நினைத்துக் கொள்வார்கள், அந்த நிலைமை தான் ஏற்கனவே இருக்கிறது. இந்த சட்டம் நிறைவேறினால் நிலைமை இன்னும் மோசமானதாய் ஆகும்.”
“நாங்களும் கலகக்காரர்களும் ஒன்று என்பதைப் போல அரசாங்கம் நாடகம் ஆடுகிறது, கலகக்காரர்கள் எங்களை பயன்படுத்திக் கொள்வதாக அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் உண்மையோ அதற்கு மாறாய் இருக்கிறது, அவர்கள் தான் கலகக்காரர்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்… இந்த கலகக்காரர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களை அரசாங்கம் ஏதோ மாயம் போல தொப்பியில் இருந்து வெளிக் கொண்டுவந்ததாகவே நான் நினைக்கிறேன்” என்றார் ஃபிரெட்.
பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் கடைசிப் பெரும் புரட்சிகரப் போராட்டமான 1968 பொது வேலைநிறுத்தத்தை ஃபிரெட் நினைவுகூர்ந்தார். இன்னுமொரு பொது வேலைநிறுத்தம் வேண்டும் என்றார் அவர். “இதுவும் 1968 இன் அளவுக்கான வீச்சைக் கொண்டிருக்கும், மற்ற நாடுகளுக்கும் பரவும். ஒன்று மாற்றி ஒன்றாய் அரசாங்கங்கள் வீழும்.”
சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மை தனக்குக் கோபமூட்டுவதாக ஃபிரெட் கூறினார். “பிரான்சின் ஊதிய மட்டங்களை, நாங்கள் செய்யும் வேலையின் அளவைக் கணக்கில் கொண்டு பார்த்தால், அது ஏற்கமுடியாததாகவே நான் கருதுகிறேன். … கொடுப்பனவுகளும், பங்கு வாய்ப்புகளும் [தலைமை நிர்வாக அதிகாரிகள் பெறுகின்றவை] ஏற்க முடியாதவை.”
பாரிஸில் PSA Peugeot-Citroën இல் பணிபுரிகின்ற ஒரு வாகன உற்பத்தித் துறை தொழிலாளியான யானிக்கிடம் WSWS பேசியது. தொழிலாளர் சட்டத்தையும் சரி, PSA இல் இச்சட்டத்தின் அடிப்படையில் நடைபெற்று வருகின்ற ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளையும் சரி இரண்டையுமே எதிர்ப்பதாக அவர் தெரிவித்தார். “இவ்வாறாக, தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக, மற்றும் எங்கள் நிறுவனத்தில் தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்துகின்ற உடன்படிக்கைகளுக்கு எதிராக என இரண்டு முனைகளில் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்” என்றார் யானிக்.
”சிறுமைப்படுத்தலையும் ஆத்திரமூட்டலையும்” பயன்படுத்துவதாக PS ஐ அவர் விமர்சனம் செய்தார். “ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பொதுமக்கள் கருத்தை திருப்பும் முயற்சியாக அவர்கள் சூழல்களைக் கொண்டு ஆத்திரமூட்டலில் ஈடுபடுகிறார்கள்.”
அவர் மேலும் கூறினார்: “பல தசாப்த காலத்திற்கோ, அல்லது நிரந்தரமாகவோ முதலாளிகள் தொழிலாளர்களை நசுக்கியே வைத்திருக்க முடியும் என்று நான் நம்பவில்லை. அவர்களில் சிலர் அப்படி நம்பலாம், அல்லது அப்படி செய்வதற்கு நம்பிக்கை கொண்டிருக்கலாம். ஆனால் விரைவிலோ அல்லது பின்னரோ, எதிர்வினை வரும். ஒரு பிரஷர் குக்கரை நீங்கள் சூடு செய்து சென்று கொண்டேயிருக்க முடியாது, அதற்கென்று அதிகப்பட்ச தாங்குதிறன் இருக்கிறது, அதற்குப் பின் அது வெடித்து விடும். முதலாளிகள் – பிரபஞ்சத்தின் எங்கெங்கிலும் அவர்கள் ஒரேமாதிரியாகவே இருக்கிறார்கள் – விரைவிலோ அல்லது பின்னரோ ஒரு சமூக வெடிப்பைத் தூண்டுவார்கள். இன்று பிரான்சில் நாம் அணிதிரண்டிருக்கிறோம், சீனாவில் அணிதிரளல்கள் இருக்கின்றன, உலகில் தொழிலாளர்கள் இருக்கின்ற ஒவ்வொரு நாட்டிலும் இது நடக்கிறது. ஒவ்வொரு இடத்திலுமே முதலாளிகளின் ஒடுக்குமுறையும், சுரண்டலும் இருக்கிறது, அதற்கான எதிர்வினை இருக்கிறது.”