Print Version|Feedback
Brexit vote intensifies conflicts within European Union
பிரெக்ஸிட் வாக்களிப்பு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளான மோதல்களைத் தீவிரப்படுத்துகிறது
By Alex Lantier
25 June 2016
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கு இங்கிலாந்து வாக்களித்திருந்தது என்ற செய்தி ஒரு உலகளாவிய நிதித்துறை பீதியை தூண்டிய நிலையில், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் (பிரெக்ஸிட்) வாக்களிப்பானது ஐரோப்பா முழுக்கவும் அதனைக் கடந்தும் பரந்த மற்றும் முன்கண்டிராத பின்விளைவுகளைக் கொண்டிருக்கும் என்பது தெளிவாகியது. இரண்டாம் உலகப் போர் முடிந்ததன் பின்னர், ஒரு புதிய உலகப் போரை இனியும் சாத்தியமற்றதாக ஆக்கக் கூடிய அரசியல் ஸ்தாபகங்களைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் தொடக்கப்பட்டிருந்த ஐரோப்பிய ஒருங்கிணைப்பு நிகழ்முறையானது இப்போது உடைந்து கொண்டிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தும் அதன் உடன்படிக்கைகளில் இருந்தும் இங்கிலாந்து பின்வாங்குவதற்கான சட்டரீதியான மற்றும் நிதிரீதியான நிபந்தனைகள் குறித்த பல ஆண்டு கால கடுமையான பேச்சுவார்த்தைகளுக்கு ஐரோப்பா இப்போது தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது. ட்ரில்லியன் யூரோ கணக்கிலான வர்த்தக மற்றும் நிதி ஒப்பந்தங்கள் ஆபத்தில் உள்ள நிலையிலும், பல ஆண்டுகளாகவே கிரேக்க கடன் நெருக்கடி, மத்திய கிழக்கு அகதி நெருக்கடி, மற்றும் மத்திய கிழக்கு மற்றும் உக்ரேனில் அமெரிக்க-ஆதரவிலான போர்கள் ஆகிய விடயங்களில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இடையிலான பதட்டங்கள் கூர்மைப்பட்டிருந்த நிலையிலும், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளான பிளவுகள் மேலும் தீவிரமடைய இருக்கின்றன. பிரெக்ஸிட் வாக்களிப்பை ஒட்டி ஐரோப்பா மற்றும் உலகத்திற்கான எதிர்கால வாய்ப்புவளங்கள் குறித்த விரக்தியான மற்றும் எதிர்மறையான கருத்துகளை உயர் அதிகாரிகள் வெளிப்படுத்தினர்.
ஜேர்மன் சான்சலரான அங்கேலா மேர்க்கெல் பேர்லினில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காது ஒரு சுருக்கமான உரைக்குறிப்பை வழங்கினார். பிரெக்ஸிட்டை “ஐரோப்பிய ஒருங்கிணைப்பின் நடப்பு திசை குறித்த அடிப்படை சந்தேகங்களை” பிரதிபலித்த “ஐரோப்பிய வரலாற்றிலான ஒரு முறிவு” என்று அழைத்த அவர், ”நமது பொருளாதார, சமூக, சூழலிய மற்றும் வெளியுறவுக் கொள்கை நலன்களை” நிலைநாட்டுவதற்கு ஐரோப்பிய நாடுகள் கொண்டுள்ள திறனிற்கு அழைப்பு விட்டார்.
பெரும் ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே மீண்டும் வெடித்தெழுந்து கொண்டிருக்கின்ற முரண்பாடுகள் மறுபடியும் போராக வெடிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை மேர்கல் அப்பட்டமாக எச்சரித்தார். “இப்போதைக்கு சிந்திக்க கடினம் என்றாலும் கூட, குறிப்பாக இந்த நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியம் என்ற கருத்தானது அமைதிக்கான கருத்தாக இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நூற்றாண்டுகளாய் பயங்கர குருதிகொட்டலுக்கு பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஸ்தாபகர்கள் நல்லிணக்கம் மற்றும் அமைதியை நோக்கிய ஒரு இணைந்த பாதையைக் கண்டார்கள். அது சுமார் அறுபது வருடங்களுக்கு முன்பு ரோமில் கையெழுத்தான உடன்படிக்கைகளில் உச்சமடைந்தது. இதுவே எதிர்காலத்திற்கானதாக இருந்தது, அவ்வாறே தொடர்கிறது.”
ஐரோப்பாவில் ஒரு புதிய போரின் பேராபத்து குறித்த விடயத்தில், மேர்கல், ஐரோப்பிய ஒன்றியம் தனது எஞ்சிய குடிமக்களுக்கு சிக்கன நடவடிக்கை, போர் மற்றும் போலிஸ் ஒடுக்குமுறை ஆகிய வெறுப்பைச் சம்பாதிக்கும் கொள்கைகளை சற்று மேம்பட்ட விதத்தில் காட்டலாம் என்ற பயனற்ற நம்பிக்கைகளைத் தவிர வேறு எந்த ஆலோசனையையும் வைக்க இயலவில்லை. “ஆகவே, குடிமக்களது சொந்த வாழ்க்கைகளை மேம்படுத்துவதில் ஐரோப்பிய ஒன்றியம் எவ்வாறு பங்களிப்பு செய்கிறது என்பது குறித்த ஒரு ஸ்தூலமான உணர்வை அம்மக்கள் பெறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்” என்றார் அவர்.
உண்மையில் பார்த்தால், பிரிட்டனில் பாரிய வாக்காளர்கள், ஐரோப்பாவெங்கிலும் உள்ள மற்ற வாக்காளர்களைப் போலவே, ஐரோப்பிய ஒன்றியமானது தமது நலன்களுக்குக் விரோதமான ஒரு சமூகரீதியாய் பிற்போக்கான ஸ்தாபனமாக இருக்கிறது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்ற யதார்த்தமே, பிரெக்ஸிட் நெருக்கடியில் ஒரு முக்கியமான காரணியாக இருக்கிறது. மேலும், அது ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஒரு கருவியாக, ஐரோப்பிய அரசுகளின் போட்டி நலன்களால் திரும்பவியலாமல் கிழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அதிகரித்துச் செல்கின்ற பதட்டங்கள் குறித்து மேர்கெல் மறைக்க முயற்சிக்கவில்லை. ஐக்கியத்திற்கு அழைப்பு விடுத்த போதும், ஜேர்மன் சான்சலர், ஜேர்மனியின் நலன்களையே முதலாகவும் முதன்மையாகவும் தான் பாதுகாக்கவிருப்பதை வெளிப்படுத்தினார். இரண்டு வருடங்களுக்கு முன்பாகத்தான் இவரது அரசாங்கம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் ஜேர்மனி பின்பற்றிய இராணுவரீதியான ஒதுங்கியிருப்புக் கொள்கையை கைவிட்டிருந்தது. “அந்த நிகழ்முறையில் ஜேர்மன் குடிமக்கள் மற்றும் ஜேர்மன் பொருளாதாரத்தின் நலன்களுக்கு சிறப்பு கவனத்தை ஜேர்மன் அரசாங்கம் வழங்கும்” என்று அவர் அறிவித்தார்.
மேர்க்கெல் திங்களன்று பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டையும் இத்தாலிய பிரதமர் மாத்தியோ ரென்சி ஐயும் சந்திக்கவிருக்கிறார். அசாதாரணமான இரண்டுநாள் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு ஒன்றிற்கான தயாரிப்பு செய்வதற்குரிய ஒருநாள் சந்திப்பாக இவர்கள் பாரிஸில் சந்திக்கிறார்கள். ஐரோப்பிய நிர்வாகிகள் ஒரு பேச்சுவார்த்தை கட்டமைப்பை உருவாக்கிக் காட்ட முயற்சி செய்கின்ற போதிலும், வெவ்வேறு ஐரோப்பிய நாடுகளிடையே ஏற்கனவே பதட்டங்கள் மேலெழுந்து வந்து கொண்டிருக்கின்றன.
ஜிப்ரால்டர் பாறையை (Rock of Gibraltar) திரும்பப் பெறும் முன்மொழிவை கொண்டு ஸ்பெயின் அதிகாரிகள் தமது பிரதிபலிப்பை காட்டினர். அட்லாண்டிக் மற்றும் மத்திய தரைக்கடல் இடையில் எல்பீரிய தீபகற்பத்தின் முனையில் பிரிட்டனின் வசம் இருக்கும் இத்தீவுப்பாறை 1704 இல் பிரிட்டன் மற்றும் டச்சுப் படைகளால் கைப்பற்றப்பட்டதாகும். ”சக இறையாண்மை சூத்திரம் - அதாவது, தெளிவாகச் சொல்வதென்றால், பாறை மீது ஸ்பெயின் கொடி பறப்பது - முன்னினும் நெருக்கமாய் வந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்” என்று ஸ்பெயினின் பதில் வெளியுறவு அமைச்சர் ஜோசே மானுவல் கார்சியா-மார்கல்லோ, Onda Cero வானொலியில் கூறினார்.
ஜிப்ரால்டர் விடயத்தில் ஸ்பெயினுடன் இறையாண்மையைப் பகிர்ந்து கொள்ளும் ஆலோசனைகளை பிரிட்டிஷ் அதிகாரிகள் திட்டவட்டமாக நிராகரித்து விட்டனர்.
எல்லாவற்றுக்கும் மேல், பிரெக்ஸிட், ஐரோப்பிய ஒன்றியத்தில் எஞ்சியிருக்கும் இரண்டு பெரும் பொருளாதாரங்களான ஜேர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையில் பதட்டங்களை தூண்டிக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய இராணுவத்தையும் போலிஸ் அதிகாரங்களையும் வலுப்படுத்துவதன் மீதும் இன்னும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதன் மீதும் கவனம் குவிக்கக் கூடிய வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் “ஆழமான மாற்றம்” வேண்டும் என்று ஹாலண்ட் நேற்று கோரிக்கை விடுத்தார்.
ஹாலண்டின் கருத்துகள் விரிந்த வகையில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளின் கருத்துகளான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒடுக்குமுறை சக்திகளையும் வெளிநாட்டுப் போர்களை நடத்துவதற்கான அதன் திறனையும் விரிவுபடுத்துவதற்கு அவர்கள் அழைத்து வருவதை எதிரொலித்த போதும், வளர்ச்சி குறித்த அவரது கருத்துகள், ஒரு தளர்வான நிதிக் கொள்கைக்கு நீண்டகாலமாக பிரான்ஸ் அழைப்பு விடுத்து வருவதைப் பின்பற்றி, ஜேர்மனி மீது இலை மறைவு காய் மறைவாய் செய்த விமர்சனமாக இருந்தன. பிரான்சின் இந்தக் கோரிக்கைகள், 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்கு சற்று பின்னர், கிரேக்க கடன் நெருக்கடியின் வெடிப்பு முதலாகவே பேர்லினில் தீர்க்கமான மற்றும் முன்னெப்போதினும் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டன.
“அதனைத் தடுத்து நின்ற அங்கேலா மேர்க்கெல் இப்போது வழிவிட்டாக வேண்டும் என்பதே [பிரான்சின்] அரசுத் தலைவரின் மதிப்பீடு” என்று பெயர்கூற விரும்பாத பிரான்சின் ஜனாதிபதி மாளிகை ஊழியர் ஒருவர் Les Echos பத்திரிகையிடம் கூறியிருந்தார்.
ஆயினும் யூரோ மண்டலத்திற்குள்ளாக அதிகரித்துச் செல்லும் மோதல்களை ஜேர்மனியும் பிரான்சும் தீர்த்து விட முடியும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. உலகளாவ பங்குச் சந்தைகள் பொறிவு கண்ட நிலையில், அமெரிக்க நிதியக் கருவூலத்தின் முன்னாள் தலைவரான ஆலன் கிரீன்ஸ்பான் நிதிய செய்தி சானலான CNBC இல் பேசுகையில், இந்த நெருக்கடி கட்டவிழ்த்து விட்டிருக்கும் தீர்க்க முடியாத அரசியல் மோதல்களின் காரணத்தால், இது 1987 மற்றும் 2008 நிதிப் பொறிவுகளை விடவும் கூடுதல் ஆபத்தானவையாக நிரூபணமாகும் என்று அறிவித்தார்.
“நான் பொதுப் பணிக்கு வந்த நாளில் இருந்து நான் நினைவுகூரத்தக்க மிக மோசமான காலகட்டமாக இது இருக்கிறது” என்றார் கிரீன்ஸ்பான். “இதைப் போல எதனையும் கண்டதில்லை. 1987 அக்டோபர் 19 அன்று Dow குறியீடு பிரம்மாண்ட அளவாக 23 சதவீதம் வீழ்ச்சி கண்டது நினைவிருக்கிறதா, அதனையும் சேர்த்துத் தான் சொல்கிறேன். அது தான் சாத்தியமாகக் கூடிய அத்தனை பிரச்சினைகளிலும் அதலபாதாளம் என்று நான் நினைத்தேன். இது ஒரு அரிக்கின்ற விளைவைக் கொண்டிருப்பதுடன் விரைவாக மறைந்துவிடாதுபோல் தோன்றுகின்றது.” என்றார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கிரேக்கம் வெளியேறுவதும் பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து வெளியேறுவதும் நடக்கக் கூடியவையே என்றே தான் கருதுவதையும் கிரீன்ஸ்பான் சுட்டிக்காட்டினார். ஆயினும் அவரது இன்னும் கூர்மையான எச்சரிக்கைகள் யூரோ மண்டலத்துக்குள் அதிகரித்துச் செல்கின்ற கடுமையான பிளவுகளுக்காய் இருந்தது. அவர் அறிவித்தார்: “யூரோ ஒரு மிகப்பெரும் பிரச்சினைக்குள் இருக்கிறது, ஏனென்றால் யூரோ மண்டலத்தின் தென் பகுதிக்கு அதன் வடக்குப் பகுதியில் இருந்தும் ஐரோப்பிய மத்திய வங்கியில் இருந்துமே நிதியளிக்கப்படுகின்றது.”
ஐரோப்பிய ஒன்றியத்தின் உடைவும், ஐரோப்பாவின் வரலாற்று மற்றும் பொருளாதார வளர்ச்சியில் ஆழமாக வேரூன்றியிருக்கக் கூடிய முரண்பாடுகளை முதலாளித்துவத்தின் அடிப்படையில் தீர்க்கப்படுவது சாத்தியமில்லாதது என்பதே முன் எழுந்து நிற்கின்றவை ஆகும். 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது முதலாக முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கக்கூடிய தொழிலாளர்களது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான இடைவிடாத தாக்குதல்களும் மற்றும் அதிகரித்துச் செல்கின்ற இராணுவத் தலையீடுகளும், ஐரோப்பாவை ஒன்றுபடுத்துவதிலிருந்து அப்பாற்பட்டு, ஐரோப்பிய ஒன்றியத்தை மதிப்பிழக்கச் செய்திருப்பதோடு பனிப் போர் சகாப்தத்தில் ஸ்தாபிக்கப்பட்ட உறவுகளைக் கீழறுத்திருக்கிறது.
ஆயினும், ஆழமடைந்து செல்லும் நெருக்கடியையும் போருக்கான முனைப்பையும் வெல்லத்தக்க ஒரே சமூக சக்தியாக இருக்கின்ற தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நலன்களை ஒடுக்குவதில் தான் இன்னும் பெரிய அபாயம் அமைந்திருக்கிறது. பிரிட்டனில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான எதிர்ப்பு, இடதில் இருந்து, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் நலன்களின் பார்வையில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்டதல்ல, மாறாக வலதில் இருந்து, கன்சர்வேடிவ் கட்சிக்குள் இருக்கக்கூடிய அதி தேசியவாதக் கூறுகள், அதி-வலதுகள், புலம்பெயர்ந்தோர் விரோத ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி (UKIP) ஆகியோரது கூட்டணியால் ஒழுங்கமைக்கப்பட்டதாகும். அவர்கள் தம்மைச் சுற்றி ஜோர்ஜ் கலோவே போன்ற பிற்போக்குத்தனமான குட்டி-முதலாளித்துவ, போலி-இடது கூறுகளை ஈர்த்து வைத்திருந்தனர்.
இந்த சக்திகளின் ஐரோப்பியக் கூட்டாளிகள் பிரெக்ஸிட்டை பாராட்டியதோடு ஐரோப்பிய ஒன்றியத்தை மேலும் தேசியவாத வரிசைகளில் உடைப்பதற்கு அழைப்புவிடுத்தனர்.
பிரெக்ஸிட் வாக்களிப்பை பாராட்டி வெள்ளியன்று வியன்னாவில் நடந்த அதி-வலது கட்சிகளின் ஒரு மாநாட்டில் பிரான்சின் நவ-பாசிச தேசிய முன்னணியின் தலைவரான மரின் லு பென் கலந்து கொண்டார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரான்ஸ் வெளியேறுவதற்கான ஒரு கருத்துக்கணிப்புக்கான கோரிக்கையை அடுத்த ஆண்டில் நடைபெறவிருக்கும் பிரான்சின் ஜனாதிபதித் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்துடன் தொடர்புபடுத்தியிருக்கும் அவர் பின்வருமாறு கூறினார்: “பிரிட்டிஷ் மக்கள் உறுதியாக நின்று சரியான முடிவை எடுத்திருப்பதில் பிரெஞ்சு மக்கள் நிறைய பேரைப் போலவே, நானும் மகிழ்ச்சியடைகிறேன். நேற்று நாம் சாத்தியமில்லாதது என்று எதனை நினைத்தோமோ அது இப்போது சாத்தியமாக மாறியிருக்கிறது.”
வியன்னா கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அதி-வலது டச்சு அரசியல்வாதியான கீர்ட் வில்டர்ஸ் பிரெக்ஸிட் வாக்களிப்பை “வரலாற்றுச் சிறப்புமிக்கது” என்று கூறி வரவேற்றார். அவர் கூறினார்: “இப்போது நமது முறை. டச்சு மக்கள் ஒரு கருத்து வாக்கெடுப்பில் தமது கருத்துகளை கூறுவதற்கான வாய்ப்பு இப்போது அளிக்கப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன்.”
ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அதிகரித்துச் செல்லும் பதட்டங்கள் அமெரிக்காவுக்கு தீவிரமான பிரச்சினைகளை முன்நிறுத்தியுள்ளன. ஐரோப்பிய சக்திகளில் முக்கியமான அனைத்து நாடுகளையும் கொண்டதாய் இருக்கின்ற நேட்டோ இராணுவக் கூட்டணி அமெரிக்காவின் உலகளாவிய ஏகாதிபத்திய கொள்கைக்கு மையமானதாய் இருந்து வருகிறது. பிரெக்ஸிட்டுக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகினால் அமெரிக்காவுடனான அதன் உறவுகள் “பின்வரிசைக்குச் சென்றுவிடும்” என்று பிரிட்டன் பயணங்களின் போது எச்சரித்து வந்தார். இப்போது நேட்டோ உள்முக மோதல்களுக்கும், அல்லது ஒட்டுமொத்தமான கலைப்பின் சாத்தியத்திற்கும் கூட முகம்கொடுத்து நிற்கின்ற நிலையில், ஒபாமா நேற்று சற்று கனிவான நிலைப்பாட்டை கையிலெடுத்தார்.
“ஐக்கிய இராச்சியத்தின் மக்கள் தமது முடிவை தெரிவித்திருக்கிறார்கள், அவர்களது முடிவை நாம் மதிக்கிறோம்” என்றார் அவர். “அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான சிறப்பான உறவு தாக்குப்பிடித்து நிற்கக் கூடியதாகும்” என்று கூறிய அவர் மேலும் கூறினார்: “நேட்டோவில் ஐக்கிய இராச்சியத்தின் அங்கத்துவம் அமெரிக்காவின் அயலுறவு, பாதுகாப்பு மற்றும் பொருளாதாரக் கொள்கையில் ஒரு இன்றியமையாத அடிக்கல்லாக தொடர்ந்தும் இருக்கிறது.”