ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

David King 1943-2016: Revolutionary socialist, artist and defender of historical truth

டேவிட் கிங் 1943-2016: புரட்சிகர சோசலிசவாதி, கலைஞர் மற்றும் வரலாற்று உண்மையின் பாதுகாவலர்

By David North
14 May 2016

ஒரு கலைஞராய் தனது அசாதாரணமான திறமைகளை, 1917 ரஷ்யப் புரட்சி மற்றும் அதன் பிந்தைய காலம் தொடர்பான வரலாற்று உண்மைகளை, மிகப் பரந்தததும் இப்போது தகர்ந்துபோயுள்ள ஸ்ராலினிச குற்றங்கள் மற்றும் பொய்களின் கோட்டையின் கீழேயிருந்து தேடிக் கண்டடைவதற்காய் அர்ப்பணித்தவரான டேவிட் கிங், இஸ்லிங்டன் நகரில் இருக்கும் தனது இல்லத்தில் மே 11 அன்று காலையில் காலமானார்.

டேவிட் கிங் பல ஆண்டுகளாக இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார் என்றபோதும் தனது வாழ்வின் இறுதி நாள் வரையிலும் அவர் மிகச் சீரிய படைப்புத்திறனுடன் திகழ்ந்தார். கடந்த இலையுதிர்காலத்தில் வெளியிடப்பட்ட கிங்கின் மிக சமீபத்தியதும் இறுதியானதுமான புத்தகம், கிங் மீதுமே கூட ஆழமானதொரு செல்வாக்கு செலுத்தியிருந்த படைப்புகளை உருவாக்கிய ஜோன் ஹார்ட்ஃபீல்ட் என்ற வைய்மர்-சகாப்த ஜேர்மன் புரட்சிகரக் கலைஞரின் வாழ்வுக்காய் அர்ப்பணிக்கப்பட்ட புத்தகமாகும் என்ற உண்மை ஒரு துன்பியலான நகைமுரண் கூறு கொண்டதாக இருக்கிறது.

டேவிட் கிங் 2009 (புகைப்படம் டேவிட் நோர்த்)

ஒரு கலைஞராக டேவிட்டின் ஆயுட்காலத்திலான படைப்புகள், ரஷ்யப் புரட்சி என்ற இருபதாம் நூற்றாண்டின் மகத்தான நிகழ்வின் வரலாற்றை காலவரிசைப்படுத்துகின்ற புத்தகங்களை ஆய்வதிலும், வடிவமைப்பதிலும், எழுதுவதிலும் கவனம் குவித்திருந்தன. கலை வடிவத்தையும் வரலாற்று உள்ளடக்கத்தையும் அசாதாரணமான வகையில் துல்லியமாகப் பொருத்துகின்ற திறன்தான் அவரது படைப்புக்கு ஒரு நீடித்த முக்கியத்துவத்தை வழங்குகிறது. சமகாலக் கலைஞர்களில் மிக அபூர்வமானதாய், அது ஒரு வரலாற்று நோக்குநிலையுடனான நனவினால் வழிநடத்தப்பட்டதாய் இருந்தது. மேலும், அதன் நிகழ்வுகள், சர்ச்சைகள், மனிதர்கள் மற்றும் சுற்றிய சமூகச் சூழல் என ரஷ்யப் புரட்சி குறித்த டேவிட்டின் அறிவு ஒரு களஞ்சியத்திற்கு குறைவில்லாததாக இருந்தது. தன்னை ஒரு கலைஞராக காட்டிக்கொள்ளக்கூடிய ஒரு மதிப்பினையோ அல்லது பெரிதாக வெளிக்காட்டிக்கொள்ளும் தன்மையையோ உருவாக்கவேண்டிய அகநிலை நோக்கத்திற்காக அவர் உழைத்ததில்லை. சித்திரப் படங்களில் (pictorial images) பிரதிபலிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகள் எந்த மட்டத்திற்கு அந்த ஆசிரியரின் சித்தரிப்பை வழிநடத்தியிருந்தது என்பது தான் அவரது புத்தக வடிவமைப்புக்கு அத்தகைய ஒரு சக்திவாய்ந்த மற்றும் தனித்துவமான உண்மை தன்மையை கொண்டுவந்து சேர்த்தது.

கடந்த 45 ஆண்டுகளில் பிரசுரமாகி இருக்கக் கூடிய டேவிட்டின் முக்கிய புத்தகங்கள் அனைத்தின் கீழும் தளர்ச்சியற்ற வரலாற்று ஆய்வு அமைந்திருக்கிறது. அவர் சித்திரப் படங்களை தேர்ந்தெடுத்து, பிரசுரத்திற்காக வடிவமைத்து, பல சமயங்களில் முழு உரையையுமோ அல்லது அதன் கணிசமான பகுதிகளையோ எழுதி வெளியாகியிருக்கக் கூடிய ஒவ்வொரு தொகுதியும் பல வருட உழைப்பை அடித்தளத்தில் கொண்டிருந்தது. நமது சகாப்தத்தின் மிகப் பெரும் காப்பக அறிஞர்கள் மற்றும் வரலாற்றுப் புலனாய்வாளர்களில் ஒருவராய் அவர் திகழ்ந்தார். ரஷ்யப் புரட்சியின் தொன்ம அடையாளங்களை தேடி உலகெங்கும் பயணித்த அவர் புகைப்படங்கள், சுவரொட்டிகள், மற்றும் அரசாங்க ஆவணங்கள் தொடங்கி காப்பி கோப்பைகள் வரையிலும் ஒன்றுவிடாமல் சேகரித்தார். டேவிட்டின் மதிப்பீட்டின் படி அவர் சுமார் 250,000 பொருட்கள் வரை சேகரித்திருந்தார். இந்த சேகரத் திரட்டை மட்டும் அவரது ஒரே சாதனையாகக் கொண்டாலே, ரஷ்யப் புரட்சி தொடர்பான வரலாற்றாசிரியர்கள் இடையே ஒரு மரியாதைக்குரிய இடத்தைப் பெறுவதற்குரிய தகுதியை அவர் பெற்று விடுவார்.

ஆனால் பொருட்களை சேகரித்ததுடன் டேவிட் நின்று விடவில்லை. அவற்றின் முக்கியத்துவத்தை, அதாவது ரஷ்யப் புரட்சி என்ற மிகப்பரந்த வரலாற்று நிகழ்வின் புறநிலையான இடத்தைப் புரிந்து கொள்ள அவர் முனைந்தார். ஒரு தொன்மத்தை ஆய்கையில், டேவிட் அதன் தோற்றத்தில் இருந்து அதன் வரலாற்றுச் சாரத்தைக் கண்டறிவதை நோக்கி, அதாவது தனித்துணுக்கும் பகுதிக்கும் முழுதோற்றத்திற்கும் இடையிலான உறவை அறிவதை நோக்கி நகர்ந்தார். இந்தத் தேடல் நிகழ்முறை தான் கலைத்துவ மீள்உருவாக்க வடிவத்தைத் தீர்மானித்தது. தெரிவு செய்வது மற்றும் சித்தரிப்பதான பிரச்சினை பலசமயங்களிலும் மிக ஆட்கொள்வதாய் நிரூபணமாகிறது. குறிப்பிடத்தக்க விதத்தில், டேவிட் அவரின் புத்தகம் ஒவ்வொன்றிலும் ஏராளமான எண்ணிக்கையிலான சித்திரங்களைத் திரட்டித் தந்திருந்த போதிலும் கூட, ஒன்றும் கூட அதில் அநாவசிய ஒன்றாய் தோன்றவில்லை. ஒவ்வொரு சித்திரமும், மிகச் சிறிய ஒன்றும் கூட, படிப்பவரின் கவனத்தை பற்றிக் கொள்கிறது. டேவிட்டுக்கு மிகக் கூர்மையான காட்சிப் புலனறிவு இருந்தது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆயினும், எதை எங்கே வைக்க வேண்டும் என்பதையும், என்ன அளவில் படங்கள் மீள்உருவாக்கம் செய்யப்பட வேண்டும் என்பதையும் அவர் அத்தனை துல்லியமாய் புரிந்துகொண்டார் என்றால், அவரது கலைத் தீர்மானம் எப்போதும் புறநிலை வரலாற்று விவரிப்பின் ஒரு சக்திவாய்ந்த உணர்வினால் ஒழுங்குபடுத்தப்பட்டதாக இருந்தது என்பதே அதன் காரணமாகும்.

டேவிட் கிங் புத்திஜீவித்தனரீதியாகவும் கலைரீதியாகவும் ரஷ்யப் புரட்சியுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டமையானது அவரது தனிமனித அனுபவங்களிலும் அரசியல் உறுதிப்பாடுகளிலும் வேரூன்றியதாக இருந்தது. 2009 இல் ரஷ்யா மீதான சிவப்பு நட்சத்திரம்: 1917 முதல் ஸ்ராலின் மரணம் வரையான சோவியத் ஒன்றியத்தின் ஒரு காட்சி வரலாறு (Red Star Over Russia: A Visual history Of The Soviet Union From 1917 To The Death Of Stalin) என்ற புத்தக வேலையை டேவிட் நிறைவு செய்தார். டேவிட் கிங் சேகரத் தொகுதியில் இருந்தான படங்கள் உள்ளிட மதிப்புமிக்க செல்தகைமை பெற்ற இந்த படைப்புத் தொகுதிக்கான அறிமுகத்தில், அவர் பின்வருமாறு விளக்கினார்:

ஒரு குழந்தையாக இருக்கும்போதேயும் முதலாளித்துவத்தை நான் வெறுத்தேன். அது நியாயமற்றதாக நான் கருதினேன். அத்துடன் மதத்தையும் முடியாட்சியையும் நான் வெறுத்தேன். அவர்கள் உடுத்திய ஆடைகள் திகிலூட்டுபவையாகவும் மிரட்சியூட்டுபவையாகவும் இருப்பதாக நான் கண்டேன். ஒரு சோசலிசவாதியான எனது மாமா ஆளும் வர்க்கத்தின் உண்மையான இயல்பைக் குறித்து எனக்குக் கற்பித்த போது, அது நிச்சயமாக தூக்கிவீசப்பட வேண்டியதே என்பதில் அவருடன் நான் உடன்பட்டேன். அத்தனை குழந்தைகளையும் போலவே நானும் இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் கனவு காண்பதை வழக்கமாய் கொண்டிருந்தேன். சமத்துவமின்மை, இனவாதம், ராஜாக்கள், ராணிகள் மற்றும் மத வெறியர்கள் போன்ற அனைத்தும் கிரகத்தில் தொடர்ந்து வரும் என்று அப்போது யாராவது என்னிடம் சொல்லியிருந்தால் அவர்களை நான் பைத்தியமாகவே எண்ணியிருப்பேன்.

1970களின் கடுமையான குளிர்கால சமயத்தில் தான் டேவிட் முதன்முதலாய் சோவியத் ஒன்றியத்திற்கு பயணம் செய்தார். லெனின் பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி பிரசுரிப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் புகைப்படங்களுக்காக லண்டன் சண்டே டைம்ஸ் பத்திரிகையால் அவர் அனுப்பப்பட்டிருந்தார். புரட்சியின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்டிருந்த பல அருங்காட்சியங்களுக்கு கிங் விஜயம் செய்தார். லெனினின் வாழ்க்கை மிக மிக விரிவாய் ஆவணப்படுத்தப்பட்டது. ஆனால் போல்ஷிவிக் புரட்சியின் ஒரு முக்கியமான கதாநாயகர் பல அருங்காட்சியகங்களிலும் காணமுடியாதவராயிருந்தார். கிங் நினைவுகூர்ந்தார்:

எனக்கு அறிந்து கொள்ள மிகவும் ஆர்வமாயிருந்த ஒரு மனிதரை எங்குமே காணமுடியாதிருந்தது. ஆகவே அடிக்கடி நான் கேட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று, “சரி, ஆனால் ட்ரொட்ஸ்கி எங்கே?” அல்லது “சுவாரஸ்யமாய் இருக்கிறது, ஆனால் ட்ரொட்ஸ்கியைக் குறித்து ஒன்றுமே காணோமே?” ரஷ்யப் புரட்சியின் சக-தலைவரது ஒரேயொரு படத்தையேனும் எடுத்து விடுவதற்காக உத்தியோகபூர்வ படக் காப்பகங்களில் செலவிடப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ஒன்றுமேயில்லை. அவரை ஒட்டுமொத்தமாகத் துடைத்து அழித்திருந்தார்கள், இன்னும் ஏராளமான பலரையும் அதுபோல் செய்திருப்பதை விரைவிலேயே நான் கண்டுபிடிக்க முடிந்தது.

சோவியத் ஒன்றிய விஜயத்தின் போது ரஷ்யப் புரட்சி தொடர்பான மிகப் பரந்த விடயங்களை கிங் சேகரித்தார். ஆயினும் அந்த ஆய்வு முடிவுகளில் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. புரட்சியின் மறக்கடிக்கப்பட்ட மாமனிதரின் சித்திரத்தை அவரது மனதில் இருந்து அவரால் அகற்ற முடியவில்லை:

ட்ரொட்ஸ்கியை தேடுவது, அவரது வாழ்க்கையை படங்களைக் கொண்டு ஆவணப்படுத்துவது என்பதான ஒரு புதிய திட்டம் எனக்கு வந்தது. எத்தனை அரசியல் பொய்மைப்படுத்தல்கள் வந்தாலும், எத்தனை புகைப்பட ஒட்டுவேலைகள் செய்தாலும், இருபதாம் நூற்றாண்டின் முன்னுதாரணமான புரட்சிகர மேதையின் நினைவை அது அழித்து விட முடியாது என்பதைக் காட்ட நான் விரும்பினேன். ட்ரொட்ஸ்கியைக் குறித்து மேற்கில் நிறைய எழுதப்பட்டு விட்டிருந்தது, ஆனாலும் ஒரு வடிவமைப்பாளராக/புகைப்படக்காரனாக அவரது வாழ்க்கை இன்னும் பரந்த பார்வையாளர்களுக்கு கொண்டுசேர்க்கப்பட நான் விரும்பினேன்.

டேவிட், ஐரோப்பா முழுமைக்கும், வட அமெரிக்காவுக்கும், 1940 இல் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டிருந்த இடமான மெக்சிகோவில் இருக்கும் கோயோகானுக்கும் பயணம் செய்து, புரட்சிகரத் தலைவரது வாழ்க்கை தொடர்பான புகைப்படங்கள், சுவரொட்டிகள், ஆவணங்கள் மற்றும் தொன்மங்களைச் சேகரித்துத் தொகுக்கத் தொடங்கினார். சண்டே டைம்ஸ் சகாவான பிரான்சிஸ் விந்தாம் உடன் சேர்ந்து வேலை செய்து, ட்ரொட்ஸ்கியின் ஒரு வாழ்க்கைச் சரிதத்தையும் அவர் இணைந்து எழுதினார். அதில் விந்தாம் தான் அநேக உரையை எழுதினார் என்றபோதும், டேவிட் தொகுத்து வழங்கியிருந்த புகைப்படங்களின் பெரும் சேகரம் தான் அந்தத் தொகுதியை ஒரு முக்கியமான மற்றும் தாக்கம்மிக்க வரலாற்றுப் படைப்பாக ஆக்கியது. அது 1972 இல் பிரசுரமாகி பெரும் வரவேற்பை பெற்றது.

டேவிட் தனது அடுத்த முக்கியமான வேலையை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் இணைந்து முன்னெடுத்தார். அப்போது ICFI இன் பிரிட்டிஷ் பிரிவாக இருந்த தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) இல் ஒரு உறுப்பினராக டேவிட் இருக்கவில்லை என்றபோதும், தொழிலாள வர்க்கத்திலான அதன் தத்துவார்த்த வேலை மற்றும் அரசியல் நடவடிக்கையின் மீது அவர் மிகப்பெரும் மரியாதை கொண்டிருந்தார். 1975 இல் லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாய் அனைத்துலகக் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையை அவர் மிகப்பெரும் ஆர்வத்துடன் பின்தொடர்ந்தார். 1977 இல் வெளியான GPU ட்ரொட்ஸ்கியை எவ்வாறு படுகொலை செய்தது புத்தகத்தின் வடிவமைப்புக்கு தனது நேரத்தையும் தனது தனிப்பட்ட சேகரத்தில் இருந்த புகைப்படங்களையும் அவர் அளித்தார்.

ட்ரொட்ஸ்கியை எவ்வாறு படுகொலை செய்தது

2009 இல் ஒருமுறை நான் லண்டன் சென்ற சமயத்தில், GPU ட்ரொட்ஸ்கியை எவ்வாறு படுகொலை செய்தது புத்தகத் தயாரிப்பில் அனைத்துலகக் குழுவுடன் அவர் சேர்ந்து வேலை செய்தது குறித்து டேவிட்டுடன் நெடுநேரம் நான் பேசிக் கொண்டிருந்தேன். ட்ரொட்ஸ்கியின் படுகொலை குறித்த அனைத்துலகக் குழுவின் ஆய்வினை ஸ்ராலினிசக் குற்றங்களின் அம்பலப்படுத்தலுக்கான ஒரு முக்கியமான பங்களிப்பாகத் தான் கருதுவதாக அப்போது அவர் விளக்கினார். இந்த விசாரணைக்கு பிரிட்டிஷ் இடதின் பலரும் காட்டிய குரோதமான எதிர்வினை தனக்கு ஆச்சரியமூட்டுவதாக அவர் கூறினார். அமெரிக்காவில் சோசலிச தொழிலாளர் கட்சியின் நீண்டகாலத் தலைவராக இருந்த ஜோசப் ஹேன்சனுக்கும் FBI மற்றும் சோவியத் இரகசிய போலிசுக்கும் இடையில் இருந்த தொடர்புகளை அம்பலப்படுத்துகின்ற ஆவணங்களை அனைத்துலகக் குழு கண்டறிந்தது தொடர்பாகக் கூறுகையில், ஹான்சன் உடன் தனக்கு நேர்ந்த விந்தையான சந்திப்பு குறித்து கிங் நினைவுகூர்ந்தார்.

1970களின் ஆரம்பத்தில், ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கைசரிதம் தொடர்பான தனது ஆய்வின் போது, புகைப்படங்களையும் ஆவணங்களையும் தேடி டேவிட் நியூயோர்க் சென்றிருந்தார். சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியைத் தொடர்பு கொண்ட அவர், 1937க்கும் 1940க்கும் இடையில் மெக்சிகோவில் ட்ரொட்ஸ்கியின் செயலாளராக வேலை செய்திருந்த ஹான்சன் உடன் ஒரு சந்திப்புக்கு நேரம் ஒதுக்கக் கோரினார். அந்த சந்திப்பு ஏராளமான விபரங்களையும் ட்ரொட்ஸ்கியின் ஆளுமை குறித்த உட்பார்வைகளையும் அளிப்பதாய் இருக்கும் என்று டேவிட் கற்பனை செய்தார். ஆனால் நேர்முகம் ஆரம்பித்த சமயத்திலேயே ஹான்சன் கேட்ட கேள்வி: “ட்ரொட்ஸ்கியைக் குறித்து ஏன் நீங்கள் எழுத விரும்புகிறீர்கள்?” என்பது தான்.

அந்தக் கேள்வி தொடுக்கப்பட்ட தொனியில் அதிர்ச்சி கண்ட கிங், ட்ரொட்ஸ்கியை ஏன் அவர் ஒரு முக்கியமான வரலாற்று ஆளுமையாகக் கருதுகிறார் என்பதையும் ட்ரொட்ஸ்கியின் மரபியம் சோசலிசத்தின் எதிர்கால வெற்றிக்கான போராட்டத்தில் எப்படி ஒரு இன்றியமையாத பகுதியாக இருந்தது என்பதையும் விளக்கத் தொடங்கினார். “எதிர்காலம்?” ஹான்சன் பதிலளித்தார். “சுற்றுச்சூழல் நிலைமையைக் கொண்டு கொண்டு பார்த்தால், இந்த பூமி அநேகமாய் இன்னும் 20 வருடங்களில் இல்லாது போய் விடலாம்.” அந்த நேர்முகம் துரிதகதியில் முடிந்தது. டேவிட் இந்த சந்திப்பை சுமார் 50 வருடங்கள் கழித்து நினைவுகூர்ந்தபோதும், ஹான்சனின் பதிலில் அவர் கண்டிருந்த திகைப்பு இன்னும் மறைந்து விட்டிருக்கவில்லை என்பதை உணர முடிந்தது.

டேவிட் கிங் 2009ல் அவரது ஸ்ரூடியோவில் (புகைப்படம் டேவிட் நோர்த்)

அக்டோபர் புரட்சிக்கும் சோவியத் மக்களுக்கும் எதிராக ஸ்ராலினும் சோவியத் அதிகாரத்துவமும் இழைத்த குற்றங்களை அம்பலப்படுத்துவது தான் டேவிட்டின் இறுதி 35 ஆண்டு கால வாழ்க்கையின் சமயத்தில் அவரது படைப்புகளின் மையமான கவனமாய் இருந்தது. 1982 இல் மாபெரும் களையெடுப்புகள் (The Great Purges) புத்தகத்தின் எழுத்து மற்றும் வடிவமைப்பில் அவர் தமரா ட்யொச்சர் (பிரபலமான ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கைச்சரித மூன்று தொகுதிகளது ஆசிரியரான மறைந்த இஸாக் ட்யொச்சரின் மனைவி) உடன் சேர்ந்து வேலை செய்தார். 1997 இல் கமிசார் மறைகிறார்: ஸ்ராலினின் ரஷ்யாவில் புகைப்படங்கள் மற்றும் கலையின் பொய்மைப்படுத்தல் (The Commissar Vanishes: The Falsification of Photographs and Art in Stalin’s Russia) என்ற இன்னுமொரு மிகப்பெரும் வரலாற்றுத் தொகுதியை டேவிட் வழங்கினார். ஸ்ராலினும் சோவியத் தலைமையிலும் அதிகாரத்துவத்திலும் இருந்த அவரது குற்றவியல்தனமான உடந்தையாளர்களும் புகைப்படங்களில் “ஒட்டுவேலை” செய்து வரலாற்றை எப்படி திட்டமிட்டு பொய்மைப்படுத்தியிருந்தனர் என்பதை இந்தப் படைப்பில் கிங் விளங்கப்படுத்தினார். ஆணையாளர் மறைகிறார் (The Commissar Vanishes) படைப்பின் கருப்பொருளை விளக்கி டேவிட் பின்வருமாறு எழுதினார்:

ஒட்டுவேலை செய்த புகைப்படங்களைக் கொண்டே சோவியத் சகாப்தத்தின் கதையைச் கூறிவிட முடியும் என்ற மட்டத்திற்கு ஸ்ராலினது காலத்தில் பொய்மைப்படுத்தல் நடைபெற்றது. அந்த விளங்கப்படுத்தலே இந்தப் புத்தகத்தின் நோக்கமாய் இருக்கிறது. ஒட்டுவேலை செய்யப்பட்ட புகைப்படங்கள், அவை எடுக்கப்பட்ட சமயத்தில் இருந்தவாறாக, காலவரிசையில் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஒட்டுவேலை படங்களும் மூலப் படங்களின் பக்கத்தில், அல்லது அவற்றின் பின்வரும் பக்கங்களில் பொதுவாக இடம்பிடிக்கின்றன. ஒட்டுவேலை செய்யப்படாத புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களில் ஏராளமானவையும் நிகழ்வின் முக்கியமான தருணங்களை விளக்கும்பொருட்டு சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஸ்ராலினிச தனிநபர் வழிபாட்டை எடுத்துக்காட்டுகின்ற ஓவியங்களும், சித்திரங்களும், மற்ற உதாரணங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அரசியல் ரீதியில், கலாச்சார ரீதியில், மற்றும் காட்சி ரீதியிலும் மிகவும் சுவாரஸ்யமானதும் பரந்துபட்டதுமான படங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன. பொய்மைப்படுத்தலின் புதிய உதாரணங்கள் எப்போதும் புதிதாக வெளிச்சத்துக்கு வந்தவண்ணம் தான் இருக்கின்றன. அதிகமான ஒட்டுவேலையின் காரணத்தால், ஒரு புகைப்படம் விநோதமானதாகத் தெரியும். அதன் மூலப் படத்தைக் கண்டுபிடிக்க வருடங்கள் கூட ஆகலாம் - பல சமயங்களில் ஆகிறது. தேடல் தொடர்கிறது.

2003 இல் கிங் சாதாரண குடிமக்கள்: ஸ்ராலினிடம் பலியானவர்கள் (Ordinary Citizens: The Victims of Stalin) என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்தத் தொகுதியில் இரகசிய போலிஸின் மாஸ்கோ தலைமையகமான லுபியன்காவில் (Lyubianka) சிறைப்படுத்தப்பட்ட சமயத்தில் எடுக்கப்பட்ட சுமார் 150 சோவியத் குடிமக்களது அடையாளப் புகைப்படங்கள் இடம்பெற்றன. கிரிகோரி சினோவியேவ் போன்ற சோவியத் வரலாற்றுப் பிரபலங்கள், இஸாக் பாபேல் போன்ற இலக்கியத் துறை பிரபலங்கள் ஆகியோரும் இந்த அடையாளப் புகைப்படங்கள் எடுக்கப்பட்ட மனிதர்களில் இடம்பெற்றிருந்தனர். ஆயினும் இந்த அடையாளப் புகைப்படங்களில் அநேகமானவை அடையாளம் காணப்படாத “சாதாரண” குடிமக்கள். ஸ்ராலினின் தண்டனை நிறைவேற்றும் ஊழியர்களால் விரைவில் கொல்லப்பட இருந்தவர்கள் என்பது அந்த அத்தனை மனிதர்களுக்கும் பொதுவானதாய் இருந்தது. இந்த புகைப்படங்களில் பலவும் அந்த மனிதர்கள் கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக, சில பேரது விடயத்தில், சில மணி நேரங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்டவையாகும். ஒழிந்துபோக சபிக்கப்பட்ட அந்த மனிதர்களின் சித்திரங்கள் ஆழமான உளைச்சலைத் தரக் கூடியவை ஆகும். ஆனால் கிங் தேர்ந்தெடுத்த அந்த புகைப்படங்கள் உளவியல்ரீதியாக மனதை விட்டு அகலாத ஒரு தாக்கத்தைக் கொடுப்பவையாக ஆவதன் காரணம் என்னவென்றால் அந்த புகைப்படங்கள் யாரும் எதிர்பார்த்திருக்க முடியாத தரத்தை கொண்டிருப்பதே ஆகும். டேவிட் தனது ஒரு முக்கியமான ஒரு விவரிப்பில் குறிப்பிட்டார்:

ஸ்ராலினது இரகசிய போலிசின் மரணகரமான விழிகள்தான், அவர்களுக்கு பலியான நிர்க்கதியான மனிதர்களின் இத்தகைய உணர்ச்சிகரமான சித்திரங்களைக் கொண்டு வந்திருக்க முடியும் என்பது ஒரு திகிலூட்டுகின்ற நகைமுரணாக இருக்கிறது. மேற்கிலான அடையாளப் புகைப்படங்களைப் போல, NKVD இன் புகைப்படங்கள் செயற்கை வெளிச்சத்தைக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கவில்லை. இயற்கை வெளிச்சத்தில் புகைப்படமெடுக்க கூடுதல் நேரம் பிடிக்கும் என்பதால் அந்த மனிதர்கள் கேமராவைப் பார்த்தபடி பலதரப்பட்ட முகபாவங்களைக் காட்டியிருந்திருக்கும்படி ஆனது. இதில் இருக்கும் சாதாரண குடிமக்களில் யாருமே பிளாஷ் பல்ப் வெளிச்சத்தில் திடுக்கிட்டிருக்கவில்லை அல்லது முகம் கூசியிருக்கவில்லை. முகங்கள் மனதை விட்டு அகல மறுப்பவையாக இருக்கின்றன, முகபாவங்கள் பெரும்பாலும் இதயத்தை சுக்குநூறாக்குபவையாக இருக்கின்றன. லென்சுக்குள் நேருக்கு நேராய் பார்க்கும் அவர்களது முகபாவங்கள் எதிர்ப்பை, அலட்சியத்தை, அச்சத்தை அல்லது சில சமயங்களில் பயங்கரமான வெறும் சோகத்தை வெளிப்படுத்துகின்றன. கேள்விகள் நிரம்பிய பார்வைகள் மாறி வலி, பெருமிதம் மற்றும் நேர்மை முன்வருகிறது. ஒரு சிலரது முகங்களில் கோபம் கொப்பளிக்கிறது. சிலர் சித்தரவதையின் அடையாளங்களை வெளிப்படுத்துகின்றனர். சிலர் உடல் நலமின்மையை, நோய்வாய்ப்பட்டிருப்பதை வெளிப்படுத்துகின்றனர். சிலர் பைத்தியம் பிடித்தது போல தென்படுகின்றனர். மிக அதிர்ச்சியூட்டுவதாய், சிலர் புகைப்படக்கருவியை இயல்புமாறாமல் பார்க்கின்றனர், அல்லது ஒரு புன்னகைக் கீற்றை வெளிப்படுத்த முனைகின்றனர்.

2009 இல் டேவிட் ரஷ்ய-சோவியத் வரலாற்றை புகைப்பட வழி விவரிக்கும் தனது மிகப் பிரம்மாண்ட படைப்பான ரஷ்யா மீதான சிவப்பு நட்சத்திரம் புத்தகத்தை நிறைவு செய்தார். லண்டனில் உள்ள டாடே அருங்காட்சியகத்தில் டேவிட் கிங் சேகரத் தொகுதியில் இருந்தான புகைப்படங்கள் மற்றும் சுவரொட்டிகளின் காட்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்த ஒரு புதிய பிரிவின் திறப்புடன் இணைந்து இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. நியாயமான பெருமிதத்துடன் அவர் தானே என்னை அழைத்துச் சென்று அந்தக் கண்காட்சியை முழுக்க சுற்றிக்காட்டினார். அந்தக் கண்காட்சியில் இருந்த ஒவ்வொரு பொருளுமே அக்டோபர் புரட்சியின் மகத்தான மற்றும் துன்பியல்வகையான வரலாற்று விவரிப்பின் பகுதியாக இருந்தது.

டேவிட் கிங்கின் மரணத்தால் உலகம் ஒரு மாபெரும் கலைஞரையும் வரலாற்றாசிரியரையும் இழந்து நிற்கிறது. 1917 ரஷ்யப் புரட்சியின் நூறாவது ஆண்டின் சமயத்தில் இது நடந்திருக்கிறது என்ற உண்மை மனதில் உறைக்கும்போது இழப்பின் உணர்வு மேலும் அதிகமாகிறது. எதிர்வரும் ஆண்டில் டேவிட் எத்தனை எத்தனை விடயங்களை காண்பித்திருக்க முடியும், கூறியிருக்க முடியும்! ஆயினும் கலைஞரும், புரட்சிகர சோசலிஸ்ட்டும் வரலாற்று உண்மையின் பாதுகாவலருமான டேவிட் கிங்கின் படைப்புகள், நூறாவது ஆண்டிலும் சரி அதன் பின்னாலும் சரி, நவீன வரலாற்றின் வித்தாக விளங்கிய மகத்தான நிகழ்வைப் புரிந்து கொள்வதிலும், ஆகவே மனித விடுதலை எனும் இலட்சியநோக்கத்திற்கு ஒரு நின்றுநிலைக்கத்தக்க உத்வேகத்தை வழங்குவதிலும், மிக வலிமையானதொரு பங்களிப்பைச் செய்யும் என்பதில் ஐயமில்லை.