Print Version|Feedback
The case for an active boycott of the Brexit referendum
பிரிட்டன் வெளியேறுவதற்கான வெகுஜன வாக்கெடுப்பை செயலூக்கத்துடன் புறக்கணிக்க
By Chris Marsden 7 June 2016
ஜூன் 23 வெகுஜன வாக்கெடுப்புக்கு மூன்று வாரங்களுக்கும் குறைவாக உள்ள நிலையில், இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் ஓர் அங்கத்துவ நாடாக இருக்க வேண்டுமா என்பதை அது தீர்மானிக்க உள்ளது. அந்த முடிவு, அக்கண்டம் முழுவதிலுமான தொழிலாளர்கள் மீது நீண்டகால அரசியல் விளைவுகளைக் கொண்டிருக்கும்.
பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சி அந்த வெகுஜன வாக்கெடுப்பை செயலூக்கத்துடன் புறக்கணிக்க (active boycott) அழைப்புவிடுக்கிறது.
“மக்கள்" தீர்மானிப்பதை அனுமதிக்கும் ஒரு வழியாக காட்டப்படும் அந்த வெகுஜன வாக்கெடுப்பு, யதார்த்தத்தில், பெரிதும் ஜனநாயக விரோதமானதாகும். அது உத்தியோகப்பூர்வமாக உள்ளடங்கி உள்ள இரண்டு பிரச்சாரங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இரண்டே இரண்டு விருப்பத்தெரிவுகளை மட்டுமே முன்வைக்கிறது. வணிக-சார்பான, சிக்கன நடவடிக்கைகள் சார்பான, இராணுவவாத, தொழிலாள-விரோத, புலம்பெயர்ந்தோர் விரோத சக்திகளால் தலைமை கொடுக்கப்படும் இவ்விரண்டு பிரச்சாரங்களும் பழமைவாத கட்சியின் எதிரெதிரான அணிகளால் தலைமை தாங்கப்படுகின்றன: ஒன்று பிரதம மந்திரி டேவிட் கேமரூன் தலைமையிலானது, மற்றொன்று இலண்டனின் முன்னாள் மேயர் போரிஸ் ஜோன்சன் தலைமையிலானது.
சோசலிச சமத்துவக் கட்சி சமரசமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்கிறது. ஆனால் எமது எதிர்ப்பு வலதில் இருந்து கிடையாது, இடதில் இருந்தாகும்.
ஐரோப்பிய ஒன்றியம் என்பது தங்களுக்குள் சண்டையிடும் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தந்திரங்கள் செய்யும், போட்டி நாடுகளது ஒரு கூட்டமைப்பினதும் மற்றும் நிதியியல் சந்தைகளினதும் கட்டளைகளுக்கு அக்கண்டத்தை அடிபணிய செய்யும் ஒரு இயங்குமுறையாகும். ஆகவே பிரிட்டன் அதிலேயே தங்கியிருக்கலாம் என்ற பிரச்சாரத்திற்கு உழைக்கும் மக்கள் அவர்களது ஆதரவை வழங்க முடியாது. அது பிரிட்டனின் பெருநிறுவன உயரடுக்கின் நலன்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பெருநிறுவன உயரடுக்குள், சர்வதேச அளவில் போட்டியிடுவதற்கான அவற்றின் தகைமைக்கும்—அனைத்திற்கும் மேலாக அக்கண்டத்தின் தொழிலாளர்கள் மீது கடுமையான சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதன் மூலமாக இதை செய்கின்றன—ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராக இராணுவவாதம் மற்றும் போர் திட்டநிரல் ஒன்றை வெற்றிகரமாக பின்தொடர்வதற்கான நேட்டோவின் தகைமைக்கும் இன்றியமையாததாக ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்தைக் கருதுகின்றன.
அதேவேளையில் வெளியேறலாம் என்று எதிர்க்கும் பிரச்சாரம், வெளிநாட்டவர் விரோத போக்குடைய இங்கிலாந்து சுதந்திர கட்சி உட்பட பிரிட்டனின் மிக வலதுசாரி சக்திகளின் மேலாளுமையில் உள்ளது. “புரூசெல்ஸின் அதிகாரத்துவத்திற்கு" எதிரான இவற்றின் அணிதிரள்வு, இலண்டன் நகர பெரு வணிகங்கள் மற்றும் நிதியியல் ஒட்டுண்ணிகளது சர்வாதிகாரத்தின் மீதிருக்கும் சகல கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கான முறையீடு என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. வெளியேறலாம் எனும் பிரச்சாரம், ஐரோப்பிய ஒன்றிய புலம்பெயர்வோரை வெளியேற்றுவதற்காக இங்கிலாந்து எல்லைகள் மீது "திரும்ப கட்டுப்பாட்டை" பெறுவதற்காக ஏறத்தாழ பிரத்யேக கோரிக்கைகளின் மீது ஒருமுகப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வந்த தொழிற் கட்சி மற்றும் பழமைவாத அரசாங்கங்களால் பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட தொழிலாள வர்க்க விரோத நடவடிக்கைகளால் சிதைக்கப்பட்ட அத்தியாவசிய சமூக சேவைகளின் பொறிவுக்கு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறலாம் என்று கூறும் அணி புலம்பெயர்ந்தோரைக் குற்றஞ்சாட்டுகிறது.
மொத்த புலம்பெயர்வோரின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 100,000 க்கு குறைவாக குறைப்பதென்ற அவரது உறுதிமொழியை கேமரூன் பூர்த்தி செய்ய தவறியதற்காக அவருக்கு எதிராக இத்தகைய புலம்பெயர்ந்தோர்-விரோத வீராவேச பேச்சுக்கள் திரும்பாத வரையில், கேமரூனுக்கு அவரது முழு உடன்பாட்டை வெளிப்படுத்துவதைக் காட்டிலும் அதிகமாக வேறெதிலும் விருப்பமிருக்காது.
இந்த வெகுஜன வாக்கெடுப்பில் இந்த பிற்போக்குத்தனமான இரண்டு முகாம்களிடமிருந்தும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நனவுபூர்வமாக ஸ்தாபிப்பதற்கான சிறந்த நிலைமைகளை உருவாக்குவதற்காக நாம் செயலூக்கத்துடன் புறக்கணிக்குமாறு அழைப்புவிடுத்துள்ளோம்.
தொழிலாள வர்க்கத்திற்காக பேசுவோர் வேறு எவரும் இல்லை.
ஜெர்மி கோர்பின் கீழ் தொழிற் கட்சி, தொழிற்சங்க காங்கிரஸூடன் சேர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தங்கியிருக்கலாம் என்பதற்குப் பின்னால் அணிதிரண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் டோரி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது கண்காணிப்பைக் கொண்டுள்ளது என்றும், அக்கண்டத்தின் ஏனைய "முற்போக்கான சக்திகளுடன்" கூட்டணி சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தைச் சீர்திருத்த முடியுமென்றும் அது வாதிடுகிறது.
கிரீஸில் சிரிசாவை மற்றும் பிரான்சில் பிரான்சுவா ஹோலாண்டின் சோசலிஸ்ட் கட்சியை, கோர்பின் அவரது கூட்டாளிகளாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் சிரிசா ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்தைப் பேணுவதற்கான ஒரு நிபந்தனையாக அதற்கு முன்பிருந்த கட்சிகளை விட அதிகமாக கடுமையான சமூக செலவு குறைப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதேவேளையில் ஹோலாண்ட் தொழிலாளர்-விரோத சட்டமசோதாவை திணித்துள்ளார், இது தூண்டிவிட்டுள்ள வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் ஓர் அலையை அவரது அரசாங்கம் மூர்க்கமான ஒடுக்குமுறை உடன் சந்திக்கிறது. கோர்பின் எப்போதேனும் ஆட்சிக்கு வந்தாலும், அவரும் அதையே தான் செய்வார்.
சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) மற்றும் சோசலிஸ்ட் கட்சி போன்ற போலி-இடது குழுக்கள் இடதிலிருந்து வெளியேறும் (Left Leave) விருப்பத்தெரிவை வழங்க கோருகின்றன. ஆனால் அவர்கள் முன்மொழியும் இந்த மாற்றீடானது, ஐரோப்பிய ஒன்றியம் உடைக்கப்பட வேண்டும் அதிலிருந்து எதிர்காலத்தில் வரும் தொழிற் கட்சி அரசாங்கம் ஒரு சில குறைந்தபட்ச சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த முடியும் என்ற வாதத்தை உள்ளடக்கி உள்ளது. இந்த பிழையான பிரமையைப் பின்தொடர்கையில், அவர்கள், தேசியவாதம் மற்றும் புலம்பெயர்ந்தோர் விரோத வார்த்தையாடல்களின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்புணர்வைச் சுரண்டுவதற்காகவே ஐரோப்பாவெங்கிலும் அதிதீவிர வலதின் தகைமை முன்னிறுத்தும் அச்சுறுத்தலை ஒவ்வொரு சூழலிலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட பார்க்கிறார்கள்.
இந்த வாரம் தான், பிரான்சின் தேசிய முன்னணி தலைவர் மரீன் லு பென் RT க்கு ஒரு பேட்டி அளித்திருந்தார், அதில் அவர், “கூலிகளைக் குறைக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய தொழிலாளர் சந்தைக்குள்" வருகின்ற "பத்து மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரை ஐரோப்பிய ஒன்றியம் ஆதரிக்கிறது,” என்றவர் குற்றம்கூறிக்கொண்டார். அவர் தொடர்ந்து கூறுகையில், “ஆகவே உண்மையில் அவர்கள், நீங்கள் அவ்வாறு விரும்பினால், தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக்கொடுக்கிறார்கள்,” என்றார்.
இதில் எதுவுமே Left Leave சேர்ந்தவர்களுக்கு சம்பந்தமில்லாததாக இருக்கின்றது.
“இனவாதிகளுக்கு வெகுஜன வாக்கெடுப்பை விட்டுக்கொடுக்க" அவர்களது மறுப்பைப் பிரகடனப்படுத்தி உள்ள சோசலிச தொழிலாளர் கட்சி அறிவிக்கையில், “ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான விவாதத்தை, இனவாத டோரி கட்சியும் மற்றும் இங்கிலாந்து சுதந்திர கட்சியும் தான், முன்கொண்டு வந்துள்ளன. இதை இடது கொண்டு வரவில்லை. 'பிரிட்டனை வெளியேற்றுவதில்' அவர்கள் தான் மிகவும் பார்வைக்குத் தெரியும் முகமாக இருக்கிறார்கள், நாங்கள் இல்லை. இந்தளவிற்கு உண்மை தான், ஆனால் இதிலிருந்து அவர்கள் தான் ஆதாயமடைவார்கள் என்றாகாது. டோரிக்களின் ஐரோப்பிய ஒன்றிய பிளவுகளில் இருந்து இதுவரையில் மிகப் பெரியளவில் ஆதாயமடைந்திருப்பவர் ஜெர்மி கோர்பின் தான்… ஒருபுறம் கேமரூன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் முதலாளிமார்களுக்கும், மறுபுறம் Farage மற்றும் இனவாதிகளுக்கும் இடையே தேர்ந்தெடுக்குமாறு மக்களுக்குக் கூறுவது அபாயகரமான ஆக்கபூர்வமற்ற எதிர்நடவடிக்கையாகும்,” என்று அறிவிக்கிறது.
சோசலிச தொழிலாளர் கட்சியை பொறுத்த வரையில், தொழிலாளர்களுக்கு உண்மையைக் கூறுவதென்று வருகையில், அதாவது ஒரு வலது சாரியின் வெற்றி … வலது சாரியைப் பலப்படுத்துகிறது என்ற உண்மையைக் கூறுவது, அதற்கு எப்போதுமே "ஆக்கபூர்வமற்ற எதிர்நடவடிக்கையாக" ஆகிவிடுகிறது. மேலும் கோர்பின், அவர் கட்சிக்குள்ளேயே கூட, வலதுசாரிக்கு எதிராக அவர் போராட போவதில்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளார் என்பதுடன், ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்திற்கு ஆதரவை அறிவித்துள்ளார்.
இந்த வெகுஜன வாக்கெடுப்பு, முதலாளித்துவ தேசியவாதமா அல்லது சோசலிச சர்வதேசியவாதமா என்று முன்னோக்கு மற்றும் நிலைநோக்கு மீதான அடிப்படை கேள்விகளை எழுப்புகிறது.
சோசலிச சமத்துவக் கட்சி, ஐரோப்பிய ஒன்றிய உடைவைப் பொருளாதார தேசியவாதம் மற்றும் புலம்பெயர்வோர்-எதிர்ப்பு வெளிநாட்டவர் விரோதத்தின் அடிப்படையில் அறிவுறுத்தவில்லை. அக்கண்டத்தை தேசியவாத அடிப்படையில் உடைப்பதில் இருந்து அல்லாமல், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதில் உள்ளடங்கி உள்ள அரசாங்கங்களுக்கு எதிராக ஒரு பொதுவான போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக, தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒரு சுயாதீனமான வர்க்க முன்னோக்கின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்க வேண்டும் என்று நாம் கூறுகிறோம்.
ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு இடையே, ஒவ்வொரு இடத்திலும், சுதந்திர வர்த்தகம் வர்த்தக போருக்கும், பாதுகாப்பின்மை மற்றும் வேலைவாய்ப்பின்மை நிதியியல் பாதுகாப்புக்கும், சமூக செலவு குறைப்பு செல்வகொழிப்பிற்கும், மக்களின் சுதந்திர நகர்வு எல்லைகளில் முள்கம்பி வேலிகள் மற்றும் சிறைகூடங்களுக்கு ஒத்த தங்கும் கூடாரங்களுக்கும், ஜனநாயகமானது சர்வாதிகாரம் மற்றும் பாசிச வலதின் வளர்ச்சிக்கும் வழிவிட்டு வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொறிவு, கடந்துவரவேண்டிய அதே தேசிய விரோதங்களின் ஒரு வெடிப்புக்கு வழி வகுத்து வருகிறது. தொழிலாள வர்க்க தலையீடு இல்லையென்றால், மனிதயினம் மீண்டும் ஒரு முறை உலக போர் பெருஞ்சுழலுக்குள் இழுக்கப்படுவதே இறுதி விளைவாக இருக்கும்.
ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்குள் ஒரு சோசலிச பிரிட்டனுக்கான போராட்டம் என்பது வெறுமனே ஒரு பிரச்சார கோஷம் கிடையாது, மாறாக ஒவ்வொரு நாட்டிலும் அதே வர்க்க எதிரியை மற்றும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர் என அதே பிரச்சினைகளை முகங்கொடுக்கும் தொழிலாளர்களுக்கான ஒரு அவசரமான அவசியமாகும். இத்தகைய அபாயங்களை முடிவுக்குக் கொண்டு வர, சமூகத்தின் மீதான நிதியியல் பிரபுத்துவத்தின் பிடியை முறித்து, எதிர்விரோத தேசிய அரசுகளாக உலகின் பிளவுகள் மற்றும் இலாபகர அமைப்புமுறை ஆகிய சமூகத்தின் மீதிருக்கும் விலங்குகளிலிருந்து பொருளாதாரம் சுதந்திரப்படுத்தப்பட வேண்டும்.
அத்தகையவொரு தாக்குதலைத் தொடுப்பதில் பிரிட்டிஷ் தொழிலாளர்கள் சக்தி வாய்ந்த கூட்டாளிகளைக் கொண்டுள்ளார்கள்.
பெரு வணிகங்கள் மற்றும் பெரும் செல்வந்தர்களுக்காக மட்டுமே பேசும் பெயரளவிற்கான இடது மற்றும் வலது இரண்டினது உத்தியோகபூர்வ அரசியல் கட்சிகளிடமிருந்து பாரியளவில் அன்னியப்பட்டதால் எரியூட்டப்பட்டு, பிரான்சில் பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள், பெல்ஜியத்தில் ஒரு வேலைநிறுத்த அலை, கிரீஸில் சிரிசா அரசாங்கத்திற்கு எதிரான பொது வேலைநிறுத்தங்கள் என ஐரோப்பா எங்கிலும், தொழிலாள வர்க்கத்தின் கண்டந்தழுவிய பரந்த இயக்கம் ஒன்றின் ஆரம்ப கட்டங்களை நாம் பார்த்து வருகிறோம்.
இந்த வெகுஜன வாக்கெடுப்புக்கு முன்பும் சரி இதற்கு பின்பும் சரி, இந்த சர்வதேச அபிவிருத்திக்கு அரசியல் தலைமை வழங்க சோசலிச சமத்துவக் கட்சி இங்கிலாந்து தொழிலாளர்களது நிலைநோக்கை மாற்றும். சர்வதேச அளவிலான நமது தோழர்களுடன் இணைந்து, நாம் ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புதிய சோசலிச மற்றும் சர்வதேச தலைமையாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகளைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளங்களை அமைப்போம்.