Print Version|Feedback
The Turkish coup: A warning to the international working class
துருக்கிய ஆட்சிக்கவிழ்ப்பு சதி: சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கை
Bill Van Auken
18 July 2016
துருக்கியின் தோற்கடிக்கப்பட்ட ஜூலை 15 இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் அண்ணளவாக 300 பேர் உயிரிழந்ததற்குப் பின்னர் அது நசுக்கப்பட்டதாக தெரிகின்ற போதினும், அந்நாடு புதிய வன்முறை மற்றும் ஒடுக்குமுறை அச்சுறுத்தல்களால் சூழப்பட்டு, அதீத அரசியல் ஸ்திரமின்மையான ஒரு நிலையில் இருக்கிறது.
ஞாயிறன்று மாலை துருக்கியில் இருந்து செய்தி அளித்த உலக சோசலிச வலைத் தள செய்தியாளர், மக்களை மீண்டும் வீதிகளுக்கு திரும்பி பொது சதுக்கங்களைக் கட்டுப்பாட்டில் எடுக்குமாறு வலியுறுத்தும் கைத்தொலைபேசி தகவல்கள் மீண்டும் மக்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக தெரிவித்தார். இது அபாயம் இன்னும் முடிந்துவிடவில்லை என்பதற்கும் எந்தவொரு தருணத்திலும் இராணுவம் அதன் தலையீட்டை புதுப்பிக்கக்கூடும் என்பதற்கும் ஒரு வெளிப்படையான ஒப்புதலாக உள்ளது.
ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் இன் அரசாங்கம் ஆயிரக்கணக்கான அதிகாரிகள் மற்றும் படையினரை காவலில் வைத்திருப்பதற்கு கூடுதலாக சுமார் 6,000 நபர்களை கைது செய்து, ஒரு சர்வாதிகார ஒடுக்குமுறையைக் கொண்டு இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிக்கு விடையிறுத்துள்ளது. 1973 இல் சிலியில் நடந்த இரத்தந்தோய்ந்த கவலைக்குரிய சம்பவங்களை எதிரொலிப்பது போல, சில கைதிகளைப் பிடித்து வைக்க விளையாட்டு மைதானங்களைப் பயன்படுத்தியதில் இருந்தே இந்த சுற்றி வளைப்பின் அளவு எடுத்துக்காட்டப்படுகிறது.
ஆயிரக் கணக்கான நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு எதிராக கைது உத்தரவாணைகள் வழங்கப்பட்டுள்ளன, இவர்கள் இப்போது "ஆயுதமேந்திய பயங்கரவாத இயக்கத்தில்" பங்கெடுத்தவர்களாக முத்திரை குத்தப்பட்டிருக்கிறார்கள். சாத்தியமான அளவிற்கு அனைத்து எதிர்ப்பாளர்களும் உள்ள அரசு அமைப்புகளையும் "சுத்திகரிக்க" அது சூளுரைத்திருப்பதற்கு கூடுதலாக, எர்டோகன் அரசாங்கம், அவர்களுக்கு எதிராக மரண தண்டனையை பிரயோகிப்பதை மீளவும் கொண்டுவர அழுத்தமளிக்கும் என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளது.
துருக்கிய படையினருக்கு எதிராக வன்முறையோடு பழிதீர்க்கும் இஸ்லாமிய கும்பல்களை, இதில் இளம் வயதினர் பலர் கட்டாய சேவையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் அவர்களை வீதிகளில் கட்டவிழ்த்து விட்டுள்ளது. அவர்கள் அடித்து உதைப்பதாகவும், தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களில் வெளியான ஒரு காணொளி இஸ்தான்புல் இன் பொஸ்பொரஸ் பாலத்தில் சிப்பாய் ஒருவரின் தலை துண்டிக்கப்படுவதைக் காட்டுகிறது.
இப்போது கட்டவிழ்ந்து வரும் சூழல்களின் கீழ், துருக்கி ஜனநாயக ஆட்சி வடிவங்களுக்கு ஒத்த ஒரு நிலையையோ அல்லது அரசியல் ஸ்திரப்பாட்டின் எந்தவொரு நிலைமையையோ எவ்வாறு பேணும் என்பதைக் காண்பது சிரமம்.
இதன் பாதிப்புகள் ஒட்டுமொத்த முதலாளித்துவ உலகிற்கும் நீண்டகால தாக்கங்களை கொண்டிருக்கும். துருக்கி எவ்விதத்திலும் தனிமைப்படுத்தப்பட்ட ஓர் அரசியல் அல்லது பொருளாதார பிரதேசம் கிடையாது. ஐரோப்பாவும் ஆசியாவும் சந்திக்கும் புள்ளியில் 75 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாடாக, இது அமெரிக்காவிற்கு அடுத்து அதன் இரண்டாவது மிகப்பெரிய இராணுவத்தைப் பெருமைபடுத்திக் கொண்டு, அமெரிக்க தலைமையிலான நேட்டோ ஏகாதிபத்திய கூட்டணியின் ஒரு முக்கிய அங்கத்துவ நாடாக உள்ளது. இது ஐரோப்பாவில் ஆறாவது மிகப்பெரிய பொருளாதாரமாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஓர் அங்கத்துவ நாடாக இல்லாத போதினும், துருக்கி ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரம் மற்றும் அரசியல் கட்டமைப்புகளுக்குள் நெருக்கமாக ஒருங்கிணைந்துள்ளது.
துருக்கிய வரலாறு, ஆட்சிக்கவிழ்ப்புகளை மற்றும் ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிகளை நிறையவே கொண்டிருந்தாலும், கடந்த இரண்டு தசாப்தங்களில் அதுபோன்றவொரு சம்பவம் நடந்திருக்கவில்லை. 1960, 1971 மற்றும் 1980இல், பெரும்பாலும் இலத்தீன் அமெரிக்கா மற்றும் கிரீஸ், இந்தோனேஷியா மற்றும் ஏனைய இடங்களில் நடந்ததைப் போலவே, அதேகாலக்கட்டத்தில் பெண்டகன் மற்றும் சிஐஏ இன் நெருக்கமான ஆதரவுடன், இராணுவம் துருக்கியில் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
துருக்கி போன்றவொரு நாட்டில் இராணுவத்தின் மிகப்பெரும் பிரிவுகளால் மீண்டுமொருமுறை அதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்தால், துருக்கியில் மட்டுமல்ல, மாறாக உலகளவில் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதிகளின் காலக்கட்டம் திரும்பியுள்ளது என்பதே அதிலிருந்து கிடைக்கும் தவிர்க்கமுடியாத முடிவாக இருக்கும். சமூக சமத்துவமின்மையின் முன்னொருபோதும் இல்லாத மட்டங்கள் மற்றும் கூர்மையடைந்து வரும் புவிசார் அரசியல் மற்றும் இராணுவ பதட்டங்களுக்கு இடையே, மத்திய கிழக்கு, பால்கன்கள் மற்றும் ஏனைய இடங்களிலும் இருபத்தைந்து ஆண்டு கால அமெரிக்க தலைமையிலான போர்களால் எரியூட்டப்பட்ட அதீத வன்முறை, ஸ்திரமின்மை மற்றும் நெருக்கடியானது ஐரோப்பாவின் பிரதான முதலாளித்துவ மையங்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்த பூமி எங்கிலும் இப்போது தவிர்க்க முடியாமல் பரவி வருகிறது.
வாரயிறுதி வாக்கில் இஸ்தான்புல் மற்றும் அன்காராவின் இரத்தந்தோய்ந்த சம்பவங்களுக்கான மூலக்காரணமாக இருந்த இத்தகைய பதட்டங்கள், ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிக்கும் மற்றும் அதற்கு பின்னரும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் அத்துடன் துருக்கியிலேயே கூட இதற்கான அவற்றின் பிரதிபலிப்பில் வெளிப்பட்டுள்ளது.
துருக்கியின் தொழிலாளர்துறை அமைச்சர் சுலைமான் சொய்லு, “இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னால் அமெரிக்கா இருக்கிறது,” என்று குற்றஞ்சாட்டுமளவிற்கு சென்றார். எர்டோகன் அவரே கூட இந்த ஒட்டுமொத்த விவகாரத்தையும் அவரது இப்போதைய எதிரியும் முன்னாள் கூட்டாளியுமான, நாட்டைவிட்டு வெளியேறி பென்சில்வேனியாவில் வாழ்ந்து வருபவரும், வெளிப்படையாகவே அமெரிக்காவிடமிருந்து பாதுகாப்பை அனுபவித்து வருபவருமான அமெரிக்க-ஆதரவிலான இஸ்லாமிய மதகுருமார் பெத்துல்லா கூலன் (Fethullah Gülen) மீதும் மற்றும் அவரை பின்பற்றுபவர்கள் மீதும் சாட்டினார். எர்டோகன், கூலன் மீது குற்றஞ்சாட்டுகையில், அவர் உண்மையில் ஒபாமாவைக் குறித்து தான் பேசுகிறார் என்று போதுமானளவிற்கு நிச்சயமாக கூறலாம்.
அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி குறித்த செய்திக்கு வாஷிங்டனின் ஆரம்ப விடையிறுப்பு ஆகக்குறைந்தது பல அர்த்தங்களை கொண்டிருந்தது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி "துருக்கியினுள் ஸ்திரத்தன்மை, சமாதானம் தொடர வேண்டுமென" அமெரிக்கா விரும்புவதாக மட்டுமே கூறியிருந்தார். ஆனால் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி தோல்வியடைந்து வருவது வெளிப்படையாக ஆனதும் வெள்ளை மாளிகை "ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட துருக்கி அரசாங்கத்திற்கு" ஆதரவை எடுத்துரைத்து ஓர் அறிக்கை வெளியிட்டது.
இதேபோல ஜேர்மன் அரசாங்க சான்சிலர் அங்கேலா மேர்க்கல் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியைக் கண்டிக்க நேரமெடுத்துக் கொண்டார். உத்தியோகபூர்வ அறிவிக்குக்கு பின்னர், ஜேர்மன் ஊடகங்களும் பல அரசியல்வாதிகளும் அவர்களின் கோபத்தை எர்டோகன் மீது மையப்படுத்தி, கூடுதல் அதிகார அரசியலமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அவரை எச்சரிக்கின்ற அதேவேளையில், ஒரு நேட்டோ நாட்டிற்குள் ஓர் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் அடுத்தடுத்த தாக்கங்கள் குறித்து அவர்கள் ஒன்றும் கூறவில்லை.
அமெரிக்கா சம்பந்தப்பட்டிருப்பது குறித்த ஐயப்பாட்டை சாதாரணமாக உதாசீனப்படுத்திவிட முடியாது. வெறுமனே மூன்றாண்டுகளுக்கு முன்னர்தான், ஒபாமா நிர்வாகம் எகிப்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மொஹம்மத் முர்சி தூக்கியெறியப்பட்டதை ஓர் "ஆட்சிக்கவிழ்ப்பு சதியாக" அழைக்க மறுத்து, தளபதி அப்தெல் பதாஹ் அல்-சிசி தலைமையிலான இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஏறத்தாழ முழுமையாக பகிரங்க ஆதரவு வழங்கி இருந்தது. சிசி ஆட்சி அவரது எதிர்ப்பாளர்களை சிறையிலடைத்து, சித்திரவதை செய்து படுகொலை செய்து வந்த நிலையிலும், வாஷிங்டன் அதற்கு தொடர்ந்து இராணுவ உதவிகளைப் பாய்ச்சியது. பின்னர், 2014 இல், ஜேர்மனியுடன் சேர்ந்து, அது உக்ரேன் அரசாங்கத்தை வெளியேற்ற பாசிச-தாக்குமுகப்புடன் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை வடிவமைத்தது.
துருக்கியில் முயற்சிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு நிச்சயமாக அமெரிக்கா மற்றும் ஜேர்மனியால் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, அது வெற்றி அடைந்திருந்தால் ஒபாமா மற்றும் மேர்க்கெலுக்கு அது விரும்பாத ஒன்றாக இருந்திருக்காது என்பதை ஒருவரால் தவிர்க்காமல் இருக்க முடியாது.
சிரியாவில் ஐந்தாண்டு கால உள்நாட்டு போர் சம்பந்தமாக வாஷிங்டன் மற்றும் அங்காராவிற்கு இடையிலான பதட்டங்கள் தீவிரமடைந்துள்ளன, ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்கா-முடுக்கிவிட்ட அப்போரில் பினாமி படைகளாக சேவையாற்றி வரும் இஸ்லாமிய போராளிகள் குழுக்களுக்கு எர்டோகன் அரசாங்கம் ஒரு முக்கிய ஆதரவாளராக இதுவரையில் செயல்பட்டுள்ளது. அதேவேளையில் சிரிய குர்திஷ் படைகளுடன் வாஷிங்டன் நெருக்கமாக இணங்கி இருப்பதை அன்காரா அதிகரித்த கோபத்துடன் பார்க்கிறது. சிரியாவில் குர்தியர்களின் இராணுவ வெற்றிகள் துருக்கிக்கு உள்ளேயே குர்திஷ் தன்னாட்சிக்கான கோர்க்கைகளைப் பலப்படுத்துமென அது அஞ்சுகிறது.
அண்டையில் நடக்கும் போரால் துருக்கி முன்பினும் அதிகமாக அரசியல் மற்றும் பொருளாதார விலைகளை கொடுக்க வேண்டியிருக்கின்ற நிலையில், ஒரு ரஷ்ய போர்விமானத்தைத் துருக்கி நவம்பர் 2015 இல் பதுங்கி இருந்து சுட்டுவீழ்த்தியதற்காக கடந்த மாதம் எர்டோகன் ரஷ்யாவிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். ரஷ்யா உடன் முயற்சிக்கப்பட்ட சமரசம், அமெரிக்க அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மீறி சிரியாவுடன் ஓர் அரசியல் ஏற்பாடு செய்து கொள்வதுடன் சம்பந்தப்பட்டு இருப்பதாக செய்திகள் குறிப்பிட்டன.
அமெரிக்கா, ஐரோப்பாவில் அதன் அணுஆயுதங்களுக்கான மிகப்பெரிய கிடங்குகளைக் கொண்டுள்ள மூலோபாய முக்கியத்துவம் கொண்ட இன்செர்லிக் (Incirlik) விமான தளத்தை அணுகும் உரிமையை அமெரிக்க போர்விமானங்களுக்கு பதிலாக, ரஷ்ய போர்விமானங்களுக்கு வழங்க எர்டோகன் அச்சுறுத்தி உள்ளார் என்றும் கூட அங்கே செய்திகள் உள்ளன. அத்தளத்தின் துருக்கிய தளபதி இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் ஒரு தலைவரென்றும், இப்போது அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிக்கு சில வாரங்களுக்கு முன்னர் வாஷிங்டன் மற்றும் அங்காராவிற்கு இடையே பதட்டங்கள் அதிகரிப்பதை குறித்து பிரிட்டிஷ் Telegraph நாளிதழ் விவரித்திருந்தது:
“இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு முன்னதாக இந்த மாதத்தில் திரு. எர்டோகன் திடீரென ஒரு அதிரடியான இராஜாங்க புரட்சியை தொடங்கினார். துரிதமான வெற்றியுடன், அவரது அரசாங்கம், ரஷ்யா, எகிப்து மற்றும் இஸ்ரேல் உடனான அதன் உறவுகளை செப்பனிட்டது. புட்டின், சிசி மற்றும் நெத்தன்யாஹூ ஐ படுகொலையாளர்கள் என்று திரு. எர்டோகன் விவரித்தமை இரவோடு இரவாக மறந்து போனது. பின்னர், இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு முன்னதாக, துருக்கியின் புதிய பிரதம மந்திரி சிரியா உடனான உறவுகளை மீளமைப்பதற்காக கூட பேசியிருந்தார்.”
“அதேநேரத்தில், அமெரிக்கா உடனான உறவுகள் அதள பாதாளத்திற்குள் வீழ்ந்துள்ளது. இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை தொடர்ந்து சிரியாவினுள் உள்ள ISIL க்கு எதிராக அவர்களது இன்செர்லிக் (Incirlik) விமானத் தளத்திலிருந்து அமெரிக்க விமானங்கள் மற்றும் டிரோன்களை, துருக்கியின் மீது ஏற்படுத்தப்பட்டிருந்த "விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதியில்" செலுத்தக்கூடாது என்பதையும் துருக்கிய அரசாங்கம் உள்ளடக்கிய போது, பெண்டகன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. இன்னும் மோசமாக, அந்த இராணுவத் தளத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் அந்த துருக்கிய விமானத் தளத்தின் தளபதி கைது செய்யப்பட்டார், இது ஆட்சிகவிழ்ப்பாளர்கள் மற்றும் பெண்டகனுக்கு இடையே அவர் 'இடைதரகராக' இருந்தார் என்ற வதந்திகளை துருக்கியில் தூண்டியது. அச்செய்தி வெளிநாட்டில் தட்டிக்கழிக்கப்படலாம், ஆனால் அது திரு. எர்டோகனின் ஆதரவு தளம் எந்தளவிற்கு அதன் அமெரிக்க கூட்டாளியிடம் இருந்து அன்னியப்படுகிறது என்பதற்கு இதுவொரு அறிகுறியாகும்,” என்று குறிப்பிட்டது.
என்ன மாதிரியான முக்கியமான பதட்டங்களும் சூழ்ச்சிகளும் இந்த சம்பவங்களை உயர்த்தி இருந்தாலும், தெளிவாக முன்நிற்கும் கேள்வி இதுதான்: அரசியல் அரங்கில் ஓர் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் அச்சுறுத்தலை கொண்டிருக்கும் நேட்டோ அங்கத்துவ நாடு துருக்கி மட்டுந்தானா? சங்கிலி முதலில் அதன் பலவீனமான இணைப்பில் தான் உடையும், ஆனால் சங்கிலி முழுமையாக உடைகின்றது என்பதுடன், அச்சுறுத்தல் அனைவருக்குமாய் உள்ளது என்பதையே சமீபத்திய அபிவிருத்திகள் எடுத்துக்காட்டுகின்றன.
பிரிட்டன் வெளியேற்றமானது இங்கிலாந்து உடைவதற்கும் ஒட்டுமொத்தமாக ஐரோப்பிய ஒன்றியமே சிதைவதற்கும் அச்சுறுத்துகின்ற நிலையில், இரண்டு பிரதான கட்சிக்களும் ஆழ்ந்த நெருக்கடிக்குள் வீழ்ந்துள்ள பிரிட்டனில் என்ன நடக்கும்? தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின் பிரதம மந்திரியானால் அச்சம்பவத்தின் மீது ஓர் "இராணுவ கலகம்" குறித்து சமீபத்தில் தான் இராணுவத் தளபதிகள் அச்சுறுத்தி இருந்தனர். கோர்பினை நீக்குவதற்காக கட்சிக்குள்ளே ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்காக முன்நின்று வரும் அக்கட்சியின் தலைமையில் உள்ள கோர்பினின் எதிரிகள், இராணுவத்தின் ஆதரவைப் பெறும் ஒரு முயற்சியில் அணுஆயுத பிரயோகத்திற்கும் அவர்களது விருப்பத்தை அறிவித்துள்ளனர்.
பிரான்சில் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் நீஸ் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, அந்நாட்டின் அவசரகால நெருக்கடி நிலையை நீட்டித்துக் கொண்டே இருப்பது சட்டத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு குடியரசு என்ற அந்நாட்டின் அந்தஸ்தை ஆபத்திற்குட்படுத்தும் என்று எச்சரித்துள்ளார். இருப்பினும் ஒரு சிறிய உத்தரவில், அவர் அந்த அசாதாரண அதிகாரங்களை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடித்ததுடன், இராணுவத்தை வீதிகளுக்குள் இறங்க அழைப்பு விட்டார்.
அமெரிக்காவிலேயே கூட, பாசிசவாத குடியரசு கட்சி வேட்பாளர் டோனால்ட் ட்ரம்ப் இன் தேர்தல் வெற்றி வாய்ப்புடன், முதலாளித்துவ இருகட்சி ஆட்சிமுறை ஒரு இறுதி நெருக்கடி நிலையில் உள்ளது. வெளிநாட்டில் முடிவில்லா போர் என்பது தவிர்க்க முடியாதவாறு உள்நாட்டில் ஒடுக்குமுறையுடன் சேர்ந்துள்ளது, இது “பயங்கரவாதத்திற்கு" எதிராக போரிடுதல் என்ற பெயரில் இருந்தாலும் தொழிலாள வர்க்கத்திற்குள் அதிகரிக்கும் எதிர்ப்பு மற்றும் தீவிரமயப்படலுக்கு எதிராக திருப்பி விடப்பட்டு, பொலிஸ் மற்றும் இராணுவத்தின் அதிகரித்த ஒருங்கிணைப்பை உள்ளடக்கி உள்ளது.
துருக்கிய சம்பவங்கள் உலகெங்கிலுமான நாடுகளில் வரவிருப்பதன் ஒரு முன்னறிவிப்பாகும், இதில் முதலாளித்துவ ஜனநாயக ஆட்சி வடிவங்கள் ஓர் உலகளாவிய பொருளாதார நெருக்கடி, இராணுவவாதத்தின் இடைவிடாத அதிகரிப்பு மற்றும் அனைத்திற்கும் மேலாக வர்க்க போராட்டத்தின் தீவிரப்படல் ஆகிய சுமையின் கீழ் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக மாறி வருகின்றன.