Print Version|Feedback
One year since Syriza’s betrayal in Greece
கிரீஸில் சிரிசாவின் காட்டிக்கொடுப்பின் ஓராண்டுக்கு பின்னர்
Bill Van Auken
15 July 2016
பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் தலைமையில் சிரிசா அரசாங்கம் ("தீவிர இடதுகளின் கூட்டணி”) கிரேக்க தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக நடத்திய வரலாற்று காட்டிக்கொடுப்பிலிருந்து ஓராண்டை இவ்வாரம் குறிக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியம் கோரிய சிக்கன கொள்கைகளை எதிர்ப்பதற்கான உறுதிமொழி மற்றும் தொழிலாள வர்க்கத்தின் போர்குணம் மிக்க ஓர் அலை ஆகியவற்றால் ஜனவரி 2015 இல் அதிகாரத்திற்கு வந்த பின்னர் ஏழே மாதங்களில், சிரிசா அதன் வலதுசாரி முன்னோடிகள் முயன்றதைக் காட்டிலும் மிக கடுமையாக சிக்கன வேலைத்திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்தியது.
சிப்ராஸ் அரசாங்கம் அழைப்புவிடுத்த ஜூலை 5 வெகுஜன வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய "முக்கூட்டு" கோரிய சிக்கனப் பொதிக்கு எதிராக கிரேக்க மக்கள் பிரமாண்டமாக வாக்களித்த தினத்திற்கும், பெரும்பான்மையினர் நிராகரித்திருந்த வெட்டுக்களை விட இன்னும் ஆழமான வெட்டுக்களை உள்ளடக்கிய ஒரு பிணையெடுப்பு உடன்படிக்கையை ஜூலை 13 அன்று சிரிசா அரசாங்கம் ஏற்க ஒப்புக் கொண்ட தினத்திற்கும் இடையே ஒரே வாரத்திற்குள் இந்த முற்றுமுழுதான காட்டிக்கொடுப்பு வெளிப்பட்டது.
கிரீஸிலும் மற்றும் சர்வதேச அளவிலும் போலி-இடது அமைப்புகளின் ஒட்டுமொத்த பரிவாரமும் அந்த வெகுஜன வாக்கெடுப்பை சிரிசா மற்றும் சிப்ராஸ் போராடுவதற்கு தீர்மானகரமாக இருப்பதற்கான ஒரு அறிகுறியாக பாராட்டிய போது, உலக சோசலிச வலைத் தளம் அதன் ஜூன் 27, 2015 அறிக்கையில், சிப்ராஸ் இன் வெகுஜன வாக்கெடுப்பானது "தொழிலாளர்கள் மற்றும் பரந்த நடுத்தர வர்க்க பிரிவுகளை விலையாக கொடுத்து கிரீஸை வங்கிகள் கொள்ளையடிப்பதற்கு ஒரு ஜனநாயக சட்டப்பூர்வ மறைப்பை வழங்குவதற்காக வடிமைக்கப்பட்ட ஒரு பிற்போக்குத்தனமான மோசடியாகும்" என்று எச்சரித்தது.
அந்த வாக்கெடுப்பு முடிந்தபோது, சிப்ராஸ் இன் எரிச்சலூட்டும் சூழ்ச்சி அவரையே திருப்பி தாக்கியது. அவரது சொந்த அடிபணிவுக்கு அவர் கிரேக்க உழைக்கும் மக்களை குறைகூற அனுமதிக்கும் வகையில், சிப்ராஸூம் அவரது சக சிரிசா தலைவர்களும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தினது அச்சுறுத்தல்களால் கிரேக்க உழைக்கும் மக்கள் மிரண்டு சிக்கனப் பொதிக்கு "ஆம்" என்று வாக்களிப்பார்கள் என்று கணக்கிட்டிருந்தபோது, அதற்கு மாறாக அவர்கள் பாரியளவில் "வேண்டாம்" என்று வாக்களித்து, முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு நிஜமான போராட்டத்திற்கு அவர்கள் தயாராக இருப்பதை சமிக்ஞை செய்தனர். அதிர்ந்து பீதியுற்று, சிப்ராஸூம் அவரது மந்திரிசபையும் சாத்தியமான அளவிற்கு உடனடியாக "முக்கூட்டு" உடனான அவர்களின் பிற்போக்குத்தனமான உடன்படிக்கையை முடிவு செய்ய நகர்ந்தனர்.
இன்று கிரேக்க தொழிலாளர்கள் அந்த விளைவுகளை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். அந்நாட்டின் பொருளாதாரம் சுமார் ஒரு கால்வாசி சுருங்கி, தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. 25 வயதிற்கு கீழ் இருக்கும் தொழிலாளர்களில் பாதி பேருக்கு வேலையில்லை மற்றும் ஓய்வூதியதாரர்கள் அவர்களின் வருவாயில் சுமார் மூன்றில் ஒரு பங்கு வெட்டப்படுவதை கண்டு வருகின்ற இந்த நிலைமைகளின் கீழ், சமூக பாதுகாப்பு வலையத்தில் என்ன சிறிது மிஞ்சியிருக்கிறதோ அதுவும் சிதைக்கப்பட்டு வருகிறது. புதிய வெட்டுக்களும், அதனோடு தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகள் மீது பெரிதும் பலமாக விழக்கூடிய தொடர்ச்சியான பின்னோக்கிய வரிகளும் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
வரவிருக்கும் தசாப்தங்களில் 1930 களது பெருமந்தநிலைமையின் பழைய நிலைமைகளை திணிக்கும் வகையில், சிரிசா அரசாங்கம் இதற்கிடையே, இந்த சிக்கன முறையை நிரந்தரமாக்கும் இயங்குமுறைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அங்கே சிரிசா அரசாங்கத்திற்கு எதிராக அதிகரித்து வரும் கோபம், அதன் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகள் மே மாதம் நடத்திய மூன்று நாள் வேலைநிறுத்தத்தில் வெளிப்பட்டது. இந்த காட்டிக்கொடுப்பை அது எவ்வாறு நடத்தியது என்று தொழிலாள வர்க்கம் அது கடந்து வந்துள்ள இந்த முக்கிய மூலோபாய அனுபவத்தின் ஒரு இருப்புநிலை கணக்கைக் குறித்து ஓர் ஆழ்ந்த அரசியல் பகுப்பாய்வை செய்வதே, இத்தகைய நிலைமைகளின் கீழ் கிரீஸ் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, மாறாக சர்வதேச தொழிலாளர்களுக்குமான மிகவும் தீர்க்கமான கேள்வியாகும்.
உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும் மட்டுமே அதுபோன்றவொரு தொடர்ச்சியான மற்றும் பொருத்தமான பகுப்பாய்வை வழங்கியுள்ளது. அந்த காட்டிக்கொடுப்பு பூரணமாக நிறைவேற்றப்படும் வரை கூட காத்திருக்காமல், அதற்கு வெகு முன்னரே (ஜனவரி 24, 2015 இல்) எச்சரிக்கையில், சிரிசா அதிகாரத்திற்கு வருவது "நெருக்கடியிலிருந்து வெளி வருவதற்குரிய ஒரு பாதையை" அல்ல, மாறாக "ஒரு பெரும் அபாயத்தையே" பிரதிநிதித்துவம் செய்கிறது என்று குறிப்பிட்டது.
உலக சோசலிச வலைத் தளம் தொடர்ந்து விளக்குகையில், “இடதுசாரி வேஷம் ஏற்றிருந்தாலும், சிரிசா, செல்வசெழிப்பான நடுத்தர வர்க்க அடுக்குகளைச் சார்ந்துள்ள ஒரு முதலாளித்துவ கட்சியாகும். இந்த சமூக ஒழுங்கைப் பேணுவதன் மூலமாக தங்களின் தனிச்சலுகைகளைப் பாதுகாக்க முயலும் தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள், கல்வியாளர்கள், தொழில் வல்லுனர்கள் மற்றும் நாடாளுமன்ற காரியஸ்தர்களால் அதன் அரசியல் தீர்மானிக்கப்படுகிறது,” என்று விவரித்தது.
சிரிசா தேர்ந்தெடுக்கப்பட்டதை தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெற்றியாக மெச்சுவதில் அவர்களுடன் நாம் இணையாததற்காக, சிரிசாவின் சந்தர்ப்பவாத அரசியல் மற்றும் உயர்மட்ட நடுத்தர வர்க்க பிரிவுகளைப் பகிர்ந்து கொள்ளும் குட்டி-முதலாளித்துவ போலி இடதுகளால் நாம் "குறுங்குழுவாதிகளாக" கண்டிக்கப்பட்டோம். சிரிசா உடனான "அனுபவத்தின்" ஊடாக செல்லாமல் தொழிலாள வர்க்கத்துடன் எந்தவொரு தலையீடும் செய்ய முடியாது, அத்தகைய "அனுபவத்திலிருந்து" தான் அது ஏதோவிதத்தில் அரசியல்ரீதியாக தெளிவுபடுத்தப்பட்டு பலமடைய முடியும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.
பிரெஞ்சு புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) முதற்கொண்டு அமெரிக்காவில் சர்வதேச சோசலிச அமைப்பு (ISO), ஜேர்மனியில் இடது கட்சி மற்றும் பிரேசிலிய PSTU வரையில் சிரிசா மீது உத்வேகத்தோடு பிரமைகளை விதைத்த அதே கூறுபாடுகள், இப்போது, காட்டிக்கொடுப்புகள், பின்னடைவுகள் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்குள் நிலைநோக்கைப் பிறழச் செய்துள்ள இந்த “அனுபவத்திலிருந்து” எந்தவித படிப்பினைகளும் பெறுவதை விடாப்பிடியாக எதிர்க்கின்றனர்.
இத்தகைய அரசியல் குழுக்களைப் பொறுத்த வரையில், சிரிசாவை சுற்றி அவை ஈர்க்கப்பட்டிருந்தமை ஒரு குழப்பமான அரசியல் விடயமாகவோ அல்லது தவறான அடையாளப்படுத்தலாகவோ அவற்றிற்கு இருக்கவில்லை. உண்மையில் அதன் வேலைத்திட்டம் முதற்கொண்டு ஏகாதிபத்திய முகவர் சிப்ராஸ் உள்ளடங்கலாக அதன் தலைமையின் குணாம்சம் வரையில், அக்கட்சியின் பிற்போக்குத்தனமான மற்றும் முதலாளித்துவ குணாம்சத்தை மறுக்கவே இயலாது. ஆனால் அதற்கு பதிலாக அவர்கள் சிரிசாவிற்குப் பின்னால் அணிதிரண்டிருந்தனர், ஏனென்றால் அவர்களும் அதே மாதிரியான அரசியலை தழுவியிருந்தனர் என்பதாலும், மேலும் அது அதிகாரத்திற்கு வந்தாலும் அதே மாதிரியான வக்கிரமான தொழிலாள வர்க்க விரோத கொள்கைகளையே அது நடைமுறைப்படுத்தும் என்பதாலும் ஆகும்.
ஓர் அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்திற்கு முன்னர் ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு விரோதமான நான்காம் அகிலத்துடன் உடைத்துக் கொண்ட போலி-இடது பிரசுரமான International Viewpoint இன் பக்கங்களில் இத்தகைய அரசியல் வெட்கமின்றி வெளிப்பாட்டைக் கண்டுள்ளது. பெரும்பாலும் சிரிசாவின் இடது அரங்கத்தில் (Left Platform) இருந்து வெளியேறிய கிரேக்க போலி-இடது அமைப்புகளின் ஒரு கூட்டணியான மக்கள் ஐக்கியத்தின் (Popular Unity) கடந்த மாத கருத்தரங்கில் கிரேக்க அரசு-முதலாளித்துவ குழுவான சர்வதேச தொழிலாளர் இடதின் (Internationalist Workers Left – DEA) தலைவர் அந்தோனிஸ் டாவானேலோஸ் ஆல் ஜூலை 13 அன்று பிரசுரிக்கப்பட்ட அறிக்கை, அக்காட்டிக்கொடுப்பின் நினைவுதினத்தைக் குறித்தது.
சிப்ராஸ் மந்திரிசபை முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சிரிசாவின் மத்திய குழு முன்னாள் அங்கத்தவர்களின் தலைமையில், முன்னதாக இத்தகைய குழுக்கள் சிரிசாவை அழுத்தமளித்து இடதுக்கு நகர்த்த முடியுமென்ற பிரமையை ஊக்குவிப்பதில் தங்களைத்தாங்களே அர்ப்பணித்திருந்தன. சிப்ராஸ் அரசாங்கம் ஐரோப்பிய வங்கிகள் கோரிய கொள்கைகளை நடைமுறைப்படுத்திய வேளையில் அதற்கு ஒரு இடது மூடுதிரையை வழங்குவதே அவற்றின் நிஜமான செயல்பாடாக இருந்தது. கடந்த ஆண்டின் காட்டிக்கொடுப்புக்குப் பின்னரும் கூட அவர்கள் சிரிசாவிற்குள் இருந்தனர், தாங்கள் தூக்கியெறியப்படுவோம் என்பது அவர்களுக்கு வெளிப்படையாக ஆனபோதுதான் அவர்கள் அதிலிருந்து வெளியேறினர்.
“குறிப்பாக சிரிசா ஆட்சிகாலத்தைக் குறித்து ஓர் அரசியல்-தத்துவார்த்த மதிப்பீட்டின் மீது வலியுறுத்தலை" வைப்பவர்களை நிராகரித்து, அதற்கு பதிலாக "சிலவேளை ஒன்றிலிருந்து ஒன்று வெகுதூரம் விலகிய அரசியல் நிலைப்பாடுகளை கொண்டவற்றின்" அடிப்படையில் "ஒரு புதிய கூட்டணியை" அபிவிருத்தி செய்யும் பணியை வலியுறுத்தி டாவானேலோஸ் அவரது அறிக்கையை திட்டவட்டமாக தொடங்குகிறார்.
யதார்த்தம் என்னவென்றால், யூரோவிலிருந்து விலகி ட்ராக்மாவை மறுஅறிமுகம் செய்ய “கிரீஸ் வெளியேற்றத்தை" (Grexit) வடிவமைப்பதன் அடிப்படையில் ஒரு கடுமையான தேசியவாத திட்டநிரலே மக்கள் ஐக்கியத்திற்குள் (Popular Unity) மேலோங்கி உள்ளது. அதுவும் சிரிசாவின் கொள்கைகளே என்பதைத் தவிர அதில் சமூக செலவின குறைப்பை எதிர்க்கும் வேலைத்திட்டம் ஒன்றும் கிடையாது, வெறுமனே அது சிக்கன திட்டங்களை ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து கிரேக்க முதலாளித்துவ வர்க்கத்திடம் மாற்றுவதற்கு கோருகிறது.
“ஒன்றிலிருந்து ஒன்று வெகுதூரம் விலகிய" அரசியல் நிலைப்பாடுகள் குறித்து டாவானேலோஸ் பேசுகையில் அவர் உண்மையில் என்ன குறிப்பிடுகிறார் என்றால் அவரும் அவரைப் போன்ற போலி-இடதுகளும் முற்றிலும் பிற்போக்குத்தனமான தேசியவாத வேலைத்திட்டத்திற்கு ஒரு இடது மூடுதிரையை வழங்குவதற்கு செய்த முயற்சிகளை ஆகும்.
பிரிட்டனில் அதீத வலதின் செல்வாக்கு பெற்றிருந்த மற்றும் வெளிநாட்டவர் விரோத உணர்வு பூசப்பட்ட பிரிட்டன் வெளியேறுவதற்கான வெற்றியால் மக்கள் ஐக்கியத்தின் அங்கத்தவர்கள் "பெருமகிழ்ச்சி" அடைந்ததை அவர் ஒப்புக் கொள்கிறார், மேலும் அதேபோன்ற போக்குகள் கிரேக்க போலி-இடது கூட்டணி எங்கிலும் ஓடிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார்.
“தேசிய இறையாண்மையை பாதுகாக்கும் குழுக்கள்” மற்றும் கிரீஸின் "எல்லை கட்டுப்பாட்டு" கொள்கைகள் உருவாக்குவதற்கான கருத்தரங்கின் முன்மொழிவுகளை அவர் மேற்கோளிடுகிறார். மக்கள் ஐக்கியம் இவ்விடயத்தில், சிரிசா அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்ற கடுமையான புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைகளையே எதிரொலிக்கிறது. சிப்ராஸ் அரசாங்கம் அகதிகளை பாரியளவில் மத்திய கிழக்கு கொலைகளத்திற்கு திரும்ப அனுப்புவதற்காக ஏப்ரலில் தொடங்கி அவர்களைச் சுற்றி வளைக்கவும் மற்றும் நிர்பந்திக்கவும் தொடங்கியது.
அது போன்ற பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு ஒரு போலியான "சோசலிச" மூடிமறைப்பை வழங்குவதே டாவானேலோஸ் மற்றும் அவரது வகையறாக்கள் எடுத்துள்ள பணியாகும்.
அவரது கணிப்பின் முடிவில் டாவானேலோஸ் இவ்வாறு நிறைவு செய்கிறார், “சிரிசாவின் சரணடைவு மற்றும் இடதின் உடைவை அடுத்து, மக்கள் ஐக்கியம் தான் தீவிர இடது கூட்டத்தின் எதிர்ப்பை மறுகுழுவாக்கம் செய்யும் முக்கிய களமாக உள்ளது.”
கிரீஸில் “இடது உடைந்துள்ளது" என்றால் அது சிரிசாவின் காட்டிக்கொடுப்புக்கு வழிவகுத்த மற்றும் இந்த அனுபவத்திலிருந்து தொழிலாள வர்க்கம் படிப்பினைகளை எடுப்பதைத் தடுக்க வேலை செய்த இத்தகைய அமைப்புகளது அரசியலின் நேரடி விளைவாகும். அவர்கள் "மறுகுழுவாக்கத்தில்" உறுதிபூண்டிருக்கிறார்கள் என்றால் அது வரவிருக்கும் காலத்தில் இன்னும் மோசமான குற்றங்களை நடத்துவதற்கு தங்களைத்தாங்களே தயாரிப்பு செய்வதற்காக மட்டுமே ஆகும்.
அனைத்துலகக் குழுவின் சிரிசா குறித்த பகுப்பாய்வும் மற்றும் அனைத்து போலி இடது அனுதாபிகளையும் அம்பலப்படுத்துவதற்காக அது நடத்திய பாரபட்சமற்ற போராட்டமும் முற்றிலுமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
"கிரீஸில் சிரிசா காட்டிக்கொடுப்பின் அரசியல் படிப்பினைகள்" என்ற நவம்பர் 2015 அறிக்கையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பின்வருமாறு வலியுறுத்தியது:
“சிரிசா அனுபவமானது, தொழிலாள வர்க்கம், இளைஞர்கள், மற்றும் சோசலிச எண்ணம் கொண்ட புத்திஜீவிகள், அடிப்படையான அரசியல் மறு-நோக்குநிலை கொள்ள வேண்டிய அவசியத்தை சுட்டிக் காட்டுகிறது. 1930 களின் பின்னர் கண்டிராத ஒரு உலகப் பொருளாதார நெருக்கடிக்கும் ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தின் கொடூரமான தாக்குதலுக்கும் முகம்கொடுக்கின்ற நிலையில், தொழிலாள வர்க்கத்தால் புதிய, 'இடது' முதலாளித்துவ அரசாங்கங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியாது.”
இந்த மதிப்பீடு வெறுமனே கிரீஸிலிருந்து மட்டும் உருவாகவில்லை, மாறாக ஸ்பெயினில் பெடெமோஸ், பிரிட்டனின் தொழிற் கட்சியில் ஜெர்மி கோர்பினின் வளர்ச்சி, அமெரிக்காவில் பேர்ணி சாண்டர்ஸ் இன் ஜனநாயகக் கட்சி பிரச்சாரம் இவற்றில் இருந்தும் தான்.
சிரிசா போன்ற போலி-இடது கட்சிகளுக்கு எதிரான ஒரு சமரசத்திற்கு இடமற்ற போராட்டத்திற்கூடாக தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் தலைமை வழங்கும் நிஜமான புரட்சிகர மார்க்சிச கட்சிகளைக் கட்டமைப்பதில் மட்டுந்தான் முன்னோக்கிய பாதை அமைந்துள்ளது. இத்தகைய அனுபவங்களிலிருந்து படிப்பினைகளை எடுக்கவும் மற்றும் அவற்றின்படி செயல்படவும், ICFI உடன் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்க தொடங்குபவர்களுக்கு இதுவே சரியான தருணமாகும்.
கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்: