Print Version|Feedback
France’s permanent state of emergency
பிரான்சின் நிரந்தர அவசரகால நிலை
Alex Lantier
21 July 2016
நவம்பர் 13 பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தினால் திணிக்கப்பட்ட அவசரகாலநிலையை, தொடர்ந்து நான்காம் முறையாக நீடிப்பு செய்வதற்கு, புதனன்று அதிகாலை 4:53 மணியளவில் பிரான்சின் தேசிய சட்டமன்றம் மிகப்பெரும்பான்மை ஆதரவுடன் வாக்களித்தது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியின் பொறிவுக்குப் பிந்தைய காலத்தில் பிரான்சில் மிக நீண்ட அவசரகாலநிலையாக ஆகியிருக்கக் கூடிய ஒன்று 489 க்கு 26 என்ற விகிதத்திலான ஆதரவு வாக்குகளில் மேலும் நீடிக்கப்பட்டிருக்கிறது.
பிரான்சில் மிக சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கான - இதில் வெளிப்படையாக மனநிலை சரியாக இல்லாத, கடன்முற்றிய நிலையிலிருந்த ஒரு பிராங்கோ-துனிசிய சாரதி நீஸ் நகரில் பாஸ்டிய் தின கொண்டாட்டத்தில் இருந்த ஒரு கூட்டத்திற்குள் லாரியை செலுத்தியதில் 84 பேர் கொல்லப்பட்டனர் 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் - ஒரு தற்காலிக பதிலிறுப்பே இது என்பதாக கூறப்படும் உத்தியோகபூர்வ கூற்றுகள் ஏற்கப்படுவனவாக இல்லை. ஐரோப்பாவெங்கிலும் முதலாளித்துவ ஜனநாயகம் ஒரு ஆழமான நெருக்கடிக்கு உட்படுகின்ற வேளையில், ஆளும் உயரடுக்கானது, கடுமையான சமூகப் பதட்டங்களுக்கு முகம்கொடுக்கின்ற நிலையில், நிரந்தரமான அவசரகாலநிலை ஒன்றை திணிப்பதையும் ஜனநாயக ஆட்சி வடிவங்களில் இருந்து சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கு உருமாறுவதையும் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
உள்துறை அமைச்சரான பேர்னார்ட் கஸ்னேவ் Le Monde பத்திரிகைக்கு புதன்கிழமை அளித்த ஒரு நீண்ட நேர்காணலில், அவசரகால நிலையானது பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு தற்காலிக, சட்டரீதியான கொள்கை என்பதில் மக்களுக்கு நம்பிக்கையேற்படுத்துவதற்கு முயன்றார். “அவசரகாலநிலை என்பது நிரந்தரமான ஒரு விடயமாக இருக்க முடியாது” என்ற அவர் மேலும் கூறினார்: “இது ஒரு விதிவிலக்கு நிலை அல்ல, இது சட்ட ஆட்சியின் பகுதியே. பதில்தாக்குதல்களும் கூடுதல் கண்காணிப்புக்கான அழைப்புகளும் இருக்கலாம் என்பதையே நீஸ் தாக்குதல் காட்டுகிறது. ஒரு அபாயத்தின் உடனடித் தன்மையையே அவசரகாலநிலை நீடிப்பதை நியாயப்படுத்துகிறது.”
கஸ்னேவின் நம்பிக்கையேற்படுத்தல் முயற்சிகள் மேலோட்டமாய் பார்த்தாலே அபத்தமானவை. அவருடைய அத்தனை வாதங்களுமே ஜனநாயக உரிமைகளை நிரந்தரமாக அழிப்பதை நியாயப்படுத்தும் நோக்கமுடையவையாக இருக்கின்றன. மானுவல் வால்ஸ் சட்டமன்றத்தில் கூறியதைப் போல, கணக்கிலடங்காத எதிர்காலத்திற்கு நவம்பர் 13 தாக்குதல்கள் மற்றும் நீஸ் தாக்குதல் போன்ற சம்பவங்கள் எந்நேரமும் நிகழக்கூடிய அபாயத்துடன் தான் பிரான்ஸ் வாழப் போகிறது என்பதையே PS வலியுறுத்துகிறது. “இந்த வார்த்தைகள் கூறக் கடினமாய் இருந்தாலும், அதைக் கூறுவது என் கடமையாக இருக்கிறது” என்றார் வால்ஸ். “தாக்குதல்கள் இருக்கும், மற்றும் பலர் கொல்லப்படுவார்கள். பயங்கரவாதத்திற்கு பழகிப் போனவர்களாக நாம் ஆகிவிடக் கூடாது, ஒருபோதும் பழகிப் போனவர்களாக நாம் ஆகிவிடக்கூடாது, மாறாக இந்த அச்சுறுத்தலுடன் வாழ நாம் கற்றுக்கொண்டாக வேண்டும்.”
பயங்கரவாத அச்சுறுத்தல் நிரந்தரமானது என்று PS கூறுமானால், அது நிரந்தரமான அவசரகால நிலையை ஆதரிக்கிறது என்பதே அதிலிருந்து பிறக்கின்ற தவிர்க்கமுடியாத முடிவாய் இருக்கிறது. சொல்லப் போனால், ஆறு மாத காலம் முடிந்தபின் அடுத்த குளிர்காலத்தில் அவசரகாலநிலை அகற்றப்படுவது சாத்தியமில்லாதது என்று பல்வேறு ஊடக வருணனையாளர்களும் ஏற்கனவே எழுதியுள்ளார்கள். 2017 ஏப்ரல்-மே ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர்களுக்கான பாதுகாப்பாக குறைந்தபட்சம் அடுத்த ஆறு மாதத்திற்கு அது நீட்டிக்கப்பட வேண்டியிருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
பயங்கரவாதத் தாக்குதல்களை நிறுத்துவது என்பது அரசாங்க நடவடிக்கைகளின் நோக்கமாக இருக்கவில்லை என்பதால் தான், மிக அடிப்படையாக, கஸ்னேவின் கூற்றுகள் ஒரு அரசியல் மோசடியாய் இருக்கின்றன. பிரான்சின் காலனி ஆட்சிக்கு எதிராக அல்ஜீரிய மக்களால் 1954 இல் தொடங்கப்பட்ட ஆயுதமேந்திய கிளர்ச்சியை நசுக்குவதற்காகவும், அல்ஜீரியர்களுக்கு எதிரான காலனித்துவ போருக்கு பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தில் எழுந்திருந்த எதிர்ப்பை மட்டுப்படுத்துவதற்காகவும் அவசரகாலநிலை சட்டமானது 1955 ஆம் ஆண்டில் வரைவு செய்யப்பட்டது, அப்போது தன் நோக்கத்தில் அது தோல்வி கண்டது.
இன்று, 60 வருடங்களுக்கும் அதிக காலத்துக்குப் பின்னர், அவசரகாலநிலையின் பிரதான இலக்காக இருப்பது பயங்கரவாதம் அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தில் இருக்கும் சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பேயாகும்.
சமூக ஆர்ப்பாட்டங்களை தடைசெய்வதற்கும், வரம்பற்ற தேடுதல்கள் மற்றும் பறிமுதல்களைச் செய்வதற்கும், ஊடகங்களைத் தணிக்கை செய்வதற்கும், விசாரணையின்றி வீட்டுக் காவலை திணிப்பதற்கும் மற்றும் இராணுவத் நீதிமன்றங்களை அமைப்பதற்கும் போலிசை அனுமதிக்கின்றதான அவசரகாலநிலையின் கீழ் அரசு கொண்டிருக்கக் கூடிய அரக்கத்தனமான அதிகாரங்களால் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்க முடியவில்லை என்பதை நீஸ் தாக்குதல்களுக்கு பின்னர் வால்ஸுமே கூட ஒப்புக் கொண்டிருந்தார். இந்த போலிஸ் அரசு நடவடிக்கைகளானவை இந்தத் தாக்குதல்களின் மூலக் காரணங்களை - சிரியாவில் ஆட்சி-மாற்றத்திற்கான போரின் கருவிகளாய் இஸ்லாமிய பயங்கரவாத வலைப் பின்னல்களை நேட்டோ பயன்படுத்துவது மற்றும் பிரான்சிலான ஆழமான சமூக நெருக்கடி ஆகியவை - நிவர்த்தி செய்வதற்கு எதுவொன்றும் செய்வதில்லை.
அதற்கு மாறாய், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிகப்பெரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குள் ஐரோப்பிய முதலாளித்துவம் ஆழமாய் மூழ்க, ஐரோப்பாவெங்கிலும் இருக்கும் நாடுகளிலுள்ள ஆளும் வர்க்கங்கள் ஜனநாயக உரிமைகளை அகற்றுவதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. ஜனநாயகமானது, தன்னிச்சையாக திணிக்கப்பட்ட அவசரகாலநிலை ஒன்றின் மூலமாக தலைகீழாக்கப்பட முடியும் என்பதை தொழிலாளர்கள் கண்டுகொள்ளும் போது, முதலாளித்துவ ஜனநாயகத்தின் நொருங்கக் கூடியதும் இறுதியில் தாக்குப்பிடிக்காததுமான குணநலன் மில்லியன் கணக்கான மக்களின் முன்பாக அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பிரான்சின் தேசிய சட்டமன்றம் அவசரகாலநிலையை நீட்டிக்க வாக்களித்த அதேநாளில், துருக்கியில், சென்ற வாரத்தில் நடந்த ஒரு தோல்வியடைந்த இராணுவ சதி முயற்சியை தொடர்ந்து இராணுவ மற்றும் அரசு எந்திரத்தில் ஒரு பரந்த களையெடுப்பு நடந்து வருவதன் மத்தியில், மூன்று-மாத கால அவசரகாலநிலை ஒன்றை துருக்கிய அரசாங்கம் திணித்தது.
பிரிட்டனில், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறக் கிட்டிய கருத்துவாக்களிப்பு முடிவு ஒரு பாரிய அரசியல் நெருக்கடியை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. ஆளும் உயரடுக்கின் பல்வேறு பிரிவுகளும், பிரெக்ஸிட் வாக்களிப்பை மறுதலிக்க அழைத்துக் கொண்டிருக்கின்றன என்பதோடு தொழிற் கட்சியின் அடித்தளத்தில் களையெடுப்பதின் மூலமாக ஜனநாயக விரோதமான முறையில் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான ஜெரிமி கோர்பினை வெளியேற்றுவதற்கும், தொழிற் கட்சியின் சமூக மற்றும் வெளியுறவுக் கொள்கையை இன்னும் அதிகமாய் வலது நோக்கித் தள்ளுவதற்கும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன.
மிகப்பெரும் வெகுஜன எதிர்ப்புக்கு முகம்கொடுக்கும் நிலையிலும் தனது வெளியுறவுக் கொள்கையை மீண்டும் இராணுவமயமாக்கிக் கொண்டிருக்கும் ஜேர்மன் அரசாங்கமானது ஜேர்மனிக்குள்ளேயும் கூட இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கான திட்டங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
பிரான்சில் இருக்கின்ற PS அரசாங்கமானது, அதன் சிக்கன நடவடிக்கைகளுக்கு எழுகின்ற வெடிப்பான சமூக எதிர்ப்பை, குறிப்பாக அதன் பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக தொழிலாளர்களும் இளைஞர்களும் இந்த வசந்தகாலத்தின் போது நடத்திய பாரிய ஆர்ப்பாட்டங்களை, நசுக்கும் முயற்சியில் அவசரகாலநிலையை ஏற்கனவே பயன்படுத்தியிருக்கிறது. வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு அரசியல்சட்டரீதியாக இருக்கின்ற பாதுகாக்கப்பட்ட உரிமைகளை காலில்போட்டு நசுக்கும் விதமாக ஆர்ப்பாட்டங்களையே ஒட்டுமொத்தமாய் தடைசெய்வதற்கும் அது அச்சுறுத்தியது. கூட்டம் கூட்டமாய் கலக தடுப்புப் போலிசாரைக் கொண்டு ஆர்ப்பாட்டங்கள் மீது வன்முறையாக அது தாக்குதல் நடத்தியதுடன், போலிஸ் சங்கத்தின் மூலமாக ஒரு எதிர்-ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைப்பதற்கும் உதவியது.
பிரெஞ்சு அரசு, அரசியல்சட்டத்தை கவிழ்த்துப் போடுவதற்கும் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்குமான காரணமாக அது கூறுகின்ற பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு காட்டும் எதிர்வினையானது, குறிப்பாக 1950கள் மற்றும் 1960களிலான முந்தைய தேசிய அவசரகால நிலைக் காலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், முற்றிலும் விகிதாசாரப் பொருத்தமற்றதாய் தென்படுகிறது.
அல்ஜீரியப் போரின் சமயத்தில் திணிக்கப்பட்ட மூன்று அவசரகாலநிலைகளில் மிக நீளமானது எட்டு மாதங்கள் நீடித்தது. இந்த மூன்று அவசரகாலநிலைகளும் - முதலாவதாய் 1955 இல் போர் தொடங்கிய சமயத்தில், அடுத்ததாய் 1958 ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர், பின் 1961 இல் அல்ஜீரிய தளபதிகளின் தோல்வியடைந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்குப் பின்னர்- நூறாயிரக்கணக்கான உயிர்களைக் காவு கொண்டதும் அத்துடன் மில்லியன் கணக்கான படைவீரர்களை அணிதிரட்டியதைக் கொண்டிருந்ததுமான ஒரு போருக்கு மத்தியில் வந்தவையாகும். போருக்கான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை நசுக்குவதற்கு அவை சேவை செய்தன என்ற அதேவேளையில், சர்வதேச ஆதரவை -குறிப்பாக ஸ்பெயினில் இருந்த பாசிச பிராங்கோ ஆட்சியில்- கொண்டிருந்ததும், அத்துடன் தொழிலாள வர்க்கத்தில் இருந்த போர்-எதிர்ப்பு மனோநிலைக்கு அரசாங்கம் அடிபணிந்து கொண்டிருப்பதாய் கருதியதுமான பிரெஞ்சு இராணுவப் படைகளின் சக்திவாய்ந்த பிரிவுகளது கிளர்ச்சிகளுக்கு எதிராகவும் அவை இலக்கு வைக்கப்பட்டிருந்தன.
சார்லி ஹெப்டோ படுகொலைகள், நவம்பர் 13 தாக்குதல்கள் மற்றும் நீஸ் நகரில் சென்ற வாரத்தில் நடந்த அட்டூழியம் போன்ற தாக்குதல்கள், தெளிவற்ற சூழல்களின் கீழ் பெரும்பாலும் பிரெஞ்சு உளவுத் துறைக்கு அறியப்பட்டவர்களாய் இருந்த சில பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்டவையாக இருந்திருக்கின்றன. படுபயங்கரமான விதத்தில் 200க்கும் அதிகமான உயிர்களை இத்தாக்குதல்கள் காவு வாங்கியிருந்தன என்ற அதேநேரத்தில், அல்ஜீரியப் போரில் நடைபெற்ற பாரிய படுகொலையுடன் ஒப்பிட்டால் இந்த எண்ணிக்கை மங்கலாகி விடுகிறது. என்றபோதும் இன்றைய அவசரகாலநிலையானது ஏற்கனவே நீண்டகாலம் இருந்திருக்கிறது என்பதுடன் PS அதனை முடிவில்லாத காலத்திற்குப் பராமரிக்கவே நோக்கம் கொண்டுள்ளது என்பதும் தெளிவாகிறது.
தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்துச் செல்லும் சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பே, இறுதி ஆய்வில், இந்த வெறித்தனமான, ஜனநாயக-விரோத எதிர்வினையை உந்தித் தள்ளுவதாய் இருக்கிறது. இந்த எதிர்ப்பானது அபிவிருத்தி கண்டு அரசியல்ரீதியாய் முன்னினும் அதிக நனவுடனான வடிவத்தை எடுக்கின்ற நிலையில், ஒரு திவாலாகிப் போன முதலாளித்துவ ஒழுங்கிற்குத் தலைமையில் அமர்ந்திருக்கக் கூடிய ஒரு ஆளும் வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நோக்கிய முனைப்புக்கு எதிராக ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது தான் தொழிலாளர்கள் முகம்கொடுக்கின்ற ஒரு மையமான கடமையாக இருக்கிறது.