Print Version|Feedback
Massive police operation in Munich—an attack on democracy
முனிச்சில் பாரிய போலிஸ் நடவடிக்கை – ஜனநாயகத்தின் மீதான ஒரு தாக்குதல்
By Socialist Equality Party (Germany)
25 July 2016
முனிச்சில் 18 வயதான ஒரு இளைஞர் நடத்திய ஒரு துப்பாக்கிச்சூட்டு வெறியாட்டத்தை சாக்காகப் பயன்படுத்தி ஜேர்மன் அதிகாரிகள் ஒரு பாரிய அவசரகால நிலை மற்றும் உள்நாட்டுப் போர் ஒத்திகையை நடத்தி, 1.5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஒரு நகரை பல மணிநேரங்கள் முடக்கிப் போட்டதோடு, அச்சத்தையும் பீதியையும் கட்டவிழ்த்து விட்டனர். ஜேர்மனியில் ஜனநாயகத்தின் வீழ்ச்சியில் ஜூலை 22 ஒரு முக்கியமான திருப்புமுனையைக் குறிக்கிறது.
இன்று வரை ஜேர்மனியில் 9/11, அல்லது பாரிஸ் மற்றும் நீஸ் ஆகிய இடங்களில் நடந்த தாக்குதல்களுடன் ஒப்பிடக்கூடிய ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்திருக்கவில்லை. அமெரிக்க மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்கள், அந்த தாக்குதல்களை, ஒரு சக்திவாய்ந்த கண்காணிப்பு மற்றும் போலிஸ் எந்திரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஒரு நிரந்தர அவசரகாலநிலையை அறிவிப்பதற்கும் மற்றும் பாதுகாப்பு படைகளை விருப்பம்போல் செயல்பட அனுமதிக்கின்ற வகையில் அச்சம் நிரம்பிய ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்கும் பயன்படுத்திக் கொண்டன.
இந்த நடவடிக்கைகள் சூழ்நிலையை பாதுகாப்பானதாக மாற்றி விடவில்லை. அதற்கு மாறாகத்தான் நடந்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல், ”பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற சாக்கில் அமெரிக்காவால் நடத்தப்பட்ட போர்கள் —ஜேர்மனியும் கூட சிறிது சிறிதாக அதிகரித்த வகையில் இவற்றில் ஈடுபட்டிருக்கிறது— ஈராக், லிபியா மற்றும் சிரியா போன்ற நாடுகளை முன்னதாக பயங்கரவாத வலைப்பின்னல்கள் இருந்திராத இடங்களிலும் கூட அவற்றை உருவாக்கித்தரும் விளைநிலங்களாய் உருமாற்றி விட்டிருக்கின்றன. இதுதவிர, மேற்கின் இரகசிய சேவை முகமைகளுக்கும், சவுதி அரேபியா, கட்டார் மற்றும் துருக்கி போன்ற மேற்கத்திய சக்திகளின் கூட்டாளிகளால் ஆதரிக்கப்படுகின்ற மற்றும் நிதியாதாரம் அளிக்கப்படுகின்ற இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும் இடையில் ஏராளமான தொடர்புகளும் இருக்கின்றன.
“பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற பெயரில் அரச அதிகாரங்கள் அதிகரிக்கப்படுவதில் உண்மையாகக் குறிவைக்கப்படுவது தொழிலாள வர்க்கமும் மற்றும் அனைத்து சமூக மற்றும் அரசியல் எதிர்ப்புமே ஆகும். சமூக முரண்பாடுகள் தீவிரப்பட்டு செல்கின்ற, ஐரோப்பிய ஒன்றியம் உடைந்து சிதறுகின்ற மற்றும் அடுத்த நிதி நெருக்கடி பெரிதாய் முன்விரிந்து கொண்டிருக்கின்ற நிலைமைகளின் கீழ், ஆளும் வர்க்கமானது கடுமையான வர்க்க யுத்தங்களுக்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது. வெளிநாட்டில் இராணுவவாதத்தின் வளர்ச்சியானது உள்நாட்டு அரசியல் இராணுவமயமாக்கப்படுவதுடன் கைகோர்த்து நடக்கிறது.
ஆளும் உயரடுக்கைப் பொறுத்தவரை, இதுவிடயத்தில், ஜேர்மனிக்கு இதைப் பிடித்துக் கொள்ள நிறைய காரணங்கள் இருக்கிறது. இந்த உட்பொருளில் தான் ஒருவர் முனிச் நிகழ்வுகளையும் அவற்றுக்கான எதிர்வினைகளையும் புரிந்துகொள்ள முடியும். அதிகமான விபரங்கள் வெளிச்சத்துக்கு வரவர, ஒரு கூர்மையான அபாய சூழலுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை சம்பந்தப்பட்டது என்பதாக கூறப்படும் உத்தியோகபூர்வ விபரிப்பில் இருந்து அவை அதிகமாக விலகிச் செல்கின்றன.
ஒரு தனிமனிதக் கொலையாளியின் தனிப்பட்ட நடவடிக்கை, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் கொண்டுவந்த அதே விளைவுகளைக் கொண்டுவருவதற்காய் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. உளவியல்ரீதியாய் மன உளைச்சலில் இருந்த ஒரு இளைஞர் என்று தெளிவாகின்ற ஒருவர், இத்தகைய வன்முறையான நடவடிக்கைகளில் இறங்குவதற்கான சமூக காரணங்கள் மறைக்கப்படுகின்றன, அதற்குப் பதிலாய், மேலதிக வன்முறை வெடிப்பையே தவிர்க்கவியலாமல் தூண்டக்கூடிய அரசின் அதிகாரங்கள் வலுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
வடக்கு முனிச்சில் ஒலிம்பியா வணிக மையத்தில் David Sonobly என்ற ஒரு 18 வயது மாணவர் நடத்திய கொலைவெறியாட்டத்திற்கு போலிஸ் மற்றும் சிறப்புப் படைகளை நிலைநிறுத்தி அதிகாரிகள் எதிர்வினையாற்றியிருப்பது சமீபத்திய ஜேர்மன் வரலாற்றில் முன்கண்டிராததாகும்.
கூட்டரசாங்கத்தின் மற்ற மாநிலங்கள், கூட்டரசாங்க போலிஸ் மற்றும் ஆஸ்திரியாவின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுகள் ஆகியவற்றில் இருந்தான உதவியுடன் முனிச்சில் இருக்கும் ஒவ்வொரு போலிஸ் அதிகாரியுமே திரட்டப்பட்டு, மொத்தம் சுமார் 2,300 அதிகாரிகள் குவிக்கப்பட்டிருந்தனர். ஒட்டுமொத்த நகரத்தின் மீதும் ஹெலிகாப்டர்கள் பறந்தவண்ணம் இருந்தன; ஆயுதமேந்திய போலிசும் ஆயுதங்கள் கொண்ட வாகனங்களும் வீதிகளில் ஆதிக்கம் செலுத்தின.
கைத்தொலைபேசி அவசரகால ஒலிபரப்பு முறையான “Katwarn” (பேரிடர் எச்சரிக்கை) ஐப் பயன்படுத்தி நகராட்சியானது மக்களை வீட்டிலியே இருக்குமாறு வலியுறுத்தியதுடன், மெட்ரோ, டிராம்கள் மற்றும் பேருந்துகளிலான அத்தனை போக்குவரத்தையும் நிறுத்தியது. அவசரகால வாகனங்கள் இடையூறு இல்லாமல் செல்ல வசதியாக வாகனவாசிகள் முனிச்சை நோக்கிய வாகனப்பாதையில் வழிவிட்டு இருக்குமாறு போலிஸ் அழைப்பு விடுத்தனர். பல்வேறு மருத்துவமனைகளிலும் ஒரு அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பவேரியா, பாடன்-வூட்டேம்பேர்க் மற்றும் ஆஸ்திரியாவில் இருந்து பதினெட்டு மீட்பு ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. 350 பேருக்கான ஒரு மனநிலை உதவி மையம் ஒலிம்பிக் பார்க்கில் அமைக்கப்பட்டது.
”ஒரு பயங்கரவாத நிலைமை” என்று இதனைக் குறிப்பிட்ட பாதுகாப்புப் படைகள் நகரில் பெருமளவில் இன்னும் பல தாக்குதல்தாரிகளும் ஊடுருவியிருக்கலாம் என்பதாகக் கூறி —அவ்வாறு இருக்கவில்லை என்பது பின்னர் நிரூபணமானது— இத்தனைபெரும் நடவடிக்கையை நியாயப்படுத்தின. ஒரு வாகனம் வேகமாகச் சென்றதைக் கண்டதாக மேலோட்டமாய் சில சாட்சிகள் சொன்னதை அடிப்படையாகக் கொண்டு அவை இந்நிலையை நியாயப்படுத்தின.
இந்த கொலைவெறித் தாக்குதலின் பின்புலம் குறித்து பொதுவில் ஒப்புக்கொண்டதை விடவும் அதிகமாய் பாதுகாப்புப் படைகளுக்குத் தெரிந்திருந்தது என்பது இப்போது தெளிவாகியிருக்கிறது. உதாரணமாக, தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில் இணையத்தில் உலாவிய ஒரு காணொளியில் இருந்தது தனது மகன் என்று அடையாளம் கண்டிருந்த குற்றமிழைத்தவரின் தந்தை உடனே போலிசைத் தொடர்பு கொண்டிருந்தார். தாக்குதல்தாரியின் நிற்கும் பாணியைக் கொண்டு அவரை அடையாளம் கண்டிருந்த அவரின் நண்பரொருவரும் போலிசிடம் தகவல் தெரிவித்து விட்டிருந்தார்.
இந்த வெறியாட்டத்திற்கு இரண்டரை மணி நேரத்திற்குப் பின்னர், David Sonobly குற்றச் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் போலிசின் கண்முன்னால் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். நிலைமையை தணித்திருக்கக் கூடிய இந்தத் தகவலை போலிஸ் மறுநாள் தான் வெளியிட்டது.
சனிக்கிழமை வெளியான ஒரு போலிஸ் அறிக்கை தெரிவித்தது: “இரவு 8.30 மணிவாக்கில், ஒலிம்பியா வணிக மையத்தின் வடக்கில் முனிச் பெட்ரோல் ரோந்து பிரிவு ஒன்று குற்றமிழைத்தவராகக் கருதப்படுபவருடன் தொடர்பு கொண்டது. போலிஸ் அதிகாரிகளால் விசாரணை செய்யப்படுவதைக் கண்ட அவர் திடீரென்று தனது துப்பாக்கியை எடுத்து தன் தலையில் சுட்டுக் கொண்டு விட்டார்.”
குற்றமிழைத்தவரின் தற்கொலையை தொடர்ந்து பாரிய போலிஸ் நடவடிக்கையை குறைப்பதற்குப் பதிலாய், போலிஸ் அதனை விரிவுபடுத்தியது. பதினைந்து நிமிடங்கள் கழித்து அவர்கள் முதன்முறையாக ஒரு “பயங்கரவாத நிலைமை” குறித்துப் பேசினர். இதனைத் தொடர்ந்து பல இடங்களில் கூடுதல் தாக்குதல்கள் குறித்த வதந்திகள் பரவின, பீதி தோன்றியது. இவையெல்லாம் பிரதானமாக போலிஸ் நடவடிக்கையில் இருந்தே விளைந்தவையாக இருந்தன. உதாரணமாக, Süddeutsche Zeitung தெரிவித்தது: “பல போலிஸ் அதிகாரிகள் சீருடை அணியாமல் கையில் ஆயுதங்கள் தெரியும்படி இருந்ததால், அவ்வழியாய் சென்ற பலரும் அவர்களைப் பயங்கரவாதிகளாய் எண்ணியதும் முனிச்சில் பாதுகாப்பற்ற உணர்வுகளுக்கு பங்களிப்பு செய்தது.”
இன்னும் பல தாக்குதல்தாரிகள் இருக்கக் கூடும் என்பதான மேலோட்டமான வதந்திகளைக் கொண்டு போலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகள் பாரிய அளவில் நிறுத்தப்பட்டதை நியாயப்படுத்த முடியாது. கடந்த காலத்திலும் கூட முனிச்சில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன —1970 இல் இஸ்ரேலிய மத சமுதாயத்தின் முதியோர் இல்லத்திற்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல், 1972 இல் இஸ்ரேலிய ஒலிம்பிக் அணிக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு தாக்குதல், மற்றும் 1980 இல் Oktoberfest க்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவை— ஆனால் பாதுகாப்புப் படைகளின் பதிலிறுப்பு இந்த அளவுக்கு விரிந்ததாய் ஒருபோதும் இருந்தது கிடையாது.
நீண்டகாலமாக திட்டமிடப்பட்டு வந்திருக்கின்ற அவசரகாலத் திட்டங்களை அமல்படுத்துவதற்கும், அவசரகால நிலையை சோதிப்பதற்குமான ஒரு சாக்காக முனிச் தாக்குதல் சேவை செய்தது என்ற ஒரே முடிவுக்கே யாரும் வரமுடியும்.
இதுவிடயமாக, பாதுகாப்புப் படைகள் மட்டுமல்லாது ஊடகங்களும் கூட அணிதிரட்டப்பட்டன. மிகத் திடீரென நடக்கும் சம்பவங்களில் கூட பொதுவாக 15 நிமிட “தற்போதைய செய்திக் களம்” தொகுப்புடன் மட்டுப்படுத்திக் கொள்கின்ற ARD மற்றும் ZDF ஆகிய இரண்டு அரசு செய்திநிறுவனங்களும் இந்த செய்தித்துளிகளை இடைவிடாது வழங்கிய வண்ணம் இருந்தன. பயங்கரவாதம் குறித்த நிபுணர்களாக சொல்லப்பட்டவர்கள் இந்த சம்பவங்கள் குறித்து கருத்துகள் கூறினர், தொகுத்துவழங்கியவர்கள் ஒவ்வொரு வதந்தியையுமே உண்மை போன்று கூறினார்கள். கொலைவெறியுடன் மூன்று பேர் வரை ஊடுருவி ”இருக்கலாம்” என்று போலிஸ் தெரிவித்த நிலையிலும், செய்தித் தொகுப்பாளரான தோமஸ் ரோத் பின்னிரவு வரையிலும் நகரில் “குறைந்தது மூன்று தாக்குதல்தாரிகள்” ஊடுருவியிருப்பது குறித்த ஊர்ஜிதமான தகவல்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்.
பயங்கரவாதத் தாக்குதல் என்பதாக வெளிவரக் கூடிய ஒன்றுக்கு எதிராக தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்த சர்வதேச அரசியல்வாதிகளும் – ஜனாதிபதி ஒபாமா இதில் முன்னிலை வகித்தார் – முந்திக் கொண்டு பேசினர்.
முனிச் துப்பாக்கிசூட்டு வெறியாட்டத்திற்கான பதிலிறுப்பு மூன்று வருடங்களுக்கு முன்பாக போஸ்டன் தொலைதூர ஓட்டம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை கூர்மையாக நினைவுக்குக் கொண்டுவருகிறது. அச்சமயம் அதிகாரிகள் ஒட்டுமொத்த நகரத்தையும் முற்றுகைக்குள் கொண்டுவந்தனர். உலக சோசலிச வலைத் தளம் இவ்வாறு கருத்திட்டது:
“போஸ்டன் நிகழ்வுகள் அமெரிக்காவில் சர்வாதிகார ஆட்சி வடிவங்களை ஸ்தாபிப்பதற்கான செயல்பாட்டு பொறிமுறையை தோலுரித்துக் காட்டியிருக்கிறது. நோக்குநிலை தவறிய அல்லது உணர்ச்சி மரத்துப் போன தனிநபர்கள், அரசுக்குள் இருக்கின்ற கூறுகளின் உதவியுடனே கூட, நடத்துகின்ற எந்தவொரு வன்முறைச் செயல்பாடும், ஒரு பயங்கரவாதச் சம்பவமாக அறிவிக்கப்படுகின்றது. ஜனநாயக உரிமைகளை இடைநிறுத்தவும் இராணுவ-போலிஸ் கட்டுப்பாட்டை ஸ்தாபிக்கவும் ஒரு முற்றுகை நிலை திணிக்கப்படுகிறது.
“அரசியல் வாழ்வின் வெளி ஒப்பனையில் இருப்பவை மாற்றப்பட அவசியமில்லாத அளவுக்கு அரசின் அத்தனை அங்கங்களும் இதில் மிக ஆழமாக சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஜனாதிபதியையோ அல்லது நாடாளுமன்றத்தையோ தூக்கிவீசவும் அவசியப்படுவதில்லை. இந்த ஸ்தாபகங்கள் தாமாகவே தமக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரத்தை ஆற்றத் தயாராய் இருக்கின்றன, ஒரு இராணுவ சர்வாதிகாரத்தின் திணிப்பு அமெரிக்க உச்சநீதிமன்றத்தாலேயே அங்கீகரிக்கப்படும்.”
“ஊடகங்கள் பொதுவாக அவை செய்கின்ற வேலையை —அதாவது அரசின் அறிவிக்கப்படாத அங்கமாகச் செயல்படுவது, அவசியமான சாக்குபோக்குகளை அதற்கு உருவாக்கித் தருவது, அதேசமயத்தில் மக்களுக்குள் அவசியமான அச்சம் மற்றும் பீதி ஆகியவற்றை விசிறி விடுவது ஆகியவை— தொடர்ந்து செய்யும்.”
முனிச் சம்பவங்களுக்குப் பின்னர், அரசு எந்திரத்தை மேலும் வலுப்படுத்துவதற்காகக் கோரிக்கை வைப்பதில் முன்னணி அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் விஞ்ச முனைகின்றனர். இராணுவப் படைகளை (Bundeswehr) உள்நாட்டில் பயன்படுத்துவதற்கான அழைப்பு இதில் முன்னிலையில் நிற்கிறது, நாஜிக்களது குற்றங்களின் காரணத்தால் அது இப்போது அரசியல்சட்டத்தால் தடைசெய்யப்படுகின்ற நடவடிக்கையாக உள்ளது. அதன்பின் 1968 அவசரகால சட்டங்கள் அதனை “உள்நாட்டிலான அவசரகாலநிலை சமயங்களில் மட்டும்”, அதாவது ஒரு உள்நாட்டுப் போர் சூழலில் மட்டும் அனுமதித்தது.
பாதுகாப்பு அமைச்சரான ஊர்சுலா வொன் டெர் லையென் ஞாயிறன்று பேசுகையில், “வெள்ளிக்கிழமை அன்றான தாக்குதலின் விரிவெல்லை தெளிவாகாத வரையில்” அவர் “இராணுவப்படைகளின் ஒரு இராணுவ போலிஸ் பிரிவை தயார்நிலையில் வைத்திருந்ததாக” கூறியிருந்தார். பாடன்-வூட்டேம்பேர்க் மாநிலத்தின் உள்துறை அமைச்சரான தோமஸ் ஸ்ரோபிள (கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம், CDU), “பெரிய அளவிலான, தீவிரமான பயங்கரவாத நிலைமை”யின் சமயத்தில் இராணுவப் படைகளை உள்நாட்டில் நிறுத்தவேண்டும் என்று கோரினார், அவரது பவேரிய சகாவான ஜோஅஹிம் ஹேர்மான் (கிறிஸ்தவ சமூக ஒன்றியம், CSU), “வரலாற்றுரீதியான கவலைகள்” காலாவதியாகி விட்டதாக மேலும் சேர்த்துக் கொண்டார்.
அரச அதிகாரங்களை அதிகப்படுத்துவதற்கான அழைப்பை இடது கட்சியும் கூட ஆதரிக்கிறது. ஞாயிறன்று அன்ஸ்பாஹ் இல் மேலுமொரு தாக்குதல் —அங்கே தற்கொலைப் படை மனிதரொருவர் குண்டு ஒன்றை வெடிக்கச் செய்ததில் பலர் காயமடைந்தனர்— நடைபெற்றதன் பின்னர், சான்சலர் மேர்க்கெலின் அகதிக் கொள்கையிலேயே இதற்கான பொறுப்பு அமைந்திருப்பதாக நாடாளுமன்ற பிரிவின் தலைவரான Sahra Wagenknecht பிரச்சினை எழுப்பினார்.
“பெரும் எண்ணிக்கையிலான அகதிகளையும் புலம்பெயர்வோரையும் அனுமதிப்பதும் ஒருங்கிணைப்பதும் என்பது கணிசமான பிரச்சினைகள் சம்பந்தப்பட்டவை என்பதோடு, சென்ற இலையுதிர்காலத்தில் மேர்க்கெல் நம்மை நம்பும்படி செய்திருந்த அவரது அற்பமான “நாம் சமாளித்து விடுவோம்” என்ற சப்பைக்கட்டைக் காட்டிலும் அவை மிகவும் கடினமானவை என்பதையே கடந்த நாட்களின் நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன” என்று Wagenknecht அறிவித்தார். “குறிப்பாக, அரசும் அதன் பாதுகாப்பு முகமைகளும் கொண்டுள்ள செயல்பாட்டுத் திறத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் பொறுப்பு இப்போது கூட்டரசாங்கத்திடம் இருக்கிறது”.
அனைத்துக் கட்சிகளது ஆதரவுடன், அரசு எந்திரத்தின் அதிகாரங்கள் எத்தனை வீரியத்துடனும் வேகத்துடனும் விரிவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது ஒரு நல்ல அறிகுறியாக இல்லை. நாஜி சர்வாதிகாரம் முடிந்து ஏழு தசாப்தங்களுக்குப் பின்னர், ஆளும் வட்டாரங்களில் இருப்பவர்கள், ஒருகாலத்தில் அவர்கள் தயக்கத்துடன் உபதேசித்த —அவர்களது சொந்த தோலைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுத்தான் என்பதைச் சொல்வதும் முக்கியமானதே— ஜனநாயகக் கோட்பாடுகளைக் கைகழுவிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு போலிஸ் அரசு, கட்டுமானம் செய்யப்படுவதை சோசலிச சமத்துவக் கட்சி (PSG, The Partei für Soziale Gleichheit) செயலூக்கத்துடன் எதிர்க்கிறது. ஜேர்மன் அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ”இராணுவரீதியாக ஒதுங்கியிருத்தல் முடிவுக்கு வந்ததை” பிரகடனம் செய்தது முதலாகவே, தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்ற இராணுவவாதத்தின் மீள்வரவுடன் இது பிரிக்கவியலாமல் பிணைந்துள்ளது. இராணுவவாதத்தின் மீள்வரவே வெடிப்பான சமூகப் பதட்டங்களுக்கும், ஆழமடைகின்ற சமூக நெருக்கடிக்கும் மற்றும் பெருகிச் செல்கின்ற சர்வதேசமோதல்களுக்குமான அதன் பதிலிறுப்பாய் இருக்கிறது.
போர், சர்வாதிகாரம் மற்றும் சமூக வீழ்ச்சி ஆகியவற்றுக்கான எதிர்ப்புக்கு ஒரு அரசியல் முன்னோக்கை வழங்குவதற்காகவே செப்டம்பரில் பேர்லின் மாநில சட்டமன்றத்திற்கான தேர்தலில் PSG களத்தில் நிற்கிறது. முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு சர்வதேசிய சமூக இயக்கம் மட்டுமே போர், சர்வாதிகாரம் மற்றும் காட்டுமிராண்டித்தனத்திற்குள் மீண்டும் செல்லும் உடனடி நிலை இருப்பதை தடுக்கவியலும். இந்த முன்னோக்கிற்காகப் போராட விரும்புகின்ற அனைவரையும் PSG இன் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க நாங்கள் அழைக்கிறோம்.