Print Version|Feedback
Seventy-five years since the Nazi invasion of the Soviet Union
சோவியத் ஒன்றியத்தின் மீதான நாஜி படையெடுப்புக்குப் பிந்தைய எழுபத்தியைந்து ஆண்டுகள்
Barry Grey
22 June 2016
எழுபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பாக இதேதினத்தில், 1941 ஜூன் 22 அன்று அதிகாலையில், நாஜி ஜேர்மனி, சோவியத் ஒன்றியத்தின் மீது ஒரு பாரிய மற்றும் அறிவிக்கப்படாத படையெடுப்பு நடவடிக்கையான பார்பரோஸா தாக்குதலை (Operation Barbarossa) தொடக்கியது. இந்த நடவடிக்கையின் பாதையில், ஜேர்மனியுடன் கூட்டுச்சேர்ந்த நாடுகளின் சுமார் 4 மில்லியன் சிப்பாய்கள், சோவியத் ஒன்றியத்தை சுமார் 1,800 மைல் நீளமான முனைகளில் தாக்கின. போர்களது வரலாற்றில் இது மிகப்பெரும் படையெடுப்பாக இருந்தது.
பார்பரோஸா தாக்குதல் என்பது ஜேர்மன் அரசின் வார்த்தைகளில் சொல்வதானால் அழித்தொழிக்கும் ஒரு போர் (Vernichtungskrieg) என்பதாய் இருந்தது. பிராந்தியத்தைக் கைப்பற்றுவதும் மனித மற்றும் இயற்கை வளங்களை சூறையாடுவதும் மட்டும் அதன் நோக்கமாக இருக்கவில்லை, சோவியத் ஒன்றியத்தை உருத்தெரியாமல் செய்வதும் 1917 அக்டோபர் புரட்சியின் அத்தனை சுவடுகளையும் இல்லாது அழிப்பதும் அதன் நோக்கமாக இருந்தது.
சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான போரானது, ஜேர்மன் தொழிலாளர் இயக்கத்தை அழித்து சோசலிசப் புரட்சியின் அச்சுறுத்தலுக்கு ஒட்டுமொத்தமாக முடிவுகட்டுவதற்காக ஜேர்மன் முதலாளித்துவத்தால் அதிகாரத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்த நாஜி ஆட்சியின் வரலாற்று மற்றும் அரசியல் சாரத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. ஆயினும் ஒரு ஆழமானதொரு அர்த்தத்தில், உலக முதலாளித்துவமும் சர்வதேச முதலாளித்துவ வர்க்கமும் தங்களது அமைப்புமுறையின் நெருக்கடிக்கும் புரட்சிகர மார்க்சிசத்தின் வளர்ச்சிக்கும் எதிரான பதிலிறுப்பாக பார்பரோஸா தாக்குதல் இருந்தது.
ஜேர்மன் படையெடுப்புக்கு சற்று முந்திய ஆண்டுகளின் போது, மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளும் முதலாளித்துவ அரசாங்கங்களும் ஹிட்லரின் கொடுங்கோன்மை ஆட்சியை அனுதாபத்துடன் பார்த்தன என்பதும், அது தனது இராணுவ வலிமையை கிழக்கு நோக்கித் திருப்பி சோவியத் ஒன்றியத்தை அழிப்பதற்கான ஒரு கருவியாக சேவை செய்யும் என்று குறைந்தபட்சம் ஆரம்பத்திலேனும் நம்பிக்கை கொண்டிருந்தன என்பதும் நன்கறியப்பட்ட விடயமாக இருந்தது.
வரலாற்ற்றாசிரியான ஸ்டீபன் ஜி. ஃபிரிட்ஸ் 2011 இல் வெளியான கிழக்குயுத்தம்: கிழக்கில் ஹிட்லரின் அழித்தொழிப்புப் போர் (Ostkrieg: Hitler's War of Extermination in the East) என்ற தனது புத்தகத்தில் நாஜி படையெடுப்பின் பின்னாலிருந்த நோக்கத்தை பின்வருமாறு சுருங்க விளக்கினார்:
மேற்கில் பலரும் நம்புவதற்கு நேர்மாறாய், ஹிட்லர் கிழக்கிலான போருக்குள் நுழைந்ததன் மூலம் பெருந்தவறைப் புரியவில்லை. அவரைப் பொறுத்தவரை, சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான போர் தான் “சரியான” போர், ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை, உயிர்வாழ்விற்கு தேவையான பிராந்தியங்களை அடைவதிலும் “யூதப் பிரச்சினை”க்குத் தீர்வு காண்பதிலும்தான் ஜேர்மனியின் தலைவிதி தங்கியிருந்தது. மறுபக்கத்தில் அவை இரண்டுமே சோவியத் ஒன்றியத்தை அழிப்பதில்தான் தங்கியிருந்தன. இந்த நோக்கங்களில் எவை மிக முக்கியமானவையாய் இருந்தன? ஹிட்லரின் பார்வையிலிருந்து நோக்கினால், அவை இரண்டில் ஏதேனும் ஒன்றினை முன்னிலைப்படுத்துவதோ அல்லது அவற்றைப் பிரித்துப் பார்ப்பதோ செயற்கையானதாய் இருக்கும். அவரைப் பொறுத்தவரை, உயிர்வாழ்விற்கு தேவையான பிராந்தியங்களை அடைவதற்கும் மற்றும் “யூத-போல்ஷிவிசத்திற்கு” எதிரானதுமான போர் ஆகிய இரண்டும் ஒன்றேயாகும்.
இந்த அரசியல் மற்றும் வரலாற்று இலக்குத்தான் கிழக்கிலான ஜேர்மன் போரின் தன்மையையும் அதில் பயன்படுத்தப்பட்ட வழிமுறைகளையும் தீர்மானித்தது. ஆரம்பத்தில் இருந்தேயும், அத்துடன் வடிவமைப்பு ரீதியாகவே, ஜேர்மனின் முப்படைகளும் (Wehrmacht) உலகம் ஒருபோதும் கண்டிராதவொரு குரூர மட்டத்தை கட்டவிழ்த்து விட்டிருந்தன. படையெடுப்பின் முதல் மூன்று மாதங்களில் 2 மில்லியன் முதல் 3 மில்லியன் வரையான ரஷ்யர்கள் -இவர்களில் பெரும்பான்மையினர் அப்பாவிப் பொதுமக்கள் - கொல்லப்பட்டனர்.
1940 இல் கையிலெடுக்கப்பட்ட கிழக்கிற்கான பொதுத் திட்டத்தில் (Generalplan Ost) “பட்டினிபோடும் திட்டம்” இடம்பெற்றிருந்தது. ரஷ்யாவின் மேற்கிலும் வடமேற்கிலும் இருக்கக் கூடிய சோவியத் ஒன்றியத்தின் மக்கள்தொகையில் 18 சதவீதமான 30 மில்லியன் மக்களை திட்டமிட்டு குறிவைத்து பட்டினி போடுவதை அது சிந்தித்தது.
ஹிட்லர் மற்றும் இராணுவத் தளபதிகளின் உத்தரவுகளின் படி, சர்வதேச மற்றும் இராணுவச் சட்டத்தின் அத்தனை அடிப்படை அம்சங்களும் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டன. படையெடுப்புக்கு முன்னதாய் விநியோகிக்கப்பட்ட கமிசார் ஆணை என்று அழைக்கப்பட்டதான ஒன்று பின்வருமாறு குறிப்பிட்டது: “இத்தகைய பிரிவினருக்கு கருணை காட்டுவதோ அல்லது சர்வதேச சட்டத்திற்கு மரியாதை அளிப்பதோ இந்த யுத்தத்தில் ஒரு பிழையாக முடியும்..... காட்டுமிராண்டித்தனமான, ஆசியவகை போரிடும் முறைகள் அரசியல் கமிசார்களின் மூலமாகத் தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன.... ஆகவே யுத்தத்தில் அல்லது எதிர்ப்பில் அவை கையிலெடுக்கப்படும் போது, ஒரு கொள்கை முறையாக, உடனடியாக அவை ஆயுதத்தின் மூலமாக முடித்து வைக்கப்பட வேண்டும்.”
தளபதி எரிக் ஹோப்னர் 4வது டாங்கிப்பிரிவிடம் கூறுகையில், “இந்த போராட்டம் இன்றையை ரஷ்யாவை அழித்தொழிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதால், அது இணைசொல்ல முடியாத கடுமையுடன் போரிடப்பட்டாக வேண்டும்... இன்றைய ரஷ்ய-போல்ஷிவிக் அமைப்புமுறையை பின்பற்றக் கூடிய ஒருவரும் கூட விட்டுவைக்கப்படக் கூடாது” என்று கூறியிருந்தார்.
ரஷ்யப் படையெடுப்பு, ஒரு இன அழிப்புத் தன்மையை கொண்டிருந்தது. யூதப் படுகொலையில் ஒரு புதிய கட்டத்தைக் குறித்ததாக இருந்த அது, ஐரோப்பிய யூதர்களை திட்டமிட்டு அழிப்பதை நடைமுறைப்படுத்தலை ஆரம்பித்துவைத்தது. வான்ஸே மாநாடு (Wannsee Conference) - இங்கு தான் “இறுதித் தீர்வு” அமல்படுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது - பார்பரோஸா நடவடிக்கை தொடங்கப்பட்ட ஏழு மாதங்களின் பின்னர் நடத்தப்பட்டது.
கைப்பற்றிய அத்தனை பிராந்தியங்களிலும் யூதர்களை ஏறக்குறைய ஒட்டுமொத்தமாக அழித்தொழிப்பது என்பது பார்பரோஸா தாக்குதலின் முதல் நாட்களில் இருந்து தொடங்கியது. பால்டிக் நாடுகளில், படையெடுத்த ஆறு மாதங்களுக்குள்ளாக, யூத மக்களின் ஒரு மிகப் பெரும் பகுதியினர் அழித்தொழிக்கப்பட்டனர். ஒரு மில்லியனுக்கும் அதிகமான சோவியத் யூதர்கள் Einsatzgruppen எனப்படும் கொலைப் படைகளைக் கொண்டு கொல்லப்பட்டனர்.
சோவியத் மக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று வரை திட்டவட்டமாக மதிப்பிடப்பட்டிருக்கவில்லை என்றாலும் சோவியத் ஒன்றியத்தில் போரில் இறந்த மொத்தம் 27 மில்லியன் மக்களில் சுமார் 18 மில்லியன் பேர் வரை இவ்வாறு கொல்லப்பட்டிருக்கலாம் என்று பொதுவாக மதிப்பிடப்படுகிறது.
ஹிட்லருக்கும் ஸ்ராலினுக்கும் இடையில் 1939 ஆகஸ்டில் வலிந்து தாக்காத ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு - போலந்து மீதான ஜேர்மன் படையெடுப்புக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் இது கட்டியம் கூறியதாக இருந்தது - சுமார் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் போர் தொடங்கப்பட்டது. சர்வதேச தொழிலாளர் இயக்கத்தை மிகப்பெருமளவில் நோக்குநிலை பிறழச் செய்வதாக இருந்த இந்த ஒப்பந்தம், 1937-1938 பாரிய பயங்கரத்தில் அழிவுகரமானதும் நிலைதளரச்செய்ததுமான செம்படைக் களையெடுப்புக்கு இரண்டு வருடங்களுக்குப் பின்னால் நிகழ்ந்தது. ஒரு மிகப்பெரும் போர் நிகழவிருந்த சமயத்தில், செம்படை அதிகாரிகள் வரலாற்றில் முன்கண்டிராத வகையில் படுகொலை செய்யப்பட்டமையானது, ஜேர்மன் தாக்குதலுக்கு இலகுவான ஒரு இலக்காக இருக்ககூடிய ஒரு நிலையில் சோவியத் ஒன்றியத்தை விட்டது. அடுத்து வந்த நான்காண்டு கால உலகப் போரில் கொல்லப்பட்டதை விடவும் அதிகமான உயர்நிலை அதிகாரிகள் ஸ்ராலினால் கொல்லப்பட்டனர்.
இவ்வாறாக ஸ்ராலின், புரட்சியில் இருந்தும் 1918-1921 உள்நாட்டுப் போரில் இருந்தும் தோற்றம் கண்டு, ரஷ்யப் புரட்சியில் லெனினின் சக-தலைவராக இருந்தவரும் ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் செம்படையின் உருவாக்குநராகவும் அதன் தளபதியாகவும் இருந்தவருமான லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ் பயிற்றுவிக்கப்பட்டு கல்வியூட்டப்பட்ட ஒட்டுமொத்த இராணுவ வீரர்களையும் ஏறக்குறைய அழித்துவிட்டார். படையணிகள், படைப்பிரிவுகள் மற்றும் இராணுவத் தளபதிகளின் பெரும் சதவீதம் உட்பட மொத்தத்தில் சுமார் 30,000 செம்படை வீரர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
படையெடுப்புக்கு பல மாதங்களுக்கு முன்பாகவே ஜேர்மனி துருப்புகளையும் தடவாளங்களையும் சோவியத் எல்லையில் குவிக்கத் தொடங்கியது. ஹிட்லர் தாக்குதலுக்கு தயாரித்துக் கொண்டிருப்பதை பிரிட்டிஷ் உளவுத்துறையும் சோவியத் ஆட்சியின் சொந்த உளவு முகமைகளும் கூட எச்சரித்திருத்திருந்த போதும், ஸ்ராலின் எல்லைப் பிராந்தியங்களில் பாதுகாப்பு அரண்களை மீள்கட்டுமானம் செய்வதை தாமதப்படுத்தினார்.
சோவியத் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து எழக்கூடிய ஒரு புரட்சிகர சவால் குறித்து, எதிர்ப்புரட்சிகரமான அதிகாரத்துவம் அச்சம் கொண்டிருந்ததில் இருந்து முன்னெடுக்கப்பட்டிருந்த ஸ்ராலினின் கொள்கைகளின் ஒரு விளைவாய், ஜேர்மனியின் முப்படைகள் (Wehrmacht) எல்லையை தாண்டி வந்தபோது அவை துரிதமாக சோவியத் படைகளை வென்று விட்டன. போரின் முதல் வாரங்களில், ஜேர்மனியும் நேச சக்திகளும் ஏறக்குறைய ஒட்டுமொத்த முனைகளிலும் கண்ணிமைக்கும் வேகத்தில் முன்னேறி, சோவியத்தின், குறிப்பாக உக்ரேனில் மிக முக்கியமான பொருளாதாரப் பகுதிகள் சிலவற்றை ஆக்கிரமித்தன. அதிர்ச்சியாலும், ஒட்டுமொத்த பீதியாலும் பீடிக்கப்பட்ட ஸ்ராலின் நரம்புமண்டல பாதிப்பிற்குட்பட்டார். படையெடுக்கப்பட்டு 11 நாட்கள் வரை, ஜூலை 3 வரை, அவர் தேசத்திற்கு ஒரு உரை கூட நிகழ்த்தவில்லை.
இந்தப் போர் விரைவாக வெல்லப்பட்டு விடும் என்ற முன்னனுமானத்தில் ஹிட்லர் இத்தாக்குதலை ஒழுங்கமைத்திருந்தார்.
ஸ்ராலினிசத் தலைமையின் அழிவுகரமான தோல்வியையும் ஆரம்ப வாரங்களில் சோவியத் ஒன்றியம் கண்ட படுபயங்கர இழப்புகளையும் தாண்டி, கிட்டத்தட்ட தன்னியல்பாக சோவியத் மக்கள் அணிதிரட்டிய எதிர்ப்பு என்பது ஒரு பிரம்மாண்டமான மற்றும் வரலாற்றுச் சிறப்பான தன்மையைக் கொண்டிருந்தது. 1941 ஆம் ஆண்டின் வசந்த காலத்தின் மத்திக்குள்ளாகவே, ஜேர்மனி சுமார் 600 மைல்கள் தூரம் முன்னேறியிருந்தது, அத்துடன் லெனின்கிராட்டை சுற்றிவளைத்து மாஸ்கோவும் கூட கண்ணுக்கெட்டும் தொலைவில் தான் இருந்தது என்றாலும், இந்தப் படையெடுப்பு தோல்வி கண்டுள்ளது என்றும் ஜேர்மனி வெல்ல முடியாத ஒரு நீண்ட நெடிய போரில் சிக்கி விட்டிருந்தது என்கிறதுமான முடிவுக்கு ஜேர்மன் படைத் தலைமை வந்திருந்தது.
1941 டிசம்பரில், செம்படை, முதன்முறையாக, ஒரு தகர்த்தெறியும் எதிர்த்தாக்குதலில் இறங்கியது, பாசிசப் படைகள் பின்நோக்கி தூக்கிவீசப்பட்டன. பார்பரோஸா தாக்குதலின் தோல்வி, மூன்றாம் குடியரசின் (Third Reich) தலைவிதியில் ஒரு தீர்மானகரமான திருப்புமுனையாக இருந்தது. சோவியத் ஒன்றியத்தில் மக்கள் எதிர்ப்பின் வீச்சும், பாதிக்கப்பட்ட சோவியத் மக்கள் காட்டிய துணிச்சல் மற்றும் சுய-தியாகத்தின் உச்சங்களும், ரஷ்யப் புரட்சியின் மற்றும் அது அதிகாரத்திற்குக் கொண்டுவந்த உலகின் முதலாவது தொழிலாளர் அரசின் முற்போக்கான முக்கியத்துவத்தை, ஆளும் ஸ்ராலினிச கூடாரத்தின் குற்றங்களையும் நாசவேலைகளையும் தாண்டி, உலகுக்கு எடுத்துக் கூறுவதாக அமைந்தன.
சோவியத் வெற்றியானது, அதற்கு இன்னும் நான்கு ஆண்டுகள் சண்டையும் இன்னும் பயங்கரமான மனித இழப்புகளையும் அனுபவிக்கவேண்டியிருந்த போதிலும் உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் மீது சக்திவாய்ந்த தாக்கத்தைக் கொண்டிருந்தது. ரஷ்ய புரட்சியின் எஞ்சியிருந்த வலிமையே பாசிசத்தைத் தோற்கடிப்பதில் தீர்மானகரமான பாத்திரத்தை வகித்தது. சோவியத்தின் எதிர்த்தாக்குதலானது நாஜி ஆக்கிரமிப்பு ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் எதிர்ப்பு இயக்கங்களின் வளர்ச்சிக்கு உத்வேகமளித்தது.
ஹிட்லரின் குடியரசை தோற்கடிக்கப்பட்டதில் செம்படையின் மற்றும் சோவியத்தின் பரந்த மக்களது எதிர்ப்பின் இன்றியமையாத பாத்திரம் குறித்து சுருக்கமாகக் கூறிய ஸ்ரெபான் ஜி.ஃபிரிட்ஸ் (Stephen G. Fritz) மேலே மேற்கோளிடப்பட்ட தொகுதியில் பின்வருமாறு எழுதினார்:
இரண்டாம் உலகப் போர் என்பது முழுக்க கிழக்கு முனையில் வெற்றிகாணப்படவில்லை அல்லது தோல்வியடையவில்லை, என்றாலும் அது தான் முக்கியமானதாய் இருந்தது. அங்கே சண்டையின் வீச்சு மேற்கிலான சண்டை எதனையும் சிறியதாக்கி விட்டிருந்தது. திரும்பிப் பார்த்தால், கிழக்கு யுத்தத்தின் (Ostkrieg) விகிதாச்சார வித்தியாசம் திகைப்பூட்டுவதாக இருக்கிறது: இறந்த பத்து ஜேர்மன் படைவீரர்களில் சுமார் எட்டு பேர் கிழக்கில் தான் கொல்லப்பட்டிருந்தனர்... செம்படையானது, 12 மில்லியன் பேரை (அல்லது அண்ணளவாக ஆங்கிலோ-அமெரிக்கர்களது எண்ணிக்கையில் முப்பது மடங்கு எண்ணிக்கை பேரை) விலைகொடுத்து ஜேர்மன் முப்படைகளின் முதுகெலும்பை முறித்தது....
உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ரஷ்யப் புரட்சியைப் பாதுகாப்பதற்கும் அதை விரிவுபடுத்துவதற்குமான சர்வதேசப் போராட்டத்தின் தலைவராகவும், ஸ்ராலினிசத்தின் சமரசமற்ற எதிரியாகவும் இருந்த ட்ரொட்ஸ்கி, செம்படையின் முக்கியத்துவத்தை வேறெவொருவரை விடவும் மேம்பட்ட விதத்தில் முன்கணித்து வைத்திருந்த்துடன், புரிந்து வைத்திருந்தார். ”செம்படை” என்ற தலைப்பில் 1934 இல் எழுதிய ஒரு கட்டுரையில் அவர் பின்வரும் முடிவுக்கு வந்திருந்தார்:
உண்மைகளை உள்ளபடியாக கணக்கில் எடுத்தாக வேண்டும்: போர், சாத்தியமற்றது என்பதற்கு அப்பாற்பட்டதாக இல்லை என்பது மட்டுமல்ல, அது ஏறக்குறைய தவிர்க்கமுடியாத ஒன்றாகவும் இருக்கிறது. 1905 முதலாக ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு ஏற்றத்தையும் இறக்கத்தையும் கொண்டிருந்த ரஷ்யப் புரட்சியானது தனது உள்வலிமையை போரின் பாதையில் செலுத்துவதற்கு தள்ளப்படுமானால் அது ஒரு பயங்கரமான மற்றும் கட்டுக்கடங்காத சக்தியைக் கட்டவிழ்த்து விடும் என்பதை வரலாற்றின் புத்தகங்களை வாசிக்கும் திறன்படைத்த மற்றும் விருப்பமுள்ள எவரொருவரும் புரிந்து கொள்வார்கள்.
எழுபத்தியைந்து ஆண்டுகளின் பின்னர், சோவியத் ஒன்றியம் இனி இல்லாது போய் விட்டது. ட்ரொட்ஸ்கி எச்சரித்திருந்ததைப் போல, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் பிற்போக்குத்தனமான, தேசியவாத குணாம்சத்தினால் அது அழிக்கப்பட்டு விட்டது. 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதென்பது ஸ்ராலினிச ஆட்சியின் காட்டிக் கொடுப்புகள் மற்றும் குற்றங்களின் உச்சமாகவும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மிகப்பெரும் அடியாகவும் அமைந்து விட்டது.
ரஷ்யாவில் முதலாளித்துவம் மீட்சி செய்யப்பட்டதில் இருந்தான இந்த கால் நூற்றாண்டு காலம், அமைதியையும் ஜனநாயகத்தையும் மலரச் செய்வதற்கெல்லாம் அப்பால், உலகெங்கிலும் ஏகாதிபத்தியப் போர் மற்றும் பிற்போக்குத்தனத்தின் ஒரு புதிய காலகட்டத்தையே தொடங்கி வைத்திருக்கிறது. ரஷ்யாவை பொறுத்தவரை, இது ஒரு தணிக்கமுடியாத ஒரு பேரழிவாய் ஆகியிருக்கிறது. ரஷ்யா முதலாளித்துவ ஆட்சியின் கீழ் தொடர்கின்ற வரையில், தவிர்க்கவியலாமல், மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளால் உருக்கொடுக்கப்படுகின்றதும், அரைக் காலனி அந்தஸ்துக்கு குறைக்கப்படுகின்றதுமான நிலையே தொடர்ந்திருக்கும் என்ற உண்மையே ரஷ்யப் புரட்சிக்கு உந்தித் தள்ளிய அத்தியாவசியங்களில் ஒன்றாய் இருந்தது. இன்று, இராணுவரீதியாக சுற்றிவளைக்கப்பட்டும், அத்துடன் அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளால் இடைவிடாத அரசியல், பொருளாதார மற்றும் இராஜதந்திர தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் நிலையிலும், முதலாளித்துவ ரஷ்யா, தன் மீதான தாக்குதல்களைத் தடுத்துக் கொள்ளும் திறனற்றதாக இருக்கிறது. புட்டின் ஆட்சியானது ஒரு குற்றவியல்தனமான முதலாளித்துவ நிதிப்பிரபுத்துவத்தின் நலன்களின் பேரில் பின்பற்றப்படுகின்ற ரஷ்ய தேசியவாதத்தின் மிக திவாலாகிப் போன வடிவங்களுக்கு திரும்புவதன் உருவடிவமாய் இருக்கிறது.
ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் கீழ் உருக்குலைந்து இருந்தது என்றாலும் கூட, சோவியத் ஒன்றியத்தை காட்சியில் இருந்து அகற்றியமையானது, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல் மற்றும் இராணுவவாதத்தின் வளர்ச்சிக்கு எரியூட்டியிருப்பதோடு ஒரு புதிய உலகப் போரை நோக்கிய உலக ஏகாதிபத்தியத்தின் உந்துதலை துரிதப்படுத்தியிருக்கிறது.
20 ஆம் நூற்றாண்டின் மிக அரக்கத்தனமான குற்றங்களில் ஒன்றின் நினைவுநாளைக் குறித்து இத்தனை குறைவாக எழுதப்படுகிறது அல்லது பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது தற்செயலானதல்ல.
சில காலமாக, குறிப்பாக ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு நெருங்க நெருங்க, அதிகரித்த ஆக்ரோஷத்துடன், ஏகாதிபத்தியத்தின் அரசியல், சித்தாந்த மற்றும் கல்வியியல் பிரதிநிதிகளிடம் பழிவாங்கும் ஒரு உந்துதல் காணப்படுகின்றது. சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான நாஜிப் போரை நியாயப்படுத்தவும் அதற்கு வக்காலத்து வாங்கவும் முனைகின்ற புத்தகங்கள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன, கட்டுரைகள் எழுதப்படுகின்றன, நேர்காணல்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த நீண்டநெடிய உரையாடல்களின் மையமாகவுள்ள அவதூறும் வரலாற்றுப் பொய்மைப்படுத்தலும் வெறுமனே படையெடுத்தவரையும் பாதிக்கப்பட்டவரையும் சமநிலைப்படுத்தி காட்டுவதில் மட்டுமல்லாது, மாறாக வார்த்தைகளில் கூறமுடியாத நாசிசத்தின் குற்றங்களை, இருபதாம் நூற்றாண்டின் உண்மையான குற்றமாக அவர்கள் சித்தரிக்கின்ற ரஷ்யாவில் முதலாளித்துவம் தூக்கிவீசப்பட்டதற்கான ஒரு நியாயமான பதிலிறுப்பு என்பதாக காட்டுவதில் அமைந்திருக்கிறது.
இவை முற்கூட்டித்தாக்கும் உத்தியாக பயன்படுத்தப்படுகின்றன என்பதோடு, இறுதியில், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது ஒரு புதிய தலைமுறை, 1917 அக்டோபர் புரட்சி என்ற நவீன வரலாற்றின் மிகப்பெரும் நிகழ்வில் இருந்து உத்வேகம் பெறுவதையும் சோவியத் ஒன்றியத்தின் தீரமான மற்றும் துயரகரமான விதியில் இருந்தான உண்மையான படிப்பினைகளைப் பெறுவதையும் தடுப்பதற்குச் செய்கின்ற பரிதாபகரமான முயற்சிகளாக இருக்கின்றன.