Print Version|Feedback
NATO’s war summit in Warsaw
வார்சோவில் நேட்டோவின் போர் உச்சி மாநாடு
Alex Lantier
9 July 2016
வார்சோவில் வெள்ளியன்று தொடங்கிய இரண்டு நாள் நேட்டோ உச்சி மாநாடு, ஏகாதிபத்திய சக்திகளின் உலகளாவிய போர் முனைவை, அனைத்திற்கும் மேலாக, இரண்டாண்டுகளுக்கு முன்னர் ரஷ்ய-ஆதரவிலான உக்ரேனிய அரசாங்கத்தைக் கவிழ்த்த, அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதியுடன் தொடங்கிய ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கையின் ஓர் அசாதாரண தீவிரப்பாட்டைக் குறிக்கிறது.
ரஷ்யாவின் எல்லைகளை ஒட்டி பாரியளவில் நேட்டோ படைகளது பிரசன்னத்தை விரிவாக்குவதன் மூலமாக படையெடுப்பைக் கொண்டு ரஷ்யாவை அச்சுறுத்துவதே அம்மாநாட்டின் பிரதான இராணுவ நோக்கமாகும். மிகப் பரந்தளவில், அம்மாநாடு மாஸ்கோவிற்கு எதிரான போர் தயாரிப்புகளுடன் தொடங்கி, நேட்டோவை உலகெங்கிலும் ஆக்ரோஷமாக தலையீடு செய்வதற்கான ஒரு கூட்டணியாக மாற்றி ஒழுங்கமைக்க முயல்கிறது.
நேட்டோ பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் இன் தொடக்க உரையில் காட்டப்பட்ட இலக்குகளின் முழு பட்டியலில், பூமியின் பெரும்பாலான இடங்கள் இடம் பெற்றுள்ளன. ஈராக் மற்றும் சிரியாவில் நேட்டோ இராணுவ நடவடிக்கையை அதிகரிக்கும் மற்றும் மத்தியதரைக் கடலில் மற்றும் நேட்டோவின் ஒட்டுமொத்த "அண்டை பகுதிகள்" எங்கிலும் அதன் நிலைநிறுத்தல்களை விரிவாக்கும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார். லிபியாவில் இருந்து ஜோர்ஜியா மற்றும் உக்ரேன், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனாவின் எல்லையோரங்களில் உள்ள நாடுகள் வரையில் பரந்த நாடுகளில் நேட்டோ இராணுவ நடவடிக்கைக்கான திட்டங்களே வார்சோவில் விரிவான விவாதத்திற்குரிய விடயமாக இருக்கவிருக்கின்றன.
எஸ்தோனியா, லாத்வியா மற்றும் லித்துவேனியாவின் பால்டிக் குடியரசுகளுக்கும் (இந்நாடுகள் அனைத்தும் ரஷ்யாவின் எல்லைகளில் உள்ளன) மற்றும் போலாந்திற்கும் ஆயிரத்திற்கும் அதிகமான நேட்டோ துருப்புகளை அனுப்பும் திட்டங்களை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்துவதன் மீது வெள்ளியன்று பிரதானமாக அது ஒருங்குவிந்திருந்தது. போலாந்து ஜனாதிபதி Andrzej Duda முன்னிலையில் ஸ்டொல்டென்பேர்க் வழங்கிய கருத்துக்களில், கிழக்கு ஐரோப்பா எங்கிலும் நேட்டோவின் இராணுவ தலைமையகங்களை மற்றும் ஏவுகணை தளங்களை திறந்திருப்பதற்காகவும் அத்துடன் அக்கூட்டணியின் அதிரடி விடையிறுப்பு படையை 40,000 துருப்புகளாக மும்மடங்கு ஆக்கியதற்காகவும் பாராட்டினார்.
“நமது பிரசன்னம் பன்னாட்டுத்தன்மை கொண்டிருக்கும், ஒரு நட்பு சக்தி மீதான தாக்குதல் என்பது ஒட்டுமொத்த கூட்டணி மீதான ஒரு தாக்குதல் என்பதற்கு ஒரு தெளிவான சேதியை வழங்கும்,” என்றவர் அறிவித்தார்.
கிழக்கு ஐரோப்பாவிற்குள் சகல பிரதான நேட்டோ சக்திகளது பாரிய இராணுவ நிலைநிறுத்தல்களை ஸ்டொல்டென்பேர்க் நியாயப்படுத்துவது அசாதாரணமானரீதியில் பொறுப்பற்றதும் ஆத்திரமூட்டுவதும் ஆகும். ஸ்டொல்டென்பேர்க் ஐ பொறுத்த வரையில், கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யா சம்பந்தப்பட்ட எந்தவொரு உள்மோதலும் உடனடியாக ரஷ்யாவிற்கும் ஒட்டுமொத்த நேட்டோ கூட்டணிக்கும் இடையே முற்று-முழுதான மோதலாக தீவிரமடையும் என்பதை உறுதிப்படுத்துவதன் மூலமாக, அணுஆயுத போரைக் கொண்டு ரஷ்யாவை நிரந்தரமாக அச்சுறுத்துவதே நேட்டோ கூட்டணியைப் பாதுகாக்க சிறந்த வழியாக உள்ளது.
அத்தகைய ஒரு மோதல், வடிவமைக்கப்பட்ட விதத்திலோ அல்லது கவனக் குறைவினாலோ, எந்நேரமும் வெடிக்கலாம் என்ற அபாயம் மிக நேரடியாக கடந்த மாதம் போலாந்தில் 30,000 நேட்டோ படையினர் ஈடுபட்ட அனகொண்டா நடவடிக்கை எனும் பாரிய நேட்டோ இராணுவ பயிற்சியில் வெளிப்பட்டது. அதனுடன் ஒப்பிடக்கூடிய எண்ணிக்கையிலான துருப்புகளை ரஷ்யாவின் மேற்கு பகுதிகளில் அணிதிரட்டியதன் மூலமாக மாஸ்கோ விடையிறுத்தது, தன்னைப் பாதுகாக்க அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாஸ்கோவிற்கு உரிமை இருப்பதாக ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் அறிவித்தார்.
ரஷ்யா உடனான ஒரு மோதலுக்காக ஸ்டொல்டென்பேர்க் முன்வைக்கும் வாதங்கள் அரசியல் பொய்களாகும்—அனைத்திற்கும் மேலாக கிழக்கு உக்ரேனில் ரஷ்ய-ஆதரவிலான பிரிவினைவாதிகளை ரஷ்யா ஆதரிக்கிறது என்ற வாதம், ஐரோப்பாவில் இராணுவ வெற்றிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் ஆக்ரோஷ சக்தியாக அதை காட்டுகிறது. நேற்று அவர் விவரிக்கையில், “நாங்கள் பால்டிக் நாடுகளில் மற்றும் போலாந்தில் எங்களின் இராணுவ பிரசன்னத்தை அதிகரித்து வருகிறோம், ஆனால் இது உக்ரேனில் ரஷ்யா என்ன செய்ததோ அதேபோன்றவொரு விடையிறுப்பாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,” என்றார்.
எவ்வாறிருப்பினும் உக்ரேனில் ஆக்கிரமிப்பாளராக இருந்தது கிரெம்ளின் தன்னலக்குழு அல்ல, மாறாக வாஷிங்டனும் பேர்லினும் ஆகும், இவை கியேவ் இல் வன்முறையான வலதுசாரி தேசியவாத போராட்டங்களை முடுக்கிவிட்டு ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷ்ய-ஆதரவிலான அரசாங்கத்தை பதவியிலிருந்து தூக்கியெறிந்தன. உயர்மட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் பகிரங்கமாகவே அந்த போராட்டங்களில் அவர்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்கள், அத்துடன் உக்ரேன் எதிர்ப்பை ஊக்குவிக்க வாஷிங்டன் 5 பில்லியன் டாலரை செலவிட்டதாக வெளியுறவுத்துறை துணை செயலர் விக்டோரியா நூலாந்து பெருமை பீற்றினார்.
ஏகாதிபத்திய சக்திகளின் போர் முனைவானது கற்பனை செய்ய முடியாத பரிமாணத்தில் ஒரு போரைக் கட்டவிழ்த்துவிட அச்சுறுத்துகிற போதினும், அதை "சமாதானம் மற்றும் ஸ்திரப்பாட்டை" பாதுகாக்கும் ஒரு பாதுகாப்பு முயற்சியாக காட்டுவதே இத்தகைய அரசியல் பொய்களின் நோக்கமாகும்.
ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்னர் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் சோவியத் ஒன்றிய கலைப்பு மற்றும் அதன் முதலாளித்துவ மீட்சியின் பேரழிவுகரமான அரசியல் மற்றும் புவிசார் மூலோபாய விளைவுகளை முன்பினும் அதிகம் வெளிப்படையாக காணக்கூடியதாக உள்ளன. ஒரு சமாதானமான முதலாளித்துவ ஜனநாயக அபிவிருத்திக்கான அடித்தளத்தை அமைப்பதிலிருந்தே விலகி, அது ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் ஒரு நீடித்த ஒட்டுமொத்த தேசிய-அரசு அமைப்பு முறையின் நெருக்கடியை திறந்து விடும் நடவடிக்கையாக இருக்கிறது.
யதார்த்தத்தில், ரஷ்ய புரட்சியின் தசாப்த-கால ஸ்ராலினிச காட்டிக்கொடுப்பின் இந்த இறுதி அத்தியாயத்தின் விளைவு, பனிப்போரில் அமெரிக்காவின் வெற்றியாக பெரிதும் அறிவிக்கப்பட்ட இதன் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்க மற்றும் உலக ஏகாதிபத்தியம் மனிதகுலத்திற்கு முதலாளித்துவத்தின் உண்மையான "பலன்களை" காட்டியுள்ளது: அதாவது, முன்பினும் அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மை மற்றும் வறுமை, தேசிய பேரினவாதம் மற்றும் இனவாதத்தின் ஊக்குவிப்பு, சர்வாதிகாரத்திற்கான உந்துதல், மற்றும் அதிகரித்துவரும் ஓர் அணுஆயுத மூன்றாம் உலக போர் அபாயம்.
வார்சோ உச்சி மாநாட்டின் திட்டங்கள், கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வெளிப்படையாக, 1997 ரஷ்ய-நேட்டோ ஸ்தாபக சட்டத்தின் (1997 Russia-NATO Founding Act) இறுதி நிராகரிப்பாக உள்ளன. ஐரோப்பாவை மீள்ஆயுதப்படுத்த மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக ஓர் ஆக்ரோஷமான மூலோபாயத்தை பின்தொடர அது சோவியத் ஒன்றியத்தின் கலைப்பை சாதகமாக பயன்படுத்தாது என்று அச்சட்டத்தில் நேட்டோ உறுதியளித்திருந்தது. நேட்டோ அதன் இராணுவப் படைகளை "விரைவாக" குறைத்தும், நேட்டோ மற்றும் ரஷ்யா "ஒருவருக்கு ஒருவரை விரோதிகளாக பார்க்காது" இருப்பதை உறுதிப்படுத்தியும், அது ஒரு "வரலாற்று மாற்றத்திற்கு" உட்படும் என்று அச்சட்டம் குறிப்பிட்டது. இந்த உச்ச மாநாட்டிற்கு முன்னதாக, போலாந்து ஜனாதிபதி அந்த ஸ்தாபக சட்டத்தை உத்தியோகபூர்வமாக ஒதுக்கித்தள்ள அழைப்புவிடுத்தார்.
கடந்த கால் நூற்றாண்டாக, கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் முன்னாள் சோவியத் குடியரசுகளும் நேட்டோ அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து, முதலாளித்துவ சுரண்டல் மற்றும் ஏகாதிபத்திய சதிகளுக்குள் தள்ளப்பட்டன. குறிப்பாக 2014 கியேவ் ஆட்சி கவிழ்ப்பு சதிக்குப் பின்னர், மேற்கத்திய சார்பு உக்ரேனிய ஆட்சி மேலெழுந்த நிலையில், நேட்டோவுடன் அணிதிரண்ட விரோத நாடுகளால் ரஷ்யா சுற்றி வளைக்கப்பட்டு இருப்பதாக கண்டதால், 75 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் ஒன்றியத்தின் மீதான நாஜி படையெடுப்பை தொடர்ந்து அது இராணுவரீதியில் ஏற்றிருந்த நிலைப்பாடுகளை மீண்டும் ஏற்க தள்ளப்பட்டது.
இந்த நெருக்கடியில், அனைத்து முதலாளித்துவ கன்னைகளது கொள்கைகளும் ஆழமாக பிற்போக்குத்தனமாக உள்ளன. கிரெம்ளின் செல்வந்த அடுக்கு ஏகாதிபத்திய சக்திகளுடன் ஒரு ஏற்பாட்டை ஏற்படுத்தி கொள்வதற்கு அழுத்தமளிப்பதற்காக அதன் இராணுவத்தைப் பிரயோகிக்க முயலும் முயற்சிகள், போர் அபாயத்தை மட்டுமே உயர்த்துகின்றன.
ஏகாதிபத்திய சக்திகளின் ஆக்ரோஷமான கொள்கைகளை உந்துவதில் மற்றொரு கூடுதல் காரணியாக இருப்பது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஜூன் 23 பிரிட்டிஷ் வாக்கெடுப்பால் தீவிரப்படுத்தப்பட்டு, நேட்டோவிற்கு உள்ளேயே அதிகரித்தளவில் நிலவும் கடுமையான மற்றும் எளிதில் கையாள முடியாத நெருக்கடியாகும். போலாந்து உட்பட பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் வாஷிங்டனும், பிரிட்டனை நோக்கி அதிக அனுசரிப்பான போக்கிற்கும் மற்றும் ரஷ்யாவை நோக்கி முன்பினும் அதிக ஆக்ரோஷமான கொள்கைக்கும் அழைப்பு விடுத்துள்ளன. மறுபுறம், ஜேர்மனி, அதை பின்தொடர்ந்து பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனை வேகமாக வெளியேற்றுவது மற்றும் ரஷ்யா உடனான மோதலை குறைப்பது உள்ளடங்கலாக அதிக சுதந்திரமான, அதாவது அமெரிக்காவிடமிருந்து சுதந்திரமான வெளியுறவு கொள்கையை முன்மொழிந்து வருகின்றன.
வெள்ளியன்று இரவு, ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் இன் அலுவலர், ரஷ்யா-நேட்டோ ஸ்தாபக சட்டம் இன்னமும் செல்லுபடியாக இருக்கிறது என்று வலியுறுத்தி, போலாந்து ஜனாதிபதிக்கு நேரடியான எதிர்ப்பாக, அவரது கருத்துக்களை ட்வீட்டரில் பதிவு செய்திருந்தார்.
சகல ஐரோப்பிய முதலாளித்துவ அமைப்புகள் மற்றும் சர்வதேச கூட்டணிகளின் ஒட்டுமொத்த அமைப்புமுறையும் உயிர்வாழ்வின் நெருக்கடியில் இருக்கின்றன என்பதையே இத்தகைய முரண்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. ஓர் அமெரிக்க-ஆதரவு ஜேர்மன் இதழாளரும் மற்றும் நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளருமான ஜோஹென் பிட்னெர், ஒரு கட்டுரையில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடனான ரஷ்ய மோதல், நேட்டோ கூட்டணியையே அழிக்க இட்டுச் செல்லும் ஒரு சூழலை விவரித்து, நேட்டோவின் தலைவிதி குறித்து கவலை வெளியிட்டிருந்தார்.
அவர் எழுதினார், “கிரிமியாவைப் போல மற்றொரு இணைப்புக்கு ஒரு முன்கூட்டிய பலமான விடையிறுப்பைக் கோரி போலாந்தும் பால்டிக் நாடுகளும் அழைப்பு விடுப்பார்கள். ஜேர்மனியர்களும் பிரெஞ்சுக்காரர்களும் மாஸ்கோவுடன் பேரம்பேசல்களுக்கு அழைப்பு விடுப்பார்கள் … கிரிமியா இணைக்கப்பட்டதற்குப் பிந்தைய ரஷ்யா மீதான தடைகளில் இருந்து தங்களின் பொருளாதாரங்கள் ஏற்கனவே போதுமானளவிற்கு பாதிக்கப்பட்டிருப்பதாக கிரேக்கர்கள், இத்தாலியர்கள் மற்றும் ஸ்பானியர்கள் தெளிவுபடுத்துவார்கள். பின் ஐரோப்பா எங்கிலும் பெரும்பாலான பொது மக்கள், ரஷ்ய பிரசாரத்தால் கையாளப்பட்டு, ரஷ்யர்கள் ஏதோவிதத்தில் சரியாக தானே இருந்தார்கள் என்று கேட்பார்கள்…"
நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரமடைந்து வரும் நெருக்கடிகள் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை மற்றும் சவாலாகும். ஐரோப்பாவில் கட்டவிழ்ந்து வரும் நெருக்கடி, கற்பனை செய்தும் பார்க்க முடியாதளவிற்கு ஒரு பேரழிவுடன் மனிதகுலத்தை அச்சுறுத்துகிறது. அதை தடுப்பது என்பது தொழிலாள வர்க்கம் அதன் புரட்சிகர வரலாற்றுடன் அதன் இணைப்புகளைப் புதுப்பிப்பது மற்றும் போருக்கு எதிராக மற்றும் முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்காக அரசியல்ரீதியில் நனவான சர்வதேச இயக்கத்தை அபிவிருத்தி செய்வது ஆகியவற்றைச் சார்ந்துள்ளது.