Print Version|Feedback
NATO convenes summit in Warsaw to make war preparations against Russia
ரஷ்யாவிற்கு எதிரான போர் தயாரிப்புகளை செய்ய வார்சோவில் நேட்டோ உச்சி மாநாடு கூடுகிறது
By Johannes Stern
8 July 2016
இன்று, வார்சோவில் இரண்டு நாள் நேட்டோ உச்சி மாநாடு தொடங்குகிறது. போலாந்து தலைநகரில் மேற்கத்திய இராணுவ கூட்டணியின் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் நடவடிக்கைகள், ஐரோப்பாவில் கூடுதலாக போர் அச்சுறுத்தலை தீவிரப்படுத்தி, ஓர் அணு ஆயுத சக்தியான ரஷ்யாவிற்கு எதிராக முன்பினும் அதிக பகிரங்கமான போர் தயாரிப்புகளுக்கு சேவையாற்றும்.
விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள சில திட்டங்கள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- 2017 இல் தொடங்கி, ஒவ்வொன்றும் குறைந்தபட்சம் 1,000 சிப்பாய்களை கொண்ட நான்கு கூடுதல் துணைப்படை பிரிவுகள் பால்டிக் நாடுகளிலும் போலாந்திலும் நிலைநிறுத்தப்படும். லித்துவேனியாவில் ஜேர்மனி, போலாந்தில் அமெரிக்கா, லாட்வியாவில் கனடா மற்றும் எஸ்தோனியாவில் பிரிட்டனும் அந்த படைப்பிரிவுகளுக்கு தலைமை கொடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலைநிறுத்தல்களுக்காக அனுப்பப்படும் துருப்புகள் ஆறில் இருந்து ஒன்பது மாதங்களுக்கு ஒருமுறை தொடர்ந்து மாற்றப்படும். இவ்விதத்தில் அக்கூட்டணி, வார்சோ உடன்படிக்கையின் முன்னாள் அங்கத்துவ நாடுகளில் "குறிப்பிடத்தக்க போர் நடவடிக்கை துருப்புகளை நிரந்தரமாக நிறுத்துவதை" தடுக்கும் 1997 நேட்டோ-ரஷ்யா ஸ்தாபக சட்டத்தின் வகைமுறைகளை கைத்துறக்கிறது.
- வேல்ஸ் இல் நடந்த 2014 நேட்டோ உச்சி மாநாட்டில் தொடங்கப்பட்டதும், 48 மணி நேரத்திற்குள் நெருக்கடி பகுதிகளுக்குள் ஆயுதங்களை மற்றும் படை தளவாடங்களை அனுப்பக் கூடியதுமான, 5,000 படையினர் கொண்ட ஒரு புதிய பலமான அதிதுரித கூட்டுப்படை (VJTF) வாரயிறுதி வாக்கில் முழுவதுமாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். நேட்டோ விடையிறுப்பு படையின் பாகமாக இருக்கும் "தாக்குமுகப்பு" என்றழைக்கப்படும் இதன் துருப்புகளின் பலம், கடந்த ஆண்டில் 13,000 இல் இருந்து 40,000 ஆக மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- கிழக்கு ஐரோப்பாவில், இந்த அதிதுரித கூட்டுப்படையின் நடவடிக்கை திறமையை உறுதிப்படுத்த அவசியமான உள்கட்டமைப்பு உருவாக்கப்படும். இந்த "தாக்குமுகப்புக்கு" “முகப்புச்சாவடிகளாக" சேவையாற்ற நேட்டோ படை ஒருங்கிணைப்பு பிரிவுகள் (NFIU) என்றழைக்கப்படும் ஆறு இராணுவ தளங்கள் ஏற்கனவே போலாந்து, ரூமேனியா, பல்கேரியா மற்றும் மூன்று பால்டிக் நாடுகளில் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் தளவாட பரிவர்த்தனை மற்றும் தலைமை உதவிகள் வழங்கும் 40 வல்லுனர்கள் பணியமர்த்தப்பட்டு, உணவு மற்றும் மருத்துவ வினியோகங்களும் வழங்கப்பட உள்ளன. கூடுதல் NFIU கள் இப்போது ஸ்லோவாக்கியா மற்றும் ஹங்கேரியில் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.
- போலாந்து மற்றும் ரூமேனியாவில் நேட்டோ இப்போது கட்டமைத்து வருகின்ற ஏவுகணை தடுப்பு அமைப்புமுறை ஆரம்பகட்ட செயல்பாட்டுக்கு தயாராக இருப்பதாக வார்சோவில் அறிவிக்கப்படும். ஈரான் இல் இருந்தான மத்திய-தூர ஏவுகணைகளுக்கு எதிரான ஒரு பாதுகாப்பாக முதலும் முக்கியமுமாக இது கவசமாக சேவையாற்றும் என்று நேட்டோ உத்தியோகபூர்வமாக வாதிடுகின்ற போதினும், மாஸ்கோவிற்கு எதிராக முதல் அணுஆயுத தாக்குதலை மிகவும் சாத்தியமாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட நேட்டோ போர் தயாரிப்புகளின் பாகமாக இதை ரஷ்யா நியாயமாகவே கருதுகிறது.
- சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் ரஷ்யாவின் எல்லைகளை நோக்கி திட்டமிட்டு முன்னேறி உள்ள நேட்டோ, இன்னும் கூடுதலாக இராணுவரீதியில் மாஸ்கோவை தனிமைப்படுத்த திட்டமிடுகிறது. மே மாதத்தில், பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் அறிவிக்கையில் வார்சோவில் "உக்ரேனுக்கான ஒரு புதிய விரிவான நேட்டோ ஆதரவு பொதி" தீர்மானிக்கப்படும் என்றார்.
வியாழனன்று, அந்த உச்சி மாநாட்டுக்கு முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி ஆத்திரமூட்டும் வகையில் கியேவ் க்கு விஜயம் மேற்கொண்டு, 23 மில்லியன் டாலர் நிதியுதவி அறிவித்தார். இந்த அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டு வந்த மேற்கின் ஆதரவுடனான 2014 ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தொடர்ந்து அதன் சட்டபூர்வத்தன்மையை ஏற்க மறுத்த கிழக்கு மக்களுக்கு எதிராக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இராணுவ தாக்குதலால் இடம்பெயர்ந்த உக்ரேனியர்களுக்கு அந்த உதவி போய் சேருமென கூறப்படுகிறது. உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொறோஷென்கோ கெர்ரி க்கு பக்கவாட்டில் நின்று பேசுகையில், வரவிருக்கும் உச்சி மாநாடு மேற்கத்திய இராணுவ கூட்டணி உடன் "எங்களின் சிறப்பு பங்காண்மையை" கூடுதலாக "ஒருங்கிணைக்கும்" என்றார்.
அதற்கும் கூடுதலாக, அந்த இராணுவ கூட்டணியில் 29 வது எதிர்கால அங்கத்துவ நாடாக அந்த உச்சி மாநாட்டில் மொண்டெனேக்ரோ (Montenegro) முன்நிறுத்தப்படும். அனேகமாக ஜோர்ஜியா மற்றும் மால்டோவியாவின் முன்னாள் சோவியத் குடியரசுக்களுடன் நெருக்கமான கூட்டுறவு தீவிரப்படுத்தப்படலாம்.
பின்லாந்து ஜனாதிபதி Sauli Niinistö மற்றும் ஸ்வீடன் பிரதம மந்திரி ஸ்ரெபான் லோவ்வென் ஆகியோரையும் நேட்டோ வார்சோவிற்கு அழைத்துள்ளது. இவ்விரு நாடுகளுமே நேட்டோவின் அங்கத்துவ நாடுகள் அல்ல. திங்களன்று பத்திரிகையாளர் கூட்டத்தில், ஸ்டொல்டென்பேர்க் விளக்கமளிக்கையில் அவ்விரு நாடுகள் அழைக்கப்பட்டுள்ளன ஏனென்றால் அவை "எங்களின் வெகு சில விரிவாக்கப்பட்ட சந்தர்ப்ப பங்காளிகளில் இரு நாடுகளாகும்" மற்றும் அவை "பால்டிக் கடல் பிரதேசத்தின் ஸ்திரப்பாடு" மற்றும் பாதுகாப்பில் ஒரு மத்திய பாத்திரம் வகிக்கின்றன என்று தெரிவித்தார். “அவர்களுக்கு நிறைய வேண்டுமா வேண்டாமா என்பதை" இப்போது "பின்லாந்தும் ஸ்வீடனும் தான் முடிவு செய்ய வேண்டும்" என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
நேட்டோவிற்குள் பின்லாந்தைக் கொண்டு வரும் சாத்தியக்கூறு மீதான ரஷ்யாவின் எச்சரிக்கைகளை ஸ்டொல்டென்பேர்க் உறுதியாக நிராகரித்துவிட்டார். “அங்கத்துவத்திற்கு அவர்கள் விண்ணப்பிக்க வேண்டுமா என்பதை பின்லாந்தியர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்,” என்றவர் அறிவித்தார். கடந்த வெள்ளியன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் எச்சரிக்கையில் நேட்டோ "இரவோடு இரவாக ரஷ்ய கூட்டாட்சி எல்லையில்" நெருங்கினால், மாஸ்கோவ் பின்லாந்து-ரஷ்ய எல்லைக்கு நெருக்கமாக அதன் துருப்புகளை நகர்த்தும் என்று எச்சரித்தார்.
அனைத்திற்கும் மேலாக, மாநாட்டை நடத்தும் போலாந்தும் பால்டிக் நாடுகளும் முந்தைய திட்டங்களுக்கும் அப்பாற்பட்டு அந்த உச்சி மாநாட்டில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன. போலாந்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Pawel Soloch கிழக்கு ஐரோப்பாவில் நிறைய துருப்புகளை நிலைநிறுத்த நேட்டோவிற்கு அழைப்புவிடுத்துள்ளார். “ரஷ்யாவின் மனோபாவம் மாறவில்லை என்றால் இந்த அளவை இன்னமும் அதிகரிக்கலாம்,” என்று Soloch தெரிவித்தார்.
உச்சி மாநாட்டின் உறுதியான முடிவுகளில் இருந்து தனிப்பட்டு, வலதுசாரி போலாந்து அரசாங்கம் "தேசிய பாதுகாப்பு" என்ற பாசாங்குத்தனத்தின் கீழ் செப்டம்பருக்குள் ரஷ்யாவிற்கு எதிராக ஒரு பலமான 35,000 பேர் கொண்ட சுய-சேவை போராளிகள் குழுவை நிலைநிறுத்த விரும்புகிறது. இந்த வலதுசாரி துணைப்படை போராளிகள் குழுவின் 400 அங்கத்தவர்கள் ஏற்கனவே நேட்டோவின் "அனகொண்டா" பயிற்சியில் பங்கெடுத்துள்ளனர். பனிப்போர் முடிந்ததற்குப் பின்னர் கிழக்கு ஐரோப்பாவில் நடந்த மிகப்பெரிய இராணுவ ஒத்திகையான அத்தகைய பயிற்சி ரஷ்யா உடனான ஓர் இராணுவ மோதலைப்போல ஒத்திகை பார்க்கப்பட்டது.
இதற்கிடையே, குறைந்தபட்சம் நேட்டோ ஸ்தாபகத்தின் ஒரு பகுதி ரஷ்யாவிற்கு எதிரான ஒரு சாத்தியமான ஆக்கிரமிப்பு போரைப் பகிரங்கமாக விவாதித்து வருகிறது. செய்தி நிறுவனம் UPI இன் "ரஷ்யா உடன் அமெரிக்கா ஒரு போருக்கு திட்டமிட்டு வருகிறதா?” என்று தலைப்பிட்ட கட்டுரையில், அமெரிக்க இராணுவ மூலோபாயவாதி ஹார்லன் உல்மன் (Harlan Ullman) பிரிட்டன் இராணுவ கருத்தரங்கம் குறித்து செய்தி அளிக்கிறார், அதில் அமெரிக்க தளபதி ஒருவர் "ஒரு போரில் ரஷ்யாவை அதைரியப்படுத்துவது மற்றும் அவசியமானால் தோற்கடிப்பது" அமெரிக்க இராணுவத்தின் அதிகபட்ச முன்னுரிமையாகும் என்று அறிவித்திருந்தார்.
ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதன் மீது பிரிட்டனில் நடந்த வெகுஜன வாக்கெடுப்பின் முடிவு, நீண்டகாலமே ரஷ்யாவிற்கு எதிராக ஒரு கடுமையான போக்கை எடுக்க வலியுறுத்தி வரும் அமெரிக்க வெளியுறவு கொள்கை போர்வெறியர்களை இன்னமும் அதிகமாக ஆக்ரோஷப்படுத்தி உள்ளது.
வெள்ளியன்று “புட்டினின் பிரெக்ஸிட் கட்சியை எப்படி தோற்கடிப்பது?” என்று தலைப்பிட்டு வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் ரோபர்ட் டி. காப்லன் பிரசுரித்த ஒரு கட்டுரையில், ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ தாக்குதலை பிரிட்டன் வெளியேற்றம் பலவீனப்படுத்துவதை வாஷிங்டன் அனுமதிக்காது என்று எச்சரித்தார். ரஷ்யாவிற்கு எதிராக இலண்டன் உடன், அவசியமானால், ஜேர்மனிக்கு எதிராகவும், அமெரிக்கா அதன் கூட்டணியை வளர்க்க வேண்டியிருக்கும். “பிரிட்டன் அமெரிக்காவுடன் அதன் கூட்டணியை புத்துயிரூட்ட வேண்டும்" என்று ஈராக் போர் வடிவமைப்பாளர்களில் ஒருவரான காப்லன் எழுதுகிறார். “ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமாக, இவ்விரு நாடுகளும் இன்னமும் ரஷ்யாவின் கதவுகள் வரையில் ஐரோப்பிய பெருநிலத்தின் பலத்தைக் காட்ட முடியும்,” என்றார்.
நேற்று ஜேர்மன் நாடாளுமன்றத்தின் ஒரு கொள்கை அறிக்கையில், சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவின் இராணுவ ஆயத்தப்படுத்தலை நியாயப்படுத்தினார். “வேல்ஸ் இல் [நேட்டோ] கூட்டணி செய்துள்ள மாற்றியமைப்புகளுக்கு நாங்கள் ஒத்துழைப்போம். கூட்டணியின் தடுப்புமுறை மற்றும் பாதுகாப்புமுறை தகைமைகளை நிரந்தரமாக திட்டவட்டமாக்கும் மற்றும் பாதுகாக்கும் கூறுபாடுகள் சேர்க்கப்படும்,” என்று மேர்க்கெல் குறிப்பிட்டார். “அது முக்கியமாகும், ஏனென்றால் துருப்புகளை துரிதமாக நிலைநிறுத்துவதற்கு இது போதாது, மாறாக அந்நிலத்திலேயே போதுமான பிரசன்னத்தை நாம் கொண்டிருப்பது அவசியம் என்று கூட்டணியில் இருக்கும் நாங்கள் உணர்ந்துள்ளோம்,” என்றார்.
இருந்தபோதினும் அதேநேரத்தில் மேர்க்கெல் முரண்பட்டரீதியில் தொடர்ந்து கூறுகையில், இராணுவ ஆயத்தப்படுத்தல் "ரஷ்யாவிற்கு எதிராக திருப்பிவிடப்பட்டதல்ல, அது ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான மூலோபாய சமநிலையைப் பாதிக்காது, மேலும் ஜேர்மன் அரசாங்கத்திற்கும் சரி கூட்டணிக்கும் சரி அதை மாற்றும் விருப்பம் துளியும் கிடையாது,” என்றுரைத்தார். “தடுப்புமுறை மற்றும் பேச்சுவார்த்தை முரண்பாடானதல்ல; கிடையாது, அவை ஒன்றோடொன்று பிணைந்துள்ளன,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். “ஐரோப்பிய பாதுகாப்பு ரஷ்யாவிற்கு எதிராக இருந்தல்ல, அதனுடன் சேர்ந்து மட்டுந்தான் அடைய முடியும்,” என்றும் மேர்க்கெல் வலியுறுத்தினார்.
அரசாங்கத்திற்குள்ளேயே கூட இருக்கும் கூறுபாடுகள் உள்ளடங்கலாக ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவுகளுக்குள், போரை நோக்கிய அமெரிக்காவின் ஆக்ரோஷமான முனைவு கிழக்கு ஐரோப்பா மற்றும் யுரேஷியாவில் அவர்களின் சொந்த புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகரித்தளவில் ஓர் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. வெளியுறவு மந்திரி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் சமீபத்தில் ரஷ்யாவை நோக்கி திருப்பிவிடப்பட்ட "போர் முரசு கொட்டும் பேச்சுக்கள் மற்றும் போர் கூச்சல்களுக்கு" எதிராக நேட்டோ கூட்டாளிகளை எச்சரித்திருந்தார்.
“ரஷ்ய முரணுரை" என்ற தலைப்பிட்ட ஒரு சமீபத்திய கருத்துரையில், முனீச் பாதுகாப்பு மாநாட்டின் தலைவர் Wolfgang Ischinger, ரஷ்யாவின் நடவடிக்கைகளை "ஆக்கிரமிப்பு தன்மை கொண்டதாக மற்றும் அச்சுறுத்துவதாக" கருதுகிறார் என்றாலும் அவற்றை "அந்நாட்டின் பலத்தை விட அதன் பலவீனத்தின் வெளிப்பாடாக" பார்க்கிறார். அது ஒரு "முரண்பாடாக" தெரிந்தால், ஒருவர் அவரது சொந்த நலன்கள் மற்றும் மதிப்புகளை வலியுறுத்த "பேச்சுவார்த்தைகளுக்கான முன்மொழிவுகளுடன் மாஸ்கோவை அணுக" வேண்டும் என்று அவர் எழுதுகிறார்.
அமெரிக்காவிடமிருந்து சுதந்திரமாக ஜேர்மனி அதன் வெளியுறவு கொள்கை இலக்குகளைப் பின்தொடர முயல்வதைப் பொறுத்த வரையில், வார்சோ உச்சி மாநாட்டில் வெளிப்படக்கூடிய அளவிற்கு முன்னணி அரசியல்வாதிகளும் அபாயங்களை விவாதித்து வருகிறார்கள். பேர்லின் செய்தியிதழ் B.Z. உடனான மற்றொரு பேட்டியில், Ischinger குறிப்பிடுகையில், “இந்த உச்சி மாநாடே கூட [ரஷ்யா உடனான] உறவை இன்னும் அதிகமாக பாதிக்கக்கூடும் என்று ஒருவர் அஞ்சுகிறார். மாஸ்கோ எதிர்நடவடிக்கைகளை எடுக்குமென நான் கவலையுறுகிறேன், இதற்கு பின்னர் நேட்டோ விடையிறுப்பு காட்ட வேண்டி இருக்கும். ஓர் ஆயுத போட்டி தடுக்க முடியாத நிர்பந்தமாகிறது,” என்றார்.
இராணுவ தீவிரப்பாட்டின் அச்சுறுத்தல் "முன்னர் போலவே மிகவும் கருதிப்பார்க்கக்கூடியதாக" உள்ளது என்றவர் எச்சரிக்கிறார். உக்ரேன் நெருக்கடி தொடங்கியதற்கு பின்னரில் இருந்து, அங்கே "அதிகரித்த எண்ணிக்கையிலான பலப்பரீட்சை" நடந்து வருவதாகவும், “அதில் ரஷ்யாவும், மேற்கும் போர் விமானங்கள் அல்லது போர்க்கப்பல்களுடன் ஒன்றுக்கொன்று நெருக்கமாக வந்திருப்பதாகவும்" Ischinger கூறுகிறார். “ஒரேயொரு சிப்பாய் தவறான பொத்தானை அழுத்தினாலும், அது அபாயகரமான சங்கிலித்தொடர் போன்ற எதிர்விளைவுகளைத் தொடங்கி வைத்துவிடும். பனிப்போர் முடிந்து 26 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டு தரப்பும் கணிசமான அளவிற்கு அணுஆயுத தளவாடங்களைக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது,” என்றார்.