Print Version|Feedback
After Nice attack, French government calls up military reserves
நீஸ் தாக்குதலுக்குப் பின்னர், பிரெஞ்சு அரசாங்கம் இராணுவத்தின் துணைப் படைக்கு அழைப்பு விடுக்கிறது
By Alex Lantier
18 July 2016
நீஸ் நகரில் பாஸ்டிய் தின மாலையில் கூட்டத்தின் மீது லாரியை ஓட்டி 84 பேர் மரணமடைவதற்கும் 100 பேர் காயமடைவதற்கும் காரணமாக இருந்த லாரியின் பிரான்ஸ்-துனிசிய ஓட்டுநர் முகமட் லாவுஇஜ் பூலெல் (Mohamed Lahouaiej Bouhlel) குறித்து முரண்பாடான தகவல்கள் தொடர்ந்து வெளிவருகின்ற நிலையில், பிரெஞ்சு அரசாங்கம் ஒரு பரந்த இராணுவ அதிகரிப்புக்கு அழுத்தமளித்துக் கொண்டிருக்கிறது.
சென்ற ஆண்டில் பாரிஸிலும் இந்த மார்ச்சில் புரூசெல்ஸிலும் நடந்ததைப் போன்று, இந்த பயங்கரத் தாக்குதலானது, சிரியப் போரில் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் அவற்றின் கூட்டாளிகளால் ஆரம்பத்தில் ஆதரவளிக்கப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத வலைப்பின்னல்களுடன் ஏதோவொரு வகையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதாக தகவல்கள் பலவும் கூறுகின்றன. ஆயினும் இந்தத் தொடர்புகள் ரொம்பவும் மர்மமானவையாக இருக்கின்றன. பூலெல் (Bouhlel) இன் நோக்கங்களும் தொடர்புகளும் அடையாளம் காணப்படுவதற்கும், தாக்குதல்களுக்கான அரசியல் பொறுப்பு மற்றும் வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்ப்பது ஆகியவை குறித்த பிரச்சினைகள் விவாதிக்கப்படுவதற்கும் வெகு முன்பாக, பிரான்சிற்கு உள்ளும் வெளியிலும் பெரிய அளவில் இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான அவசரமான முன்மொழிவுகள் பொதுமக்களின் மீது இறைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
வெள்ளிக்கிழமையன்று ஈராக் மற்றும் சிரியா மீதான குண்டுவீச்சுகளை அதிகப்படுத்துவதற்கு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் அழைப்பு விடுத்ததற்குப் பின்னர், உள்துறை அமைச்சரான பேர்னார்ட் கஸெனேவ், இராணுவ மற்றும் போலிஸ் உடன் சேர்ந்து இயங்கும் துணைப் படைகளுக்கு பாரிய ஆளெடுப்புக்கு அழைப்புவிடுத்தார். பிரான்சிற்குள்ளான நடவடிக்கைகளில் இராணுவத்துடன் நெருக்கமாக இணைந்து செயற்படக் கூடிய ஒரு பெரிய தன்னார்வ துணைப் படையை கட்டியெழுப்புகின்ற ஒரு பரந்த நிகழ்ச்சிப் போக்கில், இது ஒரேயொரு படி மட்டுமேயாகும்.
சனிக்கிழமையன்று, பூலெல் இன் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று ISIS ஒரு அறிக்கை வெளியிட்டது. “நீஸ் நகரில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையை நடத்தியவர் இஸ்லாமிய அரசின் ஒரு படைவீரர் ஆவார். ISIS க்கு எதிராய் சண்டையிடுகின்ற கூட்டணியின் நாடுகளது குடிமக்களைக் குறிவைக்க விடுக்கப்பட்ட அழைப்புகளுக்கு பதிலிறுப்பாக அவர் இந்த நடவடிக்கையை நடத்தினார்” என்று ISIS இன் Amaq செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த ஒரு இணையவழி செய்திக்குறிப்பு அறிவித்தது. ஆனாலும், ISISக்கும் பூலெலுக்கும் இடையிலான துல்லியமான தொடர்புகள் தெளிவாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கவில்லை.
சிரியப் போரில் செயலூக்கத்துடன் இயங்கிய இஸ்லாமிய வலைப்பின்னல்களுடன் தொடர்புகள் கொண்டவராய் பூலெல் இருந்தார் என்பதான தகவல்கள் பிரான்சில் வெளிவந்திருக்கின்றன என்ற போதும், அவர் பிரெஞ்சு உளவுத்துறையால் அறியப்படாதவராகவும், சில்லறைத் திருட்டுக்காகவும் தெருச் சண்டைக்காகவும் மட்டுமே போலிசால் அறியப்பட்டவராயும் இருந்தார். “அவரது பயணத்தின் வழியில் ‘தாடி வைத்த மனிதர்கள்’ இருந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை” என்று விசாரணையில் சம்பந்தப்பட்ட ஒரு ஆதாரம் தெரிவித்தது. ஆயினும் அந்த ஆதாரம் மேலும் சேர்த்துக் கூறியது: “முகமட் லாவுஇஜ் பூலெல் இந்த இஸ்லாமிய வலைப்பின்னல்களுக்கு எவ்வளவு நெருக்கமாய் இருந்து வந்தார் என்பது மட்டுமே போலிஸ் அறியாத விடயமாக இருக்கிறது”.
மற்ற விவரிப்புகள் இந்த விவரிப்புடன் முரண்பட்டுத் தொனிக்கின்றன. பிரான்சில் பூலெல் இன் அண்டைவாசிகளும் துனிசியாவில் உள்ள அவரது குடும்பமும் பூலெல் ஐ ஒரு அர்ப்பணிப்பான இஸ்லாமியவாதியாக இருக்க முடியாத அளவுக்கு ஒரு மதப்பற்றில்லாத, உளவியல் பிரச்சினை கொண்டிருந்த ஒரு தனிநபராய் வருணித்தனர். “2002 முதல் 2004 வரையிலும், ஒரு மன அழுத்தத்தை உருவாக்கிய பிரச்சினைகள் அவருக்கிருந்தன” என்று அவரது தந்தை Mohamed Mondher Lahouaiej Bouhlel கிழக்கு துனிசியாவில் இருக்கின்ற Msaken இல் இருந்தபடி AFP யிடம் தெரிவித்தார். “அவர் தொழவில்லை, நோன்பிருக்கவில்லை, மது அருந்தினார், போதை மருந்துகளும் கூட உட்கொண்டார்.... நீஸ் சம்பவத்தில் நாங்களும் கூட அதிர்ச்சியானோம்” என்றார் அவர்.
விவாகரத்தாகி மூன்று குழந்தைகளின் வளர்ப்புக்கு நிதியளித்துக் கொண்டிருந்த பூலெல், தாக்குதலுக்கு முந்தைய தினங்களில், மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானார் என்றும் கடனில் இருந்து மீளமுடியாத கோபத்தில் இருந்தார் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மானுவல் வால்ஸ் தாக்குதல் நடந்ததற்குப் பின் ஏறக்குறைய உடனடியாக வார இறுதியின் போது, “சந்தேகத்திற்கிடமின்றி தீவிரப்பட்ட இஸ்லாமியத்துடன் தொடர்புபட்டிருந்த ஒரு பயங்கரவாதி” என்று பூலெல் ஐ அழைத்த அதேநேரத்தில், உள்துறை அமைச்சரோ பூலெலுக்கும் ISIS க்கும் இடையிலான உறவுகளின் எல்லை குறித்து சற்று கவனமான தொனியில் பேசினார்.
பூலெல் “மிகவும் துரிதமாக தீவிரப்பட்டிருந்ததாய் தோன்றுகிறது” என்று அறிவித்த கஸெனேவ், “சண்டையில் பங்குபெற்றிருக்க வேண்டுமென்றோ அல்லது பயிற்சியளிக்கப்பட்டிருப்பதற்கோ அவசியமில்லாமலேயே, ISIS இன் செய்தியை எடுத்துக் கொண்டு எதிர்வினையாற்றும்விதமாக அதீத வன்முறை நடவடிக்கைகளில் இறங்கக் கூடிய தனிநபர்களால் தொடுக்கப்படுவதான ஒரு புதிய வகைத் தாக்குதலாக” இது இருப்பதாக மேலும் சேர்த்துக் கொண்டார்.
இந்த நிலைமைகளின் கீழ், நீஸ் தாக்குதலின் தன்மையை தீர்மானிப்பது ஏறக்குறைய சாத்தியமில்லாததாகும். இந்தத் தாக்குதலானது, பிரான்சும் அதன் மற்ற ஆதரவாளர்களும் ISIS நோக்கி இப்போது திரும்பி மத்திய கிழக்கிலான அதன் நிலைகளின் மீது தாக்குதல் நடத்துகின்ற நிலையில், ISIS தொடுத்த திட்டமிட்ட கூட்டப் படுகொலையா இது? அல்லது ஆழமாய் மன உளைச்சலடைந்த ஒரு தனிநபர், அதிகரித்த தனிமனித மற்றும் நிதி இக்கட்டுகளால் - ஐரோப்பாவிலான பரந்த சமூக நெருக்கடிக்கு மத்தியில் இது மிகச் சாதாரணமாக ஆகி விட்டிருக்கிறது - விளிம்புக்குத் தள்ளப்பட்டு, சில ISIS பிரச்சாரங்களைப் பார்த்த பின்னர் கூட, ஒரு படுபயங்கரமான குற்றத்தை நடத்தும்படி ஆனாரா?
எதுவாயினும், நீஸ் துயர சம்பவமானது சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தினால் மத்திய கிழக்குப் போர் தீவிரப்படுத்தலுக்கும் அத்துடன் பிரான்சில் அதன் சிக்கன நடவடிக்கை மற்றும் போலிஸ்-அரசு நடவடிக்கைகளுக்குமான —இவை அத்தனையுமே இந்த தாக்குதலை தூண்டுவதில் கொஞ்சம் பங்களிப்பை செய்திருந்தன என்பது வெளிப்படை— நியாயப்படுத்தலாக சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.
போலிஸ் மற்றும் போலிஸ் உடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவப் படைகளில் 12,000 பேர் சேருவதற்கு ஒரு தேசியவாத அழைப்பை விடுத்த கஸெனேவ், “அவ்வாறு செய்ய விரும்பும் அத்தனை தேசப்பற்றுள்ள பிரெஞ்சு மக்களும்” செயல்பாட்டு துணைப் படையில் இணைவதற்கு அழைப்பு விடுத்தார்.
பிரெஞ்சு சமூகத்தை பரந்த அளவில் இராணுவமயப்படுத்துவதற்கு மத்தியில், இன்னும் அதிகம் முறைசாரா மற்றும் துணைப்படை அலகுகளை உருவாக்குவதை நோக்கிய ஒரு ஆரம்பகட்ட அடியே இது என்பதை கஸெனேவ் தெளிவாக்கினார். ”பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் போலிஸ் மற்றும் துணைஇராணுவ போலிசுக்கு உதவியாய் செயல்படுவதற்கும் பிராந்திய போலிஸ் தலைவர்களின் [prefects] அதிகாரத்தின் கீழ் ஒரு துரித-அதிரடிப் படை ஒன்றை உருவாக்க நாங்கள் ஸ்தூலமாக விவாதித்துக் கொண்டிருக்கிறோம்” என்று அவர் அறிவித்தார். பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் துணை இராணுவ போலிசுடன் நெருக்கமான வகையில் அப்படை வேலை செய்யவிருப்பதாய் ஊடக ஆதாரங்கள் விளக்கின.
இந்த முன்மொழிவுகளுக்கு நெருக்கும் சோசலிஸ்ட் கட்சி, பிரெஞ்சு இராணுவத்தால் - இதன் சமீபத்திய வெள்ளைப் புத்தகம் (White Book) கையிருப்புப் படைகளின் விரிவாக்கத்திற்கு அழைப்பு விடுத்தது - முன்னதாக உருவாக்கப்பட்டிருந்த திட்டங்களின் படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. “அவை இல்லாமல், பாதுகாப்பு மற்றும் தற்காப்புப் படைகள் தங்களது இலட்சியங்கள் அத்தனையையும், குறிப்பாக தேசிய மண்ணில் ஒரு நெருக்கடி நிகழும் சமயத்தில், நிறைவேற்ற வழியின்றிப் போய்விடுகிறது” என்று அந்த வெள்ளை புத்தகம் தெரிவிக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற பிரிட்டன் வாக்களித்ததற்குப் பிந்தைய காலத்தில் ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் மற்றும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜோன்-மார்க் எய்ரோ எழுதி வெளியான சமீபத்திய அறிக்கையும் வெளிப்புற இராணுவ நடவடிக்கைகள் மற்றும் உள்முக பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு கூட்டு வலுப்படுத்தலுக்கு அழைப்பு விடுத்தது.
இப்போது அமலில் இருக்கும் அவசரகால நிலையானது, பயங்கரவாதத் தாக்குதல்களை தடுக்க திறனற்றதாக நிரூபணமாகி இருக்கும் அதேவேளையில், இந்த வசந்தகாலத்தில் சோசலிஸ்ட் கட்சியின் தொழிலாள-வர்க்க விரோத தொழிலாளர் சட்டத்திற்கு எதிராய் ஆர்ப்பாட்டம் நடத்திய இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீதான கண்மூடித்தனமான போலிஸ் ஒடுக்குமுறைக்கான ஒரு சட்ட கட்டமைப்பை இது அளித்திருக்கிறது.
ஐரோப்பா எங்கிலும் இராணுவமயமாக்கலின் ஒரு ஒருங்கிணைந்த வேலைத்திட்டமே இப்போது வளர்ந்து வருவதாகும் என்பது குறித்து தொழிலாளர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டாக வேண்டும். ஜேர்மன் ஏகாதிபத்தியமானது நாஜி ஆட்சியின் தோல்வி மற்றும் பொறிவுக்குப் பின்னர் அது பின்பற்றிய இராணுவ ஒதுங்கல் கொள்கையை ஓரங்கட்டி வருகின்ற அதேநேரத்தில், பிரான்ஸ் நாடு, உக்ரேன் மற்றும் போலந்திலான வலது-சாரி ஆட்சிகளைப் பின்பற்றி, இராணுவ மற்றும் போலிஸ் படைகளுக்குப் போட்டியான தேசியவாத போராளிப் படைகளை கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.
சோசலிஸ்ட் கட்சியின் தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான சமீபத்திய போராட்டம் தெளிவாக்கியதைப் போல, இந்த நடவடிக்கைகளின் ஆரம்பகட்ட இலக்கு என்னவாக இருந்தபோதிலும், தொழிலாள வர்க்கத்திலான எதிர்ப்பை இலக்காகக் கொள்வதற்கே அவை இறுதியாகப் பயன்படுத்தப்படும்.