Print Version|Feedback
Merkel announces massive military buildup
பாரிய இராணுவப் பெருக்கத்தை மேர்கெல் அறிவிக்கிறார்
By Johannes Stern
24 June 2016
ஜேர்மனி ஒரு முன்னொருபோதும் கண்டிராத இராணுவ பெருக்கத்திற்கு திட்டமிடுகிறது. செவ்வாயன்று இரவு பேர்லினில் CDU வின் வணிக மன்றத்திற்கு சான்சலர் அங்கேலா மேர்க்கெல் வழங்கிய உரையில் இது தெளிவாக வெளிப்பட்டது. “இதுவரை அறிந்திராத மட்டங்களிலான ஒரேமாதிரியல்லாத மோதல்களை நாம் முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்று ஜேர்மன் வணிகத் தலைவர்களிடம் மேர்க்கெல் கூறினார். “ஆயினும் கூட ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்புத் திறனானது தனது சொந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுமளவுக்கும் கூட இன்னும் ஆயத்தமாக்கப்பட்டிருக்கவில்லை” என்றார் அவர்.
சான்சலர் நிறைவாகக் கூறியவை: “பாதுகாப்பிற்காக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதத்தை இன்று செலவிடக் கூடிய ஜேர்மனி போன்ற ஒரு நாட்டிற்கும் பாதுகாப்பிற்காக 3.4 சதவீதத்தை ஒதுக்கும் அமெரிக்கா போன்ற ஒரு நாட்டிற்கும் ஒரு நெருங்கிப் பிடிக்கும் தூரமே இருக்க வேண்டும்.” “நமது பாதுகாப்புச் சுமைகளை பொறுப்பேற்றுக் கொள்வதற்கு, மற்றவர்களுக்காக காத்திருப்போம், நம்பிக்கை கொள்வோம் என்று சாதாரணமாக சொல்வது, நீண்டகாலப் போக்கில் பலன் தருவதாய் இருக்காது.”
மேர்கெலின் உரை அதற்கான தகுதிக்காய் முதலாளித்துவ ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 2014 ஆரம்பத்தில் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கூட்டரசாங்க ஜனாதிபதி ஜோஅஹிம் கௌக் ஜோச்சிம் காக், வெளியுறவு அமைச்சரான பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரான உர்சுலா வொன் டெர் லையென் ஆகியோர் ஜேர்மன் வெளியுறவுக் கொள்கையின் தலைகீழ் மாற்றம் குறித்து அறிவித்ததைத் தொடர்ந்து ஜேர்மன் இராணுவவாதம் மீள்வரவு கண்டதில் இன்னுமொரு மைல்கல் என்பதே இதன் தகுதியாகும்.
வியாழனன்று தடித்த எழுத்துக்களில் ”ஜேர்மனி மேம்படுகிறது” (“Germany upgrades”) என்று பிரகடனம் செய்த Handelsblatt, மேர்க்கெலின் அறிவிப்பை ஒரு “திருப்புமுனை” என்று அழைத்தது. கடந்த 25 ஆண்டுகளில், “பல்வேறு ஊக்கங்களுடனான கூட்டரசங்காங்கள் அமைதி என்னும் ஈவுத்தொகையை நன்றியுடன் பெற்றுக் கொண்டன”, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இராணுவ செலவினத்தின் விகிதாச்சாரம் 1980களின் மத்தியில் 3.4 சதவீதம் வரை சரிந்து வெறும் 1.2 சதவீதத்தை எட்டியது என்று அந்த ஆவணம் எழுதியது. இப்போது மேர்க்கெல் “பணயத்தை அதிகரிப்பதற்கும் தான் தயாராய் இருப்பதை” சமிக்கை செய்திருக்கிறார்.
கூட்டரசாங்கம் “பணயத்தை அதிகரிப்பது” என்பதன் அர்த்தம் என்ன என்பதை இந்த வணிக செய்தித்தாள் சுட்டிக்காட்டுகிறது. திட்டமிடப்பட்டவாறு இராணுவத்திற்கு கூடுதலாக 7,000 படைவீரர்களை அதிகரிப்பதற்கும் அத்துடன் “பீரங்கிகளை அல்லது ஹெலிகாப்டர்களை” கொண்டு இராணுவத்தை நவீனப்படுத்துவதற்கும் இராணுவப் படைகள் “உடனடி வருங்காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலான விகிதாச்சாரத்தை 1.4 முதல் 1.5 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும்” என்று தேசிய நாடாளுமன்றத்தின் இராணுவ ஆணையரான Hans-Peter Bartels (SPD) கூறியிருப்பதை Handelsblatt மேற்கோளிட்டிருக்கிறது. அதன்பின் அந்த செய்தித்தாள் இங்ஙனம் நிறைவு செய்கிறது: “இன்றைய நிலவரப்படி, இதற்கு வருடத்திற்கு 9 பில்லியன் யூரோ மேலதிகமாக செலவாகும்.”
இந்த பாரிய மேம்படுத்தலை நியாயப்படுத்துவதற்காக, ஜேர்மனியை நடவடிக்கைக்குத் தள்ளுகின்றதான “பிடிவிலகி தள்ளாடும் உலகம்” என்ற கூட்டரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மந்திரத்தை இந்த செய்தித்தாள் மறுபடியும் ஒப்பிக்கிறது. இந்த “புதிய சகாப்தமானது” ”தற்செயலாக” வந்திருக்கவில்லை. உக்ரேன் மோதலும் பயங்கரவாதமும் ஜேர்மனிக்கு எச்சரிக்கை செய்திருக்கின்றன, அதேசமயத்தில் “அதன் கூட்டாளிகளின் எதிர்பார்ப்புகளையும்” அதிகப்படுத்தியிருக்கின்றன, அத்துடன் “ரஷ்யாவுக்கு எதிராக செலுத்தப்பட்ட நேட்டோவின் தடம்விலகிய திட்டங்கள்” தொடர்பாக ஜேர்மன் முப்படைகளின் மீது சிறப்பான புதிய கோரிக்கைகளையும் வைத்திருக்கின்றன.
இராணுவ மேம்பாட்டில் கச்சாப் பொருட்களையும் ஜேர்மனியின் ஏற்றுமதிப் பசி கொண்ட தொழிற்துறைக்கு புதிய சந்தைகளையும் அடைவதும் கூட சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை Handelsblatt நன்கு அறியும். 2013 இன் ஆரம்பத்தில் “ஆதாரவளங்கள் தேடும் பயணம்: ஜேர்மனியின் புதிய பாதை” என்ற தலைப்பிலான ஒரு தலையங்கம் இந்த செய்தித்தாளில் வெளியானது. “கச்சாப் பொருட்களை அடைவதற்கான இப்போதைய கொள்கை அதன் வரம்புகளை எட்டி விட்டது” என்றும் ஆகவே ஜேர்மனி மீண்டும் வளங்களுக்காக போர் புரியத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அத்தலையங்கம் குறிப்பிட்டது.
“தனது சொந்த பிராந்தியத்தை பாதுகாப்பதற்காக” அமெரிக்க இராணுவ செலவினத்தை ”நெருக்கிப் பிடிக்கும் அளவாய்” செலவிட ஜேர்மனி முனைவதாய் மேர்க்கெல் அறிவித்திருப்பதானது, ஜேர்மன் உயரடுக்கானது அவசியப்பட்டால் தனது முன்னாள் போருக்குப் பிந்தைய கூட்டாளிகளுக்கு எதிராய் தனது பொருளாதார மற்றும் புவிமூலோபாய நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மீண்டும் தயாரிப்புடன் இருக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய இராச்சியத்தின் அங்கத்துவத்தின் மீதான கருத்துவாக்கெடுப்பு குறித்து சமீபத்தில் வெளியாகியிருந்த ஒரு நீண்ட கட்டுரையில், Der Spiegel, ஐரோப்பிய ஒன்றியத்தின் சிதறலானது அமெரிக்காவுடன் அதன் கூட்டணி உடைவதற்கு இட்டுச் செல்லக் கூடும் என்று எச்சரித்திருந்தது. அச்சமயத்தில் “கண்டத்தின் மிகப்பெரும் மைய சக்தியாக இருக்கின்ற ஜேர்மனி” இறுதியாக “ஒரு தலைமையான பாத்திரத்தை ஏற்கத் தள்ளப்படக் கூடும்” என்று அந்தப் பத்திரிகை எழுதியது.
“ஜேர்மனியின் புதிய உலகப் பாத்திரம்” என்ற தலைப்புடன் வெளியுறவு விவகாரங்கள் (Foreign Affairs) இதழில் சமீபத்தில் வெளிவந்திருந்த இன்னுமொரு கட்டுரையில், வெளியுறவு அமைச்சரான ஸ்ரைன்மையர் அமெரிக்காவில் இருந்து தன்னை தள்ளி நிறுத்திக்கொண்டதோடு ஒரு புதிய வல்லரசாக ஜேர்மனியின் புதிய உரிமைகோரல்கள் மீது வெளிச்சமிட்டுக் காட்டினார். “அரை நூற்றாண்டு காலமாக அதன் வெளியுறவுக் கொள்கையை வழிநடத்தி வந்திருக்கக் கூடிய கோட்பாடுகளை மறுபொருள்விளக்கத்திற்குட்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்ட” ஒரு ”பெரும் ஐரோப்பிய சக்தி” என்று அவர் ஜேர்மனியை மிக வெளிப்படையாக அறிவித்தார்.
மக்களின் முதுகுக்குப் பின்னால், இராணுவ மேம்பாடு என்பது ஏற்கனவே முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. 1930களில் ஹிட்லரின் இராணுவ படைகளை (Wehrmacht) கட்டியெழுப்பிய அதே ஜேர்மன் இராணுவக்கருவி நிறுவனங்கள் தான் ஜேர்மன் இராணுவத்திற்கு புதிய பீரங்கிகளை இப்போது தயாரித்துக் கொண்டிருப்பதாக Handelsblatt தெரிவித்தது. “Krauss-Maffei Wegmann (KMW) மற்றும் Rheinmetall ஆகியவை ஒரு ”இரகசிய இடத்தில்” குடோன் ஒன்றை அமைத்து அங்கே ஆஸ்திரியா மற்றும் ஸ்வீடனில் இருந்தான யுத்த பீரங்கிகளை சேகரித்து வருகின்றன.” மொத்தமாக, ஜேர்மன் தொழிற்துறையானது ஏற்கனவே 100க்கும் அதிகமான Leopard 2 போர் பீரங்கிகளை வாங்கியிருக்கிறது. “நன்கு பராமரிக்கப்பட்டு எண்ணெய் போடப்பட்டு இருக்கும்” அவை இப்போது ஒவ்வொன்றும் 5 மில்லியன் யூரோ செலவில் “இருபத்தியோராம் நூற்றாண்டின் இராணுவத் தரத்திற்கு கொண்டுவரப்பட்டு” ஜேர்மனியின் ”இராணுவப் படைகளில் தமது மறுஜென்மத்தைக் காண இருக்கின்றன.”
பீரங்கி மேம்பாடு என்பது பல திட்டங்களில் ஒன்று மட்டுமேயாகும். அரசாங்கத்தின் இப்போதைய இராணுவ அறிக்கையானது “60 பில்லியன் யூரோவுக்கும் அதிகமான செலவு கொண்ட 20க்கும் அதிகமான திட்டப்பணிகளை” பட்டியலிடுகிறது. இந்தப் பட்டியலில் பல்வேறு பீரங்கி மாதிரிகள், “Tiger”ஆதரவு ஹெலிகாப்டர்கள், A400M போக்குவரத்து விமானம், “Euro Fighters”, ஏவுகணை வகை “Iris-T” மற்றும் ” Meteor” போர்க்கப்பல்கள் மற்றும் ஒரு தந்திரோபாய வான் பாதுகாப்பு அமைப்பு ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.
நாஜி ஜேர்மனி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்து வெறும் 75 ஆண்டுகளின் பின்னர், ஜேர்மன் உயரடுக்கானது தனது போர்க்கால முன்னோடியை அடியொற்றத் தயாராகவே இருக்கிறது என்பதை மேர்க்கெலின் சமீபத்திய பேச்சு ஈவிரக்கமற்ற வகையில் தெளிவாக்கி இருக்கிறது.