Print Version|Feedback
Two hundred forty years since the Declaration of Independence
சுதந்திர பிரகடனத்திலிருந்து இருநூற்றி நாற்பது ஆண்டுகள்
Andre Damon
4 July 2016
இன்றிலிருந்து இருநூற்றி நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், ஐக்கிய அமெரிக்க அரசுகளை உருவாக்க இருந்த பதின்மூன்று காலனி நாடுகளின் பிரதிநிதிகள் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் மற்றும் முடியாட்சியில் இருந்து அவர்கள் பிரிவதாக அறிவித்து சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்டனர். அந்த பிரகடனத்தின் பிரதான ஆசிரியரான தோமஸ் ஜெஃபர்சன் அதற்கு பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வாறு எழுதவிருந்தார், அந்நடவடிக்கை "மனிதர்கள் [தங்களின்] விலங்குகளை உடைத்து எழுந்ததற்கான அறிகுறியாகும்… [பெ]ருந்திரளான மனிதயினம் அவர்களின் முதுகில் சுமையுடனோ, அல்லது கடவுளின் கருணை பெற்ற கௌரவமான ஒரு சிலர் அவர்கள் மீது சட்டப்பூர்வமாக மிதித்து ஏறி, காலால் விரட்டுவதற்காகவோ பிறக்கவில்லை.”
அமெரிக்க புரட்சிக்கு முன்னர் இருந்த அண்ணளவாக 2,000 ஆண்டு சமூகம், ஒரு நிலப்பிரபுத்துவ ஆட்சியில் மற்றும் அரசர்களின் புனித உரிமையில் "மனிதயினத்தின் மாபெரும் சங்கிலி" கோட்பாடுகளது அடிப்படையில் இருந்தது. புரட்சியானது, மரபுவழியாக வழிவந்த மேதகு பட்டங்களை இல்லாதொழித்து, முடியாட்சியை சட்டவிரோதமாக்கி, தேவாலயங்களையும் அரசையும் பிரித்து வைத்த ஒரு சமூகத்தை தோற்றுவித்தது.
அந்த புரட்சியால் ஏற்பட்ட மாற்றத்தை விவரித்து, மாபெரும் வரலாற்றாளர் கோர்டன் வூட் (Gordon Wood) பின்வருமாறு எழுதினார்:
ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தைத் தூக்கி எறியவில்லை; ஏழை பணக்காரரைப் புறந்தள்ளவில்லை. ஆனால் சமூக உறவுகள் —அதாவது மக்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்துள்ள விதம்— மாறியது, அதுவும் மிகவும் தீர்க்கமாக மாறியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளின்போது, புரட்சியானது, பதினெட்டாம் நூற்றாண்டின் காலனி சமூகத்திலிருந்து அடிப்படையிலேயே வேறுபட்ட ஒரு சமூகத்தை உருவாக்கி இருந்தது. உண்மையில் அது வேறு ஏதோவொன்றைப் போலில்லாமல், உலகில் ஒருபோதும் எங்கேயும் இருந்திராத ஒரு புதிய சமூகமாக இருந்தது.
வூட் குறிப்பிட்டதைப் போல, புரட்சியானது "அமெரிக்க வரலாற்றில் மிகவும் தீவிரமான மற்றும் மிக நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக" இருந்தது. “பெண்களின் நிலைமை உட்பட, அது, மக்களது தனிப்பட்ட உறவுகளை மற்றும் சமூக உறவுகளை மட்டும் தீவிரமாக மாற்றிவிடவில்லை, மாறாக குறைந்தபட்சம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேற்கத்திய உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருந்த பிரபுத்துவத்தையும் அழித்தது.”
தனித்தனியான பிராந்தியங்களாக இருந்த அமெரிக்க காலனிகள் முதல்முறையாக அறிவொளியில் வேரூன்றிய, அதிதீவிர மற்றும் முற்போக்கான குணாம்சமான கருத்துருக்களை அணைத்துக்கொண்டது மட்டுமல்லாது அவற்றை நடைமுறைப்படுத்தின என்ற உண்மை ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
அமெரிக்க புரட்சி தானாக வானத்திலிருந்து விழுந்து விடவில்லை. அந்த புரட்சியாளர்கள், பதினேழாம் நூற்றாண்டு ஆங்கிலப் புரட்சியின் சமூக நலன்களைப் பாதுகாக்க வேண்டியவர்களாக தங்களைக் கண்டார்கள். ஆனால் அமெரிக்க புரட்சியின் தாக்கமோ, ஐரோப்பிய கண்டத்தின் சாதனையை விட, வேறெதையும் விட தொலைதூரத்திற்குப் பரவியது.
அமெரிக்க புரட்சியின் வெற்றியானது பிரெஞ்சு புரட்சிக்கும் மற்றும் அதற்கடுத்து வந்த சகல ஜனநாயக, சமத்துவவாத மற்றும் சோசலிச இயக்கங்கள் அனைத்திற்கும் சித்தாந்தரீதியான மற்றும் அரசியல்ரீதியான தூண்டுதலை வழங்கியது. கார்ல் மார்க்ஸ் அமெரிக்க புரட்சியை, “பதினெட்டாம் நூற்றாண்டின் ஐரோப்பிய புரட்சிக்கும்…" மற்றும் அதற்கடுத்து வந்த தொழிலாள வர்க்க சோசலிச இயக்கத்தின் அபிவிருத்திக்கும் அது "முதல் உந்துதலை … வழங்கியதாக" புகழ்ந்துரைத்தார்.
வரலாற்றின் சகல தலைச்சிறந்த சம்பவங்களைப் போலவே, அந்த புரட்சியும் முரண்பாடுகளால் சிக்குண்டு இருந்தது. அதுவொரு முதலாளித்துவ புரட்சியாகும், அதற்கு தலைமை கொடுத்தவர்களால் அக்காலத்தில் மேலோங்கி இருந்த சமூக உறவுகளில் இருந்து தப்பிவிட முடியவில்லை. அந்த முரண்பாடுகளிலேயே மிக பெரியதாக இருந்தது என்னவென்றால், எல்லா மனிதர்களும் சமம் என்று பிரகடனப்படுத்திய அறிக்கையில் கையெழுத்திட அக்கண்டந்தழுவிய காங்கிரஸ் இல் (Continental Congress) பங்குபற்றியிருந்த பிரதிநிதிகளில் கணிசமானவர்கள், அடிமைத்தனத்தை அவற்றின் பொருளாதார அடித்தளத்தில் கொண்ட நாடுகளில் இருந்து வந்தவர்களாவர். அப்புரட்சியின் தலைசிறந்த தலைவர்களில் பலர் அவர்களே அடிமைகளின்-எஜமானர்களாக இருந்தார்கள், மேலும் அடிமைத்தனத்தைக் கட்டிக் காப்பதற்கும் அவர்கள் கொண்டிருந்த கோட்பாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகளைக் குறித்து அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். எவ்வாறிருப்பினும், வூட் குறிப்பிடுவதைப் போல:
இப்போதெல்லாம் நாம் செய்வதைப் போல, புரட்சியில் எது உள்ளடங்கி இல்லை என்பதில், அதாவது அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கும் மற்றும் பெண்களின் தலைவிதியை அடிப்படைரீதியில் மாற்றுவதற்கும் அது தவறியதை எடுத்துக்காட்டுவதன் மீதும் மற்றும் புலம்புவதன் மீதும் கவனம் செலுத்துவது, அதில் என்ன உள்ளடங்கி இருந்தது என்பதன் மீதான பெரும் முக்கியத்துவத்தை கவனத்திற்கு எடுத்துக்கொள்ளாது விட்டதாகிவிடும்; உண்மையில் அந்த புரட்சி அடிமைத்தனத்திற்கு எதிரான எதிர்ப்பையும் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெண்கள் உரிமைக்கான இயக்கங்களையும், சொல்லப்போனால் நமது இப்போதைய சகல சமத்துவநோக்கு சிந்தனைகளையுமே கூட சாத்தியமாக்கியது.
ஒரு புரட்சியின் தலைச்சிறந்த தன்மை வெறுமனே அது தீர்க்கும் பிரச்சினைகளில் வெளிப்படுவதில்லை, மாறாக அது எழுப்பும் புதிய கேள்விகளிலும் இருக்கிறது. ஜூலை 4, 1776 இன் முற்போக்கான மற்றும் புரட்சிகரமான தாக்கங்களைக் குறித்து சந்தேகிக்கும் எவரொருவரும், அதனை விட்டுக்கொடுக்காது பாதுகாத்தவர்களில் ஒருவரான அடிமைத்தன ஒழிப்புவாதி (abolitionist) பிரெடெரிக் டக்ளஸ் இன் வார்த்தைகளை கவனத்தில் எடுக்க வேண்டும். தப்பியோடி வந்த ஓர் அடிமையான அவர், ஒடுக்குமுறைக்கு உள்ளான அவரது தனிப்பட்ட அனுபவங்களை குறைவாக கொண்டிருக்கவில்லை.
“ஜூலை நான்காம் தேதி அடிமைகளுக்கு என்ன அர்த்தமாகிறது?” என்ற தலைப்பிட்டு ஜூலை 5, 1852 இல் வழங்கிய உரையில் டக்ளஸ் அவரது பார்வையாளர்களை நோக்கி கூறுகையில், “சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்டவர்கள் மிகவும் தைரியமான மனிதர்கள். அவர்கள் தலைசிறந்தவர்களும் கூட —ஒரு தலைச்சிறந்த காலத்திற்குரிய புகழை வழங்க போதுமானளவிற்கு தலைச்சிறந்தவர்களாக இருந்தார்கள்… நான் அவர்களை நிச்சயமாக மிகவும் ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து பார்க்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கவில்லை என்றாலும் அவர்களது தலைச்சிறந்த ஒப்பந்தங்களை ஆச்சரியத்துடன் ஏற்றுக்கொள்ள தள்ளப்பட்டிருந்தேன்,” என்றார்.
“இப்போது, அரசியலமைப்பை அதில் உள்ளபடியே எடுத்து பாருங்கள், அடிமைத்தனத்திற்கு ஆதரவான ஒரேயொரு வரி கூட அதில் இருக்காதென நான் உறுதியாக கூறுகிறேன். மறுபுறம் அடிமைத்தனத்தை நீடிக்கச் செய்யும் கோட்பாடுகள் மற்றும் நோக்கங்களை உள்ளடக்குவதற்கு முற்றிலும் விரோதத்தை அதில் காணலாம்,” என்பதையும் டக்ளஸ் சேர்த்துக் கொண்டார்.
சுதந்திர பிரகடனத்தில் பிரகடனம் செய்யப்பட்ட கோட்பாடுகளை அடிமைத்தனம் அவமதிப்பதாக இருந்தது மற்றும் அத்தகைய கோட்பாடுகளை நிஜமாக நடைமுறைப்படுத்துவதற்கு அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டியிருந்தது என்று டக்ளஸ் வாதிட்டார். “இரண்டாவது அமெரிக்க புரட்சியான" உள்நாட்டுப் போரில் சுமார் 600,000 உயிரிழப்புகளுடன் அந்த முரண்பாடு தீர்க்கப்பட்டது.
அமெரிக்க புரட்சியின் மரபு பற்றிய டக்ளஸ் இன் ஆழமான கருத்துரையை, இன்றைய அமெரிக்க சமூகம் மற்றும் அரசியல் நிலை உடன் சமபலத்தில் பொருத்திப் பார்த்தால், "நமது இன்றைய சீரழிந்த காலகட்டத்திற்கு மிகவும் நேரெதிராக நிற்கிறது." அமெரிக்க புரட்சியாளர்கள் உயிரூட்டிய கோட்பாடுகள் அமெரிக்காவின் அடுத்தடுத்த சமூக மற்றும் அரசியல் அபிவிருத்தி உடன் முரண்பட்டு இருக்கின்றன, அது முன்னேறிய உலகில் மிகவும் சமத்துவமற்ற சமூகமாக, ஏறத்தாழ முழுமையாக பெயரில் ஒரு பிரபுத்துவமாக மாறியுள்ளது.
இந்த படர்ந்து பரவிய அனைத்து எதிர்வினைகளும் 1776 இன் மரபியத்தின் மீதான அதிகரித்த மற்றும் முன்பினும் அதிக ஆணவத்துடன் நடத்தப்பட்ட சித்தாந்தரீதியிலான தாக்குதலை உள்ளடக்கி உள்ளது. வரலாற்று உண்மையை முற்றிலும் அவமதிப்பதற்காக மட்டுமே போட்டிபோட்டு கொண்டிருக்கும் எந்தவொரு நிஜமான சமூக போராட்ட அனுபவம் இல்லாதவர்களால் தலைமை கொடுக்கப்படும் அப்புரட்சியை இழிவுபடுத்தும் ஆர்வம், Vox.com இல் வெளியான கட்டுரையாளர் டிலான் மத்தியூஸ் இன் ஒரு கட்டுரையில் வெளிப்பட்டது.
மத்தியூஸ் எழுதுகிறார், “இந்த ஜூலை 4, சுற்றிவளைக்காமல் கூறுவதானால்: 1776 அமெரிக்க சுதந்திரம் ஒரு பாரிய பிழையாகும். இங்கிலாந்தை ஊக்கப்படுத்தாமல், அதை விட்டு வந்தோம் என்ற உண்மைக்காக நாம் மனமிரங்க வேண்டும்.” புரட்சியிலிருந்து உருவெடுத்த அரசாங்க வடிவத்துடன் ஒப்பிட்டு அவர் அறிவிக்கையில், “முடியாட்சி, ஒருவேளை முரண் போல தோன்றினாலும், மிகவும் ஜனநாயக வாய்ப்பைக் கொண்டிருக்கிறது,” என்றார்.
வரலாறு மற்றும் அரசியலில், வர்க்கம் அல்ல, இனம் தான் அடிப்படை வகைப்பாடாக இருக்கிறது என்ற அதன் உறுதியான மற்றும் பிழையான வலியுறுத்தலுக்காக, அவர் அடையாள அரசியல் நிலைப்பாட்டிலிருந்து முடியாட்சிக்கான அவரது ஆதரவை முன்வைக்கிறார், “காலனித்துவ நாட்டினருக்கு புரட்சியின் பிரதான ஆதாயம் என்னவென்றால் அது அமெரிக்கர்களின் சிறுபான்மை வெள்ளையின ஆண்களுக்கு அதிக அரசியல் அதிகாரத்தை வழங்கியது,” என்று அவர் அறிவிக்கிறார்.
சைமன் ஸ்ச்மா போன்ற கல்வியாளர்களின் வரிசையில் நின்று, மத்தியூஸ் வாதிடுகிறார், அமெரிக்க புரட்சியாளர்கள் அல்ல, பிரிட்டிஷ் முடியாட்சி தான் ஒடுக்கப்பட்டவர்களின் சுதந்திரத்தை உண்மையாக ஆதரித்தது. அமெரிக்க புரட்சியை இழிவுபடுத்துவதற்கு பிற்போக்குத்தனமான வரலாற்றாளர்களின் முயற்சியின் ஒரு விளக்கவுரையாளரான ஸ்ச்மா, அவரது Rough Crossings நூலில், புரட்சியானது "முதலும் முக்கியமுமாக அடிமைத்தனத்தை பாதுகாக்கவே அணித்திரட்டப்பட்டது,” என்று அறிவிக்கிறார்.
பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் தனது தேவைகளுக்காக அடிமைகளை அணிதிரட்டிய அதன் முயற்சிகளை ஸ்ச்மா மற்றும் மத்தியூஸ் இருவரும் பாராட்டுகின்றனர், அதேவேளையில் இந்த தந்திரோபாயம் பிரிட்டிஷ் முடியாட்சியின் எதிர்புரட்சி நோக்கங்களை மாற்றியது என்பது போல் கருதுகின்றனர். (ஸ்ச்மா, பிரெஞ்சு புரட்சி மீது ஒரு கொடிய தாக்குதலுக்காக மற்றொரு நூலை அர்பணித்தவர் என்பதும் இங்கே குறிப்பிட வேண்டியதாகும்.)
Vox.com இல் எழுதிய அவரது கட்டுரையில், புரட்சிக்கு எதிராக அடிமைகளை அணிதிரட்டுவதற்கான பிரிட்டிஷ் முயற்சிகளில் இருந்த "கோபம்", “தோமஸ் ஜெஃபர்சன் சுதந்திர பிரகடன ஒரு வரைவில் ஒரு மனக்குறையாக அதை உள்ளடக்கும் அளவிற்கு மிகவும் ஆழமாக ஓடியிருந்தது" என்று மத்தியூஸ் வாதிடுகிறார். அத்தகைய வாதங்களைப் பரப்புவதற்கான புத்திஜீவித நேர்மையின்மைக்கு இதுவொரு எடுத்துக்காட்டாகும். மத்தியூஸ் கையாளும் இந்த மேற்கோள், அக்கண்டத்தின் காங்கிரஸில் அடிமைத்தனத்திற்கு சார்பான பிரிவினரால் அடுத்தடுத்து வலியுறுத்தப்பட்ட இது, தனிப்பட்ட அடிமைத்தனத்தைக் கடுமையாக கண்டிப்பதன் பாகமாக இருந்தது. ஜெஃபர்சன் பின்வருமாறு எழுதினார்:
… அவரை ஒருபோதும் தொல்லை செய்திராத தொலைதூர மக்களின் புனித உரிமைகளான உயிர்வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தை மீறும்வகையில் அவற்றை அடிமைத்தனத்திற்குள் வைத்து இன்னொரு கண்டத்திற்கு அனுப்புவதற்கு அல்லது இழிவார்ந்த சாவுக்கு உட்படுத்த, அவ்விடத்திற்கு அவர்களை அனுப்புவதற்காக, மனித இயல்பிற்கே எதிராக கொடூரமான போரை ஜோர்ஜ் பேரரசர் தொடுத்தார் …
அவரே புகுத்திய அதே மக்களை படுகொலை செய்து, அவர்களிடம் அவர் பறித்த அவர்களின் சுதந்திரத்தைப் விற்பதற்காக, அவரே இப்போது நம்மிடையே ஆயுதங்களை ஏந்துமாறு அதே மக்களையே உற்சாகப்படுத்துகிறார்.
1776 சுதந்திர பிரகடனம் தொடர்பாக Vox வெளிவிட்ட பிற்போக்குத்தமான நிராகரிப்பை, இன்று நியூயோர்க் டைம்ஸ் “அடிமைகளின் கிளர்ச்சி தொடர்பான அச்சமா அமெரிக்க சுதந்திரத்தினை உந்தியது?” என்ற தலையங்கத்தின் கீழ் வெளியிட்ட ஆசிரியர் தலையங்க கட்டுரை இதே போன்ற விவாதத்தை முன்வைத்தது. அக்கட்டுரையின் ஆசிரியரும் பிங்காம்ரன் பல்கலைக்கழக வரலாற்று பேராசிரியருமான றொபேர்ட். எவ். பார்க்கின்சன் பின்வருமாறு எழுதுகின்றார்:
இரண்டு நூற்றாண்டுகளாக நாம் சுதந்திர பிரகடனத்தை தவறாக வாசித்துள்ளோம். அல்லது அதற்கு மேலாக 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டின் மக்கள் எமக்கு கூறியதைப்போல் நாம் கொண்டாடினோமே தவிர தோமஸ் ஜெஃபர்சன், பெஞ்சமின் பிராங்ளின், ஜோன் ஆடாம்ஸ் எழுதியதைப்போல் நாம் செய்யவில்லை. அவர்களுக்கு பிரித்தானியாவிலிருந்து பிரிவது என்பது பிரிக்கமுடியாத உரிமைகளான தனித்துவமான உரிமைகளான இனரீதியான அச்சமும் இனஒதுக்கலுமே மட்டுமே தவிர வேறொன்றுமில்லை.
பார்க்கின்சன் எழுதுவதின்படி, புரட்சிகர காலனித்துவவாதிகளிடம் மோசமான இனவாத மனநிலை நிலவிவந்தது. அத்துடன் ஜெஃபர்சன், பிராங்ளின், ஆடாம்ஸ் ஆகியோர் தமது சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்து இந்திய எதிர்ப்பு, கறுப்பின எதிர்ப்பு கும்பல்களை கிளறிவந்தனர். இந்த உதவிப்பேராசிரியர் எழுதுகின்றார்:
நாம் இதற்காக பிரகடனத்தின் நிறுவனர்களை மன்னிப்பதுடன், அதை கடந்து செல்லவும் அவர்களை அனுமதிப்போம். அனைத்திற்கும் மேலாக, அமெரிக்க வரலாற்றிலும் அடையாளத்திலும் மிக முக்கிய பந்தியான அனைவரையும் “சமத்துவமானவராக்கும்” ஒரு சிறிய விடயம் உள்ளது. [அழுத்தம்சேர்க்கப்பட்டுள்ளது]
பார்க்கின்சனை பொறுத்தவரையில், ஆங்கில மொழியிலே அதுவரை ஒருபோதும் எழுதப்பட்டிராத மிகவும் பிரபல்யமானதும் அரசியல்ரீதியாக முக்கியத்துவமுமான வார்த்தைகளான “அனைத்து மனிதர்களுமே சமத்துவமாக படைக்கப்பட்டனர், அவர்களை படைத்தவரால் அவர்களுக்கு வாழும்உரிமை, சுதந்திரம் மற்றும் சந்தோசத்தை அனுபவிப்பதற்கான குறிப்பிட்ட தனித்துவமான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன என்ற இந்த உண்மைகள் எமக்கு மிகவும் வெளிப்படையானது” என்பது ஒரு “சிறிய விடயமாக” மட்டுமே உள்ளது.
முதலாவது அமெரிக்க புரட்சியை மதிப்பிழக்கசெய்யும் மற்றும் தரமிறக்கசெய்யும் இந்த முயற்சிகள், அதன் உள்ளடக்கத்தில் வர்க்க சுரண்டலின் அடிப்படையில் மிகவும் பிளவடைந்து செல்லும் சமூக சமத்துவமின்மையை தத்துவார்த்தரீதியில் நியாயப்படுத்த முயல்வதாகும்.
சோசலிச இயக்கம் எப்போதுமே அமெரிக்க புரட்சியையும் மற்றும் அதன் மனிதயின சமத்துவ பிரகடனத்தையும் அரவணைத்துள்ளது. மாற்ற வேண்டியதை மாற்றி, மனித உரிமைகள் குறித்த அதன் பிரகடனத்துடன் சேர்ந்து, அந்த சுதந்திர பிரகடனத்தில் விவரிக்கப்பட்ட கோட்பாடுகள், சோசலிச இயக்கத்திற்கு உயிரூட்டும் சித்தாந்தம், அரசியல் மற்றும் தார்மீக அடிப்படை கருத்துருக்களை உருவாக்குகின்றன.
320 மில்லியன் மக்கள் வாழும் ஒரு அளப்பரிய ஒன்றிப்பிணைந்த பெருநிலமான அமெரிக்காவில், இருநூற்று நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர், பரந்த பெருந்திரளான மக்களின் நனவில் அமெரிக்க புரட்சியின் சமத்துவவாத கோட்பாடுகள் தொடர்ந்து பலமாக அதிர்வை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.
மேலதிக வாசிப்புகளுக்கு
ஜூலை 4, 2006 : அமெரிக்க புரட்சியின் 230 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க ஜனநாயகத்தின் நிலை