Print Version|Feedback
Amid protests, French government uses emergency powers to impose draft labor law
எதிர்ப்புக்களுக்கு மத்தியில், பிரெஞ்சு அரசாங்கம் தொழிலாளர் சட்ட வரைவை திணிப்பதற்கு அவசரகாலநிலை அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது
By Alex Lantier
6 July 2016
சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் பிற்போக்கு தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக தொடரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், பிரதமர் மானுவல் வால்ஸ் தேசிய சட்டசபையில் வாக்கெடுப்பு இல்லாமல் சட்டத்தின் புதிய வரைவைத் திணிப்பதற்கு நேற்று பிரெஞ்சு அரசியற் சட்டத்தின் 49-3 ஷரத்தை மீண்டும் பயன்படுத்தினார். சட்டமன்றத்திற்கு வெளியில் Concorde பாலத்தின் மீது பலநூற்றுக்கணக்கான மக்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பை கலவரத் தடுப்பு போலீசார் சுற்றிவளைத்தனர்.
பிரான்ஸ் முழுவதும் உள்ள நகரங்களில் நேற்று நடந்த எதிர்ப்புக்களில் சோசலிஸ்ட் கட்சியும் கூட முன்னர் எதிர்பார்த்திரா மட்டத்திலான பாதுகாப்பு கட்டுப்பாடுகளை திணித்தது. அது தேசிய சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்ததுடன் இணைந்து நடந்தது. பாரிசில் ஆர்ப்பாட்டம் ஆரம்பித்த இத்தாலி சதுக்கம் (place d’Italie) முழுவதும் தடுப்பு அமைக்கப்பட்டு கலவரப் பொலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. அணிவகுப்பில் கலந்து கொள்ள வந்த எதிர்ப்பாளர்கள் அச்சதுக்கத்தை அடைவதற்கு முன்னரே, முழு உடற் சோதனை உள்பட மூன்று சோதனைக்கு ஆளாக வேண்டி இருந்தது.
மே மாதம் சட்டமன்றத்தின் ஊடாக தொழிலாளர் சட்டத்தின் ஒரு முதல் வரைவை தள்ளுவதற்கு 49-3 ஷரத்தைப் பயன்படுத்திய பின்னர் மற்றும் அவசரகால சட்ட நிலைமையின் கீழ் ஜூன் 24 அன்று ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை தடைசெய்வதற்கு ஒரு அசாதாரணமான அச்சுறுத்தலை வழங்கிய பின்னர், சோசலிஸ்ட் கட்சி சமூக விரோத திட்டத்தை எப்படியாவது நடைமுறைப்படுத்தும் என்று சமிக்கை காட்டியது. அச்சட்டம் மார்ச்சில் முதன்முதலாக முன்வைக்கப்பட்டதிலிருந்து என்றுமிருந்திராத அளவு அபரிமிதமான எதிர்ப்பை மிதித்து நசுக்கியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் வெளியேறுவதற்கான வாக்கால் உருவான எதிர்பாராத நெருக்கடிக்கு மத்தியில், மற்றும் ஒரு பொருளாதார சிக்கல் வரக்கூடியதை எதிர்கொள்ளும் நிலையில், சோசலிஸ்ட் கட்சியானது சட்டத்தின் தொழிலாள வர்க்க விரோத விதிகளை விரைந்து திணிப்பதற்கு நோக்கம்கொண்டுள்ளது.
மசோதாவின் புதிய வரைவானது நேற்று செனெட்டிலிருந்து சட்டமன்றத்திற்கு வந்து சேர்ந்தது, பரந்த எதிர்ப்புக்களை எதிர்கொள்கையில் சோசலிஸ்ட் கட்சி செய்திருந்த சலுகை எனப்பட்ட அனைத்து விதமான அடையாள வகைப்பட்ட சிறு மாற்றங்களையும் செனெட்டில் உள்ள வலதுசாரி பெரும்பான்மை நீக்கிவிட்டது. வேலையில்லா இளைஞர்களுக்கான திட்டங்களை ஒழித்துக்கட்டி விட்டது. நிலவுகின்ற சட்டத்தினை மீறி பணி நீக்கங்களை முன்னெடுக்ககும் முதலாளிகள் மீது, நீதிபதிகள் நிர்பந்திக்கும் அபராதங்களில் திரும்பவும் மட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது.
இந்த மாற்றங்கள் எவையும் சட்டத்தின் அடிப்படை உள்ளடக்கத்தை, அதாவது வேலை நேரங்களை நீட்டித்தல், இளம் தொழிலாளர்களின் வேலைப் பாதுகாப்பை கீழறுத்தல், மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக, தனித்தனி வேலைத் தளங்களில் தொழிலாளர் விதிமுறைகளை மீறும் ஒப்பந்தங்களை பேசுவதற்கு தொழிற்சங்கங்களையும் நிர்வாகத்தையும் அனுமதித்தல் என எதையும் மாற்றவில்லை.
நேற்று சட்டமன்றத்தில் மசோதா வைக்கப்படும் முன்னர், சோசலிஸ்ட் கட்சி மசோதாவில் இன்னொரு சிறு மாற்றத்தைச் செய்தது, இந்த ஏற்பாடு ஒவ்வொரு தொழிற்சாலையிலும், எப்படி நிறுவன மட்டத்திலான ஒப்பந்தங்கள் தற்போதிருக்கும், தொழிற்சாலை ரீதியிலான ஒப்பத்தங்களை மீறுகின்றன என்பதை விளக்கி, தொழிற்சங்கங்களையும் முதலாளிகளையும் ஒப்பந்தங்களைப் பேசி முடிக்க அனுமதிக்கும் ஏற்பாடாகும். ஆயினும், தொழில் அமைச்சர் மரியம் எல் கொம்ரி இது முற்றிலும் ஒரு அடையாள ரீதியிலான மாற்றம் என்று வலியுறுத்தினார். “நாம் முன்மொழிபவை நிறுவன மட்ட ஒப்பந்தங்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை எந்த வகையிலும் மாற்றப்போவிதில்லை,, மாறாக அது தொழிற்சாலை மட்ட ஒப்பத்ங்களை மீள உறுதிப்படுத்தும்” என்றார்.
இந்த நடவடிக்கை, தொழிற்சங்கங்களும் முதலாளிகளும் பேச்சுவார்த்தை நடத்தும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் மீது அர்த்தமுள்ள எந்தவித கட்டுப்பாட்டையும் திணிக்காது, மற்றும் எந்தவகையிலும் செனெட் மீண்டும் அதனை அகற்றுவதற்கு சுதந்திரமாக விடப்பட்டுள்ளது.
இந்த சூழ்ச்சிக்கையாளல்களின் நோக்கம், சோசலிஸ்ட் கட்சியும் தொழிற்சங்க அதிகாரத்துவமும் சமூக கோபத்தை அகற்றவும் தாங்கள் தொழிலாளர் நலன்களில் பேச்சுவார்த்தை செய்கிறோம் என்று கூறிக்கொள்வதற்கும்தான் உதவும். திருத்தச் சட்டமானது அது முதல்நாள் முன்வைக்கப்பட்டது போலவே தொழிலாளர்களுக்கு தீங்கானதாகும். “தொழிற்துறை மட்டத்திலான ஒப்பந்தங்கள் மீதான தெளிவூட்டல்கள் தொழிலாளர்களை மீளஉறுதிப்படுத்த பயனுள்ளவை”, என்று தொழிலாளர் சட்டத்தை ஆதரிக்கும் பிரெஞ்சு கிறித்தவ தொழிலாளர்கள் சம்மேளன (CFTC) தொழிற்சங்கம் குறிப்பிட்டது.
“சட்டத்தை பலவீனப்படுத்தாமல், நாம் ஓரிடத்தில் உறைந்துபோவதைப் போல் ஆவதை தவிர்க்க நாம் விரும்புகிறோம்” என ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்டின் ஆலோசகர் விவரித்தார், வெடிக்கும் தன்மையான மக்கள் எதிர்ப்பு இருப்பதன் காரணமாக சோசலிஸ்ட் கட்சி இன்னும் கவனமாக இருக்க வேண்டியிருந்தது என்று வலியுறுத்தினார். “இந்த நெருக்கடியில் இருந்து வெளியேறும் வழியை கடந்த நான்கு மாதங்களாக நாம் திரும்பத்திரும்ப சிந்தித்தோம்” என்றார்.
இங்கு எழுச்சி பெற்றுவரும் முக்கிய கூறுபாடு யாதெனில், தொழிலாள வர்க்கத்தை அரசியல் கட்சிகளிலிருந்தும் சோசலிஸ்ட் கட்சியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள தொழிற்சங்கங்களிடமிருந்தும் பிரிக்கின்ற இடைவெளி ஆகும். இந்த சக்திகளில் பல தொழிலாளர் சட்டத்தை விமர்சிக்கின்றன அதற்கு எதிராக எதிர்ப்பை ஒழுங்கு செய்கின்றன. எனினும் 2012-ல் அவை அனைத்தும் சோசலிஸ்ட் கட்சிக்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தன, அவை அனைத்தும் சட்டத்தில் ஹோலண்ட் என்னென்ன மாற்றங்கள் செய்ய விரும்பினாரோ அவற்றை திரும்பபெற வேண்டி சோசலிஸ்ட கட்சியுடன் பேச்சுவார்த்தை செய்யும் முன்னோக்கை ஆதரிக்கின்றன.
சோசலிஸ்ட் கட்சிக்கு எதிராக தொழிலாள வர்க்க இயக்கத்தின் எதிர்ப்பால் புறநிலை ரீதியாக முன்வைக்கப்படும் பணிக்கு எந்த கட்சியும் தம்மை நோக்குநிலைப்படுத்திக் கொள்ளவில்லை. அதாவது சோசலிஸ்ட் கட்சிக்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையிலான சூழ்ச்சிக்கையாளல்களிடமிருந்து சுயாதீனமாக சிக்கனப் பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான தொழிலாளர்களின் எதிர்ப்பை அணிதிரட்டல், மற்றும் அதனை புரட்சிகர மற்றும் சோசலிச அடித்தளத்தில் ஐரோப்பா முழுவதும் —பெல்ஜியம், கிரீஸ், மற்றும் அதற்கு அப்பால் வளர்ந்துவரும் தொழிலாள வர்க்க இயக்கத்துடன் இணைத்தல் ஆகியனவாகும். பரந்த தொழிலாளர் மற்றும் இளைஞர்களின் உந்தும் உணர்வுகள், இருக்கின்ற அரசியல் கட்சிகள் எவற்றின் மத்தியிலும் ஒரு உண்மை வெளிப்பாட்டைக் காணவில்லை.
இச்சட்டத்தை மக்களில் முக்கால்வாசிப்பேர் எதிர்க்கின்றனர், தொழிலாளர்களும் இளைஞர்களும் சோசலிஸ்ட் கட்சியுடன் எந்த உடன்பாட்டையும் பேசுவது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு என்றுமிராவகையில் அதிக அளவுக்கு இன்று வந்துள்ளனர். திரும்பத்திரும்ப நடக்கும் வேலைநிறுத்த நடவடிக்கைகளால் நிதிநிலை அழுத்தங்கள் கொடுக்கமுடியும் மற்றும் தற்போதைய எதிர்ப்புக்கள் மசோதா திணிக்கப்படுவதைத் தடுக்கும் என்பது போன்ற பிரமைகள் நீங்க தொடங்கியுள்ளன, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த தட்டினர் வழக்கமாக அட்டவணைப்படுத்தப்பட்ட தொழிற்சங்க எதிர்ப்புக்களில் இருந்து அதிகரித்த அளவில் பங்கெடுக்காது விலகி வருகிறார்கள்.
சோசலிஸ்ட் கட்சி, தொழிற்சங்க கூட்டமைப்புகள் மற்றும் புதிய-முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) போன்ற போலி இடது கட்சிகள் எதிர்ப்புக்களை இழுத்து மூடுவதற்கு ஒரு சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்தி, சோசலிஸ்ட் கட்சி சட்டத்தை திணிப்பதற்கு மற்றும் பிரான்சு முழுவதும் வேலைத் தளங்களில் சலுகைகள் கொண்ட ஒப்பத்ங்களின் செயற்பாடுகளை ஆரம்பிக்கவும் அனுமதிக்கின்றன.
“சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அல்லது தொழிற்சங்கங்கவாதிகள் ஒவ்வொருவரும் களைத்துவிட்டோம்”, “நாம் இதன் முடிவை அடைய இருக்கிறோம், அது எலிப்பொந்தில் மறைந்துபோய் உள்ளது என்று அர்த்தப்படுத்தினாலும் கூட” என அரசாங்க அமைச்சர் லிபரேஷனிடம் கூறினார். நேற்றைய எதிர்ப்பு வரையிலான ஓட்டத்தில், தொழிலாளர் சக்தி (FO), – ஸ்ராலினிச தொழிலாளர் பொது சம்மேளனம் (CGT) மற்றும் NPA உடன் தொடர்பான ஐக்கிய ஜனநாயக தொழிற்சங்கம் (SUD) ஆகியவற்றுடன் சேர்ந்து இச்சட்டத்திற்கு எதிராக எதிர்ப்புக்களை ஒழுங்கமைத்ததானது, அது நடவடிக்கையை எதிர்க்கிறது என்று சுட்டிக்காட்டியது.
கடந்த வாரம், FO தலைவர் Jean-Claude Mailly, La Croix இடம் பாரிசில் நேற்றைய எதிர்ப்பு இடம்பெற்றதை அவர் “விரும்பவில்லை” என்றும், “அது சிக்கலாக மாறிவிட்டது” என்று மேலும் கூறினார். செப்டம்பர் வரைக்கும் எதிர்ப்புக்கு ஒரு முடிவை முன்கூட்டியே அறிவித்தார்: “இந்தக் கோடையில் ஆர்ப்பாட்டங்கள் இருக்காது, மக்கள் விடுமுறையில் செல்கிறார்கள்” என குறிப்பிட்டார்.
நேற்று தொழிலாளர் சட்டத்தை எதிர்த்து, தொழிலாளர் மற்றும் இளைஞர் மத்தியில் போராடுவதற்கு தொடர்ந்து வரும் ஆவலானது, பிரான்சிலும் ஐரோப்பா முழுமையிலும் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் சிக்கன பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான பரந்த அளவிலான கோபத்தை எதிரொலிக்கிறது, இது Mailly இன் நிலைப்பாடுகளுக்கு நேரெதிராக இருக்கிறது.
WSWS நேற்று பாரிசில் பல்கலைக்கழக மாணவரான Quentin இடம் பேசியது. அவர் கூறினார்: “இன்று, சோசலிஸ்ட் கட்சி அடிப்படையாகக் கொள்ளவேண்டிய நடவடிக்கை எதையும் காண முடியவில்லை, எப்படி அதை இடது கட்சி என்று கூறுவது”, “நான் 2012 தேர்தலில் ஹோலண்டுக்குத்தான் வாக்களித்தேன், எனென்றால் (வலதுசாரி ஜனாதிபதி) நிக்கோலா சார்க்கோசியின் அதீத-சுதந்திர சந்தைக் கொள்கைகளையோ அல்லது மரி லூபென்னின் எதேச்சாதிகாரக் கொள்கைகளையோ நான் விரும்பவில்லை. இன்றோ இரண்டையும் ஒன்றாக பெறுவதில் வந்து முடிந்திருக்கிறோம்.”
Quentin, பிரெக்ஸிட் நெருக்கடி ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களின் நெருக்கடிகளையும் அதிவலது தேசியவாதத்தின் எழுச்சியையும் எழுப்புகிறது என்று மேலும் கூறினார். “இப்பொழுது ஐரோப்பாவில் உள்ள நிலைமை மிக அரசியல் கொண்டதாய் ஆகியுள்ளது, தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான போராட்டம் இதற்கு தெளிவான எடுத்துக்காட்டு” என்றார் அவர், “ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் நிறைவேற்ற விரும்பும் சட்டம் இதுதான் என்று நாம் நன்றாக அறிவோம்” என்று அவர் மேலும் கூறினார்.