Print Version|Feedback
The political issues posed by the Australian election crisis
ஆஸ்திரேலிய தேர்தல் நெருக்கடி முன்வைத்திருக்கும் அரசியல் பிரச்சினைகள்
Socialist Equality Party (Australia)
6 July 2016
ஜூலை 2 அன்று நடந்த ஆஸ்திரேலிய தேர்தலில் எந்தக் கட்சியும் அல்லது கட்சிகளின் குழுவும் ஒரு அரசாங்கத்தை அமைக்கும் நிலைக்கு இன்னும் வரமுடியாத அளவில் கிட்டியிருக்கக் கூடிய நிச்சயமற்ற முடிவுகள், உலகின் ஒவ்வொரு நாட்டிலும் நிலவி வருகின்ற முதலாளித்துவ ஆட்சியின் பாரம்பரிய வடிவங்களது ஒரு ஆழமான நெருக்கடியின் விளைபொருள் ஆகும்.
தாராளவாத-தேசியவாத கூட்டணி மற்றும் ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சி ஆகிய இரு பெரும் முதலாளித்துவக் கட்சிகளையும், அத்துடன் ஒரு “ஸ்திரமான, பெரும்பான்மை அரசாங்கத்தை” தேர்ந்தெடுப்பதற்கு ஊடகங்கள் விடுத்த இடைவிடாத அழைப்புகளையும் ஆஸ்திரேலிய வாக்காளர்கள் முன்கண்டிராத வகையில் நிராகரித்தனர்.
ஒரு நிதிய மற்றும் பெருநிறுவன உயரடுக்கிற்காக மட்டுமே சேவை செய்வதாக இருக்கின்ற அரசியல் ஸ்தாபகத்திற்கும் தேக்கமடைந்த அல்லது வீழ்ச்சி காண்கின்ற ஊதியங்கள், பாதுகாப்பற்ற வேலைவாய்ப்பு, சிதைந்து செல்லும் சேவைகள் மற்றும் இளம் தலைமுறை முகம் கொடுக்கின்ற மங்கலான எதிர்காலம் ஆகியவற்றையே பிரதான கவலைகளாகக் கொண்டிருக்கின்ற பெரும்பான்மை மக்களுக்கும் இடையில் ஒரு ஆழமான பிளவு நிலவுகிறது. 2008 உலகளாவிய மந்தநிலையின் தோற்றம் முதலாக தொழிற் கட்சி மற்றும் கூட்டணி அரசாங்கங்களால் திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் பல தசாப்தங்களாய் வீழ்ச்சி கண்டு செல்லும் வாழ்க்கைத் தரங்களை மேலும் சிக்கலாக்குகின்ற நிலையில், சாதாரண உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் ஸ்திரமின்மையும் பாதுகாப்பின்மையுமே ஆதிக்கம் செலுத்துகின்றன.
ஆறு வருடங்களாய், ஏகாதிபத்திய நலன்களாலும் பெரு வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களாலும் உத்தரவிடப்படுகின்ற ஒரு சிக்கன நடவடிக்கைத் திட்டநிரலுக்கு வெகுஜன ஆதரவை வென்றெடுக்கும் திறனற்று இருப்பதை சமாளிப்பதற்காக, தொழிற் கட்சியும் கூட்டணியும் ஜனநாயக-விரோத சதிகளையும் வெட்கமற்ற பொய்களையும் கையிலெடுத்து வந்திருந்தன.
2010 இல், சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ விரிவாக்கத்தின் பின்னால் ஆஸ்திரேலியாவின் வெளியுறவுக் கொள்கையை அணிமாற்றும் பொருட்டு, தொழிற் கட்சியானது, மக்களின் முதுகிற்குப் பின்னால், ஒரே நாள் இரவிலான கவிழ்ப்பின் மூலமாக கெவின் ரூட்டை பிரதமர் பதவியில் இருந்து அகற்றி விட்டு ஜூலியா கிலார்ட்டை அங்கு அமர்த்தியது. அடுத்த ஒரு சில மாதங்களிலேயே, தொழிற் கட்சியானது 2010 தேர்தலில் ஒரு படுதோல்வியை சந்தித்து 1941 க்குப் பின்னர் முதன்முதலாய் ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை, அதிலும் இராணுவவாத மற்றும் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை முன் தள்ளுவதற்கு பசுமைக் கட்சியினரின் ஆதரவை நம்பி, உருவாக்கத் தள்ளப்பட்டிருந்தது.
வெகுஜன அதிருப்தி தொடர்ந்து பெருகிச் சென்ற நிலையில், 2013 தேர்தலையொட்டிய இன்னுமொரு ஜனநாயக-விரோத சதியில் ரூட், கிலார்ட்டை பிரதியீடு செய்தார். டோனி அபோட் தலைமையிலான கூட்டணி அகதிகள்-விரோத வெறியைத் தூண்டி விட்டும் தனது தொழிலாள-வர்க்க விரோத திட்டநிரலை மூடிமறைத்தும் மிகப்பெரும் வெற்றி பெற்று அதிகாரத்தைப் பிடித்தது, தொழிற் கட்சி 110 வருடங்களில் தனது மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்றது. ஆயினும், இரண்டு வருடங்களுக்காகவே, ஆழமாய் மக்கள் வெறுப்பை சம்பாதித்த சிக்கன நடவடிக்கை கொள்கைகளை திணிப்பதற்கான முயற்சிகளில் ஏற்பட்ட ஒரு நாடாளுமன்ற முட்டுக்கட்டை நிலைக்கு முகம்கொடுத்த நிலையில், இன்னுமொரு திரைமறைவு கவிழ்ப்பில் கடந்த செப்டம்பரில் அப்போட்டும் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இந்தமுறை, நடப்பு பிரதமரும் முன்னாளில் முதலீட்டு வங்கியாளருமான பில்லியனர் மால்கம் டர்ன்புல் அவரைப் பிரதியீடு செய்தார்.
“வேலைவாய்ப்புகளையும் வளர்ச்சியையும்” அத்துடன் “சிறந்த காலங்களையும்” கொண்டுவருவதாக மோசடியாகக் கூறுவதன் அடிப்படையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரு பெரும்பான்மையை பெற்று விட முடியும் என்று டர்ன்புல் கொண்டிருந்த தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் நம்பிக்கையானது, இப்போது, மக்களின் அந்நியப்படல் மற்றும் இரு-கட்சி அமைப்புமுறைக்கு மக்களின் குரோதம் ஆகிய பாறைகளில் மோதிய கப்பலாய் உலுக்கப்பட்டுள்ளது.
டர்ன்புல் பதவி நீங்கினார் என்றாலோ அல்லது அவரது சொந்தக் கட்சியாலேயே பதவியிறக்கப்பட்டார் என்றாலோ, பிரதமர் பதவி வெறும் ஆறு வருடங்களில் ஆறு கைக்கு மாறியிருக்கும். 1975க்கும் 2007 க்கும் இடையிலான 32 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா வெறும் நான்கே பிரதமர்களையே பார்த்திருந்தது என்பதை நினைவுகூர்ந்தாலே போதும், நடப்பு அரசியல் ஸ்திரமற்ற நிலையின் வீச்சு விளங்கும்.
முன்னெப்போதினும் அகன்று சென்றிருக்கக் கூடிய சமூக சமத்துவமின்மை மற்றும் பெருகிய வர்க்கக் குரோதங்களின் பாதிப்பின் கீழ் ஆஸ்திரேலிய ஸ்தாபகக் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற பொறிமுறைகளது நெருக்கடியானது உலகெங்கிலும் ஒப்புமைகளைக் காணக் கூடியதாக இருக்கிறது. ஐரோப்பா எங்கிலும், நீண்டகால அரசியல் உருவாக்கங்கள் உருக்குலைந்திருக்கின்றன, அல்லது உருக்குலையும் நிலையில் இருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியமும் கூட ஐக்கிய இராச்சியத்தின் பிரெக்ஸிட் முடிவுகளுக்குப் பின்னர் சிதறிக் கொண்டு தான் இருக்கிறது, ஐக்கிய இராச்சியத்தில் நூற்றாண்டுகள் பழைய டோரிக் கட்சியானது நாட்டையே கிழித்துப் போட அச்சுறுத்தும் அரசியல் எழுச்சிகளுக்குத் தாக்குப் பிடித்து உயிர்பிழைக்க இயலாமல் போகலாம்.
அமெரிக்காவில் குடியரசுக் கட்சி, ஜனாதிபதித் தேர்தலுக்கான முதனிலைத் தேர்தல்களில் பாசிச வாய்வீச்சாளரான டொனால்ட் ட்ரம்பின் வெற்றிக்கு முகம் கொடுக்கின்ற நிலையில், பிளவுகளாலும் உடைவுகளின் சாத்தியங்களாலும் உலுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜனநாயகக் கட்சியும் அதற்குக் குறைவில்லாத தடுமாற்றத்திற்குள்ளேயே சிக்கியிருக்கிறது. அங்கு பேர்னி சாண்டர்ஸ் சோசலிசத்தைப் பிரதிநிதித்துவம் செய்ததாக தவறான நம்பிக்கை கொடுத்ததையடுத்து, அவரது பிரச்சாரத்திற்கு மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அளித்த ஆதரவின் வடிவத்தில் கட்சி ஸ்தாபகத்திற்கு எதிரான ஒரு கலகத்திற்கு கட்சி முகம் கொடுத்துக் கொண்டிருந்தது.
ஆளும் உயரடுக்கினர், கடந்த காலத்தில் அவர்கள் ஆட்சி செய்யப் பயன்படுத்தி வந்திருந்த ஸ்திரமான மற்றும் கணிக்கத்தக்க நாடாளுமன்ற வடிவங்களுக்கு இனித் திரும்ப முடியாது. உலகப் பொருளாதாரத்தின் கொஞ்சம் கொஞ்சமான உடைவும், முன்னெப்போதினும் அதிகமான புவிஅரசியல் மோதல்களும், அதிகரித்துச் செல்லும் போர் அபாயமும், எல்லாவற்றுக்கும் மேல், தொழிலாள வர்க்கத்திற்குள் மற்றும் இளைஞர்களுக்குள்ளாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அரசியல் தீவிரமயப்படலும் அந்த சாத்தியத்தை முன்கூட்டியே இல்லாது செய்து விடுகின்றன. ஆஸ்திரேலியாவில் அடுத்த தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு சில வருணனையாளர்கள் கொடுக்கும் ஆலோசனையானது, இதே முடிவுகளையோ, அல்லது இன்னும் அதிகமாய் கணிக்கமுடியாத முடிவுகளையோ தான் உருவாக்கும்.
“ஒரு சர்வாதிகாரியை அமர்த்துவது மட்டுமே நம்மிடம் இருக்கும் ஒரே தீர்வு” என்று திங்களன்று ஆஸ்திரேலிய பில்லியனரான கெரி ஹார்வே அறிவித்திருப்பதானது, ஜனநாயக வழிமுறைகள் மூலமாக தங்களது அரசியல், பொருளாதார மற்றும் இராணுவத் திட்டங்களை எட்ட முடியாது என்று ஆளும் வட்டாரங்களுக்குள் எழுந்திருக்கும் தீவிரமான விரக்தியையே பிரதிபலிக்கிறது. அவர்கள் தமது அருவருப்பூட்டக் கூடிய சொத்து மட்டங்களையும், தொழிலாளர்களின் வாழ்க்கைகளை நாசம் செய்து ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் உலகப் போருக்குள் இழுத்து விட அச்சுறுத்துகின்ற இலாப அமைப்புமுறையையுமே கூடக் காப்பாற்ற வேண்டுமென்றால், எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களின் மூலமாகவும் எதிர்ப்பை இரக்கமற்று ஒடுக்குவதன் மூலமும் மட்டுமே அது முடியும்.
ஆஸ்திரேலியாவில் வளர்ந்து கொண்டிருப்பதை போன்று, பிற இடங்களில் உருவாகும் தேசியவாத, பாசிசப் போக்குகளில் இருந்து தொழிலாள வர்க்கம் ஒரு கூர்மையான எச்சரிக்கையை எடுத்துக் கொள்ள வேண்டும். பொருளாதாரப் பாதுகாப்புவாதத்தையும் வர்த்தகப் போரையும் உபதேசிக்கக் கூடிய Xenophon Team நாசப்படுத்தப்பட்ட தொழிற்துறை மாநிலமான தெற்கு ஆஸ்திரேலியாவில் பெரும் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. வலது-சாரி கிறிஸ்தவக் கட்சிகளின் பல தரப்புகளும் அத்துடன் ஒரு “சட்டம்-ஒழுங்கு” வேட்பாளரும் கணிசமான வாக்குகளை வென்றிருக்கின்றனர். போலின் ஹான்சனின் ஒரே தேசம் கட்சி --இக்கட்சி வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமை ஆகியவற்றால் உருவாகும் சமூக அதிருப்தியை புலம் பெயர்ந்தோர்-விரோத குறிப்பாக முஸ்லீம்-விரோத அந்நியரச்சமாக திசைமாற்றி வருவதாகும்-- செனட்டில் மீண்டும் இருக்கைகளை வெல்லுமளவுக்கு ஆதரவை வென்றிருக்கிறது.
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வெறுப்படைந்திருக்கும் ஒரு பகுதியிடம் விண்ணப்பங்கள் செய்வதற்கு வலது-சாரி வாய்வீச்சாளர்கள் திறம்பெற்றதற்கான அரசியல் பொறுப்பு, பல தசாப்தங்களாக வேலைகளையும், ஊதியங்களையும், வேலை நிலைமைகளையும் பாதுகாக்க தொழிலாலர்கள் நடத்தும் எந்தப் போராட்டத்தையும் நசுக்கி வந்திருக்கின்ற தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களுக்கே உரியதாகும். இதுதவிர, போலியான “பயங்கரவாதத்தின் மீதான போர்” ஒட்டுமொத்த அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகத்தாலும் ஊக்குவிக்கப்பட்டமையானது ஒரே தேசம் போன்ற அமைப்புகள் தமது இஸ்லாமிய-விரோத கழிசடைகளை முன்னெடுப்பதற்கு வழிவகை செய்து தந்திருக்கிறது.
குறிப்பாக சோசலிஸ்ட் கூட்டணி மற்றும் சோசலிஸ்ட் மாற்று போன்ற போலி-இடது அமைப்புகள், தொழிற் கட்சியையும் பசுமைக் கட்சியையும் ஒரு “குறைந்த தீமை” என்று ஊக்குவித்ததன் மூலம், தொழிலாள வர்க்கத்தை ஒட்டுமொத்த உத்தியோகபூர்வ ஸ்தாபகத்திற்கும் எதிராக ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சுயாதீனமான அணிதிரட்டுவதற்கான ஒரு தடைக்கல்லாக செயல்பட்டு, குறிப்பாக ஒரு நாசகரமான பாத்திரத்தை வகித்து வந்திருக்கின்றன.
முன்கண்டிராத அரசியல் வெற்றிடம் நிலவுவதை 2016 ஆஸ்திரேலியத் தேர்தல் எடுத்துக்காட்டுகின்றது. நீண்டகால விசுவாசங்கள் நொருங்கிப் போயிருக்கின்றன, பாரிய மக்கள் மாற்றுகளை எதிர்நோக்குகின்றனர். இந்த சூழல் இன்னும் அதிகமாய் துருவப்படவும் வெடிப்புமிக்கதாகவுமே ஆகும். மோசமடைந்து செல்கின்ற உலகளாவிய மந்தநிலை மற்றும் உள்நாட்டு மந்தநிலையின் நிலைமைகளின் கீழ், அடுத்து வருகின்ற ஆஸ்திரேலிய அரசாங்கமானது, தீவிரமான நிதிச் சிக்கன நடவடிக்கை வெட்டுகள் மூலமாகவும் தொழிலாளர்களது வேலைகள், ஊதியங்கள் மற்றும் வேலைநிலைமைகள் மீதான தாக்குதல்கள் மூலமாகவும் ஆஸ்திரேலிய நிதி மற்றும் பெருநிறுவன உயரடுக்கைப் பாதுகாப்பதற்கு முயற்சி செய்யும். வர்க்க மோதல் வெடிப்பது தவிர்க்கமுடியாததாகும்.
மேலும், ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியம் அமெரிக்காவுடனான மூலோபாயக் கூட்டணிக்கு கொண்டுள்ள உறுதிப்பாடும், சீனாவுடன், குறிப்பாக தென் சீனக் கடலில், ஒரு இராணுவ மோதலுக்கு தீவிரப்பட்டுச் செல்கின்ற அதன் தயாரிப்புகளும் தீவிரமான போர்-விரோத எதிர்ப்பைத் தூண்டும்.
இந்த உள்ளடக்கத்திற்குள் தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆஸ்திரேலியப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியால் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரத்தின் புறநிலை முக்கியத்துவமானது முழுமையாக மதிப்புக்குரியதாக இருப்பதை உணர முடியும்.
போர் அச்சுறுத்தலின் மீதும் மூன்றாம் உலகப் போர் பேரழிவைத் தடுப்பதற்கு ஒரு ஐக்கியப்பட்ட சர்வதேசிய போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு ICFI விடுத்த அழைப்பின் மீதும் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய ஸ்தாபகங்களும் காட்டிய கள்ளமவுன சதியை உடைப்பதற்கான போராட்டமே SEP பிரச்சாரத்தின் வெகு மையமாக இருந்தது.
உலக முதலாளித்துவம் மற்றும் தேசிய-அரசு அமைப்புமுறையின் தோல்விக்கு, ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழான தீவிரமான உற்பத்தித் திறனை மேலே கொண்டுவரக் கூடியதும், பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கையை சலுகைபடைத்த சிலரின் நலன்களுக்காய் அல்லாமல் மனிதகுலத்தின் பரந்த பெரும்பான்மையோரது நலன்களுக்குத் தக்கபடி மறுஒழுங்கு செய்யக் கூடியதுமான தொழிலாளர் அரசாங்கங்களுக்காகப் போராடுவது என்ற சர்வதேசிய மற்றும் சோசலிச மாற்றை SEP முன்வைத்தது.
ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கான SEP இன் கோட்பாட்டு ரீதியான பிரச்சாரமானது, வருங்காலத்தில், ஆஸ்திரேலியா மற்றும் உலகெங்கிலும், தொழிலாள வர்க்கத்தின் மற்றும் இளைஞர்களின் மிக முன்னேறிய மற்றும் சிந்திக்கக் கூடிய தட்டுகளின் அரசியல் நனவில் நன்கு பதிகின்ற ஒரு அடையாளத்தை பொறித்திருக்கிறது. சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அனைத்துப் பிரிவுகளுடனும் இணைந்து வேலைசெய்து தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய சர்வதேச மற்றும் புரட்சிகர இயக்கத்தைக் கட்டியெழுப்புவதை முழுநம்பிக்கையுடன் நாங்கள் எதிர்நோக்கியிருக்கிறோம்.