Print Version|Feedback
Socialist Equality Party announces presidential campaign
சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதி பிரச்சாரத்தை அறிவிக்கிறது
2016 இல் வைட் மற்றும் நிமுத்தை ஆதரியுங்கள்!
22 April 2016
சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தில் பங்கெடுக்க, sep2016.com தேர்தல் வலைத்தளத்தை பார்வையிடவும்.
சோசலிச சமத்துவக் கட்சி 2016 தேர்தலுக்கு ஜெர்ரி வைட்டை அதன் ஜனாதிபதி வேட்பாளராகவும், நைல்ஸ் நிமுத்தை அதன் துணை-ஜனாதிபதி வேட்பாளராகவும் தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலுமான தொழிலாள வர்க்க நலன்களுக்காக வைட்டும் நிமுத்தும் ஒரு சோசலிச மற்றும் போர்-எதிர்ப்பு மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பார்கள்.
56 வயதான ஜெர்ரி வைட், உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) அமெரிக்க தொழிலாளர் பிரிவு பதிப்பாசிரியராவார். அவர் 1979 இல், யுனெடெட் பார்சல் சேர்வீஸில் வேலை செய்து கொண்டே நியூயோர்க் நகர பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது, சோசலிச சமத்துவக் கட்சிக்கு முன்னோடி அமைப்பான வோர்க்கர்ஸ் லீக்கில் இணைந்தார். அண்மித்து நான்கு தசாப்தகாலமாக, ஒரு எழுத்தாளராகவும், செயல்திறனாளராகவும் ஜெர்ரி தொழிலாள வர்க்க போராட்டங்களில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ளார். அவர் 2008 மற்றும் 2012 இல் சோ.ச.க. இன் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.
விஸ்கான்சில் ஒரு தொழிலாள வர்க்க குடும்பத்தில் வளர்ந்த 28 வயதான நைல்ஸ் நிமுத், விஸ்கான்சின் ஆளுநர் ஸ்காட் வால்கரால் திணிக்கப்பட்ட வரவு-செலவு திட்ட வெட்டுகளுக்கு எதிரான 2011 பாரிய போராட்டங்களின் போது SEP இல் அங்கத்தவரானார். விஸ்கான்சின் மில்வாகி பல்கலைக்கழகத்தில் ஆபிரிக்க-அமெரிக்க வரலாற்றை சிறப்புப் பாடமாக கொண்டு, நைல்ஸ் அவரது முதுநிலை பட்டம் முடித்த பின்னர் WSWS இன் அங்கத்தவராக இணைந்தார். அமெரிக்க சமூக நிலைமைகள், தொழிலாள வர்க்க போராட்டங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்க தாக்குதல்கள் குறித்து நிமுத் அதிகமாக எழுதியுள்ளார்.
இந்த 2016 தேர்தல்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலைமைகளின் கீழ் நடத்தப்படுகின்றன. உலகளாவிய இராணுவ மோதலின் நிழல் தேர்தல்களைச் சுற்றி படர்ந்து பரவி வருகிறது. அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களில் பரந்த பெரும்பான்மையினர் அவர்களின் வாழ்க்கை தரங்களில் இடைவிடாத சரிவை அனுபவித்து வருகின்றனர். ஒரு சதவீத மிகப் பெரிய பணக்காரர்கள் பொருளாதாரத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள அதேவேளையில், பெரும்பாலான அமெரிக்கர்கள் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே போராடி வருகின்றனர், மில்லியன் கணக்கானவர்கள் முழுமையான வறுமையில் வாழ்கின்றனர், குழந்தைகளில் கணிசமான சதவீதத்தினர் பசியில் வாடுகின்றனர்.
பெரும்பான்மை அமெரிக்க மக்களுக்கு வழங்குவதற்கு, ஜனநாயகக் கட்சியிடமும் குடியரசுக் கட்சியிடமும் போர், அரசியல் ஒடுக்குமுறை மற்றும் மோசமடைந்துவரும் சமூக நிலைமைகளைத் தவிர வேறொன்றுமில்லை. அவை வோல் ஸ்ட்ரீட் வங்கிகள், பாரிய பெருநிறுவனங்கள், பெண்டகன் மற்றும் உளவுத்துறை முகமைகளது கட்சிகளாகி உள்ளன. இந்த நவம்பர் தேர்தலில் இவ்விரு கட்சிகளில் எது ஜெயித்தாலும், பாரபட்சமின்றி, அடுத்த அரசாங்கம் அமெரிக்க வரலாற்றின் மிகவும் பிற்போக்குத்தனமான, ஒடுக்குமுறையான மற்றும் வன்முறையான அரசாங்கமாக இருக்கும்.
சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள், முதலாளித்துவத்திற்கு சோசலிச மாற்றீட்டை முன்னெடுப்பதற்கும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே அரசியல் நனவை வளர்ப்பதற்கும், தேசிய பேரினவாதம், இனவாதம் மற்றும் புலம்பெயர்வோர்-விரோத தூண்டுதல்களின் சகல வடிவங்களை எதிர்க்கவும், அமெரிக்காவில் சகல தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கு போராடவும், அமெரிக்கா எங்கிலும் மற்றும் சர்வதேச அளவிலும் வரவிருக்கும் போராட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்தை தயார் செய்வதற்கும் இப்பிரச்சாரத்தை பயன்படுத்துவார்கள்.
SEP இன் தேர்தல் வேலைத்திட்டம் மூன்று இன்றியமையாத கோரிக்கைகளை மையப்படுத்தி உள்ளது:
1) அமெரிக்க இராணுவவாதத்தை எதிர்ப்போம்! மூன்றாம் உலகப் போருக்கான முனைவை நிறுத்துவோம்!
சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம், அமெரிக்காவினது போர்த் திட்டங்கள் குறித்து எல்லா உத்தியோகபூர்வ வேட்பாளர்கள் மற்றும் ஊடகங்களிடையே நிலவும் மவுனமான சூழ்ச்சியை உடைக்கும்.
இப்போது அதன் பதினைந்தாவது ஆண்டில் உள்ளதும், முடிவில்லாததுமான, "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற மோசடி போலிச்சாக்கின் கீழ், ஒபாமா அவரது 2008 தேர்தல் வாக்குறுதிகளை கைதுறந்தார். அவர் அமெரிக்க ஏகாதிபத்தித்தின் உலகளாவிய மேலாதிக்கத்தை ஸ்திரப்படுத்த புஷ் நிர்வாகத்தின் போர் கொள்கைகளை தொடர்ந்து விரிவாக்கினார். டிரோன் போர்முறையை ஏற்றதுடன், வெள்ளை மாளிகை அதிகாரத்துவரீதியில் வழமையாக படுகொலைக்கான திட்டமிடும் மையமாக மாற்றப்பட்டுள்ளது. 2001 இல் இருந்து அமெரிக்கா தொடங்கிய போர்களில், ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டு, காயமடைந்துள்ளனர் அல்லது அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய பிராந்திய போர்கள் உலகளாவிய மோதலுக்கு இட்டுச் செல்கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் சர்வதேச மேலாதிக்க அந்தஸ்திற்கு வரும் இராணுவரீதியிலான அல்லது பொருளாதாரரீதியிலான சவால்களைச் சகித்துக் கொள்ளாது. வாஷிங்டனின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு", அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தை சீனா ஏற்குமாறு செய்ய அதை நிர்பந்திக்கும் நோக்கில், ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையாக செயலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மத்திய ஆசியாவில் மேலாதிக்கம் செலுத்த அமெரிக்கா தீர்மானகரமாக இருப்பது ரஷ்யாவுடன் மோதலைத் தீவிரப்படுத்துகிறது.
பால்டிக் பிரதேசங்களில் இருந்து தெற்கு சீனக் கடல் வரையில் பெண்டகன் தூண்டிவிட்டுள்ள பொறுப்பற்ற மோதல்கள் கட்டுப்பாட்டை இழந்து, வெப்ப-அணுஆற்றல் (thermonuclear) போருக்கு இட்டுச் செல்லவும் அச்சுறுத்துகிறது. பில்லியன் கணக்கான மக்களின் மரணங்களுக்கு இட்டுச் செல்லக்கூடிய உலகளாவிய போர்முறைக்காக நடந்துவரும் தயாரிப்புகள், பொய்களுடன் மறைமுகமாக நடந்து வருகின்றன. சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம், தொழிலாளர்களும் இளைஞர்களும் முகங்கொடுக்கும் ஆழ்ந்த அபாயங்களை அவர்களுக்கு எச்சரிக்கையூட்டி, ஒரு பலமான போர்-எதிர்ப்பு இயக்கத்திற்கான அடித்தளத்தை அமைக்கும்.
2) வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு முடிவு கட்டுவோம்!
மிகப்பெரிய பணக்காரர்களால் உலகெங்கிலுமான பில்லியன் கணக்கான தொழிலாளர்களது உழைப்பைச் சுரண்டும் ஓர் அமைப்புமுறையை இல்லாதொழிக்க சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. கண்ணியாமான சம்பளத்தில் ஒரு வேலை, தரமான கல்வி, மலிவான வீட்டுவசதி, அனைவருக்கும் மருத்துவச் சிகிச்சை, கௌரவமாக ஓய்வூ பெறுவதற்கான உரிமை மற்றும் கலாச்சாரத்தை அனுபவிப்பதற்கான உரிமை உள்ளடங்கலாக அடிப்படை சமூக உரிமைகளை பாதுகாக்க நாம் பரந்த செல்வவளத்தை மறுபகிர்வு செய்ய அழைப்புவிடுக்கிறோம்.
2008 நிதியியல் பொறிவுக்கு எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்க வாழ்வின் பேரழிவுகரமான யதார்த்தமானது "பொருளாதார மீட்சி" என்ற உத்தியோகபூர்வ பிரகடனங்களுடன் மிகவும் கடுமையாக முரண்பட்டுள்ளது. மந்தநிலைமை ஆழமடைந்ததில் இருந்து பெயரளவிற்கான வேலைவாய்ப்பு கூட வீழ்ச்சி அடைந்துள்ளது. இது பெரிதும் மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் தொழிலாளர் பிரிவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாலாகும். கடந்த தசாப்தத்தில் ஏற்பட்டிருந்த வேலை வளர்ச்சி அனைத்துமே, வேலை பாதுகாப்பற்ற, பகுதி நேர அல்லது தற்காலிக தொழில் வடிவில் உள்ளன.
சமூக சமத்துவமின்மையோ இன்று முன்பு எப்போதையும் விட அதிகமாகி உள்ளது. அமெரிக்காவில் மேலே உள்ள 20 பில்லியனர்கள், அடிமட்டத்தில் உள்ள 150 மில்லியன் அமெரிக்கர்களது செல்வவளத்தை விட அதிகமாக வைத்திருக்கிறார்கள். கணிப்பிடமுடியாத செல்வவளம் மற்றும் தனிச்சலுகைகளை மட்டும் பணக்காரர்கள் அனுபவிக்கவில்லை. அவர்கள் நீண்ட ஆயுள்காலத்துடனும் வாழ்கிறார்கள். பணக்கார மற்றும் வறிய அமெரிக்கர்களுக்கு இடையிலான ஆயுள்கால இடைவெளி சராசரியாக ஆண்களுக்கு ஏறத்தாழ 15 ஆண்டுகளாக மற்றும் பெண்களுக்கு ஏறத்தாழ 10 ஆண்டுகளாக உள்ளது.
இளைஞர்கள் 1 ட்ரில்லியனுக்கும் அதிகமான டாலரை மாணவர் கடனாக சுமக்கின்றனர். மில்லியன் கணக்கானவர்களுக்கு உணவு முத்திரைகள் வெட்டப்பட்டு வருகின்றன, மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அவர்களது ஓய்வூதியங்கள் மற்றும் மருத்துவக் காப்பீடு குறைக்கப்படுவதை அல்லது அகற்றப்படுவதைக் காண்கின்றனர். அரசாங்கமோ ஒரு பரந்த இராணுவ எந்திரத்திற்காக மற்றும் "உள்நாட்டு பாதுகாப்பு" என்றழைக்கப்படுவதற்காக ட்ரில்லியன்களை செலவிடுகிறது, அதேவேளையில் அது நாட்டின் அரசு பள்ளிக்கூடங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு பொறிந்து போவதை அனுமதிக்கிறது. மிச்சிகனின் ஃப்ளிண்ட் இல் மற்றும் ஏனைய நகரங்களிலும் வசிப்போருக்கு, ஈயம் மற்றும் ஏனைய நச்சு இரசாயனங்கள் கலந்து நஞ்சூட்டப்பட்ட குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
மத்திய குறைந்தபட்ச கூலியை உயர்த்துவதற்கான ஜனநாயக கட்சி வேட்பாளர்களின் முன்மொழிவுகள் —ஒரு மணித்தியாலத்திற்கு 12 டாலரை பரிந்துரைக்கும் ஹிலாரி கிளிண்டனாக இருக்கட்டும் அல்லது 15 டாலர் பரிந்துரைக்கும் பேர்ணி சாண்டர்ஸ் ஆகட்டும்— இவை நேர்மையற்றவை என்பது மட்டுமல்ல, இவை முற்றிலும் போதுமானளவிற்கும் இல்லை. இது தொழிலாளர்கள் வறுமை-மட்டத்திற்கு கூலி பெற தள்ளுகிறது. 2009 இல் இருந்து மொத்த வருவாய் ஆதாயங்களில் 95 சதவீதம் மேலே உள்ள ஒரு சதவீதத்தினருக்கு சென்றுள்ள நிலையில், அமெரிக்க வரலாற்றிலேயே மிக அதிகளவில் செல்வவளத்தை கைமாற்றியதை ஒபாமா நிர்வாகம் மேற்பார்வைட்டுள்ளது என்ற உண்மையை ஜனநாயக கட்சியினரும் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்குள் உள்ள அவர்களது கூட்டாளிகளும் மூடி மறைக்கின்றனர்.
சோசலிச சமத்துவக் கட்சி முதலாளித்துவத்தினுள் முன்னேற்றங்களுக்கான ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவில்லை, மாறாக சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கான ஒன்றை முன்னெடுக்கிறது. முதலாளித்துவ வர்க்க நலன்களின் மீதும் மற்றும் பொருளாதார வாழ்வின் மீதான நிதிய பிரபுத்துவ மேலாதிக்கத்தின் மீதும் ஒரு நேரடி தாக்குதலை நடத்தாமல் தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகளைப் பாதுகாக்க முடியாது. இதன் அர்த்தம், 10 பில்லியனுக்கு அதிக மதிப்பைக் கொண்ட அனைத்து நிறுவனங்களையும் பொதுவுடைமைக்குள் தொழிலாள வர்க்க கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது, அத்துடன் மிகப் பெரிய பெருநிறுவனங்களின் தனிச்சொத்துரிமையை முடிவுக்குக் கொண்டு வருதல் என்பதாகும். தரமான வேலை அவசியப்படும் அனைவருக்கும் அதை வழங்க, சோசலிச சமத்துவக் கட்சி நாடெங்கிலும் உள்கட்டமைப்பை மீள்கட்டுமானம் செய்வதற்கான பல ட்ரில்லியன் டாலர் பொது வேலை திட்டத்திற்கு அழைப்புவிடுக்கிறது.
3) ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்போம்! அரசாங்க உளவுபார்ப்பு மற்றும் பொலிஸ் வன்முறை கிடையாது!
“பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" கட்டமைப்பின் கீழ், மிகவும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் சிதைக்கப்பட்டு வருகின்றன. 2013 இல் எட்வார்ட் ஸ்னோவ்டெனின் வெளியீடுகள், தேசிய பாதுகாப்பு முகமையின் குற்றகரமான மற்றும் அரசியலமைப்புக்கு புறம்பான நடவடிக்கைகளை உலகுக்கு அம்பலப்படுத்திய பின்னரும் கூட, உளவுத்துறை எந்திரத்தின் அதிகாரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஒன்றும் செய்யப்படவில்லை. அதற்கு மாறாக, ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலும், அது அமெரிக்காவில் ஆகட்டும் அல்லது வெளிநாட்டில் ஆகட்டும், அரசுக்கு இன்னும் அதிகமான அதிகாரங்களை வழங்குவதற்கு ஒரு நியாயப்பாடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒபாமா நிர்வாகம் அமெரிக்க பிரஜைகள் உட்பட உலக மக்கள் மீது எந்தவித நீதி விசாரணையும் இன்றி டிரோன் படுகொலைகளை நடத்தும் உரிமை இருப்பதாக பிரகடனப்படுத்திக் கொள்கிறது. அது விதிவிலக்கீட்டுரிமையுடன், வருடாந்தரம் 1,000 க்கும் அதிகமானவர்களைக் கொன்று கொண்டிருக்கும் ஓர் இராணுவமயப்பட்ட பொலிஸ் படையை ஆயுதபாணியாக்க உதவுகிறது. ஸ்னோவ்டென், செல்சியா மேனிங், ஜூலியன் அசான்ஜ் என அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் குற்றங்களை அம்பலப்படுத்துபவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் அல்லது வேட்டையாடலுக்கு உட்படுத்தப்பட்டு, நாட்டை விட்டு வெளியேறி வாழ நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
பெண்டகனின் வடக்கு கட்டளையகத்துடன் சேர்ந்து இந்த பாரிய உளவுபார்ப்பு எந்திரம் கலைக்கப்பட வேண்டும். இந்த வடக்கு கட்டளையகம் தான் அமெரிக்காவின் எல்லைகளுக்குள் இராணுவத்தின் முன்பினும் அதிக நேரடியான பயன்பாட்டை மேற்பார்வைட்டு வருகிறது. மிகப் பெரிய பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளதும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள் மற்றும் நலன்களின் மீது முன்பினும் அதிக மூர்க்கமாக தாக்குதல்கள் கோருகின்ற ஓர் ஆளும் வர்க்கத்தால் எல்லா முடிவுகளும் கட்டளையிடப்படுகிற ஒரு பொருளாதார அமைப்புமுறையானது, உண்மையான ஜனநாயகத்திற்குப் பொருத்தமின்றி உள்ளது.
இருகட்சி முறையிலிருந்து உடைத்துக்கொள்ளவேண்டும்!
சமாதானம், சமத்துவம் மற்றும் ஜனநாயகத்திற்கான போராட்டமானது, உலகளாவிய பொருளாதாரத்தை ஒரு குற்றகரமான நிதியியல் உயரடுக்குக்கு அடிபணியச் செய்கின்ற முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாததாகும். செல்வந்த தன்னலக்குழுக்களே அரசியல் அமைப்புமுறையையும் மற்றும் இரண்டு பிரதான கட்சிகளையும் கட்டுப்படுத்துகின்றன. தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க, தொழிலாளர்களுக்கு அவர்களது சொந்த கட்சி அவசியமாகும்.
2016 தேர்தல் பிரச்சாரம், அமெரிக்காவில் இரு-கட்சி ஆட்சிமுறையின் ஆழ்ந்த நெருக்கடியை மற்றும் அமெரிக்க ஜனநாயகத்தின் இறுதி நாட்களை அம்பலப்படுத்தி உள்ளது.
குடியரசுக் கட்சியின் தரப்பில், முற்றிலும் தனித்துவமான பாசிச குணாம்சத்தை ஏற்றுள்ள மற்றும் அதற்கு அழைப்புவிடும் ஒரு வேட்பாளரான டோனால்ட் ட்ரம்ப் இன் மேலெழுச்சியானது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தீவிர எச்சரிக்கையாகும். முஸ்லீம்கள் மற்றும் ஹிஸ்பானிக் தோற்றுவாயைக் கொண்ட புலம்பெயர்ந்தவர்களை ட்ரம்ப் இனரீதியில் நிந்திப்பது, தொழிலாளர்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை பிளவுபடுத்துவதையும் மற்றும் வோல் ஸ்ட்ரீட் கட்டளைகளுக்கு வரும் சகல எதிர்ப்புகள் மீது முன்பினும் அதிக வன்முறையான தாக்குதலுக்கான நிலைமைகளை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டது.
“அமெரிக்காவை மீண்டும் தலைச்சிறந்ததாக ஆக்குதவற்கான" ட்ரம்ப் இன் அழைப்பு ஒரு பிற்போக்குத்தனமான கற்பனையாகும். அமெரிக்க முதலாளித்துவம் ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளது, அத்துடன் ஆளும் வர்க்கம் அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்டகால பொருளாதார வீழ்ச்சியை ஈடுகட்ட அதன் இராணுவ பலத்தைச் சார்ந்திருக்க முயல்கிறது என்பதே யதார்த்தம். இதற்கான ட்ரம்ப், அன்னிய நாடுகள் மீது முன்பினும் வெடிப்பார்ந்த போர்முறைக்கு முன்னறிவிப்பாக தேசியவாதத்தின் ஒரு வீரியமான வடிவத்தை ஊக்குவித்து, ஒரு "பிரமாண்ட சுவரை" எழுப்ப விரும்புகிறார்.
ட்ரம்ப் இன் பிரதான போட்டியாளரான டெக்சாஸ் செனட்டர் டெட் குரூஸூம் குறைந்த பிற்போக்குத்தனம் கொண்டவரல்ல, அவர் கிறித்துவ அடிப்படைவாதத்தின் அடித்தளத்தில் அவரது சொந்த பாசிசவாத அரசியல் ரகத்தை முன்னெடுத்து வருகிறார். யார் வேட்பாளர் ஆனாலும் சரி, குடியரசு கட்சி வரலாற்றிலேயே அதன் மிகவும் பிற்போக்குத்தனமான பிரச்சாரத்தை நடத்தும்.
ட்ரம்ப் ஆல் சமூக கோபத்தையும் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் மீதான குரோதத்தையும் சுரண்டி, அதை ஒரு வலதுசாரி திசையில் திருப்பி விட முடிந்திருக்கிறது என்றால், அதற்கு காரணம் உத்தியோகபூர்வ "இடது" அரசியலின் குணாம்சமாகும். இராணுவவாதம் மற்றும் சிக்கன திட்டத்திற்கு பொறுப்பேற்றுள்ள ஜனநாயகக் கட்சி, வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் அரசியல் கருவியாக இருப்பதில் குறைந்தது கிடையாது.
ஜனநாயகக் கட்சியில் முன்னணி இருப்பவரும் அனேகமாக வேட்பாளராக கூடியவருமான ஹிலாரி கிளிண்டன், நடைமுறை நிலையின் அரசியல் உருவடிவமாக உள்ளார். அவரும் முன்னாள் ஜனாதிபதியான அவரது கணவரும் அரசியல் உள்பேரங்கள் மற்றும் ஊழல் வழிவகையில் சொத்துச் சேர்த்தவர்களாவர். தேசத்தின் முதல் பெண்மணியாக கிளிண்டன், தொழிலாள வர்க்கத்தின் மீதான நீண்டகால தாக்குதல்களை நடத்திய ஒரு நிர்வாகத்தின் பாகமாக இருந்தார்; நியூயோர்க் செனட்டராக, அவர் ஈராக் போரை ஆதரித்ததுடன், வோல் ஸ்ட்ரீட் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்தார். வெளியுறவுத்துறை செயலராக இருந்து, அவர் லிபியா தலையீட்டை ஒழுங்கமைத்ததுடன், சிரியாவில் உள்நாட்டு போரைத் தூண்டிவிட்டார் மற்றும் ஏனைய எண்ணற்ற குற்றங்களுக்குப் பொறுப்பாகிறார்.
வெர்மாண்ட் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸின் பிரச்சாரத்திற்கான பரந்த மக்கள் ஆதரவு, பெரிதும் அவர் "ஜனநாயக சோசலிசவாதியாக" அவரை அடையாளப்படுத்துவதன் அடிப்படையில் அமைந்ததாகும். மாநில முதன்மை வாக்கெடுப்புகளில் அவரது தொடர்ச்சியான எதிர்பாரா வெற்றிகள், முதலாளித்துவத்திற்கான ஒரு மாற்றீடு மீது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்துவரும் பெரும் விருப்பத்தை எடுத்துக்காட்டுகிறது. அவருக்கான ஆதரவின் அளவானது, “சோசலிசவாதியாக" கூறிக்கொள்ளும் ஒருவரை யாரும் திரும்பியும் பார்க்க மாட்டார்கள் என்ற அமெரிக்க அரசியலின் உத்தியோகபூர்வ பொருள்விளக்கங்களைத் தவறென காட்டியுள்ளது.
எவ்வாறிருப்பினும் சாண்டர்ஸ் ஒரு சோசலிஸ்ட்டும் கிடையாது மற்றும் இந்த அரசியல் ஸ்தாபகத்திற்கு அவர் ஒரு எதிர்ப்பாளரும் கிடையாது என்பதை அவரது நீண்டகால அரசியல் வாழ்வில் அவர் எடுத்துக்காட்டியுள்ளார். ஒரு பெயரளவிற்கான "சுயேட்சையாக" இருந்த போதும் கூட, அவர் ஜனநாயகக் கட்சியினருக்கு ஒத்துழைத்துடன் ஒபாமா நிர்வாகத்தை உறுதியாக ஆதரித்தார். அவர் முதலாளித்துவம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பாதுகாக்கிறார், மற்றும் அமெரிக்காவின் வேலை இழப்புகளுக்கு மெக்சிகோ, சீனா மற்றும் ஏனைய நாடுகளின் தொழிலாளர்களைப் பலியாடுகளாக்க முயல்வதன் மூலமாக, பொருளாதார தேசியவாதத்தை ஊக்குவிக்கிறார்.
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே இருகட்சி முறைக்கு இருக்கும் பரந்த விரோதத்தை அபகரித்து, அதை பாதுகாப்பாக ஜனநாயகக் கட்சிக்குப் பின்னால் திருப்பி விட, ஒரு "சோசலிசவாதியாக" அவருக்கு இருக்கும் போலி நன்மதிப்புகளைப் பயன்படுத்துவதே அவரது மத்திய பாத்திரமாகும். “நம்பிக்கை" மற்றும் "மாற்றம்" என்ற வாக்குறுதிகளை காட்டி பதவிக்கு வந்த ஒபாமா நிர்வாகத்தின் அனுபவம், ஜனநாயக கட்சியின் பாத்திரத்தை பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கின் ஒரு கருவியாக அம்பலப்படுத்தி உள்ளது. தொழிற்சங்கங்கள் மற்றும் உயர் நடுத்தர வர்க்க போலி-இடது குழுக்களது பிரிவினரின் உதவியுடன், ஜனநாயகக் கட்சியினர் முற்றிலும் வலதுசாரி போர்-ஆதரவு கொள்கையுடன் கூடிய இனம் சார்ந்த, பால்வேறுபாடு சார்ந்த மற்றும் அடையாள அரசியல் வெற்று வாய்சவாடல்களுடன் சேர்ந்த நடைமுறையை வளமைப்படுத்தினர்.
அவரது சில அரசியல் ஆதரவாளர்கள் வலியுறுத்துவதைப் போல, சாண்டர்ஸ் ஒரு "சுயாதீனமான" பிரச்சாரத்தை ஏற்றிருந்தால், அதுவும் கூட அவரது பிரச்சாரத்தின் இயல்பை மாற்றி இருக்காது. அவரது வேலைத்திட்டம் முதலாளித்துவ அமைப்புமுறையை பாதுகாப்பதன் அடிப்படையில் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஓர் அரசியல் இயக்கத்திற்கு எதிராக உள்ளது.
இதே இது பசுமைக் கட்சியின் பெயரளவிற்கான "சுயாதீன" பிரச்சாரத்திற்கும் பொருந்தும். பசுமைக் கட்சி ஒரு முதலாளித்துவ கட்சியாகும். அது ஜனநாயகவாதிகள் மீது வெளியிலிருந்து அழுத்தமளிக்கும் ஒரு குழுவாக செயல்படுகிறது. பசுமைக் கட்சிகள் அரசாங்கத்தில் பங்கு வகித்த போது—மிகவும் குறிப்பாக ஜேர்மனியில்—அவர்கள் உள்நாட்டில் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அன்னிய நாடுகள் மீது ஏகாதிபத்திய போருக்கு ஆதரவளித்தல் உட்பட ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆதரித்தனர்.
தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சர்வதேச மற்றும் சோசலிச வேலைத்திட்டம்
வைட் மற்றும் நிமுத் அமெரிக்காவில் மட்டுமின்றி உலகெங்கிலுமான தொழிலாளர்களிடம் அவர்களது பிரச்சாரத்தை எடுத்துச் செல்வார்கள். அமெரிக்காவில் என்ன நடக்கிறதோ அது உலகளாவிய தாக்கங்களைக் கொண்டிருக்கும், மேலும் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தை ஒரு சர்வதேச போராட்டமாக மட்டுமே நடத்த முடியும். அமெரிக்காவில் நிலவும் அதே நிலைமைகள் தான் ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டில் மீண்டும் மீண்டும் நடக்கிறது மற்றும் இது ஏற்கனவே 2011 இல் எகிப்தின் புரட்சிகர சம்பவங்களில் இருந்து, சீனா மற்றும் இந்தியாவில் பாரிய வேலைநிறுத்தங்கள் வரையில், பிரான்சில் இந்த வசந்த காலத்தில் அவசரகால நெருக்கடி நிலை மற்றும் பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் வரையில், வெடிப்பார்ந்த சமூக எழுச்சிகளுக்கு இட்டுச் சென்றுள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் ஒரு பொதுவான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் சகல பிரிவுகளையும் ஐக்கியப்படுத்தப் போராடுகிறது. தொழிலாள வர்க்கத்தை ஒருவருக்கு எதிராக ஒருவரைப் பிளவுபடுத்தும் ஆளும் வர்க்கத்தின் தேசியவாதம், பேரினவாதம் மற்றும் குருட்டுப் பிடிவாதம் என இவற்றின் எல்லா வடிவங்களையும் எமது பிரச்சாரம் நிராகரிக்கிறது.
அமெரிக்காவில், கடந்த ஆண்டு ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்களது உடன்படிக்கைகள் விற்கப்பட்டதற்கு எதிராக வாகனத்துறை தொழிலாளர்களது கிளர்ச்சிகள் மற்றும் தற்போது வெரிஜோன் தொழிலாளர்களது வேலைநிறுத்தங்கள் உட்பட தீவிரமயப்படலுக்கான அதிகரித்த அறிகுறிகள் உள்ளன. அமெரிக்க தொழிலாளர்கள் அதிகரித்தளவில் அரசிலுக்குத் திரும்பி வருகிறார்கள் என்பதுடன், அவர்கள் முகங்கொடுக்கும் நிலைமைகளுக்குத் துரிதமான தீர்வுகளைக் கோருகிறார்கள். உலகையே கட்டுப்பாட்டில் வைக்க தீர்மானகரமாக உள்ள ஆளும் வர்க்கம், அதன் சொந்த "வீட்டையே" கட்டுப்பாட்டில் வைக்க முடியாததைக் காண்கிறது.
ஒரு முன்னோக்கிய பாதையை எதிர்பார்க்கும் பாரிய பெருந்திரளான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் பேசுவதற்கு மற்றும் அவர்களுக்கு கல்வியூட்டுவதற்கு, சோசலிச கொள்கைகளுக்கு ஆதரவைக் கட்டமைப்பதே சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரத்தின் அடிப்படை நோக்கமாகும். சோசலிசம் என்றால் என்ன? என்ற கேள்வியைப் பலர் கேட்க தொடங்கி இருக்கிறார்கள். எமது பிரச்சாரம் நிஜமான சோசலிச அரசியலை அதன் பல்வேறு போலிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டி, இக்கேள்விக்கு பதிலளிக்கும்.
இப்பிரச்சாரத்தில் இணையுமாறு நாம் உங்களை வலியுறுத்துகிறோம். சோசலிசத்திற்கான செயலூக்கமான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு இதுவே சரியான தருணம்! இது வாக்குகளுக்கான மட்டும் நடக்கும் ஒரு பிரச்சாரமல்ல. இது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எதில் நுழைந்து வருகிறார்களோ அத்தகைய போராட்டங்களுக்கு அவர்களைத் தயார் செய்ய ஒழுங்குபடுத்துவது குறித்ததாகும்.
இதில் நீங்கள் இணைந்திருக்க பல வழிகள் உள்ளன. எமது நாளாந்த மின்னஞ்சல் கட்டுரைகளைப் பெற பதிவு செய்யுங்கள். உங்கள் பகுதியில் தேர்தல் குழுக்களைக் கட்டமைப்பதன் மூலமாக பிரச்சாரத்தில் இணையுங்கள். உங்களது பகுதியில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். எங்கெல்லாம் சாத்தியமோ அங்கே வாக்களித்து எங்களுக்கு உதவுங்கள். நமது நண்பர்கள் மற்றும் சக-தொழிலாளர்களிடையே இப்பிரச்சாரத்தை ஊக்குவியுங்கள். சோசலிச சமத்துவக் கட்சி சாத்தியமான அளவுக்கு மிகவும் ஆக்ரோஷமான பிரச்சாரத்தை நடத்த உறுதி செய்வதற்கு நன்கொடை அளியுங்கள்.
ஒரு புதிய முன்னோக்கிய பாதை நிறுவப்பட வேண்டும்! தங்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளைப் பாதுகாக்க போராடிவரும் சகல தொழிலாளர்களுக்கும், எதிர்காலமின்றி கடனில் தத்தளிக்கும் இளைஞர்களுக்கும், முடிவில்லா போரில் வெறுப்பை கொண்டிருக்கும் மில்லியன் கணக்கானவர்களுக்கும் நாம் கூறுவது: இது உங்களின் பிரச்சாரம்! இன்றே இதில் இணையுங்கள்!
பிரச்சாரத்தில் இணைய, இன்றே sep2016.com வலைத்தளத்தைப் பாருங்கள்.