Print Version|Feedback
The working class in France mobilizes against austerity
பிரான்சில் தொழிலாள வர்க்கம் சிக்கனத் திட்டங்களுக்கு எதிராக அணிதிரள்கிறது
By Alex Lantier
4 April 2016
தொழிலாளர் நலத்துறை மந்திரி மரியம் எல் கொம்ரியின் பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்ட சீர்திருத்தத்தை எதிர்க்க பிரெஞ்சு இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தி உள்ளனர். அவர்கள் நவம்பர் 13 பாரீஸ் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட அவசரகால நிலையை எதிர்த்து இதை செய்துள்ளனர். இந்த ஆரம்ப அணித்திரள்வுகள், பிரான்ஸ் எல்லைகளுக்கு வெகு அப்பாலும் தாக்கங்களைக்கொண்ட சர்வதேச வர்க்க போராட்டத்தின் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது.
மக்கள் எதிர்ப்பை நசுக்குவதற்குப் பயங்கரவாதம் பற்றிய விஷம பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் முயற்சியானது, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்துவரும் தீவிரமயப்பாட்டின் முன்னால் தோல்வி அடைந்து வருகிறது. தொழிலாள வர்க்கம் அவசரகால நெருக்கடி நிலைக்குப் பயந்துவிடவில்லை, அது சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் மற்றும் ஒட்டுமொத்தமாக ஐரோப்பிய ஒன்றியம் நடைமுறைப்படுத்தி உள்ள சமூக எதிர்புரட்சிக்கு எதிரான போராட்டத்திற்குள் நுழைந்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்கள் மற்றும் கூட்டங்களை ஏற்பாடு செய்து வருகின்றனர், நூற்றுக் கணக்கான உயர்நிலை பள்ளிகள் மாணவர்களால் முற்றுகை இடப்பட்டுள்ளன, தொழிலாளர்களின் அதிகரித்த பிரிவுகள் வேலைநிறுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன. கடந்த வியாழனன்று, துறைமுகத் தொழிலாளர்கள், ஏர் பிரான்ஸ் விமானச் சேவை தொழிலாளர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் பிரான்ஸ் எங்கிலும் மறியலில் ஈடுபட்டனர், அதேவேளையில் பல்வேறு நகரங்களில் எஃகு மற்றும் வாகன ஆலை தொழிலாளர்களும் வெளிநடப்பு செய்தனர்.
தொழிலாள வர்க்கம் போராட்டத்திற்குள் நுழைகின்ற வேளையில், ஆரம்பத்திலிருந்தே தொழிலாள வர்க்கம் அதன் குறிக்கோள்கள் மற்றும் நலன்களை வரையறுப்பதில் பல தசாப்தங்களாக உத்தியோகபூர்வ "இடது" அரசியலைப் பிரதிநிதித்துவம் செய்யும் சகல சக்திகளையும் எதிர்க்க நிர்பந்திக்கப்பட்டிருப்பதை காண்கிறது. இடது முன்னணி மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியின் (NPA) ஆதரவுடன் 2012 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டின் சோசலிஸ்ட் கட்சி, 20 ஆம் நூற்றாண்டின் தொழிலாள வர்க்க வரலாற்று போராட்டங்களில் வென்றெடுக்கப்பட்ட சமூக உரிமைகளை அழிக்க முனைகின்ற நிலையில், அந்த அரசாங்கத்திற்கு எதிராக அங்கே ஆழ்ந்த கோபம் உள்ளது.
இந்த எல் கொம்ரி சட்டம் இரண்டு மணி நேர அளவுக்கு வேலை நேரத்தை நீடிப்பதுடன், இளம் தொழிலாளர்களுக்கான வேலையின் நிச்சயமற்றதன்மையை அதிகரிப்பதுடன் மற்றும் பிரான்சின் தொழிலாளர் விதிமுறைகளை மீறி தொழிற்சங்கங்கள், தனித்தனி நிறுவன மட்டத்திலும் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ள அவற்றை அனுமதிக்கும்.
இந்த பிற்போக்குத்தனமான மற்றும் மக்கள்விரோத முன்மொழிவு நடப்பிலிருக்கும் சட்டத்தை மீறுகிறது என்ற உண்மை, அதன் சட்டவிரோத தன்மைக்கு நிரூபணமாகும். அதாவது தொழிற்சங்கங்கள் அவற்றின் வரவு-செலவு திட்டத்தில் 95 சதவீத நிதியை அரசு மற்றும் பெரு வணிகங்களிடம் இருந்து பெறுகின்ற நிலையில், அதன் தாக்குதல்களை கொண்டு செல்ல தொழிற்சங்கங்களை சார்ந்துள்ள "சோசலிஸ்ட்" கட்சி என்று கூறிக்கொள்ளும் ஒரு கட்சியால் முன்னெடுக்கப்படுகின்ற இச்சட்டம், பிரான்சில் "இடது" அரசியல் எனப்படுவதன் ஒட்டுமொத்த கட்டமைப்பின் மோசடியான மற்றும் தொழிலாள வர்க்க விரோத குணாம்சத்தை எடுத்துக்காட்டுகிறது.
ஒரு வெடிப்பார்ந்த அரசியல் இயக்கவியல் அபிவிருத்தி அடைந்து வருகிறது. பயங்கரவாத தாக்குதல்களுடன் இணைத்து பீதியூட்டல் மற்றும் தேசிய பேரினவாதம் இடைவிடாது ஊக்கப்படுத்தப்படுவதற்கு இடையே, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ள சமூக போர்குண உணர்வு அபிவிருத்தி அடைந்து வருகிறது. இது சோசலிஸ்ட் கட்சியை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், இக்கட்சியுடன் ஆழமாக ஒருங்கிணைந்துள்ள இடது முன்னணி மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி போன்ற போலி-இடது அமைப்புகளை மிரட்சிக்கு உள்ளாக்குகிறது.
ஒருவிதமான 1968 இன் அலை வீசிக் கொண்டிருக்கிறது. அந்த வருடத்தின் மே-ஜூன் பொது வேலைநிறுத்தத்தில், பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் சார்ல்ஸ் டு கோல் இன் அசைக்க முடியாததாக பார்க்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக மற்றும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து போராட்டத்திற்குள் இறங்கினர். இன்று என்ன எழுச்சி பெற்று வருகிறதோ, இதுவும், மதிப்பிழந்த சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் மற்றும் அதன் அரசியல் கூட்டாளிகளுக்கு எதிரான அதேபோன்றவொரு வர்க்க போராட்ட வெடிப்பாகும். போராட்டங்களால் எடுத்துக்காட்டப்பட்டவாறு, சோசலிஸ்ட் கட்சியின் சிக்கன திட்டத்திற்கு நிலவும் பரந்த மக்கள் எதிர்ப்பானது, இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய பிரான்சில் மிகவும் மக்கள் செல்வாக்கிழந்த நிர்வாகமான ஹோலாண்ட் அரசாங்கத்தை ஏற்கனவே ஆழமாக அசைத்துள்ளது.
பிரான்ஸ் எங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் எல் கொம்ரி சட்டத்திற்கு எதிராக வியாழனன்று அணிவகுத்து சென்றதும், ஹோலாண்ட் அவசரகால நிலையை அரசியலமைப்பில் சேர்க்கும் ஒரு முன்மொழியப்பட்ட திருத்தத்தையும் மற்றும் பிரெஞ்சு பயங்கரவாதிகளுக்கு குடியுரிமையை பறிக்கும் முன்மொழியப்பட்ட ஒரு திருத்தத்தையும் திரும்ப பெற்றார். அத்திருத்தத்தின் வெவ்வேறு வரைவுகளை செனட் மற்றும் தேசிய நாடாளுமன்றம் இரண்டுமே நிறைவேற்றி விட்ட போதினும், ஹோலாண்ட் அவ்விரு நடவடிக்கைகளுக்கும் இடையிலான வித்தியாசங்களை தீர்த்துவைக்க முயற்சி செய்யவில்லை.
சட்டத்திருத்தங்களை திரும்பப் பெற்ற அந்நடவடிக்கை சோசலிஸ்ட் கட்சிக்கு நெருக்கமான ஊடக பிரிவுகளில் குழப்பத்தை தூண்டிவிட்டது, அடுத்த ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்படுவதைத் தவிர்க்கும் சோசலிஸ்ட் கட்சியின் எந்தவொரு நம்பிக்கையும் முடிவுக்கு வந்துவிட்டதை அது குறிப்பதாக அவை அஞ்சுகின்றன. அதுவொரு "பிரதான அரசியல் பேரழிவு" என்று Le Monde குறிப்பிட்டது, “இந்த நாசகரமான அத்தியாயத்திற்கு பின்னர், திரு ஹோலண்ட் ஒரு அழிவுகரமான இடத்தைத்தான் அவருக்குப் பின்னால் விட்டுச் செல்வார்,” என்றது எச்சரித்தது.
Libération எழுதுகையில்: “கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பிரான்சுவா ஹோலாண்ட் தேசிய ஐக்கியத்தை கட்டமைக்க விரும்பினார்... அவர் தரப்பில் மானக்கேட்டை அனுபவிப்பதிலும் மற்றும் ஒரு அற்பத்தனமான அரசியல் விளையாட்டு காட்சியை உருவாக்குவதிலும் மட்டுந்தான் அவர் வெற்றி பெற்றிருக்கிறார், அதுவும் மக்கள் அவர்களுக்கு மிகவும் அனுகூலமாக நிராகரித்திருந்தாலும் கூட, அதை அவர்கள் புரிந்து கொள்ளாமல், பல விடயங்களை முற்றிலுமாக நிராகரித்துவிட்டனர்,” என்றது.
2014 இலையுதிர் காலத்தின் அரசாங்க நெருக்கடியில் இருந்து மீண்டு வந்த பின்னர், பிரதம மந்திரி மானுவெல் வால்ஸ் நிர்வாகத்தால் பின்பற்றப்பட்ட ஒட்டுமொத்த பிற்போக்குத்தனமான மூலோபாயமும், சிதைந்து போகும் அச்சுறுத்தலில் உள்ளது.
அதன் இதயதானத்தில் இந்த மூலோபாயம் ஹோலாண்டை ஒரு "போர் ஜனாதிபதி" ஆக காட்டுவதற்கும் மற்றும் நவ-பாசிசவாத தேசிய முன்னணியை ஊக்குவிப்பதற்கும், பிரெஞ்சு ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகளால் சிரியா போருக்காக ஒன்றுதிரட்டப்பட்ட இஸ்லாமிய சக்திகளால் ஐரோப்பாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களைப் பயன்படுத்திக் கொள்வதைச் சார்ந்திருந்தது. சோசலிஸ்ட் கட்சி அந்த ஒவ்வொரு தாக்குதலையும் ஒரு வலதுசாரி தேசியவாத சூழலை உருவாக்கவும், தொழிலாளர்களைப் பிளவுபடுத்த மற்றும் அதன் சிக்கனத் திட்ட நிகழ்ச்சி நிரலுக்கு எழும் சமூக எதிர்ப்பை ஒடுக்குவதற்காக இஸ்லாமிய விரோத உணர்வைத் தூண்டிவிடவும் முயன்றதன் மூலம் விடையிறுத்தது.
ஜனவரி 2015 சார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னர், ஹோலாண்ட் தேசிய முன்னணி தலைவர் மரீன் லு பென்னை எலிசே ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்திருந்தார். நவம்பர் 13 தாக்குதல்களுக்குப் பின்னர், தீவிர வலதுடன் இணைந்த இரண்டு கொள்கைகளை அவர் ஊக்குவித்தார்: ஒன்று, 1955 இல் அல்ஜீரிய போரை நடத்துவதற்காக முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட அவசரகால நிலை, மற்றது, யூத இன ஒழிப்பு படுகொலையின் (Holocaust) போது ஆக்கிரமிப்பு பிரான்சிலிருந்து யூதர்களை வெளியேற்றத் தொடங்க பயன்படுத்தியதுடன் எப்போதும் தொடர்புபட்ட குடியுரிமை பறிப்பு.
அரசியல்ரீதியில் குற்றகரமான இந்த மூலோபாயம், இடது முன்னணி மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி போன்ற போலி-இடது சக்திகளிடமிருந்து அர்த்தமுள்ள எதிர்ப்பு எதையும் எதிர்கொள்ளவில்லை, அவை இரண்டுமே சிரியா போரை ஆதரித்துள்ளன. இடது முன்னணி நிர்வாகிகள் தேசிய நாடாளுமன்றத்தில் அவசரகால நெருக்கடி நிலைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அந்த அரசியலமைப்பு திருத்த வரைவுகள் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதே தெளிவுபடுத்துவதைப் போல, 20 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் இரத்தந்தோய்ந்த குற்றங்களுக்கு புனர்வாழ்வளிக்க ஆளும் வர்க்கங்களுக்குள் எந்த எதிர்ப்பும் அங்கே கிடையாது. இது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தீவிர எச்சரிக்கையாகும்.
எவ்வாறிருப்பினும் அதிகரித்துவரும் சமூக எதிர்ப்பின் முன்னால், சோசலிஸ்ட் கட்சி அதன் பிற்போக்குத்தனமான திருத்தத்தின் சமரசமான பதிப்பை பேரம்பேசி முன்னெடுக்க இப்போதைய அரசியல் சூழல் அனுமதிப்பதாக உணரவில்லை.
எல் கொம்ரி சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் நுழையும் தொழிலாளர்கள் ஒரு வரலாற்று போராட்டத்தை முகங்கொடுக்கிறார்கள் என்பதையே இத்தகைய சம்பவங்கள் காட்டுகின்றன. பிரெஞ்சு தீவிர வலதின் மரபுகள் மற்றும் எல் கொம்ரி சட்டத்தில் தொழிலாளர்களின் சமூக உரிமைகள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றிற்கு புனர்வாழ்வளிக்கும் முயற்சி, தனிப்பட்ட ஆத்திரத்திலோ, சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் அரசியல் மற்றும் தொழிற்சங்க உடந்தையாளர்களின் ஊழலிலோ வேரூன்றியதல்ல, மாறாக முதலாளித்துவத்தின் உலகளாவிய புறநிலை நெருக்கடியில் வேரூன்றியதாகும்.
பொருளாதார பொறிவு மற்றும் போர் தீவிரமாக வடிவெடுத்து வருவதற்கு இடையே, ஒவ்வொரு ஏகாதிபத்திய சக்தியும் இலாபங்கள் மற்றும் மூலோபாய ஆதாயங்களுக்காக பொறுப்பற்ற போட்டியை உந்துகின்றன. சிதைந்த உள்கட்டமைப்பு மற்றும் மலையென குவிந்துள்ள கடன்களின் கீழ் தகர்ந்து போய், தசாப்தங்களாக பிற்போக்குத்தனமான அரசாங்கங்களது சகல வகையறாக்களாலும் தொழில்துறைமயமாக்கம் நலிவடைந்து, பிரெஞ்சு முதலாளித்துவம், மாலியில் இருந்து சிரியா வரையில் சூறையாடும் போர்களையும் மற்றும் பிரான்சிற்குள்ளேயே தொழிலாளர்களுக்கு எதிராக சூறையாடும் ஒரு கொள்கையையும் தவிர வேறெந்த வழியுமின்றி உள்ளது. அவர்கள் நடைமுறைப்படுத்த விரும்பும் பொருளாதார கொள்கைகளுக்கு அனுகூலமான அரசியல் சூழலை உருவாக்க, சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் துணை அமைப்புகள் உட்பட முதலாளித்துவ கட்சிகள் அனைத்துமே, பாசிசம் மற்றும் இராணுவவாதத்திற்குப் புனர்வாழ்வளிக்கும் போக்கில் அணி சேர்ந்துள்ளன.
எல் கொம்ரி சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னால் இருக்கும் ஒரே பாதை, முதலாளித்துவத்திற்கு எதிராக, குறிப்பாக முதலாளித்துவ வர்க்கத்தின் "இடது" கட்சிகள் என்றழைக்கப்படுபவைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சளைக்காத அரசியல் போராட்ட பாதையாகும். எல் கொம்ரி சட்டத்தில் சில சிறிய மாற்றங்கள் மீது பிரதம மந்திரி வால்ஸூடன் பேரம்பேசலாம் என்ற மாணவர் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களது முன்மொழிவுகளில் எந்த நம்பிக்கையும் வைக்க முடியாது. இதெல்லாம், போலி-இடது கட்சிகள் அவற்றின் தொழிற்சங்க கூட்டாளிகளின் உதவியுடன் இந்த பிற்போக்குத்தனமான சட்ட மசோதாவைத் திணிப்பதற்கான இலகுவான முயற்சிகளாகும்.
அனைத்திற்கும் மேலாக, இந்த போராட்டத்தின் மீது இத்தகைய சக்திகள் திணிக்க முயலும் தேசியவாத கவசத்திலிருந்து அது விடுவித்துக் கொள்ள வேண்டும். சிக்கனக் கொள்கை, போர் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான எதிர்ப்பில் சோசலிசத்திற்கான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தில் அணிதிரண்டுள்ள ஏனைய எல்லா நாடுகளின் தொழிலாளர்கள் தான், ஹோலாண்டின் பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் பிரெஞ்சு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பிரதான கூட்டாளிகளாவர்.