Print Version|Feedback
Panama Papers revelation triggers political crises around the globe
பனாமா ஆவணங்கள் வெளியீடு உலகெங்கிலும் அரசியல் நெருக்கடிகளைத் தூண்டுகிறது
By Jordan Shilton
7 April 2016
பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூனின் வரி செலுத்துதல்கள் குறித்த புதிய வெளியீடுகள் அவரது அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை அதிகரித்ததுடன் மற்றும் ஏனைய உலக தலைவர்களும் விசாரணையின் கீழ் வந்த போது, புதனன்று பனாமா ஆவணங்களின் உலகளாவிய துணைவிளைவுகள் தொடர்ந்து விரிவடையத் தொடங்கின.
பனாமா சட்ட நிறுவனமான மொசாக் பொன்செகாவின் 11.5 மில்லியன் ஆவணங்கள் அடிப்படையில் புலனாய்வு இதழியலாளர்களின் சர்வதேச கூட்டமைப்புடன் (ICIJ) கூட்டாக உலகெங்கிலுமான 100 ஊடக நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கைகள், மீண்டுமொருமுறை உலக முதலாளித்துவத்தின் இதயதானத்தில் நடந்து வரும் குற்றகர நடைமுறைகளை அம்பலப்படுத்தி உள்ளன. மொத்தம் 72 தற்போதைய மற்றும் முன்னாள் அரசு தலைவர்கள் வெளிநாட்டு கணக்குகள் வைத்திருந்ததை எடுத்துக்காட்டியதுடன் சேர்ந்து, உலகெங்கிலுமான உயர்மட்ட பிரபலங்கள் சிக்கி உள்ளனர்.
ஐஸ்லாந்து பிரதம மந்திரி சிக்முன்டூர் டாவிட் குன்லெக்ஸோன் இராஜினாமா செய்ததை அடுத்து அதற்கடுத்த நாள் புதனன்று அங்கே ஒரு முழு அளவிலான அரசியல் நெருக்கடி தொடர்ந்து ஆழமடைந்தது. அரசாங்கம் செவ்வாயன்று மாலை அறிவிக்கையில் குன்லெக்ஸோன் தற்காலிகமாக மட்டுமே பதவி விலகி இருப்பதாகவும், ஒருசில குறிப்பிடமுடியாத காலத்திற்குப் பின்னர் அவர் மீண்டும் வேலைகளைத் தொடர்வார் என்று அறிவித்தது. குன்லெக்ஸோனின் கூட்டணி பங்காளி சுதந்திரக் கட்சியின் தலைவர் உட்பட ஆளும் உயரடுக்கின் பரந்த பிரிவுகளை இந்த வெளியீடுகள் குற்றத்திற்கு உடந்தையாக்குகின்றன.
இங்கிலாந்து பிரதம மந்திரி கேமரூனின் தந்தையார் அவரது வெளிநாட்டு நிறுவனமான பிளேயர்மோர் (Blairmore) இன் வரி விவகார விசாரணைகளைத் தவிர்ப்பதற்காக 2010 இல் அதன் அலுவலகத்தை பனாமாவில் இருந்து அயர்லாந்திற்கு மாற்றியதை Daily Telegraph வெளியிட்டதும், கேமரூன் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. அயர்லாந்து இழிவார்ந்த அளவிற்கு மிகக் குறைந்த பெருநிறுவன வரி விகிதங்களைக் கொண்டுள்ளது, இதுவும் கூட நிறுவனங்களால் முழுமையாக அரிதாகவே செலுத்தப்படுகிறது.
பிளேயர்மோர் நிறுவனம் செல்வந்த குடும்பங்களிடம் இருந்து பத்து மில்லியன் கணக்கான பவுண்டுகளைப் பெற்றிருந்தது. கார்டியன் செய்தியின்படி, அதன் 30 ஆண்டு கால இங்கிலாந்து செயல்பாடுகளில் அது ஒருபோதும் ஒரு நயா பைசா கூட வருமான வரியாக செலுத்தி இருக்கவில்லை.
ஆரம்பத்தில் பிரதம மந்திரியின் அலுவலகம் அதையொரு "தனிப்பட்ட விவகாரம்" என்று கூறி விடையிறுத்தது. கேமரூனுக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் எந்த பங்கும் இல்லை என்ற ஆரம்ப அறிக்கைகளுக்கு வெளிப்படையாக முரண்பட்ட விதத்தில், டவுனிங் வீதி நேற்று மிகவும் கவனமான வாசங்களுடன் ஓர் அறிக்கை வெளியிட்டது, பிரதம மந்திரி அதுபோன்ற நிறுவனங்களில் இருந்து எதிர்காலத்தில் எந்தவித ஆதாயங்களையும் பெறமாட்டார் என்று அது குறிப்பிட்டது. “பிரதம மந்திரியோ, திருமதி கேமரூனோ அல்லது அவர்களது குழந்தைகளோ எதிர்காலத்தில் எந்த விதமான வெளிநாட்டு நிதி நிறுவனங்கள்/அறக்கட்டளைகளில் இருந்து ஆதாயமடைய மாட்டார்கள்,” என்று ஒரு செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
அயர்லாந்தின் வரி விகிதங்கள் ஏறத்தாழ வெளிநாட்டு வரி ஏய்ப்பு புகலிடங்களை விட குறைவாக இருக்கின்ற நிலையில், “வெளிநாட்டு நிறுவனங்கள்" என்ற குறிப்புகள் அயர்லாந்திற்கு பொருந்தாது என்பதால் அந்த சொற்பதங்கள் தேர்ந்தெடுக்கபட்டிருக்கலாம் என்று கார்டியன் குறிப்பிட்டது.
பனாமா ஆவணங்கள் வெறுமனே மலையின் ஒரு நுனி தான். வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் நேற்று ஒப்புக் கொண்டதைப் போல, சமீபத்திய ஆண்டுகளில் வெளிநாட்டு தொழில்துறை "செழித்தோங்கி" உள்ளது. போஸ்டன் ஆலோசனை நிறுவனத்தின் தகவல்படி, வரி ஏய்ப்பு புகலிடங்களுக்குள் செல்லும் தனிநபர் செல்வம் 2014 இல் 7 சதவீத அளவிற்கு அதிகரித்து, குறிப்பிடத்தக்க அளவிற்கு மொத்தம் 11 ட்ரில்லியன் டாலரை எட்டி இருப்பதாக தெரிவித்தது. 2009 மற்றும் 2014 க்கு இடையே, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் மற்றும் ஜெர்சியின் இராஜவம்சம் உள்ளடங்கலாக ஏழு மிகப் பெரிய வரி ஏய்ப்பு புகலிடங்களில் பதிவு செய்திருந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 7 சதவீத அளவிற்கு 672,500 ஆக உயர்ந்தது.
இது உலகெங்கிலுமான எல்லா தரப்பு அரசாங்கங்களும், 2008 உலகளாவிய பொருளாதார முறிவை அடுத்து வங்கிகளுக்குப் பில்லியன் கணக்கான தொகை பிணையெடுப்பு வழங்க தொழிலாள வர்க்கத்தின் கூலிகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீது முன்னொருபோதும் இல்லாதளவிற்குத் தாக்குதலைத் தொடங்கிய அதே காலகட்டத்துடன் பொருந்துகிறது. உலகெங்கிலுமான மில்லியன் கணக்கான தொழிலாளர்களை வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மைக்குள் மூழ்கடித்து நிதியியல் உயரடுக்கின் ஊக வணிக நடவடிக்கைகளுக்குப் பணம் செலுத்திய அதேவேளையில், உலகளாவிய நிதியியல் செல்வந்த தன்னலக்குழு வரி ஏய்ப்பு புகலிடங்களில் கூடுதலாக பில்லியன்களை பதுக்கியதன் மூலமாக இன்னும் கூடுதலாக தன்னைத்தானே செழிப்பாக்கிக் கொண்டது.
சில மதிப்பீடுகள் இதை விட அதிகமாக செல்கின்றன. ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனம் Tax Justice Network, உலகின் மொத்த செல்வ வளத்தில் 8 இல் இருந்து 13 சதவீதத்திற்கு இடையே, அதாவது 21 மற்றும் 32 ட்ரில்லியன் டாலருக்கு இடையிலான தொகை, வரி ஏய்ப்பு புகலிடங்களில் சேமிக்கப்பட்டிருப்பதாக மதிப்பிட்டது. இதில் அமெரிக்காவில் உள்ள டெல்வேர் மற்றும் வியோமிங் போன்ற மாநிலங்களின் உள்நாட்டு வரி ஏய்ப்பு கூடங்கள் உள்ளடங்காது.
கடந்த அக்டோபரில், உலகின் மிகப் பெரிய தனியார் பங்கு விலை-நிர்ணய நிறுவனமான பிளாக்ஸ்டோன் குழுமம் LP, வரி ஏய்ப்பு புகலிடங்களில் நிறுவனங்களை, தொண்டு நிறுவனங்களை மற்றும் முதலீட்டு நிதி நிறுவனங்களை அமைத்துக் கொடுக்கும் மற்றும் அவற்றிற்கு சேவைகள் வழங்கும் ஒரு நிறுவனமான Intertrust NV, அதன் ஆரம்ப பொதுப்பங்கு வெளியீட்டில் (IPO) 1.5 பில்லியன் டாலர் ஈட்டியதாக மதிப்பிட்டது. Intertrust நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டு 17 சதவீத அளவிற்கு அதிகரித்தது.
அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களது எண்ணிக்கையில் ஹாங்காங்கிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருந்து கொண்டு, பிரிட்டன் உலகின் வெளிநாட்டு தொழில்துறையில் மிகப் பெரிய பங்களிப்பாளராக உள்ளது.
சான்சிலர் ஜோர்ஜ் ஓஸ்போர்னிடம் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் ஒரு செய்தியாளர், அவருக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் ஏதேனும் ஆதாயங்கள் கிடைக்கிறதா என்பதைத் தெளிவுபடுத்துமாறு மீண்டும் மீண்டும் வினவியதும் அவர் அப்பேட்டியை முடித்துக் கொண்டார், இது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது கட்டமைந்து வரும் அழுத்தத்தை எடுத்துக்காட்டுகிறது. அந்த நேர்காணல் பாதியில் முடித்துப்படவில்லை என்றும், முன்வைக்கப்பட்ட பல கேள்விகளுடன் உடன்படுவதாகவும் அதற்குப் பின்னர் கருவூலத்துறை கூற முயன்றது.
வரி ஏய்ப்பு புகலிடத்தை அடிப்படையாக கொண்ட ஒரு கட்டிடத்துறை நிறுவனத்துடன் சொத்து பேரத்தில் ஓஸ்போர்ன் சம்பந்தப்பட்டு, அதில் அவர் குடும்ப வியாபாரத்திற்கு 6 மில்லியன் பவுண்ட் கிடைத்ததன் மீது முதலில் கடந்த ஜூலையில் வெளியான ஒரு மோசடியை இந்த வெளியீடுகள் மீட்டுயிர்ப்பித்துள்ளன.
சுவிஸ் அதிகாரிகள் நியோனில் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பான UEFA அலுவலகங்களைச் சோதனையிட்ட போதுதான், புதனன்று மதியம் பனாமா ஆவணங்களினால் விளைந்த அறிவிப்புபூர்வமான முதல் பொலிஸ் நடவடிக்கை நடந்தது. UEFA அமைப்பு அதன் விளையாட்டு போட்டி உரிமங்களில் சிலவற்றை 2006 இல் வெளிநாட்டு நிறுவனமான Cross Trading க்கு விற்றதாகவும், இந்நிறுவனம் அதற்கடுத்து இன்னும் அதிக விலைக்கு அந்த உரிமங்களை மீண்டும் விற்பனை செய்ததாக சுவிஸ் நாளிதழ் Neue Zürcher Zeitung குறிப்பிட்டது. இந்த செய்தி அப்போது UEFA இன் தலைமை சட்ட அதிகாரியாக இருந்த இப்போதைய FIFA தலைவர் Gianni Infantino ஐ குற்றத்திற்கு உடந்தையாக்குகிறது. சமீபத்தில் தான் Infantino, கை சுத்தம் உள்ளவர் என்பதாக காட்டப்பட்டு, FIFA தலைவர் செப் பிளாட்டருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்.
சந்தை விலைக்குக் குறைவாக ஒளிபரப்பு உரிமங்களை விற்கவில்லையென UEFA மறுக்கிறது.
இந்த வெளியீடுகள் ஏனைய நாடுகளது அரசியல் தலைவர்களையும் பாதித்துள்ளது. பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆஸ்திரியா, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்தில் பனாமா ஆவணங்களுடன் தொடர்புபட்ட விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
அர்ஜென்டினா தலைவர் மவ்ரீசியோ மாக்ரி பஹாமாஸ் மற்றும் பனாமாவில் அமைந்துள்ள இரண்டு நிறுவனங்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறார். மாக்ரி 2007 இல் Buenos Aires மேயர் ஆன போதோ அல்லது கடந்த ஆண்டு ஜனாதிபதி ஆன போதோ இவ்விரு நிறுவனத்துடன் அவர் சம்பந்தப்பட்டிருப்பதை வெளிப்படுத்தி இருக்கவில்லை.
கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவிற்கு எதிரான வாஷிங்டன் மற்றும் நேட்டோ அதிகாரங்களது புவிசார் மூலோபாய தாக்குதலில் ஒரு நெருக்கமான கூட்டாளியான உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொறொஷென்கோ, 2014 இல் ஜனாதிபதி ஆன பின்னரும் அவரது சாக்லெட் வியாபாரத்தை நிர்வகிக்க பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் ஒரு நிறுவனத்தை அமைத்தார். எதிர்கட்சி அரசியல்வாதிகளின் கருத்துப்படி, இந்நடவடிக்கை அந்நாட்டிற்கு மில்லியன் கணக்கான செலுத்தப்படாத வரி இழப்பை ஏற்படுத்தியது.
பிரதான அமெரிக்க பிரமுகர்கள், மொசாக் பொன்செகா வாடிக்கையாளர்கள் பட்டியலில் இல்லை என்பதற்காக பகட்டாக தெரியலாம். இது பிரதானமாக ஏனென்றால் டெல்வேர் மாநிலம் போன்று உள்நாட்டிலேயே பல வரி ஏய்ப்பு புகலிடங்கள் உள்ளன என்ற உண்மையின் காரணமாக ஆகும், அம்மாநிலத்தில் ஒரு அலுவலக கட்டிடம் 285,000 நிறுவனங்களுக்குரிய இடமாக உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவரது நிர்வாகம் வரி ஏய்ப்புக்கு ஒரு எதிர்ப்பாளராக காட்டுவதற்கு பனாமா ஆவணங்களைச் சாதகமாக்கிக் கொண்டார். செவ்வாயன்று பத்திரிகையாளர் கூட்டத்தில், அவர் அமெரிக்காவில் செயல்படும் நிறுவனங்களது பெருநிறுவன குழப்பங்களைத் தடுக்கும் நோக்கில் கருவூலத்துறை கொண்டு வந்த புதிய நெறிமுறைகளைப் பாராட்டினார், ஆனால் இந்த நெறிமுறைகளின் கீழ் வரி ஏய்ப்பு புகலிடங்களில் இருந்து ஆதாயமடைவதற்காக நிறுவனத்தின் தலைமையிடங்களை வெளிநாடுகளுக்கு நகர்த்திக் கொள்ள முடியும்.
“பனாமாவில் இருந்து வெளிவரும் இந்த மிகப் பெரிய தரவு தொகுப்பில் இருந்து, வரி ஏய்ப்பு ஒரு மிகப் பெரிய, உலகளாவிய பிரச்சினை என்ற மற்றொரு நினைவூட்டல் நமக்கு கிடைக்கிறது,” ஒபாமா அறிவித்தார். “இது ஏனைய நாடுகளது தனிப்பட்ட விடயமல்ல, மாறாக அது அனைவருக்குமான பிரச்சினையாகும். அவர்கள் சட்டத்தை மீறுகிறார்கள் என்பதல்ல பிரச்சினை, சட்டம் மிகவும் பலவீனமாக இருக்கிறது என்பது தான் பிரச்சினை,” என்றார்.
ஊக வணிகத்தின் அப்பட்டமான குற்றகர நடவடிக்கைகளில் அமெரிக்க நிறுவனங்கள் முன்னணி பாத்திரம் வகித்த 2008 உலகளாவிய நிதிய பொறிவை அடுத்து, நிதியியல் உயரடுக்கின் குற்றகரமான நடைமுறைகளை மூடிமறைக்க அரசாங்க தலைவராக அவரால் ஆன மட்டும் எல்லாம் செய்த ஒபாமா, இதில் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்.
நிதியியல் உயரடுக்கு அனுபவித்து வந்த தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமை, அவர்களை வழக்கம் போல வணிகத்திற்கு திரும்ப அனுமதித்தது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் நேற்று குறிப்பிட்டதைப் போல, வரி ஏய்ப்பு புகலிடங்களில் உள்ள பல உள்ளூர் சேவை வழங்குனர்கள் வெளிநாட்டு நிதியியல் தொழில்துறையை உருவாக்குவதற்கு உதவியாக, வங்கிகளால் 2008 க்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்டன.
இந்த உயர்மட்ட இரகசிய தொழில்துறையில் ஈடுபட்டுள்ள தனியார் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் ஒன்றான சிட்கோ குழுமம், பேர்னார்ட் எல். மடோஃப் இன் நிதிகளை நிர்வகித்து வந்தது என்பது வெளியானதும் கடந்த ஆண்டு முதலீட்டாளர்களுக்கு நஷ்ட ஈடாக 125 மில்லியன் டாலர் செலுத்த நிர்பந்திக்கப்பட்டது, அந்நபர் வரலாற்றிலேயே மிகப் பெரிய பொன்ஜி திட்டங்களில் ஒன்றை நடத்தி வந்ததற்காக குற்றஞ்சாட்டப்பட்டார்.
ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உடன் நெருக்கமாக தொடர்புடைய ரஷ்ய செல்வந்த தன்னலக்குழுக்களை இலக்கில் வைத்த முக்கிய தகவல்களில், அமெரிக்க அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. ஒரு வெளிநாட்டு வரி ஏய்ப்பு செயல்பாடுகளை நடத்துவதற்காக புட்டினின் உள் வட்டார அங்கத்தவர்களைக் குற்றஞ்சாட்டிய ஒரு புதிய செய்திக்கு USAID நிதி வழங்கியதாக நேற்று விக்கிலீக்ஸ் குற்றஞ்சாட்டியது.
விக்கிலீக்ஸின் ஒரு செய்தி தொடர்பாளர் Kristinn Hrafnsson உம், “பொறுப்பான இதழியலை" மேற்கோளிட்டு, எல்லா தகவல்களையும் வெளியிடுவதில்லை என்ற ICIJ இன் முடிவை விமர்சித்தார். “அதன் ஒட்டுமொத்த தொனியுடன் நான் மொத்தத்தில் உடன்படவில்லை,” என்றவர் Russia Today க்கு தெரிவித்தார். எல்லா தகவல்களையும் பகிரங்கமாக வெளியிடுமாறு அவர் வலியுறுத்தினார்.