Print Version|Feedback
“Panama papers” tax evasion leak stokes political crises worldwide
“பனாமா ஆவணங்களின்" வரி ஏமாற்று தகவல் கசிவு உலகெங்கிலும் அரசியல் நெருக்கடிகளைத் தூண்டுகிறது
By Andre Damon
5 April 2016
“வரலாற்றில் உள் விபரங்களின் மிகப்பெரிய கசிவு" என்று குறிப்பிட்டு புலனாய்வு இதழியலாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு (ICIJ) வெளியிட்ட, முன்னணி உலகளாவிய அரசியல்வாதிகள் மற்றும் வியாபாரிகளின் ஊழல், பண மோசடி மற்றும் ஏனைய மோசடி நடவடிக்கைகளைக் குறித்த செய்திகளை, 100 க்கும் அதிகமான உலகளாவிய செய்தியிதழ்களின் குழு, ஞாயிறன்று மாலை ICIJ உடன் சேர்ந்து வெளியிட தொடங்கியது.
அச்செய்திகள், வெளிநாடுகளில் அமைந்துள்ள 214,000 க்கும் அதிகமான நிறுவனங்கள் மீது விபரத் தகவல்களை வழங்கும் பனாமிய பெருநிறுவன சேவை நிறுவனமான மொஸ்சக் ஃபொன்சேகாவின் (Mossack Fonseca) 11.5 மில்லியன் இரகசிய ஆவணங்களின் அடிப்படையில் அமைந்திருந்தன.
ICIJ தகவல்படி, அந்த ஆவணங்கள் "உலகெங்கிலுமான தற்போதைய மற்றும் முன்னாள் உலக தலைவர்கள் 12 பேர் உட்பட 140 அரசியல்வாதிகள் மற்றும் பொது பிரபலங்களின் வெளிநாட்டு கையிருப்புகளை அம்பலப்படுத்துகிறது. அவர்களில், ஐஸ்லாந்து மற்றும் பாகிஸ்தானிய பிரதம மந்திரிகள், உக்ரேனிய ஜனாதிபதி, மற்றும் சவூதி அரேபிய அரசரும் உள்ளடங்குகின்றனர்.”
அந்நிறுவனம், 500 மிகப்பெரிய உலக பணக்காரர்களின் ஃபோர்ப்ஸ் இதழ் பட்டியலில் உள்ள 29 பில்லியனர்கள் பயன்படுத்தப்படும் கணக்குகளையும் தொகுத்தளிக்கிறது.
அந்த அறிக்கை வெளியீடானது, ஐஸ்லாந்து, இங்கிலாந்து, சிலி, பிரான்ஸ், ரஷ்யா, உக்ரேன், ஆர்ஜென்டினா, அமெரிக்கா, ஜேர்மனி, பிரேசில், கனடா, நோர்வே மற்றும் ஸ்வீடன் உட்பட ஒரு டஜனுக்கும் அதிகமான நாடுகளில் மோசடிகள் மீதான விசாரணைகளைத் தூண்டிவிட்டது.
ஐஸ்லாந்தில் மத்திய-வலது முற்போக்குக் கட்சி பிரதம மந்திரி Sigmundur David Gunnlaugsson அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் பதவியில் இருக்கையில் அவரது வெளிநாட்டு சொத்துக்களை வெளியிடாமல் அவற்றை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் மறைத்து வைத்திருந்ததை அந்த கசியவிடப்பட்ட ஆவணங்கள் எடுத்துக்காட்டியதும், உடனடியாக தேர்தல்களை அறிவிக்க கோரி சுமார் 10,000 பேர் ஐஸ்லாந்து தலைநகர் Reykjavík இல் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரிட்டிஷ் பிரதம மந்திரியின் தந்தை இயன் கேமரூன் மற்றும் பழமைவாத கட்சியின் ஏனைய முக்கிய அங்கத்தவர்களும் மொஸ்சக் ஃபொன்சேகா நிறுவன வாடிக்கையாளர்களாக இருந்ததையும் அந்த ஆவணங்கள் அம்பலப்படுத்தின. பிரதம மந்திரியின் குடும்பம் இன்னும் ஏதேனும் நிதி நிறுவனங்களில் பணம் முதலீடு செய்துள்ளதா என்று வினவிய போது, கேமரூனின் செய்தி தொடர்பு பெண்மணி, “அது தனிப்பட்ட விடயம்,” என்று பதிலளித்தார்.
2014 அமெரிக்க ஆதரவிலான ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதி பெட்ரோ பொறோஷென்கோ, வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக அவரது சொத்துக்களை வெளிநாட்டு கணக்கிற்கு நகர்த்தி இருந்ததை அந்த ஆவணங்கள் வெளிப்படுத்திய பின்னர், உக்ரேனிய சட்ட வல்லுனர்கள் ஒரு விசாரணை கோரினர்.
ஆர்ஜென்டினா ஜனாதிபதி மௌரிஸோ மாக்ரி (Mauricio Macri) பஹாமாஸில் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் இயக்குனராக சேவையாற்றுகிறார் என்பதையும் அந்த அறிக்கை எடுத்துக் காட்டியது.
அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் பத்திரிகைகள் அந்த வெளியீடுகள் மீது ரஷ்ய விரோதத்தை கட்டவிழ்த்துவிட முனைந்தன. பிரிட்டிஷ் கார்டியன் இதழ், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுடன் தொடர்புடையவர்கள் பல பில்லியன் டாலர் வெளிநாட்டு வர்த்தகங்களில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறுவதில் அதன் செய்திகளை ஒருமுகப்படுத்தி இருந்தது. கார்டியனின் வாதங்களைக் குறித்துக் குறிப்பிடுகையில், ராய்டர்ஸ், அதனால் "அந்த விபரங்களை உறுதிப்படுத்த முடியவில்லை" என்று எழுதியது.
சுமார் 2.6 டெராபைட்ஸ் அளவிலான அந்த ஆவணங்கள், பெயர் வெளியிடாத ஒருவரால், குற்றகரமான நடவடிக்கைகளை அம்பலப்படுத்த விரும்புவதாக கூறி, ஆகஸ்ட் 2015 இல் ஜேர்மன் நாளிதழ் Süddeutsche Zeitung க்கு கசியவிட்டிருந்தார். அந்த கோப்புகள் ஞாயிறன்று ஒருங்கிணைந்து செய்தி பிரசுரமாக வெளியாவதற்கு முன்னதாக ஓராண்டு காலமாக 300 க்கும் அதிகமான இதழியலாளர்களால் மீளாய்வு செய்யப்பட்டன.
மொஸ்சக் ஃபொன்சேகா நிறுவன சம்பவம் ஒரு தனித்த சம்பவம் என்றில்லாமல், முன்னணி உலகளாவிய வங்கிகளது நடவடிக்கைகளின் ஓர் உள்ளார்ந்த பாகமாக இருக்கிறது என்பதையே இந்த ஆவணங்கள் அம்பலப்படுத்துகின்றன. இதை ICIJ குறிப்பிடுவதைப் போல, “பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள், பனாமா மற்றும் ஏனைய வெளிநாட்டு புகலிடங்களில், கண்டுபிடிக்க கடினமான நிறுவனங்களை உருவாக்குவதற்கு பின்னணியில் பிரதான வங்கிகளே மிகப் பெரிய உந்துசக்திகளாக இருந்துள்ளன என்பதை இந்த ஆவணங்கள் தெளிவுபடுத்துகின்றன. சர்வதேச பகாசுர நிறுவனங்களான UBS மற்றும் HSBC ஆல் உருவாக்கப்பட்ட ஆயிரக் கணக்கான இரகசிய கருவூலங்கள் உள்ளடங்கலாக அவற்றில் தங்களின் நிதிகளை மறைத்து வைக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அமைத்துக் கொடுத்த அண்மித்த 15,600 வியாபாரத்தில் ஈடுபடாத வெற்று பெயர்களை கொண்ட நிறுவனங்களின் (paper companies) பட்டியலை அந்த கோப்புகள் பட்டியலிடுகின்றன.”
ICIJ தகவல்படி, பெருநிறுவன ஆவணங்களில் பின் தேதியிடுவது (back-dating) மற்றும் குற்ற வழக்குகளைத் தடுக்க ஆதாரங்களை அழிப்பது ஆகியவையும் அந்நிறுவனத்தால் வழங்கப்பட்ட சேவைகளில் உள்ளடங்கி இருந்தன.
ஞாயிறன்று வெளியான அம்பலப்படுத்தல்களைத் தொடர்ந்து 2015 ICIJ ஆவணங்களது ஒரு வெளியீடும் வந்தது, அவை ஐரோப்பாவின் மிகப்பெரிய வங்கியான HSBC இன் சுவிஸ் தனியார் வங்கி கிளை பல ஆண்டுகளாக வரி ஏமாற்று மற்றும் பண மோசடி நிறுவனமாக செயல்பட்டு வந்ததை எடுத்துக்காட்டியது. அந்நிறுவனம் வெளிநாட்டு பணமாக "கட்டுக்கட்டாக" நூறாயிரக் கணக்கான டாலர்களை வழங்கிய மற்றும் எவ்வாறு வரி ஏமாற்று செய்வது என்பதற்கு அதன் செல்வந்த வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்கிய ஒரு கிளையை நடத்தி வந்தது.
ICIJ அறிக்கை, கலிபோர்னியா பல்கலைக்கழக பொருளியல் நிபுணர் கேப்ரியல் ஜூக்மேன் கூற்றுகளின் பரந்த ஆவணப்படுத்தல்களை வழங்குகிறது, இவர் சுமார் 7.6 ட்ரில்லியன் டாலர் அளவிற்கான உலகளாவிய நிதி செல்வத்தில் 8 சதவீதம் வெளிநாடுகளில் வரி பாதுகாப்பிற்குரிய இடங்களில் மறைக்கப்பட்டிருப்பதாக மதிப்பிடுகிறார். “இந்த வெளியீடுகள், மோசமான நடைமுறைகள் மற்றும் குற்றகரத்தன்மை ஒரு நாட்டிற்கு வெளியிலும் எந்தளவிற்கு ஆழ்ந்து உள்பொதிந்துள்ளன என்பதைக் காட்டுகின்றன,” என்று அந்த அறிக்கைகளுக்கு விடையிறுப்பாக ஜூக்மேன் தெரிவித்தார்.
“வியாபாரத்தில் இல்லாத 200,000 க்கும் அதிகமான வெளிநாட்டு வெற்று நிறுவனங்களின் உலகளாவிய வலையமைப்பை ஒரு கசிவு அம்பலப்படுத்துகிறது: ஏனைய பிரபல சட்ட நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் குறித்த கசிவுகள் அம்பலமானால் கற்பனை செய்து பாருங்கள்?”
போஸ்டன் பல்கலைக்கழ சொற்பொழிவாளரான மார்க் வில்லியம்ஸ் புளூம்பேர்க்கிற்குக் கூறுகையில், “வரி ஏய்ப்பு, குற்றகரமான நடவடிக்கைகள் மற்றும் பணமாற்று மோசடிகளுக்கு எதிராக வெளிப்படையான வங்கி சட்டங்கள் இருந்தாலும், உலகளாவிய நாடுகடந்த வியாபாரத்தில் ஈடுபடாத போலி நிறுவனங்கள் செல்வந்தர்களுக்காக திறக்கப்பட்டு, நன்கு இணைந்துள்ளன என்பதற்கு இந்த கசிவு ஆதாரமாகும்,” என்றார்.
மொஸ்சக் ஃபொன்சேகா நிறுவனத்தால் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட, நடைமுறையில் இயங்காத வெற்று நிறுவனங்களுக்கான நான்காவது மிக பிரபல நாடாக அமெரிக்கா இருக்கின்ற போதினும், அமெரிக்காவில் எந்த உயர்மட்ட பிரபலமும் கணக்கு வைத்திருந்ததாக அம்பலப்படவில்லை. இது ஏனென்றால், குறிப்பாக சில நாட்டில் மற்றும் உள்நாட்டு நீதிமுறைகளில் மிகவும் குறைந்த நிதி கட்டுப்பாட்டு நெறிமுறை இருக்கின்ற நிலையில், தங்களது சொத்துக்களை மறைக்கவோ அல்லது பண மோசடிகள் செய்யவோ விரும்பும் செல்வந்த அமெரிக்கர்கள் உள்நாட்டிலேயே அதை எளிதாக செய்ய முடிகிறது என்ற உண்மையினால் இருக்கலாம் என்று சில வல்லுனர்கள் ஊகித்தனர்.
ஒரு சட்டக் கல்லூரியான உற்றா பல்கலைக்கழகத்தின் சட்ட பேராசிரியர் ஷிமா பரதரன் பௌக்மான் Fusion க்குத் தெரிவிக்கையில், “அமெரிக்கர்களால் வியோமிங், டெலாவேர் அல்லது நெவாடா இல் வியாபாரத்தில் ஈடுபடாத வெற்று நிறுவனங்களை உருவாக்க முடியும். அவர்கள் அவர்களது இரகசிய நடவடிக்கைகளுக்கான ஒரு வெற்று நிறுவனத்தை உருவாக்க பனாமாவிற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை,” என்றார்.