Print Version|Feedback
#NightOnOurFeet: A petty-bourgeois trap for opposition to French labor reform
#NuitDebout: பிரான்சின் தொழிற்சட்ட சீர்திருத்தத்திற்கான எதிர்ப்புக்கு ஒரு குட்டி-முதலாளித்துவப் பொறி
By Alex Lantier
8 April 2016
சென்ற வாரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரெஞ்சு தொழிலாளர்களும் மற்றும் இளைஞர்களும் சோசலிஸ்ட் கட்சியின் தொழிலாளர் அமைச்சரான மரியம் எல் கொம்ரி இன் தொழிற்சட்ட சீர்திருத்தத்திற்கு எதிராக வேலைநிறுத்தங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் அணிதிரண்டிருந்ததன் பின்னர், ஊடகங்கள் #NuitDebout (#நம் காலடியில் இரவு) இயக்கத்தை மிகப் பெருமளவில் ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன.
வார இறுதியில் பாரிஸில் இருக்கும் குடியரசு சதுக்கத்தில் [Place de la République] சில நூறு பேர் முகாம்களை அமைத்ததுடன் இது தொடங்கியது. புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி [Nouveau Parti anticapitaliste NPA] மற்றும் இடது முன்னணி [Front de gauche FG] போன்ற சோசலிஸ்ட் கட்சியுடன் நீண்ட கால கூட்டாளியாக இருந்து வந்திருக்கும் கட்சிகள், கிறிஸ்தவ சுய-உதவிக் குழுக்கள், முன்னாள் மாவோயிச-செயல்பாட்டாளரான ஜோன் பாப்டிஸ்ட் ஏய்ரோ (Jean-Baptiste Eyraud) இன் வீட்டுவசதிக்கான உரிமை [Droit au logement DAL] குழு ஆகியவற்றின் உறுப்பினர்களும் இதில் இருந்தனர். பேச்சாளர்களில் ஏய்ரோ தவிர்த்து தேசியவாதப் பொருளாதார அறிஞரும், கிரீசில் ஆளும் சிரிசாவில் இருந்து உடைந்த மக்கள் ஒற்றுமை [Popular Unity] கட்சியின் ஆதரவாளருமான பிரெடரிக் லோர்டோனும் (Frédéric Lordon) இடம்பெற்றிருந்தார். அதன்பின் #NuitDebout முகாம்கள் துலூஸ், லியோன், மற்றும் நான்ந் உள்ளிட்ட மற்ற நகரங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.
#NuitDebout 2011 இல் ஸ்பெயினில் நடந்த இன்டிக்னாடோஸ் (indignados) ஆர்ப்பாட்டங்களை —இதில் ஆயிரக்கணக்கான ஸ்பானிய இளைஞர்கள் மாட்ரிட்டில் இருக்கும் பொர்டா டெல் ஸொல் (Puerta del Sol) சதுக்கம் மற்றும் ஸ்பெயின் எங்கிலுமான நகரங்களில் இருக்கக் கூடிய சதுக்கங்களில் உள்ளிருப்பில் ஈடுபட்டனர்— தனக்கான முன்மாதிரியாகக் கொண்டுள்ளதாக ஊடகங்களும் போராட்ட ஒழுங்கமைப்பாளர்களும் அறிவிக்கின்றனர். இன்டிக்னாடோஸ் ஆர்ப்பாட்டத்தில் இருந்து எழுந்த ஸ்பெயினில் உள்ள பெடெமோஸ் (Podemos) கட்சியின் ஒரு முன்னணி உறுப்பினரான மிகேல் ஊர்பான் (Miguel Urban) குடியரசு சதுக்கத்திற்கு விஜயம் செய்ய #NuitDebout இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.
இன்டிக்னாடோஸ் மற்றும் 2011 இல் நடந்த அதுபோன்ற போராட்டங்களில் —கிரீசில் Aganaktismeni மற்றும் அமெரிக்காவில் வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் ஆகியவை— மேலாதிக்கம் செலுத்திய வசதிபடைத்த நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் பிரபலமாக இருக்கக் கூடிய வாழ்க்கைத்தர அரசியல் மற்றும் பின்நவீனத்துவ மற்றும் மார்க்சிச-விரோத கருத்தாக்கங்களையே இந்த ஆர்ப்பாட்டங்கள் பிரதிபலிக்கின்றன. கை உயர்த்துதல் மூலமான கருத்தொற்றுமையின் படி முடிவுகள் எடுக்கப்படுகின்றன. ஊடகங்களிடம் பேசுகையில் #NuitDebout உறுப்பினர்கள், பிரான்சில் ஆண்கள் பெண்கள் இருவருக்கும் வைக்கக் கூடிய பால்வித்தியாசம் காட்டாத பெயரான கமி (Camille) என்ற பெயரைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இன்டிக்னாடோஸ் அனுபவமும் ஊடகங்களின் சோசலிஸ்ட் கட்சி-ஆதரவு பிரிவுகளின் மத்தியில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அளிக்கப்படுகின்ற உற்சாகமும் எல் கொம்ரி சட்டத்திற்கு எதிராய் போராடுகின்ற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கான அரசியல் எச்சரிக்கைகள் ஆகும். #NuitDebout இயக்கம் ஒரு முட்டுச் சந்தும் அரசியல் பொறியும் ஆகும். எல் கொம்ரி சட்டத்திற்கு எதிரான போராட்டத்தினால் தீவிரப்பட்டிருக்கும் இளைஞர்கள் தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திரும்பி விடுவதில் இருந்தும், அதனை சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைத் திட்டநிரலுக்கு எதிரான போராட்டத்தில் அணிதிரட்டுவதில் இருந்தும் தடுத்து வைப்பதே அதன் நோக்கமாக இருக்கிறது.
அத்தகையதொரு திருப்பத்தை எடுப்பதற்குப் பதிலாக, ஸ்பெயினிலும் கிரீசிலும் இவை ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை செலுத்தத்தை தடுத்து நிறுத்தத் தவறியதோடு மட்டுமல்லாமல், தொழிலாள வர்க்கத்திற்கு ஆழமான குரோதமுடைய முதலாளித்துவக் கட்சிகளுக்கும் வலுவூட்டிய, வர்க்க குணாம்சம் நீர்த்துப் போன சமூக ஆர்ப்பாட்டங்களை, #NuitDebout விமர்சனமின்றி ஊக்குவித்துக் கொண்டிருக்கிறன.
ஆளும் வட்டாரங்களிடம் கொள்கை மாற்றம் கோரி இவர்கள் விடுக்கக் கூடிய தார்மீகக் கோரிக்கைகளில் ஏதேனும் எதிர்ப்பு உள்ளடக்கம் கொஞ்சம் இருந்திருக்குமாயின், அது மக்களில் மேலிருக்கும் 10 சதவீதத்தில் இடம் பெற்றிருக்கக் கூடிய அத்துடன் பெடெமோஸ் மற்றும் சிரிசா போன்ற கட்சிகளில் மேலாதிக்கம் செலுத்துகின்ற உயர்-நடுத்தர-வர்க்க அடுக்குகளின் சமூக நலன்களுக்கு சாதகமான ஒரு மாற்றத்திற்கான நெருக்குதலாகவே இருந்து வந்திருக்கிறது. இக்கட்சிகள் தொழிலாள வர்க்கத்திற்கு ஆழமான குரோதம் கொண்டவையாகவே நிரூபணமாகியுள்ளன.
இன்டிக்னாடோஸ் ஆர்ப்பாட்டங்களில் ஸ்பெயினின் நகர்ப்புற இளைஞர்களது கணிசமான அடுக்குகள் பங்குபற்றின என்ற அதேநேரத்தில், அவற்றில் எந்த அரசியல் முன்னோக்கும் இருக்கவில்லை, சோசலிச நனவுக்கான எந்த போராட்டமும் இருக்கவில்லை, தொழிலாளர்களிடையே ஆதரவை அணிதிரட்டுவதற்காய் எந்தப் போராட்டமும் இருக்கவில்லை. விளைவு, இந்த இயக்கத்தின் பொருட்சூழலில் தொழிலாளர் போராட்டங்களது எந்த முக்கியமான வேலைநிறுத்த இயக்கமும் அபிவிருத்தி காணவில்லை. மேலாதிக்கம் செலுத்திய அரசியல் சக்திகள் —NPAயின் ஸ்பெயின் இணைப்பான முதலாளித்துவ விரோத இடது (IA) போன்றவை— இந்த இயக்கத்தை துரிதமாக தொய்வடையச் செய்து ஒரு சில மாதங்களிலேயே அதனை முடித்துவிட முடிந்தது.
பெருமளவில் மாட்ரிட்டின் Complutense பல்கலைக்கழகத்தில் இருந்து எடுக்கப்பட்டு ஊடக அறிஞரான பப்லோ இக்லெஸியாஸ் (Pablo Iglesias) ஆல் தலைமை கொடுக்கப்பட்ட ஸ்ராலினிச பேராசிரியர்கள் மற்றும் ஊடக வருணனையாளர்களின் ஒரு சூழ்ச்சிக்குழுவுடன் சேர்ந்து வேலை செய்து, அவர்கள் இறுதியில் 2014 இல் பெடேமோஸ் கட்சியை உருவாக்கினர். இது ஆதரவு கோரி இராணுவப் படைகள் மற்றும் வணிக சமுதாயத்தின் தோள்களில் சாய்கின்ற ஒரு பிற்போக்குத்தனமான, தொழிலாள-வர்க்க விரோத கட்சியாக நிரூபணமானது. இப்போது அது ஸ்பெயினில் சோசலிஸ்ட் கட்சிக்கும் வலது-சாரி குடிமக்கள் கட்சிக்கும் இடையிலான ஒரு சிக்கன நடவடிக்கை சார்பு கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்க பேச்சுவார்த்தையில் இருக்கிறது.
ஏதென்ஸில் உள்ள Syntagma சதுக்கத்தில் நடந்த Aganaktismeni ஆர்ப்பாட்டங்களை பொறுத்தவரை 2012 கிரேக்கத் தேர்தலில் சிரிசா பெற்ற சாதனை வெற்றிக்கு —இது சிரிசாவை புதிய ஜனநாயகத்திற்கான (ND) பிரதான எதிர்க்கட்சியாக ஸ்தாபிக்க வழிவகுத்து அதன்மூலம் 2015 ஜனவரி தேர்தல்களில் அது வெற்றி பெற்று அதிகாரத்தில் அமர்வதற்கான பாதையில் அதனை நிறுத்தியது— இவை பாதையமைத்து தந்தன. இந்த குட்டி-முதலாளித்துவ, போலி-இடது கட்சிகளின் பிற்போக்குத்தனமான பாத்திரத்தின் விடயத்தில் இன்னும் அதிகமான சூடுபட்டுக் கொண்ட அனுபவமாக இது நிரூபணமானது.
அதிகாரத்திற்கு வந்ததும், சிரிசா சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருகின்ற தனது தேர்தல் வாக்குறுதிகளைக் காட்டிக்கொடுத்தது. நேர்மாறாய் அது, அதிகாரத்திற்கு வந்த சில வாரங்களிலேயே ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கை உடன்பாட்டை நீட்டித்ததோடு, அதன்பின் சிக்கன நடவடிக்கை குறித்த கருத்துக்கணிப்பில் கிட்டிய மிகப்பெருவாரியான “வேண்டாம்” வாக்களிப்பை நசுக்கி விட்டு மிருகத்தனமான புதிய சிக்கன நடவடிக்கைத் தொகுப்பை திணித்தது. சிரிசா இப்போது ஓய்வூதியங்களிலான பில்லியன் கணக்கிலான யூரோக்களை வெட்டுவதற்கு திட்டங்கள் வகுத்துக் கொண்டிருப்பதோடு, மத்திய கிழக்கின் அகதிகளை பாரிய எண்ணிக்கையில் துருக்கிக்கு திருப்பியனுப்பும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கையையும் ஆதரித்துக் கொண்டிருக்கிறது.
செய்தித்தாள்களில் #NuitDebout இயக்கத்தை இன்டிக்னாடோஸ் உடன் ஒப்பீடு செய்கின்ற கட்டுரைகள் நிரம்பி வழிகின்ற போதிலும், பத்தாயிரக்கணக்கில் ஸ்பெயினின் இளைஞர்களை 2011 மே 15 அன்று Puerta del Sol சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்தை தொடங்க தள்ளிய நிகழ்வினைக் குறித்து எதுவொன்றும் விவாதிக்கப்படவில்லை. எகிப்தில் தொழிலாள வர்க்கத்தின் பாரிய புரட்சிகரப் போராட்டங்களைத் தொடங்கி, அதன்பின், வெறுப்பைச் சம்பாதித்திருந்த ஏகாதிபத்திய ஆதரவு ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கை 2011 பிப்ரவரியில் பதவியில் இருந்து அகற்றிய கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்க ஆக்கிரமிப்புப் போராட்டமே அந்த நிகழ்வு.
ஊடகங்களும் NPA மற்றும் DAL போன்ற குட்டி-முதலாளித்துவக் குழுக்களும் தஹ்ரீர் சதுக்கம் குறித்து மவுனம் சாதிப்பதற்கான காரணங்களை புரிந்து கொள்வது அத்தனை கடினமானதல்ல. அனைத்துக்கும் முதலில், எகிப்தில் NPA இன் பாத்திரம், அதன் எதிர்ப்புரட்சிகர, தொழிலாள-வர்க்க விரோதமான பாத்திரத்தை —முதலில் ஜனாதிபதி தேர்தலில் வலதுசாரி இஸ்லாமியவாத வேட்பாளரான முகமது முர்ஸியை ஆதரித்தது, பின் முர்ஸியைக் கவிழ்ப்பதற்கு இராணுவம் தயாரித்த ஒரு கவிழ்ப்பு நடவடிக்கைக்கு கருவியாக இருந்த Tamarod (”கிளர்ச்சி”) இயக்கத்தை ஆதரித்தது— அம்பலப்படுத்துவதாய் இருந்தது.
இவ்வாறாக முர்ஸியின் வெளியேற்றத்தில் இருந்து எழுந்த தளபதி அப்தெல் பத்தாஹ் அல்-சிசி (Abdelfattah al-Sisi) இன் இராணுவ சர்வாதிகாரம் அதிகாரத்தைப் பிடிப்பதில் அவர்கள் உடந்தையாக இருந்தனர்.
எல்லாவற்றுக்கும் மேல், எகிப்து நிகழ்வுகள் குறித்து அவர்கள் மவுனம் சாதிப்பது ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் குறித்து அதிகரித்துச் செல்லும் அச்சத்தின் காரணத்தினால் தான். பிரான்சில் இருக்கின்ற NPA மற்றும் அதுபோன்ற போலி-இடது அமைப்புகள் பிரான்சின் சிரிசா அல்லது பிரான்சின் பெடெமோஸ் போன்ற ஒருவகையான பிற்போக்குத்தனமான குட்டி-முதலாளித்துவ மறுகுழுவாக்கத்தில் பங்குபெற மிகுந்த ஆர்வம் காட்டுகின்ற அதேவேளையில், சொந்த நாட்டில் தொழிலாள வர்க்கத்தில் இருக்கக் கூடிய எதிர்ப்புணர்வைக் கண்டு அவை மிரட்சியடைகின்றன.
சிக்கன நடவடிக்கை, போலிஸ் ஒடுக்குமுறை மற்றும் போர் ஆகிய சோசலிஸ்ட் கட்சி இன் கொள்கைகள் குறித்தும், ஒரு “சோசலிஸ்ட்” கட்சியாக அது கூறிக் கொள்வதின் வெளிப்பட்ட மோசடியான மற்றும் திவாலான தன்மை குறித்தும் தொழிலாளர்களிடையே வெடிப்பானதொரு அதிருப்தி நிலவுகிறது. தொழிலாள வர்க்கத்தில் எதிர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடக் கூடிய கணிசமான ஆதரவுடனான ஒரு அமைப்பு இருந்திருந்தால், முபாரக் சென்ற அதே பாதை சோசலிஸ்ட் கட்சி இன் ஜனாதிபதியான பிரான்சுவா ஹாலண்டுக்கு எளிதாக காட்டப்பட்டிருக்கும்.
ஆகவே தான், ஊடகங்களும் NPA போன்ற சோசலிஸ்ட் கட்சி இன் போலி-இடது கூட்டாளிகளும் எந்த முன்னோக்குமற்ற இன்னுமொரு குட்டி-முதலாளித்துவ இயக்கம் என்ற கிழிந்த பதாகையை ஊக்குவிக்க முனைகின்றனர். தொழிலாளர்கள் தொழிற்சாலைகளை ஆக்கிரமிப்பதை எப்பாடுபட்டாவது தவிர்க்க அவர்கள் பிரயாசை காட்டுவதால், நடுத்தர வர்க்க இளைஞர்கள் சதுக்கங்களை ஆக்கிரமிப்பதை ஊக்குவிக்க அவர்கள் மகிழ்ச்சி காட்டுகின்றனர்.
இந்த இயக்கத்தை ஊக்குவிக்கின்ற சக்திகள், ஒரு வெற்று ஆர்ப்பாட்ட இயக்கத்திற்கும் சோசலிஸ்ட் கட்சி இன் அரசியல் சுற்று வட்டத்திற்கும் எதிராய் இளைஞர்களின் அதிகம் அரசியல் விழிப்புணர்வு கொண்ட பிரிவுகளிடையே நிலவுகின்ற எதிர்ப்பையும் அவநம்பிக்கையையும் குறித்து நன்கறிந்து வைத்துள்ளன. Libération தினசரியைப் போன்ற #NuitDebout இயக்கத்தின் உற்சாகமான ஆதரவாளர்களும் கூட இந்த இயக்கத்தின் கோரிக்கைகள் அரசியல்ரீதியாக ஒட்டாதவையாக இருக்கின்றன, அவற்றில் எதுவும் தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை சமூக நலன்களை பேசுபவையாக இல்லை என்பதை ஆரம்பத்தில் இருந்தே ஒப்புக்கொள்ளத் தள்ளப்பட்டிருக்கின்றன.
அது பின்வருமாறு எழுதியது: “Puerta del Sol சதுக்கத்தை இன்டிக்னாடோஸ் ஆக்கிரமித்ததை போல “#NuitDebout குடியரசு சதுக்கத்தை ஆக்கிரமிக்கிறது. ‘நாம் ஏதோ ஒன்று செய்கிறோம்’ என்பது ‘சாத்தியமானதே’ என்கிறார் 2016 இன் திடீர் இக்லாஸியாஸ் ஆன பிரெடரிக் லோர்டோன். அல்லாமல் இந்த இயக்கம் 1968 இன் ஒரு மலிவுப் பதிப்பாக, தோன்றிய வேகத்தில் அதன் வெளிப்படையான விசித்திரப்புதிர்களுக்கு (நாம் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை, ஆனால் வீதி நடைபாதையில் சந்திக்கிறோம்; நமக்குத் தலைவர்கள் வேண்டாம், ஆனால் இயக்கத்தின் இயக்கவியல் என்னை மேடைக்குத் தள்ளுகிறது; எதனையும் கோரிக்கை வைக்கவில்லை ஆனால் நமது உரிமைகளுக்காகப் போராடுகிறோம், இதுபோன்றவை) பலியாவதும் சாத்தியமே. ஆனால் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம், ஏன் இதனை முயற்சி செய்து பார்க்கக் கூடாது என்ற இடத்தில், இல்லையா?”
தொழிலாள வர்க்கத்திற்கு அவசியமானது “1968 இன் மலிவுப் பதிப்போ” அல்லது தொழிலாளர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதலை தொடர்வதற்கு சிரிசா போன்றதொரு இன்னுமொரு பிற்போக்குத்தனமான போலி-இடது கட்சியோ அல்ல. பிரான்சில் சமூக சிக்கன நடவடிக்கைகளையும் சோசலிஸ்ட் கட்சியையும் எதிர்க்க முனைகின்ற இளைஞர்கள் #NuitDebout ஐ சோசலிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய சிடுமூஞ்சி சூழ்ச்சியாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு அரசியல் திசைதிருப்பல் மற்றும் பொறி என்பதை உணர்ந்து நிராகரிக்க வேண்டும். சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் இந்த ஒட்டுமொத்தமான பிற்போக்குத்தனமான போலி-இடது பாதுகாவலர்களது சதுப்பிற்கு எதிரான போராட்டத்தில் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காகப் போராடுவதே முன்னேறிச் செல்வதற்கான வழியாகும்.