Print Version|Feedback
NATO-Russia meetings resume amid fears of military clash in Europe
ஐரோப்பாவில் இராணுவ மோதல் குறித்த அச்சங்களுக்கு மத்தியில் நேட்டோ-ரஷ்யா சந்திப்புகள் மீண்டும் ஆரம்பிக்கின்றன
By Alex Lantier
21 April 2016
நேட்டோ நாடுகளின் மற்றும் ரஷ்யாவின் தூதர்கள் நேட்டோ-ரஷ்யா குழுவின் சந்திப்பிற்காக நேற்று புரூசெல்ஸில் ஒன்றுகூடினார்கள். இக்கூட்டம், கியேவில் நேட்டோ-ஆதரவிலான பதவிக்கவிழ்ப்பு சதி மற்றும் அதை தொடர்ந்து உக்ரேனில் நடந்த பிரச்சினைகளால் பெப்ரவரி 2014 இல் இரத்து செய்யப்பட்டிருந்தது.
கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ இராணுவத்தின் நிலைநிறுத்தல்களும், அதன் விளைவாக நேட்டோ மற்றும் ரஷ்ய படைகள் மிக நெருக்கமாக அருகருகே வந்திருப்பதும் ஓர் இராணுவ மோதலுக்கு இட்டுச் சென்று, முழுமையான போரைத் தீவிரப்படுத்தக்கூடுமென்ற அச்சமே, இந்த குழுவின் கூட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இட்டு சென்றுள்ள முக்கிய கவலையாகும். இக்கூட்டம் பல தொடர்ச்சியான சம்பவங்களுக்குப் பின்னர் நடந்துள்ளது. அத்தகைய சம்பவங்களின் போது, பால்டிக் கடல் பகுதியில் ரஷ்யாவிற்கு அண்மையில் பறந்து கொண்டிருந்த உளவுபார்ப்பு விமானத்திற்கு மிக அருகாமையில் அல்லது நேட்டோ போர்க்கப்பல்களுக்கு மிக அருகாமையில் ரஷ்ய போர்விமானங்கள் பறந்து சென்றன.
இக்கூட்டத்திற்குப் பின்னர் நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்ரொல்டென்பேர்க் அறிவிக்கையில், “நான் சற்று முன்னர் தான் நேட்டோ-ரஷ்ய குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டேன். நமது எல்லோருடைய நலனுக்காகவும் அரசியல்ரீதியான பேச்சுவார்த்தைகளுக்குரிய அரசியல் வழிமுறைகளைத் திறந்து விட நாங்கள் அனைவரும் ஒப்புக்கொண்டோம்,” என்றார்.
ஸ்ரொல்டென்பேர்க் தகவல்படி, “உக்ரேன் மற்றும் அதனைச் சூழ்ந்த நெருக்கடி,” “பிராந்திய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உட்பட ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலைமை," மற்றும் "இராணுவ நடவடிக்கைகள்" சம்பந்தப்பட்ட "வெளிப்படைத்தன்மை மற்றும் அபாய குறைப்பு" உள்ளடங்கிய பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.
“நேட்டோ கூட்டாளிகள், கடந்த வார பால்டிக் பிரதேச சம்பவங்களில் ரஷ்ய இராணுவ விமானம் சம்பந்தப்பட்டிருந்ததைக் குறித்த கவலையை வெளியிட்டனர். வெளிப்படை தன்மை மற்றும் முன்கூட்டியே அறியும் சாத்தியக்கூறை அதிகரிக்க அனைவரும் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதைப் பரிசீலிப்பது முக்கியமாகும்,” என்றவர் விவரித்தார்.
படுபயங்கர விளைவுகளுடன் ஓர் இராணுவ மோதலுக்கு இட்டுச் செல்லும் பரந்த மோதல் சுலபமாக வெடிக்கக்கூடிய நிலைமைக்கு கியேவ் பதவிக்கவிழ்ப்பு சதி சர்வதேச பதட்டங்களைத் தீவிரப்படுத்திய பின்னர், ஐரோப்பாவில் நேட்டோ பொறுப்பற்ற கொள்கைகளைப் பின்பற்றியுள்ளது என்பதையே ஸ்ரொல்டென்பேர்க் இன் கருத்துக்கள் சுற்றிவளைத்து ஒப்புக் கொள்கின்றன.
கடந்த ஆண்டு அந்த அபாயத்திலிருந்து அடுத்ததாக நடக்கவிருப்பதை தெளிவுபடுத்தியது. அப்போது, சிரியா மீது ஒரு நடவடிக்கைக்காக பறந்து கொண்டிருந்த ஒரு ரஷ்ய குண்டுவீசி போர்விமானத்தைத் துருக்கிய போர்விமானங்கள் சுட்டு வீழ்த்தின. கடந்த 60 ஆண்டுகளில் கொரிய போருக்குப் பின்னர் முதல்முறையாக ஒரு நேட்டோ அங்கத்துவ நாடு ஒரு ரஷ்ய போர்விமானத்தை தகர்த்தது இதுவேயாகும்.
எவ்வாறிருந்த போதினும் ஐரோப்பா மற்றும் ஒட்டுமொத்த உலகமும் முகங்கொடுக்கும் அளப்பரிய அபாயங்களுக்கு இடையே, நேட்டோ-ரஷ்ய குழுவின் கூட்டம் பிரதான சக்திகளுக்கு இடையிலான பதட்டங்களைத் தணிக்க எந்த திடமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கே ரஷ்யாவுடன் "நடைமுறை கூட்டுறவுக்கு திரும்ப" முடியாது என்பதை ஸ்ரொல்டென்பேர்க் உறுதிப்படுத்தினார், “நேட்டோவும் ரஷ்யாவும் ஆழ்ந்த மற்றும் நீடித்த உடன்பாடின்மைகளைக் கொண்டுள்ளன. இன்றைய கூட்டம் அதை மாற்றிவிட வில்லை,” என்றவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு இடையே ஒரு தொலைபேசி உரையாடல் நடந்து இரண்டு நாட்களுக்குப் பின்னர் நடந்த இக்கூட்டம், வடக்கு சிரியாவில் சாத்தியமான ஒரு புதுப்பிக்கப்பட்ட தாக்குதலில் ரஷ்ய பீரங்கிப்படை நிலைநிறுத்தப்பட்டிருப்பதாக வந்த செய்திகளை அடுத்து, அமெரிக்க அதிகாரிகளால் அது "கடுமையாக" விமர்சிக்கப்பட்டது.
இச்சூழ்நிலையில் மூனிச் பாதுகாப்பு மாநாட்டின் தலைவரும் ஜேர்மன் இராஜாங்க அதிகாரியுமான வொல்ஃப்காங் இஸ்சிங்கராலும் Deutsche Welle வானொலியுடனான நேர்காணல் ஒன்றில் இராணுவ தீவிரப்படல் அபாயம் வலியுறுத்தப்பட்டது. நேட்டோ-ரஷ்ய குழுவின் கூட்டங்களை இரத்து செய்தமை நேட்டோவின் தவறா என்று வினவிய போது, அக்கூட்டங்களை இரத்து செய்வதற்கான முடிவு "சிறந்ததொரு இராஜாங்க நடவடிக்கை" கிடையாது என்று பதிலளித்தார். இப்போதைய சூழல், "பனிப்போர் முடிந்ததற்குப் பிந்தைய மிகவும் அபாயகரமான" சூழல் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
“கடந்த சில நாட்களில், பால்டிக் கடலில் ரஷ்ய இராணுவ போர்விமானம் மற்றும் அமெரிக்க போர்கப்பல் அத்துடன் அமெரிக்க உளவுபார்ப்பு விமானத்திற்கு இடையே இரண்டு 'நெருக்கமான எதிர்கொள்ளல்கள்' என்றழைக்கப்படுபவை நடந்துள்ளன. அத்தகைய சூழல்களில், ஒரேயொரு தவறான நடவடிக்கை கூட ஒரு கணிப்பிடமுடியாத தீவிரப்படலுக்கு வேகமாக இட்டு செல்லக்கூடும்,” என்றவர் விளக்கமளித்தார்.
நேட்டோ-ரஷ்யா குழு மீண்டும் கூட வேண்டுமென இஸ்சிங்கர் வலியுறுத்தினார். “மிக அவசியமான, 24/7 இராணுவ நெருக்கடி தடுப்பு ஏற்பாட்டை நிறுவுவதே பேச்சுவார்த்தையின் முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டுமென நான் கூறுவேன். மேற்கின் அதிகாரிகளும் மற்றும் ரஷ்ய அதிகாரிகளும் இதுபோன்ற அண்மித்த தவறுதல்களையும், மற்றும் அவை அதிகரிக்கச் செய்யும் சாத்தியமான தவறான புரிதல்களையும் தவிர்க்க வேண்டும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
கடந்த பல ஆண்டுகளாக ரஷ்யா மற்றும் சீனாவுடன் ஆக்ரோஷமான பதட்டங்களைத் தூண்டிவிடுவதற்காக நேட்டோ அதிகாரங்களால் பின்பற்றப்பட்ட ஆத்திரமூட்டும் கொள்கை, அணுஆயுதமேந்திய சக்திகளுக்கு இடையிலான ஓர் உலக போரின் விளிம்பில் உலகை நிறுத்தி உள்ளது என்பதையே அத்தகைய கருத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன. இஸ்சிங்கரின் கருத்துக்கள், கியேவ் பதவிக்கவிழ்ப்பு சதியையும் மற்றும் அதன் விளைவாக உக்ரேனில் நடந்த நேட்டோ-ரஷ்ய பினாமி போரையும், இந்த ஒட்டுமொத்த மோதலுக்கும் ரஷ்ய ஆக்கிரமிப்புத்தன்மையைப் பொய்யாக காரணங்காட்டியதையும் குறித்த உத்தியோகப்பூர்வ விபரங்களைக் குறைத்துக் காட்டுகின்றன. கியேவ் பதவிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் தொடர்புகளை முறித்துக் கொண்டது, கிரெம்ளின் அல்ல, நேட்டோ ஆகும் என்பதை அவை தெளிவுபடுத்துகின்றன.
எவ்வாறிருந்த போதினும், வாஷிங்டன் மற்றும் பேர்லின் தலைமையில் நேட்டோ அதிகாரங்கள் உக்ரேன் விவகாரத்தில் மொத்தத்தில் ரஷ்யாவுடன் ஒரு மோதல் கொள்கைக்குப் பின்னால் இணைந்திருந்தன. அந்த மோதல் தீவிரமடையாமல் செய்வதற்கான நேட்டோவின் மட்டுப்படுத்தப்பட்ட முயற்சிகளில், நேட்டோவே கூட ஆழமாக பகிரங்கமாக பிளவுபட்டுள்ளது. முக்கிய அரசாங்கங்கள் அதுவும் குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய அரசாங்கங்கள் கடுமையான ரஷ்ய-விரோத போக்கிற்கு அழுத்தமளிக்கின்றன.
போலந்து பாதுகாப்பு அமைச்சர் அன்தோனி மாசிரேவிச், இவரது அரசாங்கம் ஜூலையில் வார்சோவில் நடக்கவுள்ள நேட்டோ உச்சிமாநாட்டில் ரஷ்யாவை இலக்கில் வைத்து கிழக்கு ஐரோப்பாவில் தொடர்ந்து நேட்டோ இராணுவ தீவிரப்படுத்தலை கோரவிருப்பதாக அறிவித்துள்ள நிலையில், இவர் ரஷ்ய எல்லைகளுக்கு அருகாமையில் நேட்டோ துருப்புகளைக் கூடுதலாக பலப்படுத்துவதற்கு அழைப்புவிடுக்கிறார். “இதுவரையில், எல்லா ரஷ்ய நடவடிக்கையும் ஆக்கிரமிப்புக்கான திட்டமிட்ட தயாரிப்புக்கே சான்று பகர்கின்றன,” என்று Rzeczpospolita நாளிதழ் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். “அதைக் குறித்து பகிரங்கமாக பேச வேண்டிய நேரமிது,” என்றார்.
பால்டிக் குடியரசுகள், போலந்து மற்றும் கனடாவின் எதிர்ப்பிற்கு மத்தியிலும் ஜேர்மனியும் பிரான்சும் நேட்டோ-ரஷ்யா குழுவின் கூட்டத்திற்கு அழுத்தமளித்தமாக Le Monde செய்தி குறிப்பிட்டது. அது மேற்கொண்டு கூறுகையில், “ஒருசில வாரத்திற்கு முன்பு வரையில் கற்பனையும் செய்து பார்க்க முடியாததாக இருந்த ஒரு சம்பவம், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரியின் மிகவும் சமரசமான மனோபாவத்தால் இறுதியில் யதார்த்தமாக்கப்பட்டு உள்ளது,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது.
பதட்டங்களை தணிக்க நிறைய பேச்சுவார்த்தைகளுக்கு அவர்கள் தயாராக இருப்பதாகவும், ஆனால் ரஷ்யாவை அச்சுறுத்தும் வகையில் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ அதன் இராணுவ பிரசன்னத்தைத் தீவிரப்படுத்தும் வரையில் பதட்டங்கள் குறையாது என்றும் ரஷ்ய அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
“ரஷ்ய எல்லைகளில் இராணுவ நடவடிக்கைகளைக் குறைக்கும் நேட்டோவின் நிஜமான நகர்வுகள் இல்லாமல், நம்பிக்கை-உருவாக்கும் புதிய முறைமைகள் மீதான ஒரு மேலதிக பேச்சுவார்த்தை சாத்தியமே இல்லை,” என்று அந்த குழுவின் கூட்டத்திற்குப் புறப்பட்ட நேட்டிவிற்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் குருஷ்கோ தெரிவித்தார். “ரஷ்யாவை அச்சுறுத்துவதை அடிப்படையாக கொண்ட நேட்டோவின் கொள்கை மற்றும் இராணுவ திட்டமிடல், நம்பிக்கை-உருவாக்கும் முறைமைகளை உருவாக்கும் எந்தவொரு திட்டங்களுடனும் பொருந்தமாக இருக்காது,” என்றார்.
எவ்வாறிருந்த போதினும் ஆப்கானிஸ்தானில் அதன் பாதுகாப்பு படைகளுக்குப் பயிற்சியளிப்பதற்காக என்ற சாக்கில் அங்கே ஆயிரக் கணக்கான துருப்புகளை நிலைநிறுத்தும், அந்நாட்டிற்கான நேட்டோவின் "உறுதியான ஆதரவு" நடவடிக்கையை விரிவாக்குகின்ற ஒரு பிற்போக்குத்தனமான திட்டம் போன்ற, குறிப்பிட்ட முறைகள் மீதான கூட்டு ஒத்துழைப்புக்கு அது திறந்திருப்பதாக கிரெம்ளின் சுட்டிக்காட்டியது.