Print Version|Feedback
Indian elite welcomes deal to allow US military to use ports and bases
இந்திய துறைமுகங்கள் மற்றும் இராணுவத் தளங்களை அமெரிக்க இராணுவம் பிரயோகிக்க அனுமதிக்கும் உடன்பாட்டை இந்திய உயரடுக்கு வரவேற்கிறது
By Deepal Jayasekera
20 April 2016
அமெரிக்க இராணுவம் மீள்எரிபொருள் நிரப்புவதற்கும், பழுது பார்ப்பதற்கும் மற்றும் நிறுத்தி வைப்பதற்கும் உரிய இடமாக இந்திய விமானத் தளங்களை மற்றும் துறைமுகங்களை வழமையாக பிரயோகிக்க அனுமதிப்பதற்கு புது டெல்லி கோட்பாட்டுரீதியில் உடன்படுகிறது என்ற கடந்த வார அறிவிப்பை இந்திய உயரடுக்கு மனதார வரவேற்றுள்ளது.
ஒரே முக்கிய அதிருப்தி எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய ஸ்ராலினிச மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து (சிபிஎம்) வந்துள்ளது. அத்தகைய ஒரு உடன்படிக்கை இந்தியாவை அமெரிக்காவின் உத்தியோகப்பூர்வ இராணுவ கூட்டாளியாக்க வழிவகுக்கும் என்ற வெளிப்படையான புள்ளியை அவை குறிப்பிடுகின்றன, இது இந்திய முதலாளித்துவத்தின் "மூலோபாய சுய அதிகாரத்தை"—அதாவது அதன் சுதந்திர நடவடிக்கையை நெருக்கடிக்கு உள்ளாக்குமென அவை வாதிடுகின்றன.
அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் அஷ்டன் கார்ட்டரின் சமீபத்திய இந்திய விஜயத்தின் இறுதி நாளான ஏப்ரல் 12 அன்று ஒரு கூட்டு பத்திரிகையாளர் கூட்டத்தில், அவரும் அவரது இந்திய சமபலமான மனோகர் பாரிக்கரும் அறிவிக்கையில், புது டெல்லியும் மற்றும் வாஷிங்டனும் தளவாடங்கள் பரிவர்த்தனை புரிந்துணர்வு உடன்படிக்கையை (LEMOA) இறுதி செய்ய "கோட்பாட்டுரீதியில்" உடன்பட்டிருப்பதாக அறிவித்தனர்.
அத்தகைய ஒரு உடன்படிக்கை ஒரு தசாப்தமாக அல்லது அதற்கும் அதிகமான காலத்தில் அமெரிக்காவின் ஒரு பிரதான நோக்கமாக இருந்துள்ளது. இது சீனாவை மூலோபாயரீதியில் தனிமைப்படுத்த, சுற்றி வளைக்க மற்றும் அவசியமானால் அதற்கு எதிராக போர் தொடுக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உந்துதலில் இந்தியாவை ஒரு "முன்னிலை" நாடாக ஆக்குவதை நோக்கிய ஒரு பிரதான படியாகும்.
மே 2014 இல் பதவிக்கு வந்ததில் இருந்து, இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) தலைமையிலான அரசாங்கம் முன்பினும் அதிகமாக முழுமையாக அமெரிக்காவின் சீன-விரோத "ஆசிய முன்னெடுப்புக்குள்" ஒருங்கிணைந்துள்ளது.
"கடல் போக்குவரத்து பாதுகாப்புக்கும்" மற்றும் கிழக்கு ஆசியாவில் "சுதந்திர கடல் போக்குவரத்து" மற்றும் "விமான போக்குவரத்துக்கும்" சீனாவை ஒரு அச்சுறுத்தலாக சித்தரித்து, தென் சீனக் கடல் மீதான வாஷிங்டனின் ஆக்ரோஷமான தொனியையே பிரதம மந்திரி நரேந்திர மோடியும் அவரது அரசாங்கமும் மீண்டும் மீண்டும் கிளிப்பிள்ளையைப் போல கூறி வருகின்றனர். மோடி அரசாங்கம் அமெரிக்காவுடன் மற்றும் ஆசிய-பசிபிக், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் அதன் பிரதான கூட்டாளிகளுடனான இருதரப்பு மற்றும் முத்தரப்பு இராணுவ பாதுகாப்பு உறவுகளையும் அதிகரித்துள்ளது. இதில் வருடாந்தர இந்தோ-பசிபிக் கடற்படை பயிற்சியில் (மலபார் பயிற்சி) ஜப்பானை ஒரு பங்காளியாக ஆக்கியமை, மற்றும் இந்தோ-பசிபிக் "கடல் போக்குவரத்து பாதுகாப்பு பேச்சுவார்த்தையைத்" தொடங்கியமை ஆகியவையும் உள்ளடங்கும். இந்தியாவின் கிழக்கை நோக்கிய நடவடிக்கை (Act East) கொள்கையை (அதாவது தென்கிழக்கு ஆசியாவுடன் பொருளாதார மற்றும் இராணுவ-பாதுகாப்பு உறவுகளை அபிவிருத்தி செய்வதற்கான அதன் உந்துதலை) அமெரிக்காவின் "முன்னெடுப்பு" அல்லது "மீள்சமன்படுத்தலுடன்" ஒருங்கிணைக்கவும் மற்றும் இராணுவ தளவாட அமைப்புமுறைகளைக் கூட்டாக உற்பத்தி செய்வது மற்றும் கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கான வாஷிங்டனின் முன்வரலையும் பிஜேபி அரசாங்கம் ஆர்வத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்தியாவின் பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் எண்ணற்ற இராணுவ-மூலோபாய பகுப்பாய்வாளர்கள் அமெரிக்காவுடன் LEMOA உடன்படிக்கையை இறுதி செய்வதென்ற மோடி அரசாங்கத்தின் தீர்மானத்தைப் பாராட்டியுள்ளனர். அவர்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான ஒரு விரிவாக்கப்பட்ட இராணுவ-மூலோபாய பங்காண்மையானது பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு எதிராக இந்தியாவின் கரங்களைப் பலப்படுத்தும் என்றும் தெற்காசியா, இந்திய பெருங்கடல் மற்றும் அதற்கு அப்பாலும் அதன் வல்லரசாகும் அபிலாஷைகளைப் புது டெல்லி எட்டுவதற்கு உதவும் என்றும் வாதிடுகிறார்கள். அவர்கள் கூறியுள்ள ஒருசில ஆட்சேபணைகள், மத்தியக் கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் சட்டவிரோத போர்கள் நடத்துவதில் சர்வதேச சட்டத்தை அவமதிக்கும் அமெரிக்காவின் பொறுப்பற்ற நடவடிக்கைகளையோ அல்லது அணுஆயுத ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான அதன் பொறுப்பற்ற மூலோபாய நடவடிக்கைகளுடனோ சம்பந்தப்பட்டதில்லை. அதற்கு மாறாக அவர்களது கவலை எல்லாம், தசாப்தகாலமாக பாகிஸ்தான் இராணுவத்துடனான அமெரிக்காவின் பங்காண்மையின் மீதுள்ளது, பாகிஸ்தான் விடயத்தில் உண்மையில் வாஷிங்டன் இந்தியாவின் "கரங்களைச் சுதந்திரமாக விடாது" என்பதற்காக அவர்கள் சீறுகிறார்கள்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏப்ரல் 14 தலையங்கத்தில், “மூலோபாய மற்றும் இராணுவ விவகாரங்களில் அமெரிக்காவுடன் இன்னும் நெருக்கமாக ஈடுபடுவதற்கும் மற்றும் வேகத்தை அதிகரிப்பதற்கும் சரியாக முடிவெடுத்ததற்காக" மோடி அரசாங்கத்தைப் பாராட்டியது. “சமநிலைப்படுத்தும் நடவடிக்கை: அமெரிக்கா உடனான தளவாடங்களின் உடன்படிக்கை இந்தியாவின் மூலோபாய சுயஅதிகாரத்தை முடமாக்குவதைக் காட்டிலும் விரிவாக்குகிறது" என்று தலைப்பிடப்பட்ட அந்த தலையங்கம் ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் விமர்சனங்களுக்கு ஒரு தெளிவான மறுமொழியாக இருந்தது.
அரசாங்கத்திடமிருந்து அவர்களுக்கான வழிகாட்டலைப் பெற்று, டைம்ஸ் ஆஃப் இந்தியா தலையங்க குழு LEMOA இன் முக்கியத்துவம் மற்றும் தர்க்கத்தைக் குறைத்துக்காட்ட முயன்றது. அது "அமெரிக்க துருப்புகளை இந்திய மண்ணில் நிலைநிறுத்துவதை உள்ளடக்கியதல்ல" என்ற அஷ்டன் கார்ட்டரின் கூற்றை மீண்டும் வலியுறுத்திய அது, அதேவேளையில் அவை நிலைநிறுத்தப்படலாம் என்றவர் ஒப்புக் கொண்டதை உதறிவிடுகிறது.
மிக முக்கியமாக, தளிர்விட்டுவரும் இந்தோ-அமெரிக்க இராணுவ-மூலோபாய கூட்டணியின் உண்மையான இலக்காக சீனாவை அடையாளம் காண்பதில் டைம்ஸ் மிகவும் ஒளிவுமறைவின்றி இருந்தது. அமெரிக்காவுடனான நெருக்கமான பங்காண்மையானது, "சீனா இந்திய பெருங்கடலில் ஒரு கடல்போக்குவரத்து சக்தியாக வளர்வதற்கு ஏற்கனவே முயற்சித்து வருகின்ற நேரத்தில், இந்தியாவிற்குத் தவிர்க்கவியலாத நிர்பந்தமாகும்" என்றது வாதிட்டது. “சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் 65 சதவீதம் இந்திய பெருங்கடல் வழியாக கடந்து செல்கின்றன. இப்பகுதியில், முக்கியமாக மலாக்கா ஜலசந்தியில், இந்தியா கடல் போக்குவரத்து மேலாதிக்கத்தைப் பேணுவது மத்திய காலத்திற்கு இந்தியாவின் மூலோபாய சுயஅதிகாரத்தைப் பேணுவதற்கு முக்கியமாகும்,” என்றது தொடர்ந்து குறிப்பிட்டது.
சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு இந்திய பெருங்கடல் மற்றும் மலாக்கா ஜலசந்தி முக்கியமானது என்ற குறிப்பானது, சீனாவுடனான ஒரு போர் நடவடிக்கையில் அல்லது போர் நெருக்கடி சமயத்தில் மலாக்கா ஜலசந்தி போன்ற முக்கிய இந்திய பெருங்கடலின் திணறடிக்கும் முனைகளைக் கைப்பற்றுவதன் மூலமாக சீனா மீது ஒரு பொருளாதார முற்றுகையைத் திணிப்பதற்கான வாஷிங்டனின் திட்டங்களுடன், இந்திய உயரடுக்கு, முழுமையாக இந்திய மக்களின் முதுகுக்குப் பின்னால், எந்தளவிற்கு அணி சேர்ந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
இந்திய மூலோபாய பகுப்பாய்வாளர் சி. ராஜமோகன் இந்தியன் எக்ஸ்பிரஸில் பிரசுரித்த ஒரு கருத்துரையில், இந்து மேலாதிக்க பிஜேபி தலைமையிலான அரசாங்கம் “அமெரிக்காவுடன் வெளிப்படையாக சர்ச்சைக்குரிய உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திடும் தன்னம்பிக்கை" கொண்டிருப்பதற்காக அதை பாராட்டினார், அதேவேளையில் "அமெரிக்காவுடன் ஒரு நியாயமான ஒளிவுமறைவற்ற உடன்படிக்கையைக் 'கோட்பாட்டுரீதியில்' முடிவெடுக்க" இந்தியா "ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலம்" எடுத்ததற்காக அவர் வருத்தப்பட்டார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவைப் போலவே, மோகனும் இந்தியா தன்னைத்தானே இந்தியப் பெருங்கடல் சக்தியாக நிறுவிக் கொள்வதற்கான முக்கியத்துவம் மீது கவனத்தைக் குவித்திருந்தார்—இந்த நோக்கத்திற்கு, ஜோர்ஜ் டபிள்யு புஷ் மற்றும் ஒபாமா இருவரின் கீழ், வாஷிங்டன் மீண்டும் மீண்டும் அமெரிக்க ஆதரவை அறிவித்துள்ளது. இந்திய படைகளும் அமெரிக்க இராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதற்குப் பரஸ்பர உரிமைகளை வழங்கும் LEMOA உடன்படிக்கை, “இந்தியப் பெருங்கடல் மற்றும் அதற்கு அப்பாலும் புது டெல்லி அதன் பரந்து விரிந்த நலன்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கும் போது அத்தருணத்தில் துணைகண்டத்தின் கடல்களிலிருந்து வெகுதூரத்தில் செயல்பட வேண்டியிருந்தால், இந்திய இராணுவப் படைகளுக்கு, குறிப்பாக கடற்படைக்கு உதவியாக இருக்கும்" என்று மோகன் குறிப்பிட்டார்.
மூத்த காங்கிரஸ் கட்சி தலைவரும், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் 2006-2014 இல் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவருமான ஏ.கே. அந்தோணி, LEMOA இல் கையெழுத்திடுவதென்ற மோடி அரசாங்கத்தின் தீர்மானம் “இந்தியாவின் வெளியுறவு கொள்கை மற்றும் மூலோபாய சுயஅதிகார சுதந்திரம் முடிவுறுவதன் தொடக்கம்” என்றும், “ஒரு பேரழிகரமான தீர்மானம்” என்றும் வரையறுத்தார்.
இந்த உடன்படிக்கை படிப்படியாக அமெரிக்கா-தலைமையிலான இராணுவ அணிக்குள் இந்தியா இணைவதில் போய் முடியுமென்று அவர் எச்சரிக்கிறார். பாதுகாப்பு மந்திரியாக அவரது நீண்ட பதவி காலத்தின் போது அந்தோணி இந்த தளவாட பரிவர்த்தனை ஒத்துழைப்பு உடன்படிக்கை மீது அமெரிக்காவுடன் நீண்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவராவார், பின்னர் இறுதியில் அவற்றை புறக்கணித்தார், ஏனென்றால் அவரும் இராணுவ-பாதுகாப்பு ஸ்தாபகத்தின் முக்கிய பிரிவுகளும் அது இந்தியாவை வாஷிங்டனின் மூலோபாய நிகழ்ச்சிநிரலுக்குப் பின்னால் அணிதிரட்டுமென்ற தீர்மானித்திற்கு வந்தனர். அவ்விதத்தில் LEMOA இன் தாக்கங்களைக் குறித்தும், அதை பிரயோகித்து இந்தியாவை சீனாவிற்கு எதிரான அமெரிக்க-தலைமையிலான இராணுவ கூட்டணிக்குள் இழுக்கும் வாஷிங்டனின் திட்டங்கள் குறித்தும் அந்தோணிக்கு நன்கு பரிச்சயம் உண்டு.
ஸ்ராலினிச சிபிஎம், ஏப்ரல் 13 இல் பிரசுரித்த ஒரு பொலிஸ்பீரோ அறிக்கையில் குறிப்பிடுகையில், “இந்திய கடற்படை மற்றும் விமானப்படை தளங்களின் அடிப்படை வசதிகளை அமெரிக்க இராணுவப் படைகள் பயன்படுத்த அனுமதிக்க ஒப்புக் கொண்டதன் மூலமாக மோடி அரசாங்கம் அமெரிக்காவுடன் இராணுவ கூட்டுறவை ஆழப்படுத்தும் அபாயகரமான படியை எடுத்துள்ளது,” என்று குறிப்பிட்டது. “பாதுகாப்பு அமைச்சர் கூறுவதைப் போல கிடையாது, அமெரிக்க கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கான மீள்எரிபொருள் நிரப்புவதற்கும், பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு வசதிகளுக்கும் இந்திய மண்ணில் வழமையாக அமெரிக்க இராணுவப் படை சிப்பாய்களை நிலைநிறுத்த வேண்டியிருக்கும்,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது.
“தொலைதொடர்பு மற்றும் தகவல் பாதுகாப்பு புரிந்துணர்வு உடன்படிக்கை (CISMOA) மற்றும் அடிப்படை பரிவர்த்தனை மற்றும் கூட்டுறவு உடன்படிக்கை (BECA) ஆகிய ஏனைய இரண்டு உடன்படிக்கைகள்" பரிசீலனையில் இருப்பதாக இந்திய பாதுகாப்பு மந்திரி பாரிக்கர் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி, சிபிஎம் தொடர்ந்து குறிப்பிடுகையில், “இவை இந்திய ஆயுத படைகளின் கட்டளையகம் மற்றும் கட்டுப்பாட்டு உள்கட்டமைப்பை அமெரிக்க இராணுவப் படைகளுடன் ஒருங்கிணைக்கும். இவ்வாறு செய்வதன் மூலமாக, பிஜேபி அரசாங்கம் கோட்டைக் கடந்து செல்கிறது, இது சுதந்திரத்திற்குப் பின்னர் வேறெந்த அரசாங்கமும் செய்திராததது—இந்தியாவை முழுமையாக அமெரிக்காவின் முழு அளவிலான இராணுவக் கூட்டாளியாக மாற்றுகிறது,” என்றது.
LEMOA ஐ எதிர்ப்பதில் காங்கிரஸ் கட்சியும் ஸ்ராலினிஸ்டுகளும், இந்திய உயரடுக்கினது பிரிவுகளின் கவலைகளுக்குக் குரல் கொடுக்கின்றனர். ஷிங்டனுடன் மிகவும் நெருக்கமான ஒரு மூலோபாய கூட்டணி இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் புவிசார் மூலோபாய நலன்களுக்குக் குழிபறிக்குமென இவர்கள் கருதுகிறார்கள்.
இவர்களது எதிர்ப்புக்கும் உண்மையான ஏகாதிபத்திய-எதிர்ப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போருக்கும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூறையாடும் நடவடிக்கைகளுக்கும் ஆழ்ந்த எதிர்ப்பைக் கொண்டுள்ள தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களிம் மீது எப்படி அரசியல் கட்டுப்பாட்டைப் பேணுவது என்பது உட்பட, முழுமையாக அவர்களது எதிர்ப்பு, இந்திய முதலாளித்துவ வர்க்க நலன்களை எவ்வாறு சிறப்பாக முன்னெடுப்பது என்பதை சுற்றியே சுழல்கிறது.
காங்கிரஸ் கட்சி மற்றும் ஸ்ராலினிசவாதிகள் இப்போது அமெரிக்காவின் "ஒரு முழுமையான இராணுவ கூட்டாளியாக" இந்தியா மாறி வருவதற்கு அவர்களின் எதிர்ப்பை தம்பட்டமடித்தாலும், அவை இரண்டுமே புது டெல்லி மற்றும் வாஷிங்டனுக்கு இடையிலான முன்பினும் விரிவான இராணுவ-பாதுகாப்பு உறவுகளை அபிவிருத்தி செய்வதில் ஒரு முன்னிலை பாத்திரம் வகித்துள்ளன.
பத்தாண்டு கால காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்தின் போது தான், இந்தியா அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு “உலகளாவிய மூலோபாய பங்காண்மையை” முழுமைப்படுத்தியது, அத்துடன் புதிய இந்திய ஆயுத தளவாட ஒப்பந்தங்களுக்கு அமெரிக்கா மிக முக்கிய விற்பனையாளராக மாறியது. ஸ்ராலினிச சிபிஎம் மற்றும் அதன் இடது முன்னணி, 2004 இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை உருவாக்க உதவியதுடன், முழுமையாக நான்காண்டுகளுக்கு அதன் நாடாளுமன்ற பெரும்பான்மைக்காக ஐ.மு.கூட்டணிக்கு ஆதரவு வழங்கியது. இதே காலகட்டத்தின் போது தான் காங்கிரஸ் இந்தோ-அமெரிக்க அணுஆயுதத்திற்கு அல்லாத அணுசக்தி உடன்படிக்கைக்குப் பேரம்பேசியது, இந்த உடன்படிக்கை அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இந்திய முதலாளித்துவத்திற்கு இடையிலான கூட்டணி வளர்ச்சியைப் பலப்படுத்தியது.
ஐயத்திற்கிடமின்றி ஸ்ராலினிசவாதிகள் இப்போது, மோடி அரசாங்கத்திற்கு அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பை, இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்குப் பின்னால் திருப்பிவிடுவதன் மூலமாக அரசியல்ரீதியில் அதை ஒடுக்கும் அவர்களது முயற்சிகளை நியாயப்படுத்துவதற்காக, வாஷிங்டனுடன் இன்னும் நெருக்கமான இராணுவ-மூலோபாய உறவுகளுக்கு பிஜேபி அரசாங்கம் திரும்பியிருப்பதைப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறார்கள்.
ஏற்கனவே ஸ்ராலினிஸ்டுகள் மேற்கு வங்க மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியுடன் ஒரு தேர்தல் கூட்டணி அமைத்துள்ளனர்.
மிக முக்கியமாக LEMOA உடன்படிக்கையை எதிர்ப்பதில் சிபிஎம் பொலிட்பீரோ அறிக்கை, இந்தியாவின் "தேசிய இறையாண்மையை" மற்றும் "மூலோபாய சுயஅதிகாரத்தை" மோடி அரசாங்கம் சமரசப்படுத்துவதாக குற்றஞ்சாட்டி, முற்றிலுமாக முதலாளித்துவ வர்க்கத்தின் தேசிய நலன்களது நிலைப்பாட்டிலிருந்து அந்த உடன்படிக்கையைக் கண்டிப்பதுடன், இந்த அடிப்படையிலேயே ஆளும் வர்க்கத்திற்குள் ஆதரவைத் திரட்ட முயல்கின்றனர். “சகல அரசியல் கட்சிகளும் மற்றும் தேசப்பற்றுமிக்க பிரஜைகளும்" “அமெரிக்காவுக்கு அடிபணிவதை எதிர்க்க" வேண்டும் என்று ஸ்ராலினிஸ்டுகள் அறிவிக்கின்றனர்.
இந்த பிற்போக்குத்தனமான நிலைப்பாட்டை வைத்துக் கொண்டு, ஸ்ராலினிசவாதிகள் போர் அபாயத்தின் மீதும் மற்றும் எந்தளவிற்கு வாஷிங்டனை இந்தியா ஆதரித்துள்ளது என்பதன் மீதும் குற்றகரமாக மவுனமாக இருக்கிறார்கள், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (UPA) கீழ் அதை பதவியில் தக்க வைப்பதில் அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்ரோஷத்தை ஊக்குவித்துள்ளார்கள் என்பதும் இதில் உள்ளடங்கும். அமெரிக்க மூலோபாய நடவடிக்கைக்குள் மற்றும் சீனாவிற்கு எதிரான போர் திட்டங்களில் இந்தியா எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது என்பதனையோ அல்லது தென் சீனக் கடலில் மற்றும் ஆசிய-பசிபிக்கின் வேறு இடங்களில் அமெரிக்க ஆத்திரமூட்டல்கள் எவ்வாறு அப்பிராந்தியத்திலும் மற்றும் உலகெங்கிலுமான மக்களுக்கு கணக்கிட முடியாத விளைவுகளுடன் ஓர் இராணுவ மோதலைத் தூண்டிவிடும் என்பதனையோ அவர்கள் அம்பலப்படுத்துவதில்லை.
காங்கிரஸ் மற்றும் ஸ்ராலினிசவாதிகளுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள அஇஅதிமுக மற்றும் திமுக, ஆந்திர பிரதேசத்தில் உள்ள தெலுங்கு தேச கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் போன்ற மாநில அளவிலான மற்றும் இந்தியாவில் தேசியளவிலான ஏனைய சகல அரசியல் கட்சிகளும் LEMOA உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிஜேபி அரசாங்கத்தின் திட்டங்களைக் குறித்து மவுனமாக உள்ளன. இது ஆளும் வர்க்கத்தின் அனைத்து தரப்பும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமான மூலோபாய உறவுகளை ஆதரிப்பதையும் மற்றும் இந்தியாவின் சொந்த வல்லரசாகும் அபிலாஷைகளை இன்னும் ஆக்ரோஷமாக வலியுறுத்துவதையும் சுட்டிக்காட்டுகிறது.