Print Version|Feedback
French police attack demonstrators protesting anti-worker labor law reform
தொழிலாளர்-விரோத தொழிற் சட்ட திருத்தத்திற்கு எதிராய் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது பிரெஞ்சு போலிசார் தாக்குதல் நடத்துகின்றனர்
By Alex Lantier and Stéphane Hugues
11 April 2016
சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை எதிர்த்தும் தொழிலாளர் அமைச்சர் மரியம் எல் கொம்ரியின் தொழிலாளர் சட்ட திருத்தத்தை எதிர்த்தும் சனிக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பிரெஞ்சு கலகத் தடுப்புப் போலிசார் மிருகத்தனமாய் தாக்கினர். எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் உயர்நிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுடன் கரம்கோர்க்க தொழிலாளர்களை வேலைநிறுத்தத்திற்கு அழைப்பதில்லை என்ற தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மற்றும் PS இன் சுற்றுவட்டத்தில் உள்ள அதன் அரசியல் கூட்டாளிகளின் முடிவானது, பிரான்ஸ் எங்கிலுமான நகரங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்குவதற்கும் கைதுசெய்வதற்கும் சோசலிஸ்ட் கட்சியை அனுமதித்திருக்கிறது.
பாரிஸில், ஆர்ப்பாட்டக்காரர்களின் குழுக்கள் குடியரசு சதுக்கத்தில் இருந்து பாஸ்டி சதுக்கம் வழியாக தேசிய சதுக்கம் வரை பேரணியாகச் சென்ற சமயத்தில் ஊர்வலம் சென்ற பாதையெங்கும் அதிக எண்ணிக்கையிலான கலகத் தடுப்புப் போலிசார் சூழ்ந்திருந்தனர். கைது செய்யப்பட்டால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆலோசனையளிக்கின்ற துண்டறிக்கைகளை பிரெஞ்சு வழக்கறிஞர்கள் சங்கம் (Syndicat des avocats français -SAF) விநியோகித்து வர, பேரணியில் பதட்டமான சூழல் நிலவியது.
சர்வதேச நிதி உயரடுக்கின் நிதி மோசடிகளை அம்பலப்படுத்திய பனாமா ஆவணங்களைக் குறிப்பிட்டு “பணம் ஏராளமாய் இருக்கிறது, அது பனாமா கணக்குகளில் இருக்கிறது” என்ற சுலோகமும், “P comme pourri, S comme salaud, à bas les socialos” என்ற சுலோகமும் பேரணியில் இடம்பெற்றன.
ஒரு போலிஸ் ஹெலிகாப்டர் பாரிஸ் பேரணிக்கு மேலாகப் பறந்தது, ஆர்ப்பாட்டக்காரர்கள் தேசிய சதுக்கத்தை எட்டியதும் மோதல்கள் வெடித்தன. ஸ்ராலினிச பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பின் [CGT] பதாகைகளின் பின்னால் அணிதிரண்டிருந்த வேலைநிறுத்தத் தொழிலாளர்களை சதுக்கத்திற்குள் நுழைய விடாமல் பாதுகாப்புப் படைகள் தடுத்து நிறுத்தின, அதே வேளையில் அவை கண்ணீர்ப் புகை குண்டுகளை பெருமளவில் வீசியதோடு ஏற்கனவே அங்கு வந்து சேர்ந்திருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். போலிஸ் படைகளுடன் போராடிய ஆர்ப்பாட்டக்காரர்களை இழுத்துச் செல்வதற்கும் கைது செய்வதற்கும் சீருடைஅணியாத போலிஸ் முயற்சித்தது.
பாரிஸில் குறைந்தபட்சம் 9 கைதுகளும் பிரான்ஸ் எங்கிலும் 26 கைதுகளும் இருந்தன, பாரிஸில் ஆர்ப்பாட்டக்காரர்களில் பலரும் காயமடைந்தனர், ஒரு பெண்மணிக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது.
Rennes இல் பல்லாயிரக்கணக்கானோர் பங்குபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலகத் தடுப்புப் போலிசார் முன்னேறியவர்களை எதிர்த்து நிறுத்தியதோடு பெரும் அளவில் கண்ணீர் புகை மற்றும் உணர்ச்சி முடக்க குண்டுகளையும் வீசினர். வீதிச் சண்டை நடைபெற்ற Lices புறநகர்ப் பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நெருப்பு தடுப்பரண்களை அமைத்தனர். போலிஸ் முன்னேறி அந்தப் பகுதியை காலியாக்கும் வரையில் நெருப்பணைக்கும் வீரர்கள் கூட்டம்கலைக்கும் துப்பாக்கிச்சூட்டில் உண்டான நெருப்பில் மாட்டிக் கொண்டதாக செய்திகள் வெளியாயின. 20 நிமிடங்கள் இன் செய்தி நிகழ்ச்சியின் படி, Rennes இல் 18 பேர் காயமுற்றனர், இதில் ஐந்து பேருக்கு போலிசின் லத்தித் தாக்குதல்களால் மண்டை உடைதல், கண் காயங்கள் போன்ற தீவிர காயங்கள் ஏற்பட்டிருந்தன.
பத்தாயிரக்கணக்கான மக்கள் துலூஸ் இலும் மார்சேயில் நகரின் பழைய துறைமுகம் அருகேயும் அணிதிரண்டனர். முன்னதாக இங்கே மாணவர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கேபிடல் சதுக்கத்தில் உள்ளிருப்பு செய்யும் முன்பாக துலூஸ் தேசியத் திரையரங்க நடிகர்களின் ஒரு ஆர்ப்பாட்டத்தில் கரம்கோர்த்தனர்.
அத்தனையிலுமே, எல் கொம்ரி சட்டத்திற்கு எதிராகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவான சிக்கன நடவடிக்கைத் திட்டத்திற்கு எதிராகவும் பிரான்ஸ் எங்கிலுமான சுமார் 200 நகரங்களில், பல நூறாயிரக்கணக்கான மக்கள், பாரிஸில் நவம்பர் 13 பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் PS திணித்திருந்த அவசரகால சட்டத்தையும் பொருட்படுத்தாமல், பேரணியாகத் திரண்டிருந்தனர்.
இந்த அணிதிரட்டல் மார்ச் 31 ஆர்ப்பாட்டத்தை விடவும் குறிப்பிடத்தக்க வகையில் சிறியதாய் இருந்தது. முன்னதாக சென்ற செவ்வாயன்று நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தை -அது போலிசால் மிக வன்முறையாக தாக்குதலுக்கு ஆளாகியிருந்தது- தொடர்ந்து இது நடைபெற்றிருந்தது.
PS அரசாங்கத்திற்கு எதிரான ஒரு தெளிவான முன்னோக்கு இல்லாததே இந்த ஆர்ப்பாட்ட இயக்கம் எதிர்கொள்கின்ற மையமான அரசியல் பிரச்சினையாக இருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் பிரான்சின் மிகப்பெரும் மக்கள்வெறுக்கும் ஜனாதிபதியாக உருவெடுத்திருக்கும் சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டுக்கு பரந்த எதிர்ப்பு இருக்கின்ற போதும், அத்துடன் அவருக்கு எதிரான போர்க்குணமிக்க நடவடிக்கைக்கு இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே பரவலான ஆதரவு இருக்கின்ற போதும் கூட, இளைஞர்கள் ஆர்ப்பாட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டு பெரும் ஆயுதம் தரித்த கலகத் தடுப்பு போலிசாரின் மிதமிஞ்சிய எண்ணிக்கையால் கடும் தாக்குதல்களுக்கு இலக்காக்கப்பட்டு வருகின்றனர்.
தொழிற்சங்க அமைப்புகளும் பிரான்சில் இருக்கும் அரசியல் கட்சிகளிடையே இருக்கக் கூடிய அவர்களது போலி-இடது கூட்டாளிகளும் அனைவருமாய் 2012 ஜனாதிபதித் தேர்தலில் ஹாலண்டுக்கு வாக்களிக்க அழைப்பு விடுத்தனர் என்பதுடன் அவர்கள் அனைவருமே அவரை பதவியிறக்குவதற்கான ஒரு இயக்கத்தை எழுந்து விடாமல் தடுக்க முனைகின்றனர் என்பதான உண்மையுடன் இது பிரிக்கவியலாமல் பிணைந்திருக்கிறது.
அதேசமயத்தில், ஜோன்-லுக் மெலன்சோனின் இடது முன்னணி, பல்வேறு பசுமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் புதிய முதலாளித்துவக் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட PS இன் சுற்றுவட்டத்தில் இருக்கும் அரசியல் சக்திகள் அடையாளப் போராட்டமான #NuitDebout ஆர்ப்பாட்டங்களை ஊக்குவிக்க தலைப்படுகின்றனர். பொதுச் சதுக்கங்களை ஆக்கிரமித்து போராடும் இந்த நடவடிக்கைகள் கிரீசில் சிரிசா அரசாங்கத்தை அதிகாரத்துக்குக் கொண்டு வரவும் ஸ்பெயினில் பெடெமோஸ் கட்சியை உருவாக்கவும் உதவிய 2011 இல் ஏதேன்ஸ் மற்றும் மாட்ரிட்டில் நடந்த இயக்கங்களை முன்மாதிரியாகக் கொள்கின்றன. அவை தொழிலாளர்களுக்கு முன்னோக்கிய எந்த வழியையும் வழங்கவில்லை என்பதோடு PS மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுகின்ற வேலையில் இருந்து இளைஞர்களைத் திசைதிருப்புவதற்கும் முனைகின்றன.
#NuitDebout இயக்கமானது தொழிலாள வர்க்கத்தின் தொழிலக வலிமையை அணிதிரட்டுவதை விலக்கிய நடவடிக்கைகளை நடத்துவதன் மூலமாக தொழிலாளர்களின் ஒரு பரந்த அணிதிரட்டலைத் தடுப்பதற்கான ஒரு வழிவகையாகவே இருக்கிறது. அத்துடன் பல்வேறு அரசியல் செயல்பாட்டாளர்கள் மற்றும் பிற்போக்கு சக்திகளுக்கு PS மற்றும் அதன் தொழிலாளர் “சீர்திருத்தத்திற்கு” எதிரான பரந்த இயக்கத்தில் செல்வாக்கைப் பெறுவதற்கான ஒரு பாதையையும் அது வழங்குகிறது.
சனிக்கிழமையன்று பாரிஸில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளரிடம் பேசிய ஒரு ஹோட்டல் தொழிலாளி, தனது வேலையிடத்தில் இந்த சட்டம் குறித்து பரவலான விவாதமும் கோபமும் இருந்ததாகக் கூறினார். ஆயினும், இளைஞர்களின் பக்கமான ஒற்றுமையை வெளிப்படுத்த அந்த ஹோட்டலில் இருந்து வந்திருந்த ஒரேயொரு தொழிலாளி அவர் மட்டுமே. சில அடிகள் தள்ளி, முன்னதாக மெலன்சோனின் ஊழியராக இருந்திருந்த ஒரு அரசியல் செயல்பாட்டாளர் நின்றிருந்தார். அவர் உலக சோசலிச வலைத் தளத்திடம் #NuitDebout ஆர்ப்பாட்டங்கள் குறித்த தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார், அத்துடன் திட்டமிடல் கூட்டங்களில் அவர் பிரதமரையும் கூடப் பார்க்க முடிந்ததாகவும் பெருமையடித்துக் கொண்டார்.
பாரிஸில் இந்தச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தில் தனது நண்பர்கள் பலருடன் கலந்து கொண்ட தலீல் என்ற உயர்நிலைப் பள்ளி மாணவர் உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசினார். தொழிலாளர் சட்டம் குறித்து அவர் கூறியதாவது: “உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, வருங்காலத் தலைமுறைகளுக்கு, இதன் அர்த்தம் நமக்கு இன்னும் குறைவான வேலைப் பாதுகாப்பே இருக்கிறது என்பதேயாகும். உண்மையில் இது நமக்கு நடக்கக் கூடிய மிக மோசமான விடயங்களில் ஒன்று. ஏற்கனவே நாம் நெருக்கடியில் இருக்கும் ஒரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது ஏற்கனவே சிக்கலாய் கிடக்கிறது. ஏற்கனவே வேலைவாய்ப்பின்மை பிரம்மாண்டமாக இருக்கின்ற நிலையில், விடயங்களை மேலும் மோசமாக்குவது அர்த்தமற்றதாகும். ஆனால் இந்தச் சட்டம் விடயங்களை மோசமாகவே ஆக்கும்.”
பிரான்சில் போலிஸின் படைவலிமைப் பிரயோகத்தை தான் எதிர்ப்பதாகவும், பிரான்சு மற்றும் பெல்ஜியத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான பதிலடியாக நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதல்கள் உள்ளிட சிரியாவில் பிரெஞ்சு அரசாங்கத்தினாலும் அதன் நேட்டோ கூட்டாளிகளாலும் நடத்தப்படுகின்ற பினாமிப் போரையும் தான் எதிர்ப்பதாகவும் தலீல் மேலும் கூறினார்.
தலீல் கூறினார்: “சிரியாவிலான போரினால் மோதல் பகுதிகளில், அதாவது மேற்கத்திய சக்திகளால் தூண்டி விடப்பட்ட மோதலின் பகுதிகளில் நிலைமை தொடர்ந்து கொதிநிலையில் பரமாரிக்கப்பட்டு வருகிறது, இன்று அது அந்தப் பிராந்தியத்தில் முழுக்க வெடித்துள்ளது. உண்மையில், இனி வேலைக்கு உதவாத மூர்க்கமான கொள்கைகளையே நாம் தொடர்ந்து வைத்திருக்கிறோம். அவை வேலை செய்ய மாட்டா ஏனென்றால் நீண்டதூர குண்டுவீச்சுகள் அப்பாவி மக்களையே கொல்கின்றன என்பது நமக்குத் தெரியும். அத்துடன் இங்கே 130 பேர் கொல்லப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக அங்கே 2,000 பேரைக் கொல்கின்ற தாக்குதலை ஏன் நடத்த வேண்டும் என்பது புரியவில்லை. அது அர்த்தமற்ற ஒன்று.”
தொடர்ச்சியற்ற வகையில் வேலைக்கு அமர்த்தப்படுகின்ற நடிகரான ஜெரிமி உடனும் உலக சோசலிச வலைத் தளம் பேசியது. அவர் எல் கொம்ரி சட்டத்தை கடுமையாகத் தாக்கினார். ”என்ன ஒரு பெரிய குளறுபடி! பெருநிறுவனங்களுக்குத் தான் மேலும் மேலும் அதிகாரம் கிடைக்கிறது...ஆகவே நாம் எப்போதும் அவசரம் காட்ட வேண்டியது தான், ஒருவருக்கொருவர் செலவிட குறைந்த நேரமே இருக்கும், நிறுவன மேலிட அதிகாரிகளுக்கு அதிகமாய் பணம் சேரும், அவர்களுக்கும் நிறைய பனாமாவில் கொட்டிவைக்க நிறைய கிடைக்கும்” என்றார் அவர்.
“இது ஒருவகை பிரபுத்துவ ஆட்சியாக எழுவதை நீங்கள் உணரத் தொடங்குகிறீர்கள்” என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார். “அனைத்து நாடுகளிலும் இது ஒரேமாதிரியாகவே இருக்கிறது.”
PS குறித்த ஆழமான பிரமைவிலகலை அவர் வெளிப்படுத்தினார். “சோசலிஸ்ட் கட்சியின் அர்த்தம் இனி என்னவாக இருக்கும் என்பது கூட எனக்குத் தெரியவில்லை” என்றார் அவர். “ஏனென்றால் PS இன் கொள்கைத் திட்டங்களை கொண்டு பார்த்தால், இந்த மனிதர் [ஜனாதிபதி ஹாலண்ட்] ஒரு குறிப்பிட்ட பெயரடையை ஒட்டிக் கொண்டு அதிகாரத்திற்கு வந்து விட்டார் என்றாலும், ’PS ஒரு நல்ல கருவி தான், ஆனாலும் நான் நடத்த விரும்பும் கொள்கைகள் வலது-சாரி மற்றும் சுதந்திரச் சந்தைக் கொள்கைகள் தான்” என்று அவர் அதன்பின் தனக்குள் சொல்லியிருப்பார் போலும். “நான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இதைச் செய்யமாட்டேன்...” ‘‘தேர்ந்தெடுக்கப்பட்டால் ஒருபோதும் அதைச் செய்யமாட்டேன்” என்று அவர் சொன்னதில் இருந்து நாம் இப்போது வெகு தொலைவில் நின்று கொண்டிருக்கிறோம்.
நவ-பாசிச தேசிய முன்னணியின் எழுச்சி “மக்களின் வறுமைப்படலுடன் இணையாக நடக்கிறது” என்று தலீல் மேலும் சேர்த்துக் கொண்டார். அவர் தொடர்ந்து கூறினார்: “ஒவ்வொரு முறை மக்களுக்கு இருப்பிடம், உணவு பிரச்சினைகள் வரும்போதும், ஒரு பாசிஸ்ட் வந்து “இதற்கு அந்த மனிதர் தான் காரணம்” என்று சொல்ல ஆரம்பிக்கிறார். இது மனிதர்களை முட்டாளாக்குகிறது, ஆனால் மேம்பட்ட கொள்கைகள் நமக்குக் கிடைக்காது போனால், அது [FN இன் எழுச்சி] உண்மையான சாத்தியம் தான், அது விடயங்களை மேம்படச் செய்யப் போவதில்லை என்றே நினைக்கிறேன்.”
பாரிஸ் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட மரின் மற்றும் லூக்காஸ் ஆகிய இரண்டு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடனும் உலக சோசலிச வலைத் தளம் பேசியது. ஆர்ப்பாட்டங்களில் அவர்கள் கண்ட பிரச்சினைகளை அவர்களுடன் கலந்துரையாடியது.
”மிகவும் வன்முறை இருக்கிறது, அதிகமான கடுமை இருக்கிறது, அது ஒரு பிரச்சினை” என்றார்கள் அவர்கள். “எக்கச்சக்க பதட்டங்கள்.... எப்படியிருந்தாலும் இந்த இயக்கத்தில் பங்குபெற்றிருக்கவே நாங்கள் முயற்சிக்கிறோம், ஆனால் பிரச்சினை என்னவென்றால் நாங்கள் இளையவர்கள் என்பதால், கலகத் தடுப்பு போலிஸ் எங்களுக்கு அத்தனை விருப்பமானதாக இல்லை. மற்றபடி இந்த இயக்கம் மகிழ்ச்சியான விடயம், ஏனென்றால் இது பலரை ஒன்றுசேர்க்கிறது. தலைமுறை வித்தியாசம் இல்லாமல் பலரையும் நான் சந்தித்தேன். அனைத்து வயது மக்களையும் சந்தித்தேன்.”
மரின் மேலும் கூறினார், “பல ஆண்டுகளுக்கு முன்பாய் அச்சமயத்தில் எதிர்பார்க்கப்பட்டிராத பின்விளைவுகளைக் கொண்டிருந்த ஒரு திசையை உலகம் எடுத்தது. ஒருநாள் நாம் அத்திசையில் வெகுதூரம் போய்விட்டதாக உணர்ந்து, கொஞ்சம் முன்னாலேயே திரும்பிச் சென்றிருந்தால் நிறைய விடயங்களையே முன்பே மாற்றியிருக்க முடியும் என்று யோசிப்போம். போரிலிருந்து, நிறைய சமத்துவமின்மையில் இருந்து, சில சமயங்களில் நிறைய அநீதிகள் இருப்பதாகத் தோன்றுகின்ற ஒரு உணர்வில் இருந்து அது வருகிறது.”