Print Version|Feedback
Hunger and the social catastrophe facing America’s youth
அமெரிக்க இளைஞர்கள் முகங்கொடுக்கும் பட்டனி மற்றும் சமூக அவலங்கள்
Kate Randall
13 September 2016
இவ்வாரம் வெளியான இரண்டு அறிக்கைகள் அமெரிக்காவின் சமூக அவலங்களையும், அமெரிக்க இளைஞர்கள் மீதான அதன் பாதிப்புகளையும் தெளிவாக வெளிச்சமிட்டு காட்டின.
“சாத்தியமில்லாத வாய்ப்புகள்: அமெரிக்காவில் விடலைப்பருவ இளைஞர்களும் உணவு பாதுகாப்பின்மையும்" (Urban Institute) மற்றும் "விடலைப்பருவ இளைஞர்களை மேசைக்கு வரவழைப்பது: அமெரிக்காவில் உணவு பாதுகாப்பின்மை குறித்த ஒரு பார்வை" (Feeding America), இரண்டு அமைப்புகளால் நடத்தப்பட்ட கூட்டு ஆராய்ச்சியின் அடிப்படையில் இருந்த இவ்விரண்டு அறிக்கைகளுமே, பரந்துபட்ட பட்டினி நிலைமைகளையும் மற்றும் இளைஞர்கள் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் தங்கள் நண்பர்களுக்கும் உணவளிப்பதற்கான முயற்சியில் படுமோசமான வாய்ப்புகளைத் தேர்ந்தெடுப்பதையும் விவரிக்கின்றன.
2015 இல் 12.7 சதவீத அமெரிக்க குடும்பங்கள் உணவு பாதுகாப்பின்மையில் இருந்தன, அதன் அர்த்தம் அவை அந்தாண்டின் ஏதோவொரு சமயத்தில் ஆதாரவளங்கள் இன்றி அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் போதிய உணவை வழங்குவதில் சிரமப்பட்டிருந்தனர். உணவு பாதுகாப்பின்மை வல்லுனர் ஒருவரின் கருத்துப்படி, அமெரிக்காவில் உண்ண போதிய உணவின்றி போராடிய இந்த 40 மில்லியன் பேர்களில், மிகவும் குறைந்த உணவு பாதுகாப்பைப் பெற்றிருந்த 2.9 மில்லியன் பேர் உட்பட 6.8 மில்லியன் இளைஞர்கள் 10 வயதில் இருந்து 17 வயதிற்குள் இருந்ததாக மதிப்பிடப்படுகிறது.
உணவு உண்பதைத் தவிர்த்துக் கொள்ளுதல் மற்றும் மலிவு உணவை உண்பது ஆகிய "பாரம்பரிய" சமாளிப்பு நடவடிக்கைகளுக்குக் கூடுதலாக, இந்த விடலைப்பருவ இளைஞர்கள் மற்றும் அதற்கு முன்-பருவத்திய சிறார்கள் கடைகளில் இருந்து உணவு பண்டங்களைத் திருடுதல், ஏனைய திருட்டு, போதைப் பொருட்களைத் திருடுதல், குண்டர்களுடன் இணைதல் அல்லது முறையாக சாப்பிடுவதற்கான போராட்டத்தில் பணத்திற்காக அவர்களின் உடல்களை விற்பது என அதிகரித்தளவில் இவற்றில் நிர்பந்திக்கப்படுவதை இந்த புதிய அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.
மூன்றாண்டுகளில் நாடெங்கிலுமான குறைந்த-வருவாய் சமூகங்களது 10 குறிப்பிட்ட குழுக்களின் விடலைப்பருவ இளைஞர்களுடன் உரையாடி ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். வேலைகள் பற்றாக்குறை, குறைந்த கூலி வேலைகள், போதிய நேரம் வழங்காத வேலைகள், அல்லது அந்த விடலைப்பருவத்தினரது பெற்றோர்களிடம் இல்லாத திறமைகளைக் கோரிய வேலைகள் என இத்தகைய சமூகங்களில் வாழ்ந்த, வெவ்வேறு இனம் மற்றும் பின்புலத்தைக் கொண்ட இளைஞர்களிடம் ஆராய்ச்சியாளர்கள் உரையாடினர்.
தசாப்தங்களாக சமூக உதவித்திட்டங்கள் வெட்டப்பட்டதாலும் மற்றும் பெருமந்தத்தின் காலங்கடந்த பாதிப்புகளாலும், தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க போராடி கொண்டிருந்த பல பெற்றோர்கள் இம்மாத மத்தியில் உணவின்றி இருக்க வேண்டியிருந்தது. இத்தகைய சூழ்நிலைகளில், விடலைப்பருவத்தினர், குறிப்பாக தங்களுக்குக் கீழே உடன்பிறப்புகளைக் கொண்டவர்கள், தங்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பிருப்பதாக உணர்கிறார்கள். “இது தான் நிலைமை என்றால் நான் சாப்பிடுவதை நிறுத்த வேண்டியிருக்கும்,” என்று சிகாகோவில் நேர்காணல் செய்யப்பட்ட ஒரு விடலைப்பருவ இளைஞர் தெரிவித்தார். “எனக்கு [கீழிருக்கும்] இரண்டு உடன்பிறப்புகளும் நன்றாக இருந்தால் அதுவே எனக்கு போதும்,” என்றார்.
இத்தகைய பல குடும்பங்கள் கடுமையான உணவு பாதுகாப்பின்மையின் துயரை முகங்கொடுக்கிறார்கள். மலிவான, சத்தான உணவுப்பொருட்களை விற்கும் மளிகை கடைகள் அரிதாகவே உள்ளன, நல்லதொரு கடைகளைத் தேடி செல்வதற்கான நேரமும் விலையும் கொடுக்க முடிவதில்லை. விடலைப்பருவ இளைஞர்கள் பெரும்பாலும் உள்ளூர் துரித-உணவு விடுதிகள், மருந்து கடைகள், எரிவாயு நிரப்பும் இடங்கள் மற்றும் வசதிக்கேற்ற கடைகளில் உணவுக்காக தஞ்சமடைகிறார்கள். “நீங்கள் சண்டையிட்டால் தான், உங்களுக்கு உணவு விலை பட்டியலே கிடைக்கும்,” என்று சான் டியோகோவில் ஒரு சிறுவன் தெரிவித்தார்.
தங்கள் குடும்ப உணவு தேவைக்குப் பங்களிப்பு செய்வதற்காக உணவு பாதுகாப்புமின்மையில் இருக்கும் சில விடலைப்பருவ இளைஞர்கள் வேலை தேடுகிறார்கள், ஆனால் துரித-உணவு விடுதிகளில் அல்லது சில்லரை விற்பனை அங்காடிகளில் திறமை குறைந்த மற்றும் குறைந்த சம்பள வேலைகள் குறைவாகவே இருப்பதால் அவர்கள் வயதில் மூத்தவர்களுடன் போட்டியிட வேண்டியிருக்கிறது. இந்த சாத்தியக்கூறுகள் கைவரப்பெற முடியவில்லை என்றால் சில விடலைப்பருவ இளைஞர்கள் "சட்டப்பூர்வ பொருளாதார தேடல்களுக்கு வெளியே" பணத்தைச் சம்பாதிக்க வேண்டிய பிரயத்தனத்திற்குத் தள்ளப்படுகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உணவு பாதுகாப்பற்ற விடலைப்பருவ இளம் சிறார்களை நேர்காணல் செய்த போது, உணவு மற்றும் ஏனைய தேவைகளுக்கு பணம் சம்பாதிக்க ஒரு வழியாக, தங்களையும் மற்றவர்களையும் தனிப்பட்ட மற்றும் சட்டரீதியிலான அபாயங்களுக்கு உட்படுத்தி திருடுவதாகவும் மற்றும் போதை மருந்துகள் விற்பதாகவும் தெரிவித்தனர். “போதை பொருட்கள், மது, எல்லாமே தான்,” என்று ஓரேகான் புறநகரின் ஒரு விடலைப்பருவ சிறுமி தெரிவித்தார். “உயர்நிலை பள்ளிகளில் பயன்படுத்தும் தவறான விடயங்கள் நடுநிலை பள்ளிக்கும், அதிலும் கீழிறங்கி ஆரம்ப பள்ளிகளுக்கும் பரவி விட்டது,” என்றார்.
உணவு பாதுகாப்பற்ற விடலைப்பருவ இளைஞர்கள், அதுவும் குறிப்பாக சிறுமிகள், வேறுவிதமான மறைமுகமான அபாயத்திற்கும் உள்ளாகிறார்கள்: அதாவது பாலியல் சுரண்டல். உணவு மற்றும் ஏனைய தேவைகளுக்கான பணத்திற்காக பெண்கள் பாலியல் உறவு கொள்வதாக எல்லா படிப்பிட விடலைப்பருவத்தினரும் தெரிவித்தனர்.
இது பெரும்பாலான வேளைகளில் "பரிவர்த்தனை கலப்பு" (transactional dating) என்ற வடிவத்தையும் எடுக்கிறது, இதில் விடலைப்பருவ பெண் உணவு, சாப்பாடு, பணம் அல்லது ஏனைய பொருட்களுக்கு பரிவர்த்தனையாக யாரோ ஒருவரை (பொதுவாக இவர் வயதில் மூத்தவராக இருப்பார்) பார்த்து பாலுறவு கொள்கிறார். “இது நிஜமாகவே உங்களை நீங்களே விற்பது போல தான்,” என்று ஓரேகான் போர்ட்லாந்தில் ஒரு விடலைப்பருவ சிறுமி கூறினார். “பணத்திற்காக அல்லது சாப்பிடுவதற்காக உங்களால் என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் நீங்கள் செய்ய வேண்டியிருக்கும்,” என்றார்.
ஒரு சிறிய எண்ணிக்கையிலான விடலைப்பருவ இளைஞர்கள், தொடர்ந்து (சிறையில்) உணவு கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக கைது செய்யப்படும் வழியை வேண்டுமென்றே நாடுகின்றனர்.
போதை மருந்தைக் கையாளுதல், திருடுதல், வேண்டுமென்றே கைதாவது, பாலியல் சுரண்டல்—பெரும் எண்ணிக்கையிலான அமெரிக்க விடலைப்பருவ இளைஞர்களின் "தேர்ந்தெடுப்புகளாக" உள்ள இவை, தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் மேசையில் உணவைக் கொண்டு வர வேண்டிய பொருள் தேவைக்காக செய்யப்படுகின்றன. இந்த புதிய நூற்றாண்டில் பிறந்த தலைமுறையினது இந்த பரிதாபகரமான யதார்த்தம், 2016 இல் அமெரிக்க வர்க்க உறவுகளில் உள்ள சமூகரீதியில் சமநிலையற்ற மற்றும் கொடூரமான நிலையைக் குறித்து பக்கம் பக்கமாக பேசுகிறது.
ஒரு பகுத்தறிவார்ந்த உலகில் தான் ஒருவர் இளைஞர்களிடையிலான பட்டினியை போக்கும் வழிவகைகளைக் குறித்த ஒரு தேசிய விவாதத்தையும், தலைப்புச் செய்திகளையும் எதிர்பார்க்க முடியும். ஆனால் இரண்டு வணிக கட்சிகளது தேர்தல் போட்டிகள் நிறைந்த இப்போதைய அரசியல் சூழலில், இது மிகக் குறைந்த கவனத்தையே ஈர்க்கிறது. இந்த நெருக்கடி குறித்து கிளிண்டன் மற்றும் ட்ரம்ப் முகாம்களில் எதுவுமே குறிப்பிடப்படுவதில்லை என்பதோடு, அங்கே 21 ஆம் நூற்றாண்டு அமெரிக்காவில் தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் சமூக பேரழிவு வழமையாக புறக்கணிக்கப்படுகிறது. ஜனநாயகக் கட்சியைச் சுற்றியுள்ள உயர்மட்ட நடுத்தர வர்க்க ஆதரவாளர்களின் அடையாள அரசியலின் கூட, வறிய சிறுமிகள் மீது நிர்பந்திக்கப்படும் கொடூரமான சூழல் குறித்து குறிப்பிட்ட கவலைகள் கிடையாது.
உண்மையில் அமெரிக்காவினது அழிவுகரமான சமூக வாழ்க்கை நிலை —இது குறித்து இவ்வாரம் பிரசுரிக்கப்பட்ட இந்த இரண்டு அறிக்கைகளும் வெறுமனே ஒரு பகுதியான துணுக்கு தான் என்ற நிலையில்— இது தசாப்தங்களாக இரண்டு பெருவணிக கட்சிகளால் நடத்தப்பட்ட சமூக எதிர்புரட்சியின் விளைவுகளாகும். அமெரிக்காவில் சுகாதார முறையை பில் கிளிண்டன் நிர்வாகம் தான் அகற்றியது, அதன் விளைவாக வறுமை மற்றும் பட்டினி பரந்தளவில் அதிகரிப்பதை உறுதிப்படுத்தியது என்பதால், கிளிண்டன்கள் தான் இதற்கு குறிப்பாக பொறுப்பாகிறார்கள்.
அமெரிக்காவில் வாழ்க்கை "அற்புதமாக இருப்பதாக" மீண்டும் மீண்டும் அறிவிக்கும் ஒபாமாவைப் பொறுத்த வரையில், அவர் நிர்வாகம் உணவு வில்லை திட்டமான கூடுதல் ஊட்டச்சத்து உதவி திட்டத்தில் (SNAP) 8.6 பில்லியன் டாலர் வெட்டுக்கள் செய்வதை மேற்பார்வை செய்துள்ளது. கிளிண்டன் நிர்வாகத்தின் சுகாதார "சீர்திருத்தத்தின்" பாகமாக உள்ளடங்கிய SNAP ஐ இயக்க தேவைப்படுவதற்காக, 2016 இல் அமெரிக்கா எங்கிலும் 1 மில்லியன் பேர் அவர்களது உதவித்தொகைகளை இழக்க இருப்பதாக இந்தாண்டின் தொடக்கத்தில் ஓர் அறிக்கை அனுமானித்தது.
உணவு உதவிகளை நீடிக்க அங்கே "பணமில்லை" என்று உழைக்கும் குடும்பங்களுக்குக் கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்க அரசு-இராணுவ எந்திரம் புதிய போர்களுக்குத் தயாரிப்பு செய்து வருகையில், பெண்டகனின் போர் வரவு-செலவு திட்டத்திற்கு நிதியளிக்க இது போன்ற மற்றும் ஏனைய சமூக திட்டங்கள் வெட்டப்படுகின்றன. அடுத்த ஜனவரிக்குப் பின்னர் வெள்ளை மாளிகையில் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ, எவரொருவர் வந்தாலும், அவர் இன்னும் அதிகமாக ஆழ்ந்த சமூக வெட்டுக்கள் மற்றும் சிக்கன திட்டங்களைத் திணிக்கவே தன்னை அர்ப்பணிப்பார்.
ஒரு சமூகமானது அதன் மிகவும் பாதிக்கப்பட்ட குடிமக்களின், குறிப்பாக இளைஞர்களின், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தைக் கொண்டு அளவிடப்பட வேண்டும். ஒரு சாதாரண சமூகத்தில் கூட குழந்தைகளுக்கும் விடலைப்பருவ இளைஞர்களுக்கும் போதிய சத்தான உணவு வழங்கப்பட வேண்டும், அவர்கள் தங்குவதற்கு தரமான இடம், தரமான கல்வி, கலைகள், விளையாட்டு மற்றும் ஏனைய ஆர்வங்களை எட்டுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும், இவை தான் உழைப்பு சக்தியில் அவர்களது இடங்களைத் தயாரிப்பு செய்கிறது. இவை, உத்தரவாதப்படுத்தப்பட வேண்டிய தவிர்க்கவியலாத சமூக உரிமைகளாகும்.
உணவு பாதுகாப்பின்மை மற்றும் அவலங்களையும் மற்றும் அமெரிக்க விடலைப்பருவ இளைஞர்கள் முகங்கொடுக்கும் அபாயங்களையும் குறித்த இந்த சமீபத்திய ஆய்வை ஊடங்களும் மற்றும் அரசியல் ஸ்தாபகமும் புறக்கணிக்கின்ற அதேவேளையில், தொழிலாளர்களும் இளைஞர்களும் குறிப்பாக இவற்றை காலங்கடந்த மற்றும் காட்டுமிராண்டித்தனமான முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையின் இழிவார்ந்த அறிகுறியாக அங்கீகரிக்க வேண்டியுள்ளது.