Print Version|Feedback
France demands end to trade talks with US amid rising US-EU tensions
அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிறுத்துமாறு பிரான்ஸ் கோருகிறது
By V. Gnana and Alex Lantier
31 August 2016
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிறுத்துமாறு பாரிஸூம், அமெரிக்க தொழில்நுட்ப பெருநிறுவனமான ஆப்பிள் நிறுவனத்திடம் பில்லியன் கணக்கிலான வரிகளைத் திருப்பிச் செலுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியமும் கோரியுள்ள நிலையில், அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான ஆழ்ந்த பொருளாதார பதட்டங்கள் நேற்று மேலெழும்பின.
ஜேர்மன் துணை சான்சிலர் சிக்மார் காப்ரியேல் அட்லாண்டிக் கடந்த நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு கூட்டு பங்காண்மையை (TTIP) விமர்சித்து இரண்டு நாட்களுக்குப் பின்னர், பிரெஞ்சு அதிகாரிகள், அமெரிக்காவின் பேரம்பேசும் தந்திரோபாயங்களை கடுமையாக தாக்கி, ஐரோப்பா உடனான வாஷிங்டனின் தலைமையிலான சுதந்திர-வர்த்தக உடன்படிக்கை மீதான பேச்சுவார்த்தைகளை கைவிடுமாறு அழைப்புவிடுத்தனர்.
அந்த பேச்சுவார்த்தைகள் நிறைவடைவதற்கான எந்த சாத்தியக்கூறும் தென்படவில்லையென பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் தெரிவித்தார். அவர் அறிவித்தார், “ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உடன்படிக்கை மீதான தற்போதைய விவாதங்கள் இந்தாண்டின் இறுதிக்குள் முடிவு செய்யவியலாது. சூழ்நிலையை குறித்து பிரான்ஸ் வெளிப்படையாக பேச விரும்புகிறது, அமெரிக்க ஜனாதிபதியின் பதவிகாலம் முடிவதற்குள் ஓர் உடன்படிக்கையை எட்டிவிடலாம் என்ற பிரமைகளை விதைக்க அது விரும்பவில்லை … அந்த பேச்சுவார்த்தைகள் முடங்கிவிட்டன, நிலைப்பாடுகள் மதிக்கப்படுவதில்லை; தெளிவாக அது சமநிலையின்றி உள்ளது,” என்றார்.
“இத்தகைய பேச்சுவார்த்தைகளுக்கு இனி பிரான்சின் அரசியல் ஆதரவு கிடைக்காது,” என்று RMC க்கு பிரெஞ்சு வெளியுறவு வர்த்தக அமைச்சர் மத்தியாஸ் ஃபெக்கெல் (Matthias Fekl) தெரிவித்தார். “அமெரிக்கர்கள் ஒன்றும் வழங்குவதில்லை அல்லது வெறும் சிறுசிறு எலும்பு துண்டுகளை வழங்குகிறார்கள்… ஒரு நட்பு நாட்டுடன் பேச்சுவார்த்தைகள் இவ்வாறு இருக்கக்கூடாது,” என்றார்.
“ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான உறவுகள் எங்கே இருக்க வேண்டுமோ அவ்விடத்தில் இல்லை; பின்னர் அவர்கள் சரியான அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டி இருக்கும்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார். “சரியான அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு இத்தகைய பேச்சுவார்த்தைகளை நாம் தெளிவாக மற்றும் தீர்க்கமாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டியுள்ளது,” என்றார்.
ஹோலாண்டும் ஃபெக்கெலும் இவ்வாறு பேசிய நிலையில், ஐரோப்பிய ஒன்றியம், ஆப்பிள் நிறுவனம் அயர்லாந்தில் உள்ள அதன் ஐரோப்பிய பெருநிறுவன தலைமையகத்தில் வரி செலுத்த தவறியதற்காக, அது 13 பில்லியன் யூரோ (14.5 பில்லியன் டாலர்) வரி செலுத்த வேண்டுமென அறிவித்தது. அயர்லாந்தும் ஆப்பிள் நிறுவனமும் மேல்முறையீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளன.
வேலைகளை அயர்லாந்தில் தக்க வைப்பதற்காக, வரி செலுத்துவதில் இருந்து சட்டவிரோதமாக ஆப்பிள் நிறுவனம் பத்து பில்லியன் கணக்கான டாலர்களை இலாபமீட்ட அனுமதித்ததற்காக ஐரோப்பிய ஒன்றிய கமிஷன் அயர்லாந்தைக் குற்றஞ்சாட்டியது. அயர்லாந்தின் பெருநிறுவன வரி விகிதம் 12.5 சதவீதம் என்றாலும், ஆப்பிள் நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக 2003 இல் 1 சதவீத வரியும், 2014 இல் 0.005 சதவீத வரியும் செலுத்தியதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் பனாமா ஆவணங்களில் வெளியானதைப் போல ஒட்டுமொத்த சர்வதேச நிதியியல் பிரபுத்துவத்திற்கும் இது பொருந்தும் என்பதால் இந்த மிகப்பெரியளவிலான வரி ஏய்ப்பில் ஆப்பிள் சம்பந்தப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அது 230 பில்லியன் டாலருக்கும் அதிகமாக பணக்குவியலைத் திரட்டி, இலாபமாக மதிப்பிடப்படும் 181 பில்லியன் டாலரில் அமெரிக்க வரிகளை ஏய்த்துள்ளது. எவ்வாறிருப்பினும் ஐரோப்பிய நிறுவனங்களே கூட அயர்லாந்து, லுக்சம்பேர்க் மற்றும் சுவிட்சர்லாந்து உட்பட ஐரோப்பாவின் பல்வேறு வரி ஏய்ப்பு புகலிடங்களுக்கு மிகவும் பரிச்சயமானவை என்பதால், ஐரோப்பிய ஒன்றிய தீர்ப்பை உந்துவது நிதியியல் ஒழுக்கம் கிடையாது, மாறாக அதிகரித்து வரும் அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய பதட்டங்களாகும்.
ஆப்பிள் நிறுவனம் மீதான தீர்ப்பு, "அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பொருளாதார பங்காண்மையின் முக்கிய உள்பண்பை" பாதிக்கும் என்று அமெரிக்க நிதித்துறை தெரிவித்தது.
ஐரோப்பிய ஒன்றிய தீர்ப்பை "ஈட்டி முனை—ஒரு மிக முக்கிய தீர்ப்பு" என்று குறிப்பிட்டு, உலகளாவிய சந்தைகளுக்கான ஆலோசனை குழுமத்தின் Peter Kenny பிரிட்டிஷ் கார்டியனுக்குக் கூறுகையில், அமெரிக்க வரிகளை தவிர்ப்பதற்காக முக்கிய செயல்பாடுகளுக்கான தலைமையிடமாக ஐரோப்பாவைக் கொண்டுள்ள பல அமெரிக்க பெருநிறுவனங்களை இந்த தீர்ப்பு பாதிக்கும் என்றார். “மேல்முறையீட்டில் இந்த தீர்ப்பு தாக்குப்பிடிக்குமா என்பதை கூறமுடியாது, ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் அமெரிக்க பெருநிறுவனங்களுக்கான அடித்தளம் மாறி வருகிறது என்பது நமக்கு தெரிகிறது,” என்றார்.
சர்வதேச முதலாளித்துவத்தின் கட்டமைப்பிலேயே வேரூன்றிய சக்தி வாய்ந்த ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான உள்முரண்பாடுகள் கடந்த நூற்றாண்டில் இரண்டு முறை உலகப் போர்களாக வெடித்துள்ள நிலையில், மீண்டும் மீளெழுச்சி அடைந்து வருகின்றன. அமெரிக்க வீட்டு அடைமானக் கடன் நெருக்கடியின் வெடிப்பு மற்றும் அதை தொடர்ந்து நிகழ்ந்த 2008 உலகளாவிய பொருளாதார பொறிவு ஆகியவற்றிற்கு அண்மித்து ஒரு தசாப்தத்திற்கு பின்னரும், ஒரு நிஜமான பொருளாதார மீட்சிக்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை. ஐரோப்பாவை மந்தநிலைமை சூழ்ந்துள்ள நிலையில், பாரிய வேலைவாய்ப்பின்மை மற்றும் வங்கித்துறை நெருக்கடிகளின் ஒரு அலை இப்போது இத்தாலியில் மையமிட்டுள்ள நிலையில், ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் இலாபங்களை எவ்வாறு பங்குபோடுவது என்பதில் அதிகரித்தளவில் அமெரிக்க ஆளும் வர்க்கத்துடன் ஒரு உடன்பாட்டை பேரம்பேச முடியாமல் இருக்கிறது.
அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய கூட்டு போர் முனைவு, ஒரு காலம் வரையில் வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே அடியிலிருந்த பொருளாதார முரண்பாடுகளை மூடிமறைத்திருந்தாலும் அது அட்லாண்டிக் கடந்த நாடுகளுக்கு இடையிலான மோதல்களைக் குறைப்பதற்கு மாறாக அதிகரித்தளவில் தீவிரப்படுத்தி வருகிறது.
2009 இல் ஒபாமா நோர்வே இல் சமாதானத்திற்கான நோபல் விருது பெற்ற பின்னர், லிபியா மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போர்கள், மாலியில் ஒரு போர், உக்ரேனில் ரஷ்ய-ஆதரவிலான அரசாங்கத்தைக் கவிழ்த்தமை ஆகியவற்றில் ஐரோப்பிய சக்திகள் அமெரிக்காவுடன் கூட்டு தலையீடுகளை மேற்கொண்டன. அமெரிக்காவின் சீனாவிற்கு எதிரான "ஆசிய முன்னிலையில்" ஆக்ரோஷமாக பங்கெடுக்க ஐரோப்பிய நாடுகளுக்கு எந்த காரணமும் இருக்கவில்லை என்றாலும், ஆரம்பத்தில் அதன் மீது ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்புக்கான அறிகுறிகளை காட்டியது.
எவ்வாறிருப்பினும் ரஷ்யா மற்றும் சீனா உடனான போர் உந்துதல் ஒரு மோதலாக தீவிரமடைந்தபோது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான பொருளாதார பதட்டங்கள் அதிகரித்தளவில் மேலெழுந்தன. வாஷிங்டன் கோரிய ரஷ்யாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய தடையாணைகள், ஐரோப்பிய ஒன்றியம்-ரஷ்யா வர்த்தகத்தில் பத்து பில்லியன் மதிப்பிலான யூரோக்களை வெட்டியது, மேலும் கடந்த ஆண்டு, சீனாவின் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் (AIIB) இணைய வேண்டாம் என்ற வாஷிங்டனின் முறையீடுகளை பிரதான ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் செவிமடுக்கவில்லை.
ரஷ்யா மற்றும் சீனாவுடனான உறவுகள் மீதான மோதல்களால், பிரான்சில் உள்ள பெருநிறுவனங்கள் மட்டும் பத்து பில்லியன் கணக்கான யூரோ விலையாக கொடுத்திருக்கும். ரஷ்யா மீதான தடையாணைகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு டோட்டல் எண்ணெய் நிறுவனம், சீனாவிடம் நிதியுதவி கோரி, அதன் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு செயல்பாடுகளுக்கு மறுநிதியாக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டது, இந்தாண்டு பிரான்கோ-சீன திட்டமான Hinkley Point அணுசக்தி ஆலையை நிறுத்துவதென்று பிரிட்டிஷ் அரசாங்கத்தின் திடீர் முடிவை Électricité de France (EDF) எதிர்கொண்டது.
நவம்பரில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களின் முடிவு நிச்சயமின்றி இருக்கும் நிலையில் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதென்று ஜூனில் பிரிட்டன் வாக்களித்ததை அடுத்து, இத்தகைய முரண்பாடுகள் இப்போது தீவிரமடைந்து வருகின்றன.
பிரிட்டன் வெளியேறுவது மீதான வாக்கெடுப்பு, TTIP பேச்சுவார்த்தைகளில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்துள் இருந்த வாஷிங்டனின் மிக நெருக்கமான முக்கிய கூட்டாளியை வெளியேற்றியது. சர்வதேச பொருளாதாரத்திற்கான பீட்டர்சன் பயிலகத்தின் Gary Hufbauer ராய்டர்ஸ் க்கு தெரிவிக்கையில், “எனது பார்வையில், பிரிட்டன் வெளியேறுவது என்றானதும் TTIP முடங்கிவிட்டது அல்லது உயிரிழந்துவிட்டது,” என்றார்.
ஒருபுறம் வாஷிங்டனுக்கும் இலண்டனுக்கும், மறுபுறம் ஜேர்மன் மேலாளுமை கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பொருளாதார முரண்பாடுகள் இப்போது கடுமையான இராஜாங்க மற்றும் இராணுவ விரோதங்களுடன் சேர்ந்து அதிகரித்தளவில் ஒன்றோடொன்று பின்னப்பட்டாக ஆகி வருகிறது. பிரிட்டன் வெளியேறுவது என்றானதும், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய அரசாங்கங்களும் மற்றும் பேர்லினில் காப்ரியலை சுற்றியுள்ள சக்திகளும் ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளை பிரிட்டன் அணுகுவதை தடுப்பதன் மூலமாக அதை தண்டிப்பதற்கும் மற்றும் வெளியுறவு கொள்கைகள் மற்றும் பாதுகாப்புத்துறையை வாஷிங்டனிடம் இருந்து இன்னும் அதிக சுதந்திரமாக அபிவிருத்தி செய்வதற்கும் அழைப்புவிடுத்தன.
மிக முக்கியமாக பிரிட்டன் வெளியேற்றம் மீது கடுமையான போக்கிற்கும் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மற்றும் இராணுவ கொள்கையை இன்னும் அதிக சுதந்திரமாக்குவதற்கும் அழைப்புவிடுத்துள்ள அதே சக்திகள் தான், TTIP மீதான பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துவிட்டதாக வலியுறுத்தி வருகின்றன.
TTIP பேச்சுவார்த்தைகள் சிக்கலில் இருப்பதாக இந்த வாரயிறுதியில் பகிரங்கமாக அறிவித்த முதல் உயர்மட்ட அதிகாரி காப்ரியல் ஆவார். வாஷிங்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் 14 சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரும், விவாதிக்கப்பட்ட 27 TTIP பிரிவுகளில் ஒன்றில் கூட உடன்படவில்லை என்றவர் தெரிவித்தார். அவர் கூறுகையில், “என்னை பொறுத்த வரையில், நிஜத்தில் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைகள் நடைமுறையில் தோல்வியடைந்துள்ளன… அமெரிக்கா அந்த பேச்சுவார்த்தைகளில் குறைந்தபட்ச ஐரோப்பிய ஒன்றிய நடைமுறைகளை கூட ஏற்க தயங்குகிறது, இந்நிலைப்பாடு மாறாத வரையில், அந்த உடன்பாட்டை முடிப்பதற்கான சாத்தியக்கூறு எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை,” என்றார்.
இத்தாலிய அதிகாரிகளும் TTIP பேச்சுவார்த்தைகளில் அவர்களின் அவநம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர். கடந்த மாதம் இத்தாலிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கார்லோ கலென்டா ll Corriere della Sera க்கு கூறுகையில், “நிஜமாக எதிர்பார்த்ததை விட [TTIP] பேச்சுவார்த்தைகள் நிறைய காலமெடுக்கும்… இந்தாண்டின் இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பதவியிலிருந்து விலகுவதற்கு முன்னதாக ஓர் உடன்பாட்டை எட்டுவது சிரமமே,” என்றார்.
இதே வட்டாரங்களில் இருந்துதான், பிரிட்டனை பொருளாதாரரீதியில் நசுக்கும் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நிலைப்பாட்டுக்கு அதை அடிபணிவிக்க நிர்பந்திக்கும் ஒரு கடுமையான போக்கை எடுக்குமாறு தொடர்ந்து அழைப்புகள் வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் "பிரிட்டனுக்கு நல்ல விடயங்களை மட்டும் வழங்குவதற்கு அல்ல, ஒரு பேச்சுக்கு கூறுவதானால், ஐரோப்பா சம்பந்தமாக எந்த பொறுப்பும் எடுத்துக் கொள்ளாமல் இருக்க அனுமதிக்க" கூடாது என்று காப்ரியல் தெரிவித்தார்.
இதே உணர்வுகள் ஜேர்மனியின் நேற்றைய Sueddeutsche Zeitung இல் Stefan Kornelius இன் கட்டுரையில் எதிரொலித்தன: “ஆணவமான காரணங்களாக இருந்தாலும், பிரிட்டனை ஏன் ஒரு எடுத்துக்காட்டாக ஆக்க கூடாது? … இலண்டனுக்கு எதிரான கடுமை பழைய குச்சியெடுக்கும் கட்டுப்பாட்டு முறை, பலசாலியுடன் நிற்பது தான் புத்திசாலித்தனம் என்பதை அறியச் செய்யும். மேலும் ஐரோப்பிய ஒன்றியம் பலமானது, அதில் எந்த கேள்வியும் கிடையாது. அதனால் தான் மேலாதிக்க உணர்வு இருக்கிறது,” என்றார்.