Print Version|Feedback
European Council president backs demands for EU military buildup
ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஐரோப்பிய ஒன்றிய இராணுவப் பெருக்கத்திற்கான கோரிக்கையை ஆதரிக்கிறார்
By Alex Lantier
14 September 2016
ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவரான டொனால்ட் டஸ்க் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசுகளின் தலைவர்களை பிரடிஸ்லாவாவில் வெள்ளியன்று நடைபெறவிருக்கும் உச்சிமாநாட்டிற்கு முறைப்படி அழைப்பதற்காக அவர்களின் பெயருக்கு எழுதப்பட்ட கடிதங்களை நேற்று மாலை அனுப்பினார். கண்டமெங்குமான அதிகாரிகளுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தைகளை சுருங்கக் கூறும் விதத்திலும், அதிகரித்துச் செல்லும் அரசியல் சீரின்மையின் ஒரு சித்திரத்தை வரைந்து காட்டும் விதத்திலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதானது ஒட்டுமொத்த ஒன்றியத்துக்குமான ஒரு வரலாற்று நெருக்கடியை கட்டவிழ்த்து விட்டிருப்பதாக டஸ்க் அறிவித்தார்.
“ஐக்கிய இராச்சிய வாக்கெடுப்பில் எதிர்மறை முடிவு கிட்டியமையானது குறிப்பாய் ஒரு பிரிட்டிஷ் பிரச்சினை என்று கருதுவது ஒரு அபாயகரமான பிழையாக இருக்கும்” என்று அவர் எழுதினார். அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்: “ஐரோப்பிய மக்கள் தங்களை வியாபிக்கின்ற, நோக்குநிலைமாற்றுகின்ற, சில சமயங்களில் பயமுறுத்துகின்ற நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுப்போக்குகள் மீதான கட்டுப்பாட்டை மீட்சி செய்யும் திறன் அரசியல் உயரடுக்குகளுக்கு இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பாகமாக இருப்பது ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பின் பாதைக்கான இடையூறாய் நிற்பதாக, ஐக்கிய ராச்சியத்தில் இருப்பவர்கள் மட்டுமல்லாது, பலரும், கருதுகின்றனர்.”
1930களுக்குப் பிந்தைய காலத்தில் உலக முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடிக்கு மத்தியில் ஐரோப்பிய மக்கள் படும் பொருளாதாரத் துன்பம் மற்றும் அவர்களது சமூக கோபத்தை கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் ஒரேயொரு இடத்தில் டஸ்க் சுருக்கமாய் எழுதியிருந்தார்: “ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களும் தமது பொருளாதார மற்றும் சமூக நலன்களை ஐரோப்பிய ஒன்றியம் மேம்பட்ட வகையில் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.”
ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடி ஐரோப்பாவில் ஜனநாயகத்தில் உயிர்வாழ்வையே அச்சுறுத்தும் அளவுக்கு ஆழமாக இருப்பதை ஒப்புக்கொள்ளும் அளவுக்கு டஸ்க் சென்றார்: “சுதந்திரத்தில் இருந்தும் ஐரோப்பிய ஒன்றியம் ஸ்தாபிக்கப்படுவதற்கு அடித்தளங்களாக இருந்த மற்ற அடிப்படையான விழுமியங்களில் இருந்தும் பாரிய அளவில் விலகிச் செல்வதற்கு இது இட்டுச் செல்லக் கூடும் என்பதை வரலாறு நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது.” செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு 15 ஆண்டுகளுக்குப் பின்னர், “பயங்கரவாதத்தின் மீதான போர்” நவ-பாசிச சக்திகளை வலுப்படுத்தியிருக்கிறது என்று டஸ்க் எச்சரித்தார். “பயங்கரவாதத்தை தாட்சண்யமற்று நசுக்குவதற்கான வாக்குறுதி வலது-சாரி தீவிரவாதிகளின் பிரதான சுலோகங்களாக ஆகியிருக்கின்றன” என்று அவர் எழுதினார்.
சூழ்நிலை குறித்த தனது சொந்த மதிப்பீட்டிற்கு டஸ்க் அளிக்கும் பதிலிறுப்பு ஐரோப்பிய ஒன்றிய பாதுகாவலர்களின் வரலாற்றுத் திவால்நிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஐரோப்பிய முதலாளித்துவத்தின் சட்டம் ஒழுங்கு, புலம்பெயர் விரோதக் கொள்கைகள் நவ-பாசிச சக்திகளை வலுப்படுத்துவதோடு நிலைகுலைந்து எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களாக மாற அச்சுறுத்துவதை ஒப்புக் கொண்ட பின்னர் அதே கொள்கைகளை - அதாவது இராணுவ மற்றும் போலிஸ் படைகளை வலுப்படுத்துவதற்கும் அகதிகள் மீதான அடக்குமுறையைத் தீவிரப்படுத்துவதற்கும் - தொடர்வதற்கே டஸ்க் அழைப்பு விடுக்கிறார்.
“இந்த பொருட்சூழலில், நமது வெளிப்புற எல்லைகளின் மீதான திறம்பட்ட கட்டுப்பாடே முதலாவதாய் வருகிறது, அது நடைமுறைரீதியான பரிமாணங்கள் மற்றும் அடையாளரீதியான பரிமாணங்கள் இரண்டையும் கொண்டிருக்கிறது” என்று அவர் அறிவித்தார். தஞ்சம் புகுவதற்கு அகதிகளுக்கு இருக்கும் உரிமைகளைப் பாதுகாப்பவர்களின் மீது தாக்கிய அவர், “ஐரோப்பா ஒரு கோட்டையாக முடியாது என்ற அரசியல்ரீதியாக சரியான கூற்றுகளை” கண்டனம் செய்து, சிரியா மற்றும் ஈராக்கில் இருந்து தப்பி பால்கன்கள் வழியாக ஐரோப்பாவுக்கு தப்பி வரும் அதிகதிகளைத் தடுப்பதற்கான அழைப்புகளை வழிமொழிந்தார்.
ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போர் முனைப்புக்கும் அத்துடன் பொருளாதாரரீதியாக நாசகரமான சமூக சிக்கன நடவடிக்கை கொள்கைகளுக்கும் ஆதரவாக ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தில் நிலவக் கூடிய கருத்தொற்றுமையின் பின்னால் டஸ்க் ஓசையின்றி தன்னைப் பின்னால் நிறுத்திக் கொண்டார். ஐரோப்பாவில் இருக்கும் பத்து மில்லியன் கணக்கான வேலைவாய்ப்பற்ற தொழிலாளர்கள் குறித்தும், கிழக்கு ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் தலையீடுகளை நேட்டோ தீவிரப்படுத்துகின்ற நிலையில் ரஷ்யாவின் எல்லைகளிலோ அல்லது சிரியாவிலோ நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் ஒரு இராணுவ மோதல் உருவாகும் அபாயம் குறித்தும் அவர் வாய்திறக்கவில்லை.
ஐரோப்பிய ஒன்றியத்தை வெளிநாடுகளில் பெரும் போர்களை நடத்துவதற்கும் உள்நாட்டில் பெரிய அளவிலான போலிஸ் நடவடிக்கைகளை நடத்துவதற்கும் திறம்படைத்த ஒரு இராணுவக் கூட்டணியாக உருமாற்றுவதன் மூலம் அதன் உடைவைத் தடுத்து நிறுத்த ஜேர்மனியும் பிரான்சும் வழங்கிய ஆலோசனைமொழிவுகளை - அவை ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு ஆவணங்களில் முன்னோட்டம் கண்டன - டஸ்கின் கடிதத்தின் மூலமாக ஐரோப்பிய ஒன்றிய எந்திரம் ஆதரித்துக் கொண்டிருக்கிறது.
இதேபோல, வெளியுறவு விவகாரங்களுக்கான ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவின் தலைவரான எல்மார் புரோக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவத் திறன்களை அதிகப்படுத்துவதற்கும் சிரியாவில் தலையீடு செய்வதற்கும் நேற்று அழைப்பு விடுத்தார்.
ஐரோப்பிய ஒன்றியம் “மிகப் பலவீனமாக” இருப்பதாகவும் “அதனிடம் எந்த அரசியல் அதிகாரமும் இல்லை” என்றும் புகார் கூறிய புரோக் கூறினார்: “ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் [ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவரான] Jean-Claude Juncker நாளை வழங்கவிருக்கும் உரையும், எல்லாவற்றுக்கும் மேல், அரசு மற்றும் அரசாங்கத் தலைவர்கள் இந்த வாரத்தில் பிரடிஸ்லாவாவில் கூடிப் பேசவிருப்பதும் இறுதியாக இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும், ஐரோப்பிய காவல் மற்றும் பாதுகாப்புக் கொள்கை ஒன்றை கட்டியெழுப்பும், அத்துடன் பொதுவான கட்டமைப்புகளை கட்டியெழுப்பும், அதன் மூலமாக, நமது நலன்களும் விழுமியங்களும் பணயமாய் இருக்கும்போது நாமும் ஒரு பாத்திரத்தை ஆற்ற முடியும் என்றும் நான் நம்புகிறேன்... இறுதியில் ஐரோப்பா வந்துசேரும் என்பதற்காக சிரிய எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன என்பதை நான் அறிவேன்.”
ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு இராணுவ-போலிஸ் ஆட்சியாக மீண்டும் மாற்றுவதற்கான இத்தகைய நப்பாசையான முயற்சிகள் முதலாளித்துவத்தின் ஒரு வரலாற்று பொறிவுக்கு சாட்சியமளிக்கின்றன. 1991 இல் ஸ்ராலினிசம் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்த பின்னர், 1992 இல் அமைதி, வளமை மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க உத்திரவாதமளித்து மாஸ்ட்ரிச்ட் ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தை ஸ்தாபித்ததற்கு இருபத்தைந்து ஆண்டுகளின் பின்னர், ஐரோப்பிய முதலாளித்துவமானது இந்த வாக்குறுதிகளை முற்றிலுமாய் மறுதலித்திருக்கிறது. தன்னிடம் தீர்வுகள் இல்லாத பொருளாதார நெருக்கடிகளாலும், தனது மூர்க்கத்தனமான போர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்திலான அதிகரித்துச் செல்லும் சமூகக் கோபம் ஆகியவற்றின் பெருகும் பின்விளைவுகளாலும் சூழப்பட்டு, அது தனது ஒவ்வொரு முயற்சியையும் ஒடுக்குமுறை மற்றும் போருக்காய் அர்ப்பணிக்கிறது.
ஐரோப்பிய சக்திகள் இடையிலான வரலாற்றுரீதியான வேருடைய மோதல்களைக் கட்டுப்படுத்துவதிலோ அல்லது நிவர்த்தி செய்வதிலோ ஐரோப்பிய ஒன்றியம் தோல்வி கண்டுள்ளமை தான் ஐரோப்பிய சர்வதேச உறவுகளில் மேலாதிக்கம் செலுத்துகிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஸ்தாபிக்கப்படும் முன்னதாக, பிரிட்டனும் பாரிசும் ஜேர்மனி மறுஇணைவு காண்பதன் விளைவுகளைக் கண்டு மிரட்சியுற்றிருந்தன. அச்சமயத்தில் பிரான்சின் ஜனாதிபதியான பிரான்சுவா மித்திரோன், ஒரு நெருக்கமான பொருளாதாரரீதியான ஒன்றியத்திற்கு ஜேர்மன் துணை சான்சலரான Hans-Dietrich Genscher உடன்பட வேண்டும் இல்லையேல் முதலாம் உலகப் போரின் சமயத்தில் போல ஜேர்மனிக்கு எதிராய் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ரஷ்யா ஒரு கூட்டணி அமைக்கின்ற சாத்தியத்திற்கு முகம்கொடுக்க வேண்டும் என்று கூறியது பிரசித்தி பெற்றதாகும்.
அதேபோன்ற பொருளாதார மற்றும் புவிமூலோபாய மோதல்கள், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து அது வெளியேறுவது தொடர்பான நிபந்தனைகள் குறித்த பல ஆண்டுகால கடுமையான பேச்சுவார்த்தைகளுக்கு முகம்கொடுக்கும் நிலையிலும், அத்துடன் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் எஞ்சியிருக்கும் கிழக்கு ஐரோப்பிய அரசுகளுக்கும் இடையில் மோதல்கள் அதிகரித்துச் செல்கின்ற நிலையிலும், மீண்டும் எழும்பிக் கொண்டிருக்கின்றன.
யூரோப்பகுதி, இரண்டாம் மற்றும் மூன்றாம் இட பொருளாதாரங்களான பிரான்ஸ் மற்றும் இத்தாலி உள்ளிட ஒரு குரோதமான தெற்கு ஐரோப்பிய அணி உருவாவதற்கு எதிராக ஜேர்மன் ஊடகங்கள் எச்சரித்திருந்த நிலையில், நேற்று, லுக்சம்பேர்கின் வெளியுறவு அமைச்சரான Jean Asselborn ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஹங்கேரியை வெளியேற்ற வேண்டும் என்று திட்டவட்டமான கோரிக்கை விடுத்தார். ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பனின் பிற்போக்குத்தனமான, புலம்பெயர்வு விரோதக் கொள்கைகள் மனித உரிமைகளுக்கான ஒரு அபாயமாய் இருப்பதாக Asselborn எச்சரித்தார்.
ஹங்கேரியில் “போருக்குத் தப்பி வருகின்ற மக்கள் காட்டு மிருகங்களை விடவும் மோசமான வகையில் நடத்தப்படுகின்றனர்” என்று ஜேர்மனியின் Die Welt யிடம் பேசிய Asselborn தெரிவித்தார். மத்திய கிழக்கில் இருந்து வரும் அகதிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக ஹங்கேரியின் தெற்கு எல்லைகளைச் சுற்றிலும் வேலி எழுப்பப்பட்டுவதைத் தாக்கிய அவர், “அது எப்போதும் நீளமாகவும், உயரமாகவும், கூடுதல் அபாயகரமானதாகவும் ஆகிச் செல்கிறது. அகதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதில் இருந்து ஹங்கேரி வெகுதூரத்தில் இல்லை” என்று எச்சரித்தார்.
”தனது எல்லைகளுக்கு வெளியே சில விழுமியங்களை பாதுகாத்து நிற்பதாக” கூறிக் கொள்கின்ற ஐரோப்பிய ஒன்றியம் “இனியும் தனது சொந்தப் பிராந்தியத்தில் அவற்றை முன்னெடுக்கும் திறன் இல்லாதிருக்கிறது” என்று அவர் புகாரிட்டார். “ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்தில் இருந்து ஒரு நாட்டை நிறுத்தி வைப்பதற்கு [ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிடையே] கருத்தொற்றுமை இனியும் அவசியமில்லை என்றவாறாய் விதிகள் மாற்றப்பட்டால் அது உதவிகரமாய் இருக்கும்” என்றார் அவர்.
பல்வேறு ஐரோப்பிய சக்திகளும் புவிமூலோபாய அனுகூல நிலைக்காய் மல்லுக்கட்டுகின்ற நிலையில் அவை எத்தகைய கபடநாடக பரப்புரையில் ஈடுபடுகின்றன என்பதற்கு Asselborn இன் கருத்துகள் மிகச்சிறந்த உதாரணமாய் திகழ்கின்றன. ஹங்கேரியின் புலம்பெயர்வு விரோதக் கொள்கைகளை தாக்கும் அவர், உதாரணமாய், பிரான்ஸ் கலேயில் அகதிகள் முகாமை இரக்கமற்ற வகையில் அகற்றிக் கொண்டிருக்கிறது, அகதிகள் பிரிட்டனுக்கு பயணிப்பதில் இருந்து தடுக்க வேலிகளைக் கட்டுகிறது, அத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவோரைத் தாக்குவதற்கும் கைதுசெய்வதற்கும் போலிசை அனுப்புகிறது என்ற நிலையில் அதனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஏன் வெளியேற்றக் கோரவில்லை என்பதற்கு விளக்கமளிக்க மறுக்கிறார்.
Der Spiegel தன் பங்கிற்கு பிரெக்ஸிட்டின் பாதிப்புகள் குறித்தும், செப்டம்பர் 9 அன்று பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், சைப்ரஸ் மற்றும் மால்டா ஆகிய நாடுகளிடையே ஏதென்ஸில் நடந்த உச்சிமாநாடு குறித்தும் “The New Strength of Club Med” என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில் எச்சரித்தது. பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் “பொருளாதார வளர்ச்சி வேலைத்திட்டம்” ஒன்றுக்கும் இத்தாலிய பிரதமரான மாத்தியோ ரென்ஸி 50 பில்லியன் யூரோ முதலீட்டு நிதிக்கும் அழைப்பு விடுத்ததை அவர் சுட்டிக் காட்டினார்.
“பிரெக்ஸிட் மூலமாக பிரிட்டன் என்ற ஒரு சக்திவாய்ந்த கூட்டாளியை” பேர்லின் இழந்ததால், பேர்லினில் இருந்து உத்தரவிடப்படுவதான ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளின் ஒரு தளர்வுக்கு, தெற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகின்ற அழைப்புகளுக்கு வலுவூட்டியிருப்பதாக அக்கட்டுரை முடிவுக்கு வந்திருந்தது. “ஐரோப்பிய ஒன்றியத்தில் பாதிக்கும் மேல் நாம் பிரதிநிதித்துவம் செய்வதால், அது நமக்கு பலத்தைக் கொடுக்கிறது” என்றார் ரென்ஸி.
உண்மையில், ஹாலண்ட், ரென்ஸி மற்றும் அவர்களுக்கு விருந்தளித்த கிரேக்கப் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் அனைவருமே அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வங்கிகளின் இலாபங்களை அதிகப்படுத்துகின்ற ஒரே முயற்சியில் தொழிலாள வர்க்கத்தின் மீது சிக்கன நடவடிக்கைகளைத் திணித்திருக்கின்ற ஆழமான மக்கள்விரோத அரசாங்கங்களின் சார்பாகப் பேசுகின்றனர். இருந்தும், இந்த இலாபங்களைப் பங்குப்போடுவதில் ஆளும் வட்டாரங்களுக்குள் நடக்கும் யுத்தத்திற்கு மத்தியில், அவர்களது கருத்து ஜேர்மனியின் நிதி அமைச்சரான வொல்ஃப்காங் ஷொய்பிள இடம் இருந்து ஒரு பதிலடியை வரவழைத்தது. “சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர்கள் சந்தித்துப் பேசும்போது, அதிபுத்திசாலித்தனமான எதுவொன்றும் வந்துவிடப் போவதில்லை” என்றார் அவர்.