Print Version|Feedback
නිෂ්පාදන පලදායිතාව මත පාදක වැටුප් ක්රමය වහා ක්රියාවට දැමිය යුතුයැයි වැවිලි කර්මාන්ත ඇමති අවධාරනය කරයි
இலங்கை: உற்பத்தித் திறன் அடிப்படையிலான சம்பள முறையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்
W.A. Sunil
23 September 2016
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை உற்பத்தி திறனுடன் முடிச்சுப் போட்டுவிடும் உத்தேச “வருமானப் பங்கீடு” என்ற புதிய சம்பள முறையை மேலும் தாமதப்படுத்தாமல் உனடியாக அமுல்படுத்த வேண்டும் என செம்படெம்பர் 9 அன்று நடந்த இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் வருடாந்த பொதுச் சபை கூட்டத்தில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க வலியுறுத்தினார்.
பெருந்தோட்டத் தொழிற்துறை எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு "தொழிற் சங்கங்கள் போலவே பிரதேச தோட்டக் கம்பனிகளும் பொறுப்புக் கூறவேண்டும்” என அமைச்சர் திசாநாயக்க அங்கு வாய்சவடால் விட்டு தொழிற்சங்கங்கள் மற்றும் தோட்ட கம்பனிகள் மீதும் குற்றம் சுமத்தும் வகையில் பேசிய போதிலும், உண்மையில் அவர் நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்களின் தோள்களில் விரைவில் சுமத்துவதற்கு முயற்சிக்கும் தோட்ட கம்பனிகளுக்காக பிரச்சாரம் செய்பவராக முன்னணிக்கு வந்துள்ளர்.
தோட்டக் கம்பனிகள் "இதைவிட பிடிவாதமான நிலைப்பாடு" கொண்டிருந்தால் அத்தகைய சம்பள முறையை ஆரம்பத்திலேயே நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருந்திருக்கும், என்று திசாநாயக்க அங்கு சமிக்ஞை செய்ததாக, டெய்லி எஃப்.டி. பத்திரிகை செய்தி சுட்டிக்காட்டுகிறது. ஆனால், தோட்டக் கம்பனிகள் “பிடிவதாமான நிலைப்பாடு” எடுக்கத் தவறியமை பற்றிய திசாநாயக்கவின் கருத்து, பொய்யானதும் அதே போல் வஞ்சகமானதுமாகும். உண்மையில், தோட்ட கம்பனிக்ள மட்டுமன்றி, திசாநாயக்க உட்பட அரசாங்கமும் தொழிற் சங்கங்களும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உற்பத்தித் திறனுடன் பிணைத்து விடுவதற்கு தீவிரமாக முயன்று வருகின்றன.
அதன் ஆரம்ப நடவடிக்கையாகவே, 2013ல் கைச்சாத்திடப்பட்ட கூட்டு சம்பள உடன்படிக்கையில், வேலைச் சுமையை அதிகரிக்கும் நிபந்தனைகள் தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால் தொழிற் சங்கங்ளின் அனுமதியுடன் தோட்டக் கம்பனிகளால் உள்ளடக்கப்பட்டது. இதன் மூலம் நாளொன்றுக்கு பறிக்கும் தேயிலைக் கொழுந்தின் அளவு 16 கிலோ முதல் 18 மற்றும் 20 கிலோ வரை அதிகரிக்க எடுத்த முயற்சிகள், தோட்டத் தொழிலாளர்களின் மத்தியில் வளர்ந்த எதிர்ப்பினாலேயே தோல்வியடைந்தன. தொழிற் சங்கங்களின் குழிபறித்த போதிலும், அதற்கு எதிராக ஹட்டன், மஸ்கெலியா போன்ற பிரதேசங்களில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்களிலும் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு மார்ச்சில் அந்த கூட்டு ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னர், நாள் சம்பள அதிகரிப்பை தொடர்ச்சியாக ஆணவத்துடன் நிராகரித்து வந்த தோட்டக் கம்பனிகள், தொழிலாளர்களின் சம்பளத்தை உற்பத்தித் திறனுடன் முடிச்சுப் போட்டுவிட்டு உழைப்புச் சுரண்டலை தீவிரப்படுத்தும் "வருமானப் பகிர்வு” முறையை பிரேரித்தன. இந்த வருமானப் பகிர்வு முறையின் படி, தொழிலாளர்களிடம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேயிலை செடிகள் பராமரிக்கவும் கொழுந்து பறிக்கவும் ஒப்படைக்கப்படும் அதேவேளை, வருமானத்தில் உரம் மற்றும் விவசாய இரசாயனப் பொருட்கள் போன்றவற்றுக்கான செலவுகளை வெட்டிக்கொண்டு, மிச்சத்தில் அற்பத் தொகை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும். இது தொழிலாளர்களை குத்தகை விவசாயிகள் முறைக்கு அடிபணியச் செய்வதாகும். மதுரட்ட பெருந்தோட்டம் உட்பட பல தோட்டக் கம்பனிகள், ஏற்கனவே இதை பரீட்சித்துள்ளதோடு தொழிலாளர்களின் எதிர்ப்பினால் திட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் தோட்டக் கம்பனிகள் வெற்றியடையவில்லை.
தொழிற்சங்கங்கள் எந்த விதத்திலும் இந்த உத்தேச திட்டத்தை எதிர்க்கவில்லை. அதை ஒரே நேரத்தில் செயல்படுத்துவதனால் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு தீவிரமான சமூக வெடிப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் இருப்பது பற்றி தொழிற்சங்கங்கள் போலவே அரசாங்கமும் அஞ்சியது. அரசாங்கத்தினதும் தொழிற்சங்கங்களினதும் ஆதரவுடன், புதிய சம்பள முறையை சுற்றிவளைத்து திணிக்கும் ஒரு தந்திரத்தைப் பற்றி கம்பனிகள் கடந்த மாதம் ஆலோசனை செய்திருந்தன. அது வேலை நாட்களில் 12 தினங்களுக்கு நடப்பில் உள்ள நாள் சம்பள முறையின் படி ஊதியம் கொடுக்கவும், எஞ்சிய நாட்களுக்கு கொழுந்து பறிக்கும் அளவுக்கு ஏற்ப சம்பளம் கொடுப்பதற்குமான இரட்டை முறையாகும். இந்த திட்டத்திற்கு தொழிலாளர்களை உடன்பட வைக்கும் உத்தியாக, 12 வேலை நாட்களுக்கு நாளொன்றுக்கு 100 ரூபாவை சேர்த்து அன்றாட ஊதியத்தை 620 ரூபாவில் இருந்து 720 ரூபா வரை அதிகரிப்பதாக கம்பனிகள் கூறுகின்றன.
தொழிலாளர்களின் கண்களில் மண்ணை தூவி, இந்த திட்டத்தை செயல்படுத்த வழிவகுப்பதற்காக, மாதம் 2,500 ரூபா படி, இரண்டு மாதங்களுக்கு மேலதிக கொடுப்பனவு கொடுப்பதற்காக தோட்டக் கம்பனிகளுக்கு அரசாங்கம் 1,000 மில்லியன் கடன் வழங்கியுள்ளது. புதிய ஒப்பந்தம் இரண்டு மாதங்களுக்குள் கைச்சாத்திடப்பட வேண்டும் என தொழில் அமைச்சர் W. J. செனவிரத்ன தொழிற்சங்கங்களை வலியுறுத்தினார்.
உத்தேச புதிய சம்பளத் திட்டத்தை அமுல்ப்படுத்த அரசாங்கமும் தோட்டக் கம்பனிகளும் செய்யும் சதிகளுக்கு முண்டுகொடுக்கும் தொழிற்சங்கங்கள், அதை ஒரு வெற்றி என தொழிலாளர்களிடம் கூறின. முந்தைய முதலாளித்துவ அரசாங்கங்களை போலவே, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமும், தொழிலாளர்களின் உரிமைகள், ஊதியங்கள் மற்றும் பிற கோரிக்கைகளை வழங்குதவற்கு தயாராக இல்லை. பெருந்தோட்டத் தொழிற்துறையின் நடப்பு நெருக்டிக்குள் தொழிலாளர்களின் ஊதிய கோரிக்கைகள் சம்பந்தமாக அரசாங்கத்தினதும் கம்பனிகளதும் நிலைப்பாடு இரண்டு அல்ல, ஒன்றே ஆகும். பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில், அதன் தலைவர் இராஜதுரையும் பிரதமர் விக்கிரமசிங்கவும் தெரிவித்த கருத்துக்கள் அதை மேலும் நிரூபிக்கின்றன.
அங்கு, "எத்தகைய அழுத்தங்கள் கொடுத்தாலும் நீங்கள் சம்பாதிக்காததை அல்லது உங்களிடம் இல்லாத ஒன்றை உங்களால் கொடுக்க முடியாது" எனக் கூறிய இராஜதுரை, "தொழிற்துறையை வறுமையில் தள்ளிவிடும் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டாம் என்று தொழிலாளர்களையும் தொழிற்சங்கங்களையும்" எச்சரித்தார். இராஜதுரையின் கருத்து, தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு அச்சுறுத்தலாகும். உண்மையான உற்பத்தியாளர்கள் தொழிலாளிகளே. தொழிலார்களிடம் உழைப்பைச் சுரண்டுவதன் மூலம் இலாபத்தை சூறையாடுவதையே இராஜதுரை உட்பட முதலாளித்துவ ஒட்டுண்ணிகள் செய்கின்றனர். தோட்டத் தொழிலாளர்கள் தமது முன்னைய போராட்டங்கள் ஊடாக வென்ற கொஞ்ச நஞ்ச சமூக நலன்களையும் அபகரித்து, உற்பத்தி திறனுடன் பிணைத்து விட்டு, உழைப்பை சுரண்டுவதை உக்கிரமாக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் இராஜதுரை உட்பட பெரும் முதலாளிகள் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்களை மேலும் வறிய நிலைக்குள் தள்ளி இலாபத்தை அதிகரித்துக்கொள்ளவே முயற்சிக்கின்றனர்.
பெருந்தோட்டக் கம்பனிகளின் மூர்க்கத் திட்டத்திற்கு உடந்தையாய் இருந்த பிரதமர் விக்கிரமசிங்க, "சந்தையில் கடினமான நிலைமைகள் காரணமாக, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாக உறுதியான ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்வது சிரமம், அவர்கள் கேட்கும் சம்பகள அதிகரிப்பை கொடுக்க முடியாது" என்று கூறினார்.
அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத பண்பு இந்தளவு கண்முன்னே நிரூபிக்கப்பட்டுள்ள போதும், தொழிற்சங்க அதிகாரத்துவம் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தை தொழிலாளர்-சார்பு அரசாங்கம் என சித்தரிக்க முயல்கின்றன. எனினும், அது தற்செயலானது அல்ல. தேசிய தொழிலாளர் சங்கம், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியும் அரசாங்கத்தின் பங்குதாரர்களாகும். மற்றும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமானது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலானதாகும். இப்போது எதிர்க்கட்சியில் இருக்கும் தொழிற்சங்கங்களும், குறிப்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஆட்சிக்கு வரும் எல்லா முதலாளித்துவ அரசாங்கங்களிலும் அங்கம் வகித்துள்ளது. எவ்வாறெனினும், முதலாளிகளும் முதலாளித்துவ அரசியல்வாதிகளும், தொழிற்சங்கத் தலைவர்களும் அரசாங்கத்தில் இருந்தாலும் சரி, அல்லது எதிர்க் கட்சியில் இருந்தலூம் சரி, அவர்கள் முதலாளித்துவ அரசாங்கத்தினதும் கம்பனிகளதும் நலன்களைக் காக்கவே இருக்கின்றன. தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அர்ப்பணித்துக்கொண்டவை அல்ல.
உலகப் பொருளாதார மந்த நிலை ஆழமாகி, தேயிலை உற்பத்தி செய்யும் கென்யா, இந்தியா போன்ற நாடுகளுடனான போட்டி தீவிரம் அடைந்துள்ளதாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் அரசியல் மற்றும் இராணுவ ஆத்திரமூட்டல்களை மேற்கொண்டுள்ள, முக்கியமாக ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு போன்ற தேயிலை இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமற்ற நிலை காரணமாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை தேயிலை ஏற்றுமதி பெரிதும் சரிந்துள்ளது. தேயிலை ஏற்றுமதி 2014 உடன் ஒப்பிடும்போது 2015ம் ஆண்டில் உற்பத்தி 2.7 சதவிகிதத்தாலும் தேயிலை ஏற்றுமதி வருமானம் 14.3 சதவீதத்தாலும் சரிந்தன. அந்த காலகட்டத்தில், இரப்பர் ஏற்றுமதி வருவாய் 5.9 பில்லியன் ரூபாவில் இருந்து 3.5 பில்லியன் ரூபா வரை 40 சதவீதம் சரிந்தது. பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத் தலைவர் ரொஷான் இராஜதுரை, கடந்த பத்து ஆண்டுகளாக தொழிற்துறை கீழ் நோக்கிச் சுழல்கின்றது என அண்மையில் அறிவித்தார்.
உற்பத்தி திறனை தொழிலாள்களின் சம்பளத்துடன் முடிச்சுப்போட்டு விடுவதற்கும் மேலாக, உலக சந்தைகளில் போட்டியை எதிர்கொள்வதன் பேரில், பல தோட்டக் கம்பனிகளை ஒன்றிணைக்கவும் நட்டத்தில் இயங்கும் தோட்டங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மீண்டும் குத்தகைக்கு கொடுக்கவும் அரசாங்கம் எதிர்பார்கின்றது. அவர்கள் உள்நாடாக இருக்கலாம் அல்லது வெளிநாடாக இருக்கலாம், நட்டத்தில் இயங்கும் தோட்டக் கம்பனிகளை அபிவிருத்தி செய்யக் கூடியவர்களுக்கு கொடுப்பதற்கு நான் பிரேரிக்கின்றேன் என விக்கிரமசிங்க ஹட்டனில் ஆகஸ்ட் 28 அன்று நடைபெற்ற கூட்டத்தில் அறிவித்தார்.
பெருந்தோட்டக் கம்பனிகளும் அரசாங்கமும், தொழிற்சங்கங்களின் உதவியுடன் தோட்டத் தொழிலாளர்கள் மீது நெருக்கடியின் சுமைகளை திணிக்கும் திட்டத்தை விரைவுபடுத்த முடிவு செய்திருப்பது மிகத் தெளிவாகின்றது.