Print Version|Feedback
இலங்கை: வடகடல் நிறுவனம் தொழிலாளர்களின் சம்பள நிலுவையை ஏமாற்றி வருகிறது
S. Ahilan
20 September 2016
வட இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான மீன்பிடி வலைகள் உற்பத்தி செய்யும் வடகடல் (Northsea) தொழிற்சாலையின் 14 தொழிலாளர்களின் சம்பள நிலுவை, ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியையும் வழங்காமல் நிர்வாகம் கடந்த 16 வருடங்களாக ஏமாற்றி வருகிறது.
இந்த 14 தொழிலாளர்களில் இருவரைத் தவிர ஏனையவர்கள் ஓய்வுபெற்று விட்டார்கள். இவர்களில் சிவானந்தசோதி, அரியபுத்திரன் ஆகியோர் மரணமடைந்து விட்டதனால், அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்துக்கு பெரும் சிரமப்படுகின்றன.
உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் பேசிய பொன்னன் நாகேஸ், ஒரு நீரிழிவு நோயாளியாவார். “யுத்த காலத்தில் ஷெல் தாக்குதலால் ஒரு காலை இழந்துள்ளேன். கண்கள் இரண்டும் பார்வை மங்கிவிட்டது. மற்றைய கால் புண் ஏற்பட்டு, மரத்துவிட்டது. மாதாந்தம் சிகிச்சைக்காக போக முடியாத நிலையில் உள்ளேன். எனது மனைவியின் அற்ப வருமானத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். எனது ஒவ்வொரு நாள் வாழ்வும் மிகவும் கஸ்டமான சூழ்நிலையிலேயே கழிகின்றது. இரண்டுபேர் இறந்து விட்டார்கள். எனது வாழ்வு இன்றோ நாளையோ தெரியவில்லை,” என நாகேஸ் தெரிவித்தார்.
தற்போது சுமார் 65 தொழிலாளர்கள் சேவையாற்றும் வடகடல் நிறுவனம், அதன் இப்போதைய தலைவர், ஆளும் ஐ.தே.க. பிரதிநிதியான தி. பரமேஸ்வரனின் கீழ் தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறை மேலும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. தங்கள் உரிமைகளை கேட்கும் தொழிலாளர்களையும் மற்றும் தனக்கு தனிப்பட்ட ரீதியில் பிடிக்காத தொழிலாளர்களையும் தன்னிச்சையாக இடமாற்றுதல் மற்றும் ஆதாரமாற்ற குற்றங்களை சுமத்துதல் போன்றவை இவற்றில் அடங்கும். நிறுவனத்தின் கணக்காளர் ஞானவேல், பழிவாங்கல் இடமாற்றத்தை நிராகரித்தமையினால் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விற்பனை முகவர் மீது நிதி மோசடி குற்றச்சாட்டு சோடிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் தங்களது நிலுவைகளை வழங்கக் கோரி கொழும்பு தொழில் ஆணையாளர், யாழ்ப்பாணம் உதவித் தொழில் ஆணையாளர் மற்றும் யாழ்ப்பாண மனித உரிமை ஆணையளரிடமும் 4 வருடங்களுக்கு முன்னரே முறைப்பாடு செய்திருந்த போதிலும் எந்தவிதமான பயனும் இல்லை. உதவித் தொழில் ஆணையாளர் இது சம்பந்தமாக அனுப்பிய கடிதங்களையும் வடகடல் நிர்வாகம் அலட்சியம் செய்துவிட்டது.
2001ல் சீநோர் (Seanor) நிறுவனத்திடம் இருந்து பிரித்து இந்து கலாச்சார அமைச்சின் கீழ் வடகடல் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது சீநோரில் இருந்து 26 தொழிலாளர்கள் வடகடலுக்கு மாற்றப்பட்டார்கள். அப்போது சீநோர் வழங்கவேண்டிய சம்பள நிலுவையையும் வடகடல் பொறுப்பெடுத்துக் கொண்டது. 26 பேரில் மீதமானவர்களே இந்த 14 பேருமாவர்.
1990ல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தம் உக்கிரமடைந்த நிலமையில், சீநோர் நிறுவனத்தின் காரைநகர் மற்றும் குருநகர் தொழிற்சாலையை இழுத்து மூடுவதற்காக அங்கு பணி புரிந்த 1,500 தொழிலாளர்களையும் “சுயவிருப்பின் பேரில்” ஓய்வுபெறுமாறும் நட்ட ஈடு வழங்குவதாகவும் சீநோர் நிறுவனம் அறிவித்திருந்தது. அவர்களில் 26 தொழிலாளர்களை தவிர ஏனையோர் விலகிச் சென்றுவிட்டனர். தற்போது காரைநகர் தொழிற்சாலை யுத்தத்தினால் சிதையுண்டு போயுள்ளது.
இலங்கை வர்த்தக பொது ஊழியர் சங்க (சீ.எம்.யூ) அங்கத்தவர்களாக 26 பேரும் தங்களுக்கு “நிரந்தர வேலை வேண்டும், நட்ட ஈடு வேண்டாம்” என்ற கோரிக்கையை முன்வைத்தனர். தொழிலாளர்களின் கோரிக்கையை நிர்வாகத்துடன் இணைந்து கீழறுப்பதற்கு சீ.எம்.யூ. தாயாரக இருந்த போதிலும், யாழ்ப்பாணத்தில் இருந்த சீநோர் உறுப்பினர்கள், சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் வழிகாட்டலின் கீழ், தமது கோரிக்கையை வென்றெடுப்பதற்கு உறுதியுடன் நின்றனர்.
தொழிலாளர்களின் தொடர்ச்சியான போராட்டம் காரணமாக, 2001ல் சீ.எம்.யூ. தலமையும் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அரசாங்கமும் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு அமைவாக, “தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்வும், தொழிற்சாலை மூடப்பட்ட நாளில் இருந்து அரை சம்பளம் வழங்கவும்” தீர்மானிக்கப்பட்டு, குருநகர் வலைத் தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்போது, சந்திரிகா குமாதுங்கவின் ஆளும் கூட்டணியின் பங்காளியாக இருந்த, இராணுவத்தோடு சேர்ந்து துணைப்படைக் குழுவாக செயற்பட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சலுகை வழங்குவதன் பேரிலேயே “வடகடல்” நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது. புதிய நிர்வாகத்தின் கீழ் பாரிய வாயளப்புக்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) ஆட்சியிலும் தொழிலாளர் விரோத நடவடிக்கை, முறையற்ற நிர்வாகம், தரமற்ற உற்பத்தி போன்றவற்றினால் மூழ்கிப் போயுள்ளது.
தொழிற்சாலையில் பெரும்பாலான தொழிலாளர்கள் தற்காலிகாமாகவே நீண்டகாலமாகப் பணியாற்றி வருகின்றனர். அதேவேளை, நிறுவனத்தில் கணக்கு வைப்புக்கள் மற்றும் மூலப் பொருட்கள் கொள்வனவு என்பவற்றில் பெரும் ஊழல்கள் நிலவுவதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வடபகுதிக்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்பிடி வலைகளுடன் ஒப்பிடும்போது, குருநகர் தொழிற்சாலையின் உற்பத்திகள் தரம் குறைந்தவை என மீனவர்கள் கூறுகின்றனர். அதேவேளை வடக்கில் தசாப்த கால யுத்தத்தால் சொத்துக்களை இழந்த மீனவர்கள் கொள்வனவு ஆற்றல் குறைந்தவர்களாக உள்ளனர்.
உலகப் பொருளாதார பின்னடைவின் காரணமாக பாரிய ஏற்றுமதி வீழ்ச்சியையும் பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ள சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறும் கடன் தொகைக்காக அதன் கட்டளைகளை அமுல்படுத்தி வருகின்றது. கல்வி, சுகாதாரம் உட்பட அரச நலன்புரி சேவைகளை வெட்டித்தள்ளுவதும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குவதும் இதில் அடங்கும். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தமது தொழிலுக்கு ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இதேவேளை வாஷிங்டன் ஆதரவிலான கொழும்பு அரசாங்கமும் அதற்கு முண்டு கொடுக்கும் அமெரிக்க-சார்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பும், வடக்கில் போரால் வாழ்வாதரம் இழந்து வேலையற்று இருக்கும் உழைப்புப் படையை குறைந்த ஊதியத்துக்கு சுரண்டுவதற்காக, அங்கு முதலீட்டை எதிர்பார்த்திருக்கின்றன. ஏற்கனவே வடக்கில் நிறுவப்பட்டுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் இளைஞர் யுவதிகள் அற்ப சம்பளத்துக்கு உழைக்கத் தள்ளப்பட்டுள்ளனர். வடகடல் நிறுவனத்திலான சுரண்டல்கள் ஒடுக்குமுறைகள் இவற்றின் பாகமாக இருக்கும் அதேவேளை, முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான உதாரணமாகவும் ஆக்கப்படக்கூடும்.
போர் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ளன. வடக்கு மற்றும் கிழக்கும் தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்பில் வைக்கப்பட்டுள்ளன. வேலையின்மையும் வறுமையும் பரவலாக நிலவுகின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலும் மற்றும் தசாப்த காலங்களாக அகதி முகாம்களிலும் வாழத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆட்சிக்கு வந்தால் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்ற போலி வாக்குறுதியுடன் வட மாகாணத்தின் ஆட்சியைக் கைப்பற்றிய தமிழ் கூட்டமைப்பு, தமிழ் முதலாளித்துவத்திற்கு சலுகைகளைப் பெற்றுக்கொள்ள ஏங்குகின்றது. அதற்காக அது சீனா மீது யுத்தம் தொடுப்பதற்கான அமெரிக்காவின் ஆசியாவில் முன்னிலை கொள்கையையும் அமெரிக்க-சார்பு கொழும்பு அரசாங்கத்தையும் ஆதரிப்பதுடன், தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளை விலையாகக் கொடுக்கத் தயாராக உள்ளது.
ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி-ஐ.தே.க., தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) அதே போல் ஏனைய போலி இடது கட்சிகளும் மற்றும் தொழிற்சங்கங்களும் தங்களுக்குள் எத்தகைய வேறுபாடுகள் இருந்தாலும் சுரண்டலை உக்கிரமாக்குவதன் மூலம் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்கள் மீது சுமத்துவதில் ஏகமனதான உடன்பாடுகொண்டுள்ளன.