Print Version|Feedback
සයිටම් විරෝධී සිසු පාගමනට ආන්ඩුව දරුනු පොලිස් ප්රහාරයක් එල්ල කරයි
இலங்கை: தனியார் மருத்துவ பீடத்துக்கு எதிரான மாணவர்களின் கண்டன ஊர்வலத்தின் மீது அரசாங்கம் கொடூரமான பொலீஸ் தாக்குதல்
By Pradeep Ramanayake
05 September 2016
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சங்க ஒன்றியத்தினால் (அ.ப.மா.ஒ.) கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 31) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு ஊர்வலத்தின் மீது சிறிசேன-வி்க்கிரமசிங்க அரசாங்கம் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் வைத்து கொடுரமான பொலிஸ் தாக்குதலை நடத்தியது. தாக்குதலுக்காக கலகம் அடக்கும் பிரிவினதும் பொலிஸ் விசேட படையினதும் சிப்பாய்கள் அணிதிரட்டப்பட்டிருந்ததோடு சுமார் ஒரு மணி நேரம், தண்ணீர் தாக்குதல் மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதலும் மாணவர்கள் மீது நடத்தப்பட்டது.
படம்: மாணவர்களின் ஊர்வலம்
இடைவிடாது நடத்தப்பட்ட கண்ணீர்ப்புகைத் தாக்குதலாலும் ஓடிச்சென்றபோது ஏற்பட்ட விபத்துக்களாலும் நான்கு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் உட்பட பொதுமக்களும் பெரும் துன்பத்துக்கு உள்ளானார்கள்.
ஊர்வலத்தை தடுக்கும் நீதிமன்ற தடையை பேரணியின்போது ஆர்ப்பாட்டக்காரர்களிடம் போலீசார் காட்டியபோது, அவர்கள் அதை மறுத்து முன்சென்றனர். கொள்ளுப்பிட்டி சந்தியில் போடப்பட்டிருந்த வீதித் தடைகளை தூக்கியெறிய ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சித்தபோது, போலீஸ் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது.
படம்: பொலிஸ் கண்ணீர் புகைத் தாக்குதல்
ஊர்வலத்தை தாக்கிய பின்னர், அரசாங்கம் முன்னெப்போதும் இல்லாத அளவில் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, கல்வி தொடர்பான கொள்கைகளை அரசு மட்டுமே தீர்மானிக்கின்றது மாணவர்கள் அல்ல, என்று கூறினார். அதேபோல் பல்கலைக்கழகங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டுள்ளதனால், குற்றம் சுமத்துவதற்கு மாணவர்களுக்கு எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார். எச்சரிக்கையுடன் நிறுத்தாமல், மாணவர்கள் மீதான தாக்குதலை உக்கிரமாக்கி, போலீஸ் அதிகாரிகள் மீது ஊர்வலத்தில் வைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் மாணவர்களை தேடுதல் என்ற பெயரில் அரசாங்கம் வேட்டையாடல் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
இந்த தாக்குதலிலும் அதன் பின்னரும், செயல்படுத்தப்பட்டுள்ள வேட்டையாடலில் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் வெடிக்கும் எந்தவொரு போராட்டத்தையும் இரக்கமின்றி நசுக்குவதற்கு சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்பதே மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
படம்: பொலிஸ் தண்ணீர் தாக்குதல்
ஆழமான பொருளாதார நெருக்கடியில் மூழ்கிப் போயிருக்கும் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை நிலைமைகளை அடுத்தடுத்து வெட்டித் தள்ளுதவதன் மூலமே அதில் இருந்து தலைதூக்க வழி தேடுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளின் கீழ், மேலும் மேலும் இந்த தாக்குதலை உக்கிரமாக்குவதே அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள கடமையாகும். உலக முதலாளித்துவ அமைப்பு முறையையே பற்றிக்கொண்டுள்ள நெருக்கடியின் முன் இலங்கை போலவே உலகம் பூராவும் ஆளும் வர்க்கங்கள் சமாந்தரமாக இத்தகைய தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அதற்கு மாறாக, உலகம் முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட பகுதியினரும் தங்களின் உரிமைகளை வென்றெடுக்க நாளுக்கு நாள் போர்க்குணமிக்கவர்களாக போராட்டத்தில் குத்தித்து வருகின்றனர். இலங்கையில் இந்த வெட்டுக்களின் பகுதியாக தலை தூக்கியுள்ள கல்வி தனியார்மயமாக்கத்துக்கு எதிராக இடைவிடாது போராட்டம் நடத்தும் மாணவர்களின் எதிர்ப்புக்கள் மீது மிருகத்தனமான பொலிஸ் தாக்குதல் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருகின்றது.
எவ்வாறெனினும், இந்த மாணவர்களின் போராட்டங்களில் உச்சத்தில் அமர்ந்து கொண்டிருக்கும் அ.ப.மா.ஒ., தமது கல்வி உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தோற்கடிக்க மாணவர்கள் மத்தியில் தோன்றியிருக்கும் உண்மையான நோக்கத்தை திசை திருப்பி, மாணவர்களை தொடர்ந்தும் குழப்பத்தில் வைத்திருக்க முயற்சிக்கின்றது என்பது புதன்கிழமை ஊர்வலத்தில் மீண்டும் நிரூபிக்கப்பட்டது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் தொடங்கிய ஊர்வலத்தில் எல்லாப் பல்கலைக்கழகத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று இருந்தனர். எந்தவொரு வழியிலும் முதலாளித்துவ முறைக்கு சவால் விடுக்காத மற்றும் அதற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபடுவதைத் தடுப்பதன் பேரில் ஒரு தொகை தீவிர கோஷங்கள் அ.ப.மா.ஒன்றியத்தினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. “சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தை ஓழிப்பதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக” அ.ப.மா.ஒ. முன்னெடுக்கும் தொடர் எதிர்ப்புப் பிரச்சாரத்தின் பாகமாக இந்த ஊர்வலம் நடத்தப்பட்டதோடு அமைதியான கோரிக்கைகளால் பயனில்லாதபோது, ஆட்சியாளர்களோடு “நடு வீதியில் நேருக்குநேர் சந்தித்து” பிரச்சினைகளை தீர்க்க தாம் தீர்மானித்ததாக அ.ப.மா.ஒ. தலைவர்கள் ஊர்வலத்தின் இடையில் வாய்ச்சவடால் விடுத்தனர்.
இத்தகைய வாய்ச்சவடால்களை மாணவர்கள் முன்வைக்கும் அ.ப.மா.ஒ., கல்வி உரிமைகளை அபகரிப்பதையும் தனியார்மயத்தை துரிதப்படுத்துவதையும் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் கைவிடச் செய்ய முடியும் என்ற மாயைக்குள் மாணவர்களை புதைத்து வைத்திருப்பதன் பேரில், அடுத்தடுத்து வெற்று எதிர்ப்பு பிரச்சாரங்களை ஏற்பாடு செய்து வருகின்றது. மருத்துவ பீடம் அடங்கிய அனைத்துல பல்கலைக் கழகங்களுக்கு முன்னாலும் அமைக்கப்பட்டுள்ள "சத்தியாக்கிர மேடைகளில்" மாணவர்களை காக்க வைப்பதும் இவற்றில் அடங்கும்.
தாக்குதல் நடந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, மருத்துவ பீட மாணவர்கள் நடவடிக்கை குழுவின் அழைப்பாளர் ரயன் ஜயலத், “இன்று இவ்வாறு வீதித் தடைகளை கவிழ்த்துவிட்டதாகவும்” நாளை "ஆட்சியாளர்களின் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் பாய்வதற்கு” பொது மக்கள் தம்மோடு ஒன்றிணைய வேண்டும், என்றும் அழைப்பு விடுத்தார். அரசாங்கத்தின் தாக்குதலின் தோற்றுவாயான முதலாளித்துவ அமைப்பு முறையினது நெருக்கடியை மாணவர்களிடம் முழுமையாக மூடி மறைக்கும் அ.ப.மா.ஒ. போலவே அதன் ஆசிரியர்களான முன்னிலை சோசலிசக் கட்சியும் (மு.சோ.க.), முதலாளித்துவ அரசாங்கங்களின் இந்த சிக்கன நடவடிக்கைகள், முதலாளித்துவத்தினால் இயக்கப்படும் "நவ-தாராளவாத பொருளாதாரக் கொள்கையில்” இருந்தே ஊற்றெடுக்கின்றது என்றும், அதை அழுத்தம் கொடுத்து மாற்ற முடியும் என்றும் வஞ்சத்தனமாக கூறுகின்றது.
மாணவர்களையும் பொதுமக்களையும் குழப்பிவிடும் அ.ப.மா.ஒ. பிரச்சாரத்தை சூழ, பல்வேறு மத்தியதர வர்க்க கும்பல்கள், மருத்துவ சங்கங்கள் மற்றும் சில கல்வியாளர்கள் அடங்கிய குழுக்களும் அணிதிரண்டுள்ளன. அதில் பெரும்பான்மையயானவை கடந்த ஜனாதிபதி தேர்தலில், இராஜபக்ஷவை ஆட்சியில் இருந்து கவிழ்த்து சிறிசேனவை அதிகாரத்திற்கு கொண்டு வருவதன் மூலம் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற பொய்களை சொல்லி, இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது எழுந்து வந்த மக்கள் எதிர்ப்பை சுரண்டிக்கொண்டே சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தை அமைத்துக்கொள்ள நேரடியாக தோள் கொடுத்தன.
அரசாங்கம் மாணவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதலை நடத்தியுள்ள நிலையில் அந்த அரசாங்கத்தை அமைக்க ஒத்துழைத்தவர்களுடனேயே தோளில் கைபோட்டுக்கொண்டிருக்கும் அ.ப.மா.ஒ. அழைப்பாளர் லஹிரு வீரசேகர, தாம் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு "பெரும் சக்தியை" சேர்த்துக்கொண்டுள்ளதாக பெருமையாகக் கூறினார். ஆர்ப்பாட்டத்திற்கு தாக்குதல் தொடுத்த பின்னர், ஊடகங்களுக்கு வீரசேகர தெரிவித்த கருத்துக்கள், மோசடித்தனத்தை அம்பலப்படுத்தின. "பிரஜைகள் சக்தியும் நீதியான சமூகமும் முண்டுகொடுத்து வெற்றி கண்டதாக கூறும் ஜனநாயகமா இது?” என அவர் கேட்டார். பிரஜைகள் சக்தி, நீதியான சமூகத்துக்கான தேசிய இயக்கம் போன்ற அமைப்புகளின் முன்னணி உறுப்பினரான சரத் வஜேசூரிய போன்றவர்ளுக்கு பல்கலைக் கழகங்களில் மேடை அமைத்துக்கொடுத்து, ஜனாதிபதி தேர்தலின் போது சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக இந்த அமைப்புகள் முன்னெடுத்த பிரச்சாரத்தில் தொங்கிக்கொண்டிருந்த அ.ப.மா.ஒ., மாணவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த தாக்குதல்களுக்கு நேரடி பொறுப்பாளியாகும்.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பும் இந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மத்தியில் தலையீடு செய்து, அ.ப.மா.ஒன்றியத்தின் மோசடி பாத்திரத்தை அம்பலப்படுத்தின. அங்கு சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. பிரதிநிதிகள், கல்வி துறையில் முன்னெடுக்கப்பட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளின் வேர்களையும் அவற்றை தோற்கடிக்கக் கூடிய ஒரே உண்மையான தீர்வான சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தையும் பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடின. உலக சோசலிச வலைத் தளத்தில் "சைட்டம் மருத்துவ பீடமானது அரச மற்றும் தனியார் துறையின் வணிகமாக முன்னெடுத்துச் செல்லும் முயற்சி” என்ற தலைப்பில் வெளியான பகுப்பாய்வின் ஆயிரக்கணக்கான பிரதிகளை பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது.
இந்த பிரச்சாரத்தில் சந்தித்த, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட முதல் ஆண்டு மாணவரான ஹர்ஷன, "முறையான தரத்துடன் சைட்டம் பல்கலைக்கழகம் நடத்தப்படுமானால் பிரச்சினை இல்லை” எனக் கூறி கலந்துரையாடலை தொடங்கினார். ஆனாலும், கல்வி தனியார்மயமாக்கம் அரசாங்கத்தின் கொள்கையில் ஒன்றாக இருப்பது ஏன் என்பது கலந்துரையாடலில் தெளிவான பின்னர், அவர், இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்பு முறையை வேரோடு அகற்றும் போராட்டம் இன்றி, கல்வி உரிமையை உறுதிப்படுத்த முடியாது என்பதை ஏற்றுக்கொள்வதாகவும், அ.ப.மா.ஒன்றியத்தின் இந்தப் பிரச்சாரத்தின் மூலம் அப்படி ஒன்று நடப்பதாக தனக்குத் தெரியவில்லை எனக் கூறினார்.
ஊர்வலத்தில் பங்கேற்க தயாராக இருந்த அதே பல்கலைக்கழகத்தின் மற்றொரு விஞ்ஞான பீட மாணவர், "மாணவர்கள் எத்தனை போராட்டம் நடத்தினாலும், எல்லா அரசாங்கங்களும் அரச செலவில் பராமரிக்கும் நிறுவனங்களுக்கு வழங்கும் வசதிகளை மேலும் மேலும் வெட்டிக் குறைக்கும் விதத்தை தான் அனுபவிப்பதாக” கூறினார். "அ.ப.மா.ஒ. பற்றி மாணவர்கள் மத்தியில் நம்பிக்கை சரிந்து வருகின்ற அதேவேளை, அநேகமானவர்கள் கூட்டு நடவடிக்கையாக எண்ணி இந்த எதிர்ப்புக்களில் பங்குபற்றுவதோடு, இந்தப் போராட்டங்களை வெற்றிபெறச் செய்வதற்கா அதில் முறையான மாற்றங்கள் செய்ய வேண்டும்” என தாம் நினைப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பிரச்சாரத்தின் முடிவில் கலந்துரையாடலில் இணைந்து கொண்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைத்துறை மாணவர் ஒருவர், சமூக அமைப்பு முறையில் ஒரு மாற்றத்தின மூலம் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என தான் ஏற்றுக்கொண்டாலும், சைட்டம் இரத்துச் செய்யப்படுவது இந்த நேரத்தில் தோன்றியுள்ள பிரதான பிரச்சினையாக இருப்பதனால், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் அதை தடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பது மிகவும் முன்னிலை பணியாக இருக்கின்றது என கூறினார். அ.ப.மா.ஒன்றியத்தினால் விதைக்கப்பட்டுள்ள இந்த பிற்போக்குத் தர்க்கங்கள், மாணவர்கள் சோசலிசத்துக்காக போராடுவதன் பேரில் தொழிலாள வர்க்கத்தின் தலைமைத்துவத்தின் பக்கம் திரும்புவதை தடுப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது என சோ.ச.க. பிரதிநிதிகள் தெளிவுபடுத்தியபோது, அதற்கு செவிமடுத்த அந்த மாணவர், “இத்தகைய போராட்டங்களின் மூலம் சோசலிசத்தை வெற்றிகொள்வதற்கு அவசியமான நனவு மாணவர்க்களுக்கு கிடைப்பதில்ல” என்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும், அது தொடர்பாக மாணவர்களுக்கு கல்வியூட்டுவது அவசியம் என்றும் கூறினார்.