Print Version|Feedback
US pushes for “no fly” zone as Syrian conflict escalates
சிரியா மோதல் தீவிரமடைகையில், “விமானம் பறக்க தடைவிதிக்கப்பட்ட" பகுதிக்கு அமெரிக்கா அழுத்தமளிக்கிறது
By Bill Van Auken
22 September 2016
புதனன்று சிரியா குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் பேசுகையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி, இம்மாத தொடக்கத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்தத்தைக் குலைக்கும் விதத்தில் வன்முறையைத் தீவிரப்படுத்தி வருவதற்காக ரஷ்யா மற்றும் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்தை உணர்ச்சிகரமாக குற்றஞ்சாட்டினார்.
மனிதாபிமான உதவிகள் வழங்குவதை மற்றும் போர்நிறுத்தத்தை மீளமைப்பதை உறுதிப்படுத்துவதற்காக என்ற போலிச்சாக்கின் கீழ், கெர்ரி, அல் கொய்தாவுடன் இணைப்பு பெற்ற இஸ்லாமிய "கிளர்ச்சியாளர்" உட்பட அமெரிக்க ஆதரவிலான இஸ்லாமிய போராளிகள் குழுக்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள் மீது நடைமுறையளவில் "விமானங்கள் பறப்பதற்கான தடையை" நடைமுறைப்படுத்தவும் கோரினார்.
“நடைமுறைகளின் நம்பகத்தன்மையை மீட்டமைக்க வேண்டுமானால், நிலைமையின் தீவிரத்தைக் குறைக்கவும் மற்றும் மனிதாபிமான உதவிகள் தடைபடாமல் வழங்குவதற்கு வாய்ப்பளிக்கவும், அப்பகுதிகளில் உடனடியாக விமானங்களைத் தரைக்குக் கொண்டு வர முயற்சிக்க நாம் முன்நகர வேண்டுமென நான் கருதுகிறேன்,” என்று பாதுகாப்பு அவை கூட்டத்தில் கெர்ரி தெரிவித்தார்.
மேற்கத்திய ஆதரவிலான இஸ்லாமிய "கிளர்ச்சியாளர்கள்" 300 முறை உடன்பாட்டை மீறியிருப்பதாக செய்திகள் வெளியானதற்குப் பின்னரும், சனிக்கிழமையன்று கிழக்கு சிரியாவின் டெர் அல்-ஜொர் விமான நிலையம் அருகில் ஒரு சிரிய இராணுவ புறச்சாவடியை அமெரிக்கா குண்டுவீசித் தாக்கியதில் ஏறத்தாழ 90 சிப்பாய்கள் கொல்லப்பட்டு, மேலும் 100 பேர் காயமடைந்ததை அடுத்து, சிரிய அரசாங்கம் திங்களன்று போர்நிறுத்தம் முடிவுக்கு வருவதாக அறிவித்தது.
அத்தாக்குதல் பிழையாக நடந்துவிட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினாலும், அத்தாக்குதலுக்குப் பின்னர் உடனடியாக இஸ்லாமிய அரசு போராளிகளால் அத்தளம் தாக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய டமாஸ்கஸ், வான்வழி மற்றும் தரைப்படை நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்ததாக குற்றஞ்சாட்டியது. சிரியாவிலிருந்து ஈராக் வழியாக ஈரான் க்கு செல்லும் நெடுஞ்சாலையின் ஒரு மூலோபாய இடத்தில் டெர் அல்-ஜொர் அமைந்துள்ளது.
அமெரிக்க வான்வழி தாக்குதலைத் தொடர்ந்து திங்களன்று வடக்கு அலெப்போவின் உர்ம் அல்-குப்ரா நகரில் ஐ.நா. உதவிக்குழு மீது நடந்த ஒரு தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நிவாரணப் பொருட்கள் ஏற்றிய 18 டிரக்கள் சேதப்படுத்தப்பட்டன. வாஷிங்டன் எந்தவித ஆதாரமும் இல்லாமல் உடனடியாக ரஷ்யா அல்லது சிரிய அரசாங்கம் தான் அதற்கு பொறுப்பு என்று குற்றஞ்சாட்டியது. கெர்ரி மற்றும் ஏனைய அமெரிக்க அதிகாரிகள் இப்போது மாஸ்கோவை குற்றஞ்சாட்டுவதற்கும் மற்றும் புதிய விட்டுக்கொடுப்புகளுக்கு அழுத்தம் அளிப்பதற்கும் ஒரு வாய்ப்பாக அத்தாக்குதலை கையாள்கின்றனர்.
திங்கட்கிழமை தாக்குதலுக்கு ரஷ்யா மற்றும் அசாத் அரசாங்கத்தைக் குறைகூறி கெர்ரி தெரிவிக்கையில், இது “ரஷ்யாவும் அசாத் ஆட்சியும் ஜெனீவாவில் அவர்கள் ஒப்புக்கொண்ட கடமைப்பாடுகளுக்கு இணங்க இருப்பார்களா அல்லது இருக்க முடியுமா என்பதில், ஓர் ஆழ்ந்த ஐயத்தை ஏற்படுத்துகிறது" என்றார்.
அதற்கு முன்னர் பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரொவ் நிவாரண உதவிக்குழு மீதான தாக்குதலை "ஏற்றுக்கொள்ள முடியாத ஆத்திரமூட்டலாக" வர்ணித்ததுடன், அதற்கு யார் பொறுப்பு என்பதை முடிவு செய்ய ஒரு "முழுமையான மற்றும் பாரபட்சமற்ற" விசாரணைக்கு அழைப்புவிடுத்தார். அத்தாக்குதலுக்கு அருகாமையில் எந்த ரஷ்ய போர்விமானங்களும் கிடையாது என்று ரஷ்ய இராணுவ அதிகாரிகள் கூறிய முந்தைய கருத்துக்களை மீண்டும் தெரிவித்த அவர், அந்த இரவில் அத்தகையவொரு வான்தாக்குதலை நடத்த சிரிய விமானப்படைக்கு ஆற்றல் கிடையாது என்பதையும் சேர்த்துக் கொண்டார். உதவிக்குழு மீதான தாக்குதல் அதே பகுதியில் நடந்த "கிளர்ச்சியாளர்களது" ஒரு தாக்குதலுடன் பொருந்தி இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையே ரஷ்ய இராணுவ அதிகாரிகள் புதனன்று குறிப்பிடுகையில், அத்தாக்குதல் நடந்த அவ்வேளையில், வானில் இருந்து தரைக்கு சரமாரியாக ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்ட அமெரிக்க வேட்டை டிரோன்கள் நிவாரண உதவிக்குழுவிற்கு மேலே பறந்து கொண்டிருந்ததைப் பார்த்ததாக அறிவித்தனர். முன்னதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட ஒரு வான்வெளி காணொளி, மிகப்பெரிய துல்லிய அளவீட்டு கருவி பொருத்திய சிறுபீரங்கி குண்டுவீசி இணைக்கப்பட்ட "கிளர்ச்சியாளர்களது" ஒரு டிரக்குடன் அந்த நிவாரண உதவிக்குழு சேர்ந்து சென்றதையும், பின்னர் அது காட்சியிலிருந்து மறைந்ததையும் எடுத்துக்காட்டுகிறது.
பாதுகாப்பு கவுன்சிலுக்கான அவரது அறிக்கையில், லாவ்ரொவ் வலியுறுத்துகையில் சிரியாவில் இனி விரோதங்களை "ஒருதலைபட்சமான" இடைநிறுத்தம் செய்யவியலாது என்பதையும் வலியுறுத்தி இருந்தார். அமெரிக்க ஆதரவிலான இஸ்லாமியவாதிகள் ஒருபோதும் போர்நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும், செப்டம்பர் 12 இல் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து அவர்கள் தொடர்ந்து அரசு இராணுவச்சாவடிகளைத் தாக்கியதாகவும் ரஷ்யா குற்றஞ்சாட்டியது.
அதே பாதுகாப்பு அவை கூட்டத்தில் ஐ.நா. விற்கான சிரியா தூதர் பஷர் அல்-ஜாபரி பேசுகையில், தனது நாடு "மற்றொரு லிபியா அல்லது ஈராக் ஆகாது" என்று சூளுரைத்ததுடன், “சிரியர்கள் முடிவெடுக்கும் ஓர் அரசியல் தீர்வை எட்ட" அவர் அரசாங்கம் தயாராக இருப்பதாக அறிவித்தார்.
வாஷிங்டனின் நோக்கங்கள் என்னவோ அதே நிலைப்பாட்டிலிருந்து “நுஸ்ராவைப் பின்தொடர்ந்து செல்கிறோம் என்ற பெயரில், படைத்துறைசாரா இலக்குகளைத்" தாக்குவதில் இருந்து சிரிய அரசாங்கத்தைத் தடுப்பதே "விமானம் பறக்க தடைவிதிக்கப்பட்ட" பகுதிக்கான அவர் முன்மொழிவின் அர்த்தம் என்று கெர்ரி வாதிட்டாலும், விடயம் முற்றிலுமாக அதற்கு எதிர்விதமானதாகும்.
வாஷிங்டன் போர்நிறுத்தத்தை அது ஆதரிக்கின்ற அதேவேளையில், அல் நுஸ்ரா மற்றும் அதே போன்ற அல் கொய்தா இணைப்பு கொண்ட போராளிகள் குழுக்களுக்கு எதிரான சிரிய இராணுவ தாக்குதலை நிறுத்துவதற்கும் மற்றும் அவ்விதத்தில் அவை மீள்ஆயுதமேந்தி, மீள்குழுவாகி அசாத் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு தாக்குதலை மீண்டும் தொடங்க அனுமதிப்பதற்காக அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சிக்கியுள்ள அப்பாவி மக்களைக் குறித்த மனிதாபிமான கவலைகளைக் கையிலெடுத்துள்ளது.
சிரியா போர்நிறுத்தம் ஒபாமா நிர்வாகத்திற்குள் கடுமையான பிளவுகளுக்கான விடயமாக இருந்தது, அந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த இராணுவத்தால் உத்தரவுகளுக்குக் கீழ்படிய முடியுமா என்றளவிற்கு பெண்டகனின் மற்றும் மத்திய கிழக்கின் உயர்மட்ட சீருடையணிந்த தளபதிகள் கேள்விகள் எழுப்பினர்.
சிரியாவில் அமெரிக்கா-முடுக்கிவிட்ட ஆட்சி மாற்றத்திற்கான போரில் மிகவும் பலமாக சம்பந்தப்பட்டிருந்தவர்கள், குறிப்பாக சிஐஏ க்குள் இருக்கும் கூறுபாடுகள், அந்த உடன்படிக்கையை எதிர்த்தன ஏனென்றால் உத்தியோகபூர்வமாக "பயங்கரவாதிகளாக" முத்திரை குத்தப்பட்ட அல் நுஸ்ரா முன்னணி போன்ற அல் கொய்தா இணைப்பு கொண்ட சக்திகளிடம் இருந்து நிதியுதவி மற்றும் ஆயுத உதவிபெறும் "மிதமான எதிர்ப்பு" என்பதை பிரித்து வைப்பதை மேற்பார்வை செய்ய அது வாஷிங்டனுக்கு அழைப்புவிடுத்தது. போர்நிறுத்தம் தொடங்கி அந்த வாரத்திலேயே, இந்த "மிதவாதிகள்" தங்களைத்தாங்களே அல் கொய்தா கூறுபாடுகளில் இருந்து விலகி இருப்பதற்கான எந்த அறிகுறியும் அங்கே இல்லை. அதுபோன்று விலகி இருப்பது வாஷிங்டனின் "கிளர்ச்சியாளர்களால்" எதிர்க்கப்பட்டது ஏனென்றால் சிரிய அரசாங்கத்திற்கு எதிராக சண்டையிடுவதில் அல் நுஸ்ரா மிக முக்கிய ஆயுதமேந்திய குழுவாக இருக்கிறது.
பெண்டகனைப் பொறுத்த வரையில் இன்னும் அதிமுக்கியமாக, உளவுத்தகவல்கள் மற்றும் இலக்கில் வைக்கும் தகவல்களை ரஷ்யாவுடன் பகிர்ந்து கொள்வதற்கான கூட்டு நடவடிக்கை மையத்தை ஸ்தாபிப்பதற்கும் அந்த போர்நிறுத்தம் அழைப்புவிடுத்திருப்பது, ரஷ்யாவுடன் போருக்கான அமெரிக்க இராணுவ தயாரிப்புகளைத் தீவிரப்படுத்துவதையே குறுக்காக வெட்டுகிறது. சனியன்று சிரிய இராணுவ நிலை மீதான குண்டுவீச்சைத் தொடர்ந்து திங்களன்று நிவாரண உதவிக்குழு மீது நடந்த தாக்குதல், இந்த முன்மொழிவை நசுக்குவதற்கு சேவையாற்றியது.
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இராஜாங்க சச்சரவுகளுக்கு இடையே, சிரியா மோதல் அபாயகரமாக ஓர் பரந்த மற்றும் உலக போருக்கான அச்சுறுத்தலை ஏந்தி, தீவிரப்படுவதற்குரிய விளிம்பில் இருப்பதற்கான பல்வேறு அறிகுறிகள் தெரிகின்றன.
மக்கள் பாதுகாப்பு பிரிவுகளின் (YPG) சிரிய குர்திஷ் போராளிகளை நேரடியாக ஆயுதமேந்த செய்யும் ஒரு திட்டத்தை அமெரிக்கா பரிசீலித்து வருவதாக புதனன்று நியூ யோர்க் டைம்ஸ் இல் ஒரு பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகளை மேற்கோளிட்டு ஓர் அறிக்கை வெளியிட்டது. ஏற்கனவே குர்திஷ் போராளிகளுக்கு பக்கவாட்டில் அமெரிக்க சிறப்புப்படை பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளதுடன், வாஷிங்டன் YPG உடன் இணைந்து சண்டையிட்டுவரும் ஒரு சிறிய சிரிய அரபு போராளிகள் குழுவுக்கு ஆயுதங்கள் வழங்குவதன் மூலம் அவர்களுக்கு குறைந்தபட்சம் மறைமுகமாக ஆயுதங்கள் வழங்கி உள்ளது.
எவ்வாறிருந்த போதினும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு அவையில் விவாதத்தின் கீழ் இருப்பதாக கூறப்படும் இத்திட்டம், ISIS க்கு எதிரான அமெரிக்க நடவடிக்கையில் குர்திஷ் போராளிகள் குழுக்களை தீவிரமாக பினாமிப் படைகளாக பயன்படுத்துவதை பிரதிநிதித்துவம் செய்யும். அது வாஷிங்டனுக்கும் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனின் துருக்கிய அரசாங்கத்திற்கும் இடையிலான பதட்டங்களையும் ஆழப்படுத்தும், அது சிரியாவிற்கு கடந்த மாதம் அதன் சொந்த இராணுவ ஊடுருவலைத் தொடங்கியது.
Operation Euphrates Shield என்று கூறப்படும் சிரியாவில் துருக்கிய தாக்குதல், இப்போது அமெரிக்க சிறப்பு நடவடிக்கையான "ஆலோசனை மற்றும் உதவி" நடவடிக்கையின் கணக்கில் வருகிறது. குர்திஷ் படைகள் துருக்கிய எல்லையில் ஒரு தன்னாட்சி அமைப்பாக ஒன்றுதிரள்வதைத் தடுப்பதே அங்காரா தலையீட்டின் பிரதான மூலோபாய நோக்கமாக உள்ள நிலையில், போர்க்களத்தில் அமெரிக்க சிறப்பு படைகள் ஒன்றுக்கொன்று எதிரெதிர் பக்கத்தில் நிற்பதில் போய் முடியும்.
நியூ யோர்க் நகரில் ஐநா பொது அவை கூட்டத்திற்குக் கிளம்புவதற்கு முன்னதாக, எர்டோகன் செய்தியாளர்களுக்குத் தெரிவிக்கையில் துருக்கிய தலையீடு "பயங்கரவாதிகளின்", அவர் அர்த்தத்தில் ISIS மற்றும் குர்திஷ் YPG இரண்டையும், 900 சதுர கிலோமீட்டர் பகுதியை (சுமார் 350 சதுர மைல்களை) “தூய்மைப்படுத்தி இருப்பதாக" தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், “நாங்கள் இந்த பகுதியை, ஒரு பாதுகாப்பு மண்டலத்தின் பாகமாக, 5,000 சதுர கிலோமீட்டராக விரிவாக்குவோம்,” என்றார். அத்தகையவொரு தலையீட்டிற்கு ஆயிரக் கணக்கான துருக்கிய துருப்புகளை சிரியாவிற்குள் நிலைநிறுத்த வேண்டியிருக்கும்.
இதற்கிடையே ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் புதனன்று அறிவிக்கையில் ரஷ்ய கடற்படையின் பிரதான விமானந்தாங்கி போர்க்கப்பல் அட்மிரல் Kuznetsov, சிரியாவில் இராணுவ நடவடிக்கைகளில் பங்கெடுக்க கிழக்கு மத்திய தரைக்கடலில் நிலைநிறுத்தப்படும் என்று அறிவித்தார்.